Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மீறல்

 

தி.நகர். சென்னை.

தன் வீட்டில் அமர்ந்தபடி விசிறியால் முதுகைச் சொறிந்து கொண்டிருந்த நடராஜனுக்கு எழுபது வயது.

ஒரு குடும்பத் தலைவனாக இன்றைக்கும் அவரது அதிகாரம்தான் வீட்டில் கொடிகட்டிப் பறக்கிறது.

கூட்டுக் குடும்பம். நான்கு மகன்களில் மூன்று பேருக்கு திருமணமாகிவிட்டது. கடைசி மகன் முரளிக்கு போன வாரம்தான் மைலாப்பூரில் பெண் பார்த்துவிட்டு வந்தனர். ஒரே பெண். பணக்கார இடம். அவர்கள் போட்ட ஒரே கண்டிஷன் முரளி வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் தருவதாகச் சொன்ன மிகப்பெரிய வரதட்சணைக்கும்; நகை நட்டுகளுக்கும், கிடைக்கப் போகிற ஏராளமான சொத்திற்கும் ஆசைப்பட்டு நடராஜன் தலையை ஆட்டிவிட்டு வந்தார்.

ஈஸி சேரில் வேகுநேரமாகக் கண்களை மூடிக் கிடந்த நடராஜன் மெல்ல எழுந்து சமையலறைப் பக்கம் போனார். அங்கு அவரது மனைவி மதுரம் மட்டும் தனியாக வேலைகளில் ஆழ்ந்திருந்தாள்.

“என்ன யாரையும் காணோம்… நீ மட்டும் தனியா வேலை பாக்கற?”

“மூத்தவனும் அவன் பொண்டாட்டியும், குழந்தைகளோட ஏதோவொரு கல்யாண ரிசப்ஷனுக்கு போயிருக்குகள்…”

“மோகன்..?”

அவனோட மச்சினியோட குழந்தைக்குப் பிறந்த நாளாம். அந்த ரெண்டும் அதுக்குப் புறப்பட்டுப் போனதுகள்…”

“அதுசரி… மச்சினியோட குழந்தைக்குப் பிறந்த நாள்னா அவசியம் போய்க் கலந்துக்கனுமே…! போகலைன்னா தலை வெடிச்சுப் போயிடுமே… அதுக்குப் போறவன் கையை வீசிகிட்டு சும்மா போயிட முடியுமா? ஏதாவது வாங்கிகிட்டு போயிருப்பானே?”

“என்ன வாங்கிட்டுப் போறானோ… யார் கண்டா? நம்மகிட்ட சொல்லிட்டா போகுதுகள்? அதுகளோட இஷ்டம்தானே இந்த வீட்ல…”

“அப்புறம் விஷ்ணுவும் அவன் பொண்டாட்டியும் எங்க ஒழிஞ்சாங்க…?”

“சினிமாக்கு போயிருக்காங்க…”

“உன் கடைசி புத்திரன் முரளி எங்க போனான்?”

“கிரிக்கெட் மாட்ச் விளையாடப் போனான்.”

“கார்த்தால உன் தங்கை வந்து என்னமோ உன் காதைக் கடிச்சிட்டு இருந்தாளே… என்னவாம்?”

“அதான, என்னடா இவ்வளவு நேரமா கேட்கக் காணோமேன்னு பார்த்தேன்…”

“அதென்னமோ அவ வந்தாலே பேசறது துளி விழாது காதில், அப்படி என்னதான் ரகசியம் இருக்குமோ அக்கா தங்கைகளுக்குள்ள…”

“நாங்க பேசிக்கிறது ஒவ்வொண்ணும் காதுல விழணும்னா, ஒரு நாற்காலியை எடுத்தாந்து எங்க பக்கத்ல போட்டு உட்கார்ந்துக்க வேண்டியதுதானே…?”

“ஆமா எனக்கு வேற வேலை இல்லை பார்.. எதோ படு சீரியஸா உன் காதைக் கடிச்சிட்டு இருந்தாளேன்னு கேட்க வந்தேன்.”

“எல்லாம் நம்ம முரளியோட கல்யாணத்தைப் பத்திதான் பேசிட்டிருந்தா.”

“என்னவாம் அவனோட கல்யாணத்தைப் பத்தி?”

“அந்த மயிலாப்பூர் குடும்பத்துக்கு நம்ம முரளியை நீங்க வித்துப்புட்டதா எல்லோரும் பேசிக்கிறாங்களாம்.. என் தங்கை சொல்றா.”

“ஆமா, ஊரே திரண்டு வந்து இவகிட்டே மனு கொடுத்துச்சாக்கும்? இவளே பொறாமையில் கதை கட்டி விடுவா. எனக்குத் தெரியாதாக்கும் இவளைப் பத்தி? மருமகள் நகைகளை எடுத்து மகளுக்குப் போட்டுக் கட்டிக் கொடுத்தவளாச்சே… இவ வந்து சொல்ல வந்துட்டா என்னை. அதுவும் பிஎச்டி படிச்சு டாக்டரேட் வாங்கிய என் மவனை விக்கறதுக்கு நான் என்ன பைத்தியக்காரனா… பணத்துக்காக பெரிய ப்ளான் போட்டுத்தான் இந்தச் சம்பந்தத்துக்கு சரின்னு சொன்னேன். நீயே பார் என்ன நடக்கப் போகுதுன்னு. அவன விக்கிறதுக்கு நான் என்ன காதுல பூவா வச்சிருக்கேன்…? சொல்ல வந்துட்டாளுங்க பெரிசா…”

“எனக்கென்ன தெரியும். அவ வந்து சொன்னா.”

“சொல்லுவா சுரைக்காய்க்கு உப்பு இல்லேன்னு… நீ ஏன் கேட்டுகிட்டு சும்மா இருந்தே… என்னைக் கூப்பிட்டு உடனே சொல்லியிருக்க வேண்டியதுதானே?”

“சொன்னா, உடனே அவளைப் போட்டு திட்டியிருப்பீங்க.”

“வரட்டும். இன்னொரு நாள் வராமலா போகப்போறா… அப்ப கேக்கறேன் பார் நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி. மச்சினியா இருந்தா எனக்கென்ன?”

“உங்ககிட்டப் போய் இதச் சொன்னேன் பாருங்க…”

“பின்னே என்ன? என் மகனை வித்துட்டேன்னு எவ்வளவு திமிர் இருந்தா சொல்லுவா அவ?”

“அவ சொல்லலைங்க… யார் யாரோ வந்து அப்படி அவகிட்ட சொன்னாங்களாம்.”

“அடி செருப்பால… உன் தங்கைக்கு இத்தனை வருஷமாகியும் இன்னும் நான் யார்னு தெரியலை. உங்கப்பா உயிரோட இருந்திருந்தா அவகிட்ட நான் யார்னு சொல்லியிருப்பாரு.”

“ஆமா, எங்கப்பா வந்து சொல்லாட்டா எங்களுக்கெல்லாம் தெரியாதாக்கும்? தலை தீபாவளிக்கு கொடுத்த வேஷ்டில ஒரே ஒரு விரற்கடை ஜரிகை இருந்ததற்காக, வாங்கின வேஷ்டியை அப்படியே பிரிச்சு கூடத்துத் தூண்ல கட்டி வச்சிட்டு ஓடிப்போன மனுஷன் எப்படிப் பட்டவர்னு என் தங்கைக்கும் தெரியும், என் தாத்தாவுக்கும் தெரியும்…”

“தெரியும் இல்லியா… அப்புறம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு. என் மகனை நான் விக்கிறேன் இல்லை, ஏலம் போடறேன்… இவளுக்கென்ன?”

“உங்களைக் கையெடுத்து வேண்டுமானாலும் கும்பிடறேன்… உங்க பணத்தாசைக்கு என்னைத்தான் ஆயிரம் இம்சை பண்ணியாச்சு… நம்ம பிள்ளைங்களையும் நீங்க இம்சை பண்ண வேண்டாம். அதுகளையாவது நிம்மதியா இருக்க விடுங்க…”

“ஏன் கும்பிடறதோட நிறுத்திக்கிறே… தோப்புக்கரணமும் போட்டுடேன்…”

“பேசுங்க பேசுங்க… எவ்வளவு நாளைக்குப் பேசுவீங்க… நான் உயிரோட இருக்கிற வரைக்கும் பேசுவீங்க.”

“ஆமா, நீ செத்துட்டா உடனே எனக்குப் பேச்சே வராது… ஊமையாயிடுவேன் நான். பேசறீயே பைத்தியக்காரி மாதிரி… இப்ப இப்படித்தான் பேசுவே… நாளைக்கு இதே முரளியோட இதே கல்யாணத்தை வச்சி மூட்டை மூட்டையாக பணம் சம்பாதிக்கப் போகிறேன். அப்ப வந்து நீ என்ன பேசறேங்கிறதைப் பார்க்கிறேன். இரு இரு…”

“நாம மட்டும்தான் பெண்ணைப் போய் பார்த்தோம்… முரளி இன்னும் அவளைப் பார்க்கல. மனக்கோட்டை கட்டாதீங்க…”

“என் பிள்ளைகள் யாரும் நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டாங்கடி. நாம அவளைப் பார்க்கப் போனபோது முரளி அமெரிக்கால இருந்தான். அடுத்தவாரம் அவளைப் போய்ப் பார்த்து சரின்னு சொல்லப்போறன்…”

முரளியின் கார் வரும் சத்தம் கேட்டது.

உடனே நடராஜன் வேகமாகப் போய், ஈஸிச் சேரில் சாய்ந்து தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டார்.

முரளி கை கால்களைக் கழுவி ஆடை மாற்றிக் கொண்டான். அம்மாவிடம் போய் காபி மட்டும் வாங்கி அருந்திவிட்டு அவனுடைய அறைக்குள் செல்ல எத்தனித்தபோது, நடராஜன் அப்போதுதான் முழித்துக் கொண்டவரைப் போல் “டேய் முரளி… வர்ற ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூருக்கு அவளைப் போய் பார்த்து சரின்னு சொல்லிடு… மத்ததை நான் பார்த்துக்கிறேன்…” என்றார்.

“நான் பாம்பே போக வேண்டிய வேலை இருக்கு… திரும்பி வந்தப்புறம் பாக்கிறேன்…”..”.

அடுத்தநாள் காலை மும்பைக்கு நான்கு நாட்கள் ஆபீஸ் வேலையாகச் செல்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அடுத்த மூன்று நாட்களில் நடராஜன் பெயருக்கு ஒரு பதிவுத் தபால் வந்தது. அதில் –

என் அன்புள்ள அம்மா, அப்பாவிற்கு –

இக் கடிதத்தை தாங்கள் படிக்கும்போது எனக்கும் என்னுடன் வேலை பார்க்கும் ரிசர்ச் அசிஸ்டெண்ட் பாபி ஹெலனுக்கும் தேவாலயத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கும். பாபி ஹெலனுடன் நான் அடையாறில் குடித்தனம் நடத்த ஆரம்பித்துவிட்டேன்.

அப்பாவின் அத்து மீறிய அதிகாரம்; எனக்கு வரதட்சிணை வாங்கித் திருமணம் செய்கிற பணத்தாசை போன்றவைகள் எனக்கு அவரிடம் அச்சத்தைத்தான் ஏற்படுத்தின. எனக்கு கல்யாணம் என்று சொல்லி என்னை அவர் விற்கத்தான் பார்க்கிறார். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட பிள்ளைகளை நண்பனாக நடத்தாமல் அடிமைகளாக நடத்தும் அவரின் போக்கு எனக்கு கிஞ்சித்தும் பிடிக்கவில்லை.

அந்த வெறுப்பினால் என் காதலை உங்களிடம் சொல்லி அனுமதி பெறவில்லை. பாபி ஹெலன் மிக நல்ல குடும்பத்துப் பெண். பரஸ்பர அன்பும்; புரிந்து கொள்ளுதலும்; விட்டுக் கொடுத்தலும் எங்களுடைய பலம்.

சந்தோஷமான சாம்ராஜ்யம் எங்களுடையது. ஒரு நேர்மையான ஆரோக்கியமுள்ள வாழ்க்கையை நாங்கள் நல்லபடியாக நடத்திச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கை எங்களிடம் ஏராளமாக இருக்கிறது. எனக்குப் பிடித்த ஒரு நல்ல பெண்ணை நானே தேடிக் கொண்டேன்.

என் மொபைலுக்கு ஒரேயொரு போன் பண்ணினால் நாங்கள் இருவரும் ஓடோடி வந்து உங்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து ஆசி பெற்றுக் கொள்ளும் ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்.

அண்ணா, மன்னிகளுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

அன்புடன்,

முரளி. 

தொடர்புடைய சிறுகதைகள்
சுசீந்திரம். சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெயர்போனது. தமிழ்நாட்டிலேயே மிக உயரமான ஹனுமார் அங்குதான் உள்ளார். அந்த ஊரில் திருமணமான கோகிலா, தான் உண்டாகியிருந்தபோது தினமும் காலையில் குளித்துவிட்டு மடியாக ஆஞ்சநேயரை சுத்தி சுத்தி வந்தாள். அதன் பலனாக அவளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஆகஸ்ட் 25, 2017. வெள்ளிக்கிழமை. மாலை மூன்றுமணி. அல்கொய்தாவின் தலைமையகம். இஸ்லாமாபாத், பாகிஸ்தான். தலைமை நிர்வாகி தங்கள் இயக்கத்திலுள்ள இரண்டு தீவிரவாத இளைஞர்களை வரச் சொல்லியிருந்தார். கொதிநிலையில் காணப்பட்டார். அவர்கள் இருவரும் வந்ததும், அவர்களின் வலது இடது தோள்களை மாறி மாறி அணைத்து சலாம் அலைக்கும் சொன்னார். பிறகு ...
மேலும் கதையை படிக்க...
கிரஹப்பிரவேசம் முடிந்து சென்னை நங்கநல்லூரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் மல்லிகாவுக்கு அதிகமான வேலைப்பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது. முதலில் ஒரு நல்ல வேலைக்காரியை வீட்டோடு அமைத்துக்கொள்ளத் துடித்தாள். பல பேரிடம் சொல்லி வைத்தாள். மல்லிகா ஒரு சீரியல் பைத்தியம். மாலை ஆறு ...
மேலும் கதையை படிக்க...
என் நண்பன் அருணாச்சலம் மகளுக்கு 2019 பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாலக்காட்டில் திருமணம். அதற்காக நானும் என் மனைவி சரஸ்வதியும் பெங்களூரில் இருந்து கிளம்பி ஒன்பதாம் தேதி பகல் ஒரு மணிக்கு பாலக்காட் சென்றடைந்தோம். இந்திர பிரஸ்தா ஹோட்டலில் அருணாச்சலம் ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் புதிய முயற்சியாக ‘ஆக்ஸி’ யின் விற்பனை அலுவலகம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. சுத்தமான ஆக்ஸிஜனை மெல்லிய அலுமினிய டின்களில் பத்திரமாக அடைத்து விற்கும் தொழில் தற்போது சக்கைப்போடு போடுகிறது. ஒரு காலத்தில் தண்ணீர் விற்பனையை நாம் ஆச்சரியமாகப் ...
மேலும் கதையை படிக்க...
காதலுக்கு கண் இல்லை
ஆகஸ்ட் சதி
தகாத உறவுகள்
தீட்டு
இரண்டு பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)