மஞ்சள் வெயில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 9,631 
 

கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது வெளுத்திருப்பது போல தோன்றியது ஜெயந்திக்கு. கண்ணுக்குக் கீழே கருவளையம் இப்போது இன்னும் தெளிவாகத் தெரிந்தது. அம்மா பார்த்தால், சோகை பிடிச்சுப் போயி கிடக்கு உடம்பு, பாக்கா திண்ணாதன்னு சொன்னா கேக்கிறியா, நல்லது சொன்னா கேட்டுக்கிட யாரு இருக்கா இந்த வீட்ல? எப்படியோ போ! என்பாள். அம்மாவிற்கு அவள் அம்மா சொன்னது, தன் குழந்தைகளுக்கும் சொல்கிறாள். எதுனால செய்யக்கூடாது? ஏன் செய்யணும்னு? கேட்டா பெரியவங்க சொல்லுவாங்க! அவ்வளவு தான் தெரியும் அம்மாவிற்கு. நல்லவேளை அம்மா, மாமியாராய் இல்லை என்று கலைந்திருந்த முன்முடியைத் திருத்திக் கொண்டு முன்பக்க வாசலுக்கு வந்தாள். தண்ணீர் தொட்டி அருகே இருந்த வாளியை எடுத்து, அரைவாசி நிரப்பிக் கொண்டு, தொட்டியின் ஓரத்தில் சாத்தி வைத்திருந்த தென்னமாரையும், நிலையின் உள்கூட்டில் வைத்திருந்த கோலப்பொடி டப்பாவையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.

முழுதாய் விடிந்திருக்கவில்லை. தெருவிளக்கின் வெளிச்சத்தோடு கிடந்த குப்பைகளை பெருக்கினாள். ஓரத்தில் குப்பையை குவித்து, முறத்தால் அள்ளி, கோமதி வீட்டு மாட்டுக் கொட்டாயை ஒட்டியிருந்த சாக்கடையில் தட்டி, அங்கிருந்தே நல்ல பசுஞ்சாணியை முறத்தில் அள்ளிக்கொண்டாள். இதமான சூட்டோடு விளுவிளுவென்று இருந்தது சினைப்பசு போட்ட சாணம். வாளியில் இருந்த தண்ணியில் கரைத்தவள், ரொம்ப கொழகொழவென்று இருப்பதைக் கண்டு தண்ணித்தொட்டியில் இருந்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொண்டாள். புடவையை ஒருபக்கமாய் சொருகிக் கொண்டு, கரைத்த சாணித்தண்ணீரை பரவலாக தெளித்தாள். தெருவிளக்கின் வெளிச்சத்தில், பச்சை மினுக்குவது போல இருந்தது. அப்படியே வாளியை வைத்து விட்டு, முன் வாசல் பட்டியக்கல்லில் நீர் தெளித்து கழுவி விட்டாள்.

வாசலில் தெளித்த சாணத்தண்ணீர் ஒணர ஒரு அஞ்சு நிமிஷம் பிடிக்கும், அதற்குள் பூசணிப்பூவு பறிச்சிட்டு வந்துடலாம் என்று நினைத்தவள். மாட்டாஸ்பத்திரி வரைக்கும் போகணுமா என்று யோசித்தாள், பாட்டு டீச்சர் வீட்டு வாசல்ல கிடந்த பூவரசம்பூவை எடுத்துக் கொண்டாள். சாணிப்பிள்ளையாரில் எந்தப்பூவும் அழகுதான் என்று தோன்றியது ஜெயந்திக்கு.

உலர்ந்திருந்த வாசலில் சாணியின் பச்சை அழகான கண்ணாடி வளையலில் உடைந்த முனையில் மாதிரி அழுத்தமாய் இருந்தது வர்ணச்சேர்க்கை. கோலப்பொடி டப்பாவை எடுத்துக் கொண்டு, என்ன கோலம் போடுவது? என்று யோசித்தாள், யோசித்து போட்டால் எதுவும் வெளங்காது, யோசித்து செய்யிற காரியம் போல. இப்படித்தான் பொங்கலன்று யோசித்துப் போட்ட பதினைந்து புள்ளி பொங்கப்பானை கோலம் சரியாக வராமல், கடைசியில் கலர்ப் பொடிகளை தூவி குறைகளை மறைக்க வேண்டியதாயிற்று. அதுவும் கலர் பொடிகளை கோலத்தில் உபயோகிக்க அவளுக்கு அறவே பிடிக்காது. பச்சைத்தரையில் வெளீரென்று மிதக்கும் வெள்ளிக்கம்பிகள் உருகி ஓடுவது போலவும், இவள் உடலைச் சுற்றி பிண்ணுவது போலவும் இருக்காது, வண்ணக்கோலங்கள். ஒரு அசட்டுத்தனம் வந்துவிடும் கோலத்திற்கு. யோசிக்காமல் மனசுக்கு தோன்றுவதை அப்பைக்கப்போ செய்வது தான் சிறப்பாய் அமைகிறது எப்போதும்.

அழுத்தமான கோடுகளில் வெள்ளைத் தாமரையில் சம்பந்தமில்லாத பிண்ணிக் கொண்டிருக்கும் இலைகளும், வளைவுகளும் புதிய அழகைக் கொடுத்தது போல இருந்தது. புள்ளிகளோ, நியமங்களோ எதுவும் இல்லை, அது தானாய் முளைத்து படர்ந்தது போல கிடந்தது பச்சைத்தரையில். நிமிர்ந்து மேலிருந்து பார்த்தவள், ம்..ம்.. நல்லாயிருக்கு என்று தனக்குத் தானே சொல்லிவிட்டு வீட்டினுள்ளே நுழைந்தாள். மாமா முன்னறையில் மெலிதான குறட்டையில், விசில் சத்தமும் கலந்தது போல மூச்சு விட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார். காலை மடக்கி சுருங்கியது போல படுத்திருப்பதைப் பார்த்தவுடன், பேனின் வேகத்தைக் குறைத்தாள். இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்து எல்லா வேலையையும் முடிச்சுட்டு, எங்கேயோ கிளம்புவது போல தயாராகி, பட்டாசாலில் வந்து ஈஸிசேரில் படுத்துக் கொள்வார்.

வாசலில் பால்காரர் வந்துவிட்டது தெரிந்தது. அவர் சைக்கிள் சத்தமும், அதில் கட்டியிருக்கு பால் குவளைகள் ஏற்படுத்தும் சத்தமும் பால்காரர் சந்து முனையில் திரும்பும்போதே சொல்லிவிடும். தெருவில் இருந்து இவர்கள் வீடு இருக்கும் சந்தில் நுழைய ஒரு படி ஏற வேண்டும். அந்த நேரத்தில் அவளுக்கு அடுப்படியில் இருந்து பாத்திரம் எடுத்து வாசலுக்கு வர சரியாய் இருக்கும். அத்தை இருக்கும் போது, அத்தை தான் பால் வாங்குவது, காய்கறி வாங்குவது எல்லாம். அத்தை இறந்த பிறகு, ஜெயந்திக்கு பெரிய மனுஷித்தனம் வந்துவிட்டது போலத் தோன்றும். மாமாவும் ஜெயந்தியிடம் கேட்டு தான் எந்த காரியமும் செய்வார். அவருக்கு டீப்போடணும், டீயைக் கொதிக்க விடக்கூடாது அவருக்கு. டம்ப்ளரில் டீத்தூளையைக் கொட்டி தேவையான சக்கரை போட்டு, காய்ச்சுன பால ஊத்திடணும். லேசா ஒரு ஆத்து… அது போதும். டீத்தூள் பாலில் கலந்தும் கலக்காமலும் இருப்பது போல இருந்தா தான் பிடிக்கும்.

மாமாவுக்கு ஜெயந்தி மேல அத்தனை பிரியம், அக்கறை. அத்தையும் அப்படித்தான், இவளை மகளைப் போல தான் பார்த்துக் கொண்டாள். அத்தை இருக்கும் போது வேலைக்கு ஒருத்தி இருந்தாள். அவள் வாசல் பெருக்கி, பாத்திரம் கழுவி, துணி துவைத்து, வீட்டைப் பெருக்கி மற்ற மேல் வேலைகள் எல்லாம் செய்து விடுவாள். அத்தை போன பிறகு அவளை வேலையை விட்டு நிக்கச் சொல்லிவிட்டாள் ஜெயந்தி. வேலை அதிமில்லை, எதுக்காக ஆளு! நானே பாத்துக்குறேன் மாமா! என்றபோது வேணாம்மா அவ பாட்டுக்கு வந்து மேல் வேலைய பாத்துக்கட்டும், நீ வேணா சமையல் மட்டும் பண்ணிடு! என்று சொல்லிப்பார்த்தார். ஜெயந்தி கேட்பதாய் இல்லை. இல்லை மாமா! நானே பார்த்துக்குறேன் என்று பிடிவாதமாய் மறுத்துவிட்டாள்.

ஜெயந்தியின் மாமாவுக்கு சும்மா இருக்க முடியாது. அதிகாலை எழுந்தவுடன், கழுவப்போட்டிருக்குற பாத்திரத்த எல்லாம் எடுத்துப் போட்டு, சத்தமில்லாம வெளக்கி வச்சுருவாரு. சிலசமயம் இவ துணியவும் சேர்த்து துவைச்சுப் போட்டுருவாரு. ஒரு வேளை போட்டு, இன்னொரு நாளைக்கும் போட்டுக்கலாம்னு, கொடியிலே போட்டிருக்குற புடவை, உள்பாவாடைன்னு ஒண்ணுவிடாம துவைச்சுப்போட்டிருவார். இவளுக்கு முதலில் சங்கடமாக இருந்தது அப்புறம் அதுவே பழகிப்போச்சு. எவ்வளவு சொன்னாலும் அவரால கேட்கமுடியாது என்று தோன்றவே சொல்வதை விட்டுவிட்டாள் ஜெயந்தி. இன்னைக்கு என்ன ஆறு மணியாச்சு, இன்னும் எழுந்திரிக்கக் காணோமே என்று யோசித்துக் கொண்டே மாமா, மாமா என்று உசுப்ப முற்பட்டாள்.

எச்சில் வழிந்து தலைகாணியை நணைத்திருக்க, அயர்ந்து தூங்கியிருக்கிறார். உசுப்ப கஷ்டமாக இருந்தது, என்னைக்கும் இப்படி தூங்குறவர் இல்லை என்று நினைத்தவள். ஆசுபத்திரிக்குப் போகணுமே என்று நினைத்துக் கொண்டு மேலும் அசக்க, என்னம்மா! என்று பதறிய படி எழுந்தார். நல்லா தூங்கிட்டேம்ல! உடம்பெல்லாம் ஒரே அலுப்பு. கொஞ்சமா ராமகிருஷ்ணன் கொடுத்த மிலிடெரி ரம்ம சாப்பிட்டு அசந்து தூங்கிட்டேன் போல! ரவைக்கு சுத்தமா தூக்கமில்ல…தாயீ! என்று எழுந்து கொல்லைப்பக்கம் போனார். அவருக்கு சர்க்கரை இருப்பது தெரியும், ஆனாலும் இது போல எப்போதாவது ஒரு நாள், குடித்துவிடுவார். அரவமில்லாம நடுராத்திரில குடிச்சிருப்பாரு போல, ஜெயந்தியின் மேல பயம் என்றில்லை. அவ வேணாம்னு சொன்னா அப்புறம் மறுக்க முடியாது. அதனால இது போல சொல்லாம கொள்ளாம ரெண்டு அவுன்ஸ் உள்ள தள்ளிடறது அவரு வழக்கம். அதுவும் ஜெயந்திய நினைச்சாலே அவருக்கு மனசுக்கு கஷ்டம் வந்துடும், இன்னும் குடிக்க சொல்லும்.

எல்லா வேலையும் முடிச்சிட்டு, அடுப்படி பக்கம் எட்டிப் பார்த்து விட்டு, ஜெயந்தி! டீப்போட்டு வைக்கிறியாம்மா? சூரிய நமஸ்காரம் பண்ணிட்டு வந்துடறேன் என்று பட்டாசாலைத்தாண்டி, முன் வாசல் வந்தார், கிழக்கப்பார்த்த வீடு. சூரிய நமஸ்காரம்னா என்ன பண்ணனும்னு தெரியாது, சும்மா சுரியன ஒரு தடவப் பாத்துட்டு, ஏதோ தெரிந்த தெய்வங்களின் பெயரையெல்லாம் சொல்லி கும்பிட்டு வருவார். வந்தவுடன், முன்னறைக்குப் போயி, துணிய மாத்திக்கிட்டு, நல்லா மாப்பிள்ளை மாதிரி வந்து ஈஸிச்சேரில் படுத்துக் கொண்டார். என்ன நினைத்தாரோ தீடீரென்று எழுந்து, ஜெயந்தியும், சரவணனும் சேந்தாப்புல இருக்கிற போட்டோ லேசாய் சாய்ந்திருப்பதாய் நினைத்துக் கொண்டு, வயர் கூடைய இழுத்துப் போட்டு, சரி செய்தார். அப்படியே போட்டோவில் இருக்கும் தூசியை கையில் இருந்த துண்டில் துடைத்தார். ஜெயந்தி, பளீரென்று இருப்பது போலத் தெரிய, அதையே பார்த்துக் கொண்டு நின்றார்.

டீ கொண்டு வந்த ஜெயந்தியிடம், அங்கனயே வைம்மா, நான் வந்து குடிக்கிறேன்! ஆறிப்போயிடும் மாமா குடிச்சிட்டு மத்த வேலையப்பாருங்க! ஆசுபத்திரியிலே நமக்கு பதினொரு மணிக்கு நேரம் கொடுத்திருக்காங்க! இப்போ போனாத்தான் சரியா இருக்கும் மாமா என்றாள். மறுபேச்சில்லாமல் இறங்கி, அவள் கையில் இருந்த டீயை வாங்கிக் கொண்டார். குடித்தவர், வெந்நீர் போட்டிருக்கையாம்மா என்றவர், நான் வேணுன்னா அடுப்புல ஏத்திட்டு வரவா என்று அவள் முகத்தைப் பார்த்தார். போங்க மாமா, வேலைய பார்த்துட்டு! நான் பாத்துக்குறேன்! என்றவள் குடித்து முடித்திருந்த டம்ப்ளரை வாங்கிக் கொண்டு அடுக்களைக்கு போனாள். இட்லிக் கொப்பரையில் கைப்பிடியில் சிறிது தண்ணீர் தெளித்து மூடியை திறந்தாள். லோட்டாவில் இருந்த தண்ணீரை நுனிவிரலில் தொட்டு, இட்லி வெந்து விட்டதா என்று பார்த்தவள், திருப்தியாய் இருக்க எடுத்து குண்டாச்சட்டியில் போட்டு ஈரத்துணியை மேலே மூடினாள்.

மாமாவுக்கு உளுத்தம்பருப்புச் சட்னி அல்லது கத்திரிக்கா சட்னிதான் பிடிக்கும், வெறும் தேங்காப் பொட்டுக்கடலை போட்டு செய்யிற சட்னியே பிடிக்காது. தொலி உளுந்தம்பருப்பு, தக்காளி, மிளகாய் வத்தல், பெருங்காயம், கொஞ்சம் புளி, நாலஞ்சு இனுக்கு கறிவேப்பிலை என்று போட்டு, லேசா நல்லெண்ணெய் விட்டு வதக்கி, ஆறியவுடன், தேங்காய்ச்சில்ல எடுத்து அம்மில உப்ப வச்சு நகட்ட தயாரான சட்னியைத் தாளித்து இறக்கினாள். மணம் தூக்கலாய் இருந்தது. மாமா நல்லா சாப்பிடுவார் என்று நினைத்துக் கொண்டாள். அடுப்படியை ஒதுங்க வைத்துவிட்டு, துணியை எடுத்துக் கொண்டு குளிக்கப்போனாள். அரைமணியில் ரெடியானவள் மாமாவை சாப்பிட அழைத்தாள். வந்தவர் ஜெயந்திம்மா, எவ்வளவு காசு எடுத்துக்கணும் இன்னைக்கு. ஏதாவது டெஸ்ட் பண்ணவேண்டியிருக்குமா!

இல்லை மாமா, டெஸ்ட் எல்லாம் அன்னைக்கே பண்ணியாச்சு, அவரும் போன மாசம் சவுதில இருந்து வந்தப்போ, அவரு செய்ய வேண்டியத எல்லாம் செய்துட்டு போயிட்டாரு. என்னைய இன்னைக்குத் தான் வரச்சொன்னாங்க மாமா! நான் ஒரு நாளு அட்மிட் ஆகணும்னு நினைக்கிறேன் அடுத்த வாரத்துல! அப்போ என்னோட அம்மாவ வரச்சொல்லிடுதேன் என்றாள். ஏந்தாயீ நானே பாத்துக்கிடுதேன், ஒங்க அப்பாவுக்கு சொகமில்லேன்னு தான கூடவே இருக்க வேண்டியதாயிருக்கு! நான் பாத்துக்கிடுதேன் கண்ணுக்கு கண்ணா! என்று சிரித்தார். இப்படி ஒரு மாமனார் அமைய அவள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று தோன்றியது. அவரு போனே பண்ணலை இன்னும், இந்த நேரத்துக்கு ஆசுபத்திரிக்கு போறோம்னு தெரியும். பேசக்கூடிய நேரம் தான் ஆனாலும் போன் வரலை அவரிடமிருந்து. கடந்தமுறையும் ஐவிஎப் பண்ணுற நாள் கூட போன் பண்ணலை. முதல் தடவை பண்ணும் போது மட்டும் போன் வந்தது, இது மூன்றாவது தடவை அலுத்துவிட்டது போல அவருக்கு, வருஷத்துக்கு ஒரு முறை இது போல ஒரு சடங்கு. பரிந்துரைக்கப்பட்ட உறவு.

இந்த மருத்துவ விவகாரங்கள் அவருக்கு அவ்வளவா புரியலைன்னு தெரியுது ஜெயந்திக்கு. ஆனாலும், அசராத அன்பும், உதவியும் எல்லாவிதத்திலும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவன் ஊரிலேயே இல்லியே! எப்படி குழந்தை சாத்தியம் என்று கேட்பவருக்கு எப்படி புரியவைப்பது. இவளுக்கு மாத்திரை சாப்பிட்டா தான் பீரியட்ஸ் வருவதை. அவரின் விந்தணுக்களை சோதனைக்குழாயில சேமித்து உறைய வைத்திருக்கிறார்கள். இவளுடைய கருமுட்டை வளர்ந்து உடைவதற்கு அஞ்சு ஆறு நாள் ஊசி போடுவார்கள் என்று. கருமுட்டையின் வளர்ச்சியை பொறுத்து மருந்தோட டோஸ் கூடும். அதன் பின் இவளுக்குள் செலுத்தப்படும் விந்தணுவின் ஒரு துளி தான் இவரை தாத்தா என்றோ பெயர் சொல்லியோ அழைக்கப்போகிறது என்பதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தவளை, ஜெயந்தி என்று அழைத்த குரலுக்கு பின்னால் போனாள், டாக்டரை சந்தித்தாள்.

உங்க வீட்டுக்காரர் வந்திருக்காரா? என்ற டாக்டரிடம் இல்லை டாக்டர்! அவரு சவுதில இருக்குறது உங்களுக்கு தெரியுமே டாக்டர்! என்றாள். இல்லை லீவ எக்ஸ்டெண்ட் பண்ணியிருக்கலாம் இந்தமுறையாவது என்ற டாக்டரின் மேல் அவளுக்கு கோபம்கோபமாய் வந்தது.

அங்கு இருந்த ஒரு திரையில் டாக்டர் மூன்று முட்டைகளை காட்டினார், இந்த மூணு தான், 20 மில்லிமீட்டர் வளர்ந்திருக்கு, இன்னும் ரெண்டு நாளு தொடர்ந்து ஊசி போட்டா, சிறுசுசிறுசா இருக்கிறதும் வளரலாம். பார்க்கலாம், இந்த முறையும் முடியலேன்னா, டோனர் எக் போயிடலாம், உங்க கருப்பை நல்லா இருக்கிறதால அதுக்கு சாத்தியம் இருக்கு. உங்க வீட்டுக்காரரு இந்த நேரத்துல கூட இருந்தா நல்லது ஜெயந்தி, மனசும் சந்தோஷமா, நம்பிக்கையா, தைரியமா இருக்க வேண்டும் இப்போ! என்றவளிடம் என்ன பண்றது டாக்டர், அவரோட வேலை அப்படி! அங்க போயி சம்பாதிச்சாத்தான் இதுக்குக் கூட செலவு செய்ய முடியும்! என்றவள், வரேன் டாக்டர் என்று கிளம்பினாள்.

வெளியே வந்து, ஆசுபத்திரிக்கு வந்திருந்த கர்ப்பஸ்திரிகளையும், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருந்த மாமாவை அழைக்க, வேகமாய் எழுந்து வந்தார். என்னம்மா சொன்னாங்க டாக்டர்… நாலு நாளைக்கு வரணும் மாமா… வந்து ஊசி போட்டுக்கணுமாம் என்றவள் அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். பஸ்ஸில் வீட்டிற்கு திரும்பும் போது, வெளியே வெறித்துக் கொண்டிருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயந்தியின் மாமா. என்ன நினைத்தாரோ, அவள் காது பக்கமாய் குனிந்து, ஜெயந்தி! கட்டாயம் குழந்தை வேணுமாடா? என்றார். ஒன்றுமே சொல்லாமல், அவர் கையை அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள்.

— ராகவன் (http://koodalkoothan.blogspot.com/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *