போட்டது பத்தல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2013
பார்வையிட்டோர்: 9,418 
 

வழக்கம் போல தனது வேலையை முடித்துவிட்டு அன்றைய தினக்கூலி ரூ400 யை வாங்கிக்கொண்டு வீட்டிக்கு சென்று கொண்டிருந்தான் பாலு.
செல்லும் வழியில் இருக்கும் ஒயின் ஷாப் அவனை வா வா என அழைத்தது போல் உணர்ந்தான்.

உள்ளே போலாமா என யோசித்தவனுக்கு, “இன்னைக்கு நீ மட்டும் முழு துட்டையும் கொண்டுவந்து எங்கிட்ட கொடுக்கல உனக்கு இனிமே சோறே கிடையாது”, என்று காலையில அவன் பொண்டாட்டி திட்டுனது நியாபகத்துக்கு வந்தவுடன், வெறும் போர்டை மட்டும் வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு, பெரு மூச்சுடன் அறை மனதோடு சைக்கிளை மிதிக்க துவங்கினான்.

சற்று தூரம் சென்றுக்கொண்டிருக்கும் போது யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டவுடன் ,திரும்பி பார்த்த பாலுவிடம் ஒடிவந்தது அவனுடைய ஃப்ரண்ட் கதிர்.

“என்னடா கதிரு? என்ன விஷயம்?”

“மச்சான் 200 ரூ பணம் வேணும்டா.”

“எதுக்குடா?”

“காலுல அடிபட்டு போச்சுடா, ஆஸ்பத்திரிக்கு போணும் அதுக்குதான்.”

“என்னடா? வேற எங்கயாச்சும் ரெடி பண்ணிக்கடா, உங்கிட்ட பணத்த குடுத்துட்டு, மிச்ச பணத்தோடு வீட்டுக்கு போன என் பொண்டாட்டி கண்ணா பிண்ணாணு திட்டுவா. ஏற்கனவே ஒரு வாரமா பிரச்சினை வேற”.

“மச்சான் நான் ஒண்ணும் பொய் சொல்லுலடா? கால வேணும்னா நீயே பாத்துக்கோடா?” என்றான் கதிர்.

வேற வழியே இல்லாம 200 ரூ பணத்த அவங்கிட்ட கொடுத்திட்டு அங்கிருந்து கிளம்பினான் பாலு.

பணத்த கதிர்கிட்ட கொடுத்த விஷயத்த அவகிட்ட சொன்னா பெரிய பிரச்சினை ஆவும், அதுனால இன்னைக்கு குடிச்ச மாதிரியே நடிச்சிட வேண்டியாதுதான் என யோசிச்சு தான் வைத்திருந்த காலி சரக்கு பாட்டிலில் வெரும் தண்ணீயை லைட்டாக கலந்து, அதை சரக்கு வாசனை வரும்படி தனது முகத்துல தெளிச்சிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே அன்றும் அவன் வீட்டில் பலத்த புயல் வீசியது.

அடுத்த நாளும் வழக்கம் போல அவனோட பொண்டாட்டீயோட ஆசிர்வதத்தோடு துவங்கியது.

சம்பளத்தை வாங்கி கொண்டு இன்னிக்கு யாரும் கடன் வாங்க வந்துடக்கூடாது என்பதற்காக வேகவேகமாக சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

இன்னைகாவது நல்ல சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தனது செல்போனில் இனிமையான பாடல்களை கேட்டவாறே சென்று கொண்டிருக்கும் போது எங்கயோ முணகல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

சைக்கிளை நிறுத்தி விட்டு சத்தம் கேட்ட இடத்தை பார்த்து நடந்த பாலுவுக்கு, அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட செய்தது.

அங்கே ஒரு 50 வயது மதிக்கதக்க ஒரு பெரியவர் போதை தலைக்கேறி கீழே விழுந்து கிடந்தார்.

“தண்ணீ தண்ணீ “என்று முணகிக் கொண்டிருந்த, அவர் உடம்பு முழுக்க கல்லு குத்தி இரத்தம் கசிந்து இருந்தது.

அவர் அருகே சென்ற அவன் அவரை தூக்கி பக்கத்தில் இருந்த ஒரு மரத்தில் சாய்த்து படுக்க வைத்தான்.

தான் வைத்திருந்த சாப்பாட்டு டப்பாவில் தண்ணீரை மோந்து அவருக்கு குடிக்க கொடுத்தான்.

“என்னா? பெருசு ஃபுல் டைட்டா? இப்படி மட்டையாயி கெடக்குற. ஒசியில சரக்கு கெடச்சுதா?.”

“உன் வீடு எங்க இருக்கு? .”

வாய் திக்கியாவறே “8-வது தெரு”, என்றார் பெரியவரு.

“என்னது 8-வது தெருவா? யோவ் அது இங்கிருந்து 10 KM இருக்கும்யா? எப்படி போவ? கால்ல வேற நல்லா காயம் பட்டிருக்கு ,வீட்ல யாராவது இருக்காங்களா? போன் நம்பர் ஏதாவது இருக்கா?”

“என் பொண்டாட்டீ மட்டும் தான் இருக்கா வேற யாரும் இல்ல”.

“பின்ன எப்படி வீட்டுக்கு போவ?”

“தெரியல” என்று சைகை காட்டினார்.

“என்னைய இது பெரிய பிரச்சினைய போச்சு? ஒன்னால பஸ்லேயும் போவ முடியாது. கையில ஏதாவது துட்டு வச்சிருக்கியா? இல்ல வேற யாரவது கூப்பிடுட்டு போவங்களா?”, என்று பெரியவரிடம் கேட்டான்.

“இல்ல” என்றார்.

“ஹூம் ஒன்ன இப்படியே விட்டுட்டு போவவும் மனசில்ல,
வேற என்னா பண்றது? இன்னைக்கும் நமக்கு வேட்டுதான்” என்று புலம்பிக்கொண்டே தன் கைக்காசு 250 ரூ போட்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து அந்த பெரியவரை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு முதல் நாள் போலவே குடிச்ச மாதிரியே அவன் பொண்டாட்டியிடம் நாடகத்தை அரங்கேற்றி வாழ்த்துக்களை வாங்கி கொண்டு அன்றும் பட்டினியோடு படுத்தான்.

அடுத்த நாளும் சிறப்பாக முடிந்தது. கூலியை வாங்கி கொண்டு இன்னிக்கு என்னா? ஆவப்போதோ என்று யோசித்தாவாறே வருகையில்,
அவன் எதிர்பார்த்தபடியே அவனோட ஃப்ரண்ட் கதிரு எதிரே வந்து கொண்டிருந்தான்.

அவனை கண்டதும் இன்னைக்கும் கடன் வாங்க வந்துட்டான் என நினைத்து பூனைய பார்த்த எலி போல தெறிச்சு ஒட ஆரம்பித்தான்.

அவனை தடுத்து நிறுத்திய கதிரு,”என்னா மச்சான்? என்ன பார்த்ததும் ஒடுற? இன்னைக்கும் கடன் வாங்க வந்துட்டேன் நினச்சுட்டீயா?”.

“சீ சீ அதெல்லாம் இல்லடா”

“பொய் சொல்லாதா? உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுதுடா.நான் அதுக்கு வரல உங்கிட்ட வாங்ன பணத்த குடுக்கத்தான் வந்தேன். நீ செய்த உதவிக்கு ரொம்ப நன்றி”, என்று கூறி 200 ரூ யை பாலுவிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

தன் கையில் இப்போது 600ரூ பணம் இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியானான் பாலு.

உற்சாகத்தோடு சைக்கிளை கிளப்பினான்.

சற்று தூரம் சென்று கொண்டிருக்கும் போது சைக்கிளை யாரோ பிடித்து இழுப்பது தெரிந்து சைக்கிளை நிறுத்தினான்.

அவன் அருகே நின்றது, நேத்து அவன் உதவி பண்ணிய அந்த பெரியவர்.
அவரை கண்டதும், அவன் சற்று திகைத்து நின்றான்.

உடனே அவர், “என்ன தம்பி? என்ன தெரியுதா?. போதையில இருந்த எனக்கே உன் முகம் நியாபகம் இருக்கு, உனக்கு என்னா தெரியாத என்ன?”.

“ஹும் நல்ல நியாபகம் இருக்கு பெரிசு, இன்னிக்கு எதுவும் போடலையா?”.

“நீ செய்த உதவிக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டுறிக்கேன். பதிலுக்கு நான் என்ன செய்ய போறேன் தெரியுல”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் பெருசு.நீ நல்லாயிருக்கில? அது போதும்”.

“உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளுப்பா”, என்றார்.

“முடிஞ்ச நான் ஆட்டோவுக்கு குடுத்த பணம் மட்டும் போதும்”, என்றான் பாலு.

உடனே அவர் 1000ரூ நோட்டை எடுத்து நீட்டினார்.

“அவ்வளவு வேணாம், 200ரூ மட்டும் போதும்”, என வாங்கி கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

தன் கையில் இருக்கும் பணத்தை கணக்கு பண்ணிபார்த்ததில் 800ரூ இருந்தது.

அடேங்கப்பா 800 ரூ இருக்கு வீட்டுக்கு போய் அவள்கிட்ட குடுத்து குஷிப்படுத்த வேண்டியாதுதான். இன்னிக்கு செம ஜாலிதான்,
என நினைத்து மெதுவாக சென்று கொண்டிருக்கும் போது, மீண்டும் ஒயின் ஷாப் வாடை அவனை இழுத்தது.

கடையையும் பார்த்தான், தன் கையில் இருக்கும் பணத்தையும் பார்த்தான்.

கொஞ்ச நாளா குடிக்காமல் இருந்த பாலு, பணம் அதிகமா புழங்கியதும்,
சற்றே அவனது புத்தி தடுமாறியது.

அதான் 800ரூ இருக்கே, ஒரே ஒரு குவாட்டர் மட்டும் அடிச்சிட்டு, பாக்கி இருக்குற பணத்த அவகிட்ட கொடுத்திட வேண்டியதுதான்.

டெயிலிதான் திட்டு வாங்குறோமே பாத்துக்கலாம் விடு என்று சொல்லி கொண்டே பாருக்குள் நுழைந்தான். முதலில் ஒரு குவாட்டர் வாங்கினான்.
அதை அடித்து கொண்டிருக்கும் போதே அவனது நண்பர்களூம் வந்து சேர்ந்துக்கொண்டார்கள்.

தனது செல்போனில் குத்து பாட்டை போட்டு கொண்டே,கையில் இருந்த ஒரு ஒரு நோட்டாக எடுத்து வீசினான்.

அவன் கூட சேர்ந்து நண்பர்களூம் குளிர் காய்ந்தனர். இறுதியில் அவன் கையில் இருந்த மொத்த பணமும் காலியானது.

வந்த வேலை முடிந்ததும் அவனது கூட்டாளிகளும் கழண்டு கொண்டார்கள்.

ஃபுல் போதையில் வெளியே வந்த பாலு தன் பையை தொட்டு பார்த்தான், வெறும் சில்லரை காசுகள் மட்டுமே தட்டு பட்டது.

100ரூயில் ஆரம்பிச்சு, 800ரூயும் காலியாயிட்டே, ரெண்டு நாள குடிக்காம ஏதோ நல்லதாச்சும் பண்ணிட்டு, கொஞ்சம் பணத்தையாவது பொண்டாடீக்கிட்ட கொடுத்தேன். இன்னைக்கு அதுவும் இல்லாம போயிட்டே.

இன்னைக்கு வீட்டுக்கு போலாமா வேணமா? போன என்ன? செய்வாலோ தெரியிலையே, என்று நடந்த சம்பவங்களை மனதில் அசைபோட்டுக் கொண்டே இருக்கும் போதே “போட்டது பத்தல மாப்பிள இன்னொரு குவாட்டரு சொல்லுடா” என்று அவனது செல்போன் சிணுங்கியது.

போன் செய்தது அவனது மனைவி, இதைப்பார்த்ததும் குப்பென வேர்க்க என்ன செய்வதென்று தெரியாமல் பாலு முழித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *