கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 14,329 
 

“”முத்தம்மா! பங்களா ஊட்டுப் பெரியம்மா காலமாயிட்டாங்களாம்!”என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனாள் அஞ்சலை.

முத்தம்மாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. இருக்காதா பின்னே! அவள் கஷ்டப்பட்டு சிறுகச் சிறுக சேர்த்த பணம் இரண்டாயிரமும், அவள் மருமகள் அவளிடம் கொடுத்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் மூவாயிரம் ரூபாயைப் பெரியம்மாவிடம்தான் கொடுத்து வைத்திருந்தாள். அவள் மகன் பரஞ்சோதி மொடாக் குடியனாக இருந்தான். வீட்டில் ஒரு பொருளையும் விட்டு வைக்க மாட்டான். அவன் கண்ணுக்குத் தெரியாமல் பணத்தை மறைப்பதே பெரும்பாடாக இருந்ததால் பெரியம்மாவிடம் கொடுத்து வைத்திருந்தாள் முத்தம்மா. ஏதோ மருமகள் பூங்கொடியின் சாமார்த்தியத்தால் அந்தக் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது.

மீட்பு2“பங்களா வீட்டுப் பெரியம்மா’ என்று அழைக்கப்படும் ராணி அம்மாள் வீட்டில்தான் முத்தம்மாவும் வேலை பார்த்தாள். ராணி அம்மாள் தன் வீட்டில் வேலை செய்பவர்களை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினார். ராணி அம்மாளின் மகன்கள் நால்வரும் நன்கு படித்து வெளியூரில் பெரிய பெரிய வேலைகளில் இருந்தனர். அவர் கணவர் காலமாகிவிட வீட்டு வேலை செய்து வந்த முத்தம்மாவும், தோட்டம் துரவுகளை நிர்வகித்து வந்த பழனியும், அவன் மனைவி சுமதியும் மட்டும் அவருக்குத் துணையாக இருந்தனர்.

அவர் மகன்கள் “”சொத்தை எல்லாம் வித்துப்புட்டு, பேசாம எங்க கூட வந்துடு”என்று அழைத்தபடியே இருந்தனர். ஆனால் இந்த ஊரையும், ஜனங்களையும் விட்டுப் பிரிய மனமில்லாத ராணி அம்மாள், “”எங் காலத்துக்குப் பெறகு என்ன வேணும்னாலும் செஞ்சுக்கங்க!” என்று கறாராகக் கூறி விட்டார். கணவரது பென்ஷன் பணம் போதுமானதாக இருந்தது. வீட்டையும், சொத்துக்களையும் பிரமாதமாக நிர்வகித்தார். ஏழையோ, பணக்காரியோ நான்கு மருமகள்களையும் சரிசமமாக நடத்தினார். மருமகள்கள் நால்வருக்கும் தன் பங்காக ஐந்து சவரன் நகை செய்து கொடுத்தார். மருமகள்களுக்குத் தம் மாமியாரை ஒரு விஷயத்திலும் குறை கூற முடியவில்லை.

மூன்று மாதத்திற்கு முன்பு திடீரென்று ராணி அம்மாளின் உடல்நிலை மோசமடைந்தது. ஆகவே மூத்த மகன் சீனிவாசனும், மூத்த மருமகள் சுந்தரியும் அந்த வீட்டோடு இருக்கும்படி ஆயிற்று. ராணி அம்மாளின் உடல் நிலை குறித்து விசாரிக்க வந்த உறவுக் கூட்டம், “”இந்தப் பொம்பளைக்கு என்னா நெஞ்சழுத்தம் பாரு! போய்ப் பிள்ளைங்களோட இருந்தாதான் என்னா?”என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

மற்ற பிள்ளைகளும், மருமகள்களும் அடிக்கடி வந்து போனபடி இருந்தனர். இதனால் முத்தம்மாவுக்குத்தான் வேலைப்பளு அதிகமானது. ஆனாலும் சில நாட்களில் அவர்களின் சுவாரசியம் குறைந்தது. மூத்த மருமகளிடம் பிற மருமகள்கள் எல்லாம்,””ஏதாவது சீரியஸ்னா ஃபோன் பண்ணுங்கக்கா! உடனே வர்றோம்!”என்று கூறிச் சென்றுவிட்டனர்.

ராணிஅம்மாளை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து இரண்டு நர்சுகள் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர். அவரால் பேச முடியாததால் எழுதிக்காட்ட ஒரு பரீட்சை அட்டையில் சில காகிதங்களைச் செருகி ஒரு பேனாவை அருகில் வைத்தனர். அவர் கை அசைத்தால் நர்ஸ் அந்த அட்டையைப் பிடித்துக் கொள்ள தன் தேவைகளை அவர் அதில் எழுதினார்.

இப்படி இருக்கும் பொழுது முத்தம்மாவுக்கு எப்படித் தன் பணத்தைக் கேட்பது என்று தெரியவில்லை. அவள் பணம் கொடுத்து வைத்திருந்த விஷயம் ஒருவருக்கும் தெரியாது. அந்த வீட்டுப் பிள்ளைகளும், மருமகள்களும் பணவிஷயத்தில் கறாராக இருந்தனர். பெரியம்மாவிடம் எப்பொழுது வேண்டுமானாலும் பணம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இவர்களிடம் சம்பளத்தைத் தவிர ஒரு பைசா வாங்கிவிட முடியாது. அவர் உடல்நிலை தேறிய பிறகு அவரிடமே கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாள். ஆனால் அவள் நினைப்பில் மண் விழுந்தது போல் ஆனது.

மறுபடியும் ராணி அம்மாளின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து எந்த அசைவுமின்றி போனது. வெறும் மூச்சு மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. தனி அறையில் ஒரு கட்டிலில் அவரை கிடத்தி இருந்தார்கள். அந்த வீட்டின் மூன்றாவது மருமகளும், நான்காவது மருமகளும் அவர் படுத்திருக்கும் அறைக்குள்ளேயே வந்து இரகசியமாய்ப் பேசிக் கொள்ளத் தொடங்கினர். மற்ற எல்லா இடத்திலும் யாராவது வந்து போய்க் கொண்டே இருந்தனர். அந்த ஒரு அறைக்கு மட்டும் யாரும் வருவதில்லை. அது அவர்களுக்கு வசதியாய்ப் போனது.

“”ஏங்க்கா? கௌவி இருபது பவுன் நகை போட்டிருந்திச்சே! அதெல்லாம் எங்கக்கா?”

“”எல்லாம் அவ ( மூத்த மருமகள்) எடுத்து வெச்சிருப்பா! தம்மவளுக்குக் குடுக்கணும்னு நெனக்கிறாளோ என்னவோ?”

“”அய்! அதெப்பிடி? எனக்குந்தான் ஒரு பொட்டப்புள்ள இருக்கு! பிரிச்சா எல்லாருக்கும் சமமா பிரிக்கட்டும்! இல்லாட்டி நா சும்மா விட மாட்டேன்! கௌவி மட்டும் மண்டையப் போடட்டும்! அப்புறம் பாருங்க நடக்கிறதை!”

“”ஏய் மெதுவா பேசுடி! கௌவி காதுல விளுந்திரப் போகுது!”

“”அட நீ வேறக்கா! அதுவே இப்பவோ அப்பவோனு இளுத்துக்கிட்டுக் கெடக்கு! நாம் பேசறதுதான் காதுல விளப் போகுதாக்கும்!”

“”ந்தா! நீ ஒரு அவசரக் குடுக்கை! அந்த நர்ஸ் பிள்ள நம்பளையே பாக்குது பாரு! அத வெச்சிக்கிட்டு இதெல்லாம் பேசலாமா? ஆயி! நாங்க எங்க குடும்ப விசயத்தைப் பேசிக்கிட்டு இருக்கோம்! நீ போயி அவகிட்ட சொல்லிடாத!”

“”அக்கா! இன்னொரு விசயம்! கௌவி மண்டையப் போட்டதும் மொதல்ல இந்தப் பழனிப் பயல வேலய விட்டுத் தொரத்தனும்!. அவன்தான் கௌவிக்கு வலது கையி! தென்னந்தோப்புல உள்ள நெறைய தேங்காய வித்துக் காசு பெரட்டீட்டான். அவனுக்கு ஒரு பைசா கூடக் குடுக்கக் கூடாது!”

கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த முத்தம்மாவுக்கு இவர்களின் உரையாடல் பகீரென்றது. “”பழனிக்கே இந்த நிலை என்றால் என் நிலை? எப்படி என் பணத்தை மீட்பது?”

“”எங்கடா வந்த?” என்று வாசலில் மூத்த மகன் சீனிவாசனின் குரல் அதட்டலாகக் கேட்டது. முத்தம்மா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். பழனி தன் மனைவியுடன் நின்றிருந்தான். “பெரியம்மாவப் பார்த்திட்டுப் போவலாம்னு வந்தேன் சாமி!” என்றான்.

“”ம்!… போ!..”என்றார் சீனிவாசன்.

உள்ளே கட்டிலில் கிழிந்த நாராகக் கிடந்த ராணி அம்மாளின் காலைத் தொட்டு இருவரும் கண்ணில் ஒற்றிக் கொண்டனர். அவரிடம் லேசான அசைவை உணர்ந்தனர். ராணி அம்மாள் மிகவும் சிரமப்பட்டுக் கண் திறந்தார். பழனி சந்தோஷம் அடைந்து அங்கு நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த நர்சை எழுப்ப முற்பட்டான். பெரியம்மா வேண்டாம் எனக் கையசைத்துத் தான் எழுத விரும்புவதாக சைகை செய்தார்.

“”ஐயாவக் கூப்பிடட்டுங்களா?” என்று கேட்டான் பழனி. அதற்கும் வேண்டாம் எனத் தலையசைத்தார். பழனி அட்டையைத் தன் கையால் பிடித்துக் கொண்டான். ராணி அம்மாள் எழுதத் தொடங்கினார்.

“நா அதிகம் தாங்க மாட்டேன்!

நா போனதும் நீயும் போயிடு!

இது சொத்துக்கு அடிச்சிக்கிற கூட்டம்!

ஓம் மவன நல்லாப் படிக்க வை!’ என்று நடுங்கும் எழுத்தில் அதில் எழுதப்பட்டிருந்தது. கண்கள் மூடிய ராணி அம்மாளின் விழி ஓரம் நீர்த்துளி திரண்டு வழிந்து தலையணையை நனைத்தது. பழனி அந்தக் காகிதத்தை மடித்துத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

இதற்கிடையே கூடத்தில் அவரது மகன்கள் நால்வரும் கருமாதிக்கு ஆகும் செலவு பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

மூத்தமகன் சீனிவாசன் மட்டும்,””என்னடா? பழனி! அம்மாவுக்கு எப்படி இருக்கு?!” என்று கேட்டார்.

“”ஒண்ணும் சொல்றதுக்கில்லை! எசமான்!”

என்றான் பழனி கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே.

“”ஒருத்தேன் புண்ணியஞ் செஞ்சவன்னு எப்படித் தெரிஞ்சிக்கிறது?” என்று வாசலில் திண்ணையில் அமர்ந்திருந்த உறவுக் கூட்டத்தில் யாரோ யாரிடமோ கேட்டார்கள்.

“”புண்ணியஞ் செஞ்சவனுக்குத்தேன் பொணத்து மேல மழை!”யாரோ கூறினார்கள்.

அன்றிரவே ராணி அம்மாளின் உயிர் பிரிந்தது. பிள்ளைகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் என்று ஒருவர் கூட ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை.

“”எல்லாம் கல்யாண சாவுதான! இதுக்குப் போயி ஏன் அளுதுகிட்டு?” என்றனர். உற்றார், உறவினர் புடைசூழ சடலம் எடுத்துவரப்பட்ட போது மழை பூத்தூறலாய் தூறத் தொடங்கியது. பணத்தை இழந்த கவலையால் முத்தம்மாவுக்கும் அழுகை வரவில்லை. வீட்டுக்கு வந்து மெள்ள தன் மருமகளிடம் பண விஷயத்தைக் கூறினாள் முத்தம்மா. அதிர்ச்சி அடைந்த பூங்கொடி, “”ஒங்க காசை இழந்ததோட இல்லாம! இப்படி என் காசையும் இழந்துட்டு வந்து நிக்கிறீங்களே! நா என்னா செய்வேன்? யாரு கிட்டப் போயி கேப்பேன்?” என்று புலம்பினாள்.

எப்படியாவது மூத்த மருமகளைப் பார்த்து பணம் கேட்கலாம் என நினைத்து பங்களா வீட்டுக்குப் போன முத்தம்மாவுக்கு அங்கிருந்த நிலைமையே வேறு விதமாக இருந்தது.

அன்னையைக் காடேற்றிய மறு நிமிடமே சொத்து பிரிப்பது பற்றிய வாக்குவாதம் காரசாரமாக நடந்து கொண்டு இருந்தது.

“”நகை எல்லாம் எனக்குத்தான்! நான்தேன் அத்த கூட இம்புட்டு நாளா அல்லாடி இருக்கேன் ! நீங்க ஒருத்தியும் திரும்பிக் கூடப் பாக்கல!”

“”தென்னந்தோப்பு எனக்குத்தான்!”

“”இந்த வீடு எனக்குத்தான்!” என்று ஆளாளுக்குக் கத்திக் கொண்டிருந்தனர். சாவுக்கு வந்திருந்த சம்பந்திகள் ஒவ்வொருவரும் தங்கள் மருமகன் காசை இழந்துவிடக் கூடாதே என்பதில் குறியாக இருந்தனர்.

“”கைக்காசை இழந்திட்டு சொத்து பங்கும் கெடைக்காம ஏமாளி ஆயிராதீக!” என்று ஒவ்வொருவரும் தங்கள் மருமகன்களிடம் கூறிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் எப்படிப் பேசுவது? என்று தயக்கத்துடன் எட்டிப் பார்த்த முத்தம்மாவிடம், “”ஏய்! இந்தா! இங்க வா! எட்டிப் பார்த்துட்டு சும்மாப் போறியே! என்ன விஷயம்? இரு! இந்த வயர் கூடையில அத்தையோட புடவை எல்லாம் இருக்கு! ஒங்கிட்டதான் கொடுக்கணும்! வேற யார்கிட்டயும் கொடுக்கக் கூடாதுனு ஆஸ்பத்திரி போவறதுக்கு முன்னாடியே எங்கிட்டக் கொடுத்தாங்க! நாந்தேன் மறந்து போயிட்டேன்! இந்தா எடுத்திட்டுப் போ!” என்று கூறியபடியே ஒரு வயர் கூடையை அவள் கையில் திணித்தாள் மூத்த மருமகள் சுந்தரி.

மற்ற நேரமாய் இருந்தால் சந்தோஷமாக வாங்கிக் கொண்டிருப்பாள் முத்தம்மா. ஆனால் இன்றைய மனநிலையில் வாங்கவே பிடிக்கவில்லை. வேறு வழியின்றி கூடையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று தன் மருமகளிடம் கொடுத்தாள்.

“”ஆ… மா! பணத்தைக் கேளுங்கன்னா இப்படிப் பீத்தப் பொடவையை வாங்கிட்டு வந்து நிக்கறீங்களே!”என்று ஆயாசமாகக் கூடையை விட்டெறிந்தாள் பூங்கொடி.

வயர் கூடையில் இருந்த புடவைகள் கீழே விழுந்தன. அவற்றுடன் ஆறு ஐநூறு ரூபாய் தாள்களும் ரப்பர் பாண்டில் சுற்றப்பட்டு கீழே விழுந்தது. அவற்றைப் பார்த்ததும் கண்கள் விரிய முகம் மலர சிரித்தாள் பூங்கொடி.

“”ஐயோ! பெரியம்மா இப்படி எங்கடனை அடைச்சிட்டு தெய்வமாப் போயிட்டீங்களே!” என்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள் முத்தம்மா!

– லக்ஷ்மி பாலசுப்ரமணியன் (டிசம்பர் 2013)

Print Friendly, PDF & Email

1 thought on “மீட்பு

  1. இக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது….. என் கண்களில் சற்று கண்ணீர் பெருகியது. பெரியம்மா என் மனதில் ஓர் இடம் பிடித்துவிட்டார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *