கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 26, 2022
பார்வையிட்டோர்: 8,752 
 

(1997 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவளை எனது அறை பெருக்கவும் துணிகள் துவைக்கவும் என என் வீட்டுச் சொந்தக்காரர் தான் ஒழுங்கு செய்திருந்தார். அந்த வீட்டின் பின்புறத்தில் தனி அறையாக, குளியலறையுடன் சேர்ந்திருந்த இடத்தை எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அறையின் எதிரிலேயே ஆரோக்கியமாகச் செழித்திருந்த வேப்பமரமும் அதன் இளம்பச்சை இலைகளும் கண்களையும் மனதையும் நிறைத்து மனதை இதப்படுத்த… சந்தோஷம் பரவிடச் செய்தன. உடலைத் தொட்ட இளங்காற்றை ஆனந்தமாகவே எதிர்கொள்ளும் வாய்ப்பு, நெருக்கடி நிறைந்த நகரத்தில் எவ்வளவு சிக்கலானது என்பதை நான் ஏற்கெனவே அனுபவரீதியாக அறிந்து வைத்திருக்கிறேன். தனியார் நிறுவனம் ஒன்றின் மேலதிகாரி என்ற விதத்தில், பல நகரங்களில் தங்க நேர்ந்து மனம் அலுத்துப் போனவன் நான்.

முதல் பார்வையிலேயே வீடு பெருக்க வந்த அந்தப் பெண்ணை விநோதமாகவே என்னால் பார்க்க முடிந்தது. குச்சியான தேகம். வறண்ட கருமையான நிறம். அடர்ந்த தலை முடியை ஒற்றைப் பின்னலாகப் பின்னிவிட்டிருந்தாள். ஆனால், கண்களிலே மட்டும் துறுதுறுப்பு. நடந்து செல்கிறபோது பார்த்தால் வேடிக்கையாக இருந்தது. ஓட்டமாகச் செல்வதுபோல, எகிறி எகிறி நடந்து சென்றாள்.

மூன்றாவது நாள், வேலையை முடித்துக் கொண்டு அவள் புறப்பட்ட போது, முதன் முதலாக அவளோடு நான் பழகினேன்.

“உன் பேரென்ன?”

அவள் குனிந்தபடியே சொன்னாள் : “மனோகரிங்க…”

சட்டென்று நான் என் மனம் அதிர்ந்ததை உணர்ந்தேன். என் காதுகளில் பளீரென்று அறைந்தாற்போலக் கடூரமாக இருந்தது அவளின் குரல். விகாரமான குரல், நிச்சயம் அது பெண்ணின் குரலாகவே இல்லை. என்னால் பிறகு எதையுமே அவளுடன் பேசத் தோன்றவில்லை. கதவு வழியாக வெளியே பார்த்தேன். இளஞ்சூரியனின் மிருதுவான வெளிச்சத்தில், வேப்பம் இலைகள் உதிர்ந்து தாளலயத்துடன் கீழே தரையில் மெள்ள மெள்ள அடி பதித்துக் கொண்டிருந்தன. நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன், என்னையறியாமலே!

“நான் புறப்படறேன் சார்…” குரலை அழுத்தியவாறே சொன்னாள் மனோகரி. மீண்டும் காதை அழுத்திய குரல்.

“சரி…” என்றேன் நான்.

அவள் கதவு வழியாக எகிறி எகிறி வெளியே நடந்தாள். அவள் அங்கிருந்து போய் வெகுநேரமாகி விட்டபோதும், அந்த விகாரமான குரல் மட்டும் என் காதுகளின்

அருகே கேட்டுக் கொண்டிருந்தது. மனதில் லேசான எரிச்சல்கூட உண்டாயிற்று. ஆனால், மிகவும் நேர்த்தியாக அவள் தனது வேலைகளைச் செய்ததை முதல் நாளே நான் கண்டு கொண்டேன். நூறு ரூபாய் சம்பளத்துக்கு, நகரத்தில் இப்படி ஒரு வேலைக்காரியைப் பிடிப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். அவளின் குரலைப் பற்றி நமக்கென்ன…. அவளோடு எதற்காகப் பேச வேண்டும். பேசவே வேண்டியதில்லை என்று முடிவு செய்து கொண்டேன்.

இரவு பெய்த மழையில் நன்றாகவே நனைந்து விட்டேன். வீட்டு வாசலில் இருந்து ஆட்டோவில் இறங்கிப் பின்புறம் வருவதற்குள் தெப்பமாக நனைந்து விட்டேன். அறையுள் நுழைந்ததும் ஆடைகளைக் கழற்றிக் குளியலறைக்குள் போட்டு விட்டுத் தலையைத் துவட்டிக் கொண்டேன். பிறகு, சூட்கேஸைத் திறந்து ஹேர் டிரையரை எடுத்து பிளக்கில் மாட்டித் தலைமுடியை முற்றாகத் துவட்ட முயன்றபோது அறை முழுவதும் இருள், கனமான திரையாக மூடிக் கொண்டது. கண்களை நோக வைத்த அழுத்தமான இருளிடையே ஒருவாறு தடுமாறியவாறு கட்டிலில் என்னைச் சரித்துக் கொண்டேன்.

வெளியே மழை, பூதமாக உறுமி மின்னலையும் இடியையும் இஷ்டத்துக்குத் திசையெங்கும் வீசி எறிந்து கொண்டிருந்தது. காதுகள் அதிர்ந்து நோக, இடியும் மின்னலும் மேலும் மேலும் திரளாகப் பெருகிக் கொண்டிருந்தன. வெளிக் கதவையும் ஜன்னல்களையும் இழுத்து எறிகிறாற்போல மழை வெறி கொண்டு பெருகிக் கொண்டிருந்தது.

வெளியே கதவை யாரோ மெதுவாகத் தட்டுவதை மனம் மெள்ள உணர்ந்தபோது கண் விழித்தேன். சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். மணி

எட்டு. இவ்வளவு நேரமாகத் தூங்கிவிட்டேனா?’ என்ற பரபரப்பு. எழுந்தேன். தலை கனத்து வலித்தது. அஸ்க்.. அஸ்க்..’ என்று தும்மியபடியே போய்க் கதவைத் திறந்தேன்.

மனோகரி…. பார்வையில் குளிர்மையான பரிவு. “சார், ரொம்ப நேரம் தூங்கிட்டீங்க…” தலையை அசைத்தவாறே வெளியே பார்த்தேன். “எப்போ வந்தே ….?” லேசாகச் சிரித்தாள். கோணல் மாணலான ஆனால், பளீரென்ற பற்கள்.

“ஒண்ண ரை அவர் இருக்கும் சார்….”

“அப்படியா….?”

“ஆமாங்க…. மூணுவாட்டி கதவைத் தட்டினேன். சார் எழுந்திருக்கல்ல… ஆனா, இங்க வந்ததும் மனசுக்கு ரொம்ப சங்கடமாயிடுச்சு…”

“ஏன்….?” என்னை அறியாமலே கேட்டேன்.

“அதோ பாருங்க சார்….” சுள்ளிக்கையை அவள் நீட்டிய திசையில், மதில் ஓரமாக வேப்பமரக் கிளைகள். உடைந்து முறிந்து ஊனமாகித் தாயை இழந்து உயிர் போய்க் கொண்டிருக்கிற கிளைகள், பச்சை, மஞ்சள் இலைகளோடு சிதைந்து போய்க் கிடக்கிற வேப்பங்காய்களும் பழங்களும் கொத்துக் கொத்தாக.

“வந்தப்போ இந்த இடமெல்லாம் சிதறிக் கிடந்துச்சுங்க. மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாயிடுச்சு. மரம்னா என்னங்க… அதுவும் நம்ம மாதிரி தானே..”

என் மனம் அதிசயமுற்றது. இரக்கத்தோடு தழுதழுத்த அவளின் வார்த்தைகள், வேப்பமரத்தையே அடிமுதல் நுனிவரை தொட்ட அவளின் பரிவு சிந்திய பார்வை என்பன என் மனதை என்னவோ செய்தன. நான் வேப்பமரத்தைப் பார்த்தேன். பெருமளவுக்குக் கிளைகளைப் பறிகொடுத்து ஊனமாக நின்றது. நேற்றுக் காலையில் கம்பீரமாக இளங்கதிரில், அணில்கள் விளையாட முழுமையாக நின்ற மரம்.

‘அஸ்க்…. அஸ்க்…..’

நெற்றியில் கையை அழுத்திக் கொண்டே தும்மினேன். தலைக்குள் ஆணிகள் இறுகி நுழைவது போன்ற வலி அரும்பத் தொடங்கிற்று. மீண்டும் தும்மினேன்.

“சார், மழையில நனைஞ்சுட்டீங்களே……?” தலையை அசைத்தவாறே உள்ளே போனேன்.

குளியலறைப் பக்கமாகப் போனவள், திரும்பி வந்தாள் பரபரப்பு தொனிக்க…. “சார், நல்லாவே நனைஞ்சுட்டீங்க… ஷர்ட்லகூடப் பணம் வெச்சிருக்குறீங்க…. இப்படி நனைஞ்சுட்டீங்களே…” என்றவாறு ஏழு நூறு ரூபாய் நோட்டுகளையும் சில்லறையையும் சில காகிதங்களையும் என் மேஜையில் இருந்த பத்திரிகையில் காயும்படி பரப்பி வைத்தாள் மனோகரி.

நான் மீண்டும் தும்மினேன். “சார்கிட்ட ஜலதோஷ மாத்திரை இருக்குங்களா..” நான் தலையை அசைத்தேன், “வாங்கி வரட்டுங்களா…..?”

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மீண்டும் உடலை உலுப்பிற்று, தலையைக் கிழித்துக் கொண்டிருக்கும் வலியும் ஜலதோஷமும்.

மனோகரி பிறகு என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மேஜையில் இருந்த சில்லறைப் பணத்தை எடுத்தபடி, குளியலறைக்குப் போய்விட்டு அவசர அவசரமாக வெளியே போனாள்.

கொஞ்ச நேரத்தில் அறைக்குள்ளே வந்தாள். அவள் கையிலே பேப்பரால் சுற்றிய டம்ளர். டம்ளரை மேஜையில் வைத்துவிட்டு, மாத்திரை ஒன்றை என்னிடம் கொடுத்து, ‘வாட்டர் கேனி’ லிருந்து தண்ணீரை இன்னொரு டம்ளரில் ஊற்றிவந்து, என் கையில் கொடுத்தாள். “மாத்திரையைப் போட்டு முழுங்குங்க…”

நான் மாத்திரையின் பேரைப் பார்த்தேன். ஜலதோஷத்துக்கு மிகச் சரியான மாத்திரை.

“கடைக்காரர்கிட்ட சொல்லித்தான் வாங்கினேன்…. மூணுவேளை, மூணு நாளைக்கு. நான் ஒருவாட்டி சாப்டிருக்கேன். ரொம்ப நல்ல மாத்திரைங்க…”

நாள் மாத்திரையை விழுங்கினேன். “காபி சாப்பிடுங்க… உங்க மாதிரியானவங்க சாப்டற ஓட்டல்ல வாங்கினது…”

காபி சுவையாக இருந்தது. அதன் சூடு, உடலைப் புத்துணர்ச்சி பெறச் செய்ததை உணர்ந்தேன். மனோகரியின் வாத்ஸல்யம் என்னை நெகிழச் செய்தது. குளியலறையுள் அவள் என் ஆடைகளை அலம்பும் சத்தம் கேட்டது. அவளின் பரிவு மனதை ஈரமாகத் தொட்டது. இரக்கம் தொனிக்கிற அந்தக் குரல், எந்த எதிர்வுமின்றி இப்போது கேட்கிறாற் போல எண்ணத்தில் நினைவு சுழித்தது.

எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு, “சார்… இன்னிக்கு நல்ல ரெஸ்ட் எடுக்கணும்… ஆமா, டிபனுக்கு என்ன பண்ணுவீங்க….?” என்றாள் அவள்.

மூக்கை லேசாக உறிஞ்சினேன். தலைப் பாரம் குறைந்து, கண்களில் குளிர்மை தெரிந்தது.

“என்ன டிபன்….? தோசையா, இட்லியா…..?”

என்னையறியாமலே சொன்னேன். “பணம் கொடுங்க…”

நான் சூட்கேஸைத் திறந்து பணம் எடுத்து, அவள் கையில் ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.

“மத்தியானம் சாதம் தானே…?”

“அதை அப்புறம் சொல்றேன்…”

மனோகரி அங்கிருந்து போன கொஞ்ச நேரத்தில் அங்கே வந்தார் வீட்டுக்காரர். ஆச்சரியமாக என்னிடம் அவர் கேட்டார் : “யார் இந்த வேப்பமரப் பக்கமெல்லாம் இப்படிச் சுத்தம் பண்ணி வெச்சாங்க …?”

“மனோகரி…”

“அப்படியா…?” மேலும் வியந்தார். “ரொம்பப் பெரிய கிளையெல்லாம் உடைஞ்சு போய்க் கிடக்கு…. இதைச் சுத்தம் பண்ணணும்னா, ரெண்டு கூலிக்காரங்க நூறு ரூபா கேட்டிருப்பாங்க. அவங்ககூட இப்ப, இந்த வேலையை முடிச்சிருக்கமாட்டாங்க… பாருங்க, அந்தப் பொண்ணு என்கிட்ட இதைப்பத்தி எதுவுமே பேசலே…. ரொம்ப அருமையான பொண்ணுங்க…”

என் மனதுள் குற்ற உணர்வு அழுத்திற்று. வெளியே பார்த்தேன். மதில் ஓரமாக, நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பெரிய இலைகளும் காய்களும் அடர்ந்த வேப்பங் கிளைகள். இரண்டு மணி நேரத்துக்குள்ளே அவற்றை ஒழுங்குபடுத்திவிட்டு, அதைப்பற்றி எதுவுமே பேசாமல் வேப்பமரத்துக்காக இரங்கி, வேதனைப்பட்ட குரல்.

“வந்தப்போ இந்த இடமெல்லாம் சிதறிக் கிடந்துச்சுங்க…. மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாயிடுச்சு. மரம்னா என்னங்க, அதுவும் நம்ம மாதிரிதானே…..’

கனிவோடு காதின் அருகே கேட்டது அவளின் குரல்.

முதல் மாதம் முடிந்ததும் இருநூறு ரூபாயை அவளது கையிலே கொடுத்தேன். வாங்கியவள் என்னையும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளையும் மாறி மாறிப் பார்த்தாள். ஆச்சரியம் நிறைய என்னங்க இது…” என்றாள்.

“வெச்சுக்கோ ….” என்றேன்.

“வேணாங்க…” உறுதியான குரலிலே சொன்னாள் அவள். “நூறு ரூபாதாங்க சாரு சொன்ன சம்பளம்….”

“நீ நிறைய வேலை பண்றே…… அதுவும் போன மாசம் எனக்காக ரொம்பக் கஷ்டப்பட்ட….”

சிரித்தாள். தாயின் கனிந்த சிரிப்பு. “அதெல்லாம் என்னங்க…..?”

“சொல்றேன்ல… வெச்சுக்கோ….” கொஞ்சம் அதட்டலாகச் சொன்னேன். மீண்டும் சிரிப்பு,

வார்த்தை நாணயம் பெரிசுங்க….. நூறு ரூபாதான் என் சம்பளம். அதுதான் சாரு சொன்னாங்க. இன்னும் ஒரு வீட்ல வேலை செய்றேன். எண்பது ரூபா தான். அதவிட நீங்க அதிகமா கொடுக்கிறீங்க….. தோ, இதுல வெச்சுடறேன்…..”

ஒரு நூறு ரூபா நோட்டை மேஜையில் வைத்துவிட்டு, கீழே கிடந்த காகிதத் துண்டுக் கசக்கலைக் குப்பைக் கூடையிலே போட்டாள் மனோகரி,

எனக்கு அடுக்கடுக்கான இதழாக விரியும் வியப்பு. அவள் உருவமும் பேச்சும் என் எதிரே கம்பீரமாக. யௌவள லட்சியமாகப் பிரமிப் பூட்டிக் கொண்டிருந்தது.

சட்டென்று கேட்டேன் : “உன் வயசு என்ன….?”

மீண்டும் மல்லிகையாகச் சிரித்தாள்.

“ஆயாவைத்தான் கேட்கணும், எனக்கு என்னங்க தெரியும்… எதுக்குங்க….?”

எனக்குச் சிரிப்பாக வந்தது. சிரிக்காமலே கேட்டேன்: “கல்யாணம் ஆச்சா…?”

நாணத்தோடு இடதுகையால் ஒரு கண்ணை மூடிக்கொண்டே தலையைக் குனிந்தாள்.

“ஆச்சுங்க…”

நான் முதல் தடவையாக இப்போதுதான் அவளின் கழுத்தைப் பார்த்தேன். மங்கிய மஞ்சள் கயிறு. உற்றுப் பார்த்தால் தெரியும்.

“என்ன வேலை…?”

“கூலிவேலைங்க……”

“படிச்சிருக்கா…..?”

“ஆமாங்க..” பெருமையோடு தலை நிமிர்ந்தாள். கண்களில் இதுவரை மிளிராத வெளிச்சம், புன்னகை.

“எதுவரை..?”

கூச்சமாகச் சிரித்தாள்.

“எனக்கென்னங்க தெரியும்..? அதைத்தான் கேட்கணும். நம்ம வீட்டு ஜனங்களுக்கு ஏதாவது மனு எழுதணும்னா, அதுகிட்ட வருவாங்க…”

சொல்லிவிட்டுத் தயக்கமாக என்னைப் பார்த்தாள்.

“சார்கிட்ட ஒண்ணு கேட்கணும்னு ஆசை. ஒரு வாரமா மனசை அலைக்குது….”

“கேளு….”

“தப்புன்னா மன்னிச்சிடுங்க…”

“இல்லை, தைரியமா கேளு….”

“அதுக்குக் கூலிவேலை ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க. இரவெல்லாம் தூங்கமுடியாம ஒரே ஒடம்பு வலி. அதுக்கு நல்லதா ஒரு வேலை சார்தான் தேடிக்கொடுக்கணும். அதுதாங்க சார்கிட்ட இதக் கேளுன்னு சொல்லிச்சு….” தயங்கித் தயங்கிக் கேட்ட அவளைக் கனிவோடு பார்த்தேன். அவன் கண்கள் பனித்திருந்தன. உதடுகள் நடுங்கியது தெளிவாகத் தெரிந்தது.

“இதுதானா…?” – என் குரல் கேட்டதும் ஆர்வம் பளபளக்க, அவள் என்னைப் பார்த்தாள்.

“ஆமாங்க.”

“சைக்கிள் ஓட்டத் தெரியுமா….?”

“ஆமாங்க… போட்டியெல்லாம் ஜெயிச்சிருக்காரு. ரொம்பப் பேருக்கு அவர்மேல பொறாமைங்க …”

“ஏன் …..?”

நாணம் படரத் தலைகுனிந்தாள்.

“ரொம்ப நல்லா இருப்பாருங்க…”

“காலையில கூட்டிவா… நானே வேலை தர்றேன்….”

“சார் ….” கைகளைக் கூப்பியவாறு வார்த்தைகளேயற்று கண்ணீர் பனிக்க நின்ற அவளை நான் பார்த்த பார்வையில் கனிந்திருந்த அன்பையும் கருணையையும் அவள் உடனேயே உணர்ந்திருக்க வேண்டும். தழுதழுத்த குரலிலே மீண்டும் எதையோ சொல்ல நினைத்தாள். முடியவில்லை. அங்கிருந்து போய்விட்டாள்.

மறுநாள் காலையில் கதவை மெள்ளத் தட்டும் சத்தம் … திறந்தேன். மனோகரி அருகே கணவன்.

”வணக்கம் சார்….” என்றான் அவன். நான் திகைப்பிலிருந்து விடுபட சில கணங்கள் சென்றன. மனோகரி மௌனத்தைக் கலைத்தாள்.

“இதுதாங்க….”

“உள்ளே வாங்க…” நான் திகைப்பிலிருந்து மீண்டு உள்ளே நடந்தேன். என் மனம் நிறைந்த திகைப்பு. ‘ஒரு இளைய திரைப்படக் கதாநாயகன் போல அழகும் கம்பீரமும் கொண்ட இவனா மனோகரியின் கணவன்…?’ என்னையறியாமலே அவனை உட்காரச் சொன்னேன்.

“படிச்சிருக்கியா…..?” தலையை அசைத்தான்.

“சாருக்கு விவரமா சொல்லு…” என்றாள் குறுக்கிட்டு. அவள் கண்கள் மலர், அவனைப் பார்த்தாள்.

“ப்ளஸ் டூ படிச்சிருக்கேன்…”

“அப்படியா….?” என முகமெங்கும் படர்ந்த திகைப்பு. “அப்புறம் எதுக்குக் கூலிவேலை செய்யணும்….?”

அவன் மௌனமாக நின்றான். அவனைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல எனக்குத் தோன்றிற்று. அழகும் வசீகரமும் கலந்த கம்பீரம், யௌவன கர்வம்.

“என் ஹெட் ஆபீஸ்லயே உனக்கு வேலை வாங்கித் தர்றேன். என்னால அது முடியும்…”

“சார் …” வார்த்தை நின்று, பார்வையில் பொங்கிய நன்றி அவனது மனதைத் தொட்டது.

“சொன்னேன்ல சாரைப் பற்றி…” பூரிப்போடு இருவரையும் பார்த்தாள் மனோகரி.

“அப்போ எப்ப வரணும் சார்….?”

“நாளைக்கே….”

“உன் பேரு சொல்லல்லை ….?”

புன்னகையோடு, “மனோகரன்…” என்றான் அவன். நெற்றியைப் பெருவிரலால் தடவிக் கொண்டான். சுருள் சுருளான முடி, அரும்பு மீசை. பற்பசை விளம்பரதாரர் கண்டால், அந்தப் புன்னகைக்காகவே அவனை அள்ளியெடுத்துக்கொண்டு போய் விடுவார்கள்.

மனோகரி என் மனதில் வந்தாள். அவனைப் பார்த்தேன்: “எப்படி உங்க கல்யாணம்…?”

புன்னகையும் நாணமுமாக என்னைப் பார்த்தான். “சொல்லு…”

“லவ் மேரேஜுங்க….” அதிர்ச்சியை என்னுள் புதைத்துக்கொண்டு அவனைப் பார்த்தேன்.

“என்ன… எப்படி….?”

“ஒரு நாள் ரோட்ல போய்க் கொண்டிருந்தேங்க… ராத்திரி நேரம்… மூணு, நாலு பேரு என்னை வழிமறிச்சு அடிக்கத் தொடங்கிட்டாங்க. என்னால சமாளிக்க முடியலே…”

“அப்புறம் …?” ஆர்வம் என்னும் சிறகடித்தது.

“அந்த வழியா மனோகரி வந்திருச்சு. சத்தம் போட்டுச்சு. கல்லால வீசி, அவங்களைத் தூத்துச்சு… ரொம்பத் தைரியசாலிங்க….அது வராமலிருந்தா, என் கதை அன்னிக்கே முடிஞ்சிருக்கும்….”

நன்றி மலர்ந்து வீசிற்று அவன் குரலிலே. “ரொம்ப அருமையான பொண்ணுங்க. அவ எனக்குப் பொக்கிஷங்க….” என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.

அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டதை நான் பின்னாலேயே நின்று பார்த்தேன். நான் என் அன்பளிப்பாகக் கொடுத்த புதிய ஷர்ட்டை, அவன் வலது கையிலே வைத்திருந்தான். அவனது இடது கையை இப்போது லேசாகப் பற்றிக் கொண்டாள் மனோகரி.

என்னால் அந்த வேளையில் அழகும் கம்பீரமும் இனிமையும் நிறைந்த வசீகரமிக்க காதலர்களை அடையாளம் காணமுடிந்தது. மனம் நிறைய மகிழ்ச்சியோடு அவர்கள் பார்வையிலிருந்து மறையும் வரை கதவருகிலேயே நின்றேன்.

– ஆனந்தவிகடன், 1997. சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *