கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 7,345 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கீழே ஓடும் சாக்கடையின் குறுக்கே போட்டிருந்த கல் வாசற்படியிலே சுரத்தின்றிக் கன்னத்தில் கை வைத்தவண்ணம் பிரேமா உட்கார்ந்திருந்தாள். காலையிலிருந்து அன்று அவளுக்கு ஏனோ ஒன்றுமே பிடிக்கவில்லை. பொழுதே போகவில்லை போல் இருந்தது. அவளுடைய வீட்டுக்கு எதிரே ஆலமரத்தடியில் அவளை ஒத்த பிராயத்தினர் தாம் விளையாடிக்கொண்டிருந்தனர். தினமும் அந்தச் சிறுவர்கள் பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு அங்கு வந்துதான் விளையாடுவார்கள். ஆனால் பிரேமாவின் அம்மா அவளுக்குக் கண்டிப்பான உத்தரவிட்டிருந்தாள். அந்தக் கும்பலுடன் சேர்ந்து அவள் விளையாடவே கூடாது. அவர்கள் பெட்டிக் கடைப் பக்கத்திலிருந்து பொறுக்கி வரும் துண்டு பீடிகளைப் புகைத்துக்கொண்டு காசு வைத்துக் கோலி ஆடுவார்கள். தெரு நாய்களைப்போல் புழுதியில் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கட்டிப் புரளுவார்கள். அவர்களுடைய புத்தகப் பைகள் எல்லாம் ஆலமரத்தடி மேடையில் தூங்கும்.

பிரேமாவும் அவளுடைய தாய் கண்ணம்மாவும் அந்தப் பக்கத்துக்குப் புதிதானவர்கள். கண்ணம்மாவுக்குப் பஞ்சாலையில் வேலை. விடிய ஆறு மணிக்கே புறப்பட்டால் தான் அவளுக்குப் படியளக்கும் பஞ்சாலைக்குக் குறித்த நேரத்தில் செல்ல முடியும். பிரேமாவை அப்போதே எழுப்பி அவள் உட்கார்த்தி வைத்துப் போய்விடுவாள். அந்த வீட்டில் அவர்கள் இருந்த ஒரே அறைதான் குடியிருக்கத் தகுதி வாய்ந்ததாகத் தெருவைப் பார்த்துக்கொண்டு இருந்தது. மீதி இடங்கள் எல்லாம் கூரை விழுந்து குட்டிச்சுவர்களாகக் காட்சி அளித்துக்கொண்டிருந்தன. திரும்ப அம்மா வரும்வரை, அதாவது மாலை ஆறு மணிவரை, பிரேமாவுக்குச் சர்வ சுதந்தரந்தான். வீட்டில் இருக்கும் பண்டங்களில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு தடை மட்டும் அவளுக்குச் சிறை வாசத்தையும் விடக் கொடுமையானதாகக் கஷ்டம் கொடுத்தது. பிரேமா அந்த வாசற்படிக்குள்ளேதான் விளையாடிக்கொள்ளலாம். வீட்டை விட்டு எங்கும் நகரக் கூடாது என்பதுதான் உத்தரவு.

மாலை கண்ணம்மா வீடு திரும்பிய பின் தண்ணீர் கொண்டுவந்து, அடுப்பு மூட்டிச் சோறாக்குவாள். பிரேமாவுக்குத் தலைவாரி, மேலுக்குத் தண்ணீரோ வெந்நீரோ ஊற்றிக் குளிப்பாட்டிவிடுவாள். அப்புறம் சுடு சோறு உண்டபின் இருவரும் தூங்குவார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் அவளுக்கு ஓய்வு நாள். அன்று அவர்கள் காலையிலேயே எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுவார்கள். காயும் கறியுமாய்ச் சமைத்து உண்டுவிட்டு, கோயம்புத்தூருக்குச் சினிமாப் பார்க்கச் செல்லுவார்கள்.

சலித்து ஓய்ந்து உட்கார்ந்திருந்த பிரேமாவுக்கு, “நிதம் ஞாயிற்றுக் கிழமையாக இருக்கக்கூடாதா?” என்று இருந்தது.

அப்போதுதான் சின்னி அவள் அருகில் வந்து நின்றாள். சின்னிக்கு நாலு அல்லது ஐந்து பிராயந்தான் இருக்கக்கூடும். அவளைவிடச் சிறியவள் தான். அவள் போட்டிருந்த அழுக்குக் கவுன் பின்புறம் பித்தானில்லாமல் தொங்கியது. நான்கு நாட்களுக்கு முன் சீவிப் பின்னலிடப்பட்ட சடையினின்றும் மயிர்கள் பறந்து பறந்து முகத்தை மறைத்தன. வழிந்த மூக்கைப் புறங்கையால் துடைத்தவண்ணம் பிரேமாவை உற்றுப் பார்த்துக்கொண்டே நின்றாள் சின்னி.

பிரேமா சட்டென்று எழுந்து, “பாண்டி ஆடலாம் வாரியா?” என்று கேட்டாள். அவள் தலையை அசைத்தாள்.

அந்தக் கணமே இருவரும் தோழிகளாகிவிட்டனர்.

“உங்க வூடு எங்கே இருக்குது?” என்று பிரேமா அவளைப் பாண்டியாடியபின் விசாரித்தாள்.

“பிள்ளையார்க் கோயிலுக்குப் பொறவிலே இருக்குது பார், குட்டி யண்ணந்தோப்பு, அங்கே இருக்குது. எங்கம்மா பொரி கடலை கொண்டுட்டுக் கோயமுத்தூர் போவாங்க. சாயங்காலந்தான் வருவாங்க. எங்கய்யா ராவு தான் வூட்டுக்கு வருவாரு” என்று அவள் கேட்காத விவரங்களையும் சின்னி சேர்த்துத் தெரிவித்தாள்.

பிரேமாவுக்குத்தான் அந்த வீட்டையும் ஆலமரத்தடியையும் விட்டால் வேறு இடம் தெரியாதே? ஆனால் அதற்காக அவள் கவலைப்படவில்லை. பதிலாக, “எங்கம்மாளுக்குப் ‘பார்வதி மில்’லிலே வேலை. பொழுது போய்த்தான் வருவாங்க. நீ நிதம் இங்கே வரியா? எங்கம்மா பழம் மிட்டாய் அல்லாம் வாங்கியாருவாங்க. உனக்கும் தருவேன். உம்?” என்று தலையை ஆட்டிப் பெருந்தன்மையுடன் ஆசை காட்டினாள்.

சின்னியின் கௌரவ உணர்வு அவ்வளவு சீக்கிரம் அவளுடைய இரக்கத்துக்கு இலக்காக விரும்பவில்லை.

“எங்கம்மாளுந்தான் பொரி கடலை கொண்டாருவாங்க. எங்க ஐயாவுக்குந்தான் மில்லிலே வேலை” என்றாள் விட்டுக்கொடுத்துக்கொள்ளாமல்.

“உங்க வூட்டை யார் பார்த்துக்குவாங்க?” பிரேமாவுக்கு இது பெரிய பிரச்னையாயிற்றே?

“எங்கண்ணன் இருக்குது. தங்கச்சிப் பாப்பா இருக்குது. அவன் வூட்டைப் பூட்டிப்போட்டு இங்ஙனே வந்திட்டான். அதோ பாரு, மரத் தடியிலே தங்கச்சிப் பாப்பா” என்று ஆலமரத்தடி மேடையில் படுக்க வைத்திருந்த குழந்தையைச் சின்னி காட்டினாள்.

‘நாளைக்கும் வாரியா? நெதம் இங்கே விளையாடலாம்” என்றாள் பிரேமா. சின்னி தலையை முழுச் சம்மதத்துடன் அசைத்தாள்.

சின்னி இதற்குப் பிறகு தினம் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல வீட்டை விட்டு அங்கு வந்துவிடுவாள். விளையாட என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சின்னியைக் கவர்ந்தது பிரேமாவின் தோழமை மட்டுமல்ல. பிரேமாவுக்கு அவளுடைய அம்மா தினமும் நிசமாகவே ஏதாவது தின்பண்டம் வாங்கித் தருவது வழக்கமாக இருந்தது. முதலில் சின்னி விட்டுக் கொடுத்துக்கொள்ளாமல், ‘எங்கம்மாளும் பொரி கடலை வாங்கித் தருவாங்க’ என்று சொல்லிக்கொண்டாலும், பிரேமாவுக்குச் சமமாக ஆக முடியாது என்று உறைத்துவிட்டது. மேலும் மாம்பழம், சாக்லேட், மிட்டாய் முதலியவற்றின் தனித்தனியான ருசி அந்தப் பொரிகடலைக்கு ஏது? அதுவும் நல்ல வியாபாரம் ஆகியிருந்தால் தான் அவளுடைய அம்மாள் ‘செலவுச் சாமான்கள்’ வாங்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் வருவாள். இல்லாவிட்டால் வெடு வெடு கடு கடு என்று வருவாள். சின்னி ரோதனை செய்தால் சுடச் சுட உதைகளே கிடைக்கும்.

பிரேமா வாயால் தாராளம் காட்டியது போல் கையால் காட்டிவிடமாட்டாள். சின்னி ஊறும் நாவை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு கெஞ்சும் விழிகளுடன் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே தன் கையிலுள்ள பண்டத்தை ருசித்துச் சப்புக் கொட்டிக்கொண்டு தின்பதில் அவளுக்குப் பரமானந்தம். சின்னி ஊறும் எச்சிலை உதட்டில் நனைய வைத்துக் கொள்வாள். கை தன்னையும் அறியாமல் அவளிடம் நீளும். பிறரை இரங்கச் செய்து தான் மேலான நிலையில் இருக்கும் பெருமையில் மூழ்கியபடியே அவள் சிரிப்பாள். சிரித்துக் கொண்டே தன் தாராள மனப்பான்மையை ஓர் அரசிக்குரிய பெருமிதத்தோடு பிய்த்து எறிவாள். மாம்பழமானால் பல்லால் தோலை உரித்துக் கொடுப்பாள். சாக்லெட்டானால் நெல்லளவு மீதியுடன் மேலே சுற்றப்பட்ட காகிதம் கிடைக்கும். மிட்டாயானால் அவள் சப்பி ஈர்க்கில் மீதி வைத்துத் தருவாள். சின்னி அந்தத் தானத்தைக் கடைசி வரையில், சக்கையிலும் சக்கையாகத் தேயும் வரையில் ரசிப்பாள்.

அப்படி அந்தத் தின்பண்டங்களின் சிறு பகுதிகளை ரசிக்கும்போ தெல்லாம் முழுசும் ஒரு நாள் கிடைக்காதா என்று சின்னியின் உள்ளம் ஏங்கும். தொடர்ந்து சிந்தனைகளும் கேள்விகளும் உள்ளத்தில் வட்ட மிடும். அவளுடைய ஐயாவும் மில்லிலேதானே வேலை செய்கிறார்? நிறையச் சம்பளம் கிடைக்குமே? ஏன் ஒன்றும் வாங்கி வருவதில்லை? சின்னிக்குத் தந்தையுடன் நெருக்கமான பழக்கமே இருக்கவில்லை என்று சொல்ல வேண்டும். அவள் காலையில் எழுந்திருக்குமுன் அவன் வேலைக்குப் போய்விடுவான். இரவு அவன் வருவதற்குள் அவள் அநேகமாக உறங்கி விடுவாள். விடுமுறை நாட்களில் அவள் வீட்டில் இருப்பது உண்டு. ஆனால் நெருங்கிச் சல்லா பிக்கச் சந்தர்ப்பங்கள் ஏற்படுவது துர்லபம். அவன் வீட்டில் இருந்த போதெல்லாம் அவளுடைய அம்மாவிடம் சண்டை கள் போடுவான். அடிக்கவும் உதைக்கவுங் கூடத் தயங்க மாட்டான். கடைசியில் சின்னி, முருகன் எல்லாரையுமே சேர்த்துத் திட்டிவிட்டு வெளியேறி விடுவான்; சின்னியின் அம்மா அழுவாள். அழுதுவிட்டுக் கூடையைத் தூக்கிக்கொண்டு கோயம்புத்தூர் போய்விடுவாள். ‘ எல்லா அப்பாக்களும் இப்படித் தான் இருப்பார்களா? பிரேமாவுக்குங்கூட அம்மா தானே எல்லாம் வாங்கித் தருகிறாள்?’

சின்னி ஒருவழியாய் முடிவுக்கு வந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பிரேமா புதுச் சட்டை, லோலாக்கு எல்லாம் போட்டிருந்தாள். தலையை வாரி இரு பின்னல்கள் போட்டு. பட்டு நாடாக் கொண்டு அவளுடைய அம்மா முடிந்திருந்தாள். ஆல மரத்தடியில் நின்றவளாய், கையில் இருந்த மசால் வடையைக் கடித்துக் கொண்டு இருக்கும்போது சின்னி வந்தாள். அவளைக் கண்டதுமே பிரேமா வக்குக் கர்வம் கண்களில் பளபளத்தது. “நாங்க இன்னிக்குக் கோயமுத் தாருக்குச் சினிமாப் பாக்கப் போகப் போறோமே?” என்று நீட்டினாள்.

மசால்வடையைத் துளி விண்டு அவளுடைய கையில் வைத்தபடி, “நீ பார்த்திருக்கிறியோ சினிமா! நல்ல நல்ல சேலை கட்டி ராஜா ராணி அல்லாம் வருவாங்க. கலர் கலர் டான்ஸ் ஆடுவாங்க” என்று விசாரித்தாள்.

சின்னிக்கு இந்த ஆசை காட்டும் பேச்சுப் பிடிக்கவில்லை.

“உங்க அய்யாவுங்கூட வருவாரா பிரேமா?” என்று விசாரித்தாள். முதல் நாள் ஏற்பட்ட சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்து கொள்ளவே இந்தக் கேள்வி கேட்டாள்.

‘ஐயா’ என்ற பெயரைக் கேட்டதுமே பிரேமா டக்கென்று, “எங்க ஐயாதான் ஆஸ்பத்திரியிலே செத்துப் போனாரே? எங்கம்மா அப்புறந் தான் இங்கே வந்தாங்க. எங்க மாமன் சினிமாக் கொட்டாய்க்கு வந்திருப்பாரு. அவரு நல்லவரு. நேத்து ராவுங்கூட இங்கே வந்திருந்தாரு. எங்கம்மாளுக்குப் புதுச் சேலை, எனக்கு இந்தப் பட்டுச்சட்டை, அல்லாம், இந்த வடைகூட, அவருதான் வாங்கியாந்தாரு” என்றாள்.

அந்தச் சமயம் பிரேமாவின் அம்மா வாசல் படியில் வந்து நின்று கொண்டு, “தட்டிலே சோத்தை வச்சிட்டு எங்கே போனே?” என்று அவளை அதட்டி அழைத்தாள்.

பிரேமா உள்ளே ஓடிவிட்டாள். சின்னி மலங்க விழித்துக்கொண்டு நின்றாள். கண்ணம்மாவைப் பார்த்த பிரமிப்பு இன்னும் அவளுக்கு அடங்கவில்லை. இடையிலே புது மஞ்சள் வாயல் சேலை. கறுப்புப் பட்டு ரவிக்கை உடலோடு ஒட்டி இருந்தது. தலையிலே கொண்டை. மேலே கனகாம்பரப் பூ. ஆஸ்பத்திரியில் இருக்கும் ‘மிஸி அம்மா’ளைவிடப் பிரேமாவின் அம்மா அழகாக இருக்கிறாள் என்று சின்னி முடிவு கட்டினாள்.

கோயம்புத்தூருக்குப் போகும் பஸ் அந்த ஆலமத்தடியிலிருந்து ஐந்தாறு கஜம் தள்ளியிருக்கும் சாலை வழியே தான் செல்லும். பஸ்ஸுக்குக் காத்து நிற்பவர்கள் வெயிலுக்காக அந்த மரத்தடியில் வந்து நிற்பார்கள்.

சின்னி அங்கு நிற்கையிலேயே அவளுடைய அம்மா கூடையுடன் அங்கு வந்தாள். அன்று அத்தனை நேரம் அவளுக்கு வீட்டில் வேலை இருந்தது. பொரிகடலை வியாபாரத்துக்கு இனிமேல்தான் போகப் போகிறாள்.

சின்னியை அங்கே கண்டதும் முத்தம்மாளுக்குக் கோபம் வந்தது. “வூட்டிலே புள்ளையைப் பார்த்துக்கோன்னேன்; இங்கே எங்கேடி வந்தே? போ!” என்று அதட்டினாள்.

சின்னி படியவில்லை. கண்ணம்மாவைப் பார்த்து மலைத்த அவள் கண்களுக்கும் கருத்துக்கும் அவளைக் கண்டதும் மிரட்டலைக் கேட்டதுமே ஆத்திரம் பொங்கி எழுந்தது. “போ, மாட்டேன் போ!” என்று அம்மாவைப் பிடித்துத் தள்ளினாள்.

“என்ன கேடு வந்திச்சி உனக்கு?” என்றாள் முத்தம்மாள்:

“வெவ்வெவ்வே, மூஞ்சியைப் பாரு!” என்று சின்னி அழகு காட்டினாள்.

“ஏன்? உங்கப்பனிடம் கத்துக்கிட்டியா? போடி அப்பாலே” என்று அவளை வெருட்டித் தள்ளினாள்.

அப்போது எதிர் வீட்டுக் கதவு திறந்தது. காண்போர் சொக்கும் எமிலுடனும் ஒயிலுடனும் கண்ணம்மா முதலில் வந்தாள். பின்னால் பதுச் செருப்புச் சப்திக்க, பிரேமாவும் ஓடி வந்தாள். கதவைப் பூட்டிச் சாவியைப் பர்ஸில் போட்டுக்கொண்டு அவள் ஆலமரத்தடியை நோக்கி வந்தாள்.

பிரேமா கூசிக் குன்றி நிற்கும் சின்னியைக் கண்டு மௌனச் சிரிப்புச் சிரித்தவளாய், தாயின் முன்றானையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள்.

தனக்குப் பத்தடி தூரத்தில் வந்து நின்ற கண்ணம்மாளைக் கண்டதும் முத்தம்மாளின் முகம் கடுகடுவென்று ஆயிற்று. காரணமில்லாமல் காறி உமிழ்ந்தாள்.

கீழே புழுதியில் படுத்திருந்த சொறி நாயை அப்போதுதான் கண்டவள்போல, “கண்ட நாயிங்களும் ஊரிலே வந்து ரோதனை குடுக்குதுங்க!” என்று குறிப்பாய்க் கூறி ஒரு கல்லை எடுத்து ஓங்கி வீசினாள்.

நாய் குறைத்துக்கொண்டு பத்தடி தள்ளிப் போயிற்று.

“இந்தப் பாழாய்ப்போன பஸ் எப்போ வந்து தொலைக்குதோ தெரியலியே?” என்று அவள் முணுமுணுக்கையிலேயே அந்தப் பாழாய்ப் போன பஸ் சாலையில் வரும் குரல் கொடுத்தது. புளி மூட்டை அடைத்துக் கொண்டாற்போலச் சினிமாவுக்குச் செல்லும் கும்பலை ஏற்றிக் கொண்டு வந்த அது, மஞ்சள் சேலை உடுத்து நின்றவருக்கு அருகேயே மயங்கினாற் போல் நின்றுவிட்டது. அவள் ஒரு கணத்தில் தொத்திவிட்டாள். கண்டக்டரின் உத்தரவுக்காக உள்ளே ஏறாமல் நின்றாள்.

முத்தம்மாள் பறிபோகும் ஆவேசத்துடன் ஓடி வந்தாள். கூடையால் அவளை இடித்தபடி, “என்ன வழியை மறிக்கிறே? இடத்தை உடு” என்றாள்.

“ஏம்மா கூடையைப் போட்டு இடிக்கிறே?” என்று முகத்தைச் சுளித்துக்கொண்ட கண்ணம்மா ஒரு கையில் பிரேமாவையும் பற்றி இழுத்துக்கொண்டு உள்ளே ஏறிவிட முயன்றாள். முத்தம்மா விடவில்லை. கூடையை முன்னுக்கு வைத்து மறித்தாள்.

கண்டக்டரின் கவனம் திரும்பியது. “என்னம்மா கூடையை வழியிலே நீட்டிக்கிட்டு?” என்று அவன் ஆத்திரத்துடன் காலால் தள்ளினான்.

மின்னல் போல் கண்ணம்மா பிரேமாவுடன் ஏறிவிட்டாள்.

“இறங்கு, இறங்கம்மா, எடு கூடையை! அவ்வளவுதான்!” என்று முத்தம்மாளை ஒதுக்கிவிட்டு அவன் ஊதலை ஊதிவிட்டான்.

மனிதச் சுமை சுமந்த இரக்கமில்லாத அந்தப் பெரு வண்டி அலட்சியமாக உறுமிவிட்டு அனல் புழுதியைக் கிளப்பிக்கொண்டு அகம்பாவத்துடன் மறைந்தது.

ஏமாற்றம், தோல்வி, நிராசை எல்லாவற்றினாலும் தாக்கப்பட்ட முத்தம்மாள் தன் நாவினால் அந்தக் கண்டக்டரையும் மஞ்சள் சேலையில் மயக்கிய கழுதையையும் பழி தீர்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டாள். ஏடும் எழுதுகோலும் நாணிக் கூசும் சொற்களை எல்லாம் பிரயோகித்தவளாய் அவள் பத்திரகாளி போல் வீடு திரும்பினாள்.

அவளுக்கு அத்தனை கோபம் வந்து சின்னி கண்டதில்லை. பின்னாலேயே தாயைத் தொடர்ந்து ஓடினாள்.

வீட்டின் முன் முற்றத்திலே முருகையன் சகாக்களுடன் கோலாகலமாகப் புகை குடித்தவண்ணம் குண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தான். குமுறிக் கொப்புளித்துச் சீறிப் பெருகும் ஆத்திரத்துடன் வந்த முத்தம்மாளைக் கண்டதுமே உபாத்தியாயர் வரக் கண்ட வகுப்பறைபோல் அங்கே சத்தம் அடங்கியது. தாழ்வாரத் திண்ணையிலிருந்து உருளவிருக்கும் கைக்குழந்தையைத் தள்ளி விட்டுவிட்டு, அவள் கையைச் சொடுக்கிக் கொண்டு எவளோ பழிகாரிக்கு ஆயிரம் சாபங்கள் கொடுத்தாள்.

அவளுடைய அடிநெஞ்சிலிருந்து ஜ்வாலையாய் மண்டி வந்த தீ அந்தச் சொற்களின் மூலமாக அவியவில்லை. அவளை இன்னும் உந்தியது. பழி வாங்கத் துடித்தது.

சிலையாய் நின்றவள், “மொட்டையா!” என்று விளித்தாள்.

மொட்டையன் அந்தக் கோஷ்டியில் முதிர்ந்த அரும்பு. மொட்டைக் கைக் கரும்பனியனில் வாட்டசாட்டமான தேகம் வலிமையைக் காட்ட நிற்பவன். குச்சி குச்சியாய் நிற்கும் தலை மயிரும் கலங்கிச் சுழலும் விழிகளும் அரும்பும் இளம் மீசையும் அரும்பு பிரியுமுன் அனல் கக்கும் புழுதிச் சுழற்காற்றின் வெறியின் வயப்பட்டு மாசடைந்ததை எடுத்து உரைத்தன.

அவனை மட்டும் அழைத்துக்கொண்டு போய் முத்தம்மாள் ரகசியம் பேசினாள். சின்னி அவளை விட்டு அசையவே இல்லை.

“அந்தப் பாவி, பழிகாரி, என் வயிறு எரிவதைப் போல் வயிறெறிந்து ஓடணும்” என்ற இடைப்பல்லவிதான் கேட்டது.

வேட்டைக்குச் சந்தர்ப்பம் கிட்டினாற்போல மொட்டையன் ஒரு துள்ளுத் துள்ளினான். “நல்ல தேட்டை கொடுத்தீங்க அத்தை. இப்பவே ஓடிப்போயி…” என்று சந்தோஷ ஆரவாரம் செய்தான்.

“நேத்துத்தான் சம்பளப் பணம் வந்தது. அல்லாத்தையும் சுருட்டிக்கிட்டுப் போகமாட்டா. இல்லே, எதாச்சும் அகப்பட்டதையானும் சுருட்டிக்கிட்டு வந்திடு. பாவி!” என்று பல்லைக் கடித்துக் கையை நெரித்தாள் முத்தம்மாள்.

சின்னிக்கு விளங்கவும் இல்லை; ஒன்றும் விளங்காமலும் இல்லை. இருளும் ஒளியுமாய், கலங்கியதும் கலங்காததுமாய், மனசில் அலை மோதின.

மொட்டையன் நல்லவனுக்கு நல்லவன். திருடனுக்குத் திருடன். அயோக்கியனுக்கு அயோக்கியன். முத்தம்மாள் நல்லவள். அவளுக்கு நல்லவனாகிவிட்டான்.

ஒரு நோட்டுக் கற்றை, பத்து ஐந்து ரூபாய் நோட்டுக்கள், அவன் அங்கிருந்து கிளப்பி வந்துவிட்டான்.

பணத்தைத் தொட்டதும் முத்தம்மாளின் எரிந்த நெஞ்சு தணிந்தது. வெயிலில் காய்ந்து புனலில் முழுகியதைப் போல, உஷ்ணம் குளிர்ச்சிப் புன்னகையில் மடிந்து முகத்தில் மலர்ச்சியை உண்டு பண்ணியது. முழுசாக ஒரு ரூபாயை அவனுக்குக் கூலியாக உள்ளங்கையில் வைத்தாள்.

சின்னிக்கு விழிகள் நிலைத்தன?

“பிரேமா வூட்டிலேந்துதானே மொட்டையனைத் திருடச் சொன்னே? ஏம்மா?” என்று கோபத்துடன் தாயின் சேலையைப் பிடித்து அவள் இழுத்தாள்.

பிறர் காசை எடுப்பது தவறு என்பதை அவள் நன்கு அறிவாள் : மணியகாரர் வீட்டு வாசலில் அம்மை குத்தும் அம்மாளுடைய பர்ஸை எடுத்துவிட்டு முருகனே ஏட்டையாவிடம் சாட்டையடி பெற்றிருக்கிறான். அம்மாவே ஏன் அவனைத் திருடி எடுத்துவரச் சொன்னாள்?

“நான் அவுங்க வாரையிலே சொல்லிடறேம் பாரு. ஐயா ஒனக்கு அதாம் ஒதை குடுக்கிறாரு!” என்று நியாயம் பேசி விரலை ஆட்டிப் பயமுறுத்தினாள் அவள்.

“அந்தக் கொள்ளையிலே போறவ, உங்க அப்பனையே மடக்கி வாயிலே போட்டுக்கிட்டாளே? ஏண்டி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே? இந்தச் சம்பளத்தைப் பிடுங்கிக்கிட்டு, புள்ளையும் குட்டியுமா குலை எரிய வைக்கிறாளே? நன்றி கெட்ட கழுதை, எதினாலும் போய்ச் சொன்னியோ, உயிரை எடுத்துப் போடுவேன்!” என்று மகளை அதட்டினாள்.

சின்னிக்கு இன்னும் தெளிவாக விளங்கவில்லை. அப்பனை மடக்கி எப்படி வாயிலே போட்டுக்கொள்ள முடியும்? அவன் என்ன தோசையா, பிட்டா? ஆனால் அவனுடைய சம்பளப் பணத்தை அவள் ஏன் பறித்துக் கொள்கிறாள்? சின்னியின் உரிமை உணர்வில் குபீர் என்று தீப்பற்றிக் கொண்டது.

கவிந்து வந்துகொண்டிருக்கும் இருளில் அவள் ஆலமரத்தடியை நோக்கி ஓடி வந்தாள். அங்கே பஸ் நின்றிருந்தது. பிரேமாவின் வீட்டின் முன்-அதோ, தெரு விளக்கு அடிக்கும் வெளிச்சத்தில்..

பட்டுச் சட்டையும் சரிகை மேல்வேட்டியும் அணிந்து அவளுடைய ஐயாதாம் அவர்! சந்தேகமே இல்லை.

இரைக்க இரைக்க ஓடி வந்தாள் சின்னி.

பிரேமாவின் கையைப் பற்றிக்கொண்டு செல்லமுத்து நின்றிருந்தான். கண்ணம்மா பூட்டைத் திறந்து கொண்டிருந்தாள்.

கொதித்தெழுந்த உணர்வுடன் சின்னி பின்னாலிருந்து அப்பனின் கையைப் பற்றி இழுத்தாள்.

அவள் திடுக்கிட்டுத் திரும்புவதற்குள் கண்ணம்மா கதவைத் திறந்துவிட்டு, “ஐயோ!” என்று கூவினாள்.

“பாருங்க, ஓட்டைப் பிரிச்சு எந்தப் பயலோ உள்ளாற வந்து பெட்டி சட்டியை எல்லாம் உடைச்சு..” அழுகுரலில் ஒலமிட்டுக் கொண்டு தன் தகரப் பெட்டியில் இருந்த உடைமைகளை எல்லாம் அவள் அவசரமாக எடுத்து இறைத்தாள். “பணத்தைப் பார்த்து எடுத்திருக்கிறாங்க. நேத்து நீங்க தந்த பணத்திலே தான் மிச்சம் வச்சிருந்தேன். எஞ்சம்பளப் பணங்கூடப் பத்து ரூபாய் உண்டு. சட்டிபானை எல்லாம் உடைச்சுப் போட்டு, பட்டப் பகலிலே தெரிஞ்சு வேணுமின்னு செய்தாப்போலச் செய்துட்டாங்களே!”

சொல்லிச் சொல்லி அவள் பிரலாபித்தாள்.

“இந்தப் பக்கம் நெடுகிலும் களவாணிப் பயலுகதான், கண்ணம்மா. நான் போலீஸிலே தகவல் கொடுத்துப் போடறேன் இப்பவே. இன்னம் சாமான் சட்டி எதுனாலும் போயிருக்குதா பார்” என்றான் செல்லமுத்து.

“எனக்கு இந்த ஊரே புடிக்கலிங்க. தலைக்குத் தலை கண்டபடி வாயிலே வந்தாப்போலப் பேசுறாங்க, நாயின்னும் பேயின்னும். எங்கன்னாலும் போயிடலாம் போலிருக்கு!”

கண்ணீர்த் துளிகள் அவளுடைய எலுமிச்சம் பழக் கன்னங்களில் உருண்டு விழுந்தன.

சின்னியின் பொறுமை இதற்கு மேல் நீடித்திருக்கவில்லை.

“நீ என் எங்க ஐயனின் சம்பளப் பணமெல்லாம் புடுங்கிக்கிட்டே? நல்லா வேணும். எங்கம்மாதான் மொட்டையனை வுட்டு ஆட்டிலே பூந்து திருடச் சொன்னாங்க!”

சிறுமியின் விழிகள் பளீரென்று ஒளிர்ந்தன. பருத்திப் பஞ்சு போல் கள்ளங்கவடற்று வெடித்த உண்மையைக் கேட்டதும் கண்ணம்மா பளீரென்று அறை வாங்கினவள் போல் திடுக்கிட்டாள்.

“உங்க ஐயாவா? இவுரா?”

“ஆமாம், எங்க ஐயாதான்!” – உரிமையுடன் செல்லமுத்துவின் கையைப் பற்றினாள் சின்னி.

உறுத்துப் பார்த்த செல்லமுத்துவுக்குத் திடீரென்று முளைத்த அந்தக் குட்டிச்சாத்தானை அப்படியே வெளியே பிடித்துத் தள்ள வேண்டும் போல ஆத்திரம் துடித்தது.

“ந்தா! இங்கே எங்கே வந்தே?” என்று அந்தப் பிஞ்சுக் கரத்தை உலுக்கி அவன் அதட்டினான்.

“உடுங்க!” என்ற கண்ணம்மா விழிகளை உருட்டி அவனைச் சுழற்றிச் சுழற்றி அடித்தாள்.

“பொய்யா சொன்னீங்க, பெண்சாதி புள்ளை இல்லாத தனியாளுன்னு? பச்சைத் துரோகம் பண்ணிப்போட்டா? பாவி! நம்பினேனே?”

இந்தத் தாக்குதலில் அரண்டு போன செல்லமுத்து குற்றவாளியாய்ப் பதுங்கினான்.

‘பெண் அபலையாய் இருக்கும்வரை அநுபவி. புலிபோல் சீறினால் பின்வாங்கு’ என்ற அநுபவக் கீற்றின் அடிச்சுவட்டில் அடுத்த கணம் அவன் மௌனமாக வெளியேறினான்.

கண்ணம்மா அரற்றி அரற்றி அழுதாள்; விம்மினாள். அவளுக்கு. உரிமையில்லாத பொருள் அவளுக்குத் தக்கவில்லை. ஓட்டைக் குடிலுக்குள் உடைந்த பானை தான் அவளைக் கண்டு அநுதாபப்படுவதுபோல் காட்சி அளித்தது.

தெருவிலே சின்னி வெற்றிப் பெருமிதத்துடன் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தாள்.

– ஜூலை , 1955

– கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *