மண்ணின் மைந்தர்கள்

 

சுபத்ராவுக்கு எதை நினைத்தாலும் அலுப்பாக இருந்தது. இந்த வீட்டில் இருந்த எல்லா ஜீவராசிகள் மீதும் கொல்லையிலிருந்த பசு மாட்டிலிருந்து வாசலில் வெயிலில் காய்ந்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாமனார் சங்கர்தாஸ்வரை – ஆத்திரம் வந்தது. அது சாதாரண ஆத்திரம் இல்லை – கத்தினோம் கொட்டினோம் வடிகாலில் கரைத்தோம் என்பதற்கு -

இது ஒரு சொல்லத் தெரியாத ஊமை ஆத்திரம். வெடித்தால் அவளைப் பைத்தியக்காரி என்று பசுமாடுகூடச் சிரிக்கலாம். இந்த வீட்டிலே நடக்கிற எல்லா அசட்டுத் தனங்களுக்கும் அந்தக் கிழவர்தான் மூலகாரணம் என்று அவள் ரகசியமாகப் பசுவின் காதில் ஒரு நாள் சொன்னபோது அது அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டது. பால் கறக்கச் சென்றபோது பாலை விடாமல் மடியில் பிடித்து வைத்துக் கொண்டது.

கிழவரின் ராசி அப்படி கிராமம் முழுவதுமே அவர் காலில் வந்து விழும். இத்தனைக்கும் மனுஷனின் ஜேபியில் ஒருநயா பைசா கிடையாது. காலில் விழுவது கிராம மக்கள் மட்டுமில்லை. அவருடைய மகன் மோகன்தாஸும்தான். பித்ருபக்தி என்றால் அந்த ஆளைத்தான் உதாரணமாகச் சொல்ல வேண்டும். க்ளினிக்குக்குப் போவதற்கு முன் வாசலில் அமர்ந்திருக்கும் தந்தையின் காலைத் தொடுவார். திரும்பியதும், அதே ஸ்தாபனத்தில் உட்கார்ந்திருக்கும் அப்பாவின் காலைத் தொட்டுச் சற்று நேரம் குசலம் விசாரித்துவிட்டே உள்ளே வருவார். யாரும் சங்கர்தாஸைக் கவனிக்காமல் தாண்டிக் கொண்டு சென்றுவிட முடியாது. அதற்காகவே அவர் அப்படி வாசல் முற்றத்தில் உட்கார்ந்திருக்கிறாரோ என்று சுபத்திராவுக்குத் தோன்றும். மோகன்தாஸைப் பின்பற்றி அநுபமாவும் பிரீத்தம்மும் கூடப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் போவதற்கு முன் வாசலில் அமர்ந்திருக்கும் தாத்தாவை வணங்கி விட்டுத்தான் போவார்கள்.

அட, பெரியவர்களிடம் மரியாதை காட்டுவது நல்லதுதான், இந்தக் காலத்துக் குழந்தைகள் இத்தனை பவ்யமாக இருப்பது விசேஷம்தான். யார் இல்லை என்றது? ஆனாலும், இந்தக் கிழவரின் தத்துவங்களில் மூளைச் சலவை ஆகிவிடக் கூடாதல்லவா?

நயா பைசாவுக்கு உதவாத அந்தத் தத்துவத்தால் என்ன லாபம் என்று எவரும் இந்த வீட்டில் யோசனை செய்வதில்லை. அப்படிப்பட்ட போசனையே ஜனிக்காது என்பது இருக்கட்டும், அதை எடுத்துச் சொன்னால் சொல்பவரைச் சந்தேகிப்பார்கள். சேச்சே, எத்தனை நீசத்தனமான சிந்தனை என்று ஆகாசத்தில் அமர்ந்து கொள்வார்கள்.

இப்படி ஆகாசத்தில் மிதப்பதால்தான் பெட்டியும் ஜேபியும் காலி. இத்தனைக்கும் சாதாரணப் படிப்பு இல்லை. பட்டினத்து மருத்துவக்கல்லூரியில் ஐந்து வருஷம் தங்கி உபகாரச் சம்பளத்துடன் படித்துப் பட்டம் பெற்றவர், மோகன்தாஸ். இந்த ஊரில் இவரைவிட்டால் பெயர் சொல்லும்படியாக வேறு ஒரு டாக்டர் இல்லை .

சுபத்திராவின் அத்தை பெண்ணின் கணவரும் மீரட்டில் டாக்டர்தான். பங்களா, கார் என்கிற வசதியேற்பட்டுவிட்டது பத்தே வருஷத்தில், ஒன்பது வயதே ஆன பெண்ணிற்கு நகைகள் சேர்க்க ஆரம்பித்து விட்டாள்.

இங்கு அநுபமாவிற்குக் கல்யாண வயது வந்துவிட்டது அந்தக் கிழவருக்குக்கூடக் கண்ணில் படவில்லை. “படிக்கட்டும்!” அவளு டைய அப்பாவுக்கும் வேண்டாத பெருமை அடித்துக் கொள்வதில் குறைச்சல் இல்லை.

“அநுபமா சாதாரணப் பெண்ணில்லே. அசாதாரணமானவள். பெயருக்கு ஏற்ற மாதிரி. படிப்பில் அவளுக்கு எத்தனை நாட்டம் பார்! நகை நட்டு, கல்யாணம் கார்த்தி என்று என்னிடம் பேசாதே. அவள் படிக்கப் போகிறாள். டாக்டராவாள். என் க்ளினிக்கில் வேலை பார்ப்பாள்.”

எத்தனை கோட்டைகள்! எல்லாம் கண்ணெதிரே பொல பொலவென்று உதிர்ந்து விட்டன. சரி, தொலையட்டும் நம் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று இனிமேல் மேற்கொண்டு உருப்படியான வேலையைச் செய்யலாமோ இல்லையோ? அதுதான் இல்லை. கோர்ட்டு கச்சேரி என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பைத்தியக்காரத்தனத்தை எங்கே சென்று முறையிடுவது? கையிருப்பெல்லாம் கரைந்து கொண்டிருக்கிறது. மாதம் இருமுறை டில்லிக்குச் செல்ல வேண்டும். கோர்ட்டில் ஆஜராக, அப்பாவும் பெண்ணுமாக. அவளுடைய வகுப்புக்கு மட்டம், அதோடு அந்த நாட்களில் மோகன்தாஸின் வரும்படி பூஜ்யம். இவர்களுடைய காரியமெல்லாம் உலக நடைமுறைக்குப் புறம்பானது.

“என்னுடைய உடம்பிலே யாருடைய ரத்தம் ஓடுதுன்னு நினைக்கிறே?” என்ற பீற்றல் வேறு.

எல்லாக் கோளாறுக்கும் அந்த ரத்தம்தான் காரணம் என்று சுபத்திராவுக்கு ஆத்திரப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

“யாருடைய ரத்தம் தெரியுமா?”

முன்பு அவளும் பிரமிப்புடன் கேட்பாள். வெற்று மார்புடன் வெயிலில் உட்கார்ந்திருக்கும் தருணங்களில் சங்கர்தாஸின் முதுகில் பளபளக்கும் தழும்புகளைப் பயபக்தியுடன் பார்ப்பாள்.

“ஏழை இந்தியன் உபயோகிக்கிற உப்புக்கு விலை ஏத்தினான் வெள்ளைக்காரன்னு பொங்கி எழுந்து நியாயம் கேட்டவருடைய பிள்ளைடீ நான்! அப்பா ஏன் வெள்ளைக்காரனுடைய அடியை முதுகிலே சுமந்தார்? உப்பை வாங்கற வசதி இல்லையா அவருக்கு? இந்த மண்ணிலே பிறந்த அத்தனை பேருக்காகவும் வாங்கின அடி அது!”

முன்பு இதைக் கேட்கும் போதெல்லாம் உடம்பும் மனசும் சிலிர்த்துப் போகும். அவளுடைய திருமணப் பேச்சு அடிபட்ட காலத்தில் “சங்கர்தாஸின் மருமகளாகப் போகும் பாக்கியம் எனக்கு வேண்டும்” என்று ரகசியமாகப் பிரார்த்தவள் அவள். நானும் ஒரு பைத்தியக்காரி என்று அவளுக்குத் தன்மீதே ஆத்திரம் வருகிறது இப்போது. காந்தி மகானுடன் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டவர் என்ற பெயரும் அன்றைய தினத்தின் ஞாபகப்படுத் தலாக ஒரு பழுப்பேறிய புகைப்படத்தையும் தவிர வேறு எந்த லாபமும் மாமனாருக்குக் கிடைக்கவில்லை. சுதந்திரப் போரில் பங்கு கொண்ட சங்கர்தாஸின் பல நண்பர்களுக்குப் பெரிய பதவி கிடைத்திருக்கிறது. மந்திரிகளாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக மகா ஜபர்தஸ்துடன் இருக்கிறார்கள். கேவலம் ஓர் எம். எல். ஏ. வாகவாவது இவர் போயிருக்கக் கூடாதா?

“அரசியல் ரொம்ப நாற்றமெடுத்து விட்டது அம்மா” என்கிறார். “முன்பெல்லாம் காந்திக் குல்லாவைப் பார்த்தாலே மரியாதை தோன்றும். காந்திக் குல்லாவை அணிந்தவன் நேர்மையானவன். பொய் சொல்லமாட்டான் என்று ஜனங்கள் நம்பினார்கள். இப்பொழுது குல்லாவை அணிந்தாலே சந்தேகப்படுகிறார்கள். உலகம் தலைகீழாகப் போய் விட்டது. அதில் நான் அந்நியன்.”

இப்படிச் சொல்லிக் கொண்டேதான் அவர் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தபடி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறார் என்று சுபத்திரா நினைத்துக் கொண்டாள். இதுவும் ஒருவகைப் பிடிவாதம் என்று தோன்றிற்று. இதே குணம்தான் பிள்ளைக்கு, பேத்திக்கு. எல்லாம் ஒரே அச்சு. உலகம் தலைகீழாக இல்லை. இவர்கள் போக்குதான் விசித்திரம். சிரசைத் தரையில் பதித்துக் கைகளின் மேல் நிற்கிறார்கள். உலகம் தலைகீழாய்த் தெரியாமல் என்ன செய்யும்?

இல்லாவிட்டால் இப்படி கோர்ட்டு கச்சேரி என்று வேலை மெனக்கட்டு அலைவார்களா? ஸ்தாபனத்தை எதிர்த்து யாருக்காவது வெற்றி கிட்டியிருக்கிறதா? சுபத்திராவின் உறவினர்களுக்கெல்லாம் இந்த விவகாரம் விளங்குவதுகூட இல்லை.

“எதுக்கு இந்த வீண் வம்பு? உன்னால் முடிந்தால் கொடு, முடியாவிட்டால் விலகி இரு. இதற்காகக் கோர்ட்டுக்குப் போவானேன்?” என்கிறார்கள்.

அவளும் பலமுறை மோகன்தாஸிடமும் அநுபமாவிடமும் சொல்லியாகி விட்டது. இதனால் வீண் அலைச்சலும் பணச் செலவையும் தவிர ஒரு லாபமும் இருக்கப் போவதில்லை என்று.

“ரொம்ப நன்றாயிருக்கே. இது அநியாயம். அதை எதிர்க்க வேண்டியது நம்ம கடமைம்மா!” என்று பெற்றவளுக்கு உபதேசம் செய்கிறாள் அநுபமா.

இவர்கள் இப்படிப் பேசப்பேச, அநுபமாவுக்கு டாக்டர் படிப்பு இல்லை என்று ஆனதோடு கல்யாணம் என்பதும் ஆகப்போவ தில்லை என்று சுபத்திராவுக்குக் கலவரம் ஏற்பட்டது. அவர்கள் ஜனத்தில் வரதட்சணை வாங்காமல் எந்தப் பிள்ளை வீட்டிலும் இப்போது பெண் எடுப்பதில்லை. வாங்காவிட்டால் இளப்பம் என்கிற நிலைகூட வந்துவிட்டது. அவர்களுடைய சம்பந்தம் வேண் டாம் என்று முறைப்பதுடன் அப்பாவும் பெண்ணும் நிற்க மாட்டார்கள். கேட்பவரைக் கோர்ட்டுக்கு இழுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.

“எங்க உடம்பிலே எந்த ரத்தம் ஓடுகிறது தெரியுமா?”

ரத்தம், அஹ்! பிழைக்கத் தெரியாதவர்களின் பீற்றல் அல்லவா இது! தலைவிதி வேறு என்று இருக்கும்போது பீற்றலினால் என்ன பிரயோஜனம்? தலைவிதி என்று சொல்வதைத் தவிர சுபத்திராவுக்கு வேறு காரணம் சொல்லத் தெரியவில்லை. வகுப்பில் எப்பவும் முதலாக நிற்கும் அநுபமாவுக்கு ப்ளஸ் டூ பரிட்சையின் போது காய்ச்சல் வந்தது. காய்ச்சலுடனேயே எழுதிவிட்டு வந்தாள். பாதி நாட்கள் தாளை முடிக்கக்கூட முடியவில்லை தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் வரவேண்டியவளுக்கு அறுபத்தி ஐந்துதான் கிடைத்தது மருத்துவ நுழைமுகப்பரிட்சைகளின்போது மறுபடி காய்ச்சல் வந்தது சோதனையைப் போல. எதிர்பார்த்தபடியே எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. கொஞ்ச நாட்களுக்கு அநுபமா சோர்ந்திருந்தாள். பிறகு தெளிந்து விட்டாள். “பி.எஸ்ஸி., முடித்த பிறகு மறுபடி முயற்சி செய்யலாம்” என்று நம்பிக்கையுடன் வளைய வந்தாள்.

சுபத்ராவுக்கு இதெல்லாம் எதுவும் புரிவதில்லை. அநுபமா மருத்துவம் படிக்காததால் விசேஷ ஏமாற்றம் ஏதும் ஏற்படவில்லை ஒரு விதத்தில் நல்லது என்றுகூடத் தோன்றிற்று. நல்ல வரன் ஏதாவது வந்தால் கல்யாணம் செய்வதற்கு தோது என்று தோன்றிற்று.

ஆனால் மீண்டும் விதி விளையாடிற்று. தெற்கே எந்த மூலையிலோ இருந்த ஒரு மருத்துவக் கல்லூரியின் விளம்பரத்தைக் கண்டதும் அநுபமாவின் ஆசை மீண்டும் துளிர்த்தது.

“விண்ணப்பித்துப் பார்க்கிறேனே, அதனால் என்ன நஷ்டம்?” என்று அவள் தாளைப் பூர்த்தி செய்து பதிவுத் தபாலில் அனுப்பிய போது, இது ஒரு வேலை மெனக்கெட்ட வேலை என்றுதான் சுபத்திராவுக்குத் தோன்றிற்று.

ஆனால் அதிசயமாக அடுத்த இருபது நாட்களில் செய்தி வந்தது அநுபமாவுக்கு இடம் இருப்பதாக அன்றைய தினம் இப்பவும் பசுமையாக நினைவு இருக்கிறது சுபத்திராவுக்கு சனிக்கிழமை பகல் நேரம், மோகன்தாஸ் க்ளினிக்குக்குப் போய்விட்டார். வாசலில் அமர்ந்திருந்த தாத்தாவுக்கு அநுபமா செய்தித்தாளை வாசித்துக் காண்பித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் பெரியவர் சாப்பிட வந்து விடுவார் என்கிற யோசனையுடன் சுபத்திரா துளசிமாடத்தை வலம் வந்து நமஸ்கரித்தாள், நமஸ்கரித்து நிமிரும் சமயத்தில், அநுபமா, “அம்மா!” என்று உற்சாகமாக ஓடிவந்து கையில் வைத் திருந்த ஒருகடிதத்தைப் படபடத்து, “கிடைச்சிட்டது கிடைச்சிட்டது!” என்று கூவியபடி அவளை அணைத்துக் கொண்டாள். அநுபமாவை இத்தனை உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் சமீப காலத்தில் சுபத்திரா பார்த்திருக்கவில்லை.

“அம்மா மெடிகல் காலேஜிலே சீட் கிடைச்சிட்டது! நான் டாக்டராகப் போறேன்மா!”

சுபத்திராவுக்கு அதிசயமாக இருந்தது. இந்தப் பெண்ணிற்கு இந்தத் தொழிலில் இருக்கும் ஈடுபாட்டுக்கும் அவளுள் ஓடும் ரத்தத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும் என்று விநோதமாகத் தோன்றிற்று. இவள் சாதாரணப் பெண் இல்லைதான். நகை, உடை என்று இவள் ஆசை காட்டியதாக சுபத்திராவுக்கு நினைவேயில்லை. அநுபமாவின் குதியலையும் சந்தோஷத்தையும் காணக் காண மனசு நெகிழ்ந்து கண்களில் நீர் நிறைந்தது. பெண்ணின் சுயரூபத்தை முதன் முறையாக உணர்ந்தது போல.

“ஏம்மா உனக்குச் சந்தோஷமா இல்லே?”

“சந்தோஷம்தான்” என்றாள் சுபத்திரா கனிவுடன், “ஆனால் ரொம்ப தூரத்திலே இருக்கிற ஊர்! பாஷை அந்நியம், ஜனங்கள் அந்நியம்!”

“அந்நியமா? நம்ம தேசம்னா? எல்லாரும் இந்தியர்கள்னா?”

முந்திக்கொண்டு பேசியது அநுபமாவின் தாத்தா. அவருடைய முகத்தில் புதிதாக ஒரு பளபளப்பு தெரிந்தது. சாதாரணமாக என்றோ நடந்த அந்த உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றியோ சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியோ பேசும்போதுதான் அப்படிப்பட்ட பிரகாசத்தை அவள் கண்டிருக்கிறாள்.

“வேற பாஷையானா என்ன, இந்திய பாஷைதானே! இவளை அந்நியம்னு நினைச்சாக் கூப்பிடுவானா? இந்த இடத்திலே நமக்கு இருக்கிற உரிமை எல்லா இந்திய ஊரிலேயும் உண்டு என்கிறதுக்கு நிரூபணம் இது! அங்கே போய் படிக்கட்டும். தடுக்காதே!’

சுபத்திரா பதில் சொல்லவில்லை. மாமனாருக்குச் சமதையாக எதிரில் நின்று பேசி அவளுக்குப் பழக்கமில்லை. ஆனால் எத்தனை தூரம் பெண்ணை அனுப்புவது என்று எழும்பிய கவலையை அடக்க முடியவில்லை. அடுத்த நான்கு நாட்களிலேயே தந்தையும் மகளும் பெட்டியும் படுக்கையுமாகக் கிளம்பிய போது கண் காணாத தேசத்துக்கு அனுப்புவதுபோல கலக்கம் ஏற்பட்டது.

“நான் சமாளிச்சுக்குவேன்மா, கவலைப்படாதே. படிப்பு ஒண்ணுதான் முக்கியம் எனக்கு வேற எதுவும் இல்லே” என்று அநுபமா தைரியம் சொன்னபோது துருத்திக் கொண்டு வெடித்த அழுகையைச் சிரமப்பட்டு அடக்க வேண்டியிருந்தது. அவர்கள் போய்ச் சேர்ந்த விவரத்துக்குக் கடிதம் வரும் என்று எதிர்பார்த்து சுபத்திரா காத்திருந்தாள். கடிதம் வரவில்லை அவர்களே வந்து விட்டார்கள். பெரிய சோகத்தை அனுபவித்து அடிபட்டவள்போல் வந்து நிற்கும் பெண்ணைக் கண்டு சுபத்திராவுக்குத் ‘திக்’ என்றது.

“என்ன அது, திரும்பி வந்துட்டே?” என்றதும் அநுபமா சுபத்திராவின் தோளைப் பற்றிக் குலுங்கக் குலுங்க அழ ஆரம்பித் தாள். கேள்விக் குறியுடன் அங்கு வந்து நின்ற சங்கர்தாஸைப் பார்த்து மோகன்தாஸ் சோர்வுடன் சொன்னார்

“அந்த இடம் நமக்குச் சரிப்படாது ஐந்து லட்சம் கேட்கிறார்கள்” என்றார் ஏதோ பிள்ளை வீட்டாரைப் பற்றி பேசுவதுபோல,

“என்னது?” என்றார் சங்கர்தாஸ் நடுங்கும் குரலில் “லஞ்சமா?”

“லஞ்சம்னு அதுக்குப் பெயரில்லே. காபிடேஷன் ஃபீஸாம் – எல்லா காலேஜிலேயும் வாங்கற வழக்கம் என்கிறார்கள். ஆனா வெளியிலே இருந்து போகிற மாணவர்கள்கிட்டேந்துதான் அவர்கள் அதிகமா வாங்குவது.”

“என்ன அநியாயம் இது!” என்று கிழவர் ஆத்திரப்பட்டார். ”வித்யைக்கு லஞ்சமா? மற்ற மாநிலத்திலேந்து போனா என்ன, எல்லாரும் இந்தியர்கள்தானே?”

சுபத்திராவுக்கு அலுத்தது. இவரது பேச்சு இன்று காரணம் புரியாமல் ஆத்திரம் ஏற்படுத்திற்று.

“நான் அந்தக் கேள்வியைக் கேட்டதற்கு எங்களுக்குச் சட்ட சாஸனம் போதிக்க வந்தீர்களா என்று கேட்டார்கள்” என்றார் மோகன்தாஸ், ”அந்த நிமிஷம் தீர்மானிச்சேன் இதைச் சும்மா விடக்கூடாதுன்னு தீர்மானிச்சேன். கோர்ட்டுக்குப் போகப் போகிறேன். சட்டத்தையே நியாயம் கேட்கப் போகிறேன்.”

சுபத்திரா அதிர்ந்தாள். “ஐயையோ, கோர்ட்டுக்கா? எதுக்கு?” என்று பதைத்தாள்.

“நியாயம் கேட்கத்தான்” என்றார் மோகன்தாஸ் மறுபடி, “எப்ப ஸீட் கொடுக்கிறதாத் தீர்மானிச்சாங்களோ, அப்ப கட்டணத்திலே வேறுபாடு காண்பிக்கக்கூடாது. அந்த ஊர்க்காரங்க கட்டற பீஸ் தான் வெளிப்பேருக்கும் இருக்கணும். கோர்ட்டு அதைச் சொன்னாத்தான் அவங்களுக்குப் புத்தி வரும். அவங்க செய்யறது அநியாயம், பாரபட்சம் மட்டுமில்லே, கொள்ளை, சுரண்டல்!”

பெரியவர் அங்கு இல்லாவிட்டால் மோகன்தாஸ் பல கெட்ட வார்த்தைகள் சொல்லி இருப்பார் என்று சுபத்திரா நினைத்தாள்,

“அவங்க எப்படியோ போறாங்க!” என்றாள் சுபத்திரா கெஞ்சுவதுபோல. “நம்மால அந்தத் தொகையைக் கட்ட முடியா துன்னா விட்டுருவோம், நம்ம பெண்ணுக்கு டாக்டருக்குப் படிக்க அதிர்ஷ்டமில்லேன்னு. கோர்ட்டுக்கும் கச்சேரிக்கும் எதுக்குங்க வம்பு?”

“வம்பு இல்லே இது. விவகாரம். எல்லாரும் வாயை மூடிக்கிட்டு இருக்கிறதாலேதானே திமிர் பிடிச்சுக் கேட்கிறாங்க? பண வசதியுள்ள ஒரே வர்க்கம் தான் இந்தப் படிப்புப் படிக்க முடியும்னு இல்லே ஆயிரும்?”

மோகன்தாஸின் கோபத்தையும் ஏமாற்றத்தையும் சமாதானப் படுத்த முடியாது என்று தோன்றிற்று சுபத்திராவுக்கு.

“அப்ப இது ஜனநாயகம் இல்லே” அநுபமா முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். சங்கர்தாஸ் அசாதாரண வேகத்துடன் அவளருகில் சென்று அவள் தோளைப் பற்றினார்.

“சீச்சீ இத்தனை சீக்கிரம் இப்படிக் கலங்கலாமா குழந்தை?” என்றார் கண்டிப்புடன்.

“இது ஜனநாயகம்தான். எப்படி இல்லேன்னு ஒரே வார்த்தை யிலே சொல்லிவிட்டே! நியாயம் கேட்கக் கோர்ட்டுக்குப் போகிற உரிமை இருக்கே உனக்கு! போ, கலங்காதே, நியாயம் கிடைக்கும். இந்தச் சுதந்தரம் உனக்கு எப்படிக் கிடைச்சதுன்னு நினைச்சே?”

சித்தம் போக்கு சிவம் போக்கு என்கிற ரீதியில் ஆளுக்கு ஆள் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவது சுபத்திராவின் கலவரத்தை அதிகப்படுத்தியது. இந்தக் கிழவருக்கு இப்பவும் சமயம் வாய்த்தால் கொடியேந்தித் தெருவில் இறங்கத் தயக்கம் இருக்காது என்று தோன்றிற்று. கோர்ட்டு கேசு என்றால் எத்தனை செலவாகும், எத்தனை அலைச்சல் இருக்கும் என்கிற யோசனையெல்லாம் யாருக்கும் தோன்றவே இல்லை.

இரண்டு வருஷமாகிவிட்டது, உச்சநீதி மன்றத்துக்கே தாக்கல் கொடுத்து, ஒவ்வொரு முறையும் டில்லிக்குச் சென்று ஆஜராக வேண்டும். ஊரே பரிகாசட ‘கப் பேசுகிறது. ‘லஞ்சம் கேட்பதும்

கொடுப்பதும் மாமூலான விஷயமாகி விட்டது. இதற்கெல்லாம் கோர்ட்டுக்கு நியாயம் கேட்கப் போவானாய்யா,’ என்கிறது மறைமுகமாக. ஒரு நாள் இதைப்பற்றி மாமனார் காதுபட அவள் சொன்னபோது, “அதான் சொன்னேனே, ஜனங்கள் சுரணையற்றுப் போய்விட்டார்கள்” என்றார் சங்கர்தாஸ், ‘உப்பு சத்தியாக்கிரகத்தின் மகத்துவம் இவர்களுக்குப் புரியாது. அது ஓர் அடையாளம்னு புரியாது.”

அவளுக்கும் புரியவில்லை . இந்தக் கேசு எப்படியாவது முடிவடைந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு. எப்படியும் தோற்றுத்தான் போகப்போகிறது. அது சீக்கிரம் தீர்ப்பானால் அலைச்சலாவது நிற்கும். இன்று காலை பஸ் பிடித்து மோகன்தாஸும் அநுபமாவும் டில்லிக்குப் போயிருக்கிறார்கள். இன்றைக்கு அனேகமாகத் தீர்ப்பாகிவிடும் என்று சுரத்தில்லாமல்தான் போனார் கள். அவர்கள் வீடு திரும்புவதற்கு இரவு எட்டு மணியாகும். இன்றைக்கு பாவம் எதுவும் சாப்பிட வேண்டியிருக்காது என்கிற பச்சாதாப உணர்வுடன் சுபத்திரா சமைத்து மூடி வைத்தாள். மாட்டுக் கொட்டிலுக்குச் சென்று மாட்டுக்குப் புண்ணாக்குக் கலவையை வைத்தபடி, “கஷ்டவேளைன்னு வரும்போது புத்தி கெட்டுத்தான் போகும்” என்றாள் அதனிடம். “பெரியவர்னு வீட்டிலே ஒருத்தர் இருக்காரே, அவராவது புத்தி சொல்லக்கூடாதா? அவரே திசை திருப்பி விடறார்!” என்றாள் ரகசியக் குரலில். திமிர் பிடித்த மாடு முகத்தைத் திருப்பிக் கொண்டது.

வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் ஓசை கேட்டது. சுபத்திரா சோர்வுடன் எழுந்தாள். அநுபமாவுடைய அழுகையைச் சமாதானப் படுத்தனும் என்று முணுமுணுத்தபடி வாசல் முற்றத்துக்கு வந்தாள். இருட்டில் அவர்களுடைய முக பாவம் தெரியவில்லை. கையில் வைத்திருந்த பையைக் கீழே வைத்துவிட்டு அநுபமா விரைந்து வந்து சுபத்திராவை அணைத்துக்கொண்டாள் இதை எதிர்பார்த்திருந்த துயரத்துடன் சமாதானப்படுத்த சுபத்திரா யத்தனிக்கையில் அநுபமா,

“ஜெயிச்சுட்டம்மா” என்றாள். சுபத்திராவுக்கு நம்ப முடியவில்லை .

“நிஜம்மாவா?”

மோகன்தாஸின் பிரகாசமான முகம் நிஜம் என்றது. அதற்குள் உள்ளேயிருந்து வந்த சங்கர்தாஸின் கால்களைத் தொட்டு வணங்கி, “உங்கள் ஆசியால் ஜெயித்துவிட்டோம்” என்றார்.

“நான் என்ன சொன்னேன் குழந்தை?” என்றார் சங்கர்தாஸ் பூரிப்புடன். “என்ன தீர்ப்பு சொல்லு?”

“அப்படிப்பட்ட கட்டணம் வாங்குவது இனிமே சட்டத்துக்கு விரோதம்னு தீர்ப்பாய்விட்டது. ஆனா அநுபமா அங்கே போய் படிக்க முடியாது. காலேஜைக் கோர்ட்டுக்கு இழுத்த பெண்ணுக்கு அங்கு இடமில்லையாம்!”

“ஐய்யே, பின்னே இதை எப்படி ஜெயம்னு சொல்றே?” என்றாள் சுபத்திரா ஏமாற்றத்துடன்.

“ஜெயம்தான்” என்றாள் அநுபமா தீர்க்கமாக. “நான் படிக்க முடியல்லேன்னா என்ன? மத்தவங்க படிக்கலாம்.”

“யாருக்காக சண்டை போட்டே கோர்ட்டு வரைக்கும் போய்?” அநுபமா சிரித்தாள். “தாத்தா யாருக்காக உப்பு சத்யாகிரகத்திலே கலந்துகிட்டார்?”

மீண்டும் உப்பு சத்யாகிரகம். மீண்டும் பழைய கதை. ஆனால் அந்த மூவர் முகத்திலும் கண்களிலும் தெரிந்த பிரகாசத்தையும் சந்தோஷத்தையும் பார்க்கும்போது, சுபத்திராவுக்கும் சிரிப்பு வந்தது. இந்தப் பைத்தியக்காரக் கும்பலில் தான் மட்டும் வேற்று ஆளாக இருக்க முடியாது என்ற நினைப்பில்.

- அமுதசுரபி தீபாவளி மலர் 1992 

தொடர்புடைய சிறுகதைகள்
அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. சேஷப்பா ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்துப் பார்த்தான். கோத்துக் கோத்து சங்கிலியாய்ப் படர்ந்த எழுத்துக்களில் எல்லா சமாசாரமும் இருந்தது, அத்தைப் பெண்ணின் வரப்போகும் சீமந்தத்திலிருந்து மாடு கன்று போட்டது வரை. அவன் கேட்டிருந்த பணத்தைப் பற்றித்தான் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: வாஸந்தி. பூஜாரி விட்டல் ராவின் வீடு தெருக்கோடியில் இருந்தது. ஐந்து மணிக்கு அவரைப் பிடிக்கணும் என்று கனகம்மா தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.இப்பொழுது மணி நான்கு தான். விட்டல்ராவ் சரியாக நாலரை மணிக்குக் கோவிலுக்குக் கிளம்பிவிடுவார். கிளம்பும் சமயத்தில் போய் நின்றால் ஏகமாய் ...
மேலும் கதையை படிக்க...
தீர்ப்பு
'இன்னும் எவ்வளவு நேரம்?’ - அந்தக் கேள்வி மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் எழுந்தது. வேறு எந்த யோசனையிலும் மூளை லயிக்கவில்லை. பித்துப்பிடித்ததுபோல ஒரே கேள்வியின் விடைக்காகக் காத்திருந்தது. அங்கே அந்தச் சிவப்புக் கட்டட வாசலில் நிற்கும் ஆட்களில் ஒருவன் வந்து சொன்னால் ...
மேலும் கதையை படிக்க...
கங்காவும் சில ரோஜா பதியன்களும்
மொட்டை மாடி கைப்பிடிச் சுவரில் அந்த போஸ்டர் இருந்தது, சமீபத்தில் திரைக்கு வந்த 'கோச்சடையான்’ போஸ்டர். ரஜினி, அதில் இளைஞராகத் தெரிந்தார். கங்காவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 'எப்படி வயசு குறைஞ்சுக்கிட்டு வருது?!’ கங்காவுக்கு, ரஜினிகாந்தைக் கண்டால் கொள்ளை ஆசை. அந்தத் திமிர் பிடித்த ...
மேலும் கதையை படிக்க...
குத்திட்ட பார்வையுடன் சரஸ்வதி உட்கார்ந்திருந்தாள். அறையின் கம்பிக் கதவுக்கு அப்பால் டாக்டர் நின்றிருந்தார். அவருடன் வெள்ளை ரவிக்கையும் வெள்ளைப் புடவையுமாக ஓர் அம்மாள் நின்றிருந்தாள். அவர்கள் பார்வையிலிருந்து தப்பிக்க நினைத்தவள் போல் சரஸ்வதி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அறையில் உட்கார்ந் திருந்த மற்ற ...
மேலும் கதையை படிக்க...
நிழல் தரும் தருவே…
சேதி வந்தது
தீர்ப்பு
கங்காவும் சில ரோஜா பதியன்களும்
மௌனத்தின் குரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)