மனிதர்கள்

 

*** சிறுகதைகள்.காம் தளத்தில் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் எழுதிய 100வது சிறுகதை. ***

ஸ்ரீராம், பத்து வருடங்களுக்குப் பிறகு தன் நண்பன் முகுந்தனைப் பார்க்க, பெங்களூருக்கு கிளம்பினான். அகமதாபாத்திலிருந்து ஒரு வேலையாக சென்னைவரை வந்தவன், அப்படியே முகுந்தனையும் பார்த்து விடுவது என்று முடிவு செய்தான். ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் வேலை செய்தவர்கள். ‘போடா வாடா’ என்று உரிமையுடன் பேசிக்கொள்ளும் நெருக்கம். முகுந்தன் சொந்தமாக சிறிய அளவில் ஒரு கார்மென்ட் பாக்டரி அவன் அப்பாவின் உதவியுடன் ஆரம்பித்து பின்பு நிரந்தரமாக பெங்களூர் குடியேறிவிட்டான். அதன் பிறகு நடந்த அவன் திருமணத்தின்போதும் செல்ல முடியவில்லை. கார்மென்ட் பிஸினெஸில் பெங்களூரில் கொழித்துக் கொண்டிருக்கிறான். தற்போது ஒரு பெண் குழந்தையுடன் சொந்தவீட்டில் வசதியாக வாழ்கிறான்.

காரை எடுத்துக்கொண்டு மெஜஸ்டிக் ரயில்வே ஸ்டேஷனுக்கு முகுந்தன் வந்திருந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்து ஸ்ரீராமை அன்புடன் வரவேற்றனர். வீடு நான்கு பெட்ரூம்களுடன் பங்களா டைப்பில் விஸ்தாரமாக இருந்தது. முகுந்தன் மனைவி காயத்ரி அவனை பண்புடன் கனிவாக கவனித்துக்கொண்டாள்.

அன்று முகுந்தனின் பெண்குழந்தை ஆறு வயது ஹரிணிக்கு பிறந்தநாள் என்பதால் வீட்டில் கலர் பலூன்கள் தோரணத்துடன் காணப்பட்டது. அக்கம் பக்க வீட்டுக் குழந்தைகள் படைசூழ தடபுடலாக கேக் வெட்டினார்கள். ஹரிணியின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் மதியவேளை சாப்பாட்டிற்கு ஒரு அநாதை இல்லத்திற்கு சென்று உணவளிப்பது வழக்கம் என்பதால், அன்று தங்களுடன் ஸ்ரீராமையும் அழைத்துச் சென்றனர்.

அது நாநூறு குழந்தைகள் வசிக்கும் ஒரு பெரிய அநாதை ஆசிரமம். அந்தக் குழந்தைகளுக்கு புதிய உடைகளும், கசாட்டா ஐஸ்க்ரீமுடன் விருந்துச் சாப்பாடும் என்று அனைத்தும் அன்று முகுந்தன் செலவாம். புதிய உடைகள் அணிந்து விருந்து சாப்பிட்ட களிப்பில் எல்லா குழந்தைகளும் ஹரிணியை நேரில் வாழ்த்தின. ஒரு குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்வீதம் அன்று நான்கு லட்சம் முகுந்தனுக்கு செலவானது. அதுதவிர வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரர்களுக்கு புதுத்துணி, அவர்களுக்கும் ஆசிரமத்திலேயே குழந்தைகளுடன் சாப்பாடு என்று அமர்க்களப் படுத்திவிட்டான்.

அநாதை ஆசிரமத்தைவிட்டு அவர்கள் கிளம்பும்போது மதியம் மூன்று மணியாகிவிட்டது. அங்கிருந்து நேராக இந்திராநகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றார்கள். அங்கு சென்றதும் ஹரிணி ஏற்கனவே ஒரு டப்பாவில் தயாராக வெட்டி எடுத்து வைத்திருந்த பர்த்டே கேக்கை எடுத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கி அவசர அவசரமாக ஓடினாள். மற்றவர்களும் அவளைத் தொடர்ந்தார்கள்.

அங்கு தனியாக காணப்பட்ட ஒரு குடிலின் முன்பு நின்று, “பாட்டி, நான் ஹரிணி வந்திருக்கேன்…தாத்தா கதவைத் திறங்க” என்று சந்தோஷத்தில் துள்ளினாள்.

சிறிது நேரத்தில் வயதான ஒருவர் அந்தக் குடிலின் கதவைத்திறந்து ஹரிணியை கட்டி அணைத்து “ஹாப்பி பர்த்டே டு யூ” என்றார். அங்கு வந்த பாட்டியும் ஹரிணியை கட்டியணைத்து உச்சி முகர்ந்தாள்.

அவர்கள் ஹரிணி தந்த கேக்கை சந்தோஷத்துடன் வாங்கிச் சாப்பிட்டார்கள். முகுந்தன், “அப்பா இவர் ஸ்ரீராம், என்னுடைய நண்பர். அகமதாபாத்திலிருந்து வந்திருக்கார்” என்றான். அவர் ஸ்ரீராமிடம், “என் பேத்தி பர்த்டேன்னிக்கு நீங்க வந்தது ரொம்ப விசேஷம்” என்றார்.

அனைவரும் அந்த வீட்டினுள் சென்று அமர்ந்தார்கள். முகுந்தனின் அம்மா அனைவருக்கும் நல்ல காப்பி போட்டுக் கொடுத்தாள். கலகலப்பாக ஒரு அரைமணிநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். ஹரிணி பாட்டியை பிரிய மனமில்லாமல், “அடுத்த சண்டே வரேன் பாட்டி” என்று பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

முகுந்தன் தன் பெற்றோர்களை ஒரு முதியோர் இல்லத்தில் விட்டிருந்தது குறித்து, ஸ்ரீராமுக்கு ஒரு பெரிய நெருடலாக இருந்தது. அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.

முகுந்தன் தனிமையில் இருந்தபோது, ஸ்ரீராம் வேதனையுடன், “ஏண்டா உனக்கு அறிவிருக்கா? இவ்வளவு சம்பாதிக்கிறியே, எப்படிடா அம்மா அப்பாவை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்க மனசு வந்தது?” என்றான்.

“அவங்க அங்கு இருந்தால்தான் அவர்களுக்கும் நிம்மதி, எங்களுக்கும் நிம்மதி ஸ்ரீராம். என்னோட அப்பாவுக்கு ஆணாதிக்க திமிர் ஜாஸ்தி. தான் சொல்கிறபடிதான் அனைவரும் கேட்கணும் என்று வீட்டில் எல்லோரையும் அதட்டுவார். காலையிலேயே நாங்க எந்திரிக்கணும், குளிச்சப்புறம் நெத்தி நிறைய வீபூதி இட்டுக்கொண்டு ஸ்தோத்திரம் சொல்லி சாமிய நமஸ்காரம் பண்ணனும்… அப்புறம்தான் பிரேக்பாஸ்ட் சாப்பிடணும், என்று ஒவ்வொரு அசைவிலும் எங்களை ரொம்பக் கட்டுப் படுத்துவார். அவர் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும்.”

“இது நமக்கு நல்ல டிசிப்ளின்தான முகுந்த், இதுல என்ன தப்பு?”

“சரி, தப்புன்னு நான் சொல்ல வரல. தனி மனித சுதந்திரம் என்றால் என் அப்பாவுக்கு என்னவென்றே தெரியாது. என் மனைவி காயத்ரி சுதந்திரமா வளர்ந்தவ. அவளுக்கும் என் அப்பாவின் அதிகாரத்திற்கும் ஒத்து வரல… அவ லேடீஸ் கிளப் அது இதுன்னு காரை எடுத்துக்கொண்டு ஊரைச் சற்றி பழக்கப்பட்டவ, சில சமயங்களில் அவ வீட்டுக்கு திரும்பி வரும்போது நைட் ரொம்ப லேட்டாயிரும்…அதுக்காக அவகிட்ட ரெண்டு நாளக்கி என்னோட அப்பா மூஞ்சிய தூக்கி வச்சிப்பாரு.

“அவ காலைல குளிக்க மாட்டா. ராத்திரிதான் ஷவர்ல வெதுவெதுன்னு வெந்நீர்ல குளிப்பா. அது என் அப்பாவுக்கு பிடிக்காது. இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் ஸ்ரீராம்…. அழகான தொடர் சம்பவங்களின் கோர்வைதான நம் வாழ்க்கை? அம்மாதிரி சம்பவங்களே கசப்பாக அவ்வப்போது அப்பாவால் அமைந்து விடுகிறது. இதனாலேயே எங்க வீட்ல அடிக்கடி ஒரு இறுக்கமான சூழ்நிலை உண்டாகும்…..

“…………………”

“ஒருநாள் என் அம்மா, அப்பா, காயத்ரி, நான் ஆகிய நால்வரும் இது குறித்து மனம்விட்டு பேசினோம். தன்னை மாற்றிக்கொள்ள விருப்பமின்றி, என் அப்பா சொன்ன ஐடியாதான் இந்த முதியோர் இல்லம். நானும் சரின்னு சொல்லிட்டேன். எனக்கு மாதா மாதம் இருபதாயிரம் முதியோர் இல்லத்திற்கு செலவாகிறது. ஆனா இப்ப நாங்க பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருக்கோம் ஸ்ரீராம். அவங்க அவங்க வசதிப்படி இஷ்டத்துக்கு நாங்க தூங்குவோம், எந்திரிப்போம், சாப்பிடுவோம், குளிப்போம்….கன்ட்ரோல் இல்லாத சுகம் அலாதியானது ஸ்ரீராம்.”

“அதுசரி, இதைப் பார்க்கும் ஹரிணியின் வாழ்க்கையில் என்ன வேல்யூ சிஸ்டம் இருக்கும் முகுந்த்?”

“அவ இன்னும் பெரியவளா ஆனா எல்லாத்தையும் புரிஞ்சுப்பா. மோரோவர் அவ இன்னொரு குடும்பத்துல வாழ்க்கைப்படப் போறவ…எங்களை வைத்துக் காப்பாத்தனும்னு அவளுக்கு அவசியமில்லை. நல்ல எண்ணங்களும், நேர்மையும், பொறுமையும்தான் வேல்யூ சிஸ்டம்…அது இருந்தா போதும்.”

ஆனால் ஸ்ரீராமால் அவனது பதிலை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘பெற்று, பாசம்காட்டி வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரின் அருகாமையும், அவர்களை நன்கு கவனித்து, அனுசரித்து வாழ்வதைவிடவா தனி மனித சுதந்திரம் முக்கியமானது?’ என்று வேதனைப் பட்டான்.

அனாதை ஆசிரமச் செலவுகள்கூட அவனின் பணத்திமிரோ என்று சந்தேகப்பட்டான். நல்லவேளையாக தன் மனைவியையோ குழந்தைகளையோ இவர்களுக்கு நாம் அறிமுகப் படுத்தவில்லை என்று நிம்மதியடைந்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
எனக்கு வயது இருபத்தியேழு. தனிமை என்னை வாட்டுகிறது. ஒரு பெண்ணின் அருகாமைக்காக என் மனசும் உடம்பும் ஏங்குகிறது. பதின்மூன்று வயதினிலேயே இந்த எதிர்பார்ப்பு எனக்கு ஆரம்பமானது. பின்பு அதுவே ஏக்கமானது. இன்னமும் குறைந்த பட்சம், பன்னிரண்டு வருடங்கள் - ஒரு மாமாங்கம் - இந்த ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘ஆரம்ப விரிசல்கள்‘ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கல்யாணமான புதிதில்கூட மரகதத்தை ஊர் இளசுகள் அவளை இளம் பெண்ணாகப் பார்க்காமல், சபரிநாதனின் மனைவியாகத்தான் பார்த்தார்கள். அதேபோல அவரின் மகள்களையும் இளம் பெண்களாகப் பார்க்காமல் அவரின் மகள்களாகவே பார்த்தார்கள். இப்போது ...
மேலும் கதையை படிக்க...
பாஸ்கருக்கு தன் இளம் மனைவி பவானியுடன் ஐந்தாவது மாடியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது மிகவும் பிடித்திருந்தது. புதிதாகத் திருமணமான இந்த ஐந்து மாதங்களாக இரவு உணவு முடிந்ததும் இருவரும் மொட்டை மாடிக்கு வந்து விட்டால் நேரம் ...
மேலும் கதையை படிக்க...
கோபாலன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்தது. தன்னைக் கண்டு, தன் வரவைக்கண்டு அச்சப்படும் வேதவல்லி, இன்று இத்தனை சாமர்த்தியமாய் காரியம் நிறைவேற்றி விட்டாளே என்று நினைத்தபோது அவன் கோபம் இரு மடங்காய் பெருகியது. கோபாலன் ...
மேலும் கதையை படிக்க...
நான் கடந்த முப்பது வருடங்களாக பெங்களூரில் ஒரு மல்டி நேஷனல் ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் சந்தோஷமாக வேலை செய்கிறேன். நான், என் மனைவி சரஸ்வதி; மகன் ராகுல்; மருமகள் ஜனனி மற்றும் என் பேத்தி விபா ஆகியோர் டாட்டா நகரில் ...
மேலும் கதையை படிக்க...
தொடுதல்
பட்டுச்சேலை
பெளர்ணமி நிலவில்
தாதாக்கள்
டாக்டர் வீடு

மனிதர்கள் மீது ஒரு கருத்து

  1. Janani Ramnath says:

    சிறுகதைகள்.காம் இணையதளத்தில் நூறு கதைகள் எழுதிய முதல் எழுத்தாளர் திரு எஸ்.கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நேரடியாக கதை சொல்லி, விறுவிறுப்பான சம்பவங்களை அதிகரித்து ஒரு திருப்பத்துடன் கதையை முடிக்கும் அவரது பாணி வித்தியாசமானது.
    ஜனனி ராம்நாத், திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW