கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 9,715 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

ராமசாமி விருட்டென்று நடைக்குத் தாவிக் கதவைத் தட்டினான் தெரு விளக்கின் ‘இருபத்தஞ்சு பவர் ‘ விளக்கு மட்டும் வீட்டுக் கதவை அடையாளம் காட்டும் புனித சேவையோடு கர்மயோக சாதகம் செய்து கொண்டிருந்தது. ராமசாமியிடம் கைக் கெடிகாரம் இல்லை. எனவே மணி என்ன இருக்கும் என்று நிதானிக்க முடியவில்லை. என்றாலும் டவுனுக்குச் செல்லும் கடைசி பஸ், வரும் வழியில் அவனைக் கடந்து செல்லவில்லை என்ற நிச்சயத்தின் பேரில், மிஞ்சிப் போனால் பத்துப் பத்தரை இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். அதில் அவனுக்குக் கொஞ்சம் திருப்தி.

மீண்டும் அவன் கதவைத் தட்டினான். கதவு திறக்கப்பட்டது; செல்லம் எதிர்ப்பட்டாள்.

தூக்கத்தின் அழுத்தம் கண்ணிமையை விட்டு இறங்காததனால், அவள் முகம் சோர்ந்து போயிருந்தது. அந்தச் சோர்வை ‘காரிகேச்சர் ‘ பண்ணி அழுத்தம் கொடுப்பது போல, தலை மயிர் வரிசை குலைந்து போயிருந்தது. அசேதனப் பொருளான அந்தச் சேலையின் துவட்சியில் கூட, அந்தச் சோர்வின் ‘களை ‘ தட்டியது.

ராமசாமி கலாரசிகன் அல்ல. ரசிகனாயிருந்தால் ‘திருவனந்தலிலும் முகமலர்ந்தொளிரும் ‘ அந்தக் கடை திறப்பின் களையை அனுபவித்திருப்பான். எனவே சாதாரண வாலிபனுக்கு உரிய உணர்ச்சியோடு, செல்லமாகக் கன்னத்தைத் தீண்டிவிட்டு, ‘தூங்கிட்டியா ? ‘ என்றான்.

‘ம் ‘ என்ற முனகலிலேயே ஆமோதிப்பதைத் தெரிவித்து விட்டு, சோம்பல் முறித்தாள் செல்லம்.

ராமசாமி குழாயடிக்குச் சென்று கைகால் கழுவி விட்டு வீட்டுக்குள் வந்தான். உடை களைந்து மாற்றிக் கொண்டான். பிறகு செல்லத்திடம் திரும்பி, ‘அதற்குள்ளாகவா தூக்கம் ? ‘ என்றான்.

அப்போதுதான் தூக்கக் கலக்கம் கலைந்த செல்லம் நாணத்தோடு உள்ளூர நகைத்துக் கொண்டாள்.

‘நீ சாப்பிட்டாச்சா ? ‘

‘ம் ‘

‘சரி. எனக்குப் பசி தலையெச் சுத்தது. போய்ச் சோத்தை வய்யி ‘ என்றான் ராமசாமி.

செல்லம் ஒரு கணம் திகைத்தாள். அவள் தூக்கம் அந்தத் திகைப்பில் பறந்து போய்விட்டது.

‘சாதமா ? தண்ணி விட்டுட்டேனே ‘ ‘ என்று பரிதபித்தாள்.

ராமசாமிக்கு நல்ல பசி; மேலும் நடந்து வந்த களைப்பு. இத்தனைக்கும் மேல் முன்கோபம் அவனுக்குப் பிறவிக் குணம்.

‘தண்ணி ஊத்திட்டியா ? அதுக்குள்ளே ஏன் ஊத்தினே ? கொஞ்சம் பொறுத்திருந்தா என்ன… ‘

வார்த்தை அதனளவில் வலிமை மிக்கதென்று சொல்ல முடியாது. சொல்லுகின்ற பாவனையில்தான் வலிமை இருக்கிறது. ராமசாமியின் வார்த்தைகளில் கோபம் புதைந்து போயிருந்தது. செல்லத்தையும் கண்டிக்க வேண்டும்; என்றாலும் அவள் சின்னஞ் சிறுசு; புதுசு. அவனுக்கும் நல்ல பசி; அவன் ஆத்திரத்துக்கும் ஒரு நிவர்த்தி வேண்டும். எனவே வார்த்தைகளின் பாவனை ரசக் கலவையை அவனால்கூட, ஊகிக்க முடியவில்லை.

செல்லம் ராமசாமியோடு குடியும் குடித்தனமுமாய் இருந்து கொஞ்சக் காலம்தான் ஆகிறது. என்றாலும், அந்தக் காலத்துக்குள்ளாகவே அவனது குணத்தை அவள் ஓரளவு அறிந்துதான் வைத்திருந்தாள். எனவே அவளது செல்லக்கோபத்தை உணர்ந்து அவனை அறிவுறுத்த எண்ணி, ‘நீங்கதானே சொல்லிட்டுப் போனீங்க, நாழியாச்சின்னா காத்திருக்க வேண்டாம் ‘ன்னு ‘ என்றாள்.

‘அப்படியென்ன நேரமாச்சு ? ‘ என்று அவன் குரல் கடுத்தது.

‘நேரமா ? மணி பதினொன்று ஆகப் போறது. சோறு வேர்த்து விதையாப் போச்சி. அதுனாலெதான் தண்ணி விட்டேன். வேணுமின்னா புளிஞ்சி வைக்கிறேன் ‘ என்று சமாதானம் கூறினாள் செல்லம்.

ராமசாமிக்குப் பசிக் கொடுமை. அந்த நேரத்தில் வாதாட நேரமில்லை. இருந்தாலும் அவனுக்கு வெந்நீர்ப் பழையது பிடிக்காது ‘ எனவே எரிச்சல் மூண்டு வந்தது. ‘சரி சரி; ஏதாவது வய்யி ‘ என்று சலித்துப் போய்ச் சொன்னான். ‘வய்யி ‘ என்பதற்குப் பதிலாக ‘வச்சித்தொலை ‘ என்ற வார்த்தைதான் வாயில் வந்தது; ஆனால் வெளிவரவில்லை.

செல்லம் அடுக்களையுள் சென்று இலையைப் போட்டாள். சாதத்தையும் பிழிந்து வைத்தாள். ராமசாமி ஒன்றும் பேசாமல் சாப்பிட உட்கார்ந்தான். சாப்பாடு, அதிலும் குளிர்ந்து போன சாதமும் குழம்பும், சப்பிட்டுப் போயிருந்தன. பசிதான், ஆனால் அவன் பசி ருசியும் அறியும். சாப்பாடு செல்லவில்லை.

‘என்ன ? சாப்பிடாமல் பெரிய யோசனை பண்ணுறீங்களே ‘ ‘ என்றாள் செல்லம்.

ராமசாமிக்கு அப்போது கோபத்தை அடக்கவே முடியவில்லை. ‘என்னத்தைச் சாப்பிடறது ? உன் காரியத்தை மட்டும் வேளாவேளைக்குப் பாத்துட்டேல்லெ. நீ ஏன் பேசமாட்டே ‘ ‘ என்று எரிந்து விழுந்தான்.

செல்லம் புடலம்பூப் போன்ற குணம் பொருந்தியவள். அவள் பூப்பதும் தெரியாது, வாடுவதும் தெரியாது. ‘நான் என்ன பண்ணிட்டேன் ? ‘ என்று சொல்ல ஆரம்பித்தாள். அதற்குள் தொண்டை அடைத்தது. கண்ணில் சிவப்பு ரேகைகள் துடித்துத் தெரிந்தன. கண்ணீர் கண்ணைக் கரித்தது. இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

ஆனால் ராமசாமிக்குக் கண் குருடா என்ன ? ‘இந்தச் சொரணை அப்போ எங்கே போச்சி ? அழுதுட்டியா ? ‘ என்றான்.

அவ்வளவுதான். செல்லம் குபீரென்று முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

‘இனி சாப்பிட்டாற் போலத்தான் ‘ என்று முனகி விட்டு கையைக் கழுவினான் ராமசாமி. ஒன்றும் பேசாமல் படுக்கையில் வந்து விழுந்தான். விளக்கைக்கூட அவன் அணைக்கவில்லை.

செல்லம் சிறிது நேரத்தில் வரக்கூடும் என்று எதிர்பார்த்தான். ஆனால் வரவில்லை, கூடத்து விளக்கை அணைக்கும் ஸ்விட்ச்சின் சப்தம் கேட்டது: ‘ஒருவேளை கூடத்திலேயே படுத்துவிட்டாளோ ? ‘

கடிகாரம் மணி பன்னிரண்டு அடித்தது.

ராமசாமிக்கு அப்போதும் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான்: ‘நான் அப்படி என்ன சொல்லி விட்டேன். அவள் ஏன் அழுதாள் ? ‘

அவன் சிந்தனை ஒரு நிலையிலில்லை.

2

ராமசாமி படித்த வாலிபன். பி.ஏ. பட்டம் பெற்றதும், இடையில் ஒன்றிரண்டு மாதகாலம்கூட வீட்டில் இராமல், கமர்சியல் டாக்ஸ் ஆபீஸில் குமாஸ்தாவாகச் சேர்ந்துவிட்டான். வீட்டிலும் வசதிகளுக்குக் குறைவில்லை. பையன் சம்பாதித்துப் போட்டுத்தான் வீட்டில் உலையேற்ற வேண்டும் என்ற நியதி கிடையாது. மேலும், அவன் அப்பா ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர். எனவே அவர் தாம் பிடிக்க வேண்டிய சிபாரிசை யெல்லாம் பிடித்து பிள்ளையை வேலையில் அமர்த்தினார். எனவே அவன் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் கஷ்டப்படவோ, நாலுபேரின் தயவுக்காகக் கைகட்டி நிற்கவோ செய்யவில்லை. சுருங்கச் சொன்னால் அவன் வாழ்க்கை அனுபவம் பெறாத பள்ளிப் புள்ளி. என்றாலும், கண்டும் கேட்டும் இருந்த வாழ்க்கை அநுபவம் இருந்தது; இருந்தாலும் அவை அவனாக அநுபவியாதவை.

எனவே இந்த மாதிரி வாழ்க்கையில் அவன் லட்சியம் பேசும் நவயுவனாக இருந்ததிலும் ஆச்சரியமில்லை. தான் வாழ்வில் சுதந்திரமாகவே வாழப் போவதாகத் தன் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வந்தான். அது மட்டுமல்ல, தான் மணக்கப் போகும் மனைவிக்கும் சகலவித சுதந்திரங்களும் கொடுக்கப் போவதாகவும் சொல்லி வந்தான். எனவே அவனுக்கு வீட்டில் கலியாணப் பேச்சை எடுத்தபோது அவன் தனக்குப் பிடித்த பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்வேன் என்று சாதித்தான். அவனுக்குப் பிடித்த பெண் படித்த பெண்ணாக இருக்க வேண்டும். என்றாலும் படித்துவிட்டோம் என்ற கர்வத்தால் மினுக்கித் திரியும் நவநாகரிகக் கொலுப்பொம்மைகளை அவன் விரும்பவில்லை. செல்லம் அவ்வளவு படித்தவளல்ல. என்றாலும் ஹைஸ்கூல் வகுப்பு வரை தொட்டுப் பார்த்திருந்தாள். பிள்ளையின் பிடிவாதத்துக்காக, தகப்பனார் அவனைக் கூட்டிக்கொண்டு போய் எத்தனையோ பெண்களையெல்லாம் காட்டினார். ஆனால், விட்ட குறையோ தொட்ட குறையோ, ராமசாமிக்கு செல்லத்தைப் பார்த்தவுடனேயெ பிடித்துப் போயிற்று.

தை மாசம் கலியாணமும் நடந்தது.

கடிகாரத்தின் மணி பன்னிரண்டரை அடித்தது.

ராமசாமி மீண்டும் புரண்டு படுத்தான்: ‘செல்லம் ஏன் என்னிடம் அப்படி நடந்து கொள்கிறாள் ? நான் அவளுக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருந்தும் அவள் ஏன் பணிந்து தணிந்து செல்கிறாள் ? பயமா ?…. ‘ அவனுக்கும் ஒன்றும் புலப்படவில்லை.

….கலியாணம் ஆன புதிதில் அந்தப் புதிய இனிய நாட்கள் அவனுக்கு புளகாங்கிதம் ஊட்டத்தான் செய்தன. அப்போது அவன் உலகத்திலுள்ள மற்றவர்களுடைய குடும்ப வாழ்க்கையையெல்லாம் எண்ணிப் பார்த்தான். ‘ஒவ்வொருத்தனும் தன் மனைவியை எப்படி அடிமையாய் நடத்துகிறான் ? அவளும் மனுஷிதானே ‘ அவனுக்கு அவள் அடிமையா ? பெண் ஆணுக்கு அடிமையல்ல. பின் மனைவியை ஏன் வேலைக்காரியாய் நடத்துகிறார்கள் ? அடிக்கிறார்கள் ? அதன் பின்னர் வாழ்க்கையிலே ஒற்றுமை இருக்குமா ?… ‘ ஆனால், அவன் தன் தாய்மாமன் வீட்டில் பார்த்திருக்கிறான். அத்தைக்கும் மாமனுக்கும் ஓயாச்சண்டை, சமயத்தில் அத்தையின் முதுகும் தடித்துப் போய்விடும். இருந்தாலும், அத்தையும் மாமனும் மறுகணமே அன்யோன்யமாகி விடுவார்கள். இருவரும் இதுவரை ஒருநாள் கூட பிரிந்திருந்ததில்லை. அப்படியானால், அவர்கள் இருவருக்கும் அப்படி அறுந்து போகாத பிணைப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒட்டுறவு எது ?…..அது மட்டும் அவனுக்குப் புரியவில்லை. இருந்தாலும், மனைவியை அடிப்பது, அடிமைப் படுத்துவது எல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்பது அவன் அபிப்பிராயம்.

எனவே செல்லம் காலடிவைத்த நாள் முதலாக அவன் அவளுக்குத் தன் கருத்துக்களை எடுத்துச் சொன்னான். மனைவி என்ற காரணத்துக்காக அவளைக் கொடுமைப் படுத்தவோ, அடிமைப்படுத்தவோ செய்யப் போவதில்லை என்றும் உறுதி யளித்தான். பழைய கர்நாடகப் பாங்கின்படி அவள் தன்னிடம் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவன் விரும்பவில்லை. தான் சாப்பிட்ட பிறகுதான் அவள் சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயங்களையெல்லாம் செல்லம் மறந்துவிடவேண்டும் என்றும் போதித்தான். மேலும், செல்லத்துக்கு ஏதாவது துணிமணி சாமான் எடுக்கவேண்டுமென்றாலும் அவள் இஷ்டப்படியே எடுத்துக் கொள்ளலாமென்றும், அவளது சுய நிர்ணய உரிமை எதிலும் தான் தலையிடப் போவதில்லை என்றும் அறிவித்தான். செல்லமும் எல்லாவற்றையும் ‘ஊங் ‘ போட்டுக் கேட்டுவிட்டு அதன்படியே நடப்பதென்று தீர்மானித்தாள். ‘பதிற்சொற் கடவாத பாவை ‘ தானே அவள் ‘ இந்த ஏற்பாடெல்லாம் குறைந்தது ஆறுமாத காலம் வரையிலும் ஒழுங்காகவே நடந்து வந்தது.

திடாரென்று ஒரு நாள் ராமசாமிக்கு திருச்சிராப்பள்ளிக்கு மாற்றுதலாகி உத்தரவு வந்தது. ராமசாமி குடும்ப சகிதம் சென்று வேலையை ஒப்புக்கொண்டான். திருச்சியிலேயே வீடு பார்த்து குடித்தனமும் பண்ண ஆரம்பித்தான்.

குடித்தனம் ஒழுங்காகவே நடந்து வந்தது. ஆனால் அவன் கொடுத்த சுதந்திரம்தான் சரிவர நடக்கவில்லை. எங்கு போகவேண்டுமென்றாலும், அவன் அனுமதியை மட்டுமின்றி, துணையையும் கோரி நின்றாள், செல்லம்.

ஒரு நாள் இருவரும் துணி எடுக்கச் சென்றார்கள். செல்லத்துக்குத்தான். கடைக்காரன் துணிகளை எடுத்துப் பரப்பினான். நீலம், மஞ்சள், பச்சை–இன்னும் எத்தனையோ வர்ணங்கள் ‘ சிந்தாமணி, மனோன்மணி, ரேடியோ கலவைப் பெயர்கள் ‘ அவனுக்கு இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை.

செல்லம் ஒவ்வொரு துணியாகப் பார்த்துப் போட்டாள். பிறகு ஒரு துணியை எடுத்து, ‘என்ன, இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ? ‘ என்றாள்.

‘நானா கட்டப் போகிறேன் ? உனக்குப் பிடித்திருந்தால் சரிதான் ‘ என்றான் ராமசாமி.

‘இதற்குத் தானா கேட்டேன் ? ‘ என்று சலித்துக் கொண்டாள் செல்லம்.

அன்று அவள் துணி எடுக்கவில்லை. செல்லம்தான் அவசரப்படுத்தி, துணி எடுக்கக் கூப்பிட்டாள். பிறகு ஏன் அவள் துணி எடுக்கவில்லை ? அவனுக்கு எதுவும் புரியவில்லை. அவள் கட்டக்கூடிய துணி எனக்கும் பிடித்திருந்தால்தான் அவள் எடுப்பாளா ? அவனுக்காகவா அவள் உடுத்துகிறாள் ? அவளுக்காக இல்லையா ?…

கடிகாரம் மணி ஒன்று அடித்தது.

அவனுக்குப் பொய்த் தூக்கம்தான். புரண்டுபடுத்தான். ‘அவள் ஏன் அழுதாள் ? நான் அவளை அடிமைப்படுத்தி வைப்பதுதான் அவளுக்குச் சந்தோஷமா ? அல்லது அன்று கிளப்பில் நடந்த பேச்சு வார்த்தை மாதிரி, அவளுக்குத் தன் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் திராணியில்லையா ?…

அவனுக்கு அன்று கிளப்பில் நடந்த சம்வாதம் நினைவுக்கு வந்தது.

‘சுதந்திரம் வந்தால் மட்டும் போதுமா ? அதைக் காப்பாற்றுவதற்குச் சக்தி வேண்டாமா ? என்று அவன் நண்பன் ஒருவன் இந்திய சுதந்திரத்தைப் பற்றிப் பேசினான்.

‘சக்தியில்லை என்பதற்காக, சுதந்திரமே வேண்டாம் என்பாயா ? ‘ என்றான் ராமசாமி.

‘பகீரதன் பெரும் பிரயத்தனப் பட்டுத்தான் கங்கையைக் கொண்டுவந்தான்: ஆனால் அவனுக்கு அதைத் தாங்கச் சக்தி இருந்ததா ? பரம சிவன் தானே வர வேண்டியிருந்தது ‘ ‘

‘புராணக் கதையை ஏன் உதாரணம் இழுக்கிறாய் ? நீந்தத் தெரியவேண்டு மென்றால் நீரில் இறங்காமல் இருக்க முடியுமா ? சுதந்திரம் வந்தால், தானே அதைக் காப்பாற்றவும் தெரியும். வெறுங் காற்றில் கை வீசுவதனால் சக்தி பிறந்துவிடுமா ? ‘

‘இப்படியெல்லாம் பேச எனக்கும்தான் தெரியும். எந்தச் சுதந்திரமானாலும் சரி. பெண்விடுதலை, தேசவிடுதலை எதுவானாலும் சரி, அதைப் பெறுபவர்கள் வந்த சுதந்திரத்தைக் காப்பாற்றத் தெரிய வேண்டும். இல்லையென்றால் வந்த சுதந்திரம் வந்த வழியே போகத்தான் செய்யும். ‘

‘அதெல்லாமில்லை, நான் என் மனைவிக்குப் பரிபூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் அதைக் காப்பாற்றாமலா இருக்கிறாள் ? ‘ என்றான் ராமசாமி….

ராமசாமியின் மனம் மீண்டும் செல்லத்திடம் திரும்பியது. ‘அப்படி யென்றால் செல்லத்துக்கு நான் கொடுத்த சுதந்திரத்தைக் காப்பாற்ற அவளுக்குச் சக்தியில்லையா ? ‘ அவனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.

மணி ஒன்றரை அடித்தது….

செல்லத்துக்கு மட்டும் தூக்கம் பிடித்ததா என்ன ? அவளும் புரண்டு புரண்டுதான் படுத்துக்கொண்டிருந்தாள். கலியாணம் என்றவுடன் அவளுக்கு ஆனந்தம் இருந்ததுபோல் பயமும் இருக்கத்தான் செய்தது. ‘வரப்போகும் புருஷன் எப்படிப்பட்டவரோ ? தான் இனிப் பிறந்த வீட்டை மறந்துவிட வேண்டியதுதானா ? அவருக்கே அடிமையாகிடவிட வேண்டியதுதானா ? என்றெல்லாம் அவள் பயந்ததுண்டு. ஆனால், கலியாணமான புதிதில் ராமசாமி கொடுத்த வாக்குறுதிகள் அவளுக்குத் தெம்பை அளித்தன. ஆனாலும் நடைமுறையில் மட்டும் அந்தச் சுதந்திரம் அவளுக்கு ஒத்துவரவில்லை.

அவள் மனம் அலை பாய்ந்தது: ‘அவர்தானே தமக்காகக் காத்திருக்க வேண்டாம் என்றார். என் பாட்டை பார்த்துக் கொண்டதாகச் சலித்துக் கொண்டாரே. அவரில்லாமல் நான் யார் ? பின் அவர் ஏன் அப்படிப் பேச வேண்டும் ?…

‘கணவனும் மனைவிக்கு அடிமையல்ல; மனைவியும் கணவனுக்கு அடிமை யல்ல. ஆனால், சுதந்திரம் என்று சொல்லி இருவரும் ஒருவரையொருவர் அறியாமல் பிரிந்து தான் தோன்றியாகச் சென்றுகொண்டிருப்பதுதான் சுதந்திரமா ? நான் பெண், எனக்கு அவர் துணை, அவரின்றி நான் இயங்க முடியாது. அப்படியிருக்கும்போது அவர் என்னைச் சுதந்திரமாய் விட்டுட்டேன் என்று சொல்லி என்னை விட்டு விலகிச் சென்றால்…

‘அன்று துணிக்கடையில் துணி எடுக்கவே மனம் இல்லை. அவருக்காகத்தானே நான் இருக்கிறேன். என்றாவது என்னை ‘அதைக் கட்டு, இதைக் கட்டு ‘ என்று வற்புறுத்தி யிருக்கிறாரா ? எல்லாம் நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம் ‘ நல்ல சுதந்திரம் ‘ அபிப்பிராயம் கூறுவதால் கூடவா சுதந்திரம் கெட்டுவிடப் போகிறது ‘

‘நான் அவருக்கு அடிமையாக வேண்டாம். ஆனால், அவரது அன்புக்கு நான் அடிமையாகத்தான் வேண்டும். என்னை நான் அவருக்கு அடிமைப் படுத்த எண்ணும் போதெல்லாம் அவர் ஏன் விலகி ஓடுகிறார் ?…

‘அடிமையாவதில் ஒரு இன்பமா ?….இன்பம் இருப்பதாகத்தான் எனக்குத் தெரிகிறது. பக்தர்கள் அடியார்க்கு அடியாராக இருப்பதால்தானே கடவுளுக்குப் பாத்திரமாகிறார்கள். இல்லறத்தில் ஒருவருக்கொருவர் அடிமையானால் தானே ஆனந்தம் பிறக்கும். அந்த அடிமை ஆதிக்கத்தினால் வரக்கூடாது; அன்பினால் வரவேண்டுமா ? அன்புக்கு அடிமையா ?…அப்படியென்றால் அவருக்காக நானும் எனக்காக அவரும் வாழ்வதுதான் சுதந்திரமா ?…

‘இப்போது அப்படியா வாழ்கிறோம் ? நான் நானாக வாழ முடியவில்லையே ‘ அவராவது அவராக வாழ்கிறாரா ? ‘

செல்லம் மீண்டும் புரண்டு படுத்தாள். மணி இரண்டு அடித்தது. தூக்கம் பிடிக்கவில்லை.

3

ராமசாமி இரண்டரை மணி அடிக்கும் வரை அப்படியே கிடந்தான். அதற்கு மேலும் அவனால் கிடக்க முடியவில்லை.

‘செல்லம் தூங்கியிருப்பாளோ ? ‘

அவள் முனகி முனகிப் புரள்வது அவன் காதில் விழுந்தது. தூங்கவில்லை என்று நிச்சயித்துக் கொண்டான். மெதுவாக எழுந்து கூடத்துக்குச் சென்றான்.

செல்லம் வெளி முற்றத்தில் தலைக்குத் தலையணைகூட இல்லாமல் முந்தானையை விரித்துக் கையை அணைகொடுத்துப் படுத்திருந்தாள். ராமசாமி அவள் பக்கம் சென்று உட்கார்ந்து தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

‘செல்லம் ‘ ‘

அவள் லேசாக முனகினாள்.

‘இதற்கெல்லாம் அழுவார்களோ ? நான் உன்னை என்ன செஞ்சிட்டேன். அடித்தேனோ ? இந்த வார்த்தைக்கு இப்படி அழுதால்– ‘ என்று இழுத்தாற்போல் பேசினான்.

செல்லத்துக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் ராமசாமியின் மடியில் குப்புறப் படுத்து தலையைப் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

ராமசாமியின் உடம்பு பதறியது. ‘உனக்கு நான் என்ன குறைவு செய்தேன் ? சகல சுதந்திர பாக்கியத்துடன்தானே பராமரித்து வருகிறேன் ‘ என்று மெதுவாகச் சொன்னான்.

‘உங்கள் சுதந்திரமே எனக்கு வேண்டாம். ‘

‘என்ன ? ‘ என்று விழித்தான் ராமசாமி.

‘நான் உங்கள் அடிமை. ஆமாம். உங்களுக்கு நான் அடிமை ‘ என்று வெடித்துக்கொண்டு சொன்னாள் செல்லம்.

‘அடிமையா ? ‘

‘ஆம். உங்கள் அன்புக்கு நான் அடிமை; உங்கள் லட்சியத்துக்கு அல்ல ‘ என்றாள் செல்லம்.

‘நீ சொல்வது… ‘ என்று இழுத்தான் ராமசாமி.

‘என்னை உங்கள் மனைவியாக நடத்துங்கள் ‘ ‘ என்று கத்தினாள் செல்லம்.

ராமசாமி ஒரு கணம் திகைத்து உட்கார்ந்திருந்தான். மறுகணம் அவனுக்கு ஏதோ உண்மை புலப்பட்ட மாதிரி இருந்தது:

‘என் லட்சியம் எதிர்காலக் கனவு; செல்லம் கடந்தகால கலாசாரத்தில் ஊறிப்போன பாரதப் பெண். இதுவோ நிகழ்கால நடைமுறை. அப்படியானால், நான் இன்றைய நடைமுறைக்குத் தக்கவாறு இறங்கிவர வேண்டுமா ? அப்போதுதான் செல்லம் முன்னேற முடியுமா ? முன்னேறி என்னை எட்டிப் பிடிக்க முடியுமா ?…. ‘

அன்று முதல் செல்லம் ராமசாமி வரும் வரை சாப்பிடுவதும் இல்லை. ராமசாமியும், ‘செல்லம் இன்னும் சாப்பிடாமல் இருப்பாளே ‘ என்ற தவிப்போடு நேரத்தோடேயே வீட்டுக்கு வரத் தவறுவதும் இல்லை.

– 1948 – ரகுநாதன் கதைகள் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *