Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மழை

 

சோவென மழை கொட்டக் கூடாது. மெல்லிய சிணுங்கலாய் விழும் மழை. நோகாமல் இலைகளையும், பூக்களையும் வருடினாற் போல மழை. இது அவளுக்குப் பிடிக்கும். உள்ளத்துத் துயரங்களை வாரியடித்துக் கழுவுகின்ற, ஊற்றாய்ச் சொரிகின்ற மழை யென்றாலும் அதிலும் ஒரு தாளலயம் இருக்கத்தான் செய்கிறது. இதெல்லாம் அவளுக்குப் புரியாது. புரிய மறுக்கின்ற பிடிவாதத்தனமொன்றும் அவளிடம் இல்லை. இருந்தாலும் தூவானமாய் விழுகின்ற, அந்தத் தூவானத்தில் நனைந்தால் தடிமன் வருமென்று தெரிந்தாலும் கூட, அந்தத் தூவான மழையில் தான் பிரியம் அதிகம். மழை எப்போதும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. அதிலும் இந்தச் சில வருடங்களாக, நினைத்த மாத்திரத்தே வந்து, நினைத்த மாத்திரத்தே போவதற்கு மழை வெகு அழகாகக் கற்றிருக்கிறது.

“கலி முத்திப் போச்சு…” பாட்டி காய வைத்த புழுக்கொடியல்களையும், ஊறுகாய் வகையறாக்களையும் பாயோடு வாரிக் கொட்டிலுக்கு இழுத்துப் போகையில் இப்படித்தான் முணுமுணுத்திருந்தாள்.

ஏதோ ஒரு அரசனின் காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்ததாம். பகலில் நெல் காய்வதற்கு இடைஞ்சல் கொடுக்காமல் மழை இரவிலேயே பெய்ததாம். யார்…? எல்லாள மன்னனின் ஆட்சிக் காலமோ…? ஞாபகமில்லை. இந்த மழை பரிசுத்தமான மழை. சின்ன வயதில் நின்றிருக்கிறாள் இந்த மழையில். மழை குளிரைப பரிசளிக்க…மழைக்குள் திணறிச் சந்தோஷித்து…

பிறதொரு நாள், மழை உலுக்கிப் போட்டது அவளை.

மழை விழுத்தித் தள்ளியது அவளை.

மழை நெருக்கிப் பிசைந்தது.

மழை ஒதுக்கி விரட்டியது இவளை.

ஓ… எல்லாம் அந்தப் பொல்லாத பொட்டல் காட்டு ஓயாத கரிசல் மழை… மூசிப்பொழிந்த மழை. வானத்தில் இருந்த கழிவுகளையொல்லாம் கழுவி வந்து அவள் மேல் வார்த்தது போல… எந்த நாளில் அது நிகழ்ந்தது…? எந்த நாளில் இவளுக்கு இந்தப் பிரமை தட்டத் தொடங்கிற்று. உகுத்த கண்ணீரைக் கொஞ்சம், கொஞ்சமாய்க் கொட்டிய அவளது வானம் சேற்றை வாரியடிக்கத் தொடங்கியது எப்போது…? எப்போதோ… அவளறியாள்.அவள் காலவரையறையில் எல்லாமே உதிர்ந்து கொண்டிருக்கின்ற சாந்துகளாய்ப் பட்டனவேயன்றி, உதிரும் சாந்துகளின் எண்கணக்கொன்றும் அவள் அறியாள்.

இவள் இந்த பூமிக்கு வந்த பாவப் பிறப்பு. பிறக்கின்ற போதும் இந்த மழை பெய்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவள் பிறந்ததுஒரு மார்கழி மாதத்து மாலைப் பொழுது. பிறந்து இரு தினங்கள் கழியுமுதலே விதி இவளது பெற்றோர்களை கொடிய ஷெல்லாகி வந்து பறித்துப் போனது. தப்பிப் பிழைத்த சிறு மழலையைப் பொறுப்பாய்ப் பேண வேண்டிய உலகம் பழிச்சொல் பேசிற்று. ‘தாய் தகப்பனைத் தின்னி’ என்று அடித்துத்துரத்தி அவளை அணுகவொட்டாமல் தடுத்தது. இவளுடையபெயரைவிட அதிகமாய் உலா வந்தது. ‘தாய் தகப்பனைத் தின்னி’

பாட்டிக்காரி கருணையின் வடிவம். கையை நீட்டிய மழலையைப் பரிவாய்த் தாங்கிக் கொண்டாள். தூணானாள், நீண்ட நெடும் நாட்களுக்கு. அதாவது, பால்யங் கடந்து பருவமாகி, பள்ளிப் படிப்பினை இலக்கெனக் கொண்டு அவள் தன் காலில் நிற்கும் வரை. பாட்டிக்கு எழுபதாயிற்று வயது. எச்சில் துப்ப ஒரு பேணி கட்டிலுக்கு அருகில். எழும்பிப் போக ஒரு பேர்த்தி தலைமாட்டில் எப்போதும்… என்பதாய் கட்டிலோடு முடங்கிற்று வாழ்வு. இவள் மழை பார்ப்பாள். வான் ரசிப்பாள், பாட்டிக்கு பணி புரிந்து ஓயும் வேளையில்.

ஏக்கமற்றது வாழ்வு…

இனிமையானது இரவு…

ராகம் போன்றது மழை உதிர்வு…

எனத் தனக்குள் ரசித்த வாழ்விற்கு வர்ணங்கள் பூசிக்கொண்டாள். பாட்டியைப் பார்ப்பது கடமையின் இனிமையைத் தெளிவாக்கிற்று அவளுக்கு. உள்ளுர ஒரு பயம். பாட்டிக்கு ஏதேனும் ஆனால்… ஆகாது என்று உள்ளே இடித்துரைக்கும் ஒரு குரல். மழைக்கு ஏன் பயப்பட வேண்டும். மழையை வருடினால் சங்கீதமாகும். மழையை அதட்டினால். சச்சரவு மிகும். அவள் மழையோடு சந்தோஷித்திருக்கவே விரும்பினாள்.பாட்டி அதட்டுகின்ற போதிலும்கூட… பாட்டிக்கு என்ன தெரியும்…? எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டு. ஆனால் அதையும் மீறி மழைக்கு ஒதுங்குவதாவது…? ஏற்கனவே ஊரிலிருந்து சற்றுத் தள்ளி வெறும் வளவுக்குள்தான் வீடு. சுற்றி வரப் பலாமரத்தோட்டம் என்று சொல்லலாம். பாட்டி சுற்றிச் சுற்றிப் பலாவிலை குத்தும்போது வெளுத்துக் கிடக்கும் மண்வெளி பாட்டி படுத்த பிற்பாடு இலைகளால் நிரம்பியது. இலைகள் சருகுகளாகி அதன் மீது இலை வீழ்ந்து படைபடையாய் இலைகள் நிறைந்து வெண்மணற் பரப்பை மறைத்துக் கிடந்தது. இந்தப் பலாவிலைகளும் ஒரு மழைப் பொழிவைக் கண்டன. துளித்துளியாய் வடிந்து, உலர்ந்து ,ஒரு காலத்தில் மழையில் நனைந்தது மறந்து செத்துக் கிடக்கும் இலைகள். ஒரு நாள் அந்தச் சருகுகள் சப்தித்தன. பூட்ஸ் கால்கள் மிதித்ததில் நசுங்கிப் பிய்ந்தன. மேகமூட்டம் தோய்ந்த மழை சில இலைகளை விழுத்திற்று.

அவள் மழையோடு சல்லாபிப்பது வழக்கம் தான். அவளுக்கு அந்தச் சருகோசைகள் மகிழ்ச்சியைத் தரவில்லை. இளம் மழை இனிமையானது. மெல்ல வருடிப் பிரிந்து போகும் மழை. சுகம் விசாரித்துப் போகும் மழை. குளிரால் நெரித்துக் கொல்ல வராமல் குறும்போடு எதிரே வரும் மழை. இவற்றைத் தான் இவள் எதிர்பார்த்தாள். மழைக்கு அது புரியவில்லை. கிழக்கே ஒரு மின்னல் கீற்று வெட்டி மறைந்தது. பலத்த இடி முழக்கம் ஆயத்தமாவதை அவள் உணரவாரம்பித்த கணத்தில் வெயிலுக்குப் போட்டிருந்த புளுக்கொடியல் பாயினைக் கொட்டிலுக்குள் இழுக்க ஆரம்பித்தாள். வீட்டுக்குப் பின்னால் அந்தப் பலாமரத் தோட்டத்திற்கிடையே குவிந்து கிடந்த கரிய மேகங்கள் மரங்களுக்கிடையே பரவுவதை உணர்ந்தாள்;

அவளுக்குப் பிடிப்பதேயில்லை, இப்படி யாருடைய உணர்ச்சியையும் பெரிதுபடுத்தாமல் எல்லா இடங்களிலும் அத்துமீறி அடித்தூற்றும் இந்த மழையை. மழை யாரையும் கேட்டுக் கொண்டு வருவதில்லை. ஆனால் பெரும்பாலும், எல்லாருமே மழைக்கு ஒதுங்கி விடுவார்கள். சின்ன மழைத்தூறல சற்றே யாரையேனும் ஈர்த்தால் சரியே யொழிய யாருமே மழையோடு சரசமாட விரும்புவதில்லை.

இந்த மழைக்கு அவள் ஒதுங்கினாள். சுற்றிலும் வரிந்து அடைக்கப்பட்ட கொட்டிலின் தாழ்வாரத்தில் ஒடுங்கியபோது, தூவானம் மேனியிற்பட்டு சிலிர்த்தது.அந்தத் தூவானம கூட அவளுக்கு அப்போது பிடிக்காமற் போனது. மழையின் கண்ணிலே படாமல், மழையின் கோரப்பசிக்கு இரையாகாமல் தப்பி விட வேண்டுமே. ஒதுங்கி, ஒதுங்கி கொட்டிலில் பதுங்கினாள். மேலே சடசடவென்ற மழைத் துளிகள் அகோரமாய் சப்தித்தன. பழுத்து விழுந்த பலா விலைகள் தடித்த பூட்ஸ்களுக்கிடையில் நசுங்கின. மழை பயங்கரமாய்க் கொட்ட ஆரம்பித்தது.

“ஐயோ வேண்டாம்.” அவள் தொண்டை வரை தவித்த வார்த்தைகளை மழை பாதியிலேயே இடை வெட்டியது. கண்ணைக் கூச வைத்த மின்னலோடு இன்னும் இன்னும் அதிகமாய் கருமுகில்கள் திரள்வது தெரிந்தது. இவள் பதுங்கினாள். ஒடுங்கினாள். விடவில்லை மழை. கூரை பிய்த்துப் பாய்ந்து வந்து முகத்தில் மோதிற்று. சேற்றை வாரிப் பூசிற்று மழை. தடித்த பருமனான பெருங்கழிகளாகி அவள் மீது விழுந்து உதைத்தது. மழைக்குள் ஈரலித்த புழுக்கொடியல்கள் சிதறுண்டு நிலத்தில் புரண்டன.

இழுத்துக் கொண்டோடிற்று மழை. அந்த சின்னக் கொட்டிலுக்குள் புழுக்கொடியல் பாய்களின் அருவல் நொருவலான கூர் விளிம்புகளுடு தா க்குப் பிடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டோடிற்று மழை. வாய்க்குள் துணியடைந்து கைகளைப் பின்னால் கட்டி பெரிய கருமேகப் பூதங்கள் அவளை இழுத்துக் கொண்டோடின.

பலாமரச் சோலை பெரிதாய் விரிந்து கிடந்தது. பலாவிலைகளுடே எட்டிப்பார்க்க முனைந்த நிலவைச் சின்னஞ் சிறு மேகங்கள் முட்டி மோதின. எங்கோ இடி இடிப்பது கேட்டது. ஆனால், அவளது நெஞ்சுக்குள் ஒலித்த இடி மௌனமாக உள்ளொடுங்கிற்று. பலாமரங்களுக்கிடையே அவளை விழுத்தி சதிராடிற்று மழை. பெரிய, பெரிய கரும்பூத மேகங்கள் திரள்களாக மோதி அவளை மிதித்துச் சிதைத்தன.

ஓன்று சொல்லிற்று.

“நீ நல்ல வடிவு…” இப்படிச் சொல்லிக்கொண்டே அந்த அழகை பிய்த்துப் போட்டது. கழுத்தில் அந்த அழகை உருவி மாலையாய்ப் போட்டுக்கொண்டே பேய்க்கூத்து ஆடிற்று.

இன்னொன்று அவளை உற்று உற்றுப் பார்த்தது. மிச்ச சொச்ச ஆடை உருவி விகாரமாய் பல்லிளித்தது.

இவள் கைகளைக் கட்டிற்று மழை…

இவள் குரல்வளை இறுக்கிற்று மழை…

இவள் மானம பறித்துக் கெக்கலித்தது மழை…

கால் உதற உதற, கண்கள் கெஞ்சக் கெஞ்ச, உடல் நடுங்க, நடுங்க மழைத்துளிகள் இவள் உடலை நெருக்கி மூச்சுத் திணற பேயாட்டம் ஆடின.

அவள் ஓய்ந்தாள்.

நசுங்க மறுத்த பலாவிலைகளின் மேலொரு பலாவிலையாய் அவளும் துடித்துக் கிடந்தாள்

மேகங்கள் விலகின.

கரிய பெரிய மேகங்கள், காமத்துளி ஊற்றி அவளைத் தின்றுவிட்ட திருப்தியோடு அப்பால் நகர்ந்தன.

எங்கிருந்தோ ஒரு காவோலை காற்றால் விசிறப்பட்டு, மழையால் எற்றப்பட்டு, அவள் மீது வந்து மோதியது.

மழையின் கரங்களால் கொடூரமாக்கப்பட்ட மேனியில், காவோலை குத்திக் கீறியது.

அவள் உணரவில்லை. ஓய்ந்திருந்தாள்.

நீண்ட இரவு நகர மறுத்தது பாட்டிக்கு.

பேத்தி வராத இரவு. மழை வருத்திய இரவு. சளி துப்பித் துப்பிப் படுத்திருந்தாள். இடையிடையே கரகரத்த தொனியோடு கத்திப் பார்த்தாள். நிலவு மூடுண்ட வேளை. மழை வலுத்திருந்தது. பாட்டி மயங்கிப் போனாள்.

அதிகாலை விழிப்பில் பேத்தியின் முகம் தேடின பாட்டியின் விழிகள்.

“எடியேய்… புளுக்கொடியல் எடுத்து வைச்சியே… ராத்திரி மழை கொட்டினாப்போலை…”

கொட்டன் எடுத்தூன்றி நடந்தாள். மெல்ல, மெல்ல… மழை ஊற்றிச் சிதைத்திருந்த ஈரச்சேற்று மண்ணில் கொட்டன் புதைந்தது. கொட்டிலில் சிதறிக் கிடக்கின்ற புளுக்கொடியல்கள்… உழக்கப்பட்டுக் கிடக்கின்ற சாணி மெழுகின தரை…

ஏதோ அசம்பாவிதமாய் உணர்ந்து, டக், டக்கென்று கொட்டன் ஊன்றி இலக்கில்லாமலே நடந்தாள்.

“எடியேய், என்ரை செல்லம் எங்கையடி போட்டாய்…” அடிநெஞ்சிலிருந்து அழுகை தெறிக்கும் குரலில் ஒரு பதைபதைப்பு. “இங்கையிருக்கிறனே பாட்டி…” எனும் வழக்கமான தேனான பதில் இல்லை. இல்லாத காற்றை உரச முயல்கின்ற காவோலைச் சரசரப்பு… வழக்கத்துக்கு மாறான தோற்றம். பலாத் தோட்டத்தில் காவோலை… பாட்டி பதறியடித்துக் காவோலையைத் தூக்கியவள் பரிதவித்துக் கத்துகிறாள்.

“பாவிகளே…”

சின்ன முனகல் இவளிடமிருந்து. சாகவில்லை இன்னும். சாகக் கிடந்த பாட்டி கைக்கட்ட விழ்கிறாள். வாய்க்குள் திணித்த துணிப் பந்தெடுத்து எறிகிறாள். வீட்டுக் கொடியில் கிடந்த நூல்சேலை எடுத்து வந்து பேத்தியைப் போர்த்தினாள். முகத்துக்குத் தண்ணீர் தெளித்து உயிர்ப்பித்தாள். இவள் மெல்லக் கண் திறந்தாள்.

“பாட்டி… ம… ழை… என்றாள்.

அவள் நடுங்கி நடுங்கிச் சொல்வது கேட்டுப் பாட்டி அழுதாள். கண்கள் கரைந்து வழியுமாப் போல் விக்கி விக்கி அழுதாள்.

“உந்த மழை நா… சமாப்… போக…”

மண் தூற்றி வானத்தை நோக்கி எறிந்தாள்;.

திடீரென்று காக்கை வலிப்பு வந்தாற்போல தலை தொங்க விறைத்துப் போனாள்.

அதற்குப் பிறகு இவளுக்கு இப்படித்தான். பிரமை பிடித்தது போலாயிற்று வாழ்வு. மழையைப் பார்த்தால் திட்டத் தோன்றும்.

போ… போ… கிட்ட வராதே… என்று கதவைப் பூட்டிக் கொண்டு, உள் நின்று கதறத் தோன்றும். ஆனாலும், மழை அடிக்கடி வருவதற்குத் தருணம் பார்த்தது. வீடு என்பது எதற்கு…? மழையிடம் இருந்து மீள்வதற்கு… அவள் கதறியபோது மீட்க மறுத்த அந்த வீடு இருந்தால் தான் என்ன? அதை இழந்தால்தான் என்ன…? அவள் வீட்டை விட்டு வெளியேறினாள். தெருக்களிலே திரிந்தாள். மண்ணை முகத்தினிலே பூசிக்கொண்டு பஸ் நிலையங்களிலே படுத்துக் கொண்டு, துரத்துகின்ற மழைக்கு ஒதுங்கிக் கொண்டு மீறி வரமுயன்றால் பலாத்காரம் கொண்டு நகம் கீறி கிழித்து, இவள் வாழ்ந்தாள்.

அதென்னவோ தெரியாது. இப்போது இவள் கையிலும் ஒரு சிறு உயிர் இருக்கிறது. அது எப்படி வந்தது என்பது அவளுக்குத் தெரியாது. அதற்குத் தகப்பன் யார் அதுவும் தெரியாது. ஆயிரத்தெட்டு முகம் கொண்ட அந்தக் கோர மழையில் எந்த முகம் அந்தக் குழந்தையைத் தந்த முகம். அவளறியாள். இவளுக்குப் பெயர் தாய் தகப்பனைத் தின்னி. இப்போது யாருக்கும் அது தெரியாது. ஏனென்றாள் அவளை அழைப்பதற்கு வேறொரு புதுப்பெயர் இப்போது அவர்களுக்குக் கிடைத்து விட்டது. அதெல்லாம் அவளறியாள். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் மழை. அவளுக்கு மழை பிடிப்பதில்லை. தூறல் மழையாவது, இரைச்சல் மழையாவது…? தூறல் மழைதானே இரைச்சல் மழை ஆகிறது. அவளைச் சிதைப்பதற்குத் தருணம் பார்த்து, பலாவிலைகளில் வாழ்வை ஒட்ட வைத்த மழை.

மழை…மழை… மழையின் குழந்தை இது… அவள் தன் கையிலிருந்ததை உயரத் தூக்கி பயங்கரமாய்ச் சிரிக்கத் தொடங்குகின்றாள். வானத்திலிருந்து லேசாய் மழைத்துளிகள் எட்டிப்பார்க்கின்றன.

-இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பவள விழாச் சிறுகதைப்போட்டியில் முதலிடம் ;பெற்று ஒலிபரப்பப்பட்ட சிறுகதை. (பன்னிரு எழுத்தாளர்களின் தொகுதியான ‘இங்கிருந்து’ சிறுகதைத் தொகுதியில் பிரசுரமானது.)

- ஏப்ரல் 01, 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
“அக்கா, வாங்கோக்கா… கிலோ அம்பது தானக்கா… வாங்கோ…” தீபனா திரம்பிப் பார்த்தாள். சனங்கள் நிரம்பி வழிய பஸ் சிரமப்பட்டு நகர முயற்சித்துக் கொண்டிருந்தது. “கிலோ அம்பது… கிலோ அம்பது…” தீபனாவை மீண்டும் அந்தக் குரல் இழுத்தது. கறுத்துப் பளபளத்துக் கொண்டிருந்த திராட்சைக் குவியல்கள் ...
மேலும் கதையை படிக்க...
நர்மதாவிற்கு யார் கடிதம் எழுதச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால்,அவளைப் போல ரசனையோடு கடிதம் எழுதும் வேறு எவரையும் இன்று மட்டும் நான் காணவில்லை.அவளிடமிருந்து கடிதம் வருவது நின்று பத்து வருடங்களுக்கு மேலாய் ஆகியிருக்கும். அவள் எங்கேயிருக்கிறாள்...? ...
மேலும் கதையை படிக்க...
முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ ஒரு இரையைக் கவ்விக் கொண்டது. விரட்டி விடுவார்களோ என்ற பயம் தெளிந்ததாலோ என்னவோ மீண்டும் திருப்தியுற்று இரை தேடலில் ஆர்வமாயிற்று. வெளி ...
மேலும் கதையை படிக்க...
அந்த முற்றத்தில் இப்போது பாதச்சுவடுகள் கூடுகின்றன. புதிய,புதிய சுவடுகள்... யார்,யாரோ...? எவர்,எவரோ...? அந்த வீடு முன்னெப்போதும் காணாத பலபேரைத் தன் அறைகளுக்குள் அனுமதிக்கிறது. இன்னும் கொஞ்ச நாள்தான். அதற்குப் பிறகு அந்த வீட்டின் மீதான எனது நெருக்கம் விலக வேண்டியதுதான். இது வரைக்கும் அதனோடிருந்த ஒட்டுறவு கழன்று வெறும் ஏக்கப் ...
மேலும் கதையை படிக்க...
இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான். இவள் அயர்ச்சியை மறந்து அவனை ஒரு கணம் பார்த்தாள். இது வரைக்கும் இப்படி நடந்ததில்லை. மணமான பிறகு ஒரு நாளுமே ...
மேலும் கதையை படிக்க...
கெடுபிடி
நர்மதாவின் கடிதங்கள்
சிறகிழந்தவன்
சாருமதியின் வீடு
பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)