Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மாடுகளும் சில மனிதர்களும்!

 

மாடு கன்றுகளை மேய்த்துத்தான், மகனை படிக்க வைத்தார் இசக்கி. கொடிமுத்து நன்கு படித்தான். உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே, அவன் ஆசிரியர்கள் அங்கலாய்ப்பர்.
“யோவ் இசக்கி… நீ வெறும் கை நாட்டு; ஒன் மவன் பெரிய படிப்பாளியா… அவன் தான்யா கிளாஸ்லே பர்ஸ்ட். நீ மட்டும் அவனை மேலே படிக்க வெச்சே… அவன் எங்கேயோ போயிடுவான்யா. அவ்வளவு புரிஞ்சிக்கற சக்தி…’
இசக்கியை, இந்த வார்த்தைகள் தான் உசுப்பி விட்டன என்று சொல்ல வேண்டும். “ஏதோ படித்தால் போதும்…’ என்று நினைத்தவனின் நினைப்பு, ஸ்திரத்தன்மை பெற்றது.
மாடுகளும் சில மனிதர்களும்!“எப்படியாவது கஷ்டப்பட்டு படிக்க வெச்சா, பெரிய ஆளா வந்திடுவானோ…’ என்ற நப்பாசை அவருள் துளிர்த்தது.
அவருக்கு கை கொடுக்கிற மாதிரி, அக்கா புருஷன், சென்னை நகராட்சியில் சொற்ப உத்தியோகத்தில் இருக்கவும், அந்த தம்பதியருக்கு பிள்ளை – குட்டிகள் இல்லாது போகவும், தோதாய் போய் விட்டது. கொடிமுத்துவை ரயிலேற்றி, அக்கா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். வஞ்சனை இல்லாத அக்காவும், அக்கா புருஷனும், கொடிமுத்துவை உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, படிக்கும் சூழலை உருவாக்கிக் கொடுத்தனர்.
இப்போது அவன், கல்லூரி படிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறான். அடுத்து, அவன் உத்தியோகத்திற்கு போகலாம். பதினைந்தாயிரம், இருபதாயிரம் சம்பளம் வாங்கலாமாம். இசக்கிக்கு, அவன் அக்கா சொன்ன தகவல் இவை.
இனி, தன் துரதிருஷ்டம் பிடித்த, “மாடு மேய்க்கும் வேலை’ வேண்டாம் என்று கருதினார்.
கொஞ்சமான கஷ்டங்களா, அந்தத் தொழிலில்?
சேவல் கூவி, பொழுது விடிகிற போதே, மாடுகளின் முகத்தில்தான் விழிப்பார் இசக்கி. எல்லாமே ஊரார் மாடுகள். பஞ்சாயத்தாரின் புறம்போக்கு இடம் ஒன்று, “மந்தை’க்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு தான், அவரவர் தத்தம் மாடுகளை கொண்டு வந்து விடுவர். எல்லாருடைய மாடுகளும், திரண்ட பின், அவைகளை ஓட்டிக்கொண்டு போவார் இசக்கி.
அவர் கைக் கம்பிற்கும், கண் அசைவிற்கும், படுபாந்தமாய் கட்டுப்படும் மாடுகள். இசக்கி நல்ல வேலைக்கார மனிதர். அந்த கிராமத்து வாத்தியார் கேலியாக அடிக்கடி சொல்வார்…
“ஏம்பா… நானு பிள்ளைகளை கட்டிமேய்க்கறேன். நீ மாடுகளை கட்டி மேய்க்கிற… ரெண்டு பேரோட வேலை நெலைமையும், ஏறக்குறைய ஒண்ணுதான். ஆனா, நீ சொன்னா, மாடுங்க கேட்டு நடக்குது; நான் சொன்னா, புள்ளைங்க கேக்க மாட்டேங்கறாங்க; என்ன செய்யறது… உன் தொழிலுக்கு வந்துடலாம்ன்னு தோணுது…’
“போங்க… தமாஷ் பண்ணாதீங்க…’ என்பார் இசக்கி.
மாடு மேய்ப்பதென்பது ஒரு கலை. அதை நேர்த்தியாக செய்ய வேண்டும். இல்லையென்றால், ஒவ்வொரு மாடும், ஒவ்வொரு பக்கம் சிதறி ஓடி, தலைவலி வந்து விடும்.
மந்தையில் வந்து திரளும் மாடுகளை, நேரத்தோடு மேய்ச்சலுக்கு கூட்டிப்போக வேண்டும். அவைகளின் கண்களுக்கு, தினமும் பச்சையை காட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். அரக்க பரக்க, பச்சையை விழுங்கி வைக்கும்.
அடுத்து தண்ணீர் நேரம். குளத்தையோ, குட்டையையோ காட்ட வேண்டும்.
பெரும்பாலான மாடுகள், முன் செல்லும் மாடுகளை, அடியொற்றிச் செல்லும். ஆனால், சில மாடுகள், சண்டித்தனம் செய்யும். புல் மேய வேண்டிய நேரத்தில், தண்ணீர் தேடி ஓடும்; தண்ணீர் காட்டும் நேரத்தில், புல் தேடி ஓடும்.
இசக்கி, கம்பைச் சுழற்றினாரென்றால், அடங்காத மாடுகள் கூட அடங்கி விடும். சில மாடுகள், கொஞ்சம் செல்லமாய், இவர் பேச்சை புறந்தள்ளி விலகி ஓடும். அந்த வித மாடுகளுக்கு, ஒரு வித சப்தம் வைத்திருக்கிறார் இசக்கி. “ஏங்க்… ட்ருவா…’ என்பார். அந்த சங்கீதக் குரலுக்கு மசியாத மாடுகளே இல்லை.
சூரியன் உச்சி வந்தால், நடுப்பகல் வந்து விட்டதை உணர்வார் இசக்கி. காட்டில் ஏது கடிகாரம்? வயிறும், நேரம் ஆகிவிட்டதைச் சுட்டிக் காட்டும். ஏதாவது மர நிழலில், மொந்தையில் கொண்டு வந்திருந்த கூழை ஊற்றிக் கொண்டு, மிளகாயை கடிப்பார்; வயிறு குளிரும்.
மற்றபடி, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு போகிற நேரத்தில், வேறு எதையும் வயிற்றுக்குள் திணிக்க முடியாது.
சூரியன், மேற்கு மலை மறைவிற்கு போன பின், மாடுகளை திரும்ப கொண்டு வந்து விட்டதற்கப்பால் தான், தினமும் சுடுசோறு. துணை என்று யாரும் இல்லாததால், தனக்கு வேண்டிய பணிகளை தானே செய்து கொள்ள வேண்டும். குளித்து, அடுப்பைப் பற்ற வைத்து, ஏதாவது காரசாரமாய் குழம்பு வைப்பார். ஏழு மணிக்கெல்லாம் கையை ஓரிடம், காலை ஓரிடம் போட்டுக் கொண்டு, மானாவரியா தூங்குவார். யாராவது மார் மீது, நர்த்தனம் ஆடினால் கூட தெரியாத தூக்கம்.
இத்தனை கஷ்டப்பட்டும் கிடைக்கும் வருமானம், மிகவும் சொற்பம். சம்பளம் வாரத்திற்கு, மாதத்திற்கு என்றெல்லாம் கிடையாது. வருடத்திற்கு, ஒரு முறைதான் கிடைக்கும். அதுவும், அதிக பட்சம் நூறு ரூபாய் தான்.
இசக்கி தன் வாழ்க்கையில், ஐநூறு ரூபாய் நோட்டையோ, ஆயிரம் ரூபாய் நோட்டையோ பார்த்ததே இல்லை எனலாம். ஆயிரம், இரண்டாயிரத்தின் தேவைகளும் அவருக்கு ஏற்படவில்லை.
கடினமான வாழ்க்கை நிலையை, சுகமாக ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட்டார் இசக்கி.
அவரது ஒரே கவலை, தன் மகன் இந்த தொழிலுக்கு வரக்கூடாது என்பதுதான். படித்துவிட்டு, அரசாங்கத்தில் எந்த வேலைக்கும் அவன் போகட்டும் என்று கருதினார். இதற்காக, ஏதாவது பெரிய அளவு பணத்தேவை ஏற்பட்டால், அதற்கு தன் மூதாதையர் வாங்கிப் போட்டு வைத்திருந்த, இரண்டு ஏக்கர் நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டி வைத்திருந்தார்.
இசக்கி எதிர்பார்த்திராத ஒரு நேரம். மகன் கொடிமுத்து வருவதாக தகவல் கிடைத்தது.
“அட… இதற்குள்ளாகவா வருடங்கள் ஓடி விட்டன?’ நம்பவே முடியவில்லை அவரால்.
அவன் வரவும், வைத்த கண் வாங்காமல் பார்த்தார். தனக்கும், அவனுக்கும் தான், எத்தனை பெரிய முரண்பாடு!
பேன்ட்டும், ஷர்ட்டும் போட்டுக் கொண்டு, பெல்ட்டால் அதை இறுக்கிக் கட்டி, தலை சீவி, ஒப்பனை செய்யப்பட்டு, மீசை சிக்கென வைத்துக் கொண்டு…
“இந்தக் கோலத்துல ஒன்னைப் பெத்தவ பார்க்க குடுத்து வைக்கலியே ராசா…’ என்று மனதிற்குள் விம்மினார்.
“”வாப்பா… எப்பப்பா வந்தே?” என்றார் கரிசனத்தோடு.
“”நான் மதியமே வந்துட்டேன்பா… உங்களைத்தான் காணலே.”
“”என்ன செய்யறது ராசா… ஊர் மாடுகளை மேய்க்கறதுன்னா சும்மாவா… மாடுகளை, அவங்கவுங்க வீட்டுல ஒப்படைச்சுட்டு தானே வர முடியும். அதுசரி… உன் படிப்பெல்லாம் முடிஞ்சிருச்சா… உன் எதிர்காலம் எப்படி அமையணும்ன்னு உனக்கு ஒரு திட்டம் இருக்கா?” என, வாஞ்சையோடு கேட்டார்.
“”நீங்க அதைப் பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க. என்கிட்டே, என்னோட எதிர்காலம் பத்தி, பெரிய திட்டமே இருக்கு. அதுவும் பணம் கொட்டும் திட்டம்,” பெருமை பொங்க சொன்னான் கொடிமுத்து.
“”ஓ… அதானே பார்த்தேன். நீ என்னை மாதிரி அல்லாடக் கூடாது. அஞ்சுக்கும், பத்துக்குமா உழைப்பை விரயம் செய்யக் கூடாது.”
“”ஆமாம்பா… என் எதிர்காலம் ரொம்ப பிரகாசமா இருக்கப் போவுதுப்பா.”
அந்த வார்த்தைகள், அவர் காதுகளில் தேனை வார்த்தன. இதற்காகத் தானே இத்தனை நாட்கள் வேள்வி நடத்தினார்!
“”சரி ராசா… நீ சர்க்கார் உத்தியோகத்துக்குத் தானே போகப் போறே… அது தமிழக சர்க்காரா… மத்திய சர்க்காரா… எந்த சர்க்கார்?”
“”நீங்க நெனைக்கற மாதிரி, நான் அரசாங்க உத்தியோகத்துக்கெல்லாம் போக விரும்பலேப்பா!”
“”அப்புறம்?”
“”அதுல பதினஞ்சாயிரம், இருபதாயிரம்ன்னு சம்பளம் குடுத்து, நம்மோட தெறமையை அமுக்கிடுவாங்க…”
“”அதனால…”
இசக்கிக்கு மகன் சொல்ல வருவது புரியவில்லை.
“”சுயமா தொழில் தொடங்கி, கணிசமா சம்பாதிக்க விரும்பறேம்பா.”
“”ஓ…!”
அவர் விழிகள் விரிந்தன.
“”நம்ம கிட்டே ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு இல்லே… அங்கே நானே சுயமா தொழில் தொடங்க போறேன். தொழில் தொடங்க முதலீடு ஏதுன்னு நெனைக்கிறீங்களா… இதுவரை நான் படிச்சு வாங்கின சர்டிபிகேட்சை எல்லாம் காண்பிச்சு, பாங்கிலே லோன் வாங்கப் போறேன். என்னோட இந்த பிளான் மட்டும் ஒர்க் – அவுட் ஆச்சுன்னா… பணம் ஏராளமா சம்பாதிக்க முடியும்பா… இதுல உங்க பங்கும் அதிகம் இருக்குப்பா!”
இப்போதும் கொடிமுத்துவின் பேச்சு இசக்கிக்கு புரியவில்லை.
“”நான் படிக்காதவன். படிச்ச புள்ள நீ ஆரம்பிக்கும் தொழிலுக்கு எப்படி உதவி செய்வேன்?” அப்பாவியாய் கேட்டார்.
“”ஆமாம்பா… நான் ஆரம்பிக்கப்போறது பால் பண்ணை. கறவை மாடுகளை வெச்சி… மாடுகளோட போக்குதான் உங்களுக்கு நல்லா அத்துபடியான விஷயமாச்சே… அதனால, இந்த தொழில்ல நான் வெறும் நிர்வாகஸ்தன்தான். நீங்கதான் எல்லாமும். கிராமத்துல எந்த நகரத்து நெருக்கடிகளும், டென்ஷனும் இல்லாம, உங்களை வெச்சிக்கிட்டு, நான் ஹாய்யா பணம் பண்ணப் போறேன் பால் பண்ணை மூலமா…”
“என்னை விட்டு ஓடிப்போக முடியுமா…’ என்ற பாடல் இசக்கியின் நினைவுக்கு வர, அதே பாடலை மாடுகளும் பாடி, அவரது கண்களைப் பார்ப்பது போலிருந்தது.

- எம்.கே. சுப்ரமணியன் (ஏப்ரல் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
1 தந்தை தனது 5 வயது குழந்தையிடம் 2 கையில் பிராகரஸ் ரிப்போர்ட் 3 பயந்து போன மனநிலையில் குழந்தை கண்ணன் 4 அவன் அமர்ந்த நிலையில் ஏதோ ஒரு இயற்கை காட்சியை படமாக வரைந்து கொண்டிருந்தான். இயற்கை தனது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்த தேர்ந்தெடுப்பது குழந்தைகளை, ...
மேலும் கதையை படிக்க...
விடுமுறை நாளானதால் சோம்பலாக எழுந்து, ஷேவிங் செய்தவாறே, அந்த விஷயத்தை சுவாரசியம் இல்லாதவனைப்போல் ஆரம்பித்தான், வசந்த். "சுசி, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?", அறையை சுத்தம் செய்ய தொடங்கி இருந்தாள் சுசீலா. "அப்படி என்ன விஷயம்?". "உங்கப்பா ...உங்க வீட்டை உன் தம்பியின் பேருக்கே எழுதப்போறாராம். ...
மேலும் கதையை படிக்க...
தயங்கித் தயங்கிப் பக்கத்து வீட்டுப் பெரியவரிடம் வந்தார்கள் விபின் தம்பதி. ‘‘மறுபடி மறுபடி உங்க ளுக்குச் சிரமம் கொடுக்கிறதுக்கு மன்னிக்கணும். ரேவதிக்கு இன்னிக்கு ஒரு இன்டர்வியூ. அதான், குழந்தையைக் கொஞ்ச நேரம் உங்ககிட்ட விட்டுட்டுப் போக லாம்னு... ஃபீடிங் பாட்டில், நாப்கின், வெந்நீர் ...
மேலும் கதையை படிக்க...
சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்!
ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகி விடும். "சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்...' என்று, அலப்பறை பண்ணத் துவங்கி விடுவார். பிள்ளையவர்கள், நாத்திகவாதத்துக்கும் பேர் போனவர். "பரிசுத்த ஆவியில புட்டு வேகுமா? சரஸ்வதி குடியிருக்கறது ...
மேலும் கதையை படிக்க...
“பலாப் பழம் சொல்லு ...” “பலாப் பலம்.” “பலம் அல்ல. பழம்” “பளம்.” “நாக்கை நீட்டு...” நீட்டினேன். “நாக்கு நன்றாகத்தானே இருக்கு. பின்னே என்ன?” “ம்... பழனியப்பன் சொல்லு.” “பளனியப்பன்.” “ போச்சிடா தமிழை கொல்கிறானே...” “எப்பா பழனியப்பா... உனக்கு அந்தப் பெயரை தெரியாமல் வைத்து விட்டேன். இனிமேல் மாற்ற முடியாது. அழகுத் தமிழில் நீ ...
மேலும் கதையை படிக்க...
அநாகரிகமான விவகாரம்
பணமா, பாசமா?
பாறாங்கல்லும் ஒரு பனிக்கட்டியும்!
சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்!
“ழ” வைத் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)