Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முட்டை புரோட்டா

 

சுப்புவுக்கு அந்த ருசி இன்னும் நாக்கில் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம்
ஆகிவிட்டது. ராசிபுரத்திலிருந்து துரை மாமா வந்த போது சாப்பிட்டது. அதற்கப்புறம்
மாமா இங்கு வருவதேயில்லை. ஆத்தாவிடம் மாமா பற்றிக் கேட்கக்கூடாது. கெட்ட
வார்த்தை சொல்லித் திட்டும். ஆனாலும், அந்த ருசியான முட்டை புரோட்டாவை
சுப்புவால் மறக்கவே முடியவில்லை.

அது சேலம் பெங்களூர் வழியில் இருக்கும் ஒரு சிற்றூர். அங்கு இருக்கும் வேலு
மிலிடரி ஓட்டல் மிகவும் பிரபலம். மதியம் மூன்று மணிக்குத் திறப்பார்கள். மறுநாள்
காலை நான்கு மணி வரை வியாபாரம் களை கட்டும். இட்லி, தோசை, இடியாப்பம்,
புரோட்டா, பிரியாணி வகைகள் இருந்தாலும் அந்த முட்டை புரோட்டாதான் அந்த
பிரபலத்துக்கே காரணம். சேலம், பெங்களூர் வழி செல்லும் பேருந்துகள், அந்த
முட்டை புரோட்டாவுக்காக அங்கே இளைப்பாறும்.

இரண்டு முட்டைகள் உடைத்து வெங்காயம், தக்காளி எல்லாம் போட்டு, இரண்டு
புரோட்டாக்களைத் துண்டுகளாக்கி, பெரிய தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்
ஊற்றி, கரண்டியால் ‘டக டக டக’ என சப்தம் உண்டாக்கி, மசாலா சமாச்சாரம்
எல்லாம் போட்டு ஒரு எவர்சில்வர் தட்டில் ஆவி பறக்க, கொத்துமல்லி மணத்துடன்
வாழை இலையில் கொட்டுவார்கள். கூடவே, சிறிய வெங்காயம், எலும்பில்லாத
சிறு கோழித்துண்டுகள் இணைந்த காரக்குழம்பை ஒரு பெரிய வட்டாவில் தருவார்கள்.
மணக்க, மணக்க அதைத் தின்னும்போது அதன் ருசியே அலாதி. அந்த ஒட்டல்
முதலாளியான வேலுச்சாமி தான் இந்த முட்டை புரோட்டாவைப் போடுவான்.
இருவது ரூபாய் சற்று அதிகமாகத் தெரிந்தாலும், சாப்பிட்டபின் உண்டாகும்
திருப்தியில் அது மறந்து போய்விடும்.

சுப்பு அந்த ஓட்டலைத் தாண்டித்தான் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். தினமும் அதைத்
தாண்டிப் போகும்போது, அந்த ருசி நினைவில் வந்து அவனைப் படுத்தும். துரை
மாமா போன வருடம் வந்து இரண்டு நாட்கள், வீட்டில் தங்கியிருந்தபோது சுப்புவுக்கு
கொண்டாட்டமாக இருந்தது. புது டவுசர், சட்டை, விளையாட்டு சாமான்கள் என்று
வாங்கி வந்திருந்தார். ஆத்தாவுக்கும் புதுச் சேலை. மாமா ஊருக்குத் திரும்பும்
தினத்தில், சுப்புவுக்கு முட்டைபுரோட்டா வாங்கிக்கொடுத்தார். வயிறு முட்ட
சாப்பிட்டான். ஓட்டல் முதலாளி வேலுச்சாமி, மாமாவிற்குத் தெரிந்தவர் போலும்.
அன்று ஸ்பெஷலாகவே கவனித்தார். சுப்புவைப் பாத்து, “என்னாடா, இன்னும்
கொஞ்சம் கோழிக் கொளம்பு ஊத்தட்டுமா” என்று கேட்டபோது, சுப்புவுக்குத்
மாமாவைப் பார்த்துப் பொறாமையாக இருந்தது. தாம் துரை மாமா போல் எப்போது
ஆகப் போகிறோம் என்ற கவலை மனதை அரித்தது. சாப்பிட்டபின் இரண்டு
நாட்களுக்கு சுப்புவின் கை விரல்களில் அதன் மணமும், மசாலாவின் செம்மஞ்சள்
நிறமும் அழியாமல் இருந்தது. அதற்குப் பிறகு முட்டை புரோட்டா சாப்பிடும்
தருணம் கிடைக்கவில்லை.

இன்று சுப்புவுக்கு என்னவோ தெரியவில்லை, எப்படியாவது முட்டைபுரோட்டா சாப்பிட
ஆசையாக இருந்தது. காசு கேட்டால் ஆத்தா கன்னாபின்னாவென்று கத்தும்.
ஆத்தாவும் பாவம் தான். சித்தாள் வேலை, கோலமாவு விற்பனை என்று ஏதேதோ
வேலைகள் செய்து, ஒவ்வொரு நாள் கஞ்சிக்கும் வழி செய்துவிடும். பள்ளிக்கூடம்
கிளம்பிக்கொண்டே, ஆத்தாவிடம் வந்தான் சுப்பு. ஆத்தாவும் வேலைக்குச் செல்ல
புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆத்தா, நான் பள்ளிக்கூடம் போறேன் ஆத்தா..”

“போய்ட்டு வா. வாத்யாரு வந்துட்டாரா ?”

“முந்தா நேத்தே வந்துட்டாரு”

“இன்னைக்காச்சும் வேலு கடைக்கு கூட்டிப் போறியா ஆத்தா”, எப்படியோ சுப்பு
கேட்டு விட்டான்.

“அடி வெளக்குமாத்தால. எடுபட்ட பயலே… ”

ஒரே ஓட்டமாக பள்ளிக்கூடம் நோக்கி ஓடினான், சுப்பு.

பள்ளி 4 மணிக்கு முடிந்தபோது, சுப்புவின் வகுப்பு ஆசிரியர் சவுரிராசன் அவனிடம்,
“டே, சுப்பு, வேலு கடைக்குப் போய், ரெண்டு முட்டை புரோட்டா பொட்லம் வாங்கிட்டு
வாடா” என்றபடியே, ஐம்பது ரூபாய் தாள் ஒன்றை அவனிடம் கொடுத்தார். சுப்பு வேக
வேகமாக கடைக்கு ஓடினான். தானும் உடனே, சவுரி சார் மாதிரி ஆக வேண்டும்
போல் இருந்தது. அப்படி ஆனால் ஐம்பது ரூபாய் நோட்டுக்களாகக் கொடுத்து,
தினமும் ஆத்தாவுடன் முட்டைபுரோட்டா சாப்பிடலாம்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து இரண்டு பொட்டலங்களும், மீதி பத்து ரூபாயும்
வாங்கிக்கொண்டு பள்ளி நோக்கி நடந்தான். எதற்கு சாருக்கு ரெண்டு பொட்லம்.
ஒன்றை எனக்குத் தருவாரோ! பேராசையுடன் பொட்டலங்களைப் பார்த்தான்.
நேர்த்தியாக வாழை இலையில் வைக்கப்பட்டு, பழைய செய்தித்தாள் கொண்டு
கட்டப்பட்டிருந்தன. ஒன்றில் அவனுக்குப் பிடித்த சினிமா நடிகரின் படம் அச்சிடப்
பட்டிருந்தது. உடனே அவனுக்கு அந்த நடிகர் போல் ஆகத் தோன்றியது. அப்படி
ஆகி வேலு ஓட்டலைத் தான் விலைக்கு வாங்கி, தினமும் முட்டைபுரோட்டா தின்பது
போல் கனவு கண்டான்.

சவுரி சாரிடம் வந்து பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு, அவர் அதில் ஒன்றைத்
தன்னிடம் தரப்போகும் எதிர்பார்ப்பில் கைகட்டி காத்துக்கொண்டிருந்தான்.

“சரி, நீ போய்ட்டு வாடா”, என்றார், சுப்புவிடம், ஒரு எட்டணா நாணயத்தைக்
கொடுத்துக்கொண்டே.

ஏமாற்றத்துடன் திரும்பி நடந்த சுப்புவிற்கு, வீட்டிற்குப் போகப் பிடிக்கவில்லை.
இந்த மாதிரி எத்தனை எட்டணாக்கள் சேர்ந்தால் இருவது ரூபாய் ஆகும் என்று
மனது கணக்குப் போட்டுப் பார்த்தது. கண்மாய்ப் பக்கம் நடந்தான். பட்டாணிக்கடலை
வாங்கலாமா என்ற யோசனையத் தவிர்த்தான். ஆத்தாவிடம் கொடுத்து, கருவாடு
வாங்கச் சொல்லலாம். இல்லையென்றால், இன்னும் ஒரு ரெண்டு ரூபாய் சேர்த்து,
அவனுக்குப் பிடித்த அந்த நடிகர் நடித்த சினிமாவுக்குப் போகலாம். மனது லேசானது.
வீடு திரும்பினான்.

வீட்டில் ஆத்தா இல்லை. வானம் இருட்டத் தொடங்கியிருந்தது. எட்டணாவைக்
கையில் வைத்து பூவா, தலையா ஆடிக்கொண்டிருந்தபோது, “சுப்பு” என்றபடியே
ஆத்தா பையோடு உள்ளே வந்தாள்.

“இந்தாடா, நீ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்த முட்டை புரோட்டா” என்றபடியே
பைக்குள் கை விட்டாள்.

துள்ளி ஓடி வந்தான் சுப்பு. ஆகா! எத்தனை நாள் எதிர்பார்ப்பு. உடல் எல்லாம்
புல்லரித்தது.

“காசு ஏது ஆத்தா” என்றான்.

“வீட்டு வேலை முடிஞ்சிருச்சு. மேஸ்திரி காசு குடுத்துச்சு. அதான் வாங்கியாந்தேன்”
சொல்லிக்கொண்டே பொட்டலத்தை சுப்புவிடம் கொடுத்தாள். பொட்டலம் ஆறிப்போய்
இருந்தது. சவுரி சாருக்கு வாங்கிக் கொண்டு போன போது அதில் இருந்த சூடும்
மணமும் இந்தப் பொட்டலத்தில் இல்லை. ஆனால் சுப்புவுக்குப் பிடித்த அந்த நடிகரின்
படம், அந்தக் காகிதத்தில் அச்சிடப்பட்டிருந்தது. சுப்புவுக்கு ஏதோ புரிந்தது போல்
இருந்தது.

“ஆத்தா, எனக்கு வவுறு சரியில்ல. வேணாம்.” என்றான் சுப்பு.

- சேகர் 

தொடர்புடைய சிறுகதைகள்
தேவநேசன் வாழ்க்கையில் மிக நொந்து போனதன் பின்னரே ஓரளவு நல்ல நிலைக்கு வந்தான். இருந்தாலும் அவனது கடுமையான முயற்சி அத்துடன் நின்று போய்விடவில்லை. அவனுக்கு ஒரு அழகிய அற்புதமான மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். அந்த ஐவர் அடங்கிய குடும்பம் ...
மேலும் கதையை படிக்க...
ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அவள் கணவன் மீது, அம்மா மீது, அப்பா மீது, தங்கை மீது, அவள் மீதே கூட ! ‘அரைவிங் பை பிருந்தாவன் ‘ என்ற அவள் தங்கை கணவன் தந்தி அவள் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. சூட்டும் கோட்டுமாய் ஜம்மென்று ...
மேலும் கதையை படிக்க...
'வயிற்று வலியென்று இரண்டு மூன்று நாளாக வித்தியா அவதிப் படுகிறாள்'. அந்தத்தாய், வயிற்று வலியால்அவதிப்படும் தன் மகளின் வயிற்றைத் தடவியபடி டாக்டருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவசரசிகிச்சைப் பகுதி பல ரகப்பட்ட நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.லண்டனிலுள்ள பல கசுவல்ட்டி டிப்பார்ட்மென்டுகள்,இரவு ஏழுமணிக்குப் பின் ...
மேலும் கதையை படிக்க...
திரைப்படங்களில் நாம் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுவதற்கு தகுந்தாற்போல புதுமணத் தம்பதிகள் நிஜவாழ்வில் நடந்து கொள்வதில்லை தான். குளித்து முடித்து, புது டிசைனில் சேலை அணிந்து, ஈரம்காயாத தலைமுடிக்கு துண்டு கட்டி கையில் காபி டம்ளரோடு வரும் நாயகி படுக்கையில் குப்புற விழுந்து ...
மேலும் கதையை படிக்க...
"முருகா, அம்மனே, சிவனே, வட்டுவினியானே இந்த பஸ் எல்லாவிடங்களிலையும் நிக்காமல்...யாரும் ஏறாமல்,இறங்காமல் நேரேபோய்; கடசி பஸ்ரொப்பில் நிக்கவேணும். ம்...ம்... இதுக்கிள்ளை யாரே ஒண்டு பெல்லை அடிச்சிட்டுது, இறங்கப்போகுது போலை.  நான் நேரத்துக்குப் போய் சேர்ந்த மாதிரித்தான். சரி இறங்கிறதாவது கதவருகிலுள்ள சீட்டில் ...
மேலும் கதையை படிக்க...
உங்களுக்காகத்தானே உழைக்கிறேன்
பெருமை
வித்தியாவின் குழந்தை
சாப்ட்வேர் சீதை
புலத்தில் ஒருநாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)