மாற்றம் எங்கே?

 

கோபாலனுக்கு 60 வயது நிரம்புவதை கொண்டாட வெளியூரில் வசிக்கும் அவரது மகன்களும் மகள்களும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வைதிக விழாவிற்காகவே அவர்கள் சென்னை விஜயம்.

சென்னையில் வளசரவாக்கம். ஒரு சிறிய குளிரூட்டப்பட்ட சத்திரம். 50 பேர் கொள்ளலாம். கோபாலனும் அவரது மனைவியும் மனையில். புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களது குடும்பத்தோடு அமர்ந்திருக்கின்றனர். பட்டுப்புடவை, பட்டுவேட்டியுடன் மகள்களும் மகன்களும் இங்கும் அங்கும். குழந்தைகள் கும்மாளம்.

அந்த களேபரத்தில் ஒரு சின்ன பையன். ஒரு 4 வயதிருக்கும். ரொம்ப துறு துறு. இங்கே ஓடினான், அங்கே ஓடினான். கொஞ்சம் மழலையில் ஹிந்தியில் பேசிக்கொண்டு. குத்து விளக்கில் எதையோ போட்டு எரித்தான். தட்டை கவிழ்த்தான். மனையில் இருந்த கோபாலனிடம் ஓடிச் சென்று ஏதோ கேட்டான். அவரும் தலையசைக்க, முன்னால் இருந்த தட்டில் இருந்து குட்டிக் கை நிறைய முந்திரியை அள்ளி கொண்டான். “டேய், டேய், எடுக்காதே! தட்டில் போடு” என்று யாரோ சொல்வதற்குள் சிட்டாய் பறந்து விட்டான்.

ஆரம்பத்தில், அந்த பையனின் குறும்பு மணவறையை சுற்றி இருந்த அனைவருக்கும் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் சிலருக்கு சலிக்க ஆரம்பித்து விட்டது. “யார் அந்த பையன்? இவ்வளவு குறும்பு? அவன் அம்மா எங்கே ?” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த பையன் அட்டகாசம் குறையவேயில்லை. கோபாலன் ஒரு முன்கோபி. அவரே பொறுமையாக இருக்கிறாரே? முனுக்கென்றால் மூக்கின் மேல் கோபம் வருமே. அவர் எப்படி இப்படி ? ஆச்சரியம் அவரது பிள்ளைகள், பெண்களுக்கு. அவரது மனைவியும் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தது இன்னும் ஆச்சரியம்,. நெருங்கிய சுற்றத்திற்கும் கூடத்தான். “யார் குழந்தை இவன்? அவனது அப்பா அம்மா எங்கே?”.

முத்தாய்ப்பாக, அந்த குழந்தை புரோகிதர் முடியை பிடித்து இழுத்து விட்டான். அவர் வலி தாங்காமல் இந்த பக்கம் சாய, ஹோமத்திற்கு வைத்திருந்த நெய் எல்லாம் கொட்டி, அம்மாவின் பட்டுப் புடவை கறை. சுற்றியிருந்தவர்கள் எல்லாம் “டேய் டேய்” என்று கத்தினார்கள்.

கோபாலனின் கடைசி பெண் குழந்தையை அடிக்க போய் விட்டாள். கோபாலன் தடுத்து நிறுத்தினார். “விடும்மா! பாவம் சின்ன குழந்தை!” மகள் கோபமாக “என்னப்பா நீங்க! யார் குழந்தைன்னு சொல்ல மாட்டேங்கறீங்க? இந்த லூட்டி அடிக்கிறான். உங்க பொறுமைக்கு ஒரு அளவே இல்லியா?”

“இல்லேம்மா!. இந்த பையன் நம்ப எதிர் வீட்டிலே தான் இருக்கான். ரொம்ப பாவம்மா! நாலு நாள் முன்னாடிதான் இவன் அம்மா ஒரு விபத்திலே செத்து போயிட்டங்க. இவன் அப்பாவுக்கும் மண்டையிலே அடி. ஆஸ்பத்திரியில் இருக்கார். இவங்க கல்யாணம் கலப்பு திருமணம் . யாரும் இது வரைக்கும் எட்டிக் கூட பார்க்கலே. அம்மா உயிரோட இல்லைங்கிறதே குழந்தைக்கு தெரியாது. இரண்டு நாளா குழந்தை. அம்மா அம்மா என்று அழுதுகொண்டேயிருந்தான்.. இன்னிக்கு தான் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டு இருக்கான். வேறே யாரும் இல்லாத இவனுக்கு இப்போதைக்கு நாங்க தான். . அம்மா இல்லாமல் வளரப் போற இந்த குழந்தையை எப்படி திட்டவோ அடிக்கவோ மனசு வரும்?”- கோபாலன் முடித்தார். சுற்றி நின்றவர்கள் “ஐயோ பாவமே!”.

குழந்தை கோபாலனைப் பார்த்து சிரித்தது. மொழி தெரியாத கள்ளமற்ற வெள்ளை சிரிப்பு. பார்த்துகொண்டிருந்த கூட்டத்தில் ஒரு அம்மா குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள். கோபாலனின் மகள் கொஞ்சம் திராட்சையை அள்ளிக் கொடுத்தாள். அவளை கட்டிகொண்டு குழந்தை அவளது கன்னத்தில் ஒரு சிறிய முத்தம் . அம்மா போல் இருக்கிறாள் என நினைத்தானோ? புரோகிதர் கூட , தனது குடுமியை, குழந்தை பிடிக்க நீட்டினார்.

அதே வளசரவாக்கம். அதே சத்திரம். அதே கோபாலனும் அவரது மனைவியும் மனையில். புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களது குடும்பத்தோடு அமர்ந்திருக்கின்றனர். அதே பட்டுப்புடவை, பட்டுவேட்டியுடன் மகள்களும் மகன்களும்.அதே குழந்தை. அதே குறும்பு… எதுவும் மாறவில்லை..

ஆனால், இப்போது அந்த குழந்தையை யாரும் வையவும் இல்லை. சபிக்கவும் இல்லை. சலித்துக் கொள்ளவும் இல்லை. மாற்றி மாற்றி கொஞ்சி கொண்டு இருந்தார்கள். கன்னத்தை கிள்ளி ‘துமாரா நாம் க்யா ஹை?’ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஏன் இந்த மாறுதல்? மாற்றம் எங்கே? 

தொடர்புடைய சிறுகதைகள்
அது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழக கல்லூரி. கல்லூரியின் 50வது வருட விழா. அதையொட்டி கல்லூரியில் படித்த, ஐந்து சிறந்த சாதனையாளருக்கு கெளரவ விருது அளிக்க ஏற்பாடு. ஐந்து பேரில், ஒருவர் பத்ம பூஷன் டாக்டர் கந்தசாமி. இந்திய அரசின் ஒரு முக்கிய அணு ...
மேலும் கதையை படிக்க...
சென்னைக்கு 50 கி.மீ தூரத்தில் கோதண்டராம புரம். பெரிய ஊர். ஊரின் கோடியில் ராமர் கோயில். கோவிலை ஒட்டி ஒரு அரச மரம். மரத்தை சுற்றி கல் மேடை. மேடைக்கு கொஞ்ச தூரத்தில் குளம். சில நாளாக அந்த அரச மரத்து நிழலில், ...
மேலும் கதையை படிக்க...
"சே! என்ன வாழ்க்கை இது ? ஒரு நிம்மதி உண்டா ? ஒரு சந்தோஷம் இருக்கா?“ அறுபத்தி ஐந்து வயது முதியவர் பத்மநாபன் என்கிற பத்து , அவரது அன்றாட புலம்பல் இது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் ...
மேலும் கதையை படிக்க...
முருகன் படித்தவன் . பீ.ஈ , ஈரோடு கல்லூரியில் முடித்து, சென்னையில் ஒரு கணினி விற்பனை கம்பனியில் , சுமாரான சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். வயது 25. கைக்கும் வாய்க்குமே பற்ற வில்லை. இதிலே ஊரில் இருக்கும் அப்பா அம்மாவிற்கு ...
மேலும் கதையை படிக்க...
(தியானம் - 3) “பரங்கி மலையை, பத்து நிமிட நேரம் என் தோளில் சுமந்து காட்டுகிறேன்” என்று சவால் விட்டான் ஒரு பலசாலி பயில்வான், தன் திரண்ட முஷ்டிகளை தட்டிய படியே. சுற்றி நின்றவரிடம் அசால்டாக கேட்டான் “ என்ன பந்தயம் ? ...
மேலும் கதையை படிக்க...
சாதனை
எங்கே நிம்மதி?
கலக்கம்!
அழிவின் ஆரம்பம்!
தியானத்திற்கு ரெடியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)