கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 12,621 
 

அன்று காலை முதலே ரவியின் மனம் உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் அவனது அருமை தங்கை ராமலெட்சுமிக்கு கல்யாணம்.

தங்கைக்கு கல்யாணம் என்பது மட்டும் அவனது சந்தோஷத்திற்கு காரணமில்லை. இப்ப அவனை அப்பாவென்று கூப்பிட அவனுக்கும் ஒரு வாரிசு பொறந்திருக்கு… அவனையும் பார்க்க வேண்டும் என மனம் துடித்துக் கொண்டு இருந்தது.

மழை

காலையில சம்பளம் வாங்கின கையோடு ஊருக்கு கிளம்பவேண்டும் என்று நினைத்துதான் சைட்டுக்கு வந்தான். ஆனால் இன்று கூலியாட்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டிய சூப்பர்வைசர் தனது குழந்தைக்கு உடல்நலமில்லை டாக்டரிடம் போக வேண்டும் என அவசரமாகக் கிளம்பியதால் அந்த வேலை இவன் தலையில் விழுந்து விட்டது. காலையில் கிளம்புவதற்கு பதில் இரவு கிளம்பப்போகிறோம். ராத்திரி பஸ்ஸில் ஏறி உக்காந்து கண்ணை மூடினால் விழிக்கும் பொழுது ஊர் வந்து விடும். இன்று பார்க்கும் வேலைக்கு அதிகப்படியான சம்பளமும் கிடைக்கும். தங்கச்சி ஆசைப்பட்டுக் கேட்ட டிசைனர் சேலை வாங்க காசு கம்மியாக இருக்குதேன்னு நினைச்சான். ஆனா இப்ப அத வாங்கிட்டுப் போயிடலாம்.

சாயங்காலம் அஞ்சுமணிக்குள்ளே எல்லாருக்கும் சம்பளம் பட்டுவாடா பண்ணிடலாம். அதுக்கப்புறம் சரவணா

ஸ்டோர்ல போய் நேத்து பாத்து வச்ச சேலையை வாங்கிட்டு ரூமுக்கு வந்து பேக் பண்ணிட்டு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குப் போனா நேரடியா திருச்செந்தூர் பஸ் கிடைச்சா அதிலே போய் முத்தையப்புரத்தில இறங்கி அங்கிருந்து அத்திரமரப்பட்டிக்கு மினிபஸ் பிடிச்சுப் போயிடலாம். அப்படியே பஸ்சு கெடைக்காட்டக்கூட ஒரு ஆட்டோ பிடிச்சுக்கூட வீட்டுக்குப் போயிடலாம். துரு பஸ் கிடைக்காட்டா கூட பரவாயில்ல… மதுரைக்குக்குதான் அடிக்கடி பஸ் உண்டே, அங்கே போய் இறங்கி ஒரு டீயும், ரெண்டு இட்லியும் சாப்பிட்டு திருச்செந்தூர் பஸ்ஸைப் பிடிச்சுப் போயிக்கலாம் என்று தனக்குள் திட்டமிட்டப்படியே சம்பளம் பட்டுவாடா பண்ண வேண்டிய பணத்தை ஐநூறு, நூறு, அம்பது, பத்து என தனித்தனியாக பிரிச்சு வச்சிக்கிட்டு இருந்தான். மணி ரெண்டாகப்போறது. இனி ஒவ்வொருத்தராக சம்பளம் வாங்க வர ஆரம்பிச்சிடுவாங்க…

ஒளிதான் வேகமாக பயணம் செய்யக்கூடியது என்பது விஞ்ஞானிகளின் கணக்கு. ஆனால் அதைவிட வேகமாக பயணம் செய்யக்கூடியது மனசு. ரவியின் மனசும் வேகமாகப் பயணம் செய்து அவனது சொந்த ஊருக்குப் போய்விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஆண்களைப் போல ரவியின் அப்பாவும் சம்பாதிக்கிற காசை சாராயத்தில் கொண்டுப்போய் தொலைக்கிற ஆள். அவனது அம்மா பக்கத்தில் தூத்துக்குடியில் உள்ள கப்பல் கம்பெனியில் கோதுமை, பட்டாணி, கொல்லாங்கொட்டை மாதிரி பொருட்களை இறக்கும் பொழுது, அவற்றில் கீழே சிந்தும் பொருட்களை கூட்டி, பெருக்கி அதுக்குன்னு வச்சிருக்கிற பெரிய பெரிய பிளாஸ்டிக் டிரம் களில் கொட்ட வேண்டும். பின்பு அவற்றை கல், மண் நீங்க புடைத்துக் கொடுக்கணும். இதுதான் அவள் பாக்க வேண்டிய வேலை.

அவற்றில் கொஞ்சம் கோதுமையையும், பட்டாணியையும் சாப்பாட்டுத் தூக்கிலும், சேலையிலும் பொதிந்து வீட்டுக்குக் கொண்டு வருவாள். அதனால் அவர்கள் வீட்டு சாப்பாட்டில் கோதுமைத் தோசையும், பட்டாணிக்குழம்பும் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.

ராமலெட்சுமி பொறக்கிறப்ப ரவிக்கு பத்து வயசு. அவுக அம்மா வேலைக்குப் போனால்தான் வீட்டில் அடுப்பெரியுங்கிற நிலை என்பதால், ராமலெட்சுமியை ரவியிடம் விட்டு விட்டு அவனது அம்மா பேச்சியம்மா வேலைக்குப் போயிடுவாள்.

அதனால் தங்கையை குளிப்பாட்டுவது, தங்கைக்குப் பால் காய்ச்சிக் கொடுப்பது, உச்சா… ஆய் போயிட்டா, கழுவி விட்டுட்டு, வேற துணி மாத்துறது என தங்கையை முழுவதும் வளர்த்தது அவன்தான். அதனால் அவனால் ராமலெட்சுமியை தங்கையாகப் பார்க்க முடியவில்லை. பெத்தப் பெண்ணாகவே பார்க்க ஆரம்பித்தான்.

அம்மா வேலைக்குப் போறதால பக்கத்து வீட்டு ஆச்சிக்கிட்டதான் ராமலெட்சுமியை பாத்துக்க சொல்லிட்டுப் போவா, அந்த ஆச்சிக்கு வெத்தலப்பாக்கு, போயில வாங்க காசுக் கொடுத்தாப் போதும். அதுப்பாட்டுக்கு

வெத்தலையை வாங்கி, ஆடு தழையை மென்னுத் திங்கிற மாதிரி வெத்திலையை சவுக், சவுக்குன்னு தின்னுட்டு, அதுக்கப்புறம் போயிலையை கிள்ளி வாயில போட்டுக்கிட்டு, அந்த சாறு இறங்க இறங்க அது கொடுக்கிற இளம்போதையில் கிறங்கிப்போய் உக்காந்துக்கிட்டு, அப்படியே பிள்ளையையும் பார்த்துக்கும்.

ஆனால் ரவிக்கு கிளாசில இருப்புக் கொள்ளாது. மதியம் சாப்பாட்டு நேரத்தில வந்து அவனே பிள்ளைக்கு பால்காய்ச்சிக் கொடுத்துத்தான் போவான். வீடும், ஸ்கூலும் பக்கங்கிறதால, அப்பப்ப டீச்சரிடம் கையின் ஒருவிரலை நீட்டி அனுமதி வாங்கிக் கொண்டு தங்கச்சிப் பாப்பாவை பார்க்க வந்திடுவான்.

சாயங்காலம் ஸ்கூல் முடியவும், வந்து தங்கச்சிக்கு பால் காய்ச்சிக் கொடுப்பான்.

காலையில அம்மா கோதுமை மாவக் கரைச்சு தோசை சுட்டுக் கொடுத்துட்டு, அவளும் ரெண்டு தோசையை தின்னுட்டு, மொத நா பொங்கி தண்ணி ஊத்தி வச்சிருக்கிற பழயச் சோத்தைப் பிழிஞ்சி தூக்கும் போணியில் வச்சிட்டு, அதுக்கு தொட்டுக்க ஒரு ஊறுகா பொட்டலத்தையோ, இல்லே நாளஞ்சி பச்ச மிளகாயையோ எடுத்துக்கிட்டு போயிடுவா, சாயங்காலம் வந்துதான் அரிசி சோறு ஆக்குவா…

பால் காய்ச்சுறதுக்காக அடுப்ப பத்த வச்சாச்சி… அப்படியே உல வச்சி சோறு பொங்கிட்டா

என்ன?ங்கிற எண்ணம் வரவும், உடனே உலப்பானையை அடுப்பில ஏத்தி , பக்கத்து வீட்டு ஆச்சிக்கிட்ட கேட்டு, சோத்தைப் பொங்கிட்டான். இன்னும் அம்மாவக் காணோம்.. சரி இன்னைக்கு நாம கொளம்பு வச்சா என்ன? அவன் அம்மா கொளம்பு வக்கிறத பாத்து இருக்கான். ஆனாலும் மறுபடியும் பக்கத்து வீட்டு ஆச்சிக்கிட்டதான் போனான்.

“”ஏலே ரவி… என்னாலே… ரொம்பத்தான் துள்ளுறே… சோறு பொங்குறது எல்லாம் பொம்பிளங்க வேல… உனக்கென்னலே தலையெழுத்து… நீ ஏன்லே அதெல்லாம் பண்ணுறே உங்கம்மா வந்து சோறு பொங்குவாலே… நீ பேசாம போய் பசங்கக்கூட சேந்து விளையாடுலே…” என்று சொன்னாலும்,

“”அது வந்து ஆச்சி ஆம்பிள சோறு பொங்கக்

கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா… அம்மா ஆம்பிளகணக்கா வேலைப் பாத்து சம்பாதிச்சிட்டு வருதுல்ல… அப்ப நான் ஏன் பொம்பிள மாரி சோறு பொங்கக்கூடாது? உனக்கு பொறாமை ஆச்சி… எங்கே உன்னைவிட நான் ருசியா கொளம்பு வச்சிருவேனான்னு பயம்… அதான் எனக்கு சொல்லி தர மாட்டேங்கிறே?”

“”எப்பா… இந்த காலத்துப் பிள்ளக வில்லங்கமா பேச பழகியிருக்குக… உங்கக்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? உப்பு, புளி, மொளகா மூணும் கரிக்டா இருந்துட்டா சாப்பாடு ருசியா வந்திரும்… என்ன சாம்பார்னா பருப்புப் போடணும்… புளிக்கொழம்புன்னா புளியும், மொளகாயும் கொஞ்சம் தூக்கலா இருக்கணும்… அதே குருமா கொழம்புன்னா கொஞ்சம் பெருஞ்சீரகம் தேங்காக்கூட அரைச்சுப் போடணும். அவ்வளவுதான் சமையல். ஒண்ணும் பெரிய கம்பஞ்சூத்திரம் கெடையாது.”

ஆச்சி சொன்னபடி கொழம்பு வச்சான். ஆனா ருசி பாத்தப்ப, நல்லாவேயில்லை… என்ன கொறைன்னு தெரியல… செரி மொத தடவை பண்ணியிருக்கோம். ரெண்டு நா பண்ணினா சரியா வந்துரும்னு… கொழம்ப இறக்கி வச்சிட்டு, அடுப்பப்பாத்தான்… கணகணன்னு கங்கு கெடந்தது. ஒரு பானையில தண்ணி எடுத்து வச்சா… அடுப்பு காந்தல்ல சுட்டுருமேன்னு… ஒரு பானையில தண்ணி ஊத்தி, அத அடுப்புல வச்சான்.

சாயங்காலம் வீட்டுக்கு வந் த பேச்சியம்மாவுக்கு தம்மவன் பண்ணியிருக்கிற வேலையைப் பாத்ததும் அழுகையே வந்துட்டுது…

சோத்தை வடிக்கிறப்ப, பானை கவிந்து சோறு காலுல கொட்டியிருந்தா என்னவாயிருக்கும் கொதிக்கிற கொழம்பு பிள்ள மேல கொட்டியிருந்தா… அய்யோ நினைச்சுப் பாத்தாலே ஈரக்கொல நடுங்குதே…

“”ஏலே ராசா… அம்மை வந்து பொங்கிக்குவேன்டா… ஏதாவது ஒண்ணு ஆச்சின்னா… அத நினைச்சி நினைச்சே எம்உசுரு போயிடும்டா…” என்று சொல்லிக் கொண்டே மகன் பொங்குன சோத்தை ஆச ஆசயாத் தின்னா… அது கல்யாண வீட்ல சாப்பிடும் விருந்துச்சோற விட ருசியா இருந்துச்சு. ஆனா அவ வீட்டுக்காரன்தான் சோறு நறுக்கரிசி விழுந்து குருணைச்சோறு மாரி இருக்கு… கொழம்பு கசாயம் மாரி இருக்குன்னு மொணங்கிக்கிட்டே சாப்பிட்டான். ஆனா ரொம்ப சத்தம் கொடுத்தா பேச்சியம்மா பத்ரகாளியாடுவான்னு அவனுக்கு நல்லாவே தெரியுங்கிறதாலே, தண்ணிப் போட்டாலும், வீட்டுக்கு வந்து கலாட்டா பண்ணாம ஒரு ஓரமா சுருண்டு படுத்துக்குவான்.

பேச்சியம்மா வேண்டாம்னு சொன்னாலும், ரவி சோறு பொங்குற வேலையை விடல… அம்மா பாவம் நாள்முழுக்க குனிஞ்சி குறுக்கு வலிக்க வெளக்குமாத்த பிடிச்சி பெருக்கிக்கிட்டு இருக்கா…, இல்லாட்டா ரெண்டு கையும் வலிக்க சொளகைப் பிடிச்சி புடைச்சிக்கிட்டு இருக்கா… வர்றப்ப செத்த படுத்தா நல்லாயிருக்கும்னுதான் தோணும். உடம்பு அசதியோட வர்றவ… இங்கேயும் வந்து சோத்தைப் பொங்கணும்னா… அவளுக்கு அலுப்பா இருக்காதா… என நினைத்துக் கொண்டு ரவியே அடுப்ப பத்த வச்சி சோத்த பொங்க ஆரம்பிச்சிடுவான்..

ஆரம்பத்துல அவனுக்கு விளையாட்டு காட்டுன சமையல், அதுக்குப்புறம், அவன் சொன்ன பேச்ச கேக்க ஆரம்பிச்சிட்டு, அம்மா, கொண்டு வர பட்டாணி, வீட்டோட பின்பக்கம் இருக்கிற முருங்க மரத்துல காய்ச்சுத் தொங்குற முருங்கக்காய், இத வச்சிக்கிட்டே வித விதமாய் சமைச்சிடுவான்.

ஒரு நாள் பட்டாணிக்கூட தக்காளி, வெங்காயம் வெட்டிப்போட்டு, தேங்கா அரைக்கிறப்ப, அதோட கொஞ்சம், பூண்டு, இஞ்சி, பெருஞ்சீரகம் வச்சி அரைச்சி மணக்க, மணக்க குருமா கொழம்பு வச்சிடுவான். இன்னொரு நாள் அதே பட்டாணிக்கூட, தோட்டத்துல காய்க்கிற முருங்கக்காயைப் போட்டு கார சாரமாய் புளிக்குழம்பு வைப்பான். அதுக்கடுத்த நாள் பட்டாணியை வேக வச்சி, அதுல மசாலாப்போட்டு பொரட்டல் மாதிரி பண்ணி, அதுக்கு தோதா மிளகு, சீரகம் போட்டு ரசம் வச்சி வச்சிடுவான்.

இது மட்டும் பத்தாதுன்னு, பட்டாணியை மிஷின்ல கொடுத்து உடைச்சி பருப்பாக்கி வேற

வச்சிருப்பான். அந்த பருப்பை வைத்து ஒரு பருப்புக் குழம்பு வைப்பான். இன்னொருநாள் சாம்பார் வைப்பான். சிலசமயம் அரிசி, பருப்பு, காய் எல்லாம் ஒண்ணாப்போட்டு கூட்டாஞ்சோறு மாதிரி பொங்கி வச்சிடுவான். அதுமட்டுமில்லாம, சோறு பொங்கின பிறகு, அடுப்பு காந்தல்ல அம்மாவுக்கு வெந்நியும் வச்சிடுவான். பாவம் உடம்பு நோக வேலப்பாத்துட்டு வர்றா… வந்து வெந்நில குளிச்சா கொஞ்சம் இதமா இருக்கும்னு நினைச்சுக்குவான்.

மகன் விதவிதமா சமைக்கிறதப் பாத்து, பேச்சியம்மாலே அசந்துப் போயிட்டா…

“”ஏலே… ரவி… இதெல்லாம் எங்கல்லே கத்துக்கிட்டே… பொம்பிளக்கூட உங்கிட்ட தோத்துடுவா போலிருக்கு…”

சனி, ஞாயிறு லீவுலக்கூட சும்மா இருக்கா மாட்டான். அருவா, சாக்கு, கயிற எடுத்துக்கிட்டு வெறகுக்கு முள்ளு வெட்டப்போயிடுவான். எப்படியும் ஒருவாரத்திற்கு தேவையான முள்ள வெட்டிட்டு வந்திடுவான்.

பேச்சியம்மாவுக்கும் தன் பையனை நினைச்சா ரொம்ப பெருமையாயிருக்கும், அக்கம் பக்கத்து பசங்க எல்லாம் அம்மாக்கிட்ட காச வாங்கிகிட்டு, ரகசியமா சிகரெட், பீடி பிடிக்கிறதும், டவுனுக்கு சினிமாவுக்கு போறதுமா இருக்கிறச்ச, தாம் பையன் பொறுப்பா வீட்டைப் பாத்துக்கிறதும், தனக்காக சோறு பொங்கி வைக்கிறத பாக்கிறப்ப, பேச்சியம்மாவுக்கு கண்ணுல தண்ணியே வந்துரும்.

“தனக்கு ஒரு குடிகாரனை புருஷனா கொடுத்த கடவுள், அதுக்கு பிராயச்சித்தம் பண்ணனும்னு நினைச்சுதான் இவன பையனா கொடுத்திட்டான் போலிருக்கு’ என்று அப்பப்ப நினைத்துக் கொள்வாள்.

தங்கச்சி வளந்தாலும், அவளை ஒரு வேலை பண்ண விடமாட்டான். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு இவனே பண்ணுவான்.

“”ஏலே… ரவி… பொட்டப்புள்ளக்கி செல்லம் கொடுத்து கெடுக்காதேடா… நாளைக்கு இன்னொரு வீட்டுல வாழப்போற பிள்ளை… இங்கே சொகுசா இருந்திட்டா… போற இடத்தில கஷ்டப்படக்கூடாதுடா…” என்று பேச்சியம்மா சொன்னா,

“”நானும் அதையேதாம்மா சொல்றேன்… நாளைக்கு இன்னொரு இடத்தில போய் வாழப் போற பொண்ணு… போற இடம் எப்படியிருக்குமோ… யாருக்குத் தெரியும்? இங்க இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருந்துட்டுப் போட்டும்… நம்ம வீட்டுல இருக்கப் போறது கொஞ்ச நாள்தான். அந்த கொஞ்ச நாளும் சொகுசா இருந்துட்டுப்போட்டுமே”ன்னு அவ வாய அடைச்சிடுவான்.

பன்னண்டாப் புக்குப் பொறகு ரவி படிக்க விரும்பல, கப்பல் சரக்கு வந்து இறங்கிறப்ப கணக்கு எழுதுற டாலிகிளார்க்கு வேலைக்குப் போனான். ஒரு சமயம் தொடர்ந்து ராப்பகலா வேலையிருக்கும். சிலசமயம் நாள்கணக்கா வேலையே இருக்காது.

அப்பதான் பக்கத்து வீட்டு அண்ணன் வடக்கே ஒரு கன்ஷ்ட்ரக்சன் கம்பெனியில் வேலைப்பார்ப்பதாகவும், தன்னோடு வந்தால் வேலை வாங்கித் தருவதாகவும் சொல்ல, அவனுடன் கிளம்பிப் போனான்.

சம்பளம் ஓரளவுக்குப் பரவாயில்லை. ஏதோ சாப்பாடு போக, வீட்டுக்கும் அனுப்ப முடிஞ்சது.

ஆனா தங்குற இடம்தான் ஜெயில் மாதிரி இருக்கும்… ரூமுங்கிற பேரு, தகர கொட்டகையில் தங்கணும்.. வெயில் அடிச்சா உள்ளே இருக்கிறவங்க வேகுற அளவுக்கு வெக்கை இருக்கும். பனிக்காலம்னா… உடல் விறைச்சுப் போற அளவுக்கு பனி இறங்கும். அங்கே அவனையும் சேத்து கிட்டதட்ட ஐநூறு பேருக்கு மேலேயே லேபர்ஸ் இருந்தாங்க… எல்லாம் இவன மாதிரி ஒவ்வொரு இடத்திலே இருந்து பொழைக்க வந்தவங்க…

சுற்றிலும் முள்வேலி, அதுக்குள்ளே புறாக்கூண்டு மாதிரி சின்ன சின்ன தகரக் கொட்டகை, அந்த தகரக் கொட்டகை இவுங்க தங்குறதுக்கான ரூம் கெடையாது. இது இவுங்க சோப்பு. சீப்பு, டிரஸ் போன்ற பொருட்களை பத்திரமாக வைப்பதற்கான பெரிய சேப்டி லாக்கர். மழ பெஞ்சா நனையாம ஒதுங்கிக்கலாம். ஆனா பெரிய மழப் பெஞ்சிச்சுன்னா… உள்ளே தண்ணி வந்திரும். தூங்க முடியாது.. சோறு பொங்க முடியாது. பாத்ரூம், டாய்லெட் எல்லாம் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மாறிடும். அதனாலே ஊரே மழை வரணும்னு யாகம் பண்ணினாலும், இவர்களை மாதிரி ஆட்கள் மழை வரவேண்டாம் என்றுதான் கடவுளை வேண்டுவார்கள்.

பாத்ரூம் என்றால் தனியான ரூமெல்லாம் கிடையாது. தகரக்கொட்டகைகளுக்கு நடுவே ஒரு பெரிய தொட்டி… மாட்டு கொட்டகையில பெரிய தொட்டியில மாட்டுக்கு தண்ணி வச்சிருக்க… மாடுங்க சுத்தி நின்னு தண்ணிகுடிக்குமே, அது மாதிரி தொட்டியை சுத்தி நின்று, தண்ணியைக்கோரி தலையில ஊத்திக்க வேண்டியதுதான். அந்த தொட்டியையும் கட்டுன பிறகு, இதுவரைக்கும் அதக் கழுவி விட்டுருக்கவே மாட்டாங்கிறது, அதுல படிஞ்சிருக்கிற பச்சை பசேல்னு இருக்கிற பாசியைப் பாத்தாலே தெரிஞ்சுக்கலாம்.. காலையில மத்தவங்க எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி எந்திருச்சி குளிச்சா, ஓரளவு தெளிஞ்ச தண்ணியிலே குளிச்சிக்கலாம். ஆனா அதுக்கு அப்புறம் குளிக்கப்போனா பாசி சேர்ந்து கலங்கிய தண்ணிலேத்தான் குளிக்கணும்.

அடுத்தப் பிரச்சனை சாப்பாடு. மெஸ் என்று ஒன்று உண்டு, அதில் சாப்பிட்டால், அதற்கு என பணம் தனியா பிடித்துக் கொள்வார்கள். மேலும் கடுகு எண்ணெய் வைத்து சமைக்கப்படும், எண்ணெய் மிதக்க பண்ணப்படும் சப்ஜியும், வரட்டி மாதிரியான சப்பாத்தியும் அவனுக்கு சாப்பிட பிடிக்க வில்லை. ஏற்கனவே சமையல் பண்ணி அனுபவம் இருந்ததால், அவனே நாலைந்து பாத்திரமும், ஒரு ஸ்டவ்வும் வாங்கி சமைக்க ஆரம்பித்து விட்டான்.

இவனை மாதிரி மெஸ்ஸில் சாப்பிட்டால் பணம் செலவாகும்னு நிறைய பேர் சமைச்சு சாப்பிடுறதப் பாத்திருக்கான். ஆனா அவுங்க சாப்பாட்டைப் பாக்குறப்ப இவனுக்கு ஆச்சரியமா இருக்கும். பெரும்பாலும் சோத்தப் பொங்கி, ஒரு பருப்பை வேக வச்சி, பச்ச மிளகாயையையோ, வெங்காயத்தையோ வெட்டி அதையே தொட்டுக்கிட்டு சாப்பிட்டுவாங்க… எப்பவாவது உருளைக்கிழங்கை வாங்கி வேக வச்சி, அதில மசாலாவை போட்டு பொரட்டி, அத தொட்டுக்கிட்டு சாப்பிடுவாங்க..

ஆந்திராக்காரங்களுக்கு சோறும், மிளகாய்ப்பொடியும் இருந்தாப் போதும் போலிருக்கு.. சோத்தில் காரமா ஏதாவது பொடியையோ, இல்லே ஆவக்கா மாதிரி ஊறுகாயையோ போட்டு பிசைஞ்சி சாப்பிடுவாங்க…

இந்த பீகார்காரங்க சாப்பிடுவதப் பாத்தாதான் ஆச்சரியமாக இருக்கும். வெறும் கோதுமை மாவை பிசைஞ்சி கேரி பேக்கில போட்டு, அதுக்கு தொட்டுக்க வெங்காயத்தையும், பச்ச மிளகாயையும் கொண்டு வருவாங்க, அந்த மாவை அப்படியே பிச்சி பிச்சி, மிளகாயையும், வெங்காயத்தையும் கடிச்சிக்கிட்டே சாப்பிடுவாங்க… இந்த மாவு அவங்களுக்கு எப்படித்தான் ஜீரணமாகுதோன்னு ஆச்சரியமா இருக்கும் ரவிக்கு.

சரி எல்லாரும் தன்னைப் போல தன்குடும்பத்தை காப்பாத்த வந்திருக்காங்க… அவங்க குடும்பத்தை காப்பாத்தணும்னு நினைக்கிறப்ப… இதெல்லாம் அவங்களுக்குச் சிரமமா தெரியாது போலிருக்கு என்று தனது மனதிற்குள் நினைத்துக் கொள்வான்.

தீபாவளி, பொங்கலுக்குதான் ஊருக்கு வருவான். ஊருக்கு வருவதற்கு இரயிலில் இடம் கிடைக்காது. ஜெனரல் கம்பார்ட்மெண்டில் பெரும்பாலும் டாய்லட் அருகேதான் உக்கார இடம் கிடைக்கும். ஆனால் ஊரில் அம்மாவை, தங்கையை பாக்கப்போகிறோங்கிற மகிழ்ச்சி மனதில் நிறைந்திருக்கும் பொழுது, டாய்லெட் வாடை அவனை ஒண்ணும் பண்ணாது.

இவன் போய் தங்கியிருக்கும் பத்துநாளும் இவனது அம்மா விதவிதமா சமைச்சுப் போடுவா… ரவிக்கு மீனுன்னா ரொம்பப்பிடிக்கும்.

அதனால கடற்கரைக்கு வலை இழுக்குறப்ப போய், அப்ப புடிச்ச மீனை வாங்கிட்டு வந்திடுவா..

இவன் அனுப்புற பணத்தை மிச்சம் புடிச்சி, இவன் அம்மா தங்கச்சிக்கு ஒவ்வொரு நகையா வாங்கி, இவன் வர்றப்ப காட்டுவாள்.

அதோட இவனுக்கும் ஒரு நல்ல பொண்ணப் பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாள். இவனுக்கு கழுத்த நீட்டின கல்யாணியும் நல்ல குணவதியாகவே வந்திட்டாள். அவளோடு சேர்ந்து இருந்த நாட்களை விட, போனில் பேசி வாழ்ந்த நாட்கள்தான் அதிகம். இப்ப அவளையும், பொறந்த பையனையும் பாக்கணும்.

போனில் தங்கச்சியும், அம்மாவும் சொன்னார்கள்,

“”அண்ணே… எம்மருவன் உன்னையே உரிச்சு வச்சாப்பில பொறந்திருக்கான்… அவனப் பாக்குறப்ப உன்னையே பாக்குறாப்பில இருக்கு…” என்று ராமலெட்சுமி சொல்ல, அவளிடம் இருந்து போனை வாங்கின அம்மா,

“”ஆமாலே ரவி… நீ பொறந்தப்ப எப்படி இருந்தியோ அப்படியேதான் உம்மவனும் இருக்கான். அவனப் பாத்தாப் போதும் நீ கைக்குழந்தாயா இருக்கச்சே எப்படி இருந்தேன்னு தெரிஞ்சுக்கலாம்”ன்னு சொல்ல, அவனுக்கு கொழந்தையைப் பாக்கணும் போல ஆசையா இருக்குது. அதாவது தான் கொழந்தையா இருக்கப்ப எப்படி இருந்தோம்னு தெரிஞ்சுக்கணும் போல இருந்தது.

“”என்னண்ணே உக்காந்துக்கிட்டே, தூங்குறீங்களா வெளியே வானம் இருட்டிக்கிட்டு வருது. மின்னல் வேறு வெட்டு, இடியும் பயங்கரமா இடிக்குது. பெரிய மழை வரும் போலிருக்கு… சீக்கிரம் சம்பளத்தைக் கொடுங்கண்ணே… மழை வரதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போகணும்” என்று ஒரு தமிழ் லேபர் சத்தம் கொடுத்த பிறகுதான் பழைய நினைவுகளில் மூழ்கி விட்டது ரவிக்கு ஞாபகததிற்கு வந்தது.

வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது, லேசான சாரலாகத்தான் ஆரம்பித்தது. இப்பதானே சம்பளம் பட்டுவாடா பண்ண ஆரம்பிச்சிருக்கோம். எல்லாருக்கும் கொடுத்து முடிப்பதற்குள் மழை வெறிச்சிடும் னு நினைச்சுக்கிட்டே, மளமளவென சம்பளப் பணத்தை பட்டுவடா செய்ய ஆரம்பித்தான்.

கடும் வெயிலால் சூடாகிக் கிடந்த நிலம், மழை பெய்ததால் குளிர ஆரம்பித்தது, அவனுடைய மனதைப் போல.

– ஆகஸ்ட் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *