Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மலரின் இலக்கியம்!

 

மலர் தான் இப்படியான தர்மசங்கடமான வாழ்வுக்குள் தள்ளப்படுவேன் என்பதை தன்பாடசாலை வாழ்நாள்களில் அறிந்திருக்கவில்லை. என்று ஏ.எல் சோதனை மறுமொழி வந்ததோ அன்றே அவளின் பட்டாம்பூச்சி சிறகுகளை இழந்து தனிமரமானாள்.

பாடசாலையில் அவள் ஒரு அழகிய தேவதை. விளையாட்டென்ன? கலைநிகழ்வுகள் என்ன? எல்லாவற்றிலும் அவள்தான் முதல். இதனால் பல பதக்கங்களைப் பெற்றவளாக இருந்தாள்.அவளைச்சுற்றி ஒரு வட்டம் எப்போதும் இருக்கும். இந்தவட்டத்தில் அவள் தனித்து தெரிவாள் அவளின் உயரம் காரணமாகவும்.

மலர் கதை, கவிதை எழுதுவதில் இலக்கியங்களை விமர்சிப்பதில் ஆர்வம் கொண்டவள். தன் அழகான கையெழுத்தில் அவள் எழுதிய கவிதைகள், கதைகள் ஏராளம். அவைகளில் அதிகம் பத்திரிகைகள், சஞ்சிகைககளில் இடம்பிடித்தும் உள்ளன. தன் வட்டத்தில் சிறகொடித்துப் பறந்தவளை பெற்றோரின் ஆசை சிறகோடித்து விட்டது.

“பிள்ளை நீ டொக்டராக வேணும் எண்டதுதான் எங்கட கனவு, ஆசை. அதை நீ நிறைவேற்ற வேணும். “ஓ. எல்.” இல் எட்டு ஏ எடுத்துவிட்டு ஆர்ட்ஸ்படித்து என்ன செய்யப்போகின்றாய்? அப்பா சொல்கிறதைக் கேட்டு சயன்ஸ் படி” என்று அம்மா தீர்மானமாக கூறிவிட்டாள். இதுவே மலர் சயன்ஸ்படிக்க காரணமாகியது. மலரால் சயன்ஸில் முழு ஈடுபாட்டுடன் படிக்கமுடியவில்லை. இதனால் மூன்று தர ஏ. எல். முடிவுகளும் தோல்வி. அவளுடன் படித்த நண்பர்கள் எல்லோரும் ஒவ்வொருதுறைக்கு சென்றார்கள். ஓ.எல். இல் சுமாராக இருந்தவர்கள் கூட ஏதோ ஒரு துறையில் படித்து வேலையாகிவிட்டார்கள். மலரால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

உறவுகளின் கேலிப்பேச்சுகளும், தாய், தந்தை, சகோதரர்களின் தொடர் அறிவுரைகளும் அவளை நடைப்பிணமாக்கின. வாழ்க்கையே சூனியமாகிப்போனது. பல வேலைகளுக்கு மனுப்போட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. அவளின் வசந்தம் இறுகக் கதவடைத்துக்கொண்டது. இலக்கியத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

காலந்தான் எவருக்காகவும் ஓரிடத்தில் இருப்பதில்லையே! அது தன்பாட்டுக்கு ஓடி நான்கு வருடங்கள் கழிந்துவிட்டன. இபபோது பெற்றோர் மலருக்கு திருமணம் செய்துவைப்பதில் முனைப்பாக இருந்தார்கள். சொந்தங்கள், நண்பர்களிடம் மலரின் சாதகத்தை கொடுத்துப் பார்த்தும் ஒன்றும் சரிவரவில்லை. பல புறோக்கர்மார் வீடுவந்து போய்க்கொண்டு இருந்தனர். மலரின் பெயர் தெரியாதவர்களிடமெல்லாம் மலரின் சாதகம் போய்ச்சேர்ந்தது.

தாய் இறுதியில் சாத்திரி ஒருவரிடம் மலரின் சாதகத்தைக் காட்டினார். உங்கள் மகளுக்கு காலசர்ப்ப தோசம் உள்ளது. அதனால் கலியாணம் பிந்தித்தான் நடக்கும், அதுவும் ஆக பிந்தவிடாதேயுங்கோ பிறகு பிள்ளைப்பேறும் அரிதாகும் என்று சாத்திரியார் வேறு நன்றாக வெருட்டி விட்டார்.

பிறகென்ன தோச நிவர்த்திக்காக கோயில் கோயிலாக மலர் ஏறி இறங்க மலரின் சாதகத்தில் உள்ள தோசமும் பிரபல்யமானது. தோச பிரபல்யம் வேறு பிரச்சினையாகியது. அம்மா ஒவ்வொரு நாளும் அவளை வைத்துப் புலம்பத் தொடங்கினாள். அரச உத்தியோக மாப்பிள்ளைமார் உத்தியோகமுள்ள பெண் வேண்டுமென்றனர், வியாபாரிகளோ இது தோசமான சாதகம் என்ற ஒதுக்கினர். பொறுத்திருக்கமுடியாத பெற்றோர் மலரின் இரு தங்கைகளுக்கும் முதலில் திருமணம் செய்து வைத்தனர். மலர் இன்னும் உடைந்து போனாள். பெற்றோருடன் தனித்தாள்.

மலரின் வாழ்க்கையை நினைத்து பெற்றோர் நோயாளர்களாயினர். மலருக்கும் முப்பத்தைந்து வயதாகிவிட்டது. சாத்திரியார் சொன்னது உண்மையோ? பொய்யோ? அதிசயம் நிகழத்தான் செய்தது. மலருடன் பாடசாலையில் படித்த ஞானி வெளிநாட்டில் 18 வரடங்கள் உழைத்து சகோதரர்களையம் வெளிநாட்டுக்கு எடுத்துவிட்டு, உழைத்த பணத்துடன் ஊருக்கு வந்திருந்தான்.

ஊர்ப்புதினங்களுடன் மலரின் நிலையையும் அறிந்தவன், நேரே மலரின் வீட்டுக்கு சென்றான். அங்கு மலரின் தாயிடம் மலரை திருமணம் செய்யும் ஆசையைக் கூறினான். மலரின் பெற்றோருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சந்தோசத்தில் கண்கள்ில் இருந்து நீர் திரண்டது. மலரை அழைத்து சம்மதம் கேட்டனர்.

மலருக்கு ஞானியை தெரிந்திருந்தது. பழக்கமில்லை. பாடசாலையில் அவ்வளவு திறமையான மாணவனும் இல்லை. எனினும் விதிப்படி நடப்பது நடக்கட்டும் என்று சம்மதத்துக்கு அறிகுறியாக தலையை ஆட்டினாள். ஊர் வாயில் விரல் வைத்தனர். மலருக்கு திருமணம் நடந்ததற்காக அல்ல, முதிர் குமரிக்கு காசுக்கார மாப்பிள்ளை கிடைத்தானே என்று.

எவ்வித ஆடம்பரமும் இன்றி திருமணம் முடிந்தது. ஞானி மீண்டும் வெளிநாடு சென்றான். சென்ற அடுத்த மாதம் மலரையும் வெளிநாட்டுக்கு கூப்பிட்டுவிட்டான்.

மலர் எழும்புங்கோ, இண்டைக்கு ஒருஇலக்ககிய கூட்டத்துக்கு போகவேண்டும். என்று கூறிய ஞானியை ஆச்சரியமாக நோக்கினாள் மலர். பாடசாலைக் காலத்தில் இருந்த ஞானியை மலருக்குத் தெரியும். அவனுக்கு கலை அலக்ககியங்களில் ஈடுபாடே இல்லாதவன். அவனா? இன்று இலக்கிய வழாவுக்கு அழைக்கின்றான்? என்ன அதிசயம் என்ற நினைத்தாள். அத்துடன் தான் எவ்வளவு தூரம் இலக்கியத்தை விட்டு… தனது வாழ்வில் சுமார் 20 வருடங்களை சூனியமாக்கி விட்டதை நினைத்து வெட்கினாள். திருமணம் ஏற்பாடனபோது ஏற்படாத புத்துணர்வு இன்று ஏற்பட்டது.

எந்தவித மறுப்புமின்றி வெளிக்கிட்டாள். விழாமண்டபத்துள் நுழைந்தவுடன், தன்னையும் தன் கணவரையும் அங்கிருந்தவர்கள் வரவேற்றதை பார்த்து ஆச்சரியமடைந்தாள். தன்னையும், ஞானியை அவர்கள் மேடைக்கு அழைத்துச்சென்றபோது மேலும் ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச்செல்லப்பட்டாள்.

மேடையில் இருக்கையில் அமர்ந்தவளின் பார்வை அருகில் இருந்தவரின் கையில் இருந்த அழைப்பதழை பார்த்தது. அதில் மலர் என்று ஏதோ வாசகம் தெரிய அழைப்பதழை வேண்டிப்பார்த்தவளுக்கு, “மலரின் கவிதைத் தொகுப்பு” வெளியீடு என்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஆனந்தமும் திக்குமுக்காடினாள். நம்புவதற்கு கடினமாக இருந்தது. தானா? அல்லது வேறு மலரா? என்ற சந்தேகம் எற்பட்டது.

மேடையில் விழாத்தலைவர் பேசத்தொடங்கியவர், எடுத்த எடுப்பிலேயே , “தனது மனைவியின் பாடசாலைக்கலத்தில் எழுதிய கவிதைகளை கவனமாகச் சேகரித்து, அதைத் தொகுப்பாக வெளியிட்ட கணவன் ஞானசேகரனை பாராட்டாமல் இந்த விழாவைத் தொடங்க முடியாது” என்று அவர் முழங்கத்தொடங்கியிருந்தார். மலரின் கண்கள் பனித்தன பனித்த கண்களூடு கணவன் மிக அழகாகத் தெர்ந்தான். இனி மலரின் மனக்கதவும், இலக்கிய கதவுகளும் திறந்தே இருக்கும். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். மணமகனும் மணமகளும் உத்தியோத்தர்கள். திருமணம் காலை பத்து மணிக்கும் பதினொருமணிக்கும் இடைப்பட்ட நல்வேளை. அதனால், வழமையாக வாரஇறுதியில் செய்யும் வேலைகளை முடித்துக்கொண்டு திருமணத்துக்கு போவது இலகுவாக இருந்தது. திருமண மண்டபத்தை அடைந்தபோது, ...
மேலும் கதையை படிக்க...
காலை நேரக்கடமை மருத்துவர் வைத்தியசாலையின் உள்ளக பெண் நோயாளர் விடுதியில் உள்ள நோயாளிகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நோயாளிகளும் தங்களது வருத்தங்களை பயத்துடனும், கவலையுடனும், விரக்தியுடனும் சொல்லிக்கொண்டிருந்தனர் என்பதைவிட, தங்களது வேதனைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பிரதிபலித்துக் கொண்டிருந்தனர். திடீரென மருத்துவரின் குரல் உயர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
சந்திரனின் மனம் மிகுந்த குழப்ப நிலையில் இருந்தது. மனைவி பிள்ளைகளோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் புதிய உறவினர்களின் வருகையை. மனைவி, பிள்ளைகளுக்கு வருபவர்கள் புதிய உறவினர்கள். ஆனால் சந்திரனுக்கோ, அவர்கள் விடுபட்ட மிகப்பழைய உறவினர்கள். அவர்களின் வருகை சந்திரனுக்கு எவ்வித மகிழ்ச்சியையும் ...
மேலும் கதையை படிக்க...
தாரணியின் வீடு இன்று களைகட்டியிருந்தது. வீடு முழுவதும் உறவினர்கள் நிரம்பியிருந்தனர். வாழ்க்கையின் அசுரவேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் உறவினர்களை, சகோதரர்களை மறந்து அவர்களின் அன்றாட வாழ்வில் இருந்து விலகி இயந்திர வாழ்க்கையில் சிக்குண்டிருந்தவர்கள், தாரணியின் தங்கையின் திருமணத்துக்காக தமது அன்றாட வாழ்க்கையில் இருந்து சிறிதுவிலகி ...
மேலும் கதையை படிக்க...
இன்று திங்கட்கிழமை ஆதலால் காலையில் இருந்தே நோயாளர்கள் வந்தவண்ணமிருந்தனர். பலரும் பலவித உபாதைகளைப் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். என்னிடம் மருந்து எடுப்பதைவிட தங்களின் சுகதுக்கங்களை பகிர்வதிலேயே குறியாக இருந்தனர். நானும் எவ்வளவு நேரந்தான் ஆச்சரியக்குறிகளையும் கேள்விக் குறிகளையும், சந்தோசரேகைகளையும், துக்கக்கோடுகளையும் முகத்தில் காட்டிய வண்ணமிருப்பது? ...
மேலும் கதையை படிக்க...
கலியாண(வீடு) ஹோல்!
தேவகியின் கனவு!
ஒட்டாத உறவுகள்!
மீளும் மனிதம்…
என்னதான் உங்க பிரச்சினை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)