மறுபடியும் ஒரு தடவை!

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 38,205 
 

ஏர்போர்ட்டில் இறங்கி டாக்ஸி பிடித்த பளபளப்பான பிளாஸ்டிக் ரோட்டில் பயணம் செய்து பாங்காக்கின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றான ஹனி ட்யூனில் இறங்கியபோது என் மனதுக்குள் கலர் ஃபவுண்டன்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் பீறிட்டன.

ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபர், “பொக்கே’யோடு மெல்லிய குரலில் கேட்டார். “மிஸ்டர் சிவசீலன்’

“எஸ்’ என்றேன்.

“ஐயாம் ஜெர்ரி ஹாப்ஸ். தொழில்துறை மாநாட்டின் அமைப்பாளர்களில் நானும் ஒருவன். வெல்கம் டூ பாங்காக் மிஸ்டர் சிவசீலன்’

மறுபடியும் ஒருதடவை

நான் பொக்கேயை வாங்கிக் கொண்டு “தேங்க்யூ’ சொல்லி புன்னகையொன்றை உதிர்த்தேன். தன் கையில் வைத்திருந்த வெள்ளை நிற சாவியொன்றை நீட்டினார்.

“உங்களுடைய ரூம் நம்பர் 329. போய் ஓய்வு எடுங்கள். நான் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன். நீங்கள் இன்றைக்கு தொழில்துறை மாநாட்டில் எந்தத் தலைப்பில் கட்டுரைப் படிக்கப் போகிறீர்கள்?’
“கான்க்ரீட் ஃபாரஸ்ட்’

“வெரி நைஸ்.. இந்தியாவின் தொழில் நகரமான கோவையிலிருந்து வந்து இருக்கும் நீங்கள் அந்தக் கட்டுரை மூலம் பெரிதும் பேசப்படுவீர்கள் என்று நம்புகிறேன்.’

ஜெர்ரி ஹாப்ஸ் என்னுடைய கைகளைப் பற்றி குலுக்கிவிட்டு போய்விட, மூன்றாவது மாடியில் இருந்த 329 எண்ணிட்ட அறைக்குள் நுழைந்தேன்.

அறை ஒரு குட்டி சொர்க்கம் போல் இருந்தது. படுக்கை விரிப்பு, கர்ட்டன்கள், மேஜை, நாற்காலியென்று எல்லாவற்றிலும் நூறு சதவீத சுத்தம் ஒட்டியிருந்தது. ஒரு ஜன்னல் திரையை இழுத்து விட்டேன். எதிரே அடர்த்தியான நீலநிறத்தில் கடல் பார்வைக்கு எட்டியதூரம் தெரிந்தது. ஜன்னலை மூடிவிட்டு சோபாவுக்கு வந்து சாய்ந்தேன். காலிங்பெல் வெளியே இருந்து கூப்பிட்டது.

போய்க் கதவை திறந்தேன்.

ஒரு தாய்லாந்து இளம் பெண். சாக்லேட் நிற குட்டைப் பாவாடையில் அமர்க்களம் பண்ணினாள்.

“எஸ்’ என்றேன்.

அந்த தாய்லாந்து கிளி ஆங்கிலம் பேசியது. “என்னோடு குறைந்த கட்டணத்தில் படுக்கையில் பங்கு பெற விரும்புகிறீர்களா?’
ஆச்சர்யம் என்னை புரட்டிப் போட்டு மல்யுத்தம் செய்தது. கூடவே வியர்த்துக் கொட்டியது.

“நோ’ என்றேன்.

“இன்னமும் வேண்டுமானால் கட்டணத்தைக் குறைத்துக் கொள்கிறேன்’

“வேண்டாம்… கெட்லாஸ்ட்!’ அறைக் கதவை வேகமாய் சாத்தி தாழிட்டேன். கதவுக்கு அப்பாலிருந்து அவள் திட்டினாள். “இவர்கள் எல்லாம் பாங்காக்கிற்கு ஏன் வருகிறார்கள்? கோழைகள்..’

நான் அதிர்ச்சி விலகாமல் நாற்காலிக்கு வந்து சாய்ந்தேன். இண்டர்காம் கூப்பிட்டது. ரிசப்ஷனிலிருந்து ஒரு பெண் தேன் தடவிய பலாச்சுளைக் குரலில் பேசினாள்.

“அறை வசதியாக இருக்கிறதா?’

“இருக்கிறது’

“உங்களுக்கு என்ன தேவைப் பட்டாலும் நாங்கள் உதவக் காத்து இருக்கிறோம். இதில் ராத்திரி நேரத் தேவைகள் ஸ்பெஷல். கூச்சப்பட வேண்டாம்.’

“வைய்டி போனை!’ தமிழில் கத்தி ரிஸீவரை வேகமாய்ச் சாத்தினேன். என்ன கலாச்சாரம் இது?

மறுபடியும் காலிங்பெல் ஒலித்தது.

“மறுபடியும் அந்தக் கிளியா?’

கோபமாய் எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.

வெளியே…

ஜெர்ரி ஹாப்ஸ் நின்றிருந்தார். அவருக்கு பின்னால் ஒரு இளம் பெண். அழகான இந்திய முகம்.

“உள்ளே வரலாமா?’

“ப்ளீஸ்’

அவர் உள்ளே வந்து கொண்டே சொன்னார். “இந்தப் பெண்ணின் பெயர் சாத்விகா. ஃப்ரீலான்ஸர் கம் ரிப்போர்ட்டர். உங்களுக்கு பாங்காக் புதியது என்பதால் இரண்டு நாட்கள் உங்களோடு இருந்து இந்த ஊரில் உள்ள எல்லா முக்கியமான இடங்களுக்கும் கூட்டிக் கொண்டு போவார்.’

நான் அந்தப் பெண்ணை பார்த்தேன். பெரிய கண்களோடு அழகாய் சிரித்து “வணக்கம்’ என்றாள்.

ஜெர்ரிஹாப்ஸ் சொல்லிவிட்டு அகன்றுபோய்விட, அவள் ஒரு சிறுசிரிப்போடு என்னைப் பார்த்தாள்.

“என்ன சார்.. தாய்லாந்து பெண்கள் ரொம்பவும் சொல்லை கொடுத்துட்டாங்க போலிருக்கு..’

நான் எரிச்சலாய் நிமிர்ந்தேன். “சே! இது என்ன ஸ்டார் ஹோட்டலா… இல்லை ப்ராஸ்ட்யூட் ஹவுஸா…? எனக்கு வேற ஒரு நல்ல ஹோட்டல் வேணும். ஏற்பாடு பண்ணு!’

சாத்விகா மெலிதாய் புன்முறுவல் செய்தாள். “ஸார்! இந்த பாங்காக்கில் நீங்க எந்த ஹோட்டலுக்குப் போனாலும் இது மாதிரியான அன்பான அழைப்புகள் உண்டு. உங்களுக்குப் பிடிக்காத பட்சத்தில் நாசூக்காய் “ஸாரி’ சொல்லி விலகிக்கலாம்.’

“இதுக்கு அரசாங்க அனுமதி உண்டா?’

“ஸ்பெஷல் ஆசிர்வாதம் உண்டு!’ சொல்லிவிட்டுச் சிரித்த சாத்விகா என்னிடம் குரலைத்தாழ்த்தினாள். “நானும் உங்க கட்சிதான் ஸார்… எனக்கும் இந்த கலாச்சார சீர்கேடெல்லாம் பிடிக்காது.’

நான் சாத்விகாவை ஏறிட்டேன். “நீ எப்படி இந்தியாவிலிருந்து பாங்காக்குக்கு…’

“ஸார்! எனக்கு அப்பா கிடையாது! அம்மா மட்டுந்தான். எனக்கு ரெண்டு வயசு நடக்கும் போதே அப்பா இறந்துவிட்டார். இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் கைக்குழந்தையாய் இருக்கும்போதே அம்மா என்னை எடுத்துக்கிட்டு பாங்காக் வந்துட்டாங்க. அம்மா இங்கே இருக்கிற ஹாஸ்பிடலில் நர்ஸாய் வேலை பார்த்துக்கிட்டே என்னை வளர்த்து படிக்க வெச்சாங்க. நானும் ஜர்னலிஸம் படிச்சு ஒரு ஃப்ரீலான்ஸர் ரிப்போர்ட்டர் ஆயிட்டேன். பொதுவாய் இங்கே தொழில்முறை மாநாடுகள் நடக்கும்போது இந்தியாவின் சார்பாய் யார் கலந்துக்க வந்தாலும் சரி, நான்தான் அவர்களுக்கு பி.ஆர்.ஓ. அண்ட் கைடு.’

“இந்த பாங்காக்கில் பார்க்க என்ன இருக்கு?’

“இந்த கலாச்சார சீர்கேட்டை மட்டும் ஒரு ஓரமாய் தள்ளி வெச்சுட்டா பார்க்க நிறைய இடம் இருக்கு ஸார்.’

“இதோ பார் சாத்விகா…! எனக்கு நாளைக்கு மத்தியானம்தான் தொழில்துறை செமினார். அதுவரைக்கும் நீ கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் நான் வர்றேன்.’

“கிளம்புங்க சார் முதல்ல புத்தர் கோயிலுக்கு போவோம்.’


நானும் சாத்வீகாவும் புத்தர் கோயிலை பார்த்துவிட்டு வெளியே வந்தோம். எனக்கு லேசாய் பசித்தது. மத்தியான சூரியன் மண்டையில் உறைத்தான். நான் அவளிடம் கேட்டேன்.

“ஏதாவது ஒரு ஹோட்டலில் லஞ்ச் முடிச்சுக்கலாமா…? இங்கே என்ன கிடைக்கும்?’

சாத்விகா ஈறுகள் தெரியச் சிரித்தாள். “மனுஷனைத் தவிர மற்ற உயிரோடு நடமாடும் அத்தனை ஜீவராசிகளும் பாங்காக் மக்களுக்கு சாப்பாடுதான்.’

“நான் ப்யூர் வெஜ். நம்ம ஊர் மாதிரியான சாப்பாடு எங்கயோவது கிடைக்குமா?’

“கிடைக்கும். ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி ஒரு நாயர் கடை இருக்கு. அங்க போனா வெரைட்டி ரைஸ் கிடைக்கும். ஆனா நீங்க எதிர்பார்க்கற டேஸ்ட் இருக்காது!’

“பரவாயில்லை… சமாளிச்சுக்கிறேன்…’ சாத்விகா டாக்ஸி டிரைவரிடம் விவரம் சொல்ல, டாக்ஸி கிளம்பியது. போக்குவரத்தில் நீந்தி குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்ததும் சாத்விகா தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“ஸாரி ஸார்.’

“நாயர் கடை இன்னிக்கு லீவு ஸார். அதோ.. போர்டைப் பாருங்க… டுடே ஹாலிடேன்னு போட்டிருக்கு..’

ஏமாற்றம் தந்த எரிச்சலில் எனக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.

“இப்ப என்ன பண்றது…?’

“ஸார்! நான் ஒன்னு சொன்னா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?’

“நோ… நோ… சொல்லு…!’

“இங்கிருந்து ஒரு பத்து நிமிஷ பயணத்துல என்னோட வீட்டுக்குப் போயிடலாம். அம்மா இந்நேரத்துக்கு சமையலை முடிச்சிருப்பாங்க. என்னோட வீட்ல சாப்பிடறதுக்கு உங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லையே?’

நான் பெரிதாய் மலர்ந்தேன். “ஒரு ஆட்சேபணையும் கிடையாது. காரை உன்னோட வீட்டுக்கு விரட்டச் சொல்லு. வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட குடுத்து வெச்சிருக்கணுமே?’

சாத்விகா டிரைவரிடம் திரும்பினாள். மலேசிய மொழியில் வீட்டு விலாசம் சொன்னாள்.
டாக்ஸி வேகம் பிடித்தது. சாங் சிட்டிக்குள் நுழைந்து ஐந்தாவது தெருவைக் கண்டுபிடித்து ஒன்பதாவது எண்ணிட்ட வீட்டுக்கு முன்பாக நின்றது.

“இதுதான் ஸார் என்னோட வீடு… அம்மா வேலை செய்யற ஹாஸ்பிடல் நிர்வாகம் அங்கே வேலை செய்யற ஊழியர்களுக்காக கட்டிக் குடுத்த வீடு..’

“சின்னதாய் இருந்தாலும் அழகாய் இருக்கு!’

இருவரும் டாக்ஸியை விட்டு இறங்கினோம். சாத்விகா முன்னதாய் போய் அழைப்பு மணிக்குவேலை கொடுக்க நடுத்தர வயதில் காதோரம் நரை தெரிய அந்தப் பெண் எட்டிப் பார்த்து மலர்ந்தாள்.

“இப்பத்தான் உனக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன். நீயே வந்துட்டே…’

“நான் மட்டும் வரலையம்மா… இன்னிக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒரு கெஸ்ட்டையும் கூட்டிட்டு வந்திருக்கேன்.’

“கெஸ்ட்டா.. யாரது?’

நான் கைகளைக் குவித்தேன். “வணக்கம்மா… என் பேர் சிவசீலன். கோயமுத்தூர்ல ஒரு தொழில் அதிபராய் இருக்கேன். இங்கே பாங்காக்கில் தொழில் துறை சம்பந்தப்பட்ட ஒரு செமினாரில் கலந்துக்கிறதுக்காக வந்திருக்கேன். உங்க பொண்ணுதான் எனக்கு பி.ஆர்.ஓ. இன்னிக்கு சாப்பாடு உங்க வீட்லதான்.’

“தாராளமாய்…!’

“உள்ள வாங்க ஸார்.’

போனேன்.

சாத்விகா அந்த ஹாலில் இருந்த சோபாவைக் காட்டினாள். “உட்கார்ந்து அம்மாகிட்டே பேசிக்கிட்டிருங்க சார். நான் டைனிங் டேபிள்ல லஞ்சை அரேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்.’

“நிதானமாய் வாம்மா’

சாத்விகா வீட்டுக்குள் மறைந்தாள். நான் சோபாவுக்கு சாய்ந்தேன். சாத்விகாவின் அம்மா ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். குரலை வெகுவாய் தாழ்த்திக் கொண்டு முகத்தில் கோபச் சிவப்புத் தெரிய கேட்டாள்.

“தெரிஞ்சு வந்தீங்களா… தெரியாமே வந்தீங்களா?’

நானும் பதட்டத்தோடு குரலைத் தாழ்த்தினேன். “இதோ பார் சியாமளா..! நிச்சயமா நீ இங்கே இருப்பேன்னு எனக்குத் தெரியாது. உனக்கும் எனக்கும் டைவர்ஸ் கிடைச்சு இருபது வருஷமாகப் போகுது. டைவர்ஸ் கிடைச்ச அன்னிக்கு கடைசியாய் உன்னை கோர்ட்டில் பார்த்ததோடு சரி, அதுக்கப்புறம் நீ எங்கே போனே… என் பண்றேன்னு தெரிஞ்சுக்கக் கூட நான் ஆசைப்படலை. நான் பாங்காக்குக்கு வந்தது செமினாரை அட்டெண்ட் பண்ணத்தான் சாத்விகா எனக்கு பி.ஆர்.ஓ.வாய் அமைஞ்சதும் எதேச்சையாய் நடந்த ஒண்ணுதான்! நம்ம பொண்ணு..’ என்று சொல்ல ஆரம்பித்தவரை கையமர்த்தினாள் சியாமளா.

“அவளை நம்ம பொண்ணுன்னு சொல்லாதீங்க. அவ என்னோட பொண்ணு..’

“அப்படியே இருக்கட்டும்…! நான் செத்துப் போயிட்டதாய் அவகிட்டே நீ சொன்னதை வெச்சே உனக்கு எம்பேர்ல எவ்வளவு கோபம் இருக்குங்கறதையும் புரிஞ்சுகிட்டேன்.’

“ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க போலிருக்கு..’

“அம்மாவோட நச்சரிப்பைத் தாங்காமே பண்ணிக்க வேண்டியதாச்சு. ஒரு பையன் இருக்கான். பி.ஈ. ஃபர்ஸ்ட் இயர்.’

“இன்னும் அந்த பழக்கமெல்லாம் உண்டா?’

“எந்த பழக்கம்?’

“பிசினஸ் விஷயமாய் மும்பைக்கும் டெல்லிக்கும் போறேன்னு சொல்லிட்டு ஹோட்டல்ல ரூம் எடுத்து பொண்ணுங்களைத் தொடற அந்தப் பழக்கம்.’

நான் கண்கள் சிவந்தேன். “சியாமளா! யாரோ சொன்னதைக் கேட்டு நீ அன்னிக்கும் தப்பாய் புரிஞ்சுக்கிட்டே இன்னிக்கும் தப்பாப் புரிஞ்சுட்டுப் பேசறே.. நான் ஒரு வுமனைஸர் என்கிற காரணத்தை அடிப்டையாய் வெச்சு கோர்ட்ல அடம்பிடிச்சு டைவர்ஸ் வாங்கிகிட்டே. உனக்கு அதுதான் விருப்பம் தெரிய வந்தபோது உடைஞ்சுபோன இதயத்தோடு வேறு வழியில்லாமல் ம்யூச்சுவல் டைவர்ஸ்க்கு ஒத்துக்கிட்டேன்.’

சியாமளா ஒரு கேலிப்புன்னகையோடு என்னைப் பார்த்தாள்.

“நீங்க எப்படிப்பட்ட ஆள்ன்னு எனக்குத் தெரியும். மும்பை டெல்லி சலிச்சுப் போய்ட்டதால பாங்காக் பக்கம் வந்திருக்கீங்க. இஷ்டத்துக்கு விளையாடுங்க. ஆனா உங்க ரெண்டாவது ஒய்ஃப்புக்கு தெரியாதபடி பார்த்துக்குங்க. அவளும் டைவர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறிடப் போறா…!’ சியாமளா சொல்லிவிட்டு உள்ளே போய்விட நான் உணர்ச்சிகளையும் கண்ணீரையும் கட்டுப்படுத்திக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

ஐந்து நிமிஷம் கழித்து சாத்விகா உள்ளேயிருந்து ஒரு துள்ளலோடு வந்தாள். “சார்! சாப்பாடு ரெடி. வெண்டைக்காய் சாம்பார், காரட் பீன்ஸ் பொரியல், மோர் மிளகாய் வற்றல், அப்பளம், நீங்க கெஸ்ட்டாய் வந்ததால் ஒரு அவசர பால் பாயசம் பண்ணினேன். வாங்க ஸார். ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வாங்க.. அதோ வாஷ்பேஷன் அந்தப் பக்கம்!’ படபடவென்று பசிய சாத்விகா என் முகத்தைப் பார்த்துவிட்டு கண்களில் வியப்பு காட்டினாள்.

“என்ன சார் டல்லாயிட்டீங்க!’

“ஸாரிம்மா…! நான் இப்ப சாப்பிடக்கூடிய மனநிலையில் இல்லை…!’

“ஏன் ஸார்?’

“ரெண்டு நிமிஷத்துக்கு முந்தி என்னோட ஒய்ஃப் போன் பண்ணியிருந்தா. என்னோட அம்மாவுக்கு உடம்பு ரொம்ப முடியலையாம். என்னை உடனே புறப்பட்டு வரச் சொல்றா.’

“ஸ…ஸார் செமினார்…?’

“அம்மாவை விட செமினார் முக்கியமா என்ன? நான் உடனே கோயமுத்தூர் புறப்பட்டுப் போகணும். அடுத்த ஃப்ளைட் எப்போன்னு கேட்டு டிக்கெட் அரேன்ஜ் பண்ண முடியுமா…?’

“ஒன் மினிட் ஸார்.’ சொன்ன சாத்விகா தன்னிடம் இருந்த செல்போனை உசுப்ப, நான் பசிக்கிற வயிறோடும், வலிக்கிற இதயத்தோடும் வாசலில் நின்றிருந்த டாக்ஸியை நோக்கி நடந்தேன்.

– ஜூன் 2013

Print Friendly, PDF & Email

2 thoughts on “மறுபடியும் ஒரு தடவை!

  1. அருமை.ஒரு க்ரைம் கதைக்குள் எத்தனை பொது அறிவுச் செய்திகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *