Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மாமி

 

1980.

யாரோ கதவைத் தட்டுகிறார்கள்.

இந்த நேரம் வருவது ஒன்று பால்க்காரனானவிருக்கும் அல்லது எதையோ விற்கவரும் சேல்ஸ் மனிதர்களாகவிருக்கும்.

கொஞ்ச நேரத்திற்கு முன் தபாற்காரன் தந்து விட்டுப் போன- ஊரிலிருந்து வந்த கடிதம் எனது கையிலிருக்கிறது.

பெற்றோர், உற்றார், ஊரிற் தெரிந்தவர்கள், என்ற அடிப்படையில் பழைய நினைவுகளை, புதிய ஏக்கங்களைக் கொண்டுவரும் கடிதங்கள்.

இப்போது வந்த கடிதம் எனது கையிலிருக்கிறது.

இரண்டு மூன்று கிழமைக்கொருதரம், அல்லது இலங்கைப் பிரச்சினையால் இரண்டு மாதங்களுக்கு ஒருதரம் நான் பிறந்த மண்ணிலிருந்து வரும் கடிதங்கள்.தற்போது வாழும் சூழ்நிலையைத் தாண்டி எப்போதோ தவழ்ந்த, வளர்ந்த ,வாழ்ந்த பிரிந்த உலகத்துக்கு நினைவுகளை அழைத்துக்கொண்டோடும் நீல நிற எயார் மெயில் கடிதங்கள்.

ஆனால் இன்று வந்த கடிதம்?

கதவைத் தட்டியது யாராகவிருக்கும் என்ற யோசனையுடன் கதவைத் திறக்கிறேன்.

பால்க்காரன் எங்களுக்குக்கொண்டு வந்த பாலை என்னிடம் தந்து விட்டு,வாரம்தோறும் கொடுக்கும் பணத்துக்காக நிற்கிறான்.

கதவைத் திறந்த எனக்கு,’ குட்மோர்ணிங்’ சொன்னவனின்; எனது கையில் இருக்கும் நீல நிறக்கடிதத்தில் படிந்து விட்டு எனது முகத்தை ஆராய்கிறது.

எனது முகத்திலிருந்த சோகம் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் பணத்தை எடுத்து வருகிறேன்.

‘ என்ன ஊர் ஞாபகமா?’ நான் கொடுத்த பணத்தை வாங்கியபடி வாஞ்சையுடன் கேட்கிறான்.

ஆமாம் என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டியபடி கதவை மூடுகிறேன்.

ஊர் ஞாபகமா?

இங்கு ஆப்பிளையும் திராட்சையையும் ருசி பார்க்கும்போது, சிறுவர்களாய் இருந்தபோது,பக்கத்து வீட்டு வைரவப்போடியாரின் கறுத்தக்கொழும்பான் மாங்காய்களைக் களவாகப் பிடுங்கிச் சுவைபார்த்ததின் இனிமை ஞாபகம் சிலவேனைகளில் வருகிறதே.

அந்தக் கடிதம் இன்னும் எனது கையில் இருக்கிறது. ஊரிலிருப்பவர்களின் சுகதுக்கங்;களைச் சொல்லும் பெரிய பணியைச் செய்யும் சில வரிகளைத் தாங்கி வருமு; அந்தக் கடிதங்கள் நாட்டை விட்டு எங்கேயோ வாழும் எத்தனையோ பேருக்குத் தங்கள் உறவுகளின் பாலமாகவிருக்கிறது.

டெலிபோன் மணியடிக்கிறது.

நான் எடுக்கவில்லை. அடுத்த பக்கத்தில் யார் பேசுகிறார்கள் என்று கேட்கவுமில்லை..

மணி அடிக்கிறது….

பல வருடங்களுக்கு முன் வெள்ளை மாடுகள் கட்டிய வண்டிலில் மாமி வந்தபோது மாடுகளின் கழுத்தில் கட்டியிருந்த மணிச்சத்தத்தில், ஐந்தோ அல்லது ஆறோ வயதான நான திரும்பிப் பார்க்கிறேன்.

எனது நினைவுகள் திரும்புகின்றன.

இன்றைய கடிதத்தின் ஒரு வரி எனது மனதைத் துடிக்க வைத்து விட்டது.வீட்டிலிருந்து வரும்போது எனக்குச் சொல்ல வேண்டிய பல விடயங்களுடன் அந்த விடயமும் ஒரு வரியாக எழுதப் பட்டிருந்தது.

‘ எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பரிமளம் மாமி கான்சர் வந்து செத்துப் போனா’

மாமியின் வாழ்க்கை ஒருவரியில் ‘முடிக்கப்’ பட்டிருந்தது.

மாமி செத்துப் போய்விட்டாள்!

அவளும் நானும் உறவால் ஒன்றும் நெருக்கமான சொந்தமில்லை.அம்மாவுக்கு எத்தனையோ முறைகளுக்கு அப்பாலான உறவில் அவள் கணவர் முத்துலிங்கம் என்பவர் எங்கள் பக்கத்து வீட்டு ‘மாமா’வாக எங்களுடன் பழகினார்.

அவர் திருக்கோயில் என்ற ஊரில் திருமணம் செய்யப் போவதாக வீட்டில் பேசியது எனக்குத் தெரியும். அவர் தனது மனைவியை எங்கள் ஊருக்குக் கூட்டிக்கொண்டு வருவதாக அவரின் தாய்க் கிழவி ஒருநாள் அம்மாவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘முத்து திருக்கோயில் பொம்புளயின்ர ஊட்டோட இரிக்கல்லியா?’

அம்மா விண்ணாணமாக அந்தக் கிழவியைக் கேட்டாள்.

திருமணமானதும் மாப்பிள்ளை,பெண்வீட்டாருடன் வாழ்வதுதான் எங்களூர் சம்பிரதாயம்.

‘அவள் தாய் தின்னி, தகப்பன் தின்னி..அவள் அவளின்ர அண்ணனோடதான் இருந்தாள் அவளுக்கு ஊடு இல்ல அங்க இரிக்க’ முத்துவின் வயதுபோன தாய் பச்சைப்பாக்கைக் கடித்து மென்று துப்பிக் கொண்டு பதில் சொன்னாள்.

கொழுத்தும் வெயிலில் காயப்போட்டிருந்த நெல்லைத் தின்னவரும் காகங்களை நான்; துரத்திக் கொண்டிருக்கும்போது,அந்த மாட்டு வண்டி வந்தது. அழகான ஒரு சோடி வெள்ளை மாடுகளின் அவசரமான ஓட்டத்தில் வந்த வண்டி பக்கத்து வீட்டில் நின்றது.அந்த வெள்ளை மாட்டு வண்டி தனது தமயன் கொடுத்த சீதனம் என்று மாமி எனக்கு வெகு நாளைக்குப் பின் சொன்னாள்.

முருங்கை மர மறைவில் நின்று மாட்டு வண்டியில் வந்த ‘புதுப் பொம்புளய’ எட்டிப் பார்த்தேன்.

தங்கத் தேரில் வந்திறங்கிய அழகிய இளவரசியாக அவள் எங்கள் ஊரிற் கால் பதித்தாள்.

வண்டி நின்றதும் அவளது அழகிய கால்கள் தரை பட்டன.காற் சங்கிலி கலீர்; என்ற மெல்லிய நாதத்தைப் பரப்பி அவள் வரவை அறிவிக்க சிவப்புச் சேலையில் நீலக்கரை போட்ட காஷ்மீர்ச் சில்க் சேலை, நீலச் சட்டை,சிவப்புக் கல் தோடு,மஞ்சள் கயிற்றிலாடும் தங்கத் தாலி,

திருக்கோயில் ஊர்ப் பெண்கள் வடிவான பெண்கள் என்று ஆச்சி சொல்லியதை ஞாபகப் படுத்திக் கொண்டேன்.

‘மாமி வடிவான பொம்புளதான்’

கல்யாணப் பெண்களுக்குள்ள கூச்சமோ என்னவோ தெரி;யது தலை குனிந்திருந்தாள் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை.

அழகிய வட்டமான முகம் பளிச் சென்றிருந்தது. நெற்றியில் குங்குமம். நீpளமான கண்கள்,கண்களுக்கு மை போடாமலே கருமையாகவிருந்தன..அள்ளிக் கட்டிய பெரிய கொண்டை. கொழு கொழு என்ற கைகளில் நிறைய வளையல்கள். அத்தனையும் அழகான கண்ணாடி வளையல்கள். காற் சங்கிலியும் கண்ணாடி வளையல்களும் அவளது மெல்லிய நடைக்குத் தாளம் போட்டன.

அவளுக்கு வயது பதினேழுதான் என்று அப்போது எனக்குத் தெரியாது.

வைத்த கண்ணை எடுக்க முடியாத அந்த அழகுக்கு வயதில்லை-பார்த்தவர் மனதில் சித்திரமாக நிலைத்தவிடும் அந்த அழகு நித்தியமானது.

நான் முருங்கை மரத்துக்குப் பின் மறைந்திருந்து பார்ப்பதைத் தனது ஓரக்கண்ணால் பார்த்த அவளின் முகத்தில்; ஒரு புன்சிரிப்பு. எனக்குப் பெருமையாகவிருந்தது.

மாமி அழகான பெண். இன்னொருதரம் திரும்பிப் பார்க்கப் பண்ணும் ஒருவிதமான இனிமையான-அசாதாரணமான அழகு.

எங்கள் வீட்டில் நிறையப் பெண்கள். அம்மா, அக்காமார்,சின்னம்மாக்கள், ஆச்சி என்று பலர். அடிக்கடி அவர்களைப் பார்ப்பதால் அவர்களின் வித்தியாசம் எனது மனதில் பதியவில்லையோ என்னவோ, அவர்களையெல்லாரையும் விட மாமி வித்தியாசமாக இருந்தாள்.

மாமி பார்க்காத நேரத்தில் மாமியை நீண்ட நேரம் ஏன் பார்த்தேன் என்று எனக்குத் தெரியாத வயது.

வளர்ந்து கொண்டுவரும் காலத்தில்,ஒரு நாள் பெரியம்மா வீட்டுக்குப் போய்விட்டு, நிலவு படரும் நேரத்தில் திரும்பி வரும்போது,யாரோ வீட்டு குண்டுமல்லிகை வாசம் நிலவுடன் மோதிக்கொண்டு வந்து மூக்கை அணைத்தது. பொலிவான நிலவு வெளிச்சத்தில்,தென்றல் துவண்ட மல்லிகைமணம் பரந்த அந்த நிமிடம் மாமியின் நினைவு சட்டென்ற வந்தது.

அப்போதுதான் தெரிந்தது மாமியை முதற்தரம் கண்டபோது ஏன் அப்படி ரசித்தேன் என்று. அவள் அழகு உலகின் அற்புதமான இயற்கையின் வரவு.

,தொடமுடியாத நிலவின் அழகைப் போல, ஸ்பரிஸமற்ற மல்லிகை மணம்போல,உருவமற்ற தென்றல் போன்றது,பரிமளம் மாமியின் அடக்கமான- மென்மையான- இனிமையான பவ்யம்.

பரிமளம் மாமியின் அழகு யார் யாரை என்ன பாடு படுத்துகிறது என்று தெரியாத வயதெனக்கு. மாமி எங்கள் வீட்டுக்குக் குளிக்க வருவாள். அவள் வீட்டில் கிணறு கிடையாது.

அந்த நேரம் பார்த்துக் கடைக்காரக் கணபதி, தனது சைக்கிளில் எங்கள் ஒழுங்கையால் போவதற்கு மாமிதான் காரணமென்று அவள் கணவர் முத்து மாமா ஒருநாள் பட்டப் பகலில் எல்லோர் முன்னிலையிலும் கண்டபாட்டுக்குப் பேசினார்.

மாமி ஏதோ முணுமுணுத்தாள்.அவள் முகம் அவமானத்தால் தொங்கிக் கிடந்தது.அவள் அவள் கணவன் முத்துவைத் தவிர,வேறு எந்த ஆண்களுடன்; பேசியதை நான் கண்டில்லை. அவர்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் முத்துமாமாவின் தாய்க் கிழவிதான் பேசிக் கொண்டிருக்கும்.

மாமி அதன்பின் எங்கள் வீட்டுக்குப் பகலில் குளிக்க வருவது கிடையாது.

அவளுக்கென்று எங்கள் ஊரில் உள்ள சொந்தம் அவளின் கணவரும் மாமியாரும்தான்.அவர்கள் இருவரும் அவளின் அழகைத் தங்களின் மரியாதையைக் கெடுக்கும் விடயமாக நினைப்பதை அவளாற் தாங்க முடியாதிருந்தது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

இயற்கை கொடுத்த கொடையை அவள் என்ன செய்ய முடியும்?

‘தான் பெரிய அழகி என்ற அவளுக்குப் பெரிய மண்டைக்கனம்’ எங்கள் வீட்டில் சில பெண்கள் கூடியிருந்து வம்பளந்தார்கள்.

மாமி பாவம்.

அவள் தமயன்களும் அடிக்கடி அவளை பார்ப்பது கிடையாது. எங்கள் ஊருக்கு வந்து கொஞ்ச நாட்களில் அவள் முகம் சோகமாகத் தெரிந்தது. முத்து மாமா இரவில் வயற்காவலுக்குப் போவார். பகலில் பல மணித்தியாலங்கள் நித்திரை கொள்வார்..

அவரின் தாய்க் கிழவிக்கு மாலைக்கண். இரவு நேரத்தில் யாரையும் கிழவி அடையாளம் தெரியாது அவஸ்தைப்படும்.

. மாமி தையற் கலையில் திறமையுள்ளவள். அண்டை அயலிலுள்ள பெண்கள் தங்களின் மேசை,கதிரைகளின் விரிப்புகளுக்கும்.கவர்களுக்கும்,குழந்தைகளின் சட்டைகளுக்கும் வர்ண அழகுடன் பூவேலை செய்ய மாமியை நாடுவார்கள்.

மாமி தனது வீட்டு வேலைகள் முடியத் தனது எம்ராய்டரி வேலைகளில் நேரத்தைக் கழிப்பாள். எனக்கும்,என்னைப் போல் பல இளம் பெண்களுக்கும் அந்தக் கலை பிடித்துக் கொண்டதால் மாமியிடம் அதைக் கற்றுக் கொள்ள எங்கள் பாடசாலைக்குப் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மாமி வீட்டில் இருப்போம்.

எங்கள் வீட்டில் அக்காமார் வாசித்து முடித்த வாரப் பத்திரிகைகளை மாமிக்குக் கொண்டு போய்க் கொடுப்பேன்.அவள் அதை மிகவும் சந்தோசத்துடன் ஏற்றுக் கொள்வாள். கதைகளைப் படித்து விட்டு அதைப் பற்றிச் சிலவேளைகளில் எனக்கு அவற்றைப் பற்றிச் சொல்வாள்.

மாமா இல்லாத நேரங்களில் மாமி சந்தோசமாக இருப்பதாக எனக்குப்படும்.

ஆண் பெண் என்ற உறவுககுள் இருக்கும் அந்தரங்கங்கள், சந்தேகங்கள், சந்தோசங்களைத் தெரியாத குழந்தைப் பருவம் மிகவும் தூய்மையானதுதான்.

எனது களங்கமற்ற குழந்தை உலகத்தில் மாமி ஒரு அழகு தேவதை. அவளின்,; ஓவியர்களைத் தோற்கப் பண்ணும் அழகு அடிக்கடி காணக் கிடையாத ஒன்று. அவள் அழகிய வர்ணவேலை செய்யும் அற்புதக் கலைஞை.

எனது அப்பாவுக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்கும். எங்கள் வீட்டில் கிராமபோன் இருந்தது.அவர் தியாகராஜ பாகவதர், எஅ.எஸ் சுப்புலடசுமி என்ற எத்தனையோ கலைஞர்களின் றெக்கோட்சுகளை வாங்கிப் போட்டு ரசிப்பார். எங்கள் வீட்டிலிருந்து தென்றல் வழியாக மாமி வீட்டை வருடும் இனிய சங்கீதத்தில் மாமி கண்மூடி மெய்மறந்திருப்பாள்.

றேடியோவில் தமிழ்ப் சினிமாப் பாடல்கள் பாடும்போது மாமியை ஒரு கதாநாயகியாகக் கற்பனை செய்வேன்.

சிலவேளைகளில் சில மனிதர்கள் எப்படி இன்னுமொரு ஆத்மாவைத் திசை திருப்புவார்கள் என்பதறகு மாமி ஒரு உதாரணம். எனது வளர்ச்சியின் பல பரிமாணங்களில், சில நேரங்களில பலருக்குக் கொடுத்து வைக்காத புதினமான அனுபங்களைத் தரும் வாழ்க்கை மிகவும் அற்புதமானது என்பதை என் மனதில் விதைத்தவர் அந்த அதிகம் படிக்காத மாமி என்ற நினைக்கிறேன்.

மாமி வீட்டுக்கு அவர் ஊரிலிருந்து அடிக்கடி யாரும் வருவதில்லை.அதுவும் முத்து மாமா வீட்டிலில்தா நேரங்களில் யாரையும் அவர்களின் முற்றத்தில் கால் பதிக்கவும் அனுமதி கிடையாது.

ஓரு நாள் பின்னேரம், இருள் பரவும் நேரம், சரியான மழை. யாரும் வெளியில் போகமுடியாதவாறு மழை ஓவென்று பெய்து கொண்டிருந்தது. மாமாவுக்குத் தெரிந்த யாரோ அங்கு நனைந்தபடி வந்திருந்தார். முத்து மாமாவின் கிழவித்தாய்தான் அவர்களின் வீட்டுப் படலையைத் திறந்து அந்த ஆளை வரச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது.

அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, தனக்கு முத்துலிங்க மாமாவின் வெள்ளை மாட்டு வண்டியை ஒன்றிரண்து நாட்களுக்குத் தரமுடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தாh.;

‘அவர் காவலுக்குப் போய்விட்டார். அவர் இரிக்கேக்க வந்து கதையுங்கோ’ மாமி அவருக்குச் சொன்னது எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது.

இளமை நினைவுகள் கற்சிலை எழுத்துக்கள்.

நுளம்புக்காகத் திண்ணையில் வைத்திருந்த வேம்பு மர இலைகள் நிறைந்த நெருப்புச் சட்டி தந்த சூட்டில். கிழவி அயர்ந்து விட்டது.

நானும் தூங்கி விட்டேன். மழை எப்போது நின்றது. வீட்டுக்கு வந்த அவர் எத்தனை மணிக்கு வீட்டை விட்டுப் போனார் என்று எனக்குத் தெரியாது.

அடுத்த நாள் பின்னேரம், மாமி வீட்டுக்குப் போனேன். முத்து மாமா வயலுக்குப் போய்விட்டாh.;

மாமி மெல்லிய விளக்கொளியில் உப்பு வைத்து மஞ்சள் அரைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் முகம் வீங்கியிருந்தது.

அவள் என்னை ஏறிட்டுப் பார்க்கவில்லை. அன்று,நாள் முழுதும் சரியான இடியும் மழையும்.மாமியும் மாமாவும் சண்டை பிடித்திருந்தால் அது எங்களுக்குக் கேட்டிருக்காது. அத்துடன் மாமி அடங்காத்தனமாகக் கத்திச் சண்டை போட்டிருக்கமாட்டாள.;

அவள் எங்கள் வீட்டுக் கிணற்றில் தண்ணி எடுக்க வந்திருந்தாலும் அது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஓயாத மழையால் வீட்டுக்குள் அடைந்த கிடந்து றேடியோ கேட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில் முத்து மாமா மாமிக்குக் கொடுமை செய்தாரா,

ஏன்? இன்னொரு ஆணுடன் மாமி பேசியதால் வந்த சந்தேகத்திலா இந்த வதை செய்தார்?

மாமி தான் அரைத்த மஞ்சளைத் தனது சட்டையை உயர்த்திவிட்டுத் தோள்களில் பூசத் தொடங்கினாள்.

அவளின் பளிரென்ற சிவந்த உடம்பு முத்து மாமாவின் கொடுமையான அடியால் நீலம் பாரித்துக் கிடந்தது.

அவள் முதுகில், அவளுக்குக் கை எட்டாத இடங்களில் நான் மஞ்சள் பூசிவிட்டேன்.

மாமி விம்முவது கேட்டது.

‘மாமா அடித்தாரா,?’ எனது கேள்வி அவளை வதைத்திருக்க வேண்டும். வயது வராத ஒரு சிறு பெண் பிறவி அவளிற் பரிதாபப்படுவது அவளாற் தாங்கமுடியாததாக இருந்திருக்கும்.

‘ உனக்கு விளங்காதம்மா’ மாமி தன் அழுகையினூடே மெல்லமாகச் சொன்னாள்.

‘கண்ட கண்ட நேரத்தில் ஒரு ஆம்பிளையோட என்ன கதை?’ திண்ணையிற் படுத்திருந்த கிழவி சினந்து வெடித்தது.

பரிமளம் மாமி தனது மாமியைப் பார்த்த பார்வையில் அக்கினி தாண்டவமாடியது.

கிழவி அருகிலிருந்தால் பஸ்பமாகியிருக்கலாம்.

எனது மனதில் எத்தனையோ சிந்தனைகள் கல்யாணம் என்ற மிக மிக நெருக்கமான உறவுக்குள் இருபிறவிகள் சேரும்போது அதில் ஒரு ஆத்மா பாதுகாப்புக்குப் பயப்படுவது என்னால் புரிந்த கொள்ள முடியாத விடயமாகவிருந்தது.

கல்யாணம் என்ற பந்தம் ஒரு பெண்ணை, அவள் திருமணம் செய்யும் ஆண் எதுவும் செய்யலாம் என்ற உரிமையைக் கொடுக்கும் கொடுமையான சடங்கா? ஓரு உயிரை வதைக்க இன்னொருத்தனுக்க உரிமை கொடுப்பதா இந்தப் பந்தங்கள்? நீpண்ட நாட்களுக்குப் பின் மாமியின் ஞாபகம் வரும்போது மேற்கண்ட கேள்வியை எனக்குள் கேட்டுக் கொள்வேன்.

‘ பெண்ணாயப் பிறந்தால் இப்படியெல்லாம் துயர் படவேண்டித்தான் வேண்டுமா?’

சமுதாயத்தின் அங்கிகாரத்துக்காக, ஆண் பெண் என்ற உறவில் சமத்துவமற்ற –ஒருத்தரை ஒருத்தருக்கு மதிப்புக் கொடுக்காத உறவுகளுக்குச் சாவு மணியடிக்கவேண்டும் என்ற ஆவேசம் எனக்கு வந்த அந்த நிமிடம், பரிமளம் மாமியின் கண்களில் கோபத்தின் அக்கினியைக் கண்ட அந்த நிமிடமாக இருக்கலாம்.

வாழ்க்கை தொடர்ந்தது. வளர்ச்சியும் மாற்றங்களும் தன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தன.

பரிமளம் மாமியின் துயரும் தொடர்ந்தது. உலகில் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை பரிமளம் மாமியின் வாழ்க்கை மாதிரித்தான் என்று தெரியாத வயது எனக்கு.

‘மாமவை விட்டுப் போனால் என்ன?’ எனது அந்தக் கேள்வியை அன்று அவளிடம் கேட்கவில்லை.

எத்தனையோ வருடங்களுக்குப் பின், அவளுக்கு மூன்ற குழந்தைகள் பிறந்த கால கட்டத்தில், நான் எஸ்.எஸ்.சி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, மாமி குளிக்க வந்தபோது, அவள் முதுகில் தெரிந்த தழும்புகளைப் பார்த்துக் கேட்டேன்.

எனது கேள்வி அவளுக்குக் குழந்தைத்தனமாக இருந்திருக்கவேண்டும்.

மாமிக்கு மாமாவின் அடியால் முன் பற்கள் விழுந்து விட்டன. கரியால் பல் விளக்கிக் கொண்டிருந்த மாமி என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

கடவுளே, அன்று ஒரு நாள் வெள்ளை மாட்டு வண்டியில் வந்திறங்கிய காந்தமான கண்களிலா இத்தனை சோகம்?

பெண்களைத் தங்கள் உடமைகளாக நினைத்துத் துவம்சம் செய்யம் ஆண்வர்க்கத்தில் கோபம் வந்தது.

‘ உங்களின்ர அழகில மாமாவுக்குப் பொறாமையா?’ அப்பளுக்கற்ற களங்கமற்ற என் கேள்வியது.

ஆனால் மாமி,

‘நீ ஒரு பொம்புளப் பிள்ளை..@துணிச்சலான கேள்விகளைக் கேட்கக் கூடாது .அது பல பிரச்சினைகளையும் கொண்டுவரும்’,

மாமி முணுமுணுத்தாள்.

‘எனக்குப் பிடித்தவர்களிடம் மட்டும்தான் நான் கேள்வி கேட்பேன்’ நான் விட்டுக் கொடுக்காமல் மறு மொழி சொன்னேன்.

மாமி என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘ நானும் என்னைப்போல பல பெண்களும் ஏன் துன்பப் படுகிறோம் என்றால் எங்களிடம் சீதனம் கொடுத்து,பணத்துக்காக எங்களிடம் மரியாதை காட்டும் ஒரு மாப்பிள்ளையை வாங்க வசதியில்ல.ஒருவேளைச் சோத்துக்கும், உடுக்க ஒரு துணிக்கும்,படுக்க கொஞ்ச இடத்துக்கும் பெரும்பாலான ஏழைப்பெண்கள் கல்யாணம் என்ற பெயரில் நரகத்தில் தள்ளப் படுகிறார்கள், பணமில்லாத இடத்தில் ஒரு பெண்குழந்தையாகப் பிறந்தால் ஏதும் மதிப்பு இருக்கிறதாகக் கற்பனை செய்யாதே’ மாமி பணமற்ற பெண்களின் வாழ்க்கையின் யதார்த்தத்தை அன்று அந்தக் கிணற்றடியில் வைத்துச் சொன்னாள்.’

மாமி அவசரமாகக் குளித்து விட்டுப் போனாள்.அவளைப் பார்த்துக் கண்கலங்கினேன்.

தன்காலில் தான் துணிவாக நிற்கும் நிலை பெண்களுக்கு வராத வரைக்கும் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் துயர் படுவார்கள் என்ற உண்மை புரிந்து விட்டது.

ஆரம்ப படிப்பு முடிந்து மேற்படிப்புக்காக, மாமி எங்களூருக்கு வந்த கிட்டத்தட்ட அதே இளம் வயதுக் கால கட்டத்தில்;, நான் ஊரை விட்டு வெளியேறி, சில வருடங்களின் பின் படிப்பு முடிய, வாழ்க்கையின் மாற்றம் காரணமாக,லண்டனுக்கு வந்தபின், பல ‘விமன் லிபரேசன்’ கூட்டங்களுக்கப் போகும் சந்தர்ப்பங்கள் வந்து அங்கு போனபோது பெரும்பாலான வெள்ளையினப் பெண்கள் பெண்களின் ஒட்டு மொத்த சுதந்திரம் பற்றிப் பேசுவதைக் கேடகும்போது பரிமளம் மாமியின் ஞாபகம் மின்னலென வந்து போகும்.

பல வசதிகளும் கொண்ட மேற்கத்திய பெண்களில் எத்தனைபேர் ஆண்களின் தயவில் தங்கி நிற்காத ‘ சுதந்திரம்’ அடைந்து விட்டார்கள்?

ஆண்களின் தயவு என்பது ‘பொருளாதாரத்தில்’ மட்டும் தங்கியில்லையே!

டெலிபோன் மணியடிக்கிறது.

சினேகிதி மரியனுடன் இன்ற குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு நீச்சல் போவதாகத் திட்டம் போட்டிருந்தோம். அவள் எப்போது புறப்படலாம் என்ற கேட்கிறாள்.

‘ தயவு செய்து மன்னித்து விடு.. இன்ற என்னால் வரமுடியாது’

‘ஏன்’ மரியன் கேட்கிறாள்.

எனது சினேகிதி ஒரு நல்ல வேலையிலிருப்பவள். பரிமளம் மாமியின் கணவர் முத்துலிங்கம் மாதிரித் தன்னில் எப்போதும் சந்தேகப் படும்; மிகவும் கட்டுப்பாடான கணவனை விவாகரத்துச் செய்து விட்டாள்.

பலரின் பார்வைக்கு மரியன்,’சுதந்திரமாகத்’ தெரிகிறாள.;’

‘ எனது தனிமை எனக்குத்தான் தெரியும். ஆனால், தனிமையான நேரங்களில் எங்கேயாவது போகலாம்,எனக்கு விருப்பமான புத்தகத்தைப் படிக்கலாம், பிக்னிக் போகலாம், காலாற எங்கேயாவது நடக்கலாம் என்ற சுதந்திரத்தை யாரும் என்னிடமிருந்த தட்டிப் பறித்து விட்டு, இதுதான் தாம்பத்யத்தின் ஒரு கூற்று, சமுதாயத்தின் அங்கிகரிப்புக்காக என்னை என் கணவர் அடிமை கொள்வதை நான் ஏற்றக் கொள்ளப் போவதில்லை’ என்று சொல்பவள்.

‘ ஏன் வரவில்லை?’ மரியன் திருப்பிக் கேட்கவில்லை. அவள் நாகரிகமானவள். தேவையற்ற கேள்விகளைக் கேட்காதவர்கள் ஆங்கிலேயர்கள்.

அவளிடம் நாளைக்கு பரிமளம் மாமி செத்துப் போன துயர் சொல்வேன். தன்னைப்போல துயர் பட்ட இன்னொரு பெண்ணின் துயரக் கதை அவளுக்கு விளங்கும்

நாற்பத்தைந்து வயதில் மாமி இறந்து விட்டாள்.கான்சர் வந்த இறந்து போனாளாம்.

நாற்பத்து ஐந்து வயதில்,குழந்தைகள் வளர்ந்து,தங்கள் பாட்டுக்குச் சிறகடித்து வெளியுலகத்தில் காலடி எடுத்து வைத்தபின், ஓரளவு நிம்மதியாக வாழும் பெற்றோர்கள் மாதிரி வாழ அவளாற் கொடுத்து வைக்கவில்லை. முத்து மாமாவிடமிருந்து அவளக்கு விடுதலை கிடைத்த விட்டது.

விடுதலையற்ற அவள் வாழ்க்கையைக் கண்ட எனது இளமை அனுபவங்கள், பெண்களின் சுதந்திரத்திற்காக, அவர்களின் மேம்பாட்டுக்காக எழுத வேண்டும் என்ற வேட்கையை என் ஆத்மாவின் சுவாலையாக்கிய மாமி பற்றிய துயர்க்கதையால் இன்று மனம் மிக மிக நொந்து போய்விட்டது. என்பதை நாளைக்கு மரியனிடம் சொல்வேன்.

வீரகேசரி பிரசுரம்.21.06.1980.

(யாவும் கற்பனையே) 

தொடர்புடைய சிறுகதைகள்
'சாக்கலேட் மாமா இறந்து விட்டாராம்' வாழ வேண்டிய பலர் இலங்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.அல்லது இறக்கப் பண்ணப்பட்டிருக்கிறார்கள்.'சொக்கலேட் மாமா' வயது வந்தவர். அவர்இறந்தது ஒன்றும் பெரிய விடயமில்லைதான் ஆனாலும் அவர் எப்படி இறந்தார் என்று என் சினேகிதி பிலோமினா சொன்னபோது,பார்வதி என்ற இளம்பெண் என் ...
மேலும் கதையை படிக்க...
'புது உலகம் எமை நோக்கி பிரசுரம்'- ஆடி 99 லண்டன்-97. ஜனட் மிகவும் ஒய்யாரமாக அமர்ந்திருந்து,கண்ணாடியிற் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கைத் தன் இதழ்களுக்குப் பூசிக் கொண்டிருந்தாள் அவளின் செய்கை அவளது காதலன் பீட்டருக்கு எரிச்சலைத் தந்தது. கொஞ்சக் காலமாக அவள் தன்னை அளவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
“இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம் காயத்திரியை மிகவும் கடினபார்வையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். “சில மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கும் தங்களின் பாதுகாப்புக்கும் எந்தப் பொய்களையும் சொல்வார்கள். வறுமையான நாடுகளில் இது சகஜம். ...
மேலும் கதையை படிக்க...
( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?) இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை கடல்நாச்சியம்மன் சடங்குக்கு வந்திருந்த ஊர்மக்கள் அலட்சியமாகப்பார்த்தார்கள். வாயு பகவான் அசையாமல் மௌனமானான். கடல்நாச்சியம்மனின் கைகள் என மக்களால் மதிக்கப்படும் கடல் அலைகள் பொங்ஙியெழுந்து ...
மேலும் கதையை படிக்க...
எனக்குத் தெரிந்த முகங்களை விடத் தெரியாத முகங்கள்தான் அந்த இடத்தில் கூடிய அளவிற் தெரிந்தார்கள். அவர்களிற் பெருப்பாலானர்வர்கள் பெண்பகுதி விருந்தினர்கள். எனது -அதாவது மாப்பிள்ளை தரப்பில் நானும் எனது சில நண்பர்கள் மட்டும்தான வந்திருந்தோம்;. ஏதோ ஒரு பகிரங்கக் கூட்டத்தில் முன்பின் ...
மேலும் கதையை படிக்க...
சாக்கலேட் மாமா
எய்தவர் யார்
சென்னையில் ஒரு சின்ன வீடு
மேதகு வேலுப்போடி
ஒருவன் விலைப்படுகிறான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)