முடிவை நோக்கி

 

பஸ் சிரமப்பட்டு மேடேறிக் கொண்டிருந்தது. ஓட்டுநரின் பின்புற இருக்கையின் ஜன்னலோரம் உட்கார்ந்து இருந்த சண்முகவடிவுக்கு வண்டிக்கு எதிராக முகத்தில் விசிறிக் கொண்டிருந்த காற்றை முகத்தை சுருக்கி உள்வாங்கி இரசித்துக் கொண்டான். எத்தனை நாளாச்சு இந்த மாதிரி பஸ் ஏறிபோய் ! இப்ப என்னை எல்லாரும் எப்படி பார்ப்பாங்க? ஒரு விநாடி அவன் சிந்தனை ஊருக்குள் சென்றது.

அம்மாவுக்கு என்மேல அப்ப இருந்த கோபம் இப்ப இருக்காது, என்னை பாத்தவுடனே சந்தோசப்படத்தான் போறாள். “பாரு” அதான் பாருகுட்டி இப்போகூட என்னை கல்யாணம் பண்ணறதுக்கு ரெடியாத்தான் இருப்பா.

பாருவை நினைத்தவுடன் மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தவன் மெல்ல சிலிர்த்துக் கொண்டான். அவளுக்குத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்கோணும்னு எவ்வளவு ஆசை. நான்தான் படிச்சுட்டோம்னு அவளை கண்டுக்காம விட்டுட்டது எவ்வளவு தப்பாபோச்சு !

சே எல்லாம் அந்த சுவர்ணாவுனால தான். அவளையே நினைச்சு நினைச்சு உருகி கடைசியில என்னத்தை கண்டேன். அவ ஏமாத்திட்டு போனதுதான் மிச்சம். போதும் அவ நினைப்பு, தன் மனதுக்குள் வரக்கூடாதென சட்டென தன் நினைவுகளை உதறிக்கொண்டவன், ஆமா கோபால் எப்படி இருப்பான்?, என் கூடவே இருந்தானே, ஒண்ணாத்தான் இருப்போம், சாப்பிடுவோம், தூங்குவோம், அவங்க அம்மா கூட கிண்டலடிக்கும், ஏண்டா நீங்க என்ன புருசன் பொண்டாட்டியா? அப்படீன்னு, அவ்வளோ பிரண்ட்ஸ்சா இருந்தோம். அவனும் என்னை கண்டா இப்போ சந்தோசப்படுவான்.

அருணாசல வாத்தியார் எப்படி இருக்காருன்னு தெரியலை, என்னை கண்டா அந்த ஆளுக்கு என்ன தோணுமோ, எலே கெட்டு அழியாதடா, வாழற வயசுல ஒழுங்கா வாழ்ந்தா வயசானப்ப நல்லா இருக்கலாமுடா, அறிவுரை சொல்லியே கொல்லுவாரே. இப்ப என்னை பாத்தா என்ன சொல்லுவாரோ?

எல்லாமே நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு, அப்புறம் எப்படி மாறுச்சு. எல்லாம் அந்த சுவர்ணாவாலேதான், அவ மட்டும் என் வாழ்க்கையில குறுக்க வராம இருந்திருந்தா இந்நேரம் நான் எங்கேயோ போயிருப்பேன், ம்..எல்லாமே விதிப்பயன்னு சொல்லுவாங்க அது சரியாத்தான் போச்சு.

பஸ் இப்பொழுது ஒரு வளைவில் திரும்பி தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்வதற்காக சற்று நின்றது. ஊர் வந்துடுச்சா எட்டிபார்த்த சண்முகவடிவு ஹூஹூம். நம்ம ஊர் வந்தா இங்க ஒரு வேப்பமரம் நிக்கும். இப்ப இருக்கான்னு தெரியலை. கண்டக்டர் விசில் ஊத பஸ் மீண்டும் தன் பெருமூச்சுடன் பயணத்தை தொடர்ந்தது.

ஆமா சுவர்ணாவை எங்க பாத்தேன், கரெக்ட் ஒரு சினிமா ஷூட்டிங்கில் தான் பாத்தேன், அப்ப எப்படி இருந்தா, உங்க பேரு சண்முகவடிவுதானே? அந்த கண்ணை சாய்ச்சி அவகேட்ட அழகு அடடா, அப்பவே அவளைத்தான் கட்டோணும்னு முடிவு பண்ணிட்டேன்.

எப்படியோ என்னைய கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க வைக்கறதுக்கே ஒருவருசம் ஆச்சே அது வரைக்கும் அவ மனசை மாத்தறதுக்குள்ள, நான் பட்டபாடு, அவளை குத்தம் சொல்லக் கூடாது, அவ அப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா சினிமாவுல பிரபலமாக ஆரம்பிச்ச நேரம், இதுல போய் நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கறேன், அப்படீன்னு சொன்னா அவ ஒத்துக்குவாளா?

மீண்டும் சுவர்ணாவின் நினைவுகளுக்குள் போனவன் தலையை உதறிக் கொண்டான். சே… மறுபடி மறுபடி அவ நினைப்பு, வேண்டாம் அதைய மறந்துடுவோம், இனியாவது ஊருக்கு போய் ! அங்க போய் யார் முகத்தை பார்க்க முடியும், நான் அவங்க மனசை எப்படி நோகடிச்சிருப்பேன். எல்லாம் இந்த சுவர்ணாவுக்காகத்தானே, அவமட்டும் சொந்தபடம் எடுக்கணும்னு ஆசைகாட்டாம இருந்திருந்தா நான் பாட்டுக்கு ஏதோ ஒண்ணு இரண்டு சீனுல நடிச்சு பணம் சம்பாரிச்சுட்டு போயிருப்பேனே… ஹூம் அப்படியும் சொல்லக்கூடாது, என்னை மனசில்லாம கல்யாணம் பண்ணிகிட்டாலும், அவ சிபாரிசுல இரண்டு படத்துல நல்லரோல் வாங்கி கொடுத்தாளே. நான் ஒழுங்கா நடிச்சு கொடுத்திருந்தா நல்லா வந்திருக்கலாம், நானாத்தான கெடுத்துக்கிட்டேன். அதுக்கப்புறம்தான சொந்தபடத்தை எடுக்கறத பத்தி ஐடியா சொன்னா, உடனே ஊருக்கு வந்து அம்மாவையும் அப்பாவையும் மிரட்டி எல்லாத்தையும் வித்துட்டு, காசை எடுத்துகிட்டு போனேன். மறுபடி இப்பத்தான் இங்க வர்றேன்.

பஸ் சட்டென நின்றது “ராசக்காபுரம்” இறங்குங்க, கண்டக்டர் சத்தம் கொடுக்க சண்முகவடிவு அடவந்துடுச்சா மெல்ல எழ முயற்சித்தவன் நீண்டநேரம் உட்கார்ந்து வந்ததால் சற்று தடுமாறினான், பார்த்து பார்த்து என்று வாட்டசாட்டமாய் இருவர் அவனை மெல்ல வெளியே கூட்டிவந்தனர்.

சண்முகவடிவு அவனை இறக்குவதற்கு உதவி செய்தவர்களிடம் இந்தவழியா இரண்டு கிலோமீட்டர் நடந்தாக்கா எங்க ஊரு வரும், சொன்னவன் கண்களில் அவன் ஊரை பார்த்துவிட்ட ஆர்வம் தெரிந்தது. விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான். அவன்கூடவேவாட்டசாட்டாமானஇருவரும்நடக்கஆரம்பித்தனர்.

ஒரு ஓலை குடிசை முன், நீளமாகவும் அகலமாகவும் காணப்பட்ட பெஞ்ச் ஒன்றில் முதியவர் படுக்க வைக்கபட்டிருந்தார். அவரை சுற்றி ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. இவர்கள் மூவரும் அங்கு சென்றடைந்ததும் ஒரு பெரியவர், முன்னால்வந்து “வந்துட்டியாடா சண்முகவடிவு” உங்க அப்பன் உன்னை பாக்கறதுக்குத்தான் நேத்து வரைக்கும் உசிரை கையில புடுச்சிகிட்டு இருந்தான், காலையிலதான் மூச்சை விட்டான்.

சண்முகவடிவுடன் கூட வந்தவர் நேத்தே இவனை கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க, பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சு கிளம்பறதுக்கு இவ்வளவு நேரம் ஆயிடுச்சு.

உறவுகள் ஒருவரும் அவனை நெருங்கி வரவில்லை. அம்மா எங்கே? அந்த பெரியவரிடம் கேட்டான், அம்மா போய் இரண்டு வருசமாச்சுடா, கடைசி வரைக்கும் உன்னைய பாக்காமயே போய் சேர்ந்துட்டா, நாங்களும் உன்கிட்டே சொல்ல வேண்டாமுன்னு விட்டுட்டோம், அப்பன் செத்தப்ப மனசு கேக்கலை அதான், துண்டை வாயில் பொத்தியபடி அழுதார். அம்மாவின் இறப்பு இவனை உலுக்கியதில் பாருவைபற்றி அடுத்து கேட்க நினைத்ததை கூட விட்டுவிட்டான். பாவம் அந்த இறந்து போன பெரியவருக்கு தம்பியாய் பிறந்துவிட்டதால் இவனுக்காக அழுவதா? இறந்தவனுக்காக அழுவதா? தெரியவில்லை, அழுதுகொண்டிருந்தார்.

எல்லாம் முடிந்து மீண்டும் அவர்களுடன் பஸ்ஸுக்கு நடக்க ஆரம்பிக்கு முன் அவன் சித்தப்பா அவன் அருகில் வந்து முகத்தைதடவி இந்த சித்தப்பனை மறந்துடாதடா !அழுது கொண்டே சொன்னார். நீங்க எல்லாரும் இனிமே என்னை மறந்துடணும், ஏன்னா இனி நான் உயிரோட வரமாட்டேன், சொல்லி விட்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டான். கூடவந்த இருவரும் அவனுடன் நடக்க ஆரம்பித்துவிட்டனர்.

சற்றுதள்ளி இவர்களை பார்த்து நின்று கொண்டிருந்த உறவுகள் கூட்டத்தில் ஒருவர் காரியம் முடிச்ச உடனே கூட்டிகிட்டு போயிட்டாங்களே?

அவனை இரண்டு நாள்ல தூக்கு போடப் போறாங்களாம், அதுக்குள்ள அவன் அப்பன் செத்துட்டான், கொள்ளி வைக்கறதுக்கு போலீஸ் கூட்டிகிட்டு வந்திருக்கு.

தூக்குல போடற அளவுக்கு அவன் என்ன தப்புபண்ணிட்டான்?

யாரோ சினிமா நடிகை சுவர்ணாவாம், அவளையும், அவகூட எவனோ இருந்தானாம், அவனையும் வெட்டி சாகடிச்சுட்டானாம், அதான் தூக்கு கொடுத்திட்டாங்க.

வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தவர்களுக்கு, சண்முகவடிவும் அவனுடன் வந்தவர்களும் தொலைதூர புள்ளிகள் ஆனார்கள். 

தொடர்புடைய சிறுகதைகள்
எங்கும் புகை மண்டலம், திடீர் திடீரென்று சீறிக்கொண்டு செல்லும் குண்டின் சத்தம், திடீரென்று பெரும் சூறாவளி சத்த்த்துடன் தலைக்கு மேல் பறந்து சென்று “டொம்” என்று விழுந்து பெரும் சத்தத்துடன் வெடிக்கும் பீரங்கி குண்டுகள். இடை இடையே தட தவென ஓடி ...
மேலும் கதையை படிக்க...
கந்தசாமி தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தான். உள்ளே அவன் மனைவி இவனை அர்ச்சனை செய்து கொண்டே வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தாள். ஒரு வேலை செய்ய துப்பிருக்கா ? எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கே ! யாராவது ஏதா கேட்டாங்கன்னா துக்கி கொடுத்திக்குடுவாரு, இவரு பெரிய ...
மேலும் கதையை படிக்க...
ஹலோ…ஹலோ இது மதுமிதா ஹாஸ்பிடல்தானே? ஆமா நீங்க யாரு? நான் டாக்டர் சரவணன் கிட்ட பேசணும். எந்த சரவணன்? ஆர்தோ டாகடரா? இல்லை நெப்ராலஜி டாக்டரா? இந்த கிட்னி இதெல்லாம் பாப்ப்பாங்க இல்லை ! ஓ.. நெப்ராலஜி டாக்டரா ! ஆமா அவர்தான் கொஞ்சம் அவசரமா அவர்கூட ...
மேலும் கதையை படிக்க...
வணக்கம் குழந்தைகளே ! இப்பொழுது இந்த கோமாளி குரங்குகள் உங்களுக்கு அவர்களுடைய குறும்புகளை பாட்டாக பாடி ஆடி காண்பிக்க போகினறன! எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் வாலு பெரிசா குரங்கு குட்டிக்கு இந்த வால் பெரிசா…? அடிக்குது பாரு கரணம், ஐசைலக்கடி அம்மா…ஐசைலக்கடி அம்மா.. பாருங்கள் குரங்கு போகிறவர்களை ...
மேலும் கதையை படிக்க...
வீடு எப்படியிருக்கு பத்மா? தன் மனைவியை பார்த்து கேட்டான் குமார். சூப்பரா இருக்குங்க, எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, சொன்னவளிடம் இந்தா வீட்டுசாவி என்று கையில் கொடுத்தான். என்னங்க இது நிசமா? கண்கள் விரிய கேட்டவளை மெல்ல தொட்டு, முதல்ல வீட்டை திறந்து ...
மேலும் கதையை படிக்க...
சண்டை
இவர்களின் அன்பு வேறு வகை
எல்லாம் முடிந்த பின்
புத்திசாலி குரங்குகள்
புதுவீடு

முடிவை நோக்கி மீது ஒரு கருத்து

  1. Nirmala Raghavan says:

    எதிர்பாராத முடிவு கதையையே உயர்த்திவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW