மன்னிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 9,870 
 

உயரமான கட்டிடங்கள் தேம்ஸ் நதியில் சலனப்பட்டுக்கொண்டிருந்தன. நீளம் தாண்டும் வீரர்களாய் நாங்கள் பயணம் செய்துகொண்டிருந்த பாலம் நீண்டுகொண்டே சென்றது. என் எதிர் ஜன்னல்வழியே தெரிந்த மற்ற வீரர்களைப் போல் சமத்காரம் கொண்ட வீரர்கள் இருமடங்காம். தேம்ஸை தாண்டும் வீரர்கள். நினைக்கவே குறுகுறுப்பாக இருந்தது.

பாலத்தின் கம்பிகளின் மத்தியிலிருந்து சூரியன் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருந்தான். என் ரயில் பெட்டியின் ஜன்னல்வழி விட்டுவிட்டு அடித்த வெய்யில் கண்ணைக் கூசச் செய்தது. இந்த பாலம் தாண்டினால் தான் சரியாக எதிரில் உள்ளவரைக்கூட பார்க்கமுடியும்.

அப்பாடா, வெஸ்மினிஸ்டர் தாண்டிவிட்டது. இதற்கு பிறகு தரைக்குக்கீழே சென்றுவிடும்.இனி எல்லாம் நிழலே.நிம்மதியாக தூக்கம் போடலாம். இருபது நிமிட பயணம் – கூட்டத்தை கணக்கிட்டால் ஒரு மணிநேரமோ எனத் தோன்றும்; பல வேளைகளில் பல்லவன் தோற்கும். என் தாத்தா ஊருக்கெல்லாம் தர்மம் செய்த புண்ணியம், இன்றைக்கு இடம் கிடைத்தது.இப்படியாகப்பட்ட சந்தர்பங்களை வினாடி கரைந்து நிமிடத்தில் குவிந்து சென்று கலக்கும் மணல் கடிகாரம் போல அனுபவிக்க வேண்டும்.

சற்று இடம் கிடைத்ததால் முட்டி போட்டதுபோல் இருந்த காலை நீட்டினேன். இந்த ட்யூப் எனப்படும் தரைமட்டத்திற்கு கீழ் செல்லும் ரயில் ஒருவர் படுத்தால் கச்சிதமாக இருக்கும் அகலம்தான். சற்றே உணர்ச்சிவசப்பட்டதில் எதிரே இருந்த பெண்மணியின் காலில் பட்டுவிட்டது.

`ஸாரி` – என்பதுபோல் நான் உதடு குவித்து புருவத்தை உயர்த்த – அந்தப் பெண்மணியோ அதை கண்டுகொள்ளாததுபோல் புத்தகத்தில் மறுபடி படிக்கத்தொடங்கினாள். அது ஏனோ ட்யூப்பில் யாரும் அவ்வளவு சத்தமாக பேசுவதில்லை. கணவன் – மனைவியே மெல்லிய டெசிபெல்லில்தான் சண்டைப் போட்டுக்கொள்வார்கள்.

அப்போதுதான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அந்த பெண்மணியை என் அலுவலகத்திலே பிராஜெக்ட் மானேஜ்மெண்ட் அலுவலகத்தில் வேலை செய்பவர். என் அலுவலகத்திலேயே பெரிய பதவி – வி.பி என்று நினைக்கிறேன் – யில் இருக்கிறார்கள். பல வெற்றிவிழா கொண்டாட்டத்திலும், க்ரைஸிஸ் சமயத்திலும் உற்சாகமாக பேசி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நானே என் முதல் வாரம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் எங்கள் குழுக்கான தொடக்க அறிமுக விழாவில் இவரைச் சந்தித்தேன். கூர்மையான பார்வை, பேச்சில் குழப்பத்திற்கு இடமேயிருக்காது. குறைந்த வார்த்தைகளில் பதில் கூறி கேட்டபவர்களை ஒன்றுக்கதிகமாக சிந்திக்க வைத்தவர். Context switching எனப்படும் பன்முக முனைப்பியல்பு ,என்பதில் தேர்ந்த வித்தையுடையவள் என என் குழுவின் தலைவர் அப்போது சொன்னார். அது என்னவோ பெரிய பதவியில் இருப்போருக்கு முக்கியமாம். அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாமென அதை நோண்டிக்கேட்கவில்லை.பல உயரதிகாரிகளும் இவள் சொல்வதை கண்களால் குறிப்பெடுத்து, எந்த கூட்டத்திடம் அள்ளிவீசலாமென சிந்தித்துக்கொண்டிருந்தனர். அப்போதே இவர்பால் மதிப்பு அதிகமானது.

ஏன் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் அலைபாய்ந்த கண்களோடு உட்கார்ந்திருந்தாரெனத் தெரியவில்லை. தேவையில்லாமல் அடிக்கடி முடியைக் கோதுவதும், பக்கங்களில் ஒன்றாமல் வேறுபுரம் பார்த்துவிட்டு மீண்டும் அதே பக்கத்திலிருந்து படித்துக்கொண்டும் நிலையில்லாமலிருந்தது அவர் செயல். இப்போது நகத்தை வேறு கடிக்கத் தொடங்கினார். இவரைப் பற்றிய என் எண்ணத்திற்கு உலை வைத்துவிடுவார் போல இருந்தது செய்கைகள். மறுபடி புத்தகத்தை மூடித் திறந்தார். ஏதோ சிந்தனையின் குழப்பத்தில் இருக்கிறார் போலும். இன்று எந்த பெரிய பிசினஸ் விவகாரமோ? எவ்வளவு கோடிகள் லாபம் வருமென கணக்குப் போட்டுக்கொண்டிருப்பாரோ?

இவரை இரண்டாவது முறையாக எங்கள் பிராஜெக்ட் பட்ஜெட் விவகாரத்தில் சந்தித்தேன். என் மானேஜர் கொடுத்திருந்த அடுத்த வருடத்திற்கான செலவு கணக்குகைக் கொடுத்து , வேலை தான் செய்யத் தெரியவில்லை இதையாவதுசெய் எனச் சொல்லி, அதைப் பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டுவர இந்த பெண்மணியிடம் அனுப்பிவைத்தார். அதற்குள்ளாகவே எங்கள் பகுதிக்கே இந்தப் பெண்மணியே வந்துவிட்டார். மாற்றங்களைச் சொல்லியபடி அவர் நடக்க , நான் தருமி போல் வளைந்து நெளிந்து குறித்துக்கொண்டேன். இதற்குள்ளாக கேண்டீன் வந்துவிட, அன்றைய மதிய சாப்பாட்டை வாங்கிக்கொள்ளலாம்; வாங்கியபடியே இந்த கணக்கை சரிபார்க்கலாமென சொல்லிவிட்டார். வீட்டிலிருந்து கொண்டு வந்த தயிர் சாதம் இருக்க, அன்று சாப்பிட்டது சீஸ் அண்ட் சிப்ஸ் !

ஆனால் அன்று ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. பொதுவாகவே நம்ம ஊரு சிங்காரிகள் இந்த ஊருக்கு வந்தால் பேச்சு முறையில், பொட்டு வைத்துக்கொள்வதில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் இங்கேயே பிறந்த இரண்டாம் தலைமுறை இந்தியர்களின் பேச்சு வழக்கு நம்மைப் போன்ற பட்லர் இங்கிலிஷில் இருக்காது. அந்தப் பெண்மணி பட்லர் இங்கிலிஷ் பேசாவிட்டாலும், நம்ம ஊர் சிங்காரி தான் எனப் புரிந்தது. இந்த ஊருக்கு வந்து சில வருடங்களே ஆகியிருக்கவேண்டும். இந்த அலசல் இந்திய முகங்களைப் பார்த்து வர வேண்டிய முக்கியமான ஒரு தொடக்கம்.

அன்று சாப்பாடு வாங்கியபோது கவனித்தது மறக்க முடியாதது. ஒரே நேரத்தில் என் கணக்கில் மாற்றங்களைச் சொல்லி, அதே நேரம் இந்த மாற்றங்களினால் மற்ற பிரொக்கிராம்களின் நிலையை கணித்து, அந்தந்த டிபார்ட்மெண்ட் மானேஜரை செல்பேசியில் அழைத்து திருத்தம் சொல்லி, டே கேர் செண்டர் என்ற குழந்தைகள் பாதுகாப்பு மையத்திலிருந்து அரை நாள் முடிந்து வீட்டுக்கு வந்திருந்த தன் பெண்ணை கொஞ்சி – டோரா பொம்மை வாங்கிவருவதாக சத்தியம் – என்ப் பல வேலைகளை செய்து முடித்த போது, நான் சிப்ஸுக்கு பணம் தந்துவிட்டு வந்திருந்தேன். என்னால் முடிந்தது. ஆனால் இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தபோதுதான் பதவியில் இருப்போருக்கான வேலை எப்படி ஹை வோல்டேஜ் கம்பி போன்றது என உணர்ந்தேன்.

அந்தப் பெண்மணி இவ்வளவு உயரத்தை இந்த சிறு வயதில் அடைந்ததற்குப் பின்னால் இருந்த உழைப்பு, சமாளிப்புகள் வைப்ரேட்டரில் இருந்த செல்பேசிபோல் சுள்ளென உரைத்தது.அன்றிலிருந்து இவரைப் பார்க்கும்போதெல்லாம் உற்சாகத்தை தேக்கி வைத்த பம்புபோல் எனக்கும் தொற்றிக்கொள்ளும்.

இன்று களை இழந்து, நகத்தை கடிப்பது ஏனென்று தெரியவில்லை. நாங்கள் இறங்கும் இடம் வந்தது. என்னைத் தெரிந்ததுபோல் பொதுவாகச் சிரித்துவிட்டு எழுந்துகொண்டார்.

செல்பேசியும் ரயில் தரைமட்டத்திற்கு வந்துவிட்டோமென கிணிகிணித்து அறிவித்தது. நான் அந்த பெண்மணியைத் தொடர்ந்தேன். அவள் செல்பேசி அழைத்ததும், என்னைக் கூப்பிட்டதுபோல் அருகில் சென்று ஒட்டுக்கேட்டேன்

`நான் மட்டுமா அப்படி பேசினேன், உங்க அம்மா என்ன சொன்னாங்கன்னு கேட்டீங்களா?எவ்வளவு ஹார்ஷா என் அம்மாவை பத்தி சொன்னாங்க தெரியுமா? டோண்ட் பிளைண்ட்லி சப்போர்ட் ஹர்.

அந்த முனை என்ன சொன்னதோ?

`சரி. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நானே பதினோரு மணிக்கு மேல ஃபோன் பண்ணி மன்னிப்பு கேக்கிறேன். போதுமா? `

– 06/19/2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *