Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மாமா என்றால் அப்பாவாக்கும்!

 

நைட்டி அணிந்து, சமையற்கட்டு மேடையில் அமர்ந்திருந்தாள் இந்துமதி. சராசரி உயரத்துக்குப் பொருந்தாத நீள் கூந்தல், குறும்புக் கண்கள், கூர்ப்பான மூக்கு, சதா பேசும் பாசக்கார வாய்.
கைலாசநாதன் – பூர்ணகலா தம்பதிக்கு, ஒரு மகன், ஒரு மகள். மகன் ஆனந்ததீர்த்தன்; மகள் சிவசங்கரி.
ஆனந்ததீர்த்தனுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தனர். புதிதாக வந்த மருமகள் தான் இந்துமதி.
கைலாசநாதன் குடும்பம், கோடீஸ்வர கூட்டுக் குடும்பம். அப்பா, அம்மா, மூத்த சகோதரர்கள், தத்தம் மனைவிகளுடன். இளைய சகோதரர்கள், தத்தம் மனைவி, குழந்தைகள் தவிர, உறவினர் கூட்டம் வந்து போய் கொண்டே இருக்கும்.
புகுந்த வீட்டுக்கு மருமகளாக வராமல், எல்.கே.ஜி., படிக்க வந்திருக்கும் மாணவியாக வந்திருந்தாள் இந்துமதி. மாமா என்றால் அப்பாவாக்கும்!துறுதுறுப்பாய், அங்கு ஓடுவது, இங்கு ஓடுவது என்றிருந்தாள்.
ஆங்கில, தமிழ் தினசரிகளை, முதல் மாடி பால்கனியில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார் கைலாசநாதன்.
“”காபி கொண்டு வாம்மா டின்ட்டு!” – இன்டர்காமில் சொன்னார்.
அவ்வளவுதான்…
காபியை எடுத்து கொண்டு, மான் குட்டி போல், தாவித் தாவி ஓடி வந்தாள். “”தோ… வந்துட்டேன்ப்பா!”
காபியை நீட்டி, மூச்சிறைத்தாள்; நாதன் முறைத்தார்.
“”டின்ட்டு… உன்னை ஓடி வரச் சொன்னேனா? மேலே, பத்து படிக்கட்டு, கீழே, பத்து படிக்கட்டு, நடுவில், ஏழு படிக்கட்டு. மெதுவா வரக் கூடாதா டின்ட்டு?” – டின்ட்டு என்ற பெயர் அவளுக்கு எப்படி சூட்டப்பட்டது என்பது,வேறு கதை.
“”நான் சாதாரணமாத்தான் வந்தேன்ப்பா!”
“”தீர்த்தன் எங்கே?”
“”கம்பெனிக்கு போயிட்டாருப்பா… “வரேன்டியம்மா டின்ட்டு…’ன்னாரு!”
“”உம்மா குடுத்து அனுப்புனீயோ?”
“”அதெல்லாம் அப்பாகிட்ட சொல்லக் கூடாது; அப்பாவும் கேட்கக் கூடாது!”
“”இன்னைக்கு மதியம் என்ன சமையல்?”
“”அதெல்லாம் அம்மா டிபார்ட்மென்ட்; நான், கூடமாட உதவி மட்டும் தான்!”
“”மாமனாரை அப்பாங்கற… மாமியாரை அம்மாங்கற… மத்த உறவுகளை என்னன்னு கூப்பிடுவ டின்ட்டு?”
“”உங்க ரெண்டு பேரையும் தவிர, மத்த எல்லாரையும், அந்தந்த உறவுபடியே கூப்பிடுறேன்!”
“”ஏன் அப்படி?”
“”தெரியலையேப்பா!”
“”சமத்து… நீ போய் உன் வேலையப் பாரு!”
கிளம்பிப் போனாள் டின்ட்டு. அவள் போனதும், கைலாசநாதனின் மகள் சிவசங்கரி வந்து சேர்ந்தாள்.
“”எனக்கு எரிச்சலாவும், பொறாமையாவும் இருக்கு டாடி!”
“”ஏம்மா?”
“”உங்க ஒரே மகளான நானே, உங்களை, “அப்பா… அப்பா…’ன்னு கொஞ்சி, உரிமையா கூப்பிட்டதில்லை. ஒரு நாளைக்கு, ஐநூறு தடவை கூப்பிடறா டின்ட்டு… அப்பாங்கற வார்த்தையை அவ உச்சரிக்கும் விதமே, அலாதியா இருக்கு. எனக்கும், ஆறு மாசத்துல கல்யாணம் செஞ்சு வைக்கப் போறீங்க. நான் இன்னொரு வீட்டுக்கு மருமகளா போயிட்டா, காலியாகிற என் இடத்தை, டின்ட்டு பிடிச்சிக்குவா போல!”
சிரித்தார் கைலாசநாதன்.
“”சாதாரண விஷயத்தை, பெருசு பண்ணி பாக்காதே சிவசங்கரி!”
“”அண்ணனுக்கு, 26 வயசாகுது; எனக்கு 23 வயசு. என்னைக்காவது எங்களுக்கு பட்டப் பெயர் வச்சு கூப்பிட்டு இருக்கீங்களா? அவளை மட்டும் எப்படி, “டின்ட்டு’ன்னு…”
“”ஏதோ ஒரு கார்ட்டூன் படத்துல, “டின்ட்டு’ன்னு ஒரு கதாபாத்திரம் வரும்… அந்த கதாபாத்திரம் மாதிரி ஒரு துறுதுறுப்பு இந்துமதிக்கு. அவள், ஒரு ஹைப்பர் ஆக்டிவ் கேர்ள். அவ மேல உனக்கு அதிருப்தி இருக்கா?”
“”அப்படி சொல்வேனாப்பா? டின்ட்டு ஒரு குட்டி தேவதை; ஐ லவ் வெரி மச்!”
“”சும்மா என்னை குஷிபடுத்த அப்பான்னு கூப்பிடுறான்னு நினைக்கிறீயா?”
“”இல்லப்பா… ஷி இஸ் மோர் கம்பர்டபிள் வித் யூ. “அபியும் நானும்’ படத்தில், பிரகாஷ்ராஜை, த்ரிஷா பாக்கற மாதிரி, உங்களை பாக்கறா… “அன்புள்ள அப்பா’ படத்தில், சிவாஜி கணேசனை, நதியா பாக்கற மாதிரி உங்களை பாக்கறா… உங்க திறமையை, புகழை, வயதை அவளது விளிப்பு மகிமைபடுத்துகிறது. கணவனுடனும், கணவன் குடும்பத்துடனும் அவள் எவ்வளவு ஒட்டுறவுடனும், பாசத்துடனும் இருக்கிறாள் என்பதை, அவளது விளிப்பு காட்டுகிறது!”
“”குட்… அவளை பார்த்து பொறாமைப்படாதே… நீ இன்றையிலிருந்து, என்னை தினமும், நூறு தடவை அப்பான்னு கூப்பிடு. மருமகள் ஒரு பக்கமும், மகள் ஒரு பக்கமும், மகன் ஒரு பக்கமும் அப்பான்னு கூப்பிடட்டும். என்னை சுற்றி, “அப்பா… அப்பா…’ என்ற வார்த்தைகள் கும்மியடிக்கட்டும்!”
சிரித்தாள் சிவசங்கரி.
“”வாழ்க்கையில பல சந்தோஷங்களை அனுபவிச்சிட்டேன். நான் போகாத நாடுகள் இல்லை; சாப்பிடாத உணவு வகைகள் இல்லை; அணியாத ஆடை வகைகள் இல்லை. அவை எல்லாவற்றையும் விட, வீட்டுக்கு வந்த மருமகள், என்னை அப்பான்னு கூப்பிடுறது, மிகுந்த சந்தோசஷத்தை தருது. வாழ்க்கையில ஒவ்வொரு ஆணும் அனுபவிக்க வேண்டிய தருணம், மகனுக்கு திருமணம் செய்து, மருமகளை நடமாடும் மகாலட் சுமியா தரிசிக்கிறது. கோகுலக் கண்ணனின் காலடித் தடங்கள் போல், வீடு முழுக்க மருமகளின் காலடித் தடங்கள். மருமகள் வந்த பிறகு, வீட்டின் நிகழ்வுகள் துரிதகதியாய் நடக்கின்றன. டோட்டலி சார்ஜ்டு அட்மாஸ்பியர். நிமிடத்துக்கு நிமிடம், ஹோலி பண்டிகை நடப்பது போல ஒரு வர்ண ஜாலம். வீடு முழுக்க மானசீகமாய் குல்மொஹர் பூக்களும், காட்டு மஞ்சரி பூக்களும் பூத்துக் குலுங்குகின்றன!”
“”யூ ஆர் பிகமிங் பெனடிக் டாடி!”
“”ரியலிஸ்டிக்கா எல்லாவற்றையும் பாத்தா, வாழ்க்கை ரசிக்காது. கவிதையை, கவிதையாய் பாவித்து ரசிக்க வேண்டும்; இல்லாவிட்டால், அது, உரைநடையாகி விடும்!”
“”உங்களை அப்பா என்று எத்தனை நாளைக்கு அழைப்பாள்? ஒரு குழந்தை பிறந்ததும், “மாமா…’ என்பாளோ? அப்ப நாம, “டின்ட்டு’ன்னு அழைச்சா, “அதென்ன டின்ட்டு…. இந்துமதின்னு கூப்பிடுங்க…’ன்னு சொல்வாளோ… காபி கேட்டா, “வந்து குடிச்சிக்க…’ என்பாளோ?”
“”அந்த ஆராய்ச்சி இப்ப எதுக்கு? ஒரு உதாரணம் சொல்றேன் கேள்… உங்கம்மா ஒரு பலகாரம் செய்கிறாள்; எடுத்து சாப்பிடுகிறாய். “தேனாய் இனிக்குது… பிரமாதமா செஞ்சிருக்க…’ன்னு பாராட்டாம, “இன்னைக்கு என்ன காரணத்தினாலோ, பலகாரம் சிறப்பா செஞ்சிருக்க… எதிர்காலத்துல இதே டேஸ்ட்டோட செய்ய முடியுமா உன்னால…’ன்னு, குயுக்தி கேள்விகள் கேட்கக் கூடாது!”
“”நன்னா பேசறீங்கப்பா!”
“”அப்படியா?”
“”<உங்களுக்கு நான்கைந்து மகன்கள் இருந்திருந்து, நான்கைந்து மருமகள்கள் வந்திருந்தால், இந்த இன்டிமசி கிடைச்சிருக்காதுல்ல?”
“”தேவையற்ற ஆராய்ச்சி!”
“”ஓ.கே., நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை!” – நகர்ந்தாள் சிவசங்கரி. தொடர்ந்து தினசரிகளை வாசிக்க ஆரம்பித்தார் கைலாசநாதன்.
மொபைல் போன் அழைத்தது; எடுத்து காதில் இணைத்தாள் டின்ட்டு. எதிர்முனையில் அவளது அம்மா.
“”என்னம்மா… எப்படி இருக்கற?” என்றாள்.
“”ஷேமமாய் இருக்கிறேன் மிசஸ் அனுராதா!”
“”இன்னும் நீ மாறவில்லையா செல்லம்?”
“”மாறவில்லை… மிஸ்டர் ஸ்ரீ ஸ்ரீ ரங்கராஜன் எப்படியிருக்கிறார்?”
“”நன்றாக இருக்கிறார்ம்மா!”
“”அப்புறம்?”
“”புக்ககத்தில், உன் செல்லப் பேர், பட்டப் பேர், “டின்ட்டு’வாமே?”
“”ஆமாம்!”
“”உன்னை யாரும் பட்டப் பேர் வச்சு அழைச்சா பிடிக்காதே?”
“”அது அங்க… இங்க இல்லை?”
“”உறவுகளை விளங்கிக்கவே கஷ்டப்படுவ. உறவு முறைகளை உனக்கு படம் போட்டு விளக்கணும். கல்யாணத்துக்கு பிறகு தலைகீழாய்ட்ட. மாமனாரை, “அப்பா’ங்கற; மாமியாரை, “அம்மா’ங்கற… நிஜமாவே உணர்ந்து கூப்பிடுறீயா… இல்லை நடிக்கிறீயா?”
“”நம்ம குடும்பம், தனிக் குடும்பம். உறவுக்காரர்களை பார்ப்பது அபூர்வம். பண்டிகைகளை கொண்டாடும் போது கூட, நாம நாலு பேர் தான் இருப்போம். அப்படிப்பட்ட என்னை, மிகப்பெரிய பாரம்பரிய கூட்டுக் குடும்பத்தில் கட்டிக் கொடுத்திருக்கீங்க. என்னதான் நாத்திகம் பேசினாலும், அடிக்கடி போய் பழக்கமில்லா விட்டாலும், கோவிலுக்குள்ள புகுந்த உடனே, நம்மை அறியாம கையை தூக்கி, சாமி பேரை சப்தமா உச்சரிச்சு கும்பிடுவோம். கோவில் வாசனை, நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். கோவிலின் உட்பிரகாரம், வெளிப் பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்வோம். அப்படி ஒரு மனநிலைக்கு இங்க வந்ததும் தாவிட்டேன்!”
“”ஹும்!”
“”இந்தக் கூட்டுக் குடும்பத்தை சினிமாக்களிலும், சீரியல்களிலும், கதைகளிலும் கூட பார்க்க முடியாது. அப்படியொரு சுயநலமில்லா கூட்டு நேர்த்தி. இந்த கூட்டுக் குடும்பத்தில், நானும் ஒரு அங்கம் என்பதை நினைச்சு பார்க்க, பெருமையாய் இருக்கு. இங்கு, ஒருவர் மொபைல் போனை, ஒருவர் நோண்டுவதில்லை. யாருக்கும் கடிதம் வந்தால், பிரித்து வாசிக்காமல், கடிதம் யார் பேருக்கு வந்திருக்கிறதோ, அவரிடம் கொடுத்து விடுகின்றனர். அவரவர் வேலையை, அவரவர் செய்து விடுகின்றனர்.
“”வீட்டுக்குள் பெரிய நூலகம் வைத்திருக்கின்றனர்; பத்தாயிரம் புத்தகங்கள் இருக்கும். இங்கு யாரும் மெகா சீரியல்கள் பார்ப்பதில்லை. வாழ்க்கை அர்த்தபூர்வமாய் இருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும், சிறு குழந்தை போல் குதூகலமாய் ரசிக்கிறேன். என் மாமனாரை பார்த்ததும், என்னை அறியாமல் நாக்கு, “அப்பா…’ என்று கூப்பிட்டு விட்டது.
“”மருமகளிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது, கூட்டுக் குடும்பத்தை இணக்கமாக, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நடத்தை தான். அது, என்னிடம் இருக்கவே, பாசமாய் உருகிப் போகிறார். “டின்ட்டு’ இசைநயம் கூடிய அற்புதமான பட்டப் பெயர்; எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்க வச்ச பெயரில்லை; இது புக்கக அப்பா வச்ச பெயராக்கும்!”
பிரமித்தாள் டின்ட்டுவின் அம்மா.
“”நீ நன்னாயிருந்தா, எங்களுக்கு அது போதும்டி!”
“”ஓ.கே., மிசஸ் அனுராதா; மீதிய அப்புறம் பேசுவோம்!”
அப்பாவின் பிரீப்கேசை எடுத்துக்கொண்டு, காருக்கு அருகில் ஓடினாள் டின்ட்டு. பிரீப்கேசை டிக்கியில் வைத்தாள்; கார் புறப்பட்டது. புரூட் நறுமணம் நிறைந்த அப்பா, டாட்டா காட்டியபடி கிளம்பிப் போனார்.
அம்மாவுக்கு ஒத்தாசை செய்ய, சமையலறையில் புகுந்தாள் டின்ட்டு.
ஆறு மாதம் கரைந்தது. சிவசங்கரிக்கு திருமணமாகி, புக்ககம் புகுந்தாள்; புக்ககம் அமெரிக்கா.
சங்கரியை பார்க்க, டின்ட்டுவின் கூட்டுக் குடும்பம், மூன்று மாதத்திற்கு பின் அமெரிக்கா பறந்தது. நடுவானில் பறக்கும் விமானத்தில், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். எக்சிகியூட்டிவ் வகுப்பில், அப்பா விஸ்கி உறிஞ்சினார்; எகனாமிக் வகுப்பில், மகன் ஒயின் உறிஞ்சினான்.
சிவசங்கரியின் கணவன், உயிர் காக்கும் மருந்து தயாரிக்கும் கம்பெனியில், விஞ்ஞானியாக பணிபுரிபவன். சைக்கிளிங் செய்து, மெலிந்து, ட்ரிம்மாக இருந்தான். விமான நிலையத்தில், தன் பெற்றோரை பார்த்ததும், சிவசங்கரி தன் மாமனார், மாமியார் பக்கம் திரும்பி, உற்சாகமாக கூவினாள்… “”அப்பா… அம்மா… என்னை பெத்தவங்க இந்தியாவில் இருந்து வந்திருக்காங்க!”
“”உற்சாகமாய் வரவேற்போம் பூப்பூ!” என்றனர்; சிவசங்கரிக்கு அவர்கள் வைத்துள்ள செல்லப் பெயர் அது!
டின்ட்டுவும், பூப்பூவும் கைகோர்த்து, சல்சா நடனமாடினர்.

- மே 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
யாராலும் முடியும் தம்பி!
"நிலா' பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார். ஒட்டுனர் கதவைத் திறந்து கொண்டு சங்கரலிங்கம் இறங்க, நானும் இறங்கினேன். வயர்லெஸ் செட்டையும், இரு கைபேசிகளையும் எடுத்துக் கொண்டு நடந்தார். அலுவலக உதவியாளன், அவரது ...
மேலும் கதையை படிக்க...
கல்யாணின் மடிகணினித் திரையில் ஒரு பறவை நின்றிருந்தது. எடை, 5 கிலோ. கழுகு போல் கூரிய மூக்கு. கண்களில் அசாதாரணமான கொலை வெறி மின்னியது. அலகு நுனியில் ரத்தம் ஈஷியிருந்தது. அழகிய குஞ்சமாய் வால் பகுதி. அழிந்துபோன மிருகங்களை ஆராயும் கிரிப் டோஜிவாலஜிஸ்ட் ...
மேலும் கதையை படிக்க...
பல் மருத்துவன்!
மணிமேகலைப் பல்கலைக்கழகம். துணைவேந்தர் மாளிகை, வரவேற்பறையில் காத்திருந்தேன். மக்கள் தொடர்பு அதிகாரி எட்டினார்... ""துணைவேந்தர் அழைக்கிறார்; போங்கள்!'' வணங்கியபடி உள்ளே போனேன். துணைவேந்தர் பதில் வணக்கம் செய்து, ஒரு நீள்கவரை நீட்டினார்... ""உங்க மகனுக்கான பல் மருத்துவ சேர்க்கை கடிதம் இதோ... வாழ்த்துக்கள்!'' ""நன்றி,'' என்று கவரை வாங்கி, ...
மேலும் கதையை படிக்க...
மீன் அங்காடி!
ஆளுயரக் கண்ணாடி முன் நின்றான் மருதநாயகம். வழுக்கைத் தலையில், அறை விளக்கு வெளிச்சம் பட்டு, டாலடித்தது. பின்னந்தலை கேசத்தையும், இரு கிருதாக்களையும், பென்சில் மீசையையும் டை அடித்திருந்தான். பவர் கிளாஸ் கண்ணாடிக்குள்ளிருந்த இரு கண்கள், மனதில் நிறைவேறாத ஆசைகளை பிரதிபலித்தன. குண்டு மூக்கு. ...
மேலும் கதையை படிக்க...
காதலர் பூங்கா
தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரே சந்துருவும், ராகினியும் அமர்ந்திருந்தனர். இருவரின் காலடியில் அவர்களது இரு மகள்கள் அமர்ந்திருந்தனர். மூத்தவள் தேவிகா, பிளஸ் 2 படிப்பவள்; இரண்டாமவள் பூர்ணா, பத்தாம் வகுப்பு படிப்பவள்.சந்துரு மகா கண்டிப்பான தந்தை. மூத்த மகளை ஐ.ஏ.எஸ்.,சும், இளையவளை ஐ.எப்.எஸ்.,சும் ...
மேலும் கதையை படிக்க...
யாராலும் முடியும் தம்பி!
மிமிக்ரிகோ ஆஸியானா
பல் மருத்துவன்!
மீன் அங்காடி!
காதலர் பூங்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)