Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மழையில் பூத்த மத்தாப்பு

 

புடவைத் தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகிவிட்டாள் தங்கப்பாப்பா.

அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது முருகராசுக்கு. அது புரிவதற்கு அவன் எந்தப் பிரயத்தனமும் செய்யத் தேவையில்லை. அதற்கு அவசியமும் அவனுக்கு இல்லை. அவள் பொறுமைக்கோட்டைத் தாண்டிவிட்டதற்கு அடையாளம் அது.

அடுத்து அவள் என்ன செய்வாள் என்று அவன் அறிவான். அவன் கைகளிலும் கால்களிலும் இருந்த தழும்புகள் தங்கபாப்பாவின் இடுப்புச் சொருகலுக்கு விளக்கம் சொல்லப் போதுமானதாக இருந்தது.

இருந்தாலும் ஒரு நப்பாசை. அவள் சட்டென்று பாய்ந்து பிடிக்க முடியாத தூரத்தில் பாதுகாப்பாக நின்று கொண்டு கெஞ்சிப் பார்த்தான்.

“அம்மாம்மா, ஒரே ஒரு புசுவானம்மா. ஒன்னே ஒன்னும்மா..”

“ஆமா ஒங்கப்பன் கொட்டிக் குடுக்கறதுலெ, புசுவானம் ஒன்னுதாங் கொறச்ச. என் வால்க்கெயே புசுவானமாக்கிட்டான் இந்த குடிகாரக் கம்மினாட்டி. சூடு போட்ருவேன். இங்கெருந்து போயிடு மருவாதியா. இங்கெ நிக்காதெ” அவள் கருணையோடு அவனை விரட்டினாள்.

அதற்குமேல் அங்கிருந்தால் சூடு போட்டுவிடுவாள். கையிலோ காலிலோ அசிங்கமான மஞ்சளாக தழும்பு ஏற்படும். அது காய்ந்தாலும் அசிங்கமாக நிலைத்துவிடும். அதோடு அதன் பிடிவாதமான எரிச்சல் அவன் மட்டுமே உணர்ந்தது. தன் கறுப்பு நிறத்தை இந்த முறையில் மாற்றிக்கொள்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.

எத்தனையோ முறை தீ அவன் கால்களோடும் கைகளோடும் பேசியுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும், தன் முறையீடுகளை எல்லாம் நிராகரிக்கும் போதும் சரி, தண்டிக்கும் போதும் சரி, அம்மா ஏன் அழுதுகொண்டே இருந்தாள் என்று அவனுக்கு முழுதுமாக விளங்கவில்லை. அப்பா காரணமாக இருக்கலாம்.

எப்போதும் போல அப்பா மயக்கத்திலிருந்தார். அவருக்கு எதுவும் தெரியாது. அவர் எப்போதுமே மிதந்துகொண்டிருப்பவர். தனக்காக அவர் ஏற்படுத்திக் கொண்ட பிரத்தியேக உலகத்தில். அங்கே மனைவியோ மகனோ வீடோ விஷேஷமோ எதுவும் கிடையாது. தனக்கு சூடு போடுவதற்கு பதிலாக அம்மா அப்பாவுக்கு போட்டிருக்கலாம். அவன் பலமுறை நினைத்ததுண்டு. தீயின் கோபம் அவரை ஒன்றும் செய்திருக்க முடியாது. அவனுக்குத் தெரியும்.

ஒருமுறை தன் கையில் இழுத்துவிட்டுப் போன ‘செங்கோ’லை அவன் அம்மா வைத்துவிட்டு (முருகராசின் காலில்தான்) அழுதுகொண்டே போன பிறகு ஒரு துணியை வைத்து பிடித்து அவன் எடுத்துப் பார்த்தான். அப்பாவால்தான் இத்தனையும் என்று தோன்றியது. அம்மா செய்யத் துணியாத காரியத்தை தான் செய்தால் என்ன என்று தோன்றியது.

எடுத்த வேகத்தில் அப்பாவின் பாதத்தில் வைத்துவிட்டு ஓடிப்போய் மரத்தின் மறைவில் நின்று பார்த்தான். அவன் அப்பா அதை பொருட்படுத்தவே இல்லாதது அவனுக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. தனக்கு மட்டும் ஏன் அது பயங்கரமாக சுடுகிறது? தானும் அப்பா மாதிரி ஆக முடியாதா என்ற ஏக்கம் பிறந்தது.

என்ன செய்வதென்று அறியாமல் நடந்து வந்துகொண்டே இருந்தான். மனம் போன, கால் போன போக்கில். பூத்திரி, தரை சக்கரம், புசுவானம், அனுகுண்டு, பாம்பு மாத்திரைகள், கேப்பு, துப்பாக்கி, கலர் தீக்குச்சிகள் எல்லாம் அவன் கண்ணெதிரே வந்து அவனிடம் விளையாட்டுக் காட்டின. அவற்றின் வண்ண மாயாஜாலம் அளவிட முடியாத சந்தோஷம் தருவதாக இருந்தது.

ஒரே ஒரு புசுவானம் மட்டுமாவது அம்மா வாங்கித் தருவதாக இருந்தால் அதற்காக இன்னொரு முறைகூட சூடு போட்டுக் கொள்ளலாம். ஆனால் அவனுடைய கலர்கலரான பிரச்சனைகள் எதையுமே கண்டு கொள்ளாமல் ஊர் தீபாவளிக்காக குதூகலப் பட்டுக்கொண்டிருந்தது. அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

வெளிச்சம் வருவதற்கு முன்பே அம்மா எழுப்பி விட்டுவிடுவாள். உடனே அவள் தருவதையெல்லாம் எடுத்துக் கொண்டு மலை ஏற வேண்டும். நாக்கனேரி போனால்தான் விறகு வெட்டி வர முடியும். அம்மா வெட்டி வெட்டிக் கொடுப்பதை சாயங்காலம் வரை இருந்து தூக்கி வரவேண்டும். இடையில் கஞ்சிதான். ஒரு டீக்கடை கூட கிடையாது. டீ குடிக்க ஊருக்குள் இறங்கித்தான் வர வேண்டும்.

இப்படியெல்லாம் அம்மாவுக்கு உதவி செய்தாலும் வருஷத்துக்கு ஒரு தடவைகூட கேட்பதை வாங்கித் தராவிட்டால் என்ன செய்வது? இனி அம்மாகூட மலைக்குப் போகவே கூடாது. அவன் முடிவு செய்து கொண்டான்.

அவனுடைய வருத்தத்தை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. எங்கு பார்த்தாலும், தெருவுக்குத் தெரு, வெடிச்சத்தம் காதுகளை அடைத்தது. மாரியம்மன் கோவில் தெருவில் சப்தம் ரொம்ப பலமாக இருந்தது. அது அவனை இழுத்தது.

போய்ப்பார்த்தபோதுதான் தெரிந்தது அது தீபாவளிக்காக கொளுத்தப்பட்ட பட்டாசுகளல்ல. வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் பூனையைக் கண்ட எலியாட்டம் ஸ்தம்பித்துவிட்டிருந்தன. யாரோ தலைவர் வருகிறாராம். அவருக்கு ஸ்பெஷல் மரியாதை. தான் வரும்போதும் மக்கள் இந்த மாதிரி மரியாதை செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான். அந்த சப்தமான மரியாதை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

நூற்றுக்கணக்கான வெடிகள் நடு ரோட்டில் வீணாக வெடித்துச் சிதறின. அதை யாரும் ரசித்ததாகவோ, தன்னைப் போல சந்தோஷப் பட்டதாகவோ தெரியவில்லை. நின்று கொண்டிருந்தவர்களில் சில பெண்கள் காதுகளைப் பொத்திக் கொண்டிருந்தனர்.

சரவெடி தொடர்ந்து வெடித்துக்கொண்டே சென்றது. வெடித்துச் சாவதில் அவைகளுக்கு அப்படி என்னதான் அவசரமோ? சில கணங்களில் சிதறிய தாள்களாகவும் துண்டுகளாகவும் கைகளில் ஒட்டும் ஒரு வித சாம்பல் நிற பொடியாகவும் மாறிப்போயின. ஒரு முனையில் பற்ற வைத்த ஒரு சின்ன கங்கு. அக்கினியின் குஞ்சு. ரோட்டையே அலற வைக்கிறது.

அவைகள் வெடித்து தங்கள் கடமையை முடித்துக்கொண்ட பிறகு கூட்டம் மெல்ல சாலையைக் கடக்க ஆரம்பித்தது. ஆனால் ஒரு விதமான வாடை காற்றில் கலந்திருந்தது. சிலர் கர்சீ·ப்களை வைத்து மூக்கைப் பொத்திக் கொண்டு சென்றனர்.

அந்த வெடிகளில் ஒரு சிலதையாவது தனக்குக் கொடுப்பதைப் பற்றி யாரும் யோசித்ததாக தெரியவில்லை. இனம் புரியாத துக்கம் அவன் தொண்டையில் வந்து அனுகுண்டு வெடியைப் போல அடைத்துக் கொண்டது. அவனும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். ஏதோ மற்றவர்கள் மாதிரி தனக்கும் ஒரு நோக்கம் இருப்பதைப்போல.

ஒரு வீட்டின் வாசலில் குழந்தைகள் நின்று மத்தாப்பு, பூத்திரி, தரை சக்கரம், புஸ்வானம் சகிதமாக எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்ததைப் பார்த்த அவன் அந்த வீட்டிற்கு எதிரில் போய் நின்று கொண்டான். தனக்குப் போட்டியாக யாரும் மறைத்துக்கொண்டு பார்க்காதது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. தன் எதிர் வீட்டு டிவியில் பார்த்த “அய்யன் பட்டாசுகள் படபடபட”வென அவன் மனதில் வெடிக்க ஆரம்பித்தன. அங்கிருந்த ஆஸ்பத்திரி நடைபாதையில் வசதியாக உட்கார்ந்து கொண்டான் முருகராசு.

எதிர்வீட்டு சின்னப் பையன் ஒருவன் கேப்புகளைக் கொண்டு வந்து கீழே பரத்தினான். ஒரு கல்லை எடுத்து வந்து ஒவ்வொன்றாக அடித்து வெடிக்க வைத்தான். அவன் ஒவ்வொரு அடிக்கும் அது வெடிக்கவில்லை. பல அடிகள் இலக்கு தவறி பட்டதால் கல் தரையை அடிக்கும் சப்தம் மட்டுமே கேட்டது. தான் அந்த இடத்தில் இருந்தால் ஒரே அடியில் நாலைந்தை வெடிக்க வைத்திருக்கலாமே என்று நினைத்து வருத்தப்பட்டான் முருகராசு.

ஒரு குட்டிப்பாப்பா வந்து ஒரு கொத்து பூத்திரிகளைக் காட்டியது. ஒரு பெண் வந்து கொளுத்திக் கொடுத்து குழந்தையின் கையைப் பிடித்து வட்டமாகச் சுற்றினாள். அவள் அதன் அம்மாவாக இருக்கலாம். நாம் ஏன் இந்த வீட்டின் பிறக்கவில்லை என்று முருகராசு நினைத்தான். தீயின் சந்தோஷம் வண்ணப்பூக்களாய் பாப்பாவின் கைகளைச் சுற்றிப் பூத்தன. சில பெரிய பையன்கள் வந்து தரைசக்கரங்களை விட்டனர்.

சிமெண்ட் தரையில் சிரித்த நெருப்பைப் பார்க்கப் பார்க்க முருகராசுக்கு பேரானந்தமாக இருந்தது. தன் உடம்பின் மேல் மட்டும் நெருப்பு ஏன் இவ்வளவு கோபம் காட்டுகிறது?

கடைசியாக புசுவானம் வந்தது. ஒரு மூன்று நான்கு. ஏதோ கலர் சினிமாவை டிக்கட் வாங்காமல் பார்ப்பதைப் போல முருகராசு பார்க்க ஆரம்பித்தான். அவைகளைக் கொளுத்த ஆரம்பித்த நேரத்தில்தான் ஒரு கூர்க்கா வந்து முருகராசை விரட்டினான்.

“டேய் போடா போ, இங்கெல்லாம் உக்காரக்கூடாது”. அவன் கையில் ஒரு கம்பும் முகத்தில் முரட்டு மீசையும் வைத்திருந்தான். அவனைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது.

அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காமல் வானம் பொத்துக்கொண்டது. மாண்டியா விவசாயிகளை அலட்சியப் படுத்திவிட்டு கபினி அணை தானே திறந்து கொண்டமாதிரி கொட்ட ஆரம்பித்தது. அந்த புஸ்வானங்களுக்கு உயிர் வருவதற்கு முன்பே மழை அவற்றின் உயிரைப் பறித்துக் கொண்டது. சில நிமிஷங்களில் ஊரின் வெடிச்சப்தங்கள் யாவும் செத்து அடங்கின. தீயின் பூக்கள் எங்குமே பூக்கவில்லை.

நனைந்து கொண்டே வானத்தைப் பார்த்தான் முருகராசு. அந்தப் பார்வையில் இருந்தது நன்றியா கோபமா சொல்லமுடியவில்லை.

- நவம்பர் 11. 2004 

தொடர்புடைய சிறுகதைகள்
"புள்ளெ வந்துட்டாளா?" தனது இரண்டு சக்கர லாரியை போர்ட்டிகோவில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக்கொண்டே கேள்வியை தூக்கி வீட்டுக்குள் வீசினார் அப்துல் காதிர். ஸ்கூலில் இருந்து ட்யூஷனெல்லாம் முடிந்து அருமை மகளார் ஆறுமணிக்கு மேல்தான் வருவாள் என்று அவருக்கும் தெரியும். ஆனால் அலுவலகம் விட்டு ...
மேலும் கதையை படிக்க...
“இதோ நாம் நம்மோட புனித கங்கையின் கரைக்கு வந்துட்டோம். இந்த புனித நகரம் நம்மோட பாவங்களையெல்லாம் போக்க நமக்கு உதவி செய்யும்”. காசிக்கு டூர் வந்தவர்களையெல்லாம் கங்கையின் கரைக்கு அழைத்து வந்து சொல்லிக் கொண்டே போனார் எஸ்கார்ட். அவர் முகத்தில் ஒருவித ...
மேலும் கதையை படிக்க...
1 பின் சீட்டின் இடது ஓரமாக நான். வலது பக்க ஓரமாக நஜீ. முன் சீட்டில் தம்பி தீனும் நண்பர் பிலாலும். நஜீ இன்னும் ஓய்ந்தபாடில்லை. அது இப்போது ஓயவும் செய்யாது. 'என்னட வாப்பாவே ' என்று கொஞ்ச நேரம். 'எனக்கு வாப்பா ...
மேலும் கதையை படிக்க...
“வாப்பா, ஜின்னுண்டா என்னா வாப்பா? “ தனது காலுறையைக் கழற்றி அந்தப் பெண் வாளியினுள் போட்டாள். வாளியை கிணற்றினுள் இறக்கினாள். தண்ணீரோடு அதை மேலே எடுத்தாள். நனைந்திருந்த காலுறையைப் பிழிந்து கிணற்றடியில் ஏக்கத்தோடு அவளை அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்த நாய்க்குட்டியின் வாயில் ஊற்றினாள். பால்குடிக்கும் ...
மேலும் கதையை படிக்க...
நான் ஒரு வங்கியில் மெசஞ்சராக இருந்தேன். பணிபுரிவோரையெல்லாம் ஒரு வடிகட்டுக்கு உள்ளாக்கியபோது எனக்கு மூட்டை கட்டிவிட்டார்கள். முதலில் எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. எல்லாவிதமான உத்தரவுகளையும் பெறுவதற்கே நான் பழக்கப்பட்டிருந்தேன். மணியடிப்புகள், இண்டிகேட்டரில் பச்சை சிவப்பு சிக்னல்கள் காட்டுதல், வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்கள், ...
மேலும் கதையை படிக்க...
பெற்றோர் பருவம்!
கங்கா ஸ்நானம்
குட்டியாப்பா
தேவதையும் பூனைக்குட்டியும்
உத்தரவிடு பணிகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)