மண்ணில் சில மனிதம்ங்கள்…..!

 

அறுபத்திரண்டு வயதான ஆறுமுகம் ஓய்வு பெற்ற பேராசிரியர். பெற்ற மகன்கள் இருவரும் சென்னை, டில்லியில் மனைவி மக்களோடு நல்ல நிலையில் இருக்க… இவர் மட்டும் மனைவியோடு…சொந்த ஊரான கும்பகோணம் பக்கத்தில் உள்ள கொட்டையூரில் வாழ்க்கை. நல்ல மனிதர். அவர் தினம் சுயமாய் முகச் சவரம் செய்து கொண்டாலும்… முடி வெட்டுதல் என்பது அவருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயமாகிப் போன விசயம்.

அதில் ஒன்றிரண்டு நாட்கள் தாண்டக் கூடாது. அப்படித் தாண்டினால்…மனம் தூங்கவிடாது. ‘ முடிவெட்டிக் கொள்ளவில்லையே…! ‘ என்று நாளும் பொழுதுமாக அது குறை பட்டுக் கொண்டே இருக்கும். அதோடு சேர்ந்து தலையில் அதிக முடி இருப்பது போல் உணர்வு எந்நேரமும் வந்து பாடாய்ப் படுத்தும். இவற்றிலிருந்து தப்பிக்க இவர் எண்ணி அறுபதாவது நாள் முடி வெட்டிக் கொண்டே ஆக வேண்டும்.

அவருக்கு உள்ளூரில் உள்ள கதிர்வேலன் கடையில்தான் வெட்டப் பிடிக்கும். அந்தக் கடையில்தான்…. அந்தக் கடைக்களுக்குரிய எந்த கன்னாபின்னா படங்களும் கிடையாது. எதிர் சுவரில் ஒரே ஒரு பெரிய அளவில் சபரிமலை ஐயப்பன் சாமி படம். கதிர்வேலன் ஐயப்பன் பக்தன் என்பதால் அந்தப் படம். அவன் வருடாவருடம் கார்த்திகை மாதம் மாலை போட்டு, நாற்பத்தி எட்டு நாட்கள் விரதம் இருந்து….பெரிய பாதை வழியாக சென்று ஐயப்பனைத் தரிசித்து வருவான். அடுத்து கல்லாபெட்டிக்கு மேல் சரஸ்வதி படம். பிள்ளையார் காலண்டர். இவைகள் தவிர வேற எந்த படங்களும் இல்லாமல் சுவர் சுத்தமாக இருக்கும்.

மூலையில்…… சின்னதாய் ஒரு தொலைக்காட்சி பெட்டி. அதில் சினிமாப் பாடல்கள், காமெடி துணுக்குகள் ஓடிக்கொண்டிருக்கும்.

கடை… எட்டுக்குப் பத்து நீள அகலம். சொந்தம் கிடையாது வாடகை. முனிசிபாலிட்டி கட்டிடம். அதில் மூன்று சுழல் நாற்காலிகள். இரண்டு சுவர்களிலும் எதிரும் புதிருமாய் இரண்டிரண்டு அகன்ற பெரிய அளவு கண்ணாடிகள். ஒரு சுவரோரம், இரண்டு மூன்று வாடிக்கையாளர்கள் அமர்ந்து காத்திருக்க ஒரு சிறு பெஞ்ச். அதில் அவர்களுக்கென்று தினத்தந்தி செய்தித்தாள். முகப்பு…. கருப்புக் கண்ணாடி தடுப்பு மற்றும் கதவு.

ஆறுமுகத்திற்கு இந்தக் கடையில்; கூலிக்கு வேலை செய்யும் பாலுவிடம் வெட்ட மட்டுமேப் பிரியம். அவன்தான் இவர் மனம் குறை படாத அளவிற்கு நிறைவாய் வெட்டி விடுவான். அதனால் அவர் அவனிடம்தான் வெட்டிக் கொள்வார்.

பாலு…. கடை உரிமையாளன் கதிர்வேலனைவிட ஐந்து வயது குறைவானவன். வயது முப்பது. நல்ல சூட்டிகையானப் பையன். வாடிக்கையாளர்களிடம் கண்ணியமாக நடந்து நல்ல கலகலப்பாகப் பேசுவான். அவனுக்கு இந்த ஊர் சொந்த ஊர் கிடையாது. இங்கிருந்து 20 கி.மீ தூரம் உள்ள குளக்குடி ஊர். தொழிலும் குலத் தொழில் கிடையாது. படிக்கும் போது உள்ளூர் நண்பர்களுக்குள் ஒருத்தருக்கொருத்தர் விளையாட்டாய் வெட்டி பழகி….பழக்கப்படுத்திக் கொண்டதன் விளைவு….பட்டம் படித்து முடித்து வேலைகிடைக்காத போது….இந்தத் தொழிலைக் கையில் எடுத்துக் கொண்டான். பாலு தனது இரு சக்கர வாகனத்தில் காலை ஒன்பது மணிக்கு வந்து… இரவு எட்டு மணிக்குத் திரும்பிச் செல்வான்.

ஆறுமுகத்திற்குப் பாலுவிடம் வெட்டிப் பிடிக்கும் என்பதால் அவன் தனித்திருக்கும் நேரமாகப் பார்த்துதான் செல்வார். அவன் தனியே வேலை செய்யும் வேலை நேரமென்பது மாலை மணி மூன்று முதல் மூன்றரை.

இவனுக்குத் தினம்… மதிய வேளை உணவு என்பது கதிர்வேலனின் வீட்டு சாப்பாடு. கடையின் ஷட்டரை இறக்கி ஒரு பூட்டு போட்டு விட்டு….பிரதான சாலையைத் தாண்டினால்…கூப்பிடு தூரத்திலுள்ள காமராஜர் நகர் 18ஆம் எண் வீடு. மூன்றரையிலிருந்து பத்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு நாலரை மணி வரை உள்ள மீதி நேரம் ஓய்வு. ஓய்விற்குப் பிறகு கதிர்வேலனும் பாலுவும் புத்துணர்வுடன் வந்து வேலை செய்வார்கள். மதியச் சாப்பாட்டிற்குக் கதிர்வேலன் அரை மணி நேரத்திற்கு முன்; புறப்பட்டுப் போய் விடுவான். இந்த மூன்றிலிருந்து மூன்றரை வரை உள்ள அரை மணி நேரம்தான் பாலு தனித்திருப்பான். பெரும்பாலும் இந்த வேளையில் எந்த வாடிக்கையாளர்களும் இருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நேரத்தில்தான் ஆறுமுகம் இவனிடம் வெட்டிக் கொண்டு வீட்டிற்கு வருவார்.

இன்றைக்கும் அப்படித்தான் புறப்பட்டார்.

படி ஏறியதுமே…கடை வாசலில்; பாலுவின் ஒற்றைச் சோடி செருப்புகள் மட்டுமே கிடந்தது. கண்ணாடிக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல….மூன்று சுழல் நாற்காலிகளும் வெறுமையாய் இருக்க….அவன் சுவர் ஓரம் உள்ள ஒற்றைப் பெஞ்சில் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தான்.

ஆறுமுகம் தலையைக் கண்டதுமே… படிப்பை நிறுத்தி, ” வாங்க சார்! ” வரவேற்று எழுந்தான். வரவேற்புக் குரலில் வழக்கமான துள்ளலில்லை. முகக் களையிலும் கொஞ்சம் மாற்றம். சோர்ந்திருப்பது போல் தோற்றம். மொட்டைத் தலையில் பத்து நாட்கள் முடி.

” என்ன ஊர் மொட்டை ? ” – ஆறுமுகம் கேட்டுக்கொண்டே முதல் சுழல் நாற்காலியில் அமர்ந்தார்.

பாலு….பதிலேதும் சொல்லாமல் தினந்தந்தியை மடித்து வைத்து விட்டு வாடிக்கையாளர்கள் மேல் போர்த்தக் கூடிய வெள்ளை நிற வேட்டி எடுத்துப் போர்த்தி வேலைக்குத் தயார் படுத்தினான்.

” திருப்பதியா ? ” – ஆறுமுகம் விடாமல் கேட்டார்.

” இல்லே சார்.! ” – சொல்லி கையில் கத்தரிக்கோல், சீப்பு எடுத்தான்.

” குலதெய்வம் கோயிலா ? ”

தலை மேல் கத்தரிக்கோலும் சீப்பும் சேர்ந்து கிச்கிச் பேசியது.

” இல்லே..! ”

” பின்னே… ? ”

” ம…மனைவி தவறிட்டாள்! ” சடக்கென்று அவன் குரல் உடைந்து கமறியது.

கேட்ட ஆறுமுகத்திற்குப் பக்கென்றது. பதறிப் போனார்.

” எ..ஏன் எப்படி..? ” தலையைக் குனிந்தவாறே கேட்டார்.

” ஹார்ட் அட்டாக்.! ” அவன் கை வேலை செய்து கொண்டே வாய் பேசியது.

” உடம்பு ரொம்ப தாட்டீகமா இருக்குமா ? ”

” இல்லே சார். ஒல்லிதான். நேரம்..? ” – சொல்லி பாலு கண்கள் கலங்கி அதைப் புறங்கையால் துடைத்தான்.

ஆறுமுகத்திற்கு மனம் கனத்தது. ஏன் கேட்டோமென்று நினைத்தது. இருந்தாலும் தொட்டதை விட முடியாமல்….

” எத்தனைக் குழந்தைங்க…? ” தொடர்ந்தார்.

” ரெண்டு.! ஆணொன்னு பொண்ணொன்னு.” பாலு மூக்கை உறிஞ்சிக் கொண்டான்.

” வயசு..? ”

” பையன் மூத்தவன். மூணு வயசு. பெண் கைக்குழந்தை. ஆறுமாசம்.! ” – கத்திரிக்கோலும் சீப்பும் பின் பக்க மண்டையில் இறங்கியது.

” இந்தப் புள்ளைங்களுக்கு இப்போ துணை ? ”

” அவ அம்மா அப்பா. ”

” உன் அம்மா அப்பா ? ”

” நான் கலியாணம் கட்டி ஒரு வருசத்திலேயே அவுங்க அடுத்தடுத்துப் பரலோகம் போய் ரெண்டு வருசமாச்சு. ”

” அப்போ நீ புகுந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாய் இருக்கீயா ? ”

” இல்லே.சார். நாங்க எங்க வீட்டுலதான் இருக்கோம். அந்த வீடு எதிர் வீடு. ”

” ஓ… அப்படியா ?! சரி அப்புறம்…? ”

பாலுவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மௌனமாய் வேலை செய்தான்.

” ம…..மறுமணம்…? ” அடுத்தது அதுதானே…! ஆறுமுகம் தட்டுத் தடுமாறிக் கேட்டார்.

” அதான் சார் தினம் தொந்தரவு ! ”

” என்ன… ? ”

” ஒத்தைப் பொண்ணை இழந்து நாங்க நாதியத்து இருக்கோம். உங்களுக்கு ஒரு தொந்தரவுமில்லாம குழந்தைங்களை எங்க வாரிசாய்; வளர்க்கிறோம் நீங்க அடுத்து உங்க வாழ்க்கையைப் பாருங்கன்னு சொல்றாங்க. ”

” நல்ல மனசு.! நியாயம்தானே..? ”

” அது என்ன சார் நியாயம் ? மனைவி துணை இல்லாம பெத்தவன் புள்ளைங்களை வளர்க்க முடியாதா ? ”

” முடியுமே…!.”

” அதான் செய்யப்போறேன். ”

” ஆனா…பொட்டப்புள்ள இருக்கு பாலு.” ஆறுமுகம் தழைவாய்ச் சொன்னார்.

” பொட்டைப் புள்ளை இருந்தா மட்டும்….பெத்தவனால வளர்க்க முடியாதா ? ”

” சின்னப்பிள்ளையாய் இருக்கும்போது சீராட்டிப் பாராட்டி வளர்க்கலாம். வயசுக்கு வரும் பக்குவக் காலத்திலிருந்தே….உனக்கும் அதுக்கும் கஷ்டம். வயசுக்கு வந்தபிறகு…பொண்ணு தன் வலி கஷ்ட நஷ்டத்தையெல்லாம் பெத்த தகப்பனாய் இருந்தாலும் ஒரு ஆண்கிட்ட கூச்ச நாச்சமில்லாம சொல்ல முடியாது. இதனால்..அது தன் வலி வருத்தங்களை மறைச்சி அதுவாவேக் கஷ்டப்படும். அப்போ…..அம்மா, அக்கா, தங்கை யாராவது பெண்ணுக்குப் பெண் துணை இருந்தால் அதுங்க தன் குறை நிறைகளை மனம் விட்டுப் பேசி….தன் கஷ்டங்களைப் போக்கிக்க முடியும். ”

” இதைச் சொல்லித்தான் சார் என்னை, அவளைப் பெத்த அம்மா அப்பா ரொம்ப தொந்தரவு பண்றாங்க. ”

” நீயும் சின்ன வயசு தானே..! ”

” இருந்தாலும் என் மனசு ஆறலை சார். நான் காதலிச்சு கைபிடிச்சவ….” – மறுபடியும் கமறினான்…கலங்கினான். கண்களைத் துடைத்தான்.

” அதுக்காக… காலமெல்லாம் கவலைப்பட்டு கலங்கி இருந்தால் வாழ்க்கை.! குழந்தைங்க எதிர்காலம் ? ”

” சம்மதம் சொல்றதிலேயும் ஒரு சிக்கல் இருக்கு சார். ”

” என்ன ? ”

” ரெண்டாவது குழந்தை பொறந்ததும் இதுக்கு மேல எதுவும் வேணாம்ன்னு நான் குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்கிட்டேன். ”

” நீயா ?!! ” ஆறுமுகத்திற்கு அதிர்ச்சி.

” ஆமா சார். கு.கன்னா…பொதுவா பெண்கள்தான் பண்ணிக்குவாங்க. பிரசவக் காலத்திலேயே அதை சுலபமாக முடிச்சுக்குவாங்க. இவளும் அதைத்தான் சொன்னாள். ஏன்.. எல்லாத்தையும் பெண்கள் தாங்கனும்.? பிறப்பு, தடுப்பையெல்லாம் அவுங்களே சுமக்கனும்..? அதனால…நான்தான் அவள் உடம்பு தாங்காதுன்னு சாக்குபோக்கு சொல்லி…மறுத்து நான் பண்ணிக்கிட்டேன். இப்போ…எந்தப் பொண்ணு சம்மதிக்கும் ? ”

” மறு அறுவை சிகிச்சை செய்து அதைச் சரி படுத்திக்கலாம். ”

” சார்! ஏற்கனவே ரெண்டு. இதுக்கு மேலும் ஒன்னு ரெண்டுன்னா என் வருமானத்துக்கு எப்படித் தாங்கும் ? ” பாலு லேசில் பிடி கொடுக்கவில்லை. பிடி கொடுக்கவும் மனசில்லை.

” சரி. சம்மதிக்கிற பொண்ணாப் பார்க்கலாம். ” – ஆறுமுகமும் அவனை விடுவதாய் இல்லை.

” வயது முதிர்ச்சி, பிறந்த வீட்டில் வறுமை கொடுமை….இன்னைக்குச் சம்மதிச்சு வருவாள். நாளைக்கு குழந்தை வேணும்ன்னு ஏங்குவாள். அதெல்லாம் சரி வராது. சார். ”

” கொழுந்தியாள் இருக்கா ? ”

” இல்லே. என் மனைவி அவள் அம்மா அப்பாவுக்கு ஒத்தைப் பொண்ணு. ”

” மாமன் வழியில பொண்ணு இருக்கா ? ”

” தாய் மாமன் பொண்ணே இருக்கு. சரி வராது.! ”

” ஏன்…? ”

” பிறப்பிலேயே ஒரு கால் ஊனம். ”

” நடக்க முடியாதா…? ”

” முடியும். தாங்கித் தாங்கி நடக்கும். ”

” அதான் சரி வராது என்கிறீயா ? ”

” இல்லே. ஊனமாய்ப் பிறந்ததுமே…அவளை என் தலையில கட்டுறதாய் ரெண்டு வீட்டிலேயும் பேச்சு வார்த்தை. பெண் எடுபடமாட்டாள், எடுபட்டாலும்…புகுந்தவீட்டில் கஷ்டப்படுவாள்…அப்படி இப்படின்னு நிறைய காரணங்களுக்காக அவளை, நல்லா இருக்கும் என் தலையில கட்டுறது என்ன சார் நியாயம் ? அதனால்…எனக்கு விபரம் தெரியும் நாளிலிருந்தே….அந்த பேச்சுப் பிடிக்கலை, அவளைப் பிடிக்கலை… வெறுப்பு.! மாமன் வீட்டுக்கு அடிக்கடி போனால்…அவளுக்கு என் மேல் பாசம், நேசம் வந்துடு;ம்ன்னு பயந்து அதிகம் போறதில்லே. அப்படியே போனாலும்…அவளைத் திரும்பிப் பார்க்கிறதில்லே. அப்படி இருந்தும்…. ” நிறுத்தினான். தன் சட்டை மேல் விழுந்த முடிகளை உதறினான்.

” சொல்லு…? ” – ஆறுமுகம்.

” அவளுக்குக் கலியாண வயசு வந்ததும்….எனக்குப் பேசி முடிக்க வந்தாங்க. நான்தான் ஒரேயடியாய் மறுத்து….என் காதல் விசயத்தைச் சொல்லி……இவளைக் கலியாணம் பண்ணிக்கிட்டேன். ” சொன்னான்.

” அப்போ… அந்தப் பொண்ணு இன்னும் கலியாணம் முடியாமல் இருக்காளா ? ”

” அப்போலேர்ந்து பார்த்துக்கிட்டு இருக்காங்க. இன்னும் முடியலை. ”

” அந்த வீட்டோட உங்களுக்குப் பேச்சு வார்த்தை இருக்கா ? ”

” நிறைய இருக்கு. நான் மறுத்த சேதி கேட்டு அந்தப் பொண்ணே….மாமா சொல்றது நியாயம்தானே. என்னால அவர் ஏன் சிரமப்படனும். எனக்கும் அவருக்கும் எப்படி ஒத்து வரும். என்னை மனசார ஏத்துக்கிற ஆணாய்ப் பார்த்து முடிங்க. சந்தோசமாய்க் கலியாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி….முறியற உறவை சரியாக்கிடுச்சு.” சொன்னான்.

” இன்னும் முடியலைன்னா….அந்தப் பொண்ணு உனக்காகத்தான் இருக்கு.! ” என்றார் ஆறுமுகம்.

” வேணாம் சார். அன்னைக்கு ஒதுக்கிட்டு…. இன்னைக்கு நமக்கு வழி இல்லைன்னு போய் நிக்கிறதோ, ஏத்துக்கிறதோ நியாயமே இல்லே. ” பாலு சொன்னான்.

” உன் மனைவி சாவுக்கு அந்த மாமா அத்தை வந்தாங்களா ? ”

” வந்தாங்க. ”

” அதன் பிறகு உன்கிட்ட அந்தப் பொண்ணைப் பத்தி பேச்செடுத்தாங்களா ? ”

” முடிஞ்சு போன விசயத்தைப் பத்தி எப்படி பேச்செடுப்பாங்க. ? ”

” மாப்பிள்ளைத் தேடுறாங்களா ? ”

” தேடுறாங்க. அவுங்க வேலையை அவுங்க பார்த்துக்கிட்டிருக்காங்க. ”

” நம்மகிட்ட எதுவும் பேசாதது….தட்டிக்கழிச்ச நாம தானாய் வரலாம்ன்னு கூட எதிர் பார்க்கலாமில்லே. ” ஆறுமுகம் தன் மனதில் பட்டதைச் சொன்னார்.

” இருக்காது சார். நம்மை அவுங்க சட்டை செய்யலை. அதான் அர்த்தம் ! ”

” ஒதுக்கினவனைத் திரும்ப எப்படிப் போய்க் கேட்கிறது. வலி தெரிஞ்சு அடிச்சு ஏன் வழிக்குக் கொண்டு வரனும்ன்னு நெனைச்சு ஒதுங்கிப் போகலாமில்லையா ? ! ”

” எதை எப்படி வேணுமின்னாலும் நமக்குச் சாதகமாய்ப் பேசலாம் சார். என்னைப் பொறுத்தவரை…நாம ஒதுக்கின இடத்துக்கு நாம திரும்ப போறது தப்பு. ” என்றான் தீர்மானமாக.

” சரி அந்த விசயத்தை விடு. அந்தப் பொண்ணு உனக்கு சரி படுவாளா ? ”

” அவள் என்னை விரும்பினவள் சார். நான்தானே அவளை வெறுத்தேன், ஒதுக்கினேன். அழகா இருப்பாள்.! ”

” அப்புறமென்ன..உன் மாமனார் மாமியாரை அனுப்பி பேசச் சொல். ”

” அவுங்க இந்த நிமிசம் வேணுமின்னாலும் பேசத் தயார். வேணாம்ன்னு நான்தான் தடுத்து நிறுத்தி இருக்கேன். அப்பா அம்மா இருந்தாலாவது ஒட்டு உறவு., ரத்த சொந்தம், பாசம்ன்னு நெனைச்சி மன்னிச்சி சம்மதிப்பாங்க. இவுங்க எந்த சம்பந்தமுமில்லே. என் மாப்பிள்ளைக்கு உன் பொண்ணைக் கொடுன்னு எப்படிப் பேச முடியும். ?! அவமானப்படுவாங்கன்னு நான்தான் அவுங்களைத் தடுத்து முட்டுக்கட்டைப் போட்டிருக்கேன். ”

” சரி. உன் மாமன் வீட்டுல நான் போய் பேசறேன். ”

” நீங்க எப்படி சார். என் மாமனார் மாமியாராவது… முகம் தெரியும், ஓரளவுக்குப் பழக்கம். மரியாதைக்கு உட்கார வைச்சி திருப்பி அனுப்புவாங்க. உங்களை அவுங்களுக்கு யாருன்னே தெரியாது. அந்த மரியாதையும் கிடைக்காது. எப்படிப் பேசுவீங்க. ? ”

” துணைக்கு.. உன் மாமனார், மாமியாரை அழைச்சுப் போறேன். ”

” வேணாம் சார். என்னால நீங்க அவமானப்படுவீங்க வேணும்ன்னா நானே அவுங்களைப் போகச் சொல்றேன்.”

” நீ போகச் சொல்ல மாட்டே. நான் அவுங்களை அழைச்சுப் போறேன்.”

” சார்.! என்னால கஷ்டம் வேணாம்.! ”

” ஒரு நல்லது நடக்க நான் எதையும் தாங்கிக்கத் தயார். உன் மாமனார் மாமியார் இருக்கும் இடத்தை மட்டும் சொல்லு. நான் அவுங்ககிட்ட பேசி அழைச்சுப் போறேன். ”

” என் வீட்டுக்கு எதிர்வீடுதான் சார். அவுங்க வீடு. ”

” ஓ….எதிர்வீட்டுப் பெண்ணைத்தான் காதலிச்சு கலியாணம் பண்ணிக்கிட்டீயா ? ”

” அ..ஆமாம். ” வெட்டி முடித்து கத்திரிக்கோல் சீப்புகளை ராக்கையில் வைத்தான்.

” இந்தப் பெண் அழகுல மயங்கித்தான் மாமன் பெண்ணை மறுத்தியா..? ”

கிருதா பின் பக்கம் உள்ள உதிரி முடிகளை எடுக்க….கத்தி எடுத்தான். அந்த வேலையைப் பார்த்துக் கொண்டே…

” இல்லே சார். நாங்க வேற வேற சாதி. அவளுக்கு நிச்சயம் பண்ணின மாப்பிள்ளை திடீர்ன்னு பத்து நாள்ல பேருந்து விபத்துல பலி. கலியாணம் நின்னு போச்சு. விசயம் கேள்விப் பட்டு இவள்; கொலைக்காரின்னு… எந்த வரனும் ஏறெடுத்துப் பார்க்கலை. குடும்பமே இடிஞ்சு போச்சு. இவளும் ரொம்ப நொந்து போயிட்டாள். எதிர் எதிர் வீடு. எனக்கு மனசு சங்கடமாய்ப் போச்சு. ஒரு நாள் அவளைக் கோயில்ல சந்திச்சு நான் உன்னைக் கலியாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். மறு நாள் மறுநாள் அவள் சம்மதம் சொல்ல…..ஆறு மாசம் காதலிச்சு கலியாணம் பண்ணிக்கிட்டோம். ” சொன்னான்.

” அப்படியா…? ”

” அ..ஆமாம் சார். ”

” இப்படி..நல்ல மனசு மாப்பிள்ளையோட தன் பொண் வாழக் குடுத்து வைக்கலையே என்கிற கரிசனம். உனக்குக் கலியாணம் பண்ணிப்பார்த்து…தங்களுடைய வாரிசுக்கும் ஒரு பாதுகாப்பைத் தேட நினைக்கிறாங்க. நீ முடியாதுங்குறீயே.! இது தப்பு. உன் மாமனார் மாமியார் விலாசத்தைச் சொல்லு. நீ இல்லாம நானே அவுங்ககிட்ட என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு பேசறேன், போறோம்.” சொன்னார்.

மொத்த வேலையையும் முடித்த பாலு கத்தியை எடுத்த இடத்தில் வைத்து விட்டு ஆறுமுகத்து மேல் போர்த்தி இருந்த போர்வை எடுத்து உதறி மடித்தான்.

” நீ சொல்லலைன்னாலும்…கதிர்வேலன்கிட்ட கேட்டு போவேன். ஒரு முயற்சிதான் சொல்லு. ” என்றார் ஆறுமுகம் விடாப்பிடியாய்.

வேறு வழி இல்லாமல்…சொன்னான்.

அடுத்த நாள்….

பத்து மணிக்கெல்லாம்…பாலு தாய் மாமன் வீட்டு முன் கார் நின்றது.

அதிலிருந்து…..ஆறுமுகம், பாலு….மாமனார், மாமியார் இறங்கி உள்ளே நுழைந்தார்கள்.

எதிர்பாராத வருகையால்…. ஒரு கணம் திகைத்து, திக்குமுக்காடிப் போன சின்னசாமியும் அவர் மனைவி மல்லிகாவும்… சுதாரித்தது…. ” வாங்க… வாங்க.” மலர்ச்சியாய் வரவேற்றார்கள்.
உடன் உட்கார வைத்து உபசரித்தார்கள்.

” நான்….பாலுவுக்குக் கொஞ்சம் வேண்டியப்பட்டவன். நாங்க வந்த விசயம்….. ” என்று ஆரம்பித்து ஆறுமுகம் விசயத்தை உடைத்தார்.

கேட்ட கணவன் மனைவி இருவரும் முகம் மாறி ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

” என்ன ? ” ஆறுமுகம்தான் கேட்டார்.

” நேத்துதான் ஒரு இடம் வந்து பெண்ணைப் புடிச்சிருக்குன்னு சொல்லிப் போயிருக்காங்க… ” சின்னச்சாமி சங்கடமாய் இழுத்தார்.

‘ விருப்பமில்லை என்பதால்….இந்தப் பேச்சு, வழுக்கல்! ‘ – ஆறுமுகம் மனதில் பட்டது. அதற்கு மேல் அதைப் பற்றிப் பேச வழி ? !

” சரி சார். இருக்கும்ன்னு நெனைச்சு வந்தோம். இல்லே… கிளம்புறோம்.! ” – சொல்லி எழுந்தார்.

உடன் வந்தவர்களும் எழுந்தார்கள்.

” அப்பா ! அவுங்களை இருக்கச் சொல்லுங்க ? ” உள்ளிருந்து உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டே மாலா ஒரு கால் தாங்கி வந்தாள்.

எழுந்தவர்கள் நின்றார்கள்.

” அந்த வரனை எனக்குப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்கப்பா.” நின்றாள்.

” அம்மா !!! ” – சின்னசாமி அதிர்ச்சியாக மகளைப் பார்த்தாள்.

” நான் மாமனையேக் கலியாணம் பண்ணிக்கிறேன். அவர் பெத்தக் குழந்தைகள் எனக்கு ரெண்டு லட்டு மாதிரி இருக்கும்போது எனக்குப் பெத்துக்க அவசியமும் இல்லே. குழந்தையும் வேணாம்.! ” சொன்னாள்.

” மாலா…!! ” தாய் மல்லிகா வேர்த்தாள்.

” பதறாதீங்கம்மா. பொண்ணு சோடைன்னா…தாய் மாமன் புள்ளை தலையில கட்டும்போது..அவர் சோடைன்னா…பொண்ணு ஏன் ஏத்துக்கக் கூடாது. ? பாலு மாமாவை நான் ஏத்துப்பேன், ஏத்துக்கிறேன், கட்டிப்பேன்! இதுல எந்த மாற்றம், மறு பேச்சு கிடையாது ! ” அழுத்தம் திருத்தம் ஆணித்தரமாகத் தன் முடிவைச் சொன்னாள்.

கேட்ட அத்தனைப் பேர்களும் அப்படியே சிலையானார்கள். 

தொடர்புடைய சிறுகதைகள்
அதிகாலை. தங்கம்மாள் வீட்டை விட்டுப் புறம்படும்போதே... மனதில் உற்சாகம். '' தங்கம் ! நாளைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன். ராத்திரியே புறப்படுறேன். திரும்பி வர ரெண்டு நாளாகும். வீட்டுல ஐயா மட்டும்தானிருப்பார். காலை, மாலை வழக்கம் போல் வந்து வேலையை முடிச்சிட்டுப் போ..'' மாலினி ...
மேலும் கதையை படிக்க...
"எதுக்கு நம்ம பெண்ணை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்காமல் அரசாங்க பள்ளியில் சேர்க்கனும் என்கிறீங்க...? "கண்ணகி கணவனைக் காட்டமாகக் கேட்டாள். பதில் பேசாமல் இருந்தான் சந்திரன். "தாய் மொழி பாசமா..?" "ம்ம்ம்ம்......'' "எனக்கும் தாய் மொழி பாசம், தமிழ் மேல விருப்பம் இருக்கு. ஆனாலும்....கால நிலவரத்துக்குத் தகுந்த மாதிரி ...
மேலும் கதையை படிக்க...
'இன்று துபாயிலிருந்து கஸ்தூரி நேராக தங்கள் வீட்டிற்கு வருகிறாள் !'- என்று செந்தில் சேதி சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேதி சொல்லி வைத்த அடுத்த விநாடியிலிருந்து கண்ணணைவிட சுமதிக்குத்தான் வயிற்றில் கலக்கம். வீட்டில் வேலை ஓடவில்லை. இதே நிலைதான் மூன்று வருடங்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஆறு மணி காலை. அடுப்பில் சுகமாய்த் தூங்கிய வெள்ளைப் பூனை விழித்து எழுந்து சோம்பல் முறித்து 'மியாவ்!' என்று கத்தி சாம்பல்; உதறி நடந்தது. மண் சுவரோரம் கிழிந்த பாயில் வலது காலில் தொடைவரை பெரிய கட்டுடன் நாறுந்தோலுமாய் முகத்தில் தாடி மீசையுடன் ...
மேலும் கதையை படிக்க...
கலகலப்பாய் இருக்க வேண்டிய வீடு நிசப்தம். மயான அமைதி . எல்லோர் முகங்களிலும் கலவரம். மணப் பெண்ணான சிம்ரனுக்குள் தீவிர யோசனை. எல்லாம் மாப்பிளையாக வந்த திவாகர் போட்ட போடு. அவன் இப்படி எல்லோரையும் கதிகலங்க வைப்பானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சிறிது நேரத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலை மணி 5.30. கூப்பிடு தூரத்தில் எதிரே வேகுவேகுவென்று வியர்வை வழிய நடந்து வரும் கதிரேசனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். வயது ஐம்பது. ஓமக்குச்சி நரசிம்மன் உடல். அதில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு எதுவும் மருந்துக்குமில்லை என்பது சத்தியம். அப்படி இருக்கும்போது ...
மேலும் கதையை படிக்க...
ரம்யாவிற்கு எரிச்சல்!! கணவன், மனைவி சம்பாதிக்கிறோம். இரண்டு பிள்ளைகள் வைத்திருக்கிறோம். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக இப்போதே வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்க்கலாம் என்றால் மாமனார் விடுவதில்லை. "இதென்ன.. கூட்டு, பொரியல் இல்லாமல் சாம்பார் ரசம்,.? "குதிப்பார். அவருக்கு வாரம் இரண்டு நாட்களாவது கறி, மீன், தினமும் ...
மேலும் கதையை படிக்க...
கணேஷ் சொன்ன எந்த நல்லது கேட்டதும் காதில் ஏறவில்லை செண்பகாவிற்கு. அதன் சாராம்சம்தான் உடலையும் உள்ளத்தையும் தீயாய்ச் சுட்டது. வந்த கோப தாபம் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து... "மொதல்ல வெளியே போங்க..."மெல்ல சொல்லி வெளியே கை நீட்டினாள் செண்பகா. கணேஷ் ஆடவில்லை, அசையவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
அமாவாசை. மீன் பிடி இல்லை. மணி 7.00. சவகாசமாக எழுந்தான் கண்ணன். வயசு இருபத்தி எட்டு. பொறியியல் படிப்பு. இன்னும் மணமாகாகவில்லை. வேலை கிடைக்காததினாலும் போக விருப்பமில்லாததாலும் அப்பாவுடன் சேர்ந்து சுயதொழில் முயற்சியில் கடல் தொழிலில் இறங்கி விட்டான். தற்போது அப்பாவிற்குச் ...
மேலும் கதையை படிக்க...
"பெரிய பொல்லாத சைக்கிள். ஓட்டை வண்டி. ! தொடைக்கனுமாம் தொடைக்க..!" - பத்தாவது படிக்கும் நிர்மல் வெறுப்பும் சலிப்புமாய் வாசலில் நிற்கும் சைக்கிளை ஒரு உதை விட்டுவிட்டு பொறுமிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான். "அம்மா..! அம்மா !" கூப்பாடு போட்டான். நளினிக்கு இவனென்றால் உயிர். செல்லம். "என்னம்மா..?" ...
மேலும் கதையை படிக்க...
வேலைக்காரி..!
பள்ளிக்கூடம்..! – ஒரு பக்க கதை
சோரமாகுமோ சொந்தம்……..!
சின்னாம்பும் சிறுவாணியும்…….!
சிம்ரன்
கணவர்..! – ஒரு பக்க கதை
சிக்கனம் – ஒரு பக்க கதை
முற்றுப் புள்ளி வேண்டாம்..!
காத்தான் குளம்…!
பாடம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)