மதுரா

 

ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிஷங்களே இருந்தன. அண்ணாவும், மன்னியும் மதுராவுடன் கிளம்பப் போகிறார்கள். ஒரு வருஷ காலமாய் என் நெஞ்சு ருசித்த இனிய உணர்வு களெல்லாம் என்னை விட்டுப் போகப் போகின்றன.

என் துக்கத்தை நன்கு புரிந்துகொண்டதுபோல ஒரு பக்கம் அண்ணாவும், மறுபக்கம் மன்னியும் வந்து நின்றுகொண்டார்கள். வழியனுப்ப வந்திருந்த அப்பாவும் அம்மாவும் சற்றுத் தள்ளி இருந்தார்கள்.

“ஸோ?…நாங்க புறப்படறோம். இந்தூ…உடம்பைப் பார்த்துக்கோ…மாப்பிள்ளையை ரொம்ப வேலை அது, இதுனு அலைய விடாதே…” தோள் மீது கை போட்டு இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான் அண்ணா.

எனக்கும் அண்ணாவுக்கும் பத்து வயசு வித்தியாசம். சின்ன வயசிலிருந்து என்னைக் குழந்தையாய் பாவித்துபாவித்துப் பழகிப் போனதால், இன்றும் என் இருபத்தெட்டாவது வயசிலும் நான் அவனுக்குக் குழந்தைதான்.

“நீயும் ராகவனும் இத்தனை பொறுப்பா மதுராவைப் பார்த்துக்கலைனா எங்களால நிம்மதியா இந்த ஒரு வருஷம் அமெரிக்காவிலே இருந்திருக்கவே முடியாதும்மா…ராதா அண்ட் ஐ ஓ எ லாட் டு யூ டூ…” அண்ணா தன். மனசில் இருக்கும் எதையோ தெளிவுப்படுத்தத் தவித்தான்.

அவன் வார்த்தைகளை ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டின மன்னி என் கையை எடுத்துத் தன் கையோடு கோத்துக் கொண்டாள்.

நான் ஒன்றுமே பேசவில்லை-

என் மனசு வருத்தம் எல்லோருக்கும் புரிந்துதான். ஒருவரும் பேசாவிட்டால் எப்படி, யாராவது பதில் சொல்ல வேண்டுமே என்று அம்மா முன்வந்தாள்.

“கொழந்தையை இந்து ரொம்ப அழகாப் பார்த்துண்டா….. மதுராவும் சமத்து…அவளை ஒரு வருஷம் வைச்சுக்க நாங்களும் அதிருஷ்டம் பண்ணியிருந்தோம்….”

பேச்சு வார்த்தை உணர்ச்சிவசப்பட்டுப் போகவே அப்பா பேச்சை மாத்தினார்.

“ஆமா…எங்கே ராகவனையும் மதுராவையும் காணோம்?”

முகத்தைத் திருப்பி என் கணவரும் மதுவும் போன திசை யைப் பார்த்தேன். சாக்கோ பார் ஐஸ் க்ரீம் ஒன்றைக் கையில் பிடித்துக் கடித்த வண்ணம் மது இவருடன் துள்ளித்துள்ளி வந்து கொண்டிருந்தாள்.

அவள் எப்பவுமே அப்படித்தான்-

குதிகால் தரையில் பாவாமல் அப்படி ஒரு நடை ஸ்பிரிங் குதிப்பது போல ஆடிஆடி நடப்பாள்.

மதுரா….அவள் பெயரில் இருந்த தித்திப்பு அவள் குணத் திலும் அழகிலும் குறைந்தா இருந்தது?

ஆறு வயசு நிரம்பின குழந்தைக்கு எங்கேயிருந்து வந்தது இப்படி ஒரு அழகு, சமர்த்து?

போன வருஷம் அண்ணாவிடமிருந்து அந்தக் கடிதம் வந்த தினம் எனக்கு நன்றாக நினைவிலிருந்தது.

“…….கம்பெனியிலிருந்து மேல்பயிற்சிக்காக என்னை ஒரு வருஷம் அமெரிக்காவுக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கிறார்கள். ராதாவையும் அவர்கள் செலவிலேயே உடன் அழைத்துப் போகச் சொல்லியிருக்கிறார்கள். மதுராவை உன்னிடமும் ராகவனிடமும் விட்டுவிட்டுப் போக எங்களுக்கு ஆசை. உங்களுக்குத் தொந்தர வாக இல்லாமல் இருக்குமா?”

அண்ணாவின் கடிதத்தைப் படித்தவளுக்கு ஒரு சில நிமிஷங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

மதுவா? எங்களோடு ஒரு வருஷமா? மாலை ஆபீஸிலிருந்து வந்த இவரிடம் பூரித்த முகத்துடன் லெட்டரை நீட்டினேன்.

படித்தவர், “கரும்பு தின்னக் கூலியா? குட்….குட்” என்று தன் சந்தோஷத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததோடு அல்லாமல் அன்று இரவே அண்ணாவுக்கு டிரங்கால் செய்து “என்னப்பா சௌகரியம், அசௌகரியம்னு பேசறே, கரும்பு திங்கக் கூலியா வேணும்?” என்று என்னிடம் சொன்னதையே திருப்பிக் கூறவும் செய்தார்.

அப்பா அம்மாவும் உள்ளூரில் இருக்கையில் அண்ணா எதற்கு என்னிடம் பெண்ணை விடத் தீர்மானித்தான் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

எங்களுக்குக் கல்யாணமாகி வருஷங்கள் ஆறு ஆகின்றன. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஒரு குறைப் பிரசவம் ஆனதோடு சரி-பிறகு ஒண்ணும் இல்லை. குழந்தைகள் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் மதுக்குட்டி என்றால் கேட்கவே வேண்டாம்.

ரீஜனல் மானேஜராகப் பணிபுரியும் இவருக்குக் கைநிறையச் சம்பளம், கார், ஆள் அம்பாரம் எல்லாம் உண்டு.

“வீட்டில் உட்கார்ந்தால் சோம்பேறித்தனம் வளரும். வொய் டோண்ட் யூ டேக் அப் ஸம் ஜாப்?” என்று பல தடவைகள் இவர் சொன்னதால், பள்ளி ஒன்றில் நர்ஸரி டீச்சராக நான் இருந்தேன். ஒரே காலனியில் இரண்டு தெருக்கள் தள்ளி அப்பா அம்மாவும் நாங்களும் தனித்தனி வீட்டில் இருந்தோம்.

அப்பா அம்மாவின் மேற்பார்வையில் எங்களோடு மதுராவை விட்டுச் செல்வதைத்தான் அண்ணா அழகாய் ‘உன்னோடு விடப் போகிறேன்’ என்று எழுதியிருந்தான்.

அண்ணா அன்பைக் கொடுக்கத் தெரிந்தவன்-நாசுக் கானவன்-குழந்தைகள் இல்லாதவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்ற இதம் அறிந்தவன்.

மதுரா வந்து சேர்ந்தாள். மதூ…அவளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லட்டுமா?

அன்று மலர்ந்த ரோஜாவின் நிறம். மொழு மொழுவென்ற உடம்பு. வட்டமான கறுப்புக் கண்கள். அந்தக் கறுப்பை மிஞ்சு கிறாற் போல தலைமுடி. நெத்தியில் ஃப்ரன்ஜ் வெட்டின அழகு. மணி மணியாய்ப் பேச்சு. நினைக்கும்போதே ஓடிச் சென்று அணைத்துக் கசக்க வெறியைத் தூண்டும் அசாதாரண கவர்ச்சி.

பிறந்த எட்டாம் மாசம் ‘ம்மா’…என்றவள் அடுத்த வார்த்தையாய் ‘அத்தை’ என்று சொன்னதாலோ என்னமோ என்னிடம் ஒரு அதீதமான பாசம். மதுராவைப் பள்ளியில் அப்பர் கேஜியில் சேர்த்தோம்.
நான் வேலை பார்க்கும் பள்ளியில் சேரவில்லை என்று அவளுக்கு மகா குறை.

“வொய் கான்ட் ஐ ஜாயின் இன் யுவர் ஸ்கூல் அத்தே?” என்று கண்களை விரித்துக்கொண்டு கேட்டாள். வடக்கே இருந்ததால் ஆங்கிலம்தான் சரளமாய் வரும்.

“நீ படிக்கறது டிசம்பர்-ஜனவரி பள்ளி கண்ணம்மா. நான் இருக்கிறது ஜூன்-ஏப்ரல்….எப்படியம்மா சரிப்பட்டு வரும்?” மதுராவுக்கு ஏமாற்றமே.

காலையில் இவரும் நானும் ஒன்றாய் வேலைக்குக் கிளம்பும் போது மதுராவைப் பள்ளியில் விட்டுவிட்டுப் போவோம்.

“ஷால் ஐ ஸிட் ஆன் யுவர் லாப்?” என்றாள் முதல் தினம் மது.

“வேண்டாம் மது… புடவை கசங்கிடும்!”

மாலை வீடு திரும்பும்போது கேட்காமலேயே மடியில் ஏறி அமர்ந்து கைகளைக் கழுத்தில் மாலையாக்கிக் கொண்டாள் மதுரா.

“இப்போ ஆத்துக்குத்தானே போறோம்-புடவை கசங்கலாம் இல்லியா அத்தே?”

அவள் முகத்தில் குறும்பு: சந்தோஷம்.

வந்த சில நாட்களில் சதா சர்வ காலமும் ஆங்கிலத்திலேயே அவள் பேசினபோது, ஒரு நாள் நான் “என்னம்மா, எப்பப்பாரு இங்கிலிஷிலேயே பேசறே? தமிழ்லே பேச வேண்டாமா? ஐய் யய்யோ… இந்தப் பொண்ணுக்குத் தமிழே வரலைனு யாராவது கேலி பண்ணப் போறா!” என்று கேலி செய்தேன்.

மறுநாள்-

பள்ளியிலிருந்து திரும்பினவள் “அத்தே இங்கே வா” என்றாள். வந்தேன்- “உட்காரு” என்று என்னை அமர்த்தினவள், பள்ளிப் பையை எறிந்துவிட்டு அபிநயம் பிடிக்கப் போவது போல எதிரில் நின்றுகொண்டாள்.

ஒரு கையை ஆட்டி ஆட்டி, “தோ…தோ… நாய்க்குட்டி…. துள்ளி வா வா நாய்க்குட்டி, உன்னைத்தானே நாய்க்குட்டி… ஓடிவாவா நாய்க்குட்டி” என்று கீச்சுக் குரலில் பாடலானாள்.

வெயிலில் ஆடின சிகப்பு இன்னும் முகத்தை விட்டு மறைய வில்லை.

பள்ளியிலிருந்து வந்த குழந்தைக்குப் பசிக்கு உணவு உட்கொள்ளக்கூடத் தோன்றவில்லை-

கஷ்டப்பட்டு மனனம் செய்து வந்ததை எனக்குச் சொல்லிக் காட்டும் சிரத்தை மட்டும் வெளிப்படையாய்த் துள்ள, பாட்டு முடிந்ததும் பின்புறமாய் வந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு, “நன்னா தமிழ்லே பேசறேனா, அத்தை?” என்றாள். நேற்று நான் விளையாட்டிற்காக சொன்னதையா இந்தச் சின்னக் குழந்தை இத்தனைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு விட்டாள்!

இதற்குத்தான் என் மேல் எத்தனை பாசம்? என் வார்த்தை மேல் எத்தனை நம்பிக்கை?

ஒரு நாள் இரவு தூங்கும்போது தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள் மதுரா.

“ஏன் கண்ணம்மா, தூக்கம் வரலையா!” நான் பேச்சு கொடுத்ததும் உருண்டு, என்னை நெருங்கி இடுப்பில் கால் போட்டு அணைத்துக் கொண்டாள் மது.

ஏதோ கேட்க வேண்டும் போலத் தோன்றியதால் தலை முடியைக் கோதிவிட்டு “அப்பா, அம்மா ஞாபகம் வரதா, மதும்மா?” என்றேன்.

பதில் சொல்லாமல் ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தாள் மதுரா. பிறகு இந்தக் கன்னத்தில் ஒரு முத்தம், அந்தக் கன்னத்தில் ஒரு முத்தம் என்று எனக்குக் கொடுத்துவிட்டு “எனக்குத்தான் நீ இருக்கியே அத்தே” என்றாள்.

ஈஸ்வரா? இது என்ன பந்தம்! இந்தச் சின்ன குழந்தைக்கு எத்தனை விவேகம்!

“பெண்ணை உன்கிட்டே விட்டுட்டு அவா ஒரு வருஷம் போகப் போறா-அதிகப்படியான செல்லத்தை நீ அவளுக்குக் கொடுத்து கெடுக்காமப் பார்த்துக்கோ…” என்று என் அம்மா முதல் நாளே சொல்லி இருந்ததால் மதுரா மேல் நான் எவ்வளவு பிரியமாக இருந்தேனோ அத்தனைக்கத்தனை கண்டிப்பாகவும் இருந்தேன்.

ஒரு சமயம் ஊருக்கு நல்ல சர்க்கஸ் கம்பெனி ஒன்று வந்திருந்தது. எனக்கும் இவருக்கும் போக முடியாதபடி ஏதேதோ வேலைகள் இருந்ததால் மதுராவை தாத்தா பாட்டி அழைத்துப் போனார்கள்.

“அங்கே போய் தாத்தாவைத் தொந்திரவு பண்ணக் கூடாது. உனக்கு பாப்கார்ன், கொக்கோ கோலா ரெண்டும் வாங்கித் தர தாத்தாகிட்டே சொல்லி இருக்கேன்…. வேறே கேட்டுத் தொண தொணக்கக் கூடாது, சரியா?” என்று உபதேசம் பண்ணி மதுராவை அனுப்பியிருந்தேன்.

இரவு ஒன்பது மணிக்கு அவர்கள் வீடு திரும்பினார்கள்.

பேத்தியை உள்ளே கொண்டுவிட்ட அப்பா கையில் வைத்திருந்த காட்பரிஸ் சாக்லெட்டை என்னிடம் நீட்டினார்.

“என்னப்பா?” சிரித்தார் அப்பா- “இவளுக்காக வாங்கினேன்ம்மா …. என்ன சொல்லியும் எடுத்துக்க மாட்டேனுட்டா.”

“ஏன் மதூ?”

தூக்கம் கண்களில் கூத்தாட என் இடுப்பை அணைத்துக் கொண்டாள் குழந்தை.

“நீதானே தாத்தாகிட்டே பாப்கார்ன், கோக் ரெண்டும் வாங்கித் தரச் சொல்லி இருக்கேன், வேற எதும் வாங்கிக் காதேன்னே அத்தே?”

நாங்கள் அத்தனை பேரும் அசந்து விட்டோம். இது என்ன கட்டுப்பாடு இந்தச் சின்ன வயசில்?

அன்று மதுராவுக்குப் பிறந்த நாள். எல்லோருமாய் கோவிலுக்குப் போயிருந்தோம்-

தாமரை மொட்டு போல கைகளைக் குவித்துக்கொண்டு ஏதோ வேண்டிக்கொண்டாள் மது-

“என்னம்மா? பெரிய மனுஷிபோல பிரார்த்தனை?” இவர் கேலி செய்தபோது பதில் சொல்லாமல் சிரித்தாள்.

ஆனால், அன்று மாலை அம்மா எங்களிடம் சொன்னாள், “இத்துனூண்டுக்குப் புத்தியைப் பாரேன்! என்னம்மா வேண்டிண்டேன்னு கேட்டேன். ‘அத்தைக்குச் சுருக்காப் பாப்பா பொறக்கணும்னு வேண்டிட்டேன்’னு சொன்னா!” இவளுக்கு இதெல்லாம் யார் கத்துக் கொடுத்தார்கள்!

ஒரே வருஷம்தானே? ஓடுவதற்குக் கேட்க வேண்டுமா?

அண்ணாவும் மன்னியும் ஊர் திரும்பி விட்டார்கள். கடலும், நதியும் சங்கமிப்பது போல பெற்றோரும் மகளும் சேர்ந்து கொண்டார்கள்.

இந்த ஒரு வருஷத்தில் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள்! பூப் போல மணக்கும் நினைவுகள்? எல்லாம் இல்லாமல் இனி எங்களால் இருக்க முடியுமா?

கோபித்துக் கொண்டால்கூட முகம் சிணுங்காமல் பூனைக் குட்டி மாதிரி காலடியிலேயே சுற்றும் மதுரா இல்லாமல் எங்களால் இருக்க முடியுமா?

மது இல்லாமல் குளிர்காலத்து மரங்கள் போல ஒன்றுமே இல்லாமல் மொட்டையாய் நாங்கள் நிற்க வேண்டியதுதானா?

“அத்தே… என்ன யோசனை?” இடுப்பைக் கட்டிக்கொண்டு உலுக்குகிறாள் மதுரா-குனிந்து அவளை அணைத்துக்கொள் கிறேன். முத்தங்களைப் பொழிகிறாள் அவள்-

“மணியாயிடுத்து, ஏறிக்கோங்கோ”

வண்டி ஏறும் முன் இவரைக் குனிய வைத்துக் காதுக்குள் ஏதோ ரகசியம் முணுமுணுக்கிறாள் மது.

பிறகு என்னை இறுக அணைத்து முத்தமிட்டு விட்டு வண்டி ஏறுகிறாள்.

வண்டி புறப்பட்டுப் போய்விடுகிறது. என் மனசில் சூன்யம்.

பெற்றவர்களைக் கண்டதும் என்னை மறந்து விட்டாளோ என்ற ஆதங்கம்-

என் மனசை அறிந்தது போலக் காரில் ஏறினதும் அம்மா சொல்லுகிறாள்:- “ராதா பெற்ற தாயென்றால்-மதுராவுக்கு நீ பெறாத தாய்-ஞாபகம் வச்சுக்கோ இந்தூ ….”

ஆமோதிப்பது போலத் தலையாட்டுகிறார் இவர்.

“உன் மேல் மது அளவு கடந்த பாசம் வச்சிருக்கா இந்தூ அப்பா, அம்மாவை ஒரு வருஷம் பிரிந்துவிட்டு இப்போது அவர்களோடு சேர்ந்து ஊருக்குப் போகும்போதும் உன் நினைவுதான்யு நோ வாட் ஷி ஸெட் டூ மி பிஃபோர் ஷி லெப்ட்? ‘அடுத்த லீவுக்கு அனுப்பச் சொல்லி அப்பாகிட்டே சொல்லுங்கோ, அத்திம்பேர்’னு சொன்னா. இன்னும் நாலு மாசம், மறுபடி மது வந்துடப் போறா. ஸோ… சியர் அப் இந்தூ…”

இவர் சொல்லுவது சரிதான்-குளிர் காலத்தில் மொட்டை யான மரங்கள் அப்படியேவா நின்று விடுகின்றன? மறுபடியும் வசந்தம் வருவதில்லையா? பூக்கள் பூத்து மணத்தைப் பரப்பு வதில்லையா?

அப்படித்தான் இதுவும்.

மதுரா மீண்டும் மீண்டும் வருவாள்-எங்கள் வாழ்க்கையில் தென்றலாய் ஆயுசுபர்யந்தம் வீசப் போகிறாள்!

நான் முகம் சிரிக்க, மனம் தெளிய, நிமிர்ந்து உட்கார்ந்து இவரைப் பார்த்துச் சிரிக்கிறேன்.

- மங்கை , 1976 

தொடர்புடைய சிறுகதைகள்
நடராஜன் தன் போட்டோ ஸ்டுடியோவின் மாடி வராந்தா குட்டை கைப்பிடிச் சுவரில் சாய்ந்து வண்ணம் தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். அன்று காலையிலிருந்தே அவனுக்கு வேலை எதிர் பார்க்காத விதமாய் ஒன்று மாற்றி ஒன்று சரியாய் இருந்தது. முதல் நாள் கல்யாண முகூர்த்த நாள் ...
மேலும் கதையை படிக்க...
அவன் கண்களை மூடிக்கொண்டான். மனசுக்குளே அவளை முழுசாய் நிறுத்திப் பார்க்க முயற்சித்தான். கிட்டத்தட்ட ஒரு மாசமாய் நினைத்துநினைத்துப் பழகி இருந்ததால் கூப்பிட்ட உடன் ஓடிவரும் நாய்க்குட்டி மாதிரி மனசுக்குள் வந்து நின்று கொண்டாள். அவள் ரொம்ப உயரமில்லை. ஐந்து இருநாடு இருந்தால் அதிகம். அந்த உயரத்திற்கு ஏற்ற பருமன். அவளிடம் ...
மேலும் கதையை படிக்க...
ப்ரீதி ரொம்ப சுத்தம். இன்றைக்கு என்றில்லை, சின்ன வயசு முதற்கொண்டே இந்த சுத்த உணர்வு ரொம்ப ஜாஸ்திதான். இவளையொத்த பெண்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், மகாபலிபுரம் போகிறோம். திருநீர்மலை ஏறப் போகிறோம் என்று அலைந்த நாட்களில் கூட, அவள் ...
மேலும் கதையை படிக்க...
மண்ணெண்ணைய் தீர்ந்து போய் நாலு நாட்களாகி விட்டன. காஸ் ‘இப்பபோ அப்பவோ’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. கெரசினை வாங்காமல் இருந்து, காஸும் தீர்ந்து, விருந்தாளியும் வந்து விட்டால் கேட்க வேண்டாம். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறு. வழக்கமாய் தோட்டக்காரனை சைக்கிளில் கடைத் தெருவுக்கு அனுப்பி ...
மேலும் கதையை படிக்க...
தெரு வெறிச்சோடிக் கிடந்தது. வழக்கமாகக் காணப்படும் சந்தடி. ஜன நடமாட்டம் இன்றி அதிசயமாய் அமைதியாய் இருந்தது. வெயிலைப் பொருட்படுத்தாமல் வாசப்படியில் அமர்ந்து தெருவை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த கைலாசத்துக்கு அலுப்புத் தட்டியது. எழுந்து உள்ளே போகலாமா என்று நினைத்த நொடியில் ஒன்றின்பின் ஒன்றாகத் தெருக்கோடியில் ...
மேலும் கதையை படிக்க...
சோறு ஆறுதுங்க
ஆசை ஆசை ஆசை
சுத்தம்
போணி
விழிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW