முதல் கதை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 6,540 
 

(இதற்கு முந்தைய ‘சி.சு.செல்லப்பா’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மரணங்களையும் லாப நோக்குக் காய்களாக நகர்த்தி ஆர்ப்பரிக்கும் ஆடம்பரக் கண்ணீர் விழாக்கள் நடத்தத் தொடங்கி பல ஆண்டுகளாகி விட்டன.

அந்த பிலுக்கத்தன மினுக்கல்கள் தமிழ் இலக்கிய உலகத்திலும் கண் சிமிட்டத் தொடங்கி உள்ளன. இது நிறுவன பின்புல மையங்களின் வலிமைதான் அன்றி வேறு எதுவுமில்லை. நிறுவன வலிமை வெறும் பொளதீக நிலையே.

ஆன்ம வலிமை என்ற அறம் பொங்கி எழுகையில் நிறுவன பொளதீகங்கள் தவிடு பொடியாகிப் போக நேரிடும். நிரூபணத்திற்காக வரலாற்றுப் பாடங்கள் இந்திய மண் பூராவும் விரிந்தும் பரந்தும் திறந்து கிடக்கின்றன. நிறுவன மேலதிகாரிகளின் பிலுக்கத்தன ஆர்ப்பரிப்புகளை இப்போதைக்கு பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருப்பது போல தொடர்ந்து பார்வையாளனாகவே நீடித்திருத்தல் இயலாத காரியம்.

ஆங்… எனக்கு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்டிலிருந்து ஆர்டர் வந்து விட்டது. பணியில் சேர இரண்டு மாதங்கள் கால அவகாசம் கொடுத்திருந்தார்கள். அகமதாபாத் வாழ்க்கைக்கு இடம் பெயர்வதற்கு முந்தைய இரண்டு மாதங்களின் பெரும்பான்மையான எனது நேரங்கள் நூல் நிலையத்திலேயே கழிந்தது.

அப்போதுதான் சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற நவீனகால எழுத்தாளர்களை நான் விரும்பி வாசிக்க நேரிட்டது. அதிலும் அப்போது குமுதத்தில் ‘நைலான் கயிறு’ என்ற தொடர்கதையை சுஜாதா விறு விறுப்பாக எழுதிக் கொண்டிருந்தார். தமிழக வாசகர்கள் சொக்கிப் போயினர். யார் இந்த சுஜாதா? என்று அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வாசகர்கள் தீவிரம் காட்டினர்.

தமிழ் வாசிப்பின் இந்த அறிமுகங்களை மதுரம் சித்தியிடம் சிலாகித்துப் பேசி விலாவாரியாக அரட்டை அடிக்க முடியவில்லையே என்று மிகவும் வருத்தப் பட்டேன். இந்த வருத்தம் என்னைப் புரட்டி எடுத்தது என்றேகூட சொல்லலாம்.

தீர்த்துக் கொள்ள முடியாத இந்த வருத்தம், நானே எதிர்பாராத வேறு ஒரு வடிகாலுக்கு மடை மாறியது. ஆம், இந்தத் துக்கங்களை எழுத்தாக்கிப் பார்த்தால் என்ன என்ற என்கிற எண்ணம் எனக்குள் ஊற்றெடுத்தது. எழுதியும் பார்த்தேன். எழுத வரும் போலவும் இருந்தது. சரியாக வராது என்பது போலவும் இருந்தது. எழுதிப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

சுஜாதாவை தேடித்தேடி படித்தேன். அவர் எதை எழுதினாலும் எப்படி எழுதினாலும் படித்துப் படித்து மாய்ந்து போனேன். சுஜாதா தொட்ட உச்சத்தை இதுவரை எவரும் தொடவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவர் ஒரு எழுத்துலக பிதாமகன்.

அகமதாபாத் வேலையில் சேர்ந்தேன். அங்கு தமிழ்ப் புத்தகங்கள், வார இதழ்கள் போன்றவைகள் லால்தர்வாஜா என்ற ஒரே இடத்தில் மட்டுமே கிடைத்தன. நான் வேலை செய்யும் இடத்திலிருந்து அது மிகவும் தூரம். இருப்பினும் வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் டவுன் பஸ் பிடித்து அங்கு போய் கிடைத்த அவ்வளவு தமிழ்ப் புத்தகங்களையும் வாங்கி வருவேன்.

ஆனந்த விகடன், குமுதம் மட்டும் கிடைக்கும். நாவல்களில் சுஜாதா, ராஜேஷ்குமார் கிடைக்கும். போதும். குஜராத்தில் எனக்கு அதுவே சொர்க்கமாக இருந்தது.

ஐஐஎம் மில் மிகப் பெரிய லைப்ரரி இருக்கிறது. நான்கு தளங்களுடன் இருக்கும் அதன் பெயர் ‘விக்ரம் சாராபாய்’ லைப்ரரி. குளிர்சாதன வசதி செய்யப்பட்டு பிரம்மாண்டமாய் விஸ்தாரமாய் இருக்கும். அதன் உள்ளே நுழைந்தால் ஒருவித பெப்பர்மின்ட் வாசனை அடிக்கும். அந்த வாசனையும், அமைதியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அங்கு மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் மேஜை நாற்காலியுடன் தனித் தனியாக கதவுடன் சிறிய அறைகள் இருக்கும். அதில் கதவைச் சாத்திக்கொண்டு நாம் அமைதியாகப் படிக்கலாம், எழுதலாம். நான் ஐஐஎம் எம்ப்ளாயி என்பதால் என்னிடம் அந்த லைப்ரரிக்கான நான்கு கார்டுகள் கொடுக்கப்பட்டன. அவைகள் நான் புத்தகங்கள் எடுத்துச் சென்று படிப்பதற்கான கார்டுகள்.

ஆனால் நான் புத்தகம் எதையும் எடுத்துப் படிக்கவில்லை. ஏனென்றால் அவைகள் அனைத்தும் ஆங்கிலத்தில்(?) இருந்தன. அதனால் நான் அந்தக் கார்டுகளை நுழைவுச் சீட்டாக காண்பித்து உள்ளே நுழைந்து எதாவது ஒரு தனி அறையில் இடம் பிடித்து நிறைய கதைகள் எழுதி அனுப்ப ஆரம்பித்தேன். அவ்வளவும் சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்தன. இருப்பினும் நான் அசரவில்லை.

ஒருமுறை நான்கு நல்ல கதைகளை எழுதி (அப்படி நினைத்துக்கொண்டு) விகடனுக்கு தபால் தலைகளை ஒட்டி, சுய விலாசமிட்ட உறையையும் சேர்த்து அனுப்பி வைத்தேன். மூன்று வாரங்கள் கழித்து மூன்று கதைகள் திரும்பி வந்தன. சரி, நாலாவது கதையை சேர்த்து வைத்து திருப்பி அனுப்ப மறந்து விட்டார்கள் போலும் என்று நினைத்து சோர்ந்து போனேன். அடுத்த இரண்டு நாட்களில் ஆனந்த விகடனில் இருந்து என் அலுவலக முகவரிக்கு 9-10-80 தேதியிட்ட ஒரு கடிதம் வந்தது. அதில்

“அன்புடையீர் வணக்கம்,

தாங்கள் எழுதி அனுப்பிய ‘திசை மாறிய எண்ணங்கள்’ சிறுகதை பிரசுரத்திற்கு தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கூடிய விரைவில் அந்தக் கதை விகடனில் பிரசுரமாகும்.

தங்களுடைய இலக்கியப் படைப்புகளை தொடர்ந்து எங்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு, எஸ்.வரதராஜன், துணை ஆசிரியர்.

நான் கடிதத்தைப் படித்துவிட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதை படித்துக் கொண்டே இருந்தேன். கண்களில் நீர் கோத்துக் கொண்டது. சந்தோஷத்தில் தலை கீழாக நடக்க ஆரம்பித்தேன் என்றால் மிகையாகாது.

உடனே அடுத்த ஞாயிறு லால்தர்வாஜா சென்று பரபரப்புடன் அந்தவார விகடனை வாங்கி என் கதை அதில் வந்திருக்கிறதா என புரட்டிப் பார்த்தேன். வாரவில்லை. சற்று ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

என் அறை நண்பன் ஜெயராமன், “ஒன் கதையாவது விகடனில் வருவதாவது? எவனோ உன்னை ஏமாத்தி இருக்காண்டா. உருப்படறதுக்கு வழியைப் பாரு..” என்று என்னைக் கிண்டல் பண்ணான்.

அதற்கு அடுத்த ஞாயிறும் லால்தர்வாஜா சென்று பரபரப்புடன் விகடனை வாங்கிப் புரட்டியபோது, என்ன ஆச்சர்யம் அந்த இதழின் முதல் சிறுகதையாக ஐந்து பக்க அளவில் என் முதல் கதை ஆனந்த விகடனில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதற்கு அழகான ஓவியம் வேறு. உடனே அந்தக் கடைக்கு வந்திருந்த பன்னிரண்டு பிரதிகளையும் மொத்தமாக வாங்கிக்கொண்டு என் அறைக்குப் பறந்து வந்தேன். அது 19-10-80 தேதியிட்ட விகடன் இதழ்.

ஜெயராமனிடமும் மற்ற நண்பரிகளிடமும் விகடனைக் காட்டி காட்டி பீற்றிக் கொண்டேன். மறுநாள் காலையில் விஷயம் கேள்விப்பட்டு ஐஐஎம் தமிழர்கள் பலர் அசந்து போனார்கள். எனக்கு நேரில் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். நான் சொர்க்கத்தில் மிதந்தேன். அந்த இதழை இன்னமும் போற்றிப் பாதுகாத்து வருகிறேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “முதல் கதை

  1. ஒளிந்திருக்கும் எழுத்தாளரைக் கண்டு பிடித்த விகடனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நம்மில் பலர் பல நிலைகளில் உள்ள எழுத்தாளர்கள். கதை திரும்பி வருகிறதே என்று சோர்வடையாமல் மீண்டும் எழுத உற்சாகம் கொண்டு எழுதுவதற்கு வேண்டும் ஒரு தில்! என்னுடைய கதை கட்டுரைகளில் அனுப்பியதை விட பிரசுரம் ஆனவை மிகவும் குறைவு. வீட்டிற்குத் திரும்பிய உடன் என்னவெல்லாம் திருப்பி விடப் பெற்றன என்பதைப் பார்க்க எனக்கு அதிக நேரம் செலவானது அக்காலத்தில். அது ஒரு சுகானுபவம்- இப்போது சொல்வதில் நம் பாடம் தொக்கி நிற்கும்! நல்ல கருத்துக்கள் கண்ணன் சார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *