கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 11,284 
 

நித்யாவை பார்த்ததும் எல்லோருக்கும் பிடித்துபோகும். அதுவும் அவள் பின்னழகு தொடும் கூந்தலை கண்டவுடன் வியப்போடு ஒரு அன்பும் அவள் மீது ஏற்படும். முதல் முறை பார்ப்பதால் சிவாவுக்கு மட்டுமல்ல அவன் உடன் வந்த அனைவருக்கும் சந்தேகம். அவனுடைய அம்மா “இது சவுரியா” என கேட்டும் விட்டாள். “இல்லைங்க. எம் பொண்ணுக்கு இயற்கையாவே நீளமான கூந்தல்” என அவளின் அப்பா பெருமையாக சொல்ல. எல்லோருக்கும் ஆச்சிரியம். அத்தனை அடர்த்தியான கூந்தலை பார்க்கும் போது பல பெண்கள் தங்கள் அரையடி கூந்தலை நினைத்து வருத்தம் கொள்ளவதுண்டு, அதைதான் செய்துகொண்டிருந்தாள் சிவாவின் அக்கா கமலம்.

நித்தியாவுக்கும் சிவாக்கும் திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகுதான் ஆரமித்தது பிரட்சனை. நித்தியாவின் கவணம் கூந்தலை விட்டு கணவன் பக்கம் செல்லவேயில்லை. மாறிவிடுவாள் என்று நினைத்து மனதை தேற்றிக்கொண்டான். ஆனால் நாளுக்கு நாள் அவனுடைய எண்ணத்தில் மண் விழுந்துகொண்டே இருந்தது. அவளுடைய கூந்தலுக்காக அதிக நேரத்தையும் அதிக பணத்தையும் செலவு செய்தாள். காலையில் அவள் கூந்தலை அலசி அதன் ஈரம் காயும் வரை காத்திருந்து பின்பு, இவள் சமையல் அறைக்கு செல்லும் முன்பே சிவா அலுவலகத்திற்கு சென்று விடுவான். கணவன் கொஞ்சும் போதுகூட கூந்தலில் சிக்கல் விழுந்துவிடாமல் பார்த்துக் கொண்டாள். விரிசல்கள் வளர்ந்தன.

அவள் கூந்தலை கவணமாக பார்த்துக் கொள்வதற்கு அவள் தரப்பு ஞாயங்களும் இருக்கதான் செய்தன. பள்ளி முதல் கல்லூரி வரை இவளை தனித்து காட்டியது இந்த கூந்தல் தான். இதன் மூலம் எத்தனையோ பெண்களை ஏங்க செய்திருக்கின்றாள், ஆசிரியைகள் முதல் அண்டைவீட்டினர் வரை எத்தனையோ பேர் புகழ்ந்து தள்ளியிருக்கின்றார்கள். அவளின் அப்பா கூட இயற்கை என் பெண்ணுக்கு வரம் தந்திருக்கிறது என எல்லோரிடமும் சொல்லி சொல்லி மாய்ந்துபோவார். தன்னை எல்லோரும் விரும்ப காரணம் தன் கூந்தல் தான் என்ற விசயம் அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அதனால் தனக்கும் சிவாக்கும் இடையே பெரியதாகும் இடைவெளியை அவள் உணரவில்லை.

அலுவல் விசயமாக வெளியூருக்கு சென்றிருந்த சிவா திரும்பும் போது காய்ச்சலோடு திரும்பினான். நெருப்பாய் கொதிக்கும் தேகத்தை விட மூட்டுகளின் இணைப்பில் எடுக்கும் வலியை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. மருத்துவரை பார்த்ததில் சிக்கன் குனியா என தெரிந்தது. அவனை விடவும் அதிகம் துடித்தது நித்தியாவாகதான் இருக்கும். மாத்திரை கொடுப்பது, ஆப்பிள், மாதுளை, அன்னாசி என பழச்சாரு கொடுப்பது என இரண்டு நாட்கள் அவனை தூங்காமல் கவணித்துக் கொண்டாள்.

கூந்தலை கவணிக்காமல் விட்டதால் அது சிக்கல் எடுத்து தன்னுடைய எதிப்பை காட்டியது. அதனால் பொழிவிழந்த கோயில் சிலை போல அவள் மாறியிருந்தாள். அந்த கோலத்தில் நித்தியாவை பார்க்க சிவாவுக்கு கஸ்டமாக இருந்தது. சிவாவின் அம்மா நித்யாவை பார்த்து மிரண்டு போனாள். “ நித்யா உன்னை இப்படி பார்க்கரத்துக்கே ரொம்ப கஸ்டமா இருக்கு, நீ பியூட்டி பார்லருக்கு போய் கூந்தலை சரி செஞ்சுட்டுவா. நான் அதுவரைக்கும் சிவாவை பார்த்துக்கிறேன்” என்றாள். நித்தியாவும் அத்தையிடம் எதிர் பேச்சு பேசாமல் தன் பர்சை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

சிவாவிற்கு உடல் நிலை சரியில்லாததை அறிந்து அங்கு வந்த கமலத்திறகு ஆத்திரம் பொங்கியது, “அந்த சிறுக்கிக்கு ரொம்ப தான் இடம் கொடுக்கிறீங்க ரெண்டு பேரும். புருசன்காரன் காய்ச்சலியே கிடக்கும் போது அறுபதடி கூந்தலை சரிசெய்ய பியூட்டி பார்லருக்கு போயிருக்காளா. வரட்டும் அவள நான் பார்த்துக்கிறேன்”. சிவாவும் அம்மாவும் எடுத்து சொல்லியும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. கமலம் வந்து இரண்டு மணி நேரம் முடிந்திருந்தது. சிவாவின் அம்மாவுக்கும் உறுத்த தொடங்கியது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் நித்தியாவை வழிமறித்து வசை பாடுவதற்காக சென்ற கமலமும், அவளை தடுக்க சென்ற சிவாவின் அம்மாவும் திகைத்து நின்றார்கள். சிவாவும் மெல்ல அங்கு பார்வையை செலுத்தினான். நித்யா சந்தனம் தடவிய மொட்டை தலையுடன் கையில் தேங்காய் பழம் வைத்த கூடையுடன் நின்றிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *