Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மின்மினி வெளிச்சம்

 

ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா… வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான். ஒரு குச்சி ஐஸ் வண்டி போனது. நிறுத்தி ஐஸ் வாங்கித் தின்றான். சப்பிச் சப்பி வெறும் குச்சியை நக்கிக்கொண்டே பள்ளிக்கூடத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டான். காம்பவுண்ட் சுவர் அருகே வந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தவாறே உள்ளே நுழைந்தான்.

வகுப்பில் வாத்தியார் பாடத்தைத் தொடங்கி இருந்தார். வாசல் அருகே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தார்.

”வாங்க சார்… நீங்க மட்டும் ஏன் லேட்டு?’ – அவர் குரலில் கேலி தொனித்தது.

இவன் மௌனமாக நின்றான். ‘கேக்குறேன்ல… சொல்லு!’ என்று அதட்டினார். பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல் அன்ன நடை போட்டு, யோசித்து நின்று நின்று வந்ததை எப்படி அவரிடம் சொல்ல முடியும்? விழித்தான் ராசு.

”என்ன திருட்டு முழி முழிக்குற? பதில் சொல்லு… படிக்கிறதைத் தவிர, மத்தது எல்லாம் செய்யப் புடிக்கும் உனக்கு. பாட்டுப் பாடுறது, ஆட்டம் போடுறதுன்னா போதும்… மொதப் பரிசு. படிக்க மட்டும் வலிக்குதோ? பள்ளிக்கூடத்துக்கு நேரத்துக்கு வரணும்னு தெரியாதா?” – வாத்தியார் அதட்ட, தன் சின்னக் கண்களை உருட்டி உருட்டி அவரையே பார்த்தான் ராசு.

கையில் இருந்த பிரம்பால் அவனை முழங்காலுக்குக் கீழே ஒரு அடி அடிக்க… சுளீரென்று வலித்தது. இரண்டு கால்களையும் தரையில் பதிக்காமல் வெயிலின் சூடு தாங்காமல் தார் சாலையில் நடப்பவன்போலத் துடித்துக் குதித்தான். பிரம்பு பட்ட இடத்தில் எல்லாம் சிவந்து தடித்துவிட்டது. வலியில் துடித்தவனுக்கு வாத்தியார் மேல் கோபம் வந்தது.

கூடப் படிக்கும் அத்தனை பேரையும் பார்த்தான் ராசு. எல்லோரும் பேன்ட் அணிந்து இருந்தார்கள். இவன் மட்டும்தான் அரை டவுசர். அவர்களைப் போல பேன்ட் சட்டை போட்டு இருந்தாலாவது பரவாயில்லை. நேரடியாகக் காலில் அடிபடாது. இவனும் அப்பனிடம் பல முறை பேன்ட் போட வேண்டும் என்று கேட்டுவிட்டான்.

‘ஒன் ஒசரத்துக்கு இப்ப அந்த பேன்ட்டை மாட்டிக்கிட்டுத் திரியணுமாக்கும்? எல்லாம் வளந்த பின்னாடி பார்த்துக்கலாம்” என்று அவன் கேட்கும்போது எல்லாம் தட்டிக் கழித்துவிடுவான் அப்பன். காசு பணத்துக்குப் பயந்துதான் அவ்வாறு பொய் சொல்கிறான் என்பது ராசுவுக்குத் தெரியாது. நிஜமாகவே தான் வளராததால்தான் அப்பன் பேன்ட் எடுத்துக்கொடுக்கவில்லை என்று நம்பினான். வளராத தன் கால்களின் மீது அவனுக்குக் கடுமையான அதிருப்தி இருந்தது. வளராததற்கு முழு உடம்பின் மீதுகூட அவனுக்குக் கோபம் இல்லை. தன் கால்களின் மீதுதான் முழுக் கோபமும். அது மட்டும்தான் மனிதர்களை உயரமாகக் காண்பிக்கிறது என்பது அவனுடைய திடமான எண்ணம். இடுப்புக்கு மேலே இருக்கும் உடல் பகுதிக்கும் உயரத்துக்கும் சம்பந்தம் இருக்கும் என்று அவன் கற்பனை கூடச் செய்யவில்லை.

ஒருமுறை ஊரில் கூத்துக் கட்டுவதற்குப் பக்கத்து ஊரில் இருந்து வந்திருந்த மாரியின் கட்டைக் காலை எடுத்து ஒளித்துவைத்து விட்டான். அதைக் கட்டிக்கொண்டு நடந்தால் தான் உயரமாகிவிடலாம் என்பது ராசுவின் எண்ணம். ஆனால், இவன் கெட்ட நேரம், கட்டைக் காலை எடுத்துக்கொண்டு வரும்போது மாரியின் ஆட்டக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண் பார்த்துவிட்டாள். அவள் மாரியிடம் சொல்லிவிட, அவன் தேடி வந்தபோது, இவன் மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அதைக் கட்டிக்கொண்டு நடந்து பார்த்து, தடுக்கித் தடுக்கி விழுந்துகொண்டு இருந்தான். மாரியைப் பார்த்ததும் ராசுவுக்குக் கட்டைக் காலை நிஜக் காலோடு வைத்து கயிறுகொண்டு கட்டி, அந்த நொடி வரை ஆதரவு தந்த சின்னத்தம்பி ஓடிவிட்டான். இவன் தனியே ஓட முடியா மல், காலும் களவுமாகப் பிடிபட்டான். சின்னப் பையன் என்பதால், எதுவும் பிரச்னை பண்ணாமல் அவனை அனுப்பி வைத்தான் மாரி. ஆனால், ராசுவுக்கு எண்ணம் நிறைவேறாமல் போனதில் ஏமாற்றமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து மாரி வந்திருந்தால், கட்டைக் காலோடு குளத்துக்கு அருகில் நின்று தெளிந்த நீர்ப்பரப்பில் தன் உயரமான உருவத்தைப் பார்த்து மகிழத் திட்டம் போட்டு இருந்தான் ராசு. எல்லாம் கெட்டுப்போனது.

அன்று இரவு தூக்கம் வரவில்லை. உயரமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே அவனுடைய யோசனையாக இருந்தது. வேறு எதுவும் மண்டைக்குள் ஏறவில்லை. அதையே முப்பொழுதும் யோசித்தவண்ணம் இருந்தான். உயரமான வர்களைப் பார்த்தால் கோபம் வந்தது. பொறாமையாகவும் இருந்தது. வகுப்பில் பெண் பிள்ளைகள் ஏதாவது பேசிச் சிரிக்கும்போது தன் உயரத்தைத்தான் கிண்டல் செய்கிறார்களோ என்று பதற்றப்பட்டான். என்றைக்காவது சினிமாவுக்குப் போனால், தனக்கு முன்னால் உயரமாக யாராவது அமர்ந்து திரையை மறைப்பார் கள். இரண்டு தலைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில்தான் இவன் பார்த்த அத்தனை சினிமாக்களும் இருந்தன. படத்தை நினைக்கும்போதே இரண்டு தலைகளுக்கு இடையேதான் காட்சியே மனக்கண்ணில் தோன்றும்.

உயரம் குறைவாக இருப்பதால், வகுப்பில் இவன்தான் முதல் வரிசையில் இருப்பான். வாத்தியார் பாடம் நடத்தும்போது, தூக்கம் வந்தால் கொட்டாவிகூட விட முடியாது. பிரம்பால் விளாசுவார் வாத்தியார். ஆனால், உயரம் காரணமாகவே மாப்பிள்ளை பெஞ்சுக் குப் போய், பின்னால் அமர்ந்திருக்கும் இவன் நண்பர்கள் பண்ணும் லூட்டிகளுக்கு அளவே இல்லாமல் இருந்தது. அடுத்தவர் டிபன் பாக்ஸில் இருந்து சாப்பாடு எடுத்துத் தின்னும் அளவுக்கு அவர்களுக்குச் சுதந்திரம் இருந்தது. இவனுக்கோ கண்களைச் சிமிட்டக்கூட முடியாது. அதோடு, வாத்தியார் இவனைப் பார்த்தேதான் பாடம் நடத்துவார். ச்சே! இந்த உயரம் இப்படியா பழிவாங்கும்?

கூடப் படிக்கும் பெண்கள் இவன் உயரம் காரணமாகவே இவனைத் தம்பிபோலப் பாவித்துப் பேசும்போது, உச்சக்கட்ட எரிச்சலில் பொங்குவான். ஆனாலும், எதையும் வெளிக்காட்டாமல் பேசுவான். பள்ளியில் சுற்றுச்சுவர் ஓரத்தில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறித்துக் கொடுத்தே பெண் பிள்ளைகளின் நட்பைப் பெற்று இருந்தனர் பல மாணவர்கள். இவன் உயரம் குறைவு என்பதால், அந்த வாய்ப்பும் பறிபோனது.

பள்ளியில் ஆண்டு விழா நாடகத்தில் எப்போதும் வேலைக்காரன் பாத்திரம்தான் கொடுத்தார்கள். ”ஏண்டா, வேலைக்காரங்க உயரமா இருக்க மாட்டாங்களா?’ என்று இவன் புலம்புவது ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கை. நாடகத்தில் வேலைக்காரன் வேடம் இல்லை என்றால், அவனுக்கு அந்த ஆண்டு நடிக்கும் வாய்ப்பு பறிபோகும்.

வாத்தியாரிடம் அடிவாங்கும்போது, உடம்பில் படாமல் இருப்பதற்காகவாவது பேன்ட் போடும் அளவு வளர ஏதாவது செய்தாக வேண்டும். இவன் உயரம் காரணமாக வகுப்பறை வன் முறைகள் எல்லாம் இவனுக்கே நடப்பது போன்றதொரு உணர்வில் நொந்துபோனான்.

கனவுகள்கூட இவன் உயரமாகி பேன்ட் போடுவதுபோலவே வந்தன. விழித்துப் பார்த்து ஏமாற்றத்தில் முகம் சுண்டிப்போகும் ராசுவுக்கு. பத்தாததுக்கு தெருப் பையன்கள் இவனை அவ்வபோது ‘கட்டையா’ என்று அழைத்துக் கடுப்பேற்றினார்கள்.

இவனுக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்கப் பிடிக்கும். சுருளி வீட்டுக்குப் போய்ப் பார்ப்பான். ஒரு நாள் சுருளி வீட்டுக்குப் போனபோது, ஏதோ ஒரு சேனலில் ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் ஓடிக்கொண்டு இருந்தது. குள்ள அப்புவைப் பார்க்க இவனுக்குப் பிடித்து இருந்தது. ”கமல் குள்ளமா… அழகா… சூப்பரால்ல?” என்றான்.

சுருளியோ, ”டேய்… அப்புவைவிட ராஜாவைப் பாருடா அழகு… ராஜா கைய வச்சா… அது ராங்காப் போனதில்ல” என்று சீட்டியடித்தான். ராசுவுக்கு முகம் தொங்கிப்போனது. இடையிடையே வரும் விளம்பரங்களை ரசித்துப் பார்த்தான். காம்ப்ளான் விளம்பரம் வந்தது. இந்த காம்ப்ளான் விளம்பரத்தை மட்டும் எப்போதும் ஆசையாகப் பார்ப்பான். ஒரு மரத்தைப் பிடித்து ஒரு பையன் தொங்கிக்கொண்டு இருப்பான். இப்படி எல்லாம் தொங்கினால் உயரமாக முடியாது என்று சொல்லி, ஒரு பணக்கார அம்மா பிள்ளைகளுக்கு காம்ப்ளானைப் பாலில் கலக்கிக் கொடுப்பாள். பிள்ளைகள் அதனால் கிடுகிடுவென்று வளருவதாக வரும் விளம்பரம் அது.

ஒருவேளை மரத்தைப் பிடித்துத் தொங்கினால் உயரமாகலாமோ? ராசு சிந்தித்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக யாரும் பார்க்காத நேரத்தில் மரத்தில் கிளையைப் பிடித்துத் தொங்கினான். மூன்றாவது நாள் தொங்கும்போது, கூடப் படிக்கும் பையன்கள் பார்த்துவிட்டுச் சிரிக்க, ”விளம்பரத்துல போட்டாங்க… அதான்’ என்றான்.

”என்ன விளம்பரம்?”

”காம்ப்ளான் விளம்பரம்.”

”அதான்… விளம்பரத்துலயே வருதே… தொங்கினா ஒயரமாக முடியாது. அதனால காம்ப்ளான் குடிங்கனு. அப்புறமும் தொங்கிக்கிட்டு இருக்கே. லூஸாடா நீ’ – மற்றவர்கள் சிரிக்க… ராசுவின் முகம் சுண்டிப்போனது.

”பள்ளிக்கூடத்துக்குப் போனவுடன் பெரிய கிளாஸ் அண்ணனுங்ககிட்ட கேக்கணும்.’

மறு நாள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தவுடன் பன்னிரண்டாம் வகுப்புக்கு ஓடினான்.

”அண்ணே! காம்ப்ளான் குடிச்சா ஒயரமாகலாமா? விளம்பரத்துல காட்டுறாங்க.”

”அடேய்… விளம்பரத்துக்காக ஏதாச்சும் போடுவான். அதைப் பார்த்து ஏமாந்துடாதே!’- அண்ணன்கள் எச்சரித்தார்கள். இவனுக்கு என்னவோ உலகமே இவன் உயரமாகிவிடக் கூடாது என்று சதி செய்வதாகத் தோன்றியது. ‘சும்மாவா டி.வி-ல காட்டுவான்? ஏன் இந்த அண்ணனுங்க இப்படிச் சொல்றாங்க? யாருக்கும் நான் வளர்றது புடிக்கலையா?’- மனதுக்குள் கேள்விகளைத் தேக்கியவாறே குழம்பினான்.

எப்படியாவது உயரமாகிவிட வேண்டும் என்பது அவன் லட்சியமாக இருந்தது. சினிமாவில் வரும் பெண்கள் போடுவது போல் ஹைஹீல்ஸ் செருப்புகள் வாங்கிக்கொள்ளலாமா? வேண்டாம். ஹவாய் செருப்புக்கே இங்கே கஷ்டம்தான். மனதை மாற்றிக்கொண்டான். இவன் போடும் செருப்பை இவன் வகுப்பில் படிக்கும் ரமேஷ், ”என்னடா… பாத்ரூம் செப்பலைப் போட்டுட்டு வந்திருக்கே?” என்று கேட்டான். வீட்டில் பாத்ரூமோ, பாத் ரூமுக்கு என்று தனியாகச் செருப்போ இல்லாத ராசுவுக்கு அவன் கேள்வி ஒன்றும் புரியவில்லை.

அம்மாவிடம் ஒரு நாள் கேட்டான், ‘நான் ஏன் குள்ளமா இருக்கேன்?’

அம்மா இவனைப் பார்த்துச் சொன்னாள் ‘யார்றா சொன்னது? நீ ஒசரம்தான்” என்றாள். அம்மா தன்னைச் சமாதானப்படுத்தத்தான் இப்படிச் சொல்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டான். அரை மணி நேரத்தில் மேலே உள்ள அடுக்கில் இருந்து எதையோ எடுப்பதற்கு அம்மா இவனைவிட உயரமான இவன் தங்கையைக் கூப்பிடும்போது இவன் கேட்டான்.

‘நான் ஒசரம்னா என்னைக் கூப்பிட வேண்டியதுதானே? ஏன் அவளக் கூப்பிடுறே? சும்மா பேச்சுக்கு எதையாவது சொல்றதே ஒனக்கு வேலையாப்போச்சு!’ – இவன் கோபத்தில் கூவினான். அம்மா எதுவும் பேசாமல் வெளியே சென்றாள்.

எரிச்சல் வந்தது. சுருளி வீட்டுக்குப் போனான். அங்கே தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. போன இரண்டாவது நிமிடத்தில் அந்த மரத்தைப் பிடித்துத் தொங்கும் விளம்பரம் வந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டான். இரண்டு பாடல்கள் போன பின்னால், குள்ள அப்பு வந்து ‘ஒன்ன நெனச்சே பாட்டுப் படிச்சேன்’ என்று சோகமாகப் பாட, இவன் கிளம்பி வந்துவிட்டான். ஓவென்று அழ வேண்டும் போல் இருந்தது. கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டு வீட்டுக்கு வந்து படுத்துவிட்டான்.

காலையில் பள்ளி அசெம்ப்ளியில் வந்து நின்றான். வழக்கமாக வாசிக்கப்படும் திருக்குறள் எல்லாம் வாசித்து முடித்த பின் தலைமையாசிரியர் ஒரு அட்டையோடு வந்து மைக் முன்னால் நின்றார். ஒரு மாதத்துக்கு முன் ஒரு அமைப்பு நடத்திய கட்டுரைப் போட்டிக்கான முடிவை இன்றைக்கு அசெம்ப்ளியில் அறிவிப்பார்கள் என்பது அப்போதுதான் அவன் நினைவுக்கு வந்தது. தலைமை ஆசிரியர் முதல் பரிசுக்கு இவன் பெயரை வாசித்தபோது இவனுக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. மேடை ஏறி தலைமை ஆசிரியருக்கு அருகில் சென்றான். துணி போட்டுச் சுற்றி வைத்திருந்த கோப்பையை எடுத்து அவனிடம் அளித்தார். வாங்கிக்கொண்டு திரும்பிக் கீழே இறங்க எத்தனித்தவனை நிறுத்திய தலைமை ஆசிரியர், ஓர் உறையை எடுத்துப் பிரித்து அவனிடம் நீட்டினார். அவர் கைகளில் இரண்டு 500 ரூபாய்த் தாள்கள். இவனுக்கு நம்ப முடியவில்லை. வெறும் சான்றிதழ், கோப்பை, தட்டு, டம்ளர் என்று மட்டுமே பரிசுகள் பெற்றிருக்கும் அவனுக்கு, இந்த 1,000 ரூபாயை நம்ப முடியவில்லை.

‘எனக்கா சார்?’ என்றான்.

‘உனக்குத்தான். நீதானே கட்டுரை எழுதினே. இல்ல… மண்டபத்துல யாராச்சும் எழுதிக்குடுத்ததை எடுத்துட்டு வந்து குடுத்தியா?’ என்றார் சிரிப்புடன்.

‘இல்ல சார்… நான்தான் எழுதினேன்’ என அவசரமாகக் கை நீட்டினான். கூட்டம் சிரித்தது. அவனது முதுகில் தட்டிக்கொடுத்தவாறே அவனை லேசாக அணைத்துக் கொண்டார் அவர். இவனுக்குப் பெருமை தாளவில்லை. அந்த இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களையும் பத்திரமாக சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான். மேடையை விட்டு இறங்கப்போனவனை மீண்டும் அழைத்து, தலைமை ஆசிரியர் கோப்பையை நான்கு புறமும் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும்படி உயர்த்திக் காட்டச் சொன்னார். இவன் தன் தலைக்கு மேலே கோப்பையைத் தூக்கிக் காட்டினான். நிறைய மாணவர்கள் சரியாகத் தெரியா மல் எக்கி எக்கிப் பார்த்தனர். இவனை நெருங்கி வந்த தலைமை ஆசிரியர் கோப்பையை வாங்கித் தனது தலைக்கு மேல் தூக்கிக் காண்பித்தார். இவனுக்கு முகம் சுண்டிப்போனது. பரிசு வாங்கிய சந்தோஷத்தைவிட, தனது உயரக் குறைவு அத்தனை பேர் முன்னிலையில் வெளிப்பட்டதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வகுப்பில் அனைவரும் வந்து இவனைப் பாராட்டிக் கை குலுக்கினாலும், இவன் முகம் மட்டும் வாடியே இருந்தது.

அன்று மாலை அவன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மாவிடம் சென்று புத்தகப் பைக்குள் இருந்து அதை எடுத்து அம்மாவிடம் கொடுத்தான்.

‘இதை என்னடா ராசு பண்ணணும்?’ என்றாள் அம்மா, கையில் வாங்கிய அந்தப் புத்தம் புதிய காம்ப்ளான் பாட்டிலைப் புரியாமல் பார்த்தவாறே! 

தொடர்புடைய சிறுகதைகள்
சின்னு வந்திருக்கிறாள். அவளுக்கு அனுவின் சமையல் என்றால் ரொம்ப இஷ்டம். அனு அவளுக்காக மீன் குழம்பு வைத்திருந்தாள் . காரம் கொஞ்சம் அதிகமாகி விட்டது. ஆனாலும் என்ன? சின்னுவுக்குப் பிடிக்கும் தான். இரண்டு தட்டுகளை கழுவி எடுத்து வந்தாள். சின்னு சாப்பிட ...
மேலும் கதையை படிக்க...
தொடர்பு எல்லைக்கு வெளியே…
கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்க்கையில், தலை சுற்றுவதுபோல் இருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி வேறு தாங்கவில்லை. வயிற்றை ஒரு கையால் தடவிக்கொண்டே, ''கொஞ்சம் பொறுத்துக்கோ! சுதா வந்துரட்டும்'' என்று வயிறோடு பேசினாள். மஞ்சு கட்டிலில் ஷிட்னி ...
மேலும் கதையை படிக்க...
கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி வேறு தாங்கவில்லை. வயிற்றை ஒரு கையால் தடவிக்கொண்டே “கொஞ்சம் பொறுத்துக்கோ! சுதா வந்துரட்டும்” என்று வயிறோடு பேசினாள். வயிறோ பலவித ...
மேலும் கதையை படிக்க...
மூன்று நிற வானவில்
தாம்பரம் செல்லும் ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் பறந்துகொண்டு இருந்தன. கடலுக்குள் நீந்தும் ஒரு சிறிய மீனைப் போல என் ஸ்கூட்டி அந்தச் சாலையில் போய்க்கொண்டு இருந்தது. மனம் பரபரத்ததைப் போலவே என் வாகனமும் பரபரப்பாகச் சென்றுகொண்டு இருந்தது. முன்னால் செல்லும் வாகனங்களின் ...
மேலும் கதையை படிக்க...
மின்மினி வெளிச்சம்!
ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா... வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான். ஒரு குச்சி ஐஸ் வண்டி போனது. நிறுத்தி ஐஸ் வாங்கித் தின்றான். சப்பிச் சப்பி வெறும் குச்சியை நக்கிக்கொண்டே பள்ளிக்கூடத்தைக் ...
மேலும் கதையை படிக்க...
நீளும் கனவு
தொடர்பு எல்லைக்கு வெளியே…
விட்டு விடுதலையாகி..
மூன்று நிற வானவில்
மின்மினி வெளிச்சம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)