மாக்கிழவன் கோவில்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 7,521 
 

உடுக்கைச் சத்தம் அங்கிருப்பவர்களை ஆட செய்தது. மேளமும் உறுமியும் மாக்கிழவன் கோவில் உற்வசத்தை பறைச்சாற்றியது. கோடிமலையைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மாட்டு வண்டியில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். இன்னும் சிலர் இரண்டு நாட்களுக்கு முன்னரே நடந்து இன்று கோடிமலை வந்து சேர்ந்தனர். மாக்கிழவன் கோயில் அறுபது ஏக்கரில் பரந்து இருந்தது. ஒன்பது நாள் திருவிழா. கோயிலுக்குச் சொந்தமான ஒன்பது பட்டத்தார்களும் அவர்களின் வாரிசுகளும் முன்னே நின்று பூஜையினை நடத்துவார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு பட்டத்தார் வீதம் ஒன்பது நாட்களிலும் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். இவர்களைத் தவிர இருபத்துநான்கு உப பட்டத்தார்களும் உண்டு. கோவில் நிர்வகிப்பதில் இவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்த ஒன்பது பட்டத்தார்களில் அம்மாசி கிழவன் தலைமை பொறுப்பில் இருந்தார். மாக்கிழவன் என்ற மனிதன் இருந்ததாகவும் அவர்தான் கோடிமலைக்கிராமங்களை உருவாக்கி காவல் காத்ததாகக் கதை ஒன்று உண்டு. அவர் கொல்லிவாய்ப் பிசாசுடன் சண்டையிட்டு இறந்தாகவும் மீண்டும் மனிதராகப் பிறந்து அப்பேயைக் கொல்வார் என்ற நம்பிக்கையும் அம்மக்களிடம் இருந்து வருகிறது. மாக்கிழவன் இறந்த பிறகு அம்மலைவாழ் மக்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் கிழவன் என்று சேர்த்துக்கொண்டார்கள்.

ஒன்பது நாட்களும் இரவு மாக்கிழவன் நாடகம் நடத்தப்படும். அதுவும் கடைசி ஒன்பதாவது நாளிரவு மாக்கிழவன் அந்த கொல்லிவாய்ப் பிசாசை கொல்லுகின்ற காட்சி பார்ப்பவர்களை அப்படியே அசர வைக்கும். அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காகவே மக்கள் திரண்டு வருவர். ஒவ்வொரு பட்டத்தார்களின் நாளுக்கு ஏற்ப அவர்களின் வகையறாக்கள் பலிகிடா வெட்டியும் கோழி அறுப்பும் செய்வர். அதனால் தினமும் அன்னதானம் நடைபெறும். வேண்டிக்கொண்டவர்கள் ஒருபுறம் எதையாவது சாப்பிட கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். பாட்டும் இசையும் ஆடலும் எங்கு பார்த்தாலும் நின்று பார்க்கத் தூண்டும். ஐஸ் விற்பவர்கள் முதல் பொறிகடலை பஜ்ஜி கடை வரை அந்த ஒன்பது நாட்களும் வியாபாரம் சூடு பறக்கும். ரங்க ராட்டினமும் குதிரை ராட்டினமும் எப்போதும் ஓயாது சுற்றிக்கொண்டே இருக்கும். சேலையுடன் நெற்றி உச்சியில் குங்கும பெண்கள், தாவணிப் போட்ட அழகு பதுமைகள், வேட்டி சட்டை காளைகள் என எங்கும் மாக்கிழவன் கோவில் களைக்கட்டும்.

அவரவரும் மாடுகளை ஒரு ஓரமாகக் கட்டி வைக்கோல் போட்டனர். தங்களுடைய மாட்டு வண்டியோடு கூடாரம் அமைத்துக் கொண்டனர். அப்பெண்கள் மூன்று கற்களைச் சரியாக வைத்து, பொறுக்கி வந்த சுள்ளிகளை இட்டு பொங்கலிட்டனர். முதல் நாளைய இரவு நாடகத்தில் மாக்கிழவன் பிறப்பைக் காட்சிப்படுத்தினார்கள்.

“சரவணா… நீ அம்மா பொறந்த ஊருக்குப் போ.. ரொம்ப நல்லாயிருக்கும்” என்றார் அப்பா.

“எனக்கு போகனுமுன்னு தோணல. எல்லாம் இந்த அம்மாவுக்காகத்தான்” என்றான் சரவணன்.

“எனக்காக எல்லாம் நீ வர வேண்டாம். இந்த இருபத்தி அஞ்சு வருசமா உன்னை உங்க தாத்தா பாட்டிக்கிட்ட கூட்டிட்டு போகாம இருந்திட்டன். ஏதோ நான் செஞ்ச பாவம். எங்க மலை கிராமத்துக்கு பாரஸ்ட் ஆபிசரா வந்த உங்க அப்பாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க வீட்டுல பயங்கர எதிர்ப்பு. அப்ப ஓடி வந்தவதான். இன்னும் நான் அங்க போகவே இல்ல. எல்லாம் மறந்து இப்பத்தான் மாக்கிழவன் விழாவுக்கு நம்மளை அழைச்சிருக்காங்க. நீ வரலன்னா கூட பரவாயில்ல நான் கண்டிப்பா போகத்தான் போறேன்” என்றாள் அன்னம்.

“அம்மா கோவிச்சுக்காத.. நான் கண்டிப்பா வறேன். அப்பாவும் நம்மோடவே வரட்டுமே” என்றான் சரவணன்.

“நீயும் அம்மாவும் முன்னால போங்க. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. நான் அத முடிச்சிட்டு கடைசி நாளுக்கு வந்துடுறேன்” என்றார் அப்பா கணேசன்.

நான்காம் நாளுக்கு அன்னமும் சரவணனும் மலைகிராமத்திற்குப் போய்ச்சேர்ந்தார்கள். தாத்தா அம்மாசி கிழவனும் பாட்டி பூவாயியும் மகளையும் பேரனையும் உச்சி முகர்ந்தார்கள். அம்மாசி கிழவனுக்கு தலைகால் புரியவில்லை. மகளும் பேரனும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். ஒற்றை மகளை இழந்து நிற்கிறோமே என்ற தவிப்பில் நிறைய நாள் அழுததுண்டு அம்மாசி கிழவன். பேரனை தன்னுடனே வைத்துக்கொண்டார். தனக்கு பிறகு இவன்தான் அம்மாசி கிழவனின் வாரிசு என்று ஊருக்குள் சொல்லிக்கொண்டார். நான்காம் நாள் இரவு நாடகத்தில் மாக்கிழவனின் பராக்கிரமக் காட்சியினையும் ஊர்க்காவல் காக்கும் திறனையும் தத்ருபமாக நடித்துக் கொண்டிருந்தனர். அன்றைய தினம் சரவணன் நாடகத்தை தன்னை மறந்த நிலையில் பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் வயிறு முட்டவே,

“அம்மா… எனக்கு ரெஸ்ட் ரூம் போகனும் போல இருக்கு… கூட வறீயா” என்றான் சரவணன். மகனுக்குத் துணையா அம்மா எழுந்தாள். கோவிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளிய படி கோவிலைச் சார்ந்த ஆலமரம். அடுத்தபடியே நெல் வயல் ஒன்று இருந்தது.

“சரவணா… மரத்துக்குப் பின்னால வயலு ஓரமா போயி இருந்துட்டு வாடா” என்றாள் அம்மா

அந்தக் கும்மிருட்டில் ஏதோ ஒரு தடவலுடன் மரத்துக்குப் பின்னால் சென்றான். வயிற்றில் இருப்பதை கொஞ்சகொஞ்சமாய் இறக்கி வைத்தான். அப்பொழுதுதான் தனக்கு முன்னால் இருக்கும் வயல்வெளியை உற்றுக் கவனித்தான். சின்னசின்ன விட்டில் பூச்சிகளின் சத்தத்துடன் நீண்டதாய் கறுப்பாய் இருட்டாய் ஒரே மாதிரியாய் தெரிந்தது. அந்நேரத்தில் கறுத்த உருவத்தில் வாயில் கொல்லியை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு உருவம் புகைத்துக் கொண்டிருந்தது. சரவணனின் மனம் திடும் என்று பதைத்தது. கண்ணை இறுக்கி மூடி மீண்டும் அதே திசையை நோக்கிப் பார்த்தான். அங்கு முன்பு பார்த்தது போலவே எதுவும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது. அம்மாவிடம் ஒரே ஓட்டமாய் ஓடினான். எதுவும் பேசாமல் நாடகத்தைப் பார்த்தான். இத்தனை வயசாயிடுச்சி பயந்ததை போயி அம்மாவிடம் சொன்னால் அவர்கள் எண்ண நினைப்பார்கள் என்று எண்ணிக்கொண்டான்.

கட்டிலில் படுத்தவுடன் தூங்கிப்போய் விட்டான் சரவணன். கொஞ்ச நேரத்தில் அவனுடைய கால்களும் கைகளும் கட்டப்பட்டன. “காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” என்று பலம் கொண்ட மட்டும் கத்தினான். அவன் கத்துவது யார் காதுக்கும் கேட்கவில்லை. யாரோ அவன் கழுத்திலே கயிறு கட்டி இழுத்துக்கொண்டு போனார்கள். யாருமில்லாத இடம். சத்தமில்லாத பகுதி. கும்மிருட்டு. நடு யாமத்தைத் தாண்டிய சூழல். தான் எங்கே இருக்கிறோம் என்று அறிந்து கொள்ள முடியாமல் தவித்தான் சரவணன். மண்ணில் நுழைந்து வேரில் புகுந்து பல குறுத்தைக் கடந்து சென்றான். அவ்விடம் குறுகிய பாதையாய் நீளமாய் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை இருட்டாகவே தென்பட்டது. மூக்கின் நுனி பலவண்ண வாசனையை நுகர்ந்தது. நன்கு நீண்டு வளர்ந்து இருக்கக்கூடிய மூங்கிலின் நடுவே உள்ள ஓட்டையினுள்ளே தான் இருக்கின்றோம் என உணர்ந்தான்.

“என்ன மாக்கிழவோரே… எப்படி இருக்கீர்?” – குரல் மட்டும் கேட்டது.

“யாரது? உனக்கு என்ன வேண்டும்? என்னை எதற்கு இங்கு தூக்கிக்கொண்டு வந்தாய்? திக்கிதிக்கி பேசினான் சரவணன்.

“உனக்கும் எனக்கும் பழையக்கணக்கு ஒன்று உள்ளது. அதை தீர்த்துவிட்டு போகலாமென்று வந்தேன்” – மீண்டும் அதே குரல்.

“எனக்கு பயமா இருக்கு! என்ன விட்டுறு!” என்று தலையைத் திருப்பி கண்கள் சுழற்றியபடியே பார்த்தான். திடிரென்று நெருப்பு குழம்பாய் கோரப்பற்கள் தொங்க அவ்வாயில் இருந்த ஒழுகிய எச்சிலுடன் அவன் கண்ணுக்குள் வந்து சென்றது அந்தக் கொல்லிவாய்ப் பிசாசு.

“அம்மா… என்று கத்திக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்தான் சரவணன். பக்கத்தில் படுந்திருந்தவர்கள் அனைவரும் என்னுமோ ஏதோவென்று பதறிப்போனார்கள். சரவணனின் முகமெல்லாம் வியர்த்து இருந்தது.

“என்னப்பா கெட்ட கெனவா? என்றார் அம்மாசி கிழவன்

“ஆமாம் தாத்தா!” என்றான். மகனின் முகத்தை நன்றாகத் துடைத்து விட்டாள் அம்மா அன்னம். பாட்டி கொடுத்த தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் உறங்கச்சென்றான். அனைவருக்கும் நல்ல தூக்கம். எப்படி புரண்டு படுத்தாலும் அந்தக் கொல்லிவாய்ப்பிசாசின் உருவம் அவனின் கண்முன் அடிக்கடி வந்து போனது. எதைஎதையோ நினைத்து மறக்க முயற்சி செய்தான். ஆனால் அந்தக் கோரப்பற்களுடைய நெருப்பை விழுங்கிய பிசாசின் நினைப்பு அடிக்கடி கண் முன்னெ வந்து சென்றது. இரவில் தான் கண்ட கனவைப்பற்றி அம்மாவிடம் கூறினான். குறிப்பாக அந்தப் பேய் தன்னை மாக்கிழவன் என்று அழைத்ததைப் பற்றிக் கூறினான்.

“ஒன்னுமில்லப்பா… இன்னிக்கு பூரா கோவிலை சுத்துனது. மாக்கிழவன் சாமியின் நாடகம் பார்த்தது. இதெல்லாம் நெனச்சிட்டுப் படுத்திருப்ப அதான்! என்றாள்.

சரவணனின் மனசுக்கு அம்மாவின் பதில் ஏதோ தன்னை சமாதானப்படுத்துவதாகவே இருந்தது. தாத்தாவிடம் கேட்க எண்ணினான். தாத்தாவை தேடினான். அவர்கள் வீட்டுக் களத்துமேட்டு ஓரத்தில் செங்குத்தான கல் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. அந்தக்கல்லில் தன்னுடைய உச்சந்தலை வைத்து அழுது கொண்டிருந்தார் அம்மாசி கிழவன்.

“தாத்தா இங்க என்ன பன்றீங்க… உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கனும்” என்றான் சரவணன். பேரனின் குரலைக் கேட்டவுடன் கண்களைத் துடைத்துக்கொண்டு,

“என்னப்பா கேட்கனும். கேளு?” என்றார்.

“மாக்கிழவோன் கோவில பத்தி தெரிஞ்சுக்கனும்” என்றான். அம்மாசி கிழவன் கொஞ்சம் நடுங்கிப் போனார். இக்கோடிமலையில் மாக்கிழவோன் என்ற உண்மைப்பெயர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று அனைவரும் மருவிய பெயராய் மாக்கிழவன் என்றே அழைத்து வந்தனர். பேரனுக்கு மாக்கிழவோன் என்று எப்படி தெரிந்தது. மனம் குழம்பினார். அவரின் உதடுகள் வரலாற்றைச் சொல்ல தொடங்கியது.

“ஒரு காலத்துல இந்த மலைகள் எல்லாம் ரொம்ப வளமா இருந்துச்சி. அங்கொன்னு இங்கொன்னுமா குடிசைகள் இருந்தன. கொஞ்ச நாளைக்கு அப்புறம் புலி சிங்கம் கரடி போன்ற விலங்குகள் பயத்துனால ஒரே இடத்துல குடிசைகள் அமைச்சி வாழ ஆரமிச்சாங்க. அவுங்க அவுங்களுக்கும் தனியா இடம் காடு மாடுகள் ஆடுகள் என வைச்சிருந்தாங்க. ஒரு வீடு தவறாம நாயும் எப்பவும் அவுங்க கூடயே இருக்கும். எங்காளுங்க எங்க போனாலும் கூடவே வரும் போவும். எங்களுக்கு ஒரு பாதுகாப்புன்னா அது வேட்டை நாய்தான். நான் சின்ன வயசா இருக்கும்போது எங்க தாத்தா என்கிட்ட சொல்லுவாரு” என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில் இருந்த மாமர கிளையில் கையை ஊன்றியபடி எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் அம்மாசி கிழவன்.

“என்ன தாத்தா? அப்புறம் என்னாச்சி? உங்க தாத்தா இன்னும் என்னவெல்லாம் சொன்னாரு? சொல்லுங்க” என்றான் சரவணன்.

“காலமாற்றம். சூழ்நிலை மாற்றம். மனிதர்களும் மாறித்தான ஆகவேண்டும். அப்படித்தான் எங்க மனிதர்களும் மாறிப்போனார்கள். அந்தச் சமயத்துல மழையே இல்லாம போச்சு. எங்கும் பசி பட்டினி பஞ்சம். பசிக்காகச் சண்டை போட்டி பொறாமை ஏற்பட்டுச்சி. ஒருத்தர் ஒருத்தர் அடிச்சிக்கிட்டு செத்தும் போனாங்க. மலையில இருக்குற மரமெல்லாம் எரிஞ்சு சாம்பலாச்சு. அப்பத்தான் இந்த மலைக்கு எங்கிருந்தோ கடவுள் மாதிரி ஒருத்தர் வந்தார். அவரு யாருன்னு யாருக்கும் தெரியாது! பெத்தபுள்ளயே அப்பன வெட்ட அருவாவ எடுத்துட்டு ஓடுனான். எதிர்ல வந்த அந்தக் கட்டுடம்பு பெரியவர் அவனுக்கு முன்னால போயி நின்னு அப்பிடியே பார்த்தார்”

“நல்லதை செய்! நன்மையே நடக்கும்!!” என்றார் அந்த பெரியவர்.

அவன் என்ன நினைச்சானோ தெரியவில்லை. கையில் இருந்த அருவாவைப் போட்டுவிட்டு பின்னால் நகர ஆரமித்தான். அந்நேரம் அவனின் உச்சந்தலையில் பெரியதாய் உருண்டையாய் மழைக்கட்டி விழுந்து தெறித்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் அன்னாந்து வானத்தையே பார்த்தனர். பகை மன்னனை அழிக்க வரும் குதிரைப்படைகளைப் போல கூட்டாகச் சொட்டென்று பூமியில் வந்து விழுந்தது மழைத்துளி. பயங்கர மழை. கிட்டதட்ட நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. ஆனால் யாருமே அங்கிருந்து நகரவேயில்லை. வெளியில் இருந்து வந்தவரும் அப்படியே நின்றிருந்தார். அம்மனிதர்களின் தண்ணீர்ப் பார்க்காத அவ்வுடம்பில் இன்னும் கொஞ்ச நேரம் நனைய விட்டிருந்தாலும் நனைந்து இருப்பார்கள். அவ்வளவு தாகம் இருந்தது.

அவர் வந்த பிறகு தேங்கிப்போன வளங்கள் மீண்டும் எங்களுக்குக் கிடைத்தது. இக்கோடிமலை வாழ்மக்களுக்கு ஏதாவது பிரச்சனையின்னா உடனே சரியான தீர்ப்பு வழங்கிடுவார். நல்ல பச்சிலை மருத்துவர். அதிகம் பேசாதவர். இனிமையாகச் சொல்ல வேண்டியதை மட்டும் பேசுவார். அவரின் பெயர் எங்க யாருக்குமே தெரியாது. அவரின் வயசு முதிர்ச்சி பார்வையின்னு உசத்தியா காமிச்சது. நாங்க எல்லோரும் அவரை கிழவோன் (தலைவன்) என்று அழைக்க ஆரமித்தோம்.

ஒருமுறை எங்கள் மலையைச் சுற்றிலும் புலிகள் ஆக்கிரமித்துக் கொண்டது. போவோர் வருவோர்களை அடித்துக் கொன்றது. விடியற்காலை நேரங்களில் பசுக்களையும் ஆடுகளையும் கொன்று தின்றது அந்தக் கொடூர புலி. எங்கள் முன்னோர்கள் எல்லாம் பயந்து போய் கதவை அடைத்து விட்டுக்குள்ளே இருந்தனர். அன்று காலை ஊரின் நடுவே அனைத்துப் புலிகளும் கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுருண்டு கிடந்தது. பக்கத்தில் இளவட்டக்கல். அக்கல்லின் மேல் அமர்ந்திருந்தார் கிழவோன். இடுப்புக்குக் கீழே வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். வேட்டியை இரண்டு கால்களுக்கு இடையே நன்கு சுற்றி இறுகக்கட்டியிருந்தார். கறுத்த மீசை. மேலாடை இல்லாமல் தலையில் தலைப்பாகை போன்று துண்டால் கட்டியிருந்தார். நுனாக்கட்டையைப் போன்ற வழுவழுப்பான உடம்பு. வயிரம் பாய்ந்தது போல் முறுக்கேறியிருந்தது. ஆதிகால மனிதனின் முகம். ஈரம் கொண்ட கண்கள். பசையாய் ஒட்டிக்கொள்கிற தேகம். ஏதும் அறியாதவர் போல் கற்களைக் கொண்டு மூங்கில் குச்சியைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார். கால்கள் கட்டப்பட்டிருந்த புலிக்கூட்டத்தை சிலர் நடு காட்டுக்குள் உள்ளே போய் விட்டார்கள். அக்கிழவோரைப் பார்த்து அங்கிருந்தவர்கள் மூக்கின் மேல் விரல் வைத்தனர். அவர் கிழவோன் இல்லை மாக்கிழவோன் என்றனர்.

அன்றிலிருந்து மாக்கிழவோன்தான் கோடிமலை கிராமங்களுக்குப் பாதுகாவலர் ஆனார். எப்போதும் கூர்மையான மூங்கில் குச்சியைக் கையிலே வைத்திருப்பார். நடந்துகொண்டே இருப்பார். ஒரு களவாணிப் பைய கூட எங்க மலை பக்கத்துல நெருங்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பு. அன்றைய தினம் என்னுடைய பாட்டனார், தூக்குச் சட்டி நிறைய ஆட்டுக்கறிக்குழம்பு மாக்கிழவோனுக்காகக் கொடுத்தனுப்பினார். காட்டுக்குள்ளே கிணறு. கிணறு நிறைய தண்ணீர். நீர்க்கிணறு பக்கத்தில் பனையோலை குடிசை. குடிசையின் ஓரத்தில் அலைமாறி, கீழே நீண்டதொரு அழகாய் கயிற்றுக்கட்டில். அலைமாறி வாரையில் தூக்குச் சட்டியை மாட்டியிருந்தார் கிழவோன். சுடச்சுட அப்போதே சாப்பிட்டுவிட வேண்டும் என எண்ணினார். ஆனால் காவல் காத்தலை முடித்து யாமத்தில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தார். கையில் மூங்கில் குச்சியை எடுத்தபடியே மலைகிராமங்களுக்குள் நுள்ளே நுழைந்தார்.

மலை கிராமங்களுக்குள் வேகமாக நடையைக் கூட்டினார். முடிந்தவரை சீக்கிரம் குடிசைக்குப் போக வேண்டும். ஆட்டுக்கறியின் ருசி அவரை வேகமாக நடக்க வைத்தது. ஆனாலும் யாமத்தைத் தாண்டிதான் கிழவோனால் வர முடிந்தது. குடிசைக்குள் உள்ளே வந்தவர் நேராகத் தூக்குச்சட்டியை எடுத்துக் கறித்துண்டை வாயிலே போட்டார். உப்புசப்பு இன்றி சுவையே இல்லாமல் இருந்தது. நன்றாகக் கலக்கி மீண்டும் சாப்பிட்டுப் பார்த்தார். அப்போதும் கொஞ்சம் கூட சுவையே அற்று இருந்தது. தூக்குச்சட்டியில் இருக்கும் கறியை வெளியே கொட்டிவிட்டு தண்ணீர் ஊற்றி வைத்தார். ஒருசில மாதங்களுக்குப் பிறகு அமாவாசைக்கு முதல் ராத்திரி. எங்கும் ஒரே இருட்டு தோற்றம். அதே மாதிரி இன்னொரு வீட்டிலிருந்து தூக்குச்சட்டியில் கறிக்குழம்பு வந்தது. தூக்குச்சட்டியை அலமாரியில் மாட்டிவிட்டு காவலுக்காக நடக்க ஆரமித்தார். மாக்கிழவோனின் மனம் அன்றைய சம்பவத்தை நினைவுப் படுத்தியது. அவருடைய கால்கள் பின்னோக்கி இழுத்தன. வேகமாக மீண்டும் தன் குடிசை பக்கம் ஓடினார். குடிசையின் வாசலில் கால்கள் இரண்டையும் நீட்டிப்போட்டுக்கொண்டு மடியில் வைத்திருந்த தூக்குச்சட்டியில் நாக்கை உள்ளே விட்டு நக்கி சுவைத்துக் கொண்டிருந்தது கொல்லிவாய்பிசாசு.

“ஏ… பிசாசே! ஓடிவிடு.. இல்லையென்றால் உன்னை உரு தெரியாமல் அழித்து விடுவேன்” – மாக்கிழவோன்

பலமாகச் சிரித்துவிட்டு, ”என்னை என்ன காட்டில் வாழும் புலி என்று நினைத்துக் கொண்டாயோ?” ஏளனச் சிரிப்பு அந்தப் பிசாசுக்கு. மாக்கிழவோனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கையிலிருந்த மூங்கிலை கொல்லிவாய் பிசாசு மீது வேகமாக எறிந்தார். தலையில் அடிப்பட்டு சுருண்டு விழுந்தது. பிசாசு கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. வேகமாக ஓடிய மாக்கிழவோன் மீண்டும் மூங்கில் குச்சியை எடுத்து தலையில் பலம் வந்த மட்டும் அடிக்கத் தொடங்கினார். அவர் அடித்த அடியில் நிலைகுழைந்து போனது கொல்லிவாய் பிசாசு. இருட்டில் அங்கே இங்கே ஓடி மாக்கிழவோனை கொஞ்சம் அலைக்கழித்தது. யாமம் தாண்டிய நிலையிலும் சண்டை தொடர்ந்தது. இருவருக்குமே உடம்பில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டன. காட்டுத்தனமான சண்டை. பிசாசுக்கு வெற்றியைக் கிடைக்கவிடாமல் விடியும்வரை போராடினார் மாக்கிழவோன். பொழுது விடிந்தது.

“மாக்கிழவோரே… அடுத்த இரவுக்காகக் காத்திருக்கிறேன். உன்னை கொல்லாம விட மாட்டேன். நான் திரும்பி வருவேன்” – என்றது கொல்லிவாய்ப்பிசாசு.

“உனக்காக நான் எப்போதும் இங்கேயே காத்திருப்பேன். வா… உன்னால் முடிந்தால் வந்து கொல்லு.. உன்னை அழிச்சு இரத்தத்தை இந்தப் பூமியில தெளிச்சி காடடுறேன் பாரு” என்றார் மாக்கிழவோன்.

பொழுது விடிந்தது. எம் பாட்டனார் வீட்டின் முன்புற களத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். எம் பாட்டியோ வாசலில் சாணியை கரைத்துத் தெளித்துக்கொண்டிருந்தார். அப்போது எம் பாட்டிதான் முதலில் மாக்கிழவோரை கண்டார். உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் இரத்த வெள்ளமாய் எங்கள் களம் நோக்கி வந்து கொண்டிருந்தாராம்.

“என்னங்க… என்னங்க… சீக்கிரம் எழுந்திருங்க. மாக்கிழவோன் ஐயா பாருங்க துணியில்லாம இரத்தத்தோட வராரு” ன்னு பாட்டனாரை பாட்டி எழுப்பியிருக்கா. அவரும் தடாபுடான்னு எழுந்திருச்சி, ஓடிப்போயி தான் போத்தியிருந்த போர்வையை மாக்கிழவோன் உடம்புல போட்டு மறைச்சிருக்காரு. பாட்டனார் மடியிலயே சாய்ஞ்சி படுத்திட்டார். எதுவும் பேசல. தன்னை இழந்து காணப்பட்டார். அதற்குள் பாட்டி சொம்புல தண்ணீர் எடுத்து வந்து மாக்கிழவோன் வாயில ஊத்தினாங்க. இரண்டு முழங்கு கூட இறங்கியிருக்காது, “நான் மீண்டும் பிறப்பேன். கொல்லிவாய்ப்பிசாசைக் கொல்லுவேன்” என்று சொல்லிக்கொண்டே என் பாட்டியின் கண்களைப் பார்த்தவாறே உயிரை விட்டுள்ளார்.

அம்மாசி கிழவனின் கண்கள் கலங்கியிருந்தது. பேரன் சரவணின் கையை இறுகப்பிடித்துக்கொண்டார். மாக்கிழவோன் மீண்டும் பிறக்க வேண்டும் என்று உரக்கக்கத்தினார். அப்போது சரவணனின் தோள்கள் தெனவெடுத்து நின்றன.

மாக்கிழவன் கோவில் ஒன்பதாம் நாள் திருவிழா களைக்கட்டியது. அடுத்த நாள் பூரண அமாவாசை. அங்கே மாக்கிழவர் சிலை நன்றாக அலங்கரிக்கப்பட்டு கோடிமலை முழுதும் ஏழு குதிரையில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படுகிறார். விடியற்காலைதான் சாமி கோயிலுக்குள் வரும். அதற்குள் இரவு நாடகம் முடிக்கப்பட வேண்டும். கொல்லிவாய்பிசாசும் கொல்லப்பட வேண்டும். அதன்பிறகு மாக்கிழவர் சாமிக்கு உற்சவ பூஜை நடைபெறும். அதன்பிறகு மழை வரும். விழாவும் நிறைவுபெறும்.

தன் வீட்டின் முன் பூஜைக்காக நிறுத்தப்பட்ட, நன்றாய் அலங்கரிக்கப்பட்டு கோடிமலை முழுதும் ஏழு குதிரையில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படும் மாக்கிழவரின் சிலையை அம்மாசி கிழவன் உற்று நோக்கினார். சிலையின் முகம் சரவணன் வேடமிட்டு சிலையாய் அமர்ந்திருப்பது போன்று இருந்தது. அது சிலையல்ல. என் பேரன் சரவணனும் இல்ல. எம் கோடிமலை கடவுள் மாக்கிழவோன்தான் என்று புரிந்து கொண்டார். கூடியிருந்த மக்கள் மா… கிழவரே… என்று உரக்கக்கத்தினர். அன்று விடியற்காலையிலேயே மழை பொழந்து கட்டியது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மாக்கிழவன் கோவில்

  1. ஆமாம் ஜெய்.. இதற்கு மேல் கதையை நகர்த்தினால் வாசகர்களுக்கு சலிப்பு உண்டாகிவிடும். அதனால் முடிவின் உணர்வை வாசகர்களின் மனநிலைக்கு விட்டுவிட்டேன். கதையின் முடிவை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *