முடிவு உன் கையில்

 

“”சுகந்தி சாப்பிட வாம்மா…”
உள்ளிலிருந்து அம்மா கூப்பிட, ஹாலில் உட்கார்ந்து திருத்திக் கொண்டிருந்த பேப்பர் கட்டுகளை, மேஜை மேல் வைத்தவள் எழுந்து கொண்டாள்.
வளைந்த இடதுகாலை லேசாக சாய்த்து, சாய்த்து நடந்து உள்ளே சென்றவள், டைனிங் டேபிள் முன் அமர்ந்தாள்.
அவள் தட்டிலிருந்த சப்பாத்தியை குருமாவில் தொட்டு சாப்பிட ஆரம்பிக்க, உள்ளே படுத்திருக்கும் அப்பாவின் இருமல் சப்தம் கேட்டது.
முடிவு உன் கையில்“”அம்மா… அப்பாவுக்கு மருந்து, மாத்திரை கொடுத்துட்டியா? இரண்டு நாளா இருமல் ஜாஸ்தியா இருக்கு. பாவம் ரொம்ப சிரமப்படறாரு.”
“”கொடுத்தேம்மா. என்ன செய்யறது. டி.பி., வந்து, ஆளை உருக்கி போட்டுடுச்சி. உடம்பிலே வெறும் எலும்பும், தோலும் தான் இருக்கு. உலகத்திலே, பட வேண்டிய கஷ்டத்தை பட்டுத் தானே போய் சேர முடியும்,” குரல் விரக்தியுடன் ஒலித்தது.
“”ஏம்மா அலுத்துக்கிற, சரியாயிடும் பார்ப்போம். நீயும் சாப்பிடுமா…”
“”சுகந்தி… இன்னைக்கு நீ வேலைக்கு போன பிறகு, மோகன் வந்தான்மா.”
அம்மாவே சொல்லட்டும் என்று, மவுனமாக சாப்பிட்டாள்.
“”உனக்கு ஒரு வரன் பத்தி சொன்னான். அவனுடன் ஆபிசில் வேலை பார்ப்பவராம். அவர் மனைவி மஞ்சள் காமாலை வந்து, போன வருஷம் இறந்துட்டாராம். பத்தாவது படிக்கிற பையனும், ஆறாவது படிக்கிற பொண்ணும் இருக்காம்,” அவள் குரல் தயக்கத்துடன் ஒலித்தது.
“”ஏம்மா தயங்கறே… மேலே சொல்லு.”
“”என்னம்மா செய்யறது. இதுவரை எத்தனையோ வரன்கள், எல்லாமே கிட்ட வந்து, கடைசியில் தட்டிட்டு போயிடுது. உனக்கு வயசு முப்பதை நெருங்கப் போகுது. நோயாளி அப்பா, வயசான அம்மா, எத்தனை நாளைக்கு துணை வர முடியும். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா, நாங்க நிம்மதியா கண்ணை மூடுவோம்.”
“”சரிம்மா. எதுக்கு வருத்தப்படறே. மோகன் அப்புறம் என்ன சொன்னான்?”
“”எனக்கு வருத்தமா இருக்கு சுகந்தி. உன்னை இரண்டாம் தாரமாக கொடுக்க எனக்கு மனசில்லை. “இப்படி தள்ளி போட்டா, அப்புறம் உன் மகளுக்கு கல்யாணமே நடக்காம போயிடும்…’ன்னு சொல்றான். அவருக்கு வயசு நாற்பதைந்து ஆகுதாம். உன்கிட்டே விவரம் சொல்லச் சொன்னான். நாளைக்கு வந்து, உன்னோட பேசறதா சொல்லிட்டு போனான்.”
கொஞ்ச நேரம் மவுனமாக இருந்தவள், “”சரிம்மா பரவாயில்லை. ஒத்து வந்தா பார்ப்போம். எனக்கான வாழ்க்கை அதுவாக இருந்தா அமைஞ்சுட்டு போகட்டும்.”
சொன்னவள் எழுந்து, காலை சாய்த்து நடந்து செல்ல, கண்கள் கலங்க மகளை பார்த்தாள்.
சுகந்தி, பவுர்ணமி நிலாவாக பொலிவுடன் விளங்கினாலும், அவள் அழகை ரசித்தவர்கள், அவளது வளைந்த காலை, சாய்ந்த நடையை பார்த்தவுடன் ஒதுங்கி போயினர். தெருவில் நடக்கும் போது, மற்றவர்களின் பரிதாப பார்வை, ஏளன பார்வை எல்லாவற்றையும் அலட்சியம் செய்து நடப்பாள்.
பிறக்கும் போதே ஒரு கால் ஊனத்துடன் பிறந்தவள். வளர, வளர தன்னால் மற்றவர்கள் போல, நடக்க முடியவில்லையே என, அவள் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை. எதையும் துணிவுடன் ஏற்றுக் கொள்ளும் மன பக்குவத்தை, அவளுக்கு கடவுள் கொடுத்திருந்தார்.
காலேஜில் லெக்சரராக பணியாற்றுகிறாள் சுகந்தி. சகோதரன் மோகனும் ஒரு பெரிய நிறுவனத்தில், நல்ல வேலையில் இருந்தான். திருமணமானவுடன், மனைவியுடன் தனிக்குடித்தனம் போக, சுகந்தி பெற்றவர்களுடன் இருந்தாள்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, அம்மாவுடன் உட்கார்ந்து, “டிவி’ பார்த்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்தான் மோகன்.
“”வா அண்ணா. அண்ணி வரலையா?”
அவர்கள் அருகில் வந்து உட்கார்ந்தவன், அம்மாவை பார்த்தான்.
“”என்னம்மா. சுகந்திகிட்டே எல்லா விவரமும் சொல்லிட்டியா?”
“”ம்… ம்… சொன்னாங்க. அம்மா தலை வலிக்கிற மாதிரி இருக்கு. எனக்கும், அண்ணனுக்கும் சூடா காபி போட்டுட்டு வர்றியாம்மா?”
சுகந்தி கேட்க, அவள் எழுந்து கொண்டாள்.
“”அம்மா பக்கத்திலே இருக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன்னு புரியுது. மனசிலே இருக்கிறதை, வெளிப்படையா சொல்லு. அம்மா உன்னை நினைச்சு ரொம்பவே கவலைபடறாங்க. உன்னை நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி, கடமையை முடிக்கணும்ன்னு நினைக்கிறாங்க.
“”உன்னோட குறையால, உனக்கான நல் வாழ்க்கை தள்ளி போய்ட்டு இருக்கு. இதுக்கு, யாரையும் ஏத்துக்கிறது தான் புத்திசாலித்தனம். நான் சொன்ன வரன், என்னோட வேலை பார்க்கிறவர். நல்ல குணம்; அவர்கிட்டே எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
“”அவர் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக, அவருடைய வயசான அம்மாவுக்கு, நல்ல மருமகளாக, அவங்க குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தால் போதும்ன்னு சொல்றாரு. உன் குறையை அவர், பெரிசாக நினைக்கலை. உன்னோட முடிவை சொன்னா, இது விஷயமா சீக்கிரம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.”
மோகன் சொல்ல, அவனையே மவுனமாக பார்த்தபடி இருந்தவள், “”நீ சொல்றது அத்தனையும் உண்மைங்கிறது எனக்கு நல்லா புரியுது. என்னுடைய ஊனம், எனக்கு பெரிசா தெரியாம இருக்கலாம். ஆனா, மத்தவங்க பார்வையிலே, அது பெரிய விஷயமாகத் தான் தெரியும். எனக்கு இந்த வரன் அமையறதில் எந்த ஆட்சேபனையும் இல்லை,” என்று அவள் சொல்ல, முகம் மலர்ந்தான்.
“”ஓ.கே., சுகந்தி. அப்புறம் என்ன, மளமளன்னு கல்யாண ஏற்பாடு பண்ணிடலாம்.”
“”ஒரு நிமிஷம்… நான் இதுக்கு சம்மதிக்கிறதும், ஒதுக்கிறதும் உன் கையிலே தான் இருக்கு.”
“”என்ன சொல்ற? நான் என்ன சொல்லப் போறேன்…”
ஒரு கணம், அவனை கூர்ந்து பார்த்தவள், “”என்னை கட்டிக்க நினைக்கிறவர், அவருக்கு இன்னொருத்தி மூலமாக பிறந்த குழந்தைகளுக்கு ஆதரவாக, அவரை பெத்த தாய்க்கு அடைக்கலமாக இருக்கணும்ன்னு நினைக்கிறாரு.
“”என்னோட ஆதங்கம் என்ன தெரியுமா? நம்ம ரெண்டு பேரையும் பெத்து, வளர்த்து, ஆளாக்கி, இன்னைக்கு வயசான காலத்தில் வியாதியாலே படுத்திருக்கிற அப்பா, என்னையே ஆதரவாக பற்றியிருக்கிற அம்மா, இவங்களை உதறிட்டு நான் கிளம்பணும்.
“”அவங்களை உன் பொறுப்பில், நீ அழைச்சுட்டு போயி, உன் மனைவிக்கிட்டே, வயசான என் அம்மா, அப்பாவுக்கு நீ ஆதரவாக இருந்து, அவங்களை பாதுகாக்கணும்ன்னு, உன்னோட நண்பர் சொன்ன மாதிரி, நீ உண்மையான மனசோட சொல்லி, அதை அண்ணி மனபூர்வமாக ஒத்துக்கிறதாக இருந்தா…
“”நானும் உன் நண்பரின் குடும்பத்தில், நல்ல மருமகளாக, நல்ல மனைவியாக, நல்ல தாயாக இருக்க தயாராக இருக்கேன். என்ன சொல்ற? முடிவு உன் கையில் தான் இருக்கு.”
காபியுடன் வந்த அம்மாவிடமிருந்து, காபியை வாங்கி குடித்தபடி, அண்ணனை பார்க்க, அவன் பதிலேதும் சொல்லாமல், மவுனமாக அமர்ந்திருந்தான்.

- செப்டம்பர் 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
எண்ணங்கள் மாறலாம்!
மகனும், மருமகளும் ஆளுக்கொரு காரில் வேலைக்கு புறப்பட்டுச் செல்ல, கதவை தாழிட்டு உள்ளே வந்தாள் சுந்தரி. ""என்ன சுந்தரி, இரண்டு பேரும் கிளம்பியாச்சா?'' ""ஆமாம்...'' அலுப்புடன் சொன்னபடி, கணவரின் அருகில் உட்கார்ந்தாள். ""சரி, நாமும் ஏதாவது சாப்பிட்டு... வாக்கிங் போய்ட்டு வரலாமா?'' ""என்ன பெரிசா சாப்பாடு... ஓட்ஸ், ...
மேலும் கதையை படிக்க...
""அண்ணே சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. என் மக ஜோதியை, உங்க பிள்ளை பμணிக்குதான் கட்டிக் கொடுக்கணும்னு சின்ன பிள்ளையாக இருக்கும் போதே பேசினதுதான். இருந்தாலும் இப்ப நடைமுறைக்கு ஒத்து வμõதுன்னு தோணுது. எனக்கு இருக்கிறது ஒ÷μ மக. அவ சீரும், சிறப்புமாக ...
மேலும் கதையை படிக்க...
பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத். ""என்னப்பா பேரனுக்கு இவ்வளவு விலையில் காஸ்ட்லி கார் வாங்கிக் கொடுத்துட்டு அவன் விளையாடுவதை ரசிச்சுட்டு இருக்கிங்களா?'' பக்கத்தில் வந்து நிற்கும் மகன் சிவாவைப் ...
மேலும் கதையை படிக்க...
அந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பராகி, ஐந்து வருடம் கழித்து வேலை விஷயமா, மோகனுடன் உள்ளே நுழைந்தார் சிவராமன். தெரிந்த முகங்கள் யாருமே கண்ணில் படவில்லை. எல்லோரும் புதியவர்களாக தெரிந்தார்கள். ""க்ளார்க் சபேசன், சிவராமனை பார்த்துப் புன்னகையுடன் அவரை நோக்கி வந்தார். ""சார், நல்லா இருக்கீங்களா. பார்த்து ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
வடிகால்
மாலை நேரம் — வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும் அந்த முதியவர்கள், நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில், தெருவின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிற திண்டில் அமர்ந்து கொண்டிருந்தனர். பரஸ்பரம், தினமும் அந்த இடத்தில், ...
மேலும் கதையை படிக்க...
எண்ணங்கள் மாறலாம்!
அவமானம்
மனமே கடவுள்
கடந்து போகும்
வடிகால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW