மழை

 

சதுர சாளரம் வழியாகச் சீரான தூறல்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவளுக்கு எழும்பிய மண்வாசனை பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.

அருண், “சந்தியா, செரங்கூன் ரோட் பக்கம் ஒரு சின்ன வேலை இருக்கு! போய்ட்டு வரலாமா?”

“கொஞ்சம் இருங்க. வெளிய காயப்போட்ட துணிகளை எல்லாம் எடுத்து உள்ள போட்டுட்டு வரேன். மழை வந்தா எல்லாம் நனஞ்சிடும்.”

“என்னது, மழை வருமா? வெளிய பாத்தியா வெய்யில் எப்படி கொளுத்துதுன்னு!”

சந்தியா பதில் ஏதும் சொல்லாமல் துணி எடுப்பதில் மும்முரம் காட்டினாள். அடுத்த 15 நிமிடங்களில் குழந்தை பூரணி மகன் ஆதி சகிதமாக வெளியே வந்து, “நாங்க எல்லாம் கிளம்பியாச்சி. போலாமா?” என்றாள்.

வந்த வேலை முடிந்ததும் அருண், “சந்தியா, எதுவும் வாங்கணுமா?”

சந்தியா, “செராங்கூன் ரோட்டையே வாங்கிக் கொடுத்தாலும் எனக்குப் பத்தாது.”

அருண், “வாங்கிக் கொடுக்கலாம். அதுக்கு சிங்கப்பூர் கவர்ன்மெண்ட் ஒத்துக்கணுமே!”

சொல்லிக்கொண்டிருக்கும் போதே திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது.

எல்லாச் சிறிய கடைகளினுள்ளும் மழைக்காகத் தஞ்சம் புகுந்தது கூட்டம். இனி நுழைய எங்குமே இடம் இல்லாததால், நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து அவர்கள் உடனே நகர்ந்து அருகில் உள்ள ஒரு தெருவுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

அந்தத் தெருவின் பெரும்பாலான பகுதி மூடிய பாதையைக் கொண்டிருந்தது. மழையில் நனையாமல் செல்ல வசதியாக இருந்தது. சிறிது தூரம் வந்தவுடனே அருண், “சந்தியா சீக்கிரம் குடையை எடு. எதிர்ப் பக்கமா போயிடலாம்.” அவன் முகத்தில் பரபரப்பு!

“ஏங்க..?” என்று முடிக்கும்போதே சந்தியாவுக்கு அருண் சொன்னதன் காரணம் புரிந்தது. “குடை எடுக்க மறந்துட்டேங்க.”

அருண் இப்போது முகத்தில் கோபத்தோடு, “மழை வரும்னு துணிய எடுத்தியே. குடையை எடுத்து வைக்க என்ன? அங்க இங்க பாக்காம வேகமா நட! எங்கேயும் நிக்காத!” என்றான்.

சில வீடுகளின் முன் ஆண்கள் (மட்டும்) வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். கை கால்கள் பயத்தில் நடுங்கினாலும் ஏதோ ஓர் உந்துதலில் சந்தியா சட்டென்று திரும்பிப் பார்க்க, வீட்டின் உள்ளே பல பெண்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள்.

அங்கே நின்றிருந்த ஆண்கள் அவ்வழியில் நடந்து போகும் பெண்களையும் பார்த்தனர், கையில் குழந்தையுடன் செல்லும் சந்தியா உட்பட! சந்தியாவுக்கோ கொஞ்சம் அருவருப்பு, கொஞ்சம் பயம் எல்லாம் கலந்து புதுவித அமிலம் உடலில் சுரப்பதை உணர முடிந்தது. பூரணி மட்டும் இல்லேன்னா இன்னேரம் நனஞ்சிட்டே வேற எடத்துக்கு ஓடி இருக்கலாம் என்று மனது நினைத்தது.

இதில் ஆதி வேறு! ஒரு வீட்டின் முன் நின்று, “அப்பா இந்த ஷாப்ல ஏன் எல்லாரும் கியூ அப் பண்ணி இருக்காங்க, என்ன வாங்கப்போறாங்க?” என்று கேட்க, கோபத்தின் உச்சியில் இருந்த அருண், “பேசாம வாடா!” என்று இழுத்துச் சென்றான்.

வீடு போய் சேர்ந்ததும் அருணிடம், “இது லீகலாங்க?” என்றாள்.

“எனக்கு இதுதான் வேலையா?” என்றான் கோபம் இன்னும் குறையால்!

மேற்கொண்டு எதுவும் பேசாமல் மனம் உள்ளே நின்றிருந்த பெண்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. “எப்படி இந்த மாதிரி இடத்தில் வந்து மாட்டியிருப்பாங்க? விரும்பி யாராவது போய் இதெல்லாம் செய்வாங்களா? தப்பிச்சிப் போக விரும்பமாட்டாங்களா? என்ன கட்டாயத்தாலே இதையே செய்றாங்க? கல்யாணமாகி குழந்தைகள் எல்லாம் இருப்பாங்களா? நிறைய பணம் தேவையோ? யாருக்கு? குடும்பத்துக்கா? அப்போ அந்தக் குடும்பத்தில் உள்ள மத்தவங்க எல்லாம் என்ன செய்திட்டு இருக்காங்க?”

“காபி போடு சந்தியா.” என்ற அருணின் குரல் அவளின் சிந்தனையைக் கலைத்தது.

வீடு முழுக்கக் காபி மணம் நிறைந்திருந்தாலும் மனம் முழுக்க அப்பெண்களைப் பற்றிய எண்ணங்களே நிறைந்திருந்தது. இன்னும் மழை தூறிக்கொண்டிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
ரகசியங்கள்னா பெருசாத்தான் இருக்கணும்னு அர்த்தமில்லை! ஒரு அற்பத்தனமான விஷயம், அடுத்தவங்ககிட்ட சொன்னா எங்கே ரொம்பக் கேவலமா எண்ணிடுவாங்களோ என்ற எண்ணம்; மேலும் இதெல்லாம் ஒரு விஷயமான்னு கூடச் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்! சின்ன விஷயம்தான். நிறைய நிறைவேற்றப் படாத சின்னச் சின்ன ...
மேலும் கதையை படிக்க...
“டேய்! நான் நடுரோட்டுக்கு வந்துட்டேண்டா!” என்றான் கார்த்திக். “என்னடா சொல்றே?” என்றான் மாதவன் அதிர்ச்சியுடன். “மிடில் ரோடுக்கு வந்துட்டேன்கிறதைத் தமிழ்ப்படுத்திச் சொல்றேன்டா!” கார்த்திக். “நல்லாத் தமிழ்ப்படுத்துறீங்கடா! தமிழைப் ‘படுத்துறீங்க’!” “நீ எங்கடா இருக்கே?” “நானும் அதே நடுரோட்லதான் இருக்கேன். ஆனா நான் இருக்கறது பூகிஸ் நூலகத்துக்கிட்ட இருக்கிற நடுரோடு!” ...
மேலும் கதையை படிக்க...
“என்ன சப்தம்?” ....................... “யாரங்கே?” நிசப்தம்....... அந்த யாமத்தின் மத்திமப்பொழுதில் இலேசான குளம்பொலிகள் கேட்டன. உற்றுக் கேட்ட நந்திவர்மன், அக்குளம்பொலிகளின் ஓசையைக் கணித்து, குடிலைவிட்டு வெளியேறித் தன் புரவியைத் தேடினான். “உதயா.....!’ நந்திவர்மனின் குரல் வசியத்தில் ஈர்க்கப்பட்ட உதயன் அமைதியாக அவனருகே சென்று சென்னியைத் தாழ்த்தி, தனது பிடரி ...
மேலும் கதையை படிக்க...
“நாராயண... நாராயண...” என்றவாரே நுழைந்த நாரதரை யாரும் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. சிவன் ஐஃபோன் 8-இல் பூலோகத்து அப்டேட்ஸ் பார்த்துக்கொண்டிருக்க, இன்னொரு ஐஃபோன் 8-இல் பார்வதி வாட்ஸ்ஆப்பில் எதையோ அவசர அவசரமாக அனுப்பிக்கொண்டிருக்க, வினாயகரும் முருகரும் ஆளுக்கொரு ஐஃபோன் 8-இல் ‘கிரிட்டிக்கல் ஆப்ஸ்’, ‘கிளாஷ் ...
மேலும் கதையை படிக்க...
சின்ன விஷயம்!
காதல் சொல்ல வந்தேன்
குளம்பொலி
ஐ ஃபோன் எக்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)