மனோபாவம்

 

பால்வண்ணம் பிள்ளையைப் பார்த்தவர்கள் உறுதியாக எண்ணினார்கள். அவர் பிழைத்து எழுவது கஷ்டம் என்று.

டாக்டருக்கு நிச்சயமாகத் தெரிந்துதானிருந்தது. பிள்ளையின் வியாதி குணமாவது அரிது என்பது. இருப்பினும் அவர் தமது கடமையை ஒழுங்காகச் செய்யத்தானே வேண்டும்? ஆகவே டாக்டர், பிள்ளையை அடிக்கடி பரிசோதித்தார்; வேளை தவறாமல் குறிப்பு எழுதி வைத்தார். மருந்து கொடுத்தார். முறைப்படி “ஊசி போட்டு” நோயாளிக்கு நம்பிக்கை ஊட்டவும் தவறவில்லை அவர்.

வாழ்க்கையில் “ஸ்ரீமதி பால்வண்ணம் பிள்ளை” என்ற அந்தஸ்தைப் பெற்று அவரோடு கூட வாழ்ந்து குப்பை கொட்டிய விசாலாட்சி அம்மாளுக்கும் மனசில் தெளிவாகப்பட்டிருந்தது. “இந்தப் பூட்டுக்கு அவுக பிழைத்து எழமாட்டாக” என்கிற உண்மைதான்.

ஆயினும் வஞ்சனை இல்லாமே நாம் பாக்கிறதைப் பார்த்துவிடுவோம். அப்புறம் ஈசன் விட்ட வழி என்ற எண்ணத்தோடு அவள் எத்தனையோ வைத்தியர்களுக்கு
ஏற்பாடு செய்தாள் சோசியர்களிடம் ஜாதகம் பார்த்தாள். மந்திரவாதிகளை அழைத்து என்னென்னவெல்லாமோ செய்து தீர்த்தாள். கடவுள் கடன் நமக்கு என்னத்துக்கு?” என்று நினைத்து ஏகப்பட்ட கோயில்களுக்கும் செலவு செய்தாள். எல்லாம் தன் மனசைத் திருப்தி செய்து கொள்வதற்கும். செத்துக் கொண்டிருந்த கணவனுக்கு ஆத்மதிருப்தி ஏற்படுத்துவற்காகவும்தான்.

சாகப்போகிற மனுஷன் சாகிற நேரத்தில் பாதகத்தி பணத்தைத் தான் பெரிசாக மதிச்சாளே தவிர என்னைப் பெரிசாக நினைக்கவில்லை, பார்த்தியா! சரியானபடி சீக்கு பார்த்திருந்தால் நான் பிழைத்தாலும் பிழைத்திருப்பேன்” என்று வயிற்றெரிச்சலோடும், உள்ளக் கொதிப்போடும் எண்ணிவிடக் கூடாதே! அப்படி ஒரு ஆத்மா குமைந்து குமறுமானால் அந்தக் குலம் ஏழேழு தலைமுறைக்கும் துலங்காமல் போய்விடுமே என்றுதான் அந்த அம்மாள் கருதினாள். பக்தி விசுவாசம் – பாவ புண்ணிய பயம் முதலியன பெற்றிருந்த உத்தமி அவள், ஸ்ரீமான் பால்வண்ணம் பிள்ளையின் உள்ளக் குகையில் ஒரு மூலையில் அந்த உணர்வு “நாம் பிழைக்க மாட்டோமோ” எனும் பயத்தில் விளைந்த அரிப்பு பிறந்து, பின் கறுத்து கனத்து பேயிருளாய் அடர்ந்து மண்டிக் கிடந்திருக்கவும் கூடும். எனினும் அவர் அதை – தனது உட்கிடக்கையை தன் மனைவிக்குப் புலப்படுத்த வேயில்லை. பாவம் விசாலாட்சி வீணாக அழுது புலம்பி மனம் நொந்து போவாளே ! பிள்ளை குட்டிகள் வருத்தப்படுமே! என்ற பரோபகார எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம்.

விசாலாட்சி பணத்தைப் பணம் என்று பாராமல் அள்ளி அள்ளி வைத்தியனுக்கும், மருந்துக் கடைக்கும், சாமிகளுக்கும், சாமிபேர் சொல்லி வாழும் ஆசாமிகளுக்கும் இறைத்து விடுவாள் என்று தோன்றியதும், பால் வண்ணம் பிள்ளை குறுக்கிட்டார். தலையிட்டுத் தடை செய்ய வேண்டியது அவசியம் என்று கருதித் தான் அவர் அப்படிச் செய்தார்.

“விசாலம் நீ செய்யறது நல்லாயில்லே எதுக்கு இப்படி எல்லாம் செலவு பண்ணணும்? என்னைத் தரும் ஆஸ்பத்திரியிலே கொண்டு போய்ச் சேர்த்துவிடு , அதுதான் உத்தமம் என்ற பிள்ளை சொன்னார்.

“நான் உங்களை நன்றாகக் கவனிக்கலியா? இன்னும் கண் முழிச்சப்பாடு பார்க்கக் காத்திருக்கிறேனே நான்” என்று விக்கலோடும் வேதனையோடும் விசாலாட்சி முறையிடத் தொடங்கவும், பிள்ளை அலுத்துக் கொண்டார்.

“இது தான் இந்த வீட்டிலே பெரிய தொல்லை. அட, மனுசன் சொல்றானே, அதைக் கேப்போமே என்று கிடையாது.”

“ஐயோ: ஐயோ, கோயில் மாதிரி நீங்க உங்க மனசிலே குறை இருக்கப்படாது என்று நான் எவ்வளவேர் பாடு படுகிறேனே” எனத் தர்மபத்தினி புலம்பினாள்.

மனோபாவம் “அப்படியானால் என்னை ஏன் ஆஸ்பத்திரியிலே சேர்க்க மறுக்கிறே? அங்கே நல்ல டாக்டர்கள் இருக்கிறார்கள். அருமையாகக் கவனித்து மருந்தெல்லாம் கொடுக்கிறார்கள்” என்று அடுக்கினார் பிள்ளை .

ஆகையினால் பால்வண்ணம் பிள்ளையை தரும் ஆஸ்பத்திரியில் சேர்ப்பது தவிர வேறு வழியில்லை என்று ஆயிற்று. விசாலாட்சி அம்மாள் தன் கணவனின் ஆசைக்கு பங்கம் விளைவிக்க விரும்பவில்லை.

அதனால் ஒரு குறைவுமில்லை. ஆஸ்பத்திரியில் நன்றாகத்தான் கவனித்தார்கள். நல்ல மருந்து, நல்ல போஷிப்பு. மணிப் பிரகாரம் மருந்தும், வேளை தவறாமல் உணவும் கிடைத்தது. ரொட்டி பால், பழங்கள் எதற்கும் குறை கிடையாது. பிள்ளைக்கு ரொம்பவும் திருப்தி.

பால்வண்ணம் பிள்ளைக்கு நிச்சயமான சில நம்பிக்கைகள் இருந்தன. வாழ்வில் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் உய்விக்கக் கூடிய மதம் ஒன்றே ஒன்று தான் உண்டு. அது பணம் தான்… சர்வ வியாபகமான, சர்வ வல்லமை பொருந்திய, சர்வ சமய நாதனான கடவுள் ஒருவனே உண்டு. அப்பன் பணநாதன் தான். அவன் நினைத்ததை எல்லாம் எய்திட வைக்கும் சகல இன்பங்களையும் பெற்றுத் தந்திடும் – எவரையும் ஏவல் கொள்ளும் – அற்புதங்கள் பலவும் செய்யும் மந்திரம் போன்ற ஒரு சக்தி இந்த உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் உண்டு அதுதான் பணம். இவ்வாறு நம்பி, பணபக்தி பண்ணி, பணத்தைச் சேர்த்துவைக்கும் ஆசை மிகுதியும் பெற்றவராய் விளங்கினார் அவர்.

முதலில் கொஞ்சகாலம் விசாலாட்சி தாராளமாகச் செலவு செய்ததை அவர் ஆட்சேபிக்காததன் காரணம், “நாம் பிழைத்து விடுவோம்” என்ற நினைப்பு அவருள் குடியிருந்தது தான். பிறகு அவர் தம்மை ஆஸ்பத்திரியில் சேர்த்தே ஆகவேண்டும் என்று அடம் பிடித்ததிலிருந்தே “நாம் பிழைப்பது சந்தேகம்தான்” என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டு விட்டது என்பது விசாலாட்சிக்கும் மற்றவர்களுக்கும் புரிந்தது.

எனினும், அப்படி ஒரு சந்தேகம் தன்னுள் முளைகட்டி, முகிழ்த்தெழுந்து, குருத்து விட்டு, இலைகள் விரித்துப் பெரிதாகிக் ரெண்டிருந்ததாக பிள்ளை ஒருவரிடம் கூட வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனவே, அவரைக் குஷிப்படுத்தி அவருக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது தங்கள் கடமையாகும் என்றுதான்
எல்லோரும் எண்ணினார்கள்.

விசாலாட்சி கூட அவ்வாறு தான் நம்பினாள். அவள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, அவரைப் பார்ப்பதற்காக, ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். போகிற போது வெறும் கையோடு போகலாமா என்று எண்ணி, ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் வாங்கிக் கொண்டு போனாள்.

முதல் நாள் பால்வண்ணம் பிள்ளை எதுவும் பேசவில்லை. “இதெல்லாம் எதுக்கு?” என்றாரே தவிர, எரிந்துவிழவில்லை .

மறுநாளும் அவள் பழங்கள் வாங்கி வந்த போது. அவர் முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு, வீணாக இதை எல்லாம் வாங்கி வருவானேன்?” என்று முனங்கினார். வியாதியின் உக்கிரம் தாங்காமல் தான் கணவன் உஷ்ணமாகப் பேசுகிறார் என்று எண்ணினாள் பத்தினி அம்மாள்.

மூன்றாம் நாளும் அவள் ஆப்பிள்கள், ஆரஞ்சு . முந்திரிப் பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து நின்றதும் பால்வண்ணம் பிள்ளையின் கோபம் எரிமலையின் அக்கினிக் கொதிப்பு போல் ஆயிற்று வார்த்தைகள் தீக்குழம்பு போலவும் புரண்டு ஓடிவந்தன.

உனக்கு மூளை என்பது கொஞ்சம் கூடக் கிடையாது. வடம் வருத்தம் இல்லவே இல்லை. கண்மூடித்தனமாக செலவு செய்துவிட்டு, நீயும் உன் பிள்ளைகளும் நாதியற்று நடுத்தெருவிலேதான் நிற்கப்போறீங்க. நான் செத்ததற்குப் பிறகு, நீ பிச்சைதான் எடுப்பாய்” என்றெல்லாம் பொரிந்து தள்ளினார் அவர்.

தான் செய்த தீங்கு என்ன என்பதை உணர்ந்து கொள்ளும் திறனற்றவளாய் கண்ணீர் வடித்து, இதயம் நொந்து நின்றாள் விசாலாட்சி பிள்ளைகள் விழித்தபடி நின்றார்கள்.

“நான் தான் பழமெல்லாம் வாங்கி வரவேண்டாம் என்றேனே. நீ ஏன் தெண்டத்துக்கு அரை டசன் ஆப்பிளும் அரை டசன் ஆரஞ்சும் வாங்கி வரணும்? ஆப்பிள் பழம் விக்கிற விலையிலே நம்மைப் போல உள்ளவங்க தினசரி வாங்கினால் கட்டுபடி ஆகுமா? நீ ஏன் தினம் மனோபாவம் அதை வாங்கணும்? ஆரஞ்சுப் பழங்கள்தான் ஆஸ்பத்திரியிலேயே தருகிறாங்களே. உனக்குப் பணத்தின் மதிப்பு என்றைக்குத்தான் தெரியப்போகிறதோ? கண்ணு மூக்குத் தெரியாமல் பணத்தைக் காலி பண்ணிப்போட்டு, அப்புறம் கஷ்டப்படணுமா என்ன?” என்று உபதேசித்தார் அவர்.

அதன் பிறகுதான் அவள் செய்த தவறு அவளுக்கே விளங்கியது. நீண்ட பெருமூச்செறிந்தாள் விசாலாட்சி. “இன்னமே இப்படிச் செய்யலே” என்று மன்னிப்பு கோரினாள் அவள்.

பிறகு விசாலாட்சியும் பிள்ளைகளும் வீடு திரும்பும் போது, “ஏய்! என்றார் குடும்பத் தலைவர்.

அவள் திடுக்கிட்டுத் திகைத்து நின்றாள்.

“இந்தப் பழங்களை எல்லாம் எடுத்துக்கிட்டுப் போ” என்று உத்திரவிட்டார் அவர்.

அவருடைய கோபம் அடங்காத கோபமாகத்தான் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது என்று பயந்தாள் விசாலாட்சி.

‘ஏன் முழிச்சுக்கிட்டு நிக்கிறே? பழங்களை எடுத்துப் பையிலே வை. வீட்டுக்குப் போனதும் குழந்தைகளுக்குக் கொடு. இங்கே இருந்தால் வீணாகத்தானே போகும் என்று கூறி, லேசாகச் சிரித்தார் பிள்ளை.

அவர் கோபமாகச் சொல்லவில்லை. குணத்தோடு தான் பேசுகிறார் என உணர்ந்த விசாலாட்சி தான் கொண்டு வந்த பழங்களை எடுத்துப் பைக்குள் போட்டாள்.

“இதையும் கொண்டு போ. இதை எல்லாம் குழந்தைகளுக்குக் கொடு. நீயும் தின்னு” என்று உற்சாகமாகப் பேசி, ஆரஞ்சுப் பழங்களை அள்ளி அள்ளிப் பையினுள் போட்டார் பிள்ளை.

‘அப்புறம் உங்களுக்கு வேண்டாமா?” என்று தயங்கித் தயங்கி விசாரித்தாள் விசாலாட்சி.

“இங்கே நிறையவே ஆரஞ்சுப் பழங்கள் தருகிறாங்க. சீக்காளியான ஒருவன் தின்னக் கூடிய அளவுக்கும் அதிகமாகவே கொடுக்கிறாங்க. எல்லாம் வீணாகப் போவதைவிட அல்லது அவங்களிடமே திருப்பிக் கொடுப்பதை விட – நீ வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போவது நல்லதில்லையா? குழந்தைகளுக்கும் உனக்கும் ஆகுமே!” என்று அவர் அறிவித்தார்.

அவள் பதில் பேசவில்லை .

“விசாலம், இனி நான் இங்கே இருக்கிற வரைக்கும் நம்ம குழந்தைகளுக்கு ஆரஞ்சுப்பழம் கிடைத்துக் கொண்டே இருக்கும். நீ கவலைப்பட வேண்டாம். அநாவசியமாகக் காசு செலவு பண்ணி எதையும் நீ வாங்கி வரவும் வேண்டாம்” என்றார் பால் வண்ணம் பிள்ளை தனக்கு ஏற்பட்ட ஆத்ம திருப்தியை ஓலி பரப்புவது போல் நன்றாகச் சிரித்தார் அவர்.
அவர் முகத்தையே பார்த்தபடி நின்ற விசாலாட்சிக்குத் தன் அழுகையை அடக்க முடிந்தது. விம்மி வந்த பெருமூச்சை அடக்கமுடியவில்லை .

- வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் – முதற் பதிப்பு ஆகஸ்ட், 2002 – பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு 

தொடர்புடைய சிறுகதைகள்
டெலிபோன் மணி அலறியது. சோபாவில் சுகமாகக் கிடந்த கானப் பிரியனின் மனம் பதறியது. சில தினங்களாகவே அவருக்கு டெலிபோன் மீது ஒருவித பயம் ஏற்பட்டிருந்தது. அதன் மணிச் சத்தம் அவர் ஆசையைத் தூண்டுவதாகவும் இருந்தது. கானப்பிரியன் அவர் புகழ் பெற்ற நடிகர் என்பது ரொம்பப் ...
மேலும் கதையை படிக்க...
டாக்சி வாடகைக்கு வருமா? ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த சந்திரன், அருகில் ஒலித்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான். அவனது பதட்டத்தைப் பார்த்தோ - அல்லது மனத்தில் தோன்றிய ஏதேனும் ஒரு எண்ணத்தினாலோ - முகத்தில் சிரிப்பின் ரேகை நெளிய அவனையே கவனித்தபடி நின்ற ...
மேலும் கதையை படிக்க...
சொக்கம்மாளுக்கு எத்தனையோ ரகசியங்களை இனிக்க இனிக்கச் சொல்லும் ஒரே தோழி அவளுடைய கண்ணாடிதான். விலை குறைந்த சாதாரணக் கண்ணாடிதான் அது. இருக்கட்டுமே! சொக்கம்மா மட்டும் பட்டும் படாடோப ஆடைகளும் கட்டி மினுக்கும் சீமாட்டியா என்ன? வேலைக்காரி சீதையம்மாளின் மகள் தானே. சீதைக்குத் தன் மகள் ...
மேலும் கதையை படிக்க...
”நல்ல ஆளா ஒருத்தி இருந்தால் சொல்லுங்க அண்ணாச்சி. சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஒரு ஆளு வேணும்" என்றார் சிவராமன், எதிரே வந்த சூரியன் பிள்ளையிடம். "ஏன், பஞ்சவர்ணத்தம்மா என்ன ஆனாள்?" என்று கேட்டார் பிள்ளை. ”அவள் தன் சுயவர்ணத்தை காட்டிப் போட்டாள்!" என்று சொல்லி, ...
மேலும் கதையை படிக்க...
மலையில் தொடங்கிக் கடலில் முடிந்த அந்தப் பெரிய ஆற்றின் நடுவில் ஒரு சிறு தீவு இருந்தது. ஆறு தீவைச் சுற்றி ஒடியது; சிலசமயம் அதன் கரைகளை அரித்தது; ஆனால் ஒருபோதும் தீவின் மேலாக ஒடியதில்லை. அத் தீவில் ஒரு சிறு குடிசை ...
மேலும் கதையை படிக்க...
கண்ணில் படாத காதல்
காதல் அதிர்ச்சி
வெயிலும் மழையும்
வேலைக்காரி
சீதாவும் ஆறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)