கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 6,443 
 

அவள் பெயர் மஞ்சரி. வயது இருபத்தைந்து.

மிகவும் தைரியசாலி. முகத்துக்கு நேரே எதையும் ஒளிவுமறைவு இல்லாமல் யாராக இருந்தாலும் பேசிவிடுவாள். சென்னையின் மாம்பலத்தில் ஒரு ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள். அவளுடைய அப்பாவுக்கு மஞ்சரிதான் ஒரே செல்லமகள்.

ஆனால் அவளுடைய அருமை அப்பா இன்று காலை மாரடைப்பில் இறந்துவிட்டதாக பத்து நிமிடங்கள் முன்புதான் மொபைலில் அம்மா சொன்னாள்.

மஞ்சரிக்கு மனசும் உடம்பும் படபடத்தது. உடனே அவள் காதலனும் அத்தை மகனுமாகிய விக்னேஷுக்கு விஷயத்தை சொன்னாள். அவன் அத்தையுடன் உடனே கிளம்பி அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு வருவதாகச் சொன்னான். அங்கிருந்தே மதுரைக்கு காரில் சென்று விடுவதாக முடிவு செய்தார்கள். மஞ்சரியை தயாராக இருக்கும்படி சொன்னான்.

அவனுக்காக காத்திருந்த நேரத்தில் அப்பாவின் நினைவில் மஞ்சரிக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

அப்பாதான் அவளுக்கு எல்லாமே. ஒரேமகளாகிய அவளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்து வளர்த்தார். மேன்மையான வாழ்க்கை நெறிகளை கற்றுத் தந்தார். நன்கு படிக்க வைத்தார். ஒரு பிரபல அயல்நாட்டு வங்கியில் இன்று மஞ்சரி நல்ல சம்பளத்தில் இருப்பதற்கு அப்பாதான் காரணம்.

பணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கிப் படிக்க அப்பாதான் அவளுக்கு கற்றுக் கொடுத்தார். சுஜாதாவையும், ராஜேஷ்குமாரையும், பட்டுக் கோட்டை பிரபாகரையும் அப்பாதான் அறிமுகம் செய்துவைத்தார்.
அவர்களின் கதையில் இருக்கும் தெளிவையும், வேகத்தையும், விறுவிறுப்பையும் புரியவைத்தார். ஜவஹர்லால் நேருவின் லெட்டர்ஸ் டு ஹிஸ் டாட்டர், டிஸ்கவரி ஆப் இண்டியா போன்றவற்றையும் படிக்கத் தூண்டினார். படிப்பு மட்டுமின்றி நிறைய தைரியத்தையும் ஊட்டி வளர்த்தார்.

அவருடைய அக்கா மகன் விக்னேஷின் காதல் வலையில் அவள் விழுந்தபோது, அப்பா குறுக்கிடவில்லை. உன் வாழ்க்கை, உன் விருப்பம், உன் முடிவு என்று சொல்லிவிட்டார். ஆனால் பாவம் அவளின் திருமணத்தை அப்பா நேரில் ஆசீர்வதிக்க மஞ்சரிக்கு கொடுத்து வைக்கவில்லை.

அப்பா ஒருகாலத்தில் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருந்தபோது, மஞ்சரியை படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டார். அம்மாவின் நகைகளை அடகு வைத்தார். ஒரேவீட்டை வீட்டை விற்றார். அப்போது மிகவும் வசதியுடன் இருந்த மஞ்சரியின் பெரியப்பா அவர்களுக்கு உதவவில்லை. செல்வந்தனாக இருந்த பெரியப்பாவின் ஒரேமகனும், சித்தப்பாவை கண்டுகொள்ளவில்லை. அப்பா அடிக்கடி இதை மஞ்சரியிடம் சொல்லி சொல்லி வருத்தப்படுவார். அண்ணன் என்னடா, தம்பி என்னடா என்று பாடிக் காண்பிப்பார். பெரியப்பா இறந்தபோது அப்பா போகவில்லை. அவ்வளவு கோபம்.

அத்தையும், விக்னேஷும் ஹாஸ்டலுக்கு வந்தவுடன் உடனே கிளம்பி அன்று மதியம் மூன்று மணிக்கே வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். வீட்டின் வாசலில் தீயை மூட்டி வைத்திருந்தனர். பாடை கட்டிக் கொண்டிருந்தனர்.

உள்ளே அப்பா தரையில் கிடத்தப் பட்டிருந்தார். மூக்கு, காதில் பஞ்சடைத்து, கால் கட்டைவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன.

உள்ளே நுழைந்ததும் அம்மா மஞ்சரியை கட்டிக்கொண்டு அழுதாள்.

அப்பாவுக்கு கடைசிக் கிரியைகள் செய்ய மூன்று ஐயர்கள் தயாராக காத்திருந்தனர். .

அதில் ஒரு சீனியர் ஐயர், அங்கு இருந்த மஞ்சரியின் பெரியப்பா பையனை சீக்கிரம் குளித்துவிட்டு எட்டுமுழ வேட்டியை பஞ்சகச்சம் வைத்துக் கட்டிக்கொண்டு வரச்சொன்னார்.

மஞ்சரி கொதித்துப்போனாள். .

“ஐயரே அவர் எதுக்கு இப்ப குளிச்சிட்டு வரணும்?”

“நன்னா இருக்கு நீ கேக்கறது….அவன்தான கர்த்தா. உன் அப்பாவுக்கு அவன்தான் காரியம் எல்லாம் செய்யணும்.”

“அப்பா காரியத்தை நான் செய்யறேன்….அவரோட ஒரே வாரிசு நான்தான்.”

“நீ அவரோட சொத்துக்கு வேணா வாரிசா இருக்கலாம் குழந்தே. ஆனா நீ ஒரு பெண்மணி. நாளைக்கே இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிண்டு வேற கோத்திரம் போக வேண்டியவ…அதனால நீ அப்பாவோட காரியங்களை பண்ணுவதற்கு தகுதியற்றவள். உன்னோட பெரியப்பா பையன்தான் தகுதியுள்ளவன்….அப்பாவின் கோத்ரம். அவன்தான் கர்த்தா.”

“ஐயரே எனக்கு கல்யாணம் ஆனப்புறம்தான என் கோத்ரம் மாறும். இப்ப நான் அப்பாவோட கோத்திரம்தானே! அதனால நான்தான் இன்னிக்கு அப்பாவுக்கு கர்த்தா.”

“நீ பொம்மனாட்டி குழந்த கண்ணு…உனக்கு இதெல்லாம் புரியாது.”

“எந்த சாஸ்திரத்துல ஆண்கள் மட்டும்தான் கர்த்தாவாக இருக்கணும்னு சொல்லியிருக்கு? எனக்கு இப்ப காண்பிங்கோ.”

அனைவரும் துக்கத்தை மறந்து மஞ்சரியை வேடிக்கை பார்த்தனர்.

விஷயம் விபரீதமாகப் போவதை உணர்ந்த அத்தை, “மஞ்சு, ப்ளீஸ் ஐயர் சொல்றத கேட்டு நடந்துக்கம்மா…அப்பாவோட ஆத்மா நல்லவிதமா சாந்தியடையணும்” என்று கெஞ்சும் பாவனையில் சொன்னாள்.

மஞ்சரியின் பிடிவாத குணம் தெரிந்த அம்மா பரிதாபமாக அவளைப் பார்த்தாள்.

“ஐயரே, தர்க்கம் வேண்டாம். ஐ யாம் வெரி சீரியஸ். நீங்க தயவுசெய்து மந்திரங்களைச் சொல்லுங்கோ, நான் அவைகளை ஸ்பஷ்டமா திருப்பிச் சொல்லுகிறேன். தட்சிணை விஷயத்துல உங்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை நான் தாராளமாகச் செய்யறேன்.”

“அதெல்லாம் சரிம்மா….சாஸ்திரம் என்ன சொல்றதோ நான் அதைச் சொன்னேன். அவ்வளவுதான். நீ இவ்வளவு தூரம் வற்புறுத்தும் போது, தட்சிணையும் தாராளமாக தரும்போது நேக்கு என்ன? கலிகாலம் முற்றி விட்டது. வா, குளிச்சுட்டு வந்து மனைல உட்காரு.”

மஞ்சரி குளித்துவிட்டு வந்து மனையில் அமர ஐயர்கள் மந்திரங்களை ஓதினர். அப்பாவுக்கு செய்ய வேண்டிய கிரியைகள் அனைத்தும் மஞ்சரி செய்தாள்.

இதைப் பார்த்து வெகுண்ட மஞ்சரியின் பெரியப்பா மகன் கோபத்தில் வெளியேறினான்.

அப்பாவை பாடையில் ஏற்றித் தூக்கிச் செல்லும்போது, மஞ்சரியும் தீப்பந்தம் ஏற்றி உடன் சென்றாள்.

மயானத்தில் பிடிவாதமாக அப்பாவுக்கு கொள்ளி வைத்தாள். ஈர மணலில் அப்பாவைப் பிடித்து வைத்து அவர் உருவத்துக்கு பால் ஊற்றினாள்.

எல்லாம் முடிந்ததும் வைகை ஆற்றில் குளித்துவிட்டு விக்னேஷ் உடன்வர ஈரப் புடவையுடன் ஒரு டாக்சியில் வீடு வந்தாள்.

உறவினர்கள் பலர் முகம் சுளித்தனர். அதில் விக்னேஷின் அம்மாவான மஞ்சரியின் அத்தையும் அடக்கம்.

தான் இவ்வளவு எடுத்துச் சொல்லியும், மஞ்சரி கேட்காதது அத்தைக்கு பெரிய அவமானமாகப் போயிற்று. ஒரு மாமியாருக்கு உண்டான குறைந்தபட்ச மரியாதையைக்கூட, அவ்வளவுபேர் முன்னிலையில் தனக்கு தராத மஞ்சரியின் பிடிவாத குணம் கசந்தது.

அவள் முடிவு செய்துவிட்டாள்….

மஞ்சரி திமிர் பிடித்தவள்; சபைக்குகூட அடங்காதவள்; பெரியவர்களை மதிக்கத் தெரியாதவள்; நாணம் வெட்கம் அறியாதவள் என்று.

எக்காரணத்தை முன்னிட்டும் இவளை என் மகன் மணந்து கொள்ளக்கூடாது. சொந்த தம்பியின் மரணத்தின் சோகம்கூட அவளை வாட்டவில்லை; ஆனால் மஞ்சரியின் மீது கோபம் கொப்புளித்தது.

அப்பாவின் காரியங்கள் முடிந்து மஞ்சரி தனியாக சென்னை திரும்பினாள்.

அன்று விக்னேஷ் போன் செய்து மஞ்சரியை மெரீனா பீச்சுக்கு அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வரச் சொன்னன். சென்றாள்.

விக்னேஷ் கோபத்துடன் இருந்தான்.

“நீ என் அம்மாவை மதிக்கல. அம்மா அவ்வளவு சொல்லியும் நீ கேட்கவில்லை. உன்மேல் அம்மா ரொம்பக் கோபமாய் இருக்கிறாள். நம் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னா நீ நேரில் வந்து அம்மா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கணும்”.

“உன் அம்மா எனக்கு அத்தை. என் அத்தை காலில் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள விழுவேன். ஆனால் மன்னிப்பு கேட்டு காலில் விழ மாட்டேன்…. என் அன்பு அப்பாவுக்கு நான் கடைசிக் காரியங்கள் செய்தேன். அவ்வளவுதான். இதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ப்ளீஸ் விக்கி, நம் கல்யாணத்தையும் இதையும் போட்டுக் குழப்பிக்காத. கல்யாணம் நம் காதலின் அத்தாட்சி.”

“என் அம்மாவுக்கு நான் ஒரேமகன். நம் கல்யாணம் அம்மாவின் ஆசீர்வாதத்துடன்தான் நடக்க வேண்டும். ஒண்ணு புரிஞ்சுக்க மஞ்சு…
உன் கல்யாணம் என்னோடதான் நடந்தாகணும். அதுக்கு நான் சொல்றத நீ கேட்டுத்தான் ஆகணும்.”

“வாட் டு யூ மீன்?”

“யெஸ்… ஐ மீன் இட். நாம ஏற்கனவே மூன்று தடவைகள் பிஸிகலி முறை தவறி நடந்து கொண்டிருக்கிறோம். நீ உன்னையே எனக்கு அத்தை மகன் என்கிற உரிமையில் முழுசா கொடுத்து விட்டாய். இனிமே நீ என்னை விட்டு விலகிச் செல்ல முடியாது. அதைப் புரிஞ்சு நடந்துக்க.”

மஞ்சரி பயங்கரமாக வாய்விட்டுச் சிரித்தாள்.

“இதுல எது முறைதவறி !? ஐ ஹாட் குட் செக்ஸ் வித் யூ. தட்ஸ் ஆல். நான் எதையும் என் விருப்பத்துக்கு மாறாக செய்யலை விக்கி. அது அப்போதைய விருப்பம், அந்த நேரத்தேவை….அவ்வளவுதான். இதை நான் ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கல. எனக்கு இதனால எந்த விதமான கில்டி பீலிங்கும் கிடையாது விக்கி. இன்பாக்ட் ஐ பிட்டி யூ.”

பெரிதாக அழுது தன்னிடம் மடிப்பிச்சை கேட்பாள் என்று எதிரிபார்த்த விக்னேஷ், மஞ்சரியின் இந்தப் பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஆடிப்போனான்.

“அப்படீன்னா நமக்குள்ள அவ்வளவுதான் மஞ்சு. நீ என் அம்மாவிடம் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க முடியாதுன்னா, நம் காதலையும் மறந்து விடு.”

மஞ்சரி எழுந்து நின்றாள். புடவையில் ஒட்டியிருந்த பீச் மணலை தட்டி விட்டுக் கொண்டாள்.

பின்பு நிதானமாக விக்னேஷைப் பார்த்து ஏளனமாக சிரித்தபடி தன் தலை மயிரை வலது கையினால் எடுத்துக்காட்டி “போடா மயிரு.” என்றாள்.

விறுவிறுவென திரும்பிப் பார்க்காது நடந்தாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “மஞ்சரி

  1. இந்த போல்டன்ஸ் எல்லா பொண்ணுக்கும் இருக்கணும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *