Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

மனம் மாறியது

 

டிரிங் டிரிங்… ரிஷீவரைக் கையில் எடுத்து “ஹலோ” என்றான் ராகவன். அடுத்து ‘அப்பா நீங்களா!! இங்கே வரேளா? நம்ப முடியல்லியே ! ரிஷீவரைக் கையால் பொத்திக்கொண்டே”மாலதி! அப்பா நம்பகூட வந்து இருக்க முடிவு பண்ணிட்டாராம்.” சொல்லியபடி ரிஷீவரை மனைவியிடம் தந்தான். “அப்பா! எப்படியிருக்கேள்? இப்பவாவது மனசு மாறித்தே; ரொம்ப சந்தோஷமாயிருக்கு. சீக்கிரமா புறப்பட்டு வாங்கோ” பேச்சைமுடித்துவிட்டு ஒரு துள்ளலுடன் ராகவனிடம், “இப்பத்தான் எனக்கு நிம்மதியாயிருக்கு. என்ன இருந்தாலும் அம்மா போனப்பறம், உங்கப்பா இந்தியாவிலே தனியா இருக்கிறது நன்னாவா இருக்கு?” என்று கேட்டபடியே உள்ளேசென்று ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்கலானாள்.

ராகவனின் அப்பா சுந்தரமையர் சுயமாகத் தன்னை வளர்த்துக் கொண்டவர். எளிய குடும்பத்தில் பிறந்த அவர் உள்ளூர்ப் பள்ளியில் படிப்பை முடித்த பின் இராமகிருஷ்ண மடத்தார் ஆதரவால் சென்னையில் பட்டப்படிப்பை முடித்து சட்டக்கல்லூரியில் சேர்ந்து வழக்கறிஞர் பட்டம் பெற்று தங்கப்பதக்கத்தையும் வென்றார். பிரபல வழக்கறிஞர் ராகவாச்சாரியிடம் ஜூனியராய் சேர்ந்து நான்கு ஆண்டுகள் பயிற்சிபெற்று, பின்பு அரசாங்க வக்கீலானார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, பப்ளிக் பிராஷிகியூடர் ஆனார்.

இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகி அவர்கள் வளர்ந்து இஞ்ஜினீயர்களாகி அமெரிக்காவில் வாழத் தொடங்கி விட்ட பிறகும், தானும் தன் மனைவி என்றான பிறகும் ஆபீஸ் அறை, சட்டபுத்தகங்கள், கோர்ட்டு, வழக்கு, வாய்தா, தீர்ப்பு என்று உழைப்பு என்ற வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்துவிட்டார். குடும்பப் பிரச்சினைகள், பொறுப்புகள் என்று எதுவும் அவரை இதுவரை பாதித்ததே இல்லை. மனைவி மங்களத்துக்கு உதவி என்றால் ஓடிவர மூன்று தமையன்மார்கள் இருந்ததுதான் காரணம்.

ஆயிற்று! நேற்றோடு அரசுப் பணியில் ஓய்வு பெற்று வீடு வந்து சேர்ந்து விட்டார் சுந்தரமையர். காலை எழுந்தவுடன் காபியுங் கையுமாக ஹிந்து பேப்பருடன் போர்டிகோவில் வந்தமர்ந்தார். செய்திகளைப் படித்து முடித்தவுடன்தான் கோர்ட்டுக்குப் போகும் வேலை இனியில்லை என்பது நினைவுக்கு வந்தது. அடுத்தபடி என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. மங்களத்தைத் தேடி சமையலறைக்குச் சென்றார்.

“மங்களம், வேலைக்குப் போகிறவர்களுக்கெல்லாம் ஆண் பெண் யாராக இருந்தாலும் ‘ரிடையர்மென்ட்’ என்று ஒன்று இருக்கிறதே, உன்னைப்போன்ற சமையலறையோடு வாழ்கின்ற பெண்களுக்கெல்லாம் மட்டும் ஓய்வுபெறும் நாளே கிடையாதா?”

நன்னாருக்கே நீங்க சொல்றது! வயிறு லீவு கொடுத்தா நாமும் சமையலுக்கு லீவு கொடுக்கலாம். இல்லே அமெரிக்கா மாதிரி வாரத்துக்கு ஒரு நாள் சமச்சு பிரிட்ஜிலே வச்சுட்டு ஹாய்யா இருக்கலாம். இங்கே நம்ம ஊர்லே முடியுமா? கரண்ட் எப்போ போகும்னு சொல்ல முடியாதே.

“உன் மாட்டுப்பெண் மாலதி அமெரிக்காவுக்கு தன்னோட பிரசவத்துக்கு உன்னை வரச் சொன்னப்பகூட எங்க ஆத்துக்காரரை விட்டுட்டு வரமுடியாதுன்னுட்டே, ஆனா அங்கே இருந்து குடித்தனம் பண்ணினவா பேசறாமாதிரி அழகா பேசறியே”

“நான் ஏன் வரமாட்டேன்னு சொன்னேன்னு உங்களுக்கே தெரியும். சமைச்சு வச்சதை எடுத்துப் போட்டுண்டு சாப்பிடக் கூடத் தெரியாத நீங்க என்னைப் பொருத்தவரை கைக்குழந்தை மாதிரிதான். அதனால் என்ன. மாலதியின் பெரிம்மாவின் பொண்ணு கலியாணி டல்லஸிலிருந்து போய் மாலதி பிரஷவத்தின் போது ஒரு மாசம் இருந்து செஞ்சாளே! அவ இந்தியா வந்து சொன்னப்போதான் அமெரிக்காவிலே எல்லா மனுஷாளும் எப்படி காரியங்களைச் சமாளிக்கறான்னு தெரிஞ்சது.”

“ஏன் மங்களம், இப்பத்தான் நான் ரிடயராயிட் டேனே, பிள்ளைகிட்டே போகலாமா?”

“போகலாம். அங்கே வந்து நீங்கள் என்ன பண்ணுவேள்? நானாவது அடுப்படி காரியங்களை இழுத்துப் போட்டுண்டு பிஷி ஆயிடுவேன். உழைச்சிண்டே இருந்த உங்களாலே வீட்டிலேயே அடஞ்சு கிடக்க முடியுமா?”

“உனக்கு அமெரிக்கா போற ஆசைகூட இல்லியா?”
இதப்பாருங்கோ, ஆயிரந்தான் அமெரிக்காவப் பத்தி யார் என்ன சொன்னாலும் எனக்கு உங்க நிழல்லே இருக்கிறதுதான் சொர்க்கம். கடைசி மூச்சு இருக்கிற வரை உங்களோடயே ஒட்டிண்டு இருந்திடறேன். பிள்ளைகளுக்கு என்ன குறைச்சல்?

சிறுசுகள், உடம்பிலே பலம் இருக்கு, கை நிறைய டாலர் டாலரா சம்பளம், கொஞ்ச காலம் அவாளுந்தான் ஜாலியா இருந்துட்டுப் போகட்டுமே! நாம எதுக்கு நடுவுலே உங்களுக்கு ஆசையாயிருக்குன்னா சொல்லுங்கோ, சின்னவன் மாதவன் உதவிக்கு வாங்கோன்னு கூப்பிட்டா ஒரு ரெண்டு மாசம் போய் இருந்துட்டு வரலாம். இப்போ திருப்திதானா?”

சுந்தரமையருக்குக் கண்கள் குளமாயின. இப்படியும் ஒரு பெண்ணா?! ஒரு நாளைக்கு பத்து பதினைந்து என்று தொட்டதுக்கெல்லாம் விவாகரத்து கேட்கும் பெண்களுக்கு நடுவே நம்முடைய கலாச்சாரத்தில் ஊற்¢ப்போன மங்களத்தின் பண்பாட்டைக்கண்டு வாயடைத்துப் போனார்.

ராகவனுக்கும் அப்பாவின் ஓயாத உழைப்பும், குழந்தையைக் கவனிப்பதுபோல் அப்பாவைக் கவனிக்கும் அம்மாவின் குணமும் நன்றாகத் தெரியும். இதனால்தான் அவனும் அவன் மனைவியும் அவர்களை எதிர் பார்க்கவேயில்லை. தங்கள் வேலை நேரத்தை அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் ஒருபோதும் அப்பா அம்மாவிடம் காட்டிக்கொண்டதில்லை.

சுந்தரமையர் ரிடயர் ஆன அடுத்த நாளே ஒரு முடிவுக்கு வந்தார். இனி, மனைவியின் நிழலோடு தன்னை ஐக்யப்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்து விட்டார்.

“மங்களம், இனிமே சமையலில் உனக்கு ஒத்தாசயா இருக்கப் போறேன்.” என்றவர், அன்று முதல் காய்கறி நறுக்குவது, தேங்காய் திருவுவது, மிக்ஸியில் அரைத்து தருவது என்று சின்னச் சின்ன உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். சேர்ந்து சாப்பிடுவது (இதுவரை அவர் அறியாத ஒன்று), சேர்ந்து உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, மாலையில் ரெண்டு பேரும் காலார நடந்துவிட்டு வருவது என்று வழக்கப் படுத்திக் கொண்டார். ஏதோ இதுவரைஇழந்துவிட்ட ஒன்றை இப்போது பெற்றதுபோல் உள்ளூர ஓர் ஆனந்தம்.

திடீரென்று பெருகும் நதிப் பிரவாகம் போல, சில திருப்பங்கள் வாழ்க்கைத் திசையையே திருப்பிவிடும் என்பதுதான் எவ்வளவு நிஜம்!. இரண்டு நாட்களாகத் தலைவலி என்று படுத்த மங்களம் திரும்ப எழுந்திருக்கவேயில்லை. டாக்டருக்கே புரிபடாத மரணம். துக்கம் கேட்க வந்தவர்கள் எல்லாம்,”மங்களத்துக்கென்ன, ஆசை நிறஞ்ச ஆத்துக்காரர், மணி மணியா இரண்டு இஞ்ஜினீயர் பிள்ளைகள், கல்யாணம், காட்சி, பேரக் குழந்தை எல்லாம் பார்த்து அனுபவித்துவிட்டாள். பூவும் பொட்டுமா போக ரொம்பவும் கொடுத்து வச்சிருக்கணும்” என்று மெச்சிவிட்டுப் போய் விட்டார்கள். ஆனால் சுந்தரமையருக்கு? “விதி இவ்வளவு கொடுமையானதா! மங்களத்தின் பெருமையை இவ்வளவு காலத்திற்குப் பிறகு புரிந்து கொண்டவர் அவளோடு இணைந்து சந்தோஷம் அனுபவிக்க நினைத்த நேரத்தில்தானா இப்படி ஒரு துர்பாக்கியம் நிகழவேண்டும்? கொடுப்பனை இல்லாததை நினைத்து நெஞ்சு வலித்தது.

பிள்ளைகள் இருவரும் குடும்பத்தோடு வந்து 15 நாட்கள் இருந்து காரியங்களை முடித்துவிட்டுத் திரும்பினார்கள். போகும்போது இருவருமே அப்பாவை அழைத்துப் போகத் தயாராக இருந்தார்கள். ஆனால் எவ்வளவு வற்புறுத்தியும் “கொஞ்சம் அவகாசம் வேண்டும் யோசிச்சு முடிவெடுக்க” என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார் சுந்தரமையர். இப்போது ஒரே மாதத்திற்குள் அவர் மனம் மாறியது எப்படி?

போனவாரம் காலார நடந்துவிட்டு வரலாம் என்று பீச்சுக்குப் போனார் சுந்தரமையர். அங்கே நண்பர் சேஷாத்ரி எதேச்சையாகக் கண்ணில்பட்டார். இருவரும் கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்து பின் பேச்சு அமெரிக்காவைப் பற்றி திசை திரும்பியது.

“ஓய்! விஷயம் தெரியுமா? அமெரிக்காவிலே எல்லாரும் கை நிறைய சம்பாதிக்கிறான்னு பெருமைப் பட்டுக்கிறோமே, அங்கே குழந்தையை 12 வயது வரையிலும் வீட்டிலே தனியாவிடக்கூடாதாம். விட்டா போலீஸ் நடவடிக்கை எடுக்குமாம். யாராவது இருந்து பார்த்துக்கணும். இல்லே டேகேர் சென்டரிலே கொண்டுபோய் விடணுமாம். இதனாலே நியூயார்க்கிலே இருக்கிற என் மச்சினன் பிள்ளை தன் குழந்தையைப் பாத்துக்க யாராவது அங்கு வரணும்னு கேட்டிருக்கான்.”

டக்கென்று சுந்தரமையருக்குப் பொறி தட்டினாற்போல ஒரு உணர்வு. “நம்முடைய ராகவனுக்கும் மாலதிக்கும் கூட இதே பிரச்சினைதானே இருக்கும். மங்களத்துக்குத்தான் உதவியாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லை. மாலதியாவது ராகவனுடன் சந்தோஷமாக இருக்க நாம் போய் அந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளலாமே”. இந்த எண்ணம் நெஞ்சில் பளிச்சிட்டதன் பலன்தான் அவரது அமெரிக்கப் பயணம்.

- மார்ச் 2003 

தொடர்புடைய சிறுகதைகள்
பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை. யாருக்கும் தெரியாமல் கிளம்பிவிட்டார். மருமகளுக்குத் தெரிந்தால் வீடே அமளிதுமளிப்படும். அவள் கிடக்கட்டும், ...
மேலும் கதையை படிக்க...
டிரிங்...டிரிங்.. தொலைபேசி அந்த நேரத்தில் சிவாவுக்குத் தொல்லை பேசியாகத் தான் தோன்றியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் 15 நிமிடங்களில் அவன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 8.30 மணிக்கு conference call. அவன் ரிஸீவரை எடுக்கவேயில்லை. அது அடித்துப் பார்த்துப் பின் ...
மேலும் கதையை படிக்க...
மணி என்ன? கேசவனிடம் 'ரிஸ்ட் வாட்ச்' கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று உணர்த்தியது. கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தான். சாம்பார் சாதத்தை மடமடவென்று சாப்பிட்டு முடித்தான். காலை 9 மணி முதல் ...
மேலும் கதையை படிக்க...
மணி எட்டு. இன்னும் அரைமணி நேரத்திற்குள் பெருக்கித் துடைத்து முடிக்க வேண்டும். கமலத்தின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. 9.30 மணிக்கு விழா ஆரம்பம். 8.45க்கெல்லாம் ஸ்வர்ணா வந்து விடுவதாகச் சொல்லியிருந்தாள். லயன்ஸ் கிளப் தலைவி ஸ்வர்ணா. அவளுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் ...
மேலும் கதையை படிக்க...
பாவம் பரந்தாமன்
தீபாவளி?
உயிரின் விலை
அம்மா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)