கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,373 
 

பரபரப்பாய் இருந்தது, ராமுத்தாயிக்கு. போட்டோவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். கண்ணாடி உடம்போடு சேர குளிர்ச்சியாக இருந்தது.

எத்தனை நாளாய் இப்படி ஒரு போட்டோ பிடிக்க வேண்டுமென்று அவளுக்குக் கனவுகள். இன்று எல்லாம் நிறைவேறிவிட்டது போலிருந்தது. போட்டோவைப் பார்த்தாள். ராமுத்தாயின் முகம் சுருக்கமாய் இருந்தது. எத்தனை கவலை ரேகைகள் முகத்தில். எத்தனை கஷ்டங்கள் வாழ்க்கையில், கஷ்டங்களும் அழுகைகளும் முகத்தில் ரேகைகள்போல ஆக்கிவிட்டது. வயதாகி விட்டதல்லவா இதற்குமேல் இதையெல்லாம் எதற்கு நினைக்கவேண்டும் என்று நினைத்தாள்.

ஒரு கையில் போட்டோவைப் பிடித்தபடி மறு கையினை உயர்த்தி முகத்தைத் தொட்டுப் பார்த்தாள். தாடைகள் ஒடுங்கி முகம் கீறல் கீறலாய் இருப்பது தெரிந்தது. விரல்களை மேலே உயர்த்தினபோது வெறும் நெற்றி. குங்குமம் இல்லாத நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள்.

போட்டோவை மறுபடியும் பார்த்தாள். நடந்து கொண்டிருந்தவள் நின்று கூர்ந்து பார்த்துச் சிரித்தாள். “என்ன ராமுத்தாயி… ரோட்லே நின்னுட்டாப்லே.”

ராமுத்தாயி நிமிர்ந்து பார்த்தாள். சின்னப்பன் அண்ணாச்சியின் மளிகைக்கடையில் வேலை பார்ப்பவன்.

“ஆமாடா சின்னப்பா”

“எதுக்கு நின்னே…”

“போட்டோ…”

கையை விலக்கிக் காட்டினாள்.

“அடி ஆத்தி நீயா”

“ஆமா” பெருமை முகத்தில் மிளிர்ந்தது.

“நல்லாத்தா இருக்கே…”

“உம்…”

“ஆனா வயசாயிடுச்சில்லியா…”

su5

முகம் கறுத்தது அவளுக்கு. இந்த வயசான நாப்பத்தஞ்சு வயதில்தானா போய் போட்டோ எடுக்க வேண்டும் என்ற கேள்வி வந்தது மனதில்.

“நீ போட்டோ எடுக்கலியா. சின்னப்பா…”

“எடுக்கணும் தாயி… ஊரே எடுக்குது. நம்ம மூஞ்சியெ நாமே பாத்துக்கறதுக்கு. இப்ப ஊர்லே போட்டோ எடுக்காத ஆளே இல்ல. நானும் எடுக்கணும். ஆமா எவ்வளவு…”

“எட்டு ரூபாதா… கண்ணாடிக்கு 2 ரூபா…”

“பத்து ரூபா சேர்க்கணும். எப்ப ஸ்டுடியோ இருக்குமாமா. இப்பவே வந்து மாசமாச்சே…”

“இருக்கும்னாங்க…”

அவள் சொல்லியபடியே நடக்கத் தொடங்கினாள்.

கிருஷ்ணப்பாவின் காலி இடத்தில்தான் அந்த ஸ்டுடியோ முதலில் வந்து டேரா போட்டது. போட்டோ பிடிப்பது என்றால் பணக்காரர்கள் சமாச்சாரம் என்று இருந்தது. ஆனால் அந்த டெண்ட் போட்ட ஸ்டுடியோ வந்தபின் ஐந்து ரூபாய்க்கு போட்டோ என்றார்கள். ஒரு மாதம்தான் இருக்கும் என்றார்கள். எம்.ஜி.ஆருடன், சிவாஜியுடன், ரஜினிகாந்துடன் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்ளலாம். அச்சாக அவர்களோடுகூட நின்று கொண்டே எடுப்பது போல் பட்டது. அப்புறம் காருக்கு முன்னால் மோட்டார் பைக் ஓட்டியபடி, கவர்ச்சி நடிகைகளின் இடுப்பை அணைத்தபடி, தாமரைக் குளத்து நடுவில் படுத்தபடி இஷ்டப்பட்டபடி எடுக்கலாம் என்றார்கள்.

இளைஞர்கள் கூட்டம் பெருகியது. அந்த சின்ன பஞ்சாயத்து போர்டு ஊரில் எல்லா வீடுகளிலும் போட்டோக்கள் முளைத்தன. எல்லோரும் தங்களைத் தாங்களே போட்டோக்களில் பார்த்துக் கொண்டார்கள்.

ராமுத்தாயிக்கு முதலில் போட்டோ எடுக்கிற ஆசை வரவில்லை. அப்புறம் ரைஸ்மில்லிற்கு போனால் வேலை செய்கிறபோது ஸ்டுடியோ பேச்சு. கடைக்குப் போனால் போட்டோ எடுத்தியா எனக் கேள்வி. எல்லோரும் என்னைப் பார் என்னைப் பார் என்று போட்டோக்களைக் காட்டிக் கொண்டே இருந்தார்கள். அப்போது தான் ராமுத்தாயிக்கும் போட்டோ எடுக்கிற ஆசை வந்தது.

பத்து ரூபாய்தானே எடுத்துவிடலாம் என நினைத்தாள். “சே… இந்த வயசுக்கப்புறம் என்ன வேண்டிக்கிடக்கு. புருஷனும் செத்துப் போயாச்சு, மருமகன் கூட வந்துவிட்டான். மருமகன் கேலி பண்ணுவாரா…”

அப்புறம் யோசனையைத் தள்ளி வைத்து விட்டாள், எதற்கு வேண்டாம் என்று.

இன்னும் 10 தினம் மட்டுமே ஸ்டுடியோ டேரா போட்டிருக்கும் என்று மைக்கில் விளம்பரம் செய்தார்கள். சரி நாமும் பேருக்கு எடுத்து வைக்கலாமே என்று ராமுத்தாயும் எடுத்திருந்தாள்.

பலர் பணம் குறைவாக என்பதால் மோசமாக இருக்கும் என்று சொன்னார்கள். சீக்கிரம் மங்கிவிடும் என்றார்கள். ஆனாலும் அவள் போட்டோ எடுத்திருந்தாள். போட்டோவை அடிக்கடி பார்த்தபடியே வீட்டிற்குள் நுழைந்தாள்.

விளக்கைப் போட்டாள்.

போட்டோவை சுவரில் சாய்த்து வைத்து மெல்ல பின்னால் போனாள். தலைசாய்த்துப் பார்த்தாள். எந்த இடத்தில் மாட்டலாம் என்று யோசித்தாள். எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

முன் அறைக்கு வந்தாள். முருகன் படம் மாட்டப்பட்டிருந்தது. அதற்குப் பக்கம் கண்ணாடி. அப்புறம் ஒரு விநாயகர் படம்.

கண்ணாடியை ராமுத்தாய் இப்பொழுதெல்லாம் அதிகம் பார்ப்பதில்லை. எதற்குப் பார்க்க? குங்குமம் கூட வைப்பதில்லை. புருஷன் அம்போ என்று பத்து வருஷம் முன்பே விட்டுப் போய்விட்டான். அவன் விட்டுச் சென்றதில் பாதி வீட்டை விற்கு பெண்ணுக்கு கல்யாணம் பண்ணிவிட்டாள். மீதியில் அவள் இருந்து வந்தாள். ரைஸ் மில் உத்யோகம் சோறு போட்டது. கை கால்கள் முடியாமல் போனால் மகளிடம்தான் போக வேண்டும் என்ற நினைப்பு வந்தபோது வருத்தமாயிருந்தது.

சுவற்றோடு போட்டோவை கையில் நிறுத்திப் பார்த்தாள். நன்றாகத்தான் இருக்கிறமாதிரிப் பட்டது. எங்கே மாட்டுவது என்று விளங்கவில்லை.

su6

ஆணி வேண்டும். யாரிடமாவது போய் கேட்க வேண்டும். எதற்கு என்று கேட்டால் போட்டோ மாட்ட என்று சொன்னால் சிரிப்பார்களா? இந்த வயசில் எதற்கு போட்டோ மாட்டி வேடிக்கை என்று சொல்வார்களா? கேள்வி பயத்தைக் கிளப்பியது. கிண்டலாய் உறவுமுறை சொல்ல யாராவது சிரிக்கக் கூடும் என்ற யோசனையும் வந்தது.

அவளின் புருஷன் போட்டோகூட இல்லை என்ற ஞாபகம் வந்தது. அவர் செத்துப்போன பின்பு, ஒரு போட்டோவை எடுத்து வைத்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் இல்லாமல் போனது குறித்து வருத்தம்தான் அவளுக்கு மிஞ்சியது.

கண்ணாடிப் பக்கம் மாட்டலாமா? கண்ணாடி ரசம் போய் பொலிவு இழந்து நின்றது. இப்போதெல்லாம் எண்ணை தடவி தலை சீவுவதுகூட கண்ணாடியைப் பார்க்காமலேதான் என்பது ஞாபகம் வந்தது.

முருகன் படத்துக்கு பக்கம் வைக்கலாமா? விநாயகர் படத்துக்குப் பக்கம் வைக்கலாமா? நாம் என்ன தெய்வங்களுக்குச் சமமா என்ற நினைப்பு வந்ததும் வேண்டாம் என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டாள்.

யாரோ வருகிற சப்தம் கேட்டது. பக்கத்து வீட்டு சாந்தி நின்றிருந்தாள்.

“என்ன அவ்வா…”

“ஒண்ணுமில்லே…”

“என்ன கையிலே…”

“போட்டோ…”

“நீயும் புடுச்சிட்டியா அவ்வா…”

“ம்…”

“நாமெல்லா பொழைக்கிற பொழப்புக்கு அதுதா கொறச்சல் போ…”

சொன்னபடி நகர்ந்து விட்டாள். அவள் சொன்னது சரிதான் என்று பட்டது. புருஷன்கூட இல்லை. புருஷன் முகம் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ள போட்டோ கூட இல்லை. தன் போட்டோ மட்டும் எதற்கு என்ற கேள்வி வந்தது. கடைசியாய் மாட்ட வேண்டாம் என்ற நினைப்பு உறுதியானதுபோல் அவளுக்கே பட்டது. நகர்ந்து போய் மரப்பெட்டியைத் திறந்தாள். போட்டோவை நன்றாகத் துடைத்து பழைய பத்திரங்கள், சேலைகளை எடுத்துவிட்டு பெட்டியின் அடியில் வைத்தாள். மரப்பெட்டியை மூடினாள். கொல்லைப் புறம் போய் கால்களுக்கு தண்ணீர் ஊற்றினாள். போட்டோ வாங்க ராம் தியேட்டர் வரை போய் வந்த அலுப்பில் கால்கள் வலித்தது. இப்போது நீர் ஊற்ற ஊற்ற சுகமாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் போட்டோவைப் பற்றி மறந்து விட்டாள்.

– பெப்ரவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *