Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மறு

 

கல்லூரி நாள்களில் திருச்சி புனித ஜோசப் கல்லூரிக்குத் தினசரி காலையில் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனுக்கு நடந்து போய்,ஒன்பது மணி ‘ஆபீஸர்ஸ் ரெயிலை‘ப் பிடித்து டவுன் ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து ஆண்டார் தெரு அல்லது பட்டர்வொர்த் சாலை வழியாக மண்டபங்களை எல்லாம் தாண்டிப்போய், பத்து மணிக்குள் போய்ச் சேருவதற்குள் தினசரி அவசரந்தான். இருந்தாலும் உற்சாகமாகவே இருந்தது. மஞ்சளாக சீஸன் பாஸ் எடுத்துத் திருப்புகழ் பஜனையும் சீட்டாட்டமுமாக, அந்த வண்டியில் சன்னலோரமாக, காலரில் கைக்குட்டையைச் செருகிக்கொண்டு காவேரி வரும்போது எட்டிப் பார்ப்பதெல்லாம் குஷிதான். ஒரு விஷயந்தான் சரிப்பட்டு வரவில்லை, பாட்டி தினப்படி கைச் செலவுக்கு என்று கொடுக்கும் காசு.

ஒரு நாள் கல்லூரியிலிருந்து தாமதமாக வந்தால் ஊரைக் கூட்டிவிடுவாள். என் நண்பர்களில் எவன் படிக்க வருவான், யார் கொக்கோகப் புத்தகம் கொண்டுவருவான் என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரியும். என் புத்திசாலித்தனத்தைப் பற்றி அவளுக்குச் சந்தேகம் இல்லை. இறந்துபோன தாத்தா (அவள் கணவர்) பி.ஏ., படித்தபோதே எம்.ஏவுக்குப் பாடம் எடுத்தாராம். இது எந்த வகையிலும் சாத்தியமில்லை என்று சொல்லிப் பார்த்தும் பிரயோசனம் இல்லை.நாலணாவுக்கு மேல் கொடுத்தால் பேரன் கெட்டுப் போய்விடுவான் என்று பாட்டிக்குத் தளராத நம்பிக்கை. பெற்றோர்களை விட்டு அவளிடம் வளர்ந்ததால் என்னுடைய நற்பெயருக்குப் பாட்டி பொறுப்பேற்றுக்கொண்டு இருந்தாள்.

அவர் புத்திசாலித்தனத்தில் கால் பங்கு எனக்கு இருந்தால் போதும். ஆனால், அம்மா வழித் தாத்தா சினிமா எடுத்துத் தேர்தலுக்கு நின்று சீரழிந்தவர். அவர் சுபாவம் என்னிடம் தலைகாட்டாமல் பாதுகாக்கத்தான் கைச்செலவுக்கு நாலணா.

நாலணாவுக்கு அந்த நாட்களில் சுமாராக ‘வாங்கும் பலம்‘ இருந்தது என்று சொல்லத்தான் வேண்டும். தெப்பக்குளத்தை ஒட்டி இருந்த ‘பெனின்சுலர் கபே‘யில் ஒரு சாதா தோசையும் காபியும் கிடைக்கும். அவ்வளவுதான். சாப்பிடும் அயிட்டத்தை மாற்ற முடியாது. இனிப்புப் பட்சணம் எல்லாம் பேச முடியாது. சினிமா போக முடியாது. எட்டு நாளைக்கு காபி அல்லது தோசை என்று ஒன்றைத் தியாகம் செய்து சேர்த்து வைத்துதான் போக முடியும். இது சிரமம். எனவே, தக்க சமயங்களில் கல்லூரிக்குச் சென்று தக்க சமயங்களில் திரும்பி வந்து நல்லபிள்ளையாகவே இருந்தேன். இப்படிப்பட்டவனுக்கு மூன்று ரூபாய் முழுசாய்க் கிடைத்தால் சபலம் ஏற்படும் இல்லையா?

மூன்று ரூபாய்க்கு உரியவள் செவளா என்கிற வேலைக்காரி. அவளுக்கு அப்போது முப்பது வயசுக்குள்தான் இருக்கும். விதவை.

சின்னராசு என்ற அழுக்கு டிராயர் பையனை எப்போதும் உடன் வைத்திருப்பாள். காலை ஐந்து மணிக்கு வருவாள். திண்ணையில் படுத்திருக்கும் என்னைப் பாயோடு தள்ளிவைத்துவிட்டுப் பெருக்குவாள். என் மேல் நீர்த்திவலை படும்படியாகச் ‘சளக் சளக்‘ என்று வாசல் தெளிப்பாள்.

‘ரங்கராசு, ரங்கராசு‘ என்று என்னை இரு முறை கூப்பிட்டுப் பார்ப்பாள். அப்படியும் நான் எழுந்திருக்கவில்லை என்றால், பாயோடு சேர்த்து இழுத்துத் திண்ணையிலிருந்து கவிழ்த்து என்னை எழுப்பிவிடுவாள். நான் வேடர்கள் தூரத்துவது போல் எல்லாம் கனவு கண்டு, இறுதியில் பாழுங்கிணற்றில் விழுவதற்கு முன் எழுந்திருந்து அவளை, ‘மூதேவி, முண்டம்‘ என்றெல்லாம் திட்டுவேன்.

அவள் சிரித்துக்கொண்டு, ”என் ராசா, பள்ளியோடத்துக்கு நேரமாவுதில்லே” என்று மறு படுக்கையைப் பற்றி சிந்திக்க நேரம் தராமல் சுருட்டிவிடுவாள். உடனே, குளித்தாக வேண்டும். இல்லையேல் பல் தேய்க்கும்போதே இடுப்பு வேட்டியை உருவிக்கொண்டு போய்விடுவாள். இவளைப் பற்றிப் பல முறை புகார் செய்தும் பாட்டி இவளை அதட்டியதில்லை.

அதிகாலைப் புயல். முப்பது நிமிஷத்தில் வாசல் தெளித்து வீடு பெருக்கிப் பற்றுப் பாத்திரம், பாய்லர் தேய்த்து முடித்துவிடுவாள். வாரத்தில் சில தினங்களில் மாவு அரைப்பது, கடைக்குப் போவது போன்ற உபரி வேலைகள் எல்லாம் சேர்த்துச் சம்பளம் மூன்று ரூபாய்.

இந்த மூன்று ரூபாயைத்தான் நான் ஒரு முறை திருடினேன்.

தற்செயலாகத்தான் நிகழ்ந்தது. கல்லூரி இல்லாத ஒரு நாள் லாலிஹாலில் வழக்கம் போல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தபோது, குல்ஸா என்கிற ரங்கநாதன், ”ஏய், நீ அவ்வளவு பணக்காரனாடா” என்று கேட்டது எனக்குப் புரியவில்லை.

”பார்டா, புஸ்தகத்தில் என்ன அலட்சியமா ரூபாயைச் செருகி வெச்சிருக்கான்?”

பார்த்தபோது எனக்குத் திக்கென்று ‘ஜூலியஸ் சீஸர்‘ புத்தகத்தில் மூன்று ஒரு ரூபாய் நோட்டுக்கள் செருகியிருந்தன.

”வேண்டாம்னா குடுத்துடுப்பா? கெயிட்டில மாட்னி போய்க்கறேன்.”

என் மனதில் எண்ணங்கள் ஓடின. எப்படி இந்த ரூபாய் என் புத்தகத்துக்குள் வந்திருக்க முடியும்? யோசித்ததில் புரிந்தது. இந்தச் செவளா கிறுக்கு சம்பளப் பணத்தை வேலை செய்யும்போது பத்திரமா இருக்கட்டும் என்று அலமாரியில் என் புத்தகத்தில் செருகி இருக்கிறாள். நான் கவனியாமல் எடுத்து வந்துவிட்டேன். ”டேய்! இந்தப் பணம் என்னுது இல்லேடா. எங்க வீட்டு வேலைக்காரி சம்பளப் பணம்” என்று சொல்வதற்குப் பதிலாக, ”வாடா, ஐ.ஸி.எச். போகலாம்” என்றேன்.

”ஏதுடா பணம்?”

”அதெல்லாம் கேக்காதே, வரயா… இல்லையா?”

ஐ.ஸி.எச். என்பது விசிறித் தலைப்பாகை வைத்துக்கொண்டு வெயிட்டர்கள் பீங்கான் கோப்பைகளில் காபி கொண்டுவரும் ‘ஒஸ்தி‘ ஓட்டல். டிப்ஸ் எல்லாம் வைக்க வேண்டிவரும். கப் காபியே நாலணா. அங்கே போய் நான், குல்ஸா, பாபு மூவரும் காபி சாப்பிட்டோம். ஸ்பென்ஸர் பக்கமாகப் பெட்டிக் கடை இருக்குமே, அங்கே போய் ‘ப்ளேயர்ஸ்‘ சிக்ரெட் பிடித்தோம். ‘பருவ மங்கை‘ என்ற புத்தகத்தை எட்டணாவுக்கு வாங்கினேன். கெயிட்டியில் ராஜ்கபூர் ‘ஆவாரா‘ படம் இரண்டாவது தடவை பார்த்தோம். இருட்டில் இன்னொரு சிகரெட் பிடித்தோம். குல்ஸா மட்டன் கட்லெட் சாப்பிடலாம் என்றான். நான்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஒரு நாளைக்கு இத்தனை பாவங்கள் போதும் என்று தோன்றியது. மூன்று ரூபாயில் ஆறு மணி வண்டியில் திரும்பும்போது இரண்டணாதான் பாக்கி இருந்தது. அதையும் உப்புக்கடலை வாங்கித் தீர்த்துவிட்டான் பாபு. வீடு திரும்பும்போது வயிற்றுக்குள் கடபுடா.

தேர்முட்டி திரும்பியதுமே பாட்டி வீட்டு வாசலில் தெரிந்தாள். கண்ணைச் சுருக்கிக்கொண்டு நான் வருகிறேனா என்று பார்த்துக்கொண்டு இருந்தாள். அருகில் செவளாவும் காவேரி மாமியும் நின்றார்கள். அருகில் வந்ததும் காவேரி மாமியும் செவளாவும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். அதாவது நானே ‘பணத்தைக் கொண்டு போய் புஸ்தகத்தில் செருகி வைத்துவிட்டாயே? இந்தா’ என்று நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்கிற எதிர்பார்ப்பில் சிரிக்கிறார்கள். நானா? முகத்தை ரொம்ப ஒன்றும் அறியாதவனாக வைத்துக்கொண்டு, ”பிராக்டிகல் இருந்ததா? அஞ்சு மணி வண்டியை விட்டுட்டேன். அதான் தாமதம் பாட்டி” என்றேன்.

”தாமதமானது கிடக்கிறது, இவ பணம் என்ன ஆச்சு சொல்லு?”

”என்ன பணம்?”

”சம்பளப் பணம்டா, செவளா உன் பொஸ்தகத்தில் செருகியிருந்தாளாம்.”

”என்ன? என் பொஸ்தகத்திலியா?” என் புத்தகங்களை எடுத்து நிதானமாகப் புரட்டிப் பார்த்தேன்.

”இல்லையே.”

”இஸ்கோலுக்குப் போவையில பாக்கலையா ராசா?” என்றாள் செவளா கலவரமாக.

”இல்லையே.”

”போக்கணங் கெட்டவளே, புஸ்தகத்தில் கொண்டுசெருகுவாளோ? எங்க விழுந்ததோ?”

”என்ன பாட்டி? என்ன சொல்றா இவ? எனக்குப் புரியவே இல்லையே.”

”ராசா, என் விதி. காலையில அச்சாபீஸ் வூட்ல சம்பளம் வாங்கினேனா? நம்ம வீட்ல செய்துக்கிட்டு இருக்கையிலே அலமாரில பொஸ்தகத்துல சொருகி வெச்சுட்டேன். அதைப் பார்க்காம அப்படியே எடுத்துட்டுப் போயிருக்கே நீ? எங்க விளுந்துச்சோ? எப்படித் தேடுவேன்?”

”நான் பாக்கலையே செவளா, பார்த்திருந்தா எடுத்துக் கொடுத்திருப்பேனே. எத்தனை ரூபா?”

”மூணு ரூபாடா ராசா! என் தலைஎழுத்து. ரேசன் அரிசியும் புள்ளைக்கு கால்சராயும் எடுக்கலாமுனுட்டு… இந்த முறையும் இல்லையா? என் விதி” என்று அழத் துவங்கியவளை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.

”பணம் போயிருச்சு. கொலுசை வெச்சுத்தான் கடன் வாங்கணும்.”

”இத பாரு செவளா, என் பேரன் இருக்கானே, அதுக்குத் திரிசமன் எல்லாம் தெரியாது. பணத்தைப் பாத்திருந்தா நிச்சயம் கொடுத்திருப்பான். நீதான் எங்கேயோ கவனம் இல்லாம போட்டிருக்கே.”

”ஐயோ! நம்ம ராசாவை எடுத்ததா சொல்லலாமா? என்ன வம்சம்! இது எடுக்குங்களா? என் ரங்கராசாவை எனக்குத் தெரியாதா? என் தலைவிதி” என்று மூலையில் உட்கார்ந்து அவள் அழுதது, தீட்டின ஈட்டியை என் உள்ளத்தில் பாய்ச்சியது போல இருந்தது.

”சே, என்ன காரியம் செய்துவிட்டோம். மூணு ரூபாயை மூணு மணி நேரத்தில் வேட்டு விட்டு என்ன சாதித்துவிட்டோம்? மாசம் முழுக்க ஓடியாடி உழைத்துச் சம்பாதித்த பணம்… கொல்லைப் பக்கம் முகம் கழுவிக்கொண்டு இருந்தபோது பாட்டியிடம் போய், ”பாட்டி நான்தான் எடுத்தேன். செலவழித்துவிட்டேன்” என்று உடனே ஒப்புக்கொள்ளும் தைரியம் வரவில்லை. பாட்டி அடித்திருக்க மாட்டாள், திட்டியிருப்பாள். திட்டட்டுமே என்ன போச்சு? ஏன் அந்தத் தைரியம் வரவில்லை?

இது நிகழ்ந்து முப்பது வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. என் வாழ்வில் பல கட்டங்களில் அந்த மறுவைப் பற்றி யோசித்ததுண்டு. செவளா என்ன ஆனாள் என்று தெரியாது. அவளைத் தேடிப் போய் மூன்று ரூபாயைத் திருப்பிக் கொடுக்கலாமா என்று யோசித்ததுண்டு. ஆடிட்டர் நண்பனிடம் ஒரு முறை கேட்டதற்குச் சுமாரான வட்டி விகிதத்தில்கூட அவளுக்கு 1,044 ரூபாய் தர வேண்டும் என்றான். ஆயிரம் ரூபாய் பெரிது அல்ல. நான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்குரிய தைரியம் பாபநாசத்தில் ஒரு மே மாதம் பாட்டி செத்துப் போவதற்கு முன்தான் வந்தது. அத்தனை வருஷங்களாயின. படுத்த படுக்கையாக என்னைக் கலங்கப் பார்த்துக்கொண்டு இருந்தவளை ”பாட்டி ஞாபகம் இருக்கா உனக்கு? நான் காலேஜ்ல படிக்கறப்ப செவளான்னு வேலைக்காரி இருந்தாளே?” என்று கேட்டு நிறுத்தினேன்.

”ஏன் ஞாபகம் இல்லாம? அவகூட ஒரு தடவை உம் புஸ்தகத்தில் ரூபாய் நோட்டை வெச்சுட்டு அதை நீ தொலைச்சுட்டயே?”

”பாட்டி, ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். அன்னிக்கு அதை நான் தொலைக்கலே. வேணும்னுட்டே திருடிச் செலவழிச்சுட்டேன் பாட்டி” என்றேன்.

”எனக்குத் தெரியுமே!” என்றாள் பாட்டி.

—————————————————————————————————————————————

மறு‘ சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள்
தொகுப்பில் 14-வது கதையாக இடம் பெற்றுள்ளது.
வெளி வந்த வருடம் 1983. (இந்தத் தொகுப்பில் மொத்தம் 34 கதைகள்)
ஓலைப்பட்டாசு
ஸ்ரீரங்கத்து தேவதைகள் – கதையா ? கற்பனையா ?
உஞ்சவிருத்தி
வேதாந்தம்
என் முதல் தொலைக்காட்சி அனுபவம்!
மறு
சேச்சா
இரண்டணா 

தொடர்புடைய சிறுகதைகள்
சுலோசனா சின்ன வயசில் அடிக்கடி ஓநாய்கள் அவளைத்துரத்துவதாகக் கனவு கண்டாள். ஒவ்வொரு முறையும் தலை தெறிக்க ஓடுவாள். அவை நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு எச்சில் வழிய துரத்தும். அவை, அவளைப் பிடிப்பதற்குள் கண்விழித்து விடுவாள். வியர்வை வெள்ளத்தில் எழுந்து தண்ணீர் குடிப்பாள். ...
மேலும் கதையை படிக்க...
நகரம்
சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை ...
மேலும் கதையை படிக்க...
என் முதல் தொலைக்காட்சி அனுபவம்!
கதை ஆசிரியர்: சுஜாதா. ஸ்ரீரங்கத்துக்கு டெலிவிஷன் அம்பதுகளிலேயே வந்துவிட்டது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்! தெற்கு உத்தர வீதியில் ‘தி ரங்கநாதா ரேடியோ அண்ட் டெலிவிஷன் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்’ என்ற போர்டு திடீர் என்று தோன்றியது. ‘ப்ரொப்: அண்ணாசாமி ஸி அண் ஜி லண்டன்’ ...
மேலும் கதையை படிக்க...
வீணா
வீணா பிறந்தது 1946-ல். 1956-லிருந்து 1960 வரை அவள் பெற்றோர் டில்லியில் இருந்தபோது சாப்பிட்ட கோதுமையினாலும், அவள் அம்மாவிடமிருந்து பெற்ற நேர்த்தியான மூக்கினாலும், மிக ஒழுங்கான அதரங்களாலும், உயரத்தினாலும், எல்லா அளவுகளும் ஓர் அரை இன்ச் குறைந்து சட்டையை மீறும் உடம்பு ...
மேலும் கதையை படிக்க...
ரயில் பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சில மறக்க முடியாதவை. கீழ் வரும் அனுபவத்தைச் சந்தோஷமா, சங்கடமா என்று நீங்களே தீர்மானியுங்கள். ஒரு முறை பெங்களூரிலிருந்து சென்னை வரை பிருந்தாவனில் பயணம் செய்தபோது, ஒரு மாமா எதிர் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு என்னையே ஐந்து ...
மேலும் கதையை படிக்க...
ஓநாய்கள்
நகரம்
என் முதல் தொலைக்காட்சி அனுபவம்!
வீணா
பூனை

மறு மீது ஒரு கருத்து

  1. vaidehi says:

    இடை விட தண்டனை எடவும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)