மழையில் நனையும் புறாக்கள்

 

திடீரென்று வந்த மழையால் குளிர்ந்திருந்தது பூமி மட்டுமல்ல தீபாவின் மனதும் தான். அலுவலக வேலைக்கு நடுவில் அவள் கண்கள் ஜன்னலில் முட்டி மோதி நின்றது. அங்கே சில புறாக்கள்.

மழையில் நனையும்

அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தாள் தீபா. அவை மழையில் நனைந்துகொண்டிருந்தன. நனைந்ததென்னவோ அவை தான். இவளுக்கு உடம்பு சிலிர்த்தது. அவை தலையை உடம்புக்குள் புதைத்தும் தலையைக் குனிந்தும் இறகுகளை மடக்கியும் மழையில் நனைந்தபடி இருந்தன. மழையே ரசிக்க இன்பமானது. மழையோடு இந்த காட்சியும் அவள் மனக்காயங்களுக்கு மருந்தாய் இருந்தது.

சந்தியா தான் நெத்திவிட்டாள். ‘ம்ம்…போதும்…யாராவது பார்க்கப்பொறாங்க’.

தன் நிலை உணர்ந்த தீபா அங்கிருந்து பார்வையை அகற்றிவிட்டு வேலையில் மூழ்கினாள்.
ஆனாலும் நிலைகுத்தி நிற்கவில்லையென்றாலும் அவ்வவ்போது அவள் கண்கள் ஜன்னலுக்கும் கணிப்பொறிக்குமாய் உலாவிக்கொண்டு தான் இருந்தது. மனம் வேலையிலும் வீட்டு நினைப்பிலுமாய் சதிராடிக்கொண்டிருந்தது.

பிரபாவைப் பிரிந்து மூன்று மாதங்கள் ஆகிறது. பிரபா நல்லவன். அதனால் தான் ஆசை ஆசையாய் அவனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாள். வீட்டை பகைத்தாள். நன்றாகத்தான் போயிற்று மூன்று வருடம். அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான்.

ஒன்றுமே இல்லை. அற்பக்காரணத்தினால் ஆரம்பித்தது அவர்களுக்குள் பிரிவு. இரண்டு பேருமே ஒரே ஆபிஸ். ஒரே மாதிரியான பொஷிஷன். கிட்டதட்ட ஒரே மாதிரியான சம்பளம். அவன் நார்மல் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாமே கிடைத்துவிட்டது என்று இயல்பாய் வேலையைச் செய்து விட்டுப்போக அவள் மட்டும் தன் உதறி தள்ளிய உறவுகளுக்கு முன் உயர்ந்து காட்ட நினைத்தாள். அதுதான் அவளை இந்த கதிக்கு ஆளாக்கியது. இன்று உறவுகளின் முன் தலைகுனிந்து நிற்கக் காரணமாய் போயிற்று. வீடு,வேலை, மேற்படிப்பு என இவள் எப்பவும் ஓடிக்கொண்டே இருக்க வேலை முடிந்த பின் நண்பர்கள்,சினிமா,அரட்டை என இயல்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தான். இவள் கடமைக்குச் சிரித்தாள். ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்தாள். குழந்தையைக்கூட தள்ளிப்பொட்டாள். அதிலேயே ஒரு சின்ன பிரச்சனை ஆரம்பித்தது.பேசிப் பேசி அவனை சமாதானப்படுத்தினாள்.

ஒரு கட்டத்தில் மேற்படிப்பு முடித்ததோடு வேலையை முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருந்தாள். இனி குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது வந்தது அந்த இனிய செய்தி.ஆம் தீபாவிற்கு இனிமை சேர்த்த அந்த செய்தி பிரபாவிற்கு கசக்கச்செய்தது. வெளியூர் மாற்றத்துடன் கூடிய பிரமோஷன் என்ற செய்தி தான் அவர்களுக்குள் அந்த கசப்பை வரவழைத்திருந்தநது. அதற்குப்பிறகுத் தொட்டதெற்கெல்லாம் வம்பிழுத்துக்கொண்டே இருந்தான் பிரபா. ‘பிரமோஷன் வேண்டாம் என்று சொல்’ என்று வாதாடிக்கொண்டே இருந்தான். நம் உறவுகளுக்கு இடையே நாம் உயர்ந்து நிற்க வேண்டாமா? என்று இவள் புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

அவன் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.தன் மனைவி எழுந்து நின்றால் தான் தலை குனிய வேண்டி வரும் என்று நினைத்தான்.அவள் வேலை மாற்றத்துக்கான நாள் நெருங்கிக்கொண்டே இருந்தது. இவள் அந்த ஊரில் உள்ள ஹாஸ்டலை நெட்டில் தேடிக்கொண்டிருந்ததை கவனித்தவனுக்கு கோபம் சுள்ளென்று ஏறியது.

முடிவெடுத்தாச்சுப் போலிருக்கே?

குரல் கேட்டு திரும்பிய இவள் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

‘அப்ப என் பேச்சைக் கேட்க மாட்டே?’ அவன் முகம் கோபத்தால் சிவந்து கொண்டிருந்தது. இவள் அவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று அமைதி காத்தாள். அந்த அமைதி அவன் உஷ்ணத்தை மேலும் கூட்டியது.

‘அப்ப நானும் ஒரு முடிவெடுத்திருககிறேன்’. என்ன என்பது போல் இவள் நிமிர்ந்தாள்.
‘நாம டைவர்ஸ் பண்ணிடலாம்’. என்றான். கழுத்தை யாரோ நெரிப்பது போல் இருந்தது. மூச்சுவிடக் கஷ்டமாயிருந்நது. அம்மா அப்பா தம்பி, தங்கை என அனைவரின் முகமும் ஒரு நொடியில் வந்து போயிற்று. காதல் கல்யாணம் என்ற பெயரில் பெரிய தப்பு பண்ணிட்டமோ? என்று தோன்றியது.

இவனும் இல்லையென்றால் எங்கு போய் நிற்பது? என்ற கேள்வி எழுந்தது. திக்கற்றுப்போனது போல் தோன்றியது.ஆனால் இப்படி வேதனைப்பட்டு கடைசியில் அவன் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று அவன் எய்தும் கடைசி அம்பு இது என்றும் புரிந்தது.
இப்படி பிளாக்மெயில் செய்து தன்னைக் கட்டுப்படுத்த நினைக்கும் அவனோடு கொஞ்ச காலத்திற்கு தள்ளி நிற்பதே சரியன்று பட்டது.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். ‘சரி’ என்று சொல்லி மறுபடி கண்ணை கணிணிக்குள் புதைத்துக்கொண்டாள்.படீரென்று கதவு அறையும் சத்தம் கேட்டது.ஏற்கனவே இருந்த படபடப்போடு இதவும் சேர்ந்து இதயம் வலிப்பது போல் இருந்தது.

‘தீபா சாப்பிடப் போலாமா?’ சந்தியா தான் மறுபடி உலுக்கினாள்.

‘இல்லைப்பா எனக்கு பசியில்லை’.

‘கொஞ்சமாவது சாப்பிடு வா.லஞ்ச் டைம் முடிந்துவிட்டால் அப்புறம் சாப்பிட முடியாது’.
‘இல்லைப்பா எனக்கு வேண்டாம். நிஜமாகவே சாப்பிட பிடிக்கவில்லை’. வற்புறுத்திப பயனில்லை என்றதும் சந்தியா என்ன தான் ஆச்சு இவளுக்கு? என்று புலம்பியபடி கீழே போனாள். நைட் தான் ரிசல்ட் வாங்கி வந்திருந்தாள். பாசிட்டிவ். எதிர்பார்க்கவில்லை தான். தான் கொஞ்ச காலம் தளர்த்திய பிடிகளை சண்டை வந்த பிறகு மறந்து தான் போயிருந்தாள். சண்டை,ஊர் மாற்றம்,பிரிவு என சரியாக சாப்பிடாதது,மனக்குழப்பம் இதனால் இங்கு வந்ததிலிருந்தே சுறுசுறுப்பில்லாமல் தான் இருந்தாள். நேற்று ரொம்பவும் உடம்பு படுத்தி எடுக்க அருகிலிருந்த லேடி டாக்டரைப் போய்ப் பார்த்தாள்.

‘கடைசியாக தலைக்கு எப்ப குளிச்சீங்க?. என்று சிரித்துக்கொண்டே அவர்கேட்க, அப்போது தான் உறைத்தது இவளுக்கு. சொன்னாள். ‘கூட யாரும வரலையா?’

‘ம்ஹும்…’

டெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். எடுத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் முடிவு வந்தது. இவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அவனுக்குச் சொல்வதா? வேண்டாமா என்றும் புரியவில்லை.

இரவு நெடுநேரம் விழித்திருந்தாள். காலை கண்விழிக்கும் போதே சில்லென்று வீசியது காற்று. காற்று சிறு தூறலுடன் கூடிய மழை மனதுக்கு இதமாக இருந்தது. மனதின் சுமைகளை அந்த மழையில் இறக்கி வைத்துவிடத் தோன்றியது.

ஒவ்வொரு தடவையும் தப்பு தப்பாக முடிவெடுக்கிறோமோ? என்று தோன்றியது.பிரபாவை விட்டு விலகியது தவறோ? என்று தோன்றியது. அம்மா அப்பாவிடம் சென்று மன்னிப்புக் கட்டால் ஏற்றுக்கொள்வார்களா? இல்லை பிரபாவிடமே சென்று சரணடைந்துவிடலாமா? என்ற கேள்விகளுக்கான பதிலை இந்த புறாக்கள் தந்துவிட்டது போன்றதொரு உணர்வு தான் அவளின் மனதுக்கு இதமளித்தது. அதை மஐழ அளித்திருந்தது.

மழையில் குறுக்கிக் கொண்டு நிற்கும் இந்த புறாக்களுக்கென்ன ஒரு மாடம் கூடவா கிடைக்காது மறைந்து கொள்ள, ஒரு கோயில் கூடவா இல்லை அதன் குளிரடக்க… பின் ஏன் அவை நனைகின்றன?

அந்த மழை, அந்த சுதந்திரம் அவற்றிற்குப் பிடித்திருகக வேண்டும். அதற்காய் அந்த குளிரை அவை தாங்கி தான் ஆகவேண்டும்.

யாக்கைக்கு அலையும் காக்கைகளுக்கிடையே நடுவே வாழ்ந்தாலும என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரிந்தே இருந்தது. இந்த வலியும் நான் விருமபி ஏற்றுக் கொண்டது தான். இந்த வலி கூட சுகமாகத் தான் இருக்கிறது. யார் காலிலும் சென்று விழ வேண்டிய அவசியமில்லை. நான் தவறு செய்திருந்தால் பிரபாவிடம் போய் நிற்பதில் தவறில்லை. நான் எந்த தப்பும் செய்யவில்லை. அவனாக வந்தால் வரட்டும் என்று தனக்குத் தானே பேசிக்கொண்டவள் கணிப்பொறி முன் சென்று அமர்ந்தாள்.

”பிரபா இன்று நீ என்னுடன் இல்லை. ஆனால் உன் வாசனை என்னோடு வந்துவிட்டது. என்னோடு இதற்காக பலமுறை சண்டையும் போட்டு இருக்கிறாய். நீ விரும்பிக் கேட்ட அந்த விஷயம் இப்போது நடந்து இருக்கிறது. கன்சீவ்வாக இருக்கிறேன். இனியும் டைவர்ஸ் அவசியம் தானா? யோசித்துச் சொல். உன்னுடைய எந்த முடிவானாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்…”

அன்புடன்
தீபா.

மெயிலை தட்டிவிட்டாள். மழை நின்ற பிறகு சிறகுகளை உதறி சிலிர்த்து பறந்து போகும் புறாக்களையே பார்த்துககொண்டிருந்தாள். மனசு சில்லென்றிருந்தது.

- இந்த கதை சு.ஸ்ரீதேவி என்ற பெயரில் குமுதம் சிநேகிதியில் 2013 ஆண்டு ஜுலை மாதம் வெளிவந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
நெஞ்சம் வலிப்பது போன்று இருந்தது. கல் போன்ற பாரம் நெஞ்சை அழுத்துவது போல் இருந்தது. எட்டு வருட வாழ்க்கை ஒரு நொடியில் மாறிப்போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மனத்திலும் சுமை, கையிலும் சுமை. எப்படி தாங்கப்போகிறேன் கடவுளே! கடவுள்! என்ன மாதிரியான கடவுள் ...
மேலும் கதையை படிக்க...
இது என்ன மாதிரியான மனநிலை? சந்தோஷமா?சந்தோஷம் என்று எப்படி இதைச் சொல்ல முடியும்? வருத்தத்திற்குரிய செயலல்லவா இது. துக்கமான மனநிலை என்பதா?துக்கம் என்றும் சொல்லமுடியவில்லை. காற்றில் பறக்கின்ற இறகு போல மனது மட்டும் லேசாக இருக்கின்றது. ஆனால் கண்ணீர் தடையின்றி சுரந்து ...
மேலும் கதையை படிக்க...
“சந்திரா... சந்திரா... இங்கே...இங்கே...” என கை காட்டிய படி ஓடினாள் கன்னியம்மாள். கூட வந்த அவள் மகள் மங்கைக்கு கோபமாக வந்தது. எதிர் திசையில் சென்றுக்கொண்டிருந்த சந்திரன் பார்த்ததும் தான் நிறுத்தி மூச்சுவிட்டாள். தன் வயதை மறந்து ஓடியது கன்னியம்மாளுக்கே வெட்கமாக ...
மேலும் கதையை படிக்க...
இன்று ஏனோ ஆஸ்பத்திரி கிளம்பும் போதே குழந்தை அடம்பிடித்தாள். என்ன சொன்னாலும் கேட்கவில்லை. மாமியாரும், கணவரும் அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைததுச்சென்றனர். குழந்தையின் அழுகை என்னுள் காரணமற்ற கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. சே!என்ன வாழ்க்கை இது? என்ன டாக்டர்? பொல்லாத டாக்டர்! ...
மேலும் கதையை படிக்க...
பனித்துளி சுமக்கும் புற்கள்
தீராக்காதல்
அன்பின் விழுதுகள் அறுவதே இல்லை
பெண் ஜென்மம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)