மரகத மலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 17,479 
 

தோட்டத்து வீட்டின் பட்டாசாலையில் கட்டில் போட்டுப் படுத்திருந்த புருஷோத்தமன் நள்ளிரவில் கண் விழித்தபோது, யாரோ தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பதான உணர்வு மேலிட்டது. மின்சாரமும் மின் விளக்கும் இல்லாத அந்த இடத்தில் அவனது தலையணைக்கு அடியில் பேட்டரி லைட் இருந்தது.

மரகத மலை அடிவாரத்தில்

சுற்றிலும் மேலும் கீழுமாக வெளிச்சம் பாய்ச்சினான். உழவுக் கருவிகளும் உணவுக்கான பொருட்களும் போட்டு வைக்கப்பட்டு இருந்த ஒற்றை அறை திறந்தேகிடந்தது. அங்கே கதவு கடந்து பார்த்தபோது, நாழி ஓட்டுக் கூரையின் தாங்குக்காகப் போட்டு இருந்த விட்டத்தின் மேல் இருந்து, இரண்டு கண்கள் அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தன. கொள்ளி யின் தணலைக்கொண்டு கோளமாகச் செய்தாற்போல அவை ஒளி துலங்கின.

புருஷ், தைரியசாலி. உடனடியாக எழுந்து வந்து கதவை அடைக்கும் முன், அதன் மீது விளக்கு அடித்தான். முப்பத்தைந்து தலைமுறையின் கதை சொல்லும் முதுகிழவியின் தோற்றத்தை நினைவூட்டி அது அமர்ந்து இருந்தது. சாம்பற் தேவாங்கு வகையைச் சேர்ந்த அது, கண்களில் எந்த உணர்வையும் குறிப்பாக வெளிப் படுத்தவில்லை. ஆனால், நவரசங்களும் எரிமலைக் குழம்பும் கண்களில் தெரிந்து கொண்டு இருந்தன.

கதவைச் சாத்தி வெளியே நாதாங்கி போட்டுவிட்டு, தனது இடத்தில் வந்து படுத்தான். தூக்கம் போய்விட்டது. விடியும் வரை விழித்து இருந்தால் தனது கண்களும் தேவாங்கின் கண்கள்போல மாறிவிடுமோ எனும் பயத்தில் கண்களை மட்டும் மூடிக்கொண்டான்.

காலையில் எழுந்தவுடன் உற்ற நண்பன் ஒருவனை அலைபேசியில் அழைத்தான்.

”டேய், நான் இருக்கிற இடத்துல தேவாங்கு இருக்குதுடா!”

”முடிஞ்சா புடிச்சுரு. மூவாயிரம் ரூபாய்க் காவது போகும்!” என்று ஆரம்பித்த நண்பன்… யானை முடி, புலி நகம், நரிப் பல், தேவாங்கின் ரோமம் (ஜோசியம் பார்க்கச் சீட்டு எடுக்கும் தேவாங்கு) ஆகியவற்றின் மந்திர மகிமைகளை விளக்க ஆரம்பித்தான். மனித குலத்தின் இப்படியான நன்மை பயக்கும் ஆபரண வரலாறு ஆரண்ய விலங்குகளைச் சார்ந்தே இருந்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் புல்டோசர், டிராக்டர் மற்றும் ஆட்களைக்கொண்டு, நிலத்தை நிரவிச் சமப்படுத்த வேண்டும் என்பதுதான் உண்மையில் புருஷ§க்கு நிர்ணயிக்கப்பட்ட வேலை. நண்பனான மனோகரன் நட்பு அடிப்படையில் புருஷோத்தமனை இந்த செம்மையாக்கத்துக்குப் பணித்துஇருந்தான்.

காலையில் எட்டு மணிக்கு வேலை தொடங்குவதாக ஏற்பாடு. ஏழு மணிக்கே ஆட்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். ஏழு மணிக்கு வருகிறவர்கள் வேலைக்காரர்களின் கணக்கில் வருகிறவர்கள் அல்ல. மனோகரனின் உறவின் வகையில் வருகிறவர்கள். தோட்ட வேலைக்கான கோளாறுகள் உரைப்பவர்கள். ஏழு மணிக்கே அவர்கள் காட்டுக்கு வருவதற் குக் காரணம், உறவு சம்பந்தப்பட்டது அல்ல. தோட்டத்துச் சாலைக்குள் சமையல் அடுப்புக்கு அருகில் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருக்கிற சரக்கு சம்பந்தப்பட்டது!

மரகத மலை அடிவாரத்தில்2

”தோட்டங்காட்டு வேலைக்கு எல்லாம் ஆள் கிடைக்கறது கஷ்டமாச்சே!” -நிலத் தைப் பண்படுத்த உத்தேசித்த ஆரம்பத் தில் மனோகரன், நண்பன் நடராஜிடம் சொல்ல, ”சரக்கு இருந்தா, ஆள் சேராத இடம் எங்காவது இருக்குதா சொல்லு?” என்று வினவி, நான்கு அட்டைப் பெட்டி நிறைய மதுவகைகளை பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி அனுப்பிவைத்துவிட்டான். சரக்கு என்னமோ வழக்கமான போதையுடையதாக இருக்கக்கூடும் என்றாலும், அது வந்து சேர்ந்த தொலைவும் ஊர்ப் பெயரும் கூடுதல் கிக்கைத் தந்தன. நிலம் சமம் செய்து வெள்ளாமை வைப்பதற்கு முன், கோவாவில் இருந்து தனது வகையில் சரக்குகள் தருவிப்பதாகவும் நடராஜ் சொல்லியிருந்தான்.

இன்று முதல் வேலை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்த நிலையில், நேற்று மட்டும் ஆஜராகி ஆலோசனை சொல்வோர் எண்ணிக்கை இருபதைத் தாண்டி இருந்தது. அகில், தேக்கு, வாழை, சந்தனம், பில்லமருது என அவரவர் போதைக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்கள் சிலர்.

கிடையைக் காலி செய்து மாலையில் மனோகரன் வீட்டுக்குப் போகும்போது புருஷோத்தமனிடம், ”நான் இருந்தா ஒரு வேலையும் நடக்காது. சொந்தக்காரங்க எல்லாம் ரொம்ப உரிமையா பாட்டிலை உடைச்சுக் குடிச்சுட்டு, ‘கோழி அடி மாப்ளை’னு சொல்லிட்டு இருப்பாங்க. அதனால் எல்லாத்தையும் நீயே பாத்துக்க. சம்பளம் போடற அன்னிக்கு மட்டும் வர்றேன்!” என்று இரவோடு இரவாக காங்கேயம் போய்விட்டான்.

புல்டோசரும் கூலி ஆட்களும் வந்து சேராத நிலையில், இப்படி தேவாங்கு வந்து அமர்ந்து இருக்கிறது.

ஏழு மணிக்கு வேலுச்சாமியும் தங்கமுத்துவும் வந்து சேர்ந்து, ”யானை மெசினு எத்தன மணிக்கு வருது?” என்று ரெட்டை நாகஸ்வரம்போல ஏக குரலில் அக்கறையாகக் கேட்டார்கள். கண்கள் தாகத்தில் இருந்தன.

”எட்டு மணிக்கு!”

அவர்களது ஆவேசத்துக்கு, வந்த உடனே இரண்டு பாட்டில்களையும் தண்ணீரையும் வெளியே எடுத்துவைத்திருக்க வேண்டும்.

”மனோகர் மாப்ள இல்லியா?” என்று தங்கமுத்து கேட்டார்.

”நேத்தே காங்கேயம் போயிட்டாரு!”

ஏமாற்றத்தில் நான்கு புருவங்கள் சுருங்கினாலும் சுதாரித்த வேலுச்சாமி, ”அவரு இல்லாட்டி என்ன? ஏற்பாடு எல்லாம் கரெக்டா பண்ணி வெச்சிருப்பாரு. என்னங்க புருஷோத்தமன்?” என்றான்.

‘இனி, பாட்டிலைக் கண்ணில் காட்டவில்லை எனில், வாய்விட்டுக் கேட்டு விடுவார்கள். இந்த தவிர்க்க முடியாத

சங்கதியும், சக்தியும், சதியுமான சத்தியத் துக்கு இரையாக வேண்டியதுதான்’ என முடிவு செய்தான் புருஷோத்தமன்.

அடுத்து, அவர்களுக்கு உள்ளே போகும் கொள்ளளவுக்கு ஏற்ப, புருஷோத்தமன் என்றும் புருசு என்றும் உத்தமன் என்றும் புரூ என்றும் ப்ர்ர்… என்றும் தன் பெயர் படப்போகும் அவஸ்தைகளையும் எண்ணி மனதைத் தயாரித்துக்கொண்டான்.

”அது வந்துங்க… உள்ள போயி பாட்டிலை எடுக்கலாமுன்னா, உள்ள ஒரு தேவாங்கு இருக்குதுங்க” என்று வயதில் மூத்தவரான தங்கமுத்துவைப் பார்த்துச் சொன்னான் புருஷோத்தமன்.

”எங்கே… தேவாங்கா? காட்டு… காட்டு…” என்றார் தங்கமுத்து ஆர்வமாக.

புருஷோத்தமன் கதவைப் பொத்தினாற்போலத் திறக்கவும் ”அதென்னாயா பாம்பா, அந்தப் பயம் பயப்படறதுக்கு?” என்றார்.

”எதுக்கும் அதைப் பத்திரமா வெச்சிருப் போம். அடுத்து வேணா அதைப் புடிச்சு என்னமாச்சும் பண்ணலாம்!” என்ற புருஷின் கூற்றுக்கு, ”அதுவும் சரிதான்!” என ஆமோதித்தார்.

பிறகு, கதவை அங்குலங்கள் திறந்து கீற்று இடைவெளி உண்டாக்கி, கூத்துக் கொட்டகையில் ஒப்பனை செய்யும் பெண்ணைப் பார்க்கும் பாவனையில் தேவாங்கினை மூவரும் பார்த்து முடித் தனர்.

”சரி… நான் உள்ள போயி பாட்டில எடுத்தாறேன். நீங்க ரெண்டு பேரும் கதவு கிட்ட போர்வையைப் புடிச்சுக்கிட்டு நில்லுங்க. சந்துலகிந்துல தாவி வந்துச்சுன்னா, அப்படியே அமுத்தீருங்க!” என்றவாறு தங்கமுத்து உள்ளே நுழைந்தார். வேலுச்சாமியும் புருஷோத்தமனும் போர்வையின் தலைப்பை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக்கொண்டு, கதவு திறக்கும் நேரத்துக்குக் காவலுக்கு நின்று இருந்தார் கள். புருஷோத்தமனுக்கு ஒருகணம் தொலைக்காட்சிச் செய்திகளில் வரும் ஸ்பெயினின் காளை அடக்கும் வீரர்கள் நினைவுக்கு வந்தார்கள்.

பட்டாசாலையில் தங்கமுத்து மூடி திறந்து அமர்வைத் தொடங்கிவைத்ததும், ”ஹ்ம்… தேவாங்கு என்ன… நானல்லா மலையேறி மந்தியவே பாத்துட்டன்!” என்று வீரஞ்செறிந்த வேட்டைப் பிரதாபங்களைப் பேச ஆரம்பித்தார்.

மந்தியின் ரத்தம் எயிட்ஸ் நீங்கலாக எல்லாவற்றையும் குணப்படுத்த வல்லது எனத் தெரிவித்த அவர், வேட்டையாடிகள் எதிர்ப்பட்டுவிட்டால் தன்னை விட்டுவிடுமாறு கையெடுத்துக் கும்பிடும் (‘மனுசனாட்டவே கும்புடும் பாத்துக்க!’) என்றும், அதே மந்தி மலை மேல இருக்கும்போது கற்களைத் தள்ளி ஆட்கள் மீது பாறைகளை உருட்டிக் கொல்லத் தலைப்படும் என்றும் சொன்னார்.

தங்கமுத்து, மந்தியுடனான தனது நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு இருக்கும்போதே, பர்லாங் தொலைவில் ஊஞ்சாங்காட்டு அய்யன் வந்துகொண்டு இருந்தார். அறுபது வயது மதிக்கத்தக்க எழுபது வயதுக்காரர். ஒரு நாளில் தொண்ணூறு மில்லி மட்டுமே குடிப்பது, அதையும் இளநீர் கலந்து குடிப்பது என்கிற கடுங்கோட்பாளர். அய்யனின் கையில் இளநீர் இருந்தது. ‘மோருக்குப் போகும்போது சொம்பை மறைப்பதென்ன?’ என்பது அவரது வேதாந்தம்.

புருஷோத்தமன்தான் இந்தப் பணிக்கு மேலாளர் என்றாலும் ஊஞ்சாங்காட்டு அய்யன்தான் இந்தக் கௌரவ சேனையின் பீஷ்மர் என்பதனை அவருக்குக் காட்டும் மரியாதைகள் மூலம் மனோகரன் நேற்றே உறுதிப்படுத்தியிருந்தான்.

சேனையில் துரோணர், கிருபர் முதல் பல சல்லியர்களுக்கும் இடம் இருந்தது. மனோகரனே இதற்குக் காரணம். மைத்துனர் கும்பல் மேல் அவ்வளவு பற்றும் மரியா தையும். மனைவியின் ஊரில் இருந்து ஒரு கொசு என்றால்கூட வத்திச்சுருள் ஏற்றிக் கொல்லாமல் சாம்பிராணி போட்டுத்தான் கொல்லுவான்.

காட்டில் எந்தெந்த மரங்களை வெட்டாமல் அப்படியே விடுவது என்பது ஊஞ்சாங்காட்டு அய்யனின் திட்டப்பாட்டில் இருந்தது. குறிப்பாக, சாலைக்குக் கீழே எண்பதடி தொலைவில் நிற்கிற நெல்லி மரம் அய்யனுக்கு ரொம்ப இஷ்டம். அதை மலை நெல்லி என்று குறிப்பிட்ட அவர்… புருஷோத்தமனிடம், ”அதிகமே ஒளவையாருக்குக் கொடுத் தது இதத்தானப்பா!” என்று கூறிஇருந்தார்.

ஒளவையாரை மையமாக வைத்துதான் அவர் ‘அதிகமே’ எனக் குறிப்பிட்டது அதியமானைத்தான் என்று புரிந்துகொண்டான் புருஷ். மன்னர்கள் சிதைந்தாலும் கவிஞர்கள் சிதைவடைவது இல்லை என்பதை அய்யனின் நாவில் இருந்து ஒளவை யார் நிரூபித்தார்.

ஊஞ்சாங்காட்டு அய்யன் இளநியை வாசலில் வைத்தவர் நேராக கதவைத் திறந்து, உள்ளே போய் முதல் நாள் மிச்சம் வைத்திருந்த தனக்கான பாட்டிலை எடுத்துவந்தார்.

அவர், தான் எதிர்பாராத நேரத்தில் கதவைத் திறந்துபோட்டதைக் கவனித்த புருஷ் திகைத்துப்போய், தேவாங்கு வெளியேறிவிடுமோ எனப் பயந்தான்.

தேவாங்கு வெளியே வந்து தங்கமுத்துவையும் வேலுச்சாமியையும் அந்தரப்பிரதட்சணம் செய்துவிட்டு, பழையபடி முந்தைய இடத்திலேயே போய் அமர்ந்தது. புருஷின் திகைப்பு மேலும் கூடிய அதே நேரம், யானை மெஷின் காட்டுக்கு உள்ளே நுழைந்தது.

வேலியல்லாத வேலியின் ஏதோ ஒரு இடத்தைக் கிழித்துக்கொண்டு ஆனந்தா கலர் சேலை கட்டிக்கொண்டு, உற்சாக ரூபிணியாக நுழைந்த சண்முகவள்ளியை யானை மெஷினின் ஓட்டுநர் கதிரேசன் ஆவலுடன் பார்த்தான். வண்டி அவன் உத்தேசித்த இடத்தைவிட ஐந்தடி தள்ளி நின்றது.

போன பொங்கலுக்கு மாமனார் ஊருக்குப் போனபோது, மனோகரனுக்கு இந்த இடம் திகைந்தது. அவனுக்கு காங்கேயத்தில் அரிசிக்கு ஒரு ஆலையும் தேங்காய்க்கு ஒரு கோடவுனும் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருந்தன. ஆதலால், நான்கு லட்சத்தைப் பொருட்படுத்தாமல் இந்த இடத்தை வாங்கிப் போட்டான். நண்பன் புருஷோத்தமனைக் கூப்பிட்டுக்கொண்டு, நிலத்தைச் சமப்படுத்துகிற வேலையில் இறங்கிவிட்டான் மனோகரன்.

கொஞ்சம் ஆட்கள், அப்புறம் பொக் லைன், டிராக்டர் என இயந்திரங்கள்- இதுவே மனோகரனின் திட்டமாக இருந்தது.

பேசி வைத்தபடி யானை மெஷின் காட்டுக்குள் நுழைந்துவிட்டது. சரியாக பொக்லைனும் ஆட்களும் காட்டுக்குள் நுழைந்த நேரம், மனோகரனிடம் இருந்து புருஷோத்தமனுக்கு அலைபேசி வந்தது. மேலாண்மைத் திறம் என்பது இதுதான்.

அலைபேசி ஒலித்த நேரம் புருஷ் தேவாங்கைப் பற்றிச் சிந்தித்தவாறே பொத்தானை அழுத்திப் பேசலுற்றான்.

மனோகரன், ”வந்தாச்சா?” என்று கேட்டதற்கு ”வந்தாச்சு!” என்றவனின் மூளையில் தேவாங்கும் அதன் கண்களும் தெரிந்தன.

”எத்தனை ஆளு… எத்தனை வண்டி?”

இப்போதுதான் கேள்வியின் நிஜமான அர்த்தம் புரிந்து, அதனூடே தான் சொன்ன பதில் பொருந்திப்போனதற் கான ஆசுவாசம் அடைந்துவிட்டு, ”ஒரு பொக்லைன், ஒரு டிராக்டர் பன்னெண்டு ஆளுக… வொர்க் ஸ்பீடப் பாத்துட்டு மேற்கொண்டு வண்டி தேவைன்னா சொல்லிக்கலாம். ஊஞ்சாங்காட்டய்யன், தங்கமுத்து, வேலுச்சாமி எல்லாரும் வந்துருக்காங்க!”

”ஓக்கே. கவனமாப் பாத்துக்க. நான் ஈவினிங் பேசறேன்!”

புருஷ் பேசி முடித்த அதே நேரம், யானை மெசின் கதிரேசன், சண்முகவள்ளியிடம் அவளுடைய குடும்ப கோத்திரம், குடும்பத்தின் காத்திரம், குடும்பத்தில் அவளது பாத்திரம் (நீங்க இந்த ஊருதானா? எனத் தொடங்கி) அவ்வளவையும் விசாரித்து இருந்தான். அவளும் வண்டியின் மீது அமர்ந்து இருக்கும் அவனை, யானை மேல் போகும் யுவராஜர்களை மண் குடிசை வாசலில் இருந்து நோக்கும் மடந்தையர்போலப் பார்த்தவாறு இருந்தாள். காட்டுக்குள் ஒரு காதல் செடியின் துளிர்வின் ஆரம்பங்கள் ஜோடிக் கண்களுக்குள் முட்டிக்கொண்டு நின்றன.

பத்து மணி வரை சீர்திருத்த வேலைகள் போய்க்கொண்டு இருக்க… தங்கமுத்து மற்றும் ஊஞ்சாங்காட்டய்யனின் இயக்கத்தில் மத்தளம்போல இயங்கிக்கொண்டு இருந்தான் கதிரேசன். அவ்வப்போது சண்முகவள்ளியைப் பார்த்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிக்கொண்டான்.

நெல்லி மரத்தண்டையில் நிரவிக்கொண்டு இருந்தபோது, பெயர்க்கப்படக் கூடாத மரம் என்பது அவனது நினைவில் இருக்கத்தான் செய்தது. ஏதோ ஒரு கட்டளைக்காக தங்கமுத்து சத்தமாக ஏதோ சொல்ல… அவரைத் திரும்பிப் பார்த்தான் கதிரேசன்.

தங்கமுத்துவின் பின்னில் பார்வைக் கோணத்தில் சண்முகவள்ளி இருந்தாள். மரத்தை மறைத்த மாமத மடந்தை. மாமலையும் ஒரு கடுகாகும் கன்னியர் கடைக் கண் முன். பாவம், நெல்லி மரம் என்னவாகும்? கட்டுப்பாட்டுக் கழிகளின் பிடி பிறழலில் பொக்லைனின் விரல் மூக்கு வாளி நெல்லி மரத்தின் தண்டைத் தட்டியது.

மரம் முறிகிற சத்தத்தில் வண்டியின் மொத்த இயக்கத்தையும் நிறுத்தினான் கதிரேசன். அந்த அடிவாரத்தில் ஆடும் பொருட்கள் அவ்வளவும் ஒரு கணம் அசைவை நிறுத்தின. ஊஞ்சாங்காட்டய்யன் பேதலித்தவர்போல சில நிமிடம் அமைதி தரித்து, பின் பெருங் குரலில், ”வேல பாக்கறானாம் வேல. எறங்கி வூட்டுக்குப் போடா!” என்று கதிரேசனைச் சபித்தவர், புருஷோத்தமனிடம் வந்து, ”மனோகர னுக்கு போனப் போட்டுக் குடுப்பா!” என்றார்.

எண்களை அழுத்தி மணி ஓசை அனுப்பி, அவரிடம் அலை பேசியைத் தந்தான் புருஷோத்தமன். மாற்றுத் தரப்பில் மனோகரன் பேச வந்ததும் அய்யன், ”மாப்ள! ஒரு விஷயம் யோசிக்காமப் பண்ணிப்போட்டமே. யான மெஷினு, டிராக்டர் இத்தனை தளவாடத்தக் கொணாந்து வேலய ஆரம்பிச்சிருக்கறம். இதுக்கெல்லாம் முதல்ல சேவலயாவது அறுத்திருக்கணும்.இல்லாட்டி, கெடாயாவது வெட்டிஇருக்கணும். ரத்த பலி இல்லாம ஆரம்பிச்சு வில்லங்கமா இருக்குது பாருங்க!”

அவரின் நீண்ட ஆற்றாமை உரையாற் றலுக்குப் பதிலாக மனோகரன் ஒரே வாக்கியத்தில், ”நீங்க பாத்து என்ன சொன்னாலும் சரிங்கய்யா!” என்றான்.

”நேர்ல நீங்க வாங்க பேசிக்கலாம்!” என்று போனை புருஷோத்தமனிடம் கொடுத்தவர், ”அவ்வளவு பேருக்கும் இன்னிக்கு ஒரு நாக் கணக்கப் போட்டு காசக் குடுத்துவுடு. மத்ததெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்!” என்றார்.

மனோகரன் கார் எடுத்துக்கொண்டு அந்த மாலையே காங்கேயத்தில் இருந்து வரவேண்டி இருந்தது.

நிலநடுக்கோட்டுத் தாவரங்களைத் தாக்கும் நோய்களும் கல்ச்சர் அரிசிகளின் வரவும் மனோகரனிடம் தொழிலுக்கான கவனிப்பை எப்போதும் கேட்டவண்ணமே இருந்தன. தேங்காய் கோடவுன் மற்றும் அரிசி ஆலை தவிர, தன்னை ரட்சிக்கப்போவது எதுவும் இல்லை என்பதை உணர்ந்த மனோகரன், ”புருசு! நாளைக்கே நீ என்னோட காங்கேயம் வந்துடு!” என்றான்.

”இந்த வேலை பாதியில நிக்குதே…”

”பாதியா? வேல ஆரம்பிக்கவே இல்லைனு நெனச்சுக்க!”

”தோட்டத்துச் சாலையையாவது ரெடி பண்ணிவச்சிட்டா, அடுத்து வொர்க் பண்றப்ப ஈஸியா இருக்கும்!”

”விடுப்பா… அந்த தேவாங்குனு சொன்னியே அதுவே தங்கிட்டுப் போகட் டும். அதோட காலத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம்!”

செம்மண்ணும் சரளையுமாகப் போகும் பாதை ஒன்று இப்போது… உடும்புகள், கீரிகள், அணில்கள், ஓணான்கள், முயல்கள் மற்றுமொரு தேவாங்கு வசிக்கும் காட்டுக் குக் கொண்டுசெல்கிறது. அங்கே பல்லு யிரின் எச்சப் பரவலில் ஒரு காட்டு நெல்லி மரம் முளைக்க மட்டும் கொஞ்சம் காலமாகும்!

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *