போகும் இடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 6,790 
 

கடைசியாக அம்மா கொழும்புக்கு வந்து சேர்ந்தாள். கடைசியாக என்று சொன்னால், அம்மா தனது வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் கொழும்புக்கு வந்து சேர்ந்தாள் என்று அர்த்தமல்ல. ஒருவகையில் பார்க்கப்போனால் இது அவளது வாழ்வின் கடைசிக் காலமும்தான்!

சரிக்குச் சரி நாலு ஆண்களும் நாலு பெண்களுமாக எட்டுக் குஞ்சுகளைப் பெற்றவள் அம்மா. ‘பிள்ளைகள் வளர்ந்து ஆளாவதைப் பார்க்க முன்னரே மனிசன் போய்ச் சேர்ந்திட்டுதே..!’ என்ற கவலையும் ஏக்கமும் அம்மாவுக்கு எப்போதும் உண்டு. எனினும் அப்பா இல்லாத குறையே தெரியாமற்தான் பிள்ளைகளை வளர்த்தவள் அம்மா. வளர்ந்து ஆளானதும் பிள்ளைகள் அம்மாவை விட்டுப் பறந்து போயின. ஒரு பிள்ளையின் நல்ல காரியத்தையேனும் அம்மாவுக்குப் பார்க்கக் குடுத்துவைக்கவில்லை. பார்சலில் அனுப்புவதுபோல பெண்பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டியதாயிற்று!

இத்தனை பிள்ளைகள் பெற்று வைத்துக்கொண்டு அம்மா எத்தனையோ கனவுகளைக் கண்டிருக்கிறாள். ஒரு காலத்தில் எல்லாம் பெற்றுப் பெருகித் தன்னோடு இருப்பதையும், பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலவுவதையும் கற்பனைக் காட்சிகளாகக் கண்டிருக்கிறாள். இப்போது போட்டோக்களில் மட்டும்தான் அவர்களைக் காணமுடிகிறது.

கனடாவில், nஐர்மனியில், பிரான்சில் இருந்தெல்லாம் கடிதங்கள் வரும்.. அன்புள்ள அம்மாவுக்கு! அம்மா வீட்டோடு தனிய இருப்பது பிள்ளைகளுக்குக் கவலையாம். நாட்டுப் பிரச்சினைகள் இவ்வளவு மோசமாக இருப்பதால் அம்மாவின் பாடு எப்படியோ என்று யோசனையாக இருக்கிறதாம். வடபகுதிக்குச் சாப்பாட்டுச்சாமான்கள் வரத்தில்லை. விமானங்கள் குண்டு வீசுகின்றன. இனிமேலும் இருந்து கஷ்டப்படாமல் எப்படியாவது ‘அந்தப் பக்கம்’ வந்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாமாம்.

அம்மாவின் மனது இதற்கெல்லாம் மசியாமற்தான் இருந்தது. இந்த ஊரையும் வீட்டையும் விட்டு அம்மா போகமாட்டாள்.

‘நீங்கள் எங்கையெண்டாலும் நல்லாயிருங்கோ பிள்ளையள்.. என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என ஒவ்வொரு முறையும் பதில் எழுதுவாள்.

என்ன நேர்ந்ததோ.. பிள்ளைகளைக் காணாமலே கண்களை மூடிவிடுவேனோ என்ற பயம் அம்மாவுக்குத் தோன்றத் தொடங்கியது. அந்த நினைவில் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. இந்தக் கடைசிக் காலத்திலாவது பிளைகளுடன் போயிருக்கலாமே என்ற ஆசை முளைவிட்டது.

கொழும்பிலிருக்கும் மூத்த மகன் ஊருக்கு வருகிறவர்களிடம் கடிதம் கொடுத்து விடுவான். தம்பிமார், தங்கைமார் ரெலிபோனில் கதைக்கிறவர்களாம்.. அம்மா கொழும்பிலாவது வந்து நின்றால் பிறகு தங்களோடு கூப்பிட்டுக்கொள்ள வசதியாயிருக்குமாம்.

அவர்கள் யாரும் ஊரோடு வரப்போவதில்லை. தானாவது போய்ச் சேரவேண்டியதுதான்.. கொழும்புக்கு போனால் மூத்த மகனின் பிள்ளைகளையாவது பார்க்கலாம் என இந்தத் தள்ளாத வயதில் கொழும்புக்கு வந்துசேர்ந்தாள் அம்மா.

மூத்த மகன் கட்டியது முறை மாமியின் மகளைத்தான். மாமி குடும்பத்தினர் கன காலத்துக்கு முன்னரே கொழும்பில் செற்றில்ட் ஆன ஆட்கள். மாமியின் மகளைக் கட்டியதால் மகனின் வாழ்க்கையும் கொழும்போடு சேர்ந்துவிட்டது.

0

அம்மாவைக் கண்டதும் கொழும்பு மாமி ஆரத் தழுவினாள். மருமகள் ஓடிவந்து கட்டியணைத்துக் கொண்டு கண் கலங்கினாள்.

‘எப்படி மாமி, இதுக்குள்ளாலை வந்து சேர்ந்தனீங்கள்..? சரியான கஷ்டமாமே?”

‘வள்ளத்திலையெல்லாம் வரவேணுமாமே..? சரியான சேறும் சகதியுமாம்! நீங்களும் அப்படியா வந்தனீங்க?” எனக் கேட்டு மாமி, அருவருப்புணர்வில்.. சீவியத்திலே சேறையும் சகதியையும் காணாத மனிசியைப்போல முகத்தைச் சுளித்தாள். மகன் அம்மாவைக் கண்டதும் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தார்.

அம்மாவை எல்லோரும் விசித்திரமாக.. அல்லது ஏதோ சாதனை புரிந்தவரைப் பார்க்கிற பிரமிப்புடன் பார்த்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை இத்தனை குண்டு வீச்சுக்குள்ளும் இவ்வளவு காலமும் நின்றுபிடித்தது, இந்தப் பாதைத் தடைகளையும் கடந்து வந்துசேர்ந்தது எல்லாமே சாதனைகள்தான்.

அம்மாவின் வருகையால் எல்லோரும் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தப்பட்டவர்கள்போற் தோன்றினார்கள். அம்மாவுக்காக விசேஷமாகச் சமையல் செய்யப்பட்டது. சாப்பாட்டை மேசையிற் கொண்டுவந்து படைத்தார்கள். அம்மாவைக் கதிரையில் அமரச் சொன்னார்கள். மாமி, மருமகள், மகன், பிள்ளைகள் எல்லோரும் வட்டமாக அமர்ந்தார்கள். அம்மாவுக்குக் கூச்சமாக இருந்தது. மகனும் மருமகளும் நான், நீ என முந்திக்கொண்டு அம்மாவுக்குப் பரிமாறினார்கள்.

அம்மா தேடுவாரில்லாமற் கிடந்தவள். நினைத்த நேரம் சமைப்பாள். நினைத்த நேரம் சாப்பிடுவாள். யாரும் சாப்பிட்டாயா, கிடந்தாயா என்றுகூடக் கேட்பதில்லை. சோற்றுக் கோப்பையைக் கையிலேந்தி சுவரோடு சாய்ந்து முழங்கால்களை மடக்கி, அடக்கமாக இருந்தவாறு உண்பாள். இப்போது சாப்பாட்டுமேசையும் கதிரையும் இந்த அபிரிமிதமான கவனிப்பும் அம்மாவுக்குக் கூச்சமாக இருந்தது.

‘விடு பிள்ளை..! நான் போட்டுச் சாப்பிடுகிறன்!”

அவர்கள் விடுவதாயும் இல்லை. அம்மாவுக்குச் சாப்பாடு இறங்குவதாகவும் இல்லை.

வீட்டில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால் அம்மாவுக்கு இந்த லோகத்திலா இருக்கிறோம் என எண்ணத்தோன்றியது. ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு சுவிச்சைப் போடக் கிடைக்கிறது! அடுப்புக்கு விறகு தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஒரு சுவிச்சைப் போட்டு கறி சமைக்கலாம்! பாத்றூமை எப்படிப் பாவிப்பது, எப்படி ஃப்ளஷ் பண்ணுவது என்றெல்லாம் மருமகள் காட்டித்தந்தாள். அம்மாவுக்கு இதெல்லாம் ஒத்துவருமா என்று சந்தேகமாக இருந்தது. கிணற்றிலே வாளியால் அள்ளிச் சோரக் குளிப்பதுபோல் வருமா?

அம்மாவுக்குக் கொழும்பு கைலாயபுரியைப்போல இருந்தது. அம்மா கைலாயபுரிக்குப் போனவளல்ல. அவளது ஞானத்துக்கு எட்டியவரை கைலாயபுரி என்பது சகல சௌபாக்கியங்களும் நிறைந்த இடம். பகலைப் போல வெளிச்சம் இரவிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

ஊரின் இருள் சூழ்ந்த இரவுகளுடனும், பொழுதுபடுமுன்னரே அடங்கிப்போகும் வாழ்க்கையுடனும் இந்த ‘இரவாகியும் இருளாத பொழுதுகளை’ ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அம்மாவின் மனதில் இன்னவென்று புரியாத ஒருவித சோகம் நெருடுவது போலிருந்தது.

‘அம்மாவுக்கு நல்ல படமொன்று போட்டுக் காட்டுங்கோ..” என மாமி சொன்னாள். வீடியோவும் ரீவியும் அம்மா காணாத விசயங்களாயிருக்கும் என்று ஒரு விளையாட்டுணர்விற்தான் மாமி இப்படிக் கூறினாள். ‘அம்மா குண்டு வீச்சுகள், சண்டைகள் நடந்த இடங்களில் இருந்தமையால் மன அதிர்சியடைந்திருக்கக்கூடும். இப்படிப் படம் பார்ப்பது போன்ற வேறு பிராக்குக்களில் ஈடுபட்டால் மனம் இலகு அடையும்’ என்று மருமகள் உற்சாகமாகப் படத்தைப் போட்டாள்.

சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுபோல நெடுநேரம் கதிரையில் அமர்ந்திருப்பது அம்மாவுக்கு கஷ்டமாய் இருந்தது. கால்களை மடக்கிக்கொண்டு சுவரோரமாக சாய்ந்து இருப்பதிலுள்ள சுகம் இதில் இல்லை. தேவையானபோது கால்களை நீட்டலாம்.. மடிக்கலாம். அம்மாவுக்கு நாரிக்குள் பிடிப்பது போலிருந்தது.

‘நான் பணிய இருக்கிறன்.. பிள்ளை!” எனத் தனது ஆசையை மெல்ல வெளியிட்டாள்.

இதைக் கேட்டு மாமி துடித்துப் பதைத்துப்போனாள்.

‘நல்ல கதை பேசுறீங்க..! யாராவது பாத்தினமெண்டால் என்ன நினைப்பினம்..? வெளிநாட்டுக்குப் போனால் கதிரையிலேதான் இருக்கவேண்டிவரும்? இப்பவே இருந்து பழகுங்கோ!”

நீண்ட நேரமாக அப்படியே இருக்க முடியவில்லை. படமும் முடியாமல் நீண்டுகொண்டிருந்தது. அம்மாவின் கால்கள் விறைப்பெடுத்தன. அக்கம் பக்கம் பார்த்தாள். எல்லோரும் படத்தில் லயித்துப் போயிருந்தார்கள். ஒரு காலை மெல்ல மடக்கி கதிரை விளிம்பில் பாதத்தைப் பதித்தாள்.

மாமிக்கு இதற்கொரு நேரம் தேவைப்படவில்லை. எப்படிக் கண்டாளோ! சற்றும் தாமதியாமல் மருமகனிடம் முறையிட்டாள்: ‘உங்கட அம்மா செய்யிற வேலையைப் பாருங்கோ!”

மகன் தனது மானமே பறிபோனவன் போல், ‘என்னம்மா இது? டீசன்ராய் இருக்கத்தெரியாதோ! கதிரை என்னத்துக்கு உதவும்..? காலைக் கீழே போடுங்கோ!” என்றார்.

பிள்ளைகளின் சௌகரியத்துக்காக அம்மா எத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கிறாள். இது என்ன பெரிய விசயம்? மகனின் சந்தோசத்துக்காக அம்மா காலைக் கீழே போடவும் தயார்..! தலையைக் கீழே போடவும் தயார்.

00

காலையில் அம்மா வீட்டு நினைவுகளில் ஆழ்ந்துபோயிருந்தாள். ஊரில் எதையோ விட்டு வந்ததைப் போன்றதொரு தவிப்பு மனதை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அப்போது மிகப் பதிவாக ஒரு பிளேனின் இரைச்சல் கேட்டது. அம்மா பதறிக்கொண்டு எழுந்தாள்.

‘பிள்ளை..! பிள்ளை! பிளேன்..! பிள்ளையள் எங்கை?” என ஓடிப்போய் பேரப்பிள்ளைகளைத் தூக்கினாள்.

இதைப் பார்த்து வீட்டில் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

‘என்ன மாமி? இன்னும் ஊரிலை இருக்கிறதாய் நினைவோ?” என மருமகள் கேட்டாள்.

‘பிளேன் இஞ்சை ஒண்டும் செய்யாது. பயப்பிடாதயுங்கோ!” என மாமி சொன்னாள். அதில் ஒருவித ஏளனம் தொனிப்பது போலுமிருந்தது.

எனினும் மாமி சொன்னது பெரிய உண்மை என அம்மா நினைத்தாள். பறவை பறக்கும்போது எச்சமிட்டுச் செல்வது போல.. ஓர் இலக்கில்லாமல் எத்தனையோ குண்டுகளை விமானம் அங்கே போட்டிருக்கிறது. அப்படி இந்தப்பக்கங்களில் அது ஒரு போதும் குண்டு போடாது என்பது உண்மைதான். தென்பகுதிகளிலும் தீவிரவாதப் பிரச்சினைகள் இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் சொல்வது அம்மாவுக்குத் தெரியும். அப்படிச் சொல்லிக்கொண்டு இங்கெல்லாம் விமானம் குண்டு போடத் துணியுமோ? அம்மா கற்பனை செய்து பார்த்தாள். விமானங்கள் சுற்றிச் சுற்றி வந்து குண்டு போட்டால்.. இந்த மக்களெல்லாம் எப்படிக் கதி கலங்குவார்கள்! அலுவலகங்களெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டு ஸ்தம்பித்துவிடும்! குண்டு பட்டுச் சிதறிப் போனவர்களை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் மார்க்கெட் கூடுவதுபோல இங்கு கூடாது! குண்டு எந்தப் பக்கம் விழக்கூடும் என அண்ணாந்து பார்த்துக்கொண்டே சைக்கிளில் போகும் துணிவு இங்கு யாருக்கும் வராது.

அம்மாவுக்குச் சற்று குழப்பமாக இருந்தது. எல்லா விஷயங்களையும் ஏன் ஊர் நிகழ்வுகளோடு மனம் ஒப்பிட்டுப் பாhக்கிறது என நினைத்தாள். ஊரிலிருந்து வந்துவிட்டாலும் தான் இன்னும் அங்கிருந்து விடுபடவில்லையா? அல்லது ஊரில் மக்கள் படும் அவலத்தை எண்ணி மனம் கலங்குகிறதா? அல்லது.. ஒரு தேசம் என்று சொல்லிக்கொள்பவர்களின் இரு வேறுமாதிரியான நடைமுறைகளைக் கண்டு மனம் தாங்கவில்லையா?

அம்மா யோசனையிலாழ்ந்தாள். பிளேனைக் கண்டு அம்மா பயந்துபோய்விட்டாள் என்றே மருமகள் கவலைப்பட்டாள்.

‘யோசியாதையுங்கோ! இனியென்ன.. வெளிநாட்டுக்கு பிள்ளையளிட்டைப் போயிட்டால் இந்தப் பயம் ஒண்டு மில்லைத்தானே!”

கனடா ஜெர்மனி பிரான்ஸ் போன்ற இடங்களிலுள்ள பிள்ளைகளுக்கு அம்மா கொழும்பு வந்து நிற்கும் செய்தி சொல்லப்பட்டதால் எல்லோரும் அடிக்கடி ரெலிபோனில் கதைத்தார்கள். ஒவ்வொருவரும், தங்களோடு அம்மா வந்து இருக்கவேண்டுமென்றும் கடைசிகாலம் வரையும் அம்மாவை ஒரு குறையும் இல்லாமல் வைத்துப் பார்ப்பதாகவும் சொன்னார்கள். பிள்ளைகளின் அன்பில் அம்மா திளைத்தாள். ஒரு கதைக்குச் சொல்வதானால் கொழும்புக்கு வந்த நாள்முதலே அம்மாவுக்கு ஒருவித அன்புத் தொல்லைதான். அடுத்த வேளைக்கு என்ன செய்யலாம் என்று தலையைப் போட்டுடைக்கத் தேவையில்லை. நேரத்துக்கு நேரம் சாப்பாடு கிடைக்கிறது. தேநீர் கிடைக்கிறது. எனினும் அம்மாவுக்கு எதையோ இழந்துவிட்ட குறை. அது என்ன? அது என்ன?

அம்மாவுக்குச் சும்மா இருந்து பழக்கமில்லை. இந்த அறுபத்தெட்டு வயதுவரை அது அவளுக்குச் சாத்தியப்படவுமில்லை. பிள்ளைகளைப் பெற்று வளர்த்த காலங்கள் அம்மாவுக்கு இன்னும் நினைவிருக்கிறது.. அதிகாலை நாலு மணிக்கே எழுந்துவிடுவாள். நாள் முழுவதும் ஓயாத வேலையில் மாய்ந்து, படுக்கைக்குப் போக இரவு பன்னிரண்டு.. ஒரு மணியாகிவிடும். தனது வாழ்க்கையில் ஓய்வு என்பது வரவே வராதா என ஏங்கியிருக்கிறாள். இப்போது அம்மாவுக்கு ஒரு வகையில் ஓய்வுதான்.. சும்மா இருப்பது! ஆனால் இது அம்மாவுக்குச் சுகமாயில்லை. தனது உயிர் வாழ்வுக்காக இன்னொருவர் கையை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது என்ன வாழ்க்கை? தண்ணீரென்றாலும், சாப்பாடென்றாலும் மற்றவர் இட்டபோதுதானே? தானாக இயங்குவதிலுள்ள தன்மான உணர்ச்சியற்ற வாழ்க்கை உப்புச்சப்பற்ற சாப்பாடு மாதிரிதானே? ‘மகனும் உறவினர்களும் வேறு ஆட்களா? அவர்களை இன்னொருவராகக் கருதுவது தவறோ?’ என்றுகூட அம்மா நினைத்தாள். ஆனால்.. இயல்பாக மரங்கள் ஊடாக வீசிவந்து ஓராட்டும் காற்று இங்கு இல்லை. விசிறியின் சுவிச்சைப் போட்டு காற்றை செயற்கைத்தனமாக எடுப்பதுபோல மனிதர்களின் உறவு போலித்தனமானதா என்று அம்மாவுக்குச் சந்தேகம் தொடுகிறது.

அலுப்புத் தீர படுப்பதென்றாலும் மற்றவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். சிறிய வீடு – அறை வசதி குறைவாகையால் அம்மா முன் விறாந்தையிற்தான் படுப்பாள். விறாந்தை.. வீட்டின் பொது நிகழ்ச்சிக்குரிய இடம். மற்றவர்கள் வீடியோ படம் பார்த்து முடியும்வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னர்தான் அம்மாவுக்குப் பாயைக் கொண்டுவந்து போட்டுவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அம்மாவினால் தூக்கம் கெட்டுக்கொண்டிருக்க இயலவில்லை. ஒருநாள் அம்மா அறையிலிருந்து பாயை எடுத்து வந்தாள். ‘அவையள் படத்தைப் பார்க்கட்டும்.. நான் ஒரு பக்கமாய் படுப்பம்!’ என்ற எண்ணம்.

அம்மா பாயுடன் வருவதைக் கண்டதும் மாமியின் முகம் ஓடிக் கறுத்தது!

‘இதென்ன ஒரு மனேஸ் தெரியாத மனிசி!” எனச் சினங்கொண்டாள். மகன் ஓடிவந்து பாயைப் பிடுங்கிக்கொண்டு உள்ளே போனான். ‘அலுப்பாயிருக்கு.. ராசா!” என அம்மா சமாளித்தாள்.

‘என்னம்மா, நாள் முழுவதும் வேலை செய்கிற எங்களுக்கே அலுப்பில்லை.. சும்மாயிருக்கிற உங்களுக்கு என்ன அலுப்பு?”

இரவு பகலென்றில்லாமல்.. ஒரு அலுப்புச் சலிப்பென்றால் அம்மா திண்ணைக்குந்தில் சேலைத் தலைப்பை விரித்து, கையைத் தலைக்குக் கொடுத்துக்கொண்டு சிவனே என்று படுத்துவிடுவாள்.. ஊரில். ஒருகண் உறக்கம் கொண்டு எழுந்தால், அலுப்பு இருந்த இடம் தெரியாமற் பறந்துவிடும்.

இங்கேயும் ஒருநாள் பகற்பொழுதில் அம்மா அப்படி இயல்பாகப் படுத்துவிட்டாள். மகனும் மருமகளும் வேலைக்குப் போய்விட்ட நேரம். பிள்ளைகள் ஸ்கூலுக்கு. மாமியும் எங்கோ போயிருந்தாள். அம்மாவுக்கு கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. பல நாட்கள் ஏங்கித் தவித்த தனிமை! அப்படியே சேலைத் தலைப்பை விரித்துச் சாய்ந்துவிட்டாள்.

காலில் யாரோ தட்டியதுபோலிருந்தது. விழித்துப் பார்த்தாள். முன்னே விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு மாமி!

‘என்ன இது? யாராவது இந்த வீட்டுக்கு வந்து பார்த்தால் என்ன நினைப்பாங்க..? இது என்ன வீடா, சத்திரமா?” – மாமியின் சன்னத தோற்றம் பயமுறுத்தியது.

மாமி தனது காலினாற்தான் தன்னைத் தட்டி எழுப்பியிருக்கிறாள் என்பதை உணர்ந்ததும் அம்மாவுக்கு என்னவோ செய்தது! மனதுக்குள்ளே கிடந்து குமைச்சலெடுத்தது. அம்மா யாருக்கும் அதைச் சொல்லவில்லை. மகனுக்குச் சொல்வதால் ஏதாவது தீர்வு கிட்டுமென்று நம்பிக்கையில்லை. மருமகள் நல்ல பிள்ளை. இதை அறிந்தால் கவலைப்படுவாள். சொல்லவேண்டாம்.

000

மாதங்கள் இரண்டுக்குமேல் ஓடியும் அம்மா வெளிநாட்டுக்குப் போகிற காரியங்கள் எதுவும் ஒழுங்காக நடக்கவில்லை. வந்த நாட்களில் அடிக்கடி டெலிபோனில் கதைத்த பிள்ளைகளும் இப்போது எப்போதாவது ஒருமுறை கதைக்கிறார்கள். கனடாவுக்கா, nஐர்மனிக்கா? எந்தப் பிள்ளை அம்மாவைக் கூப்பிடப்போகிறான் என்ற உடன்பாடு அவர்களுக்குள் வரவில்லை.

‘இவர்கள் நேரகாலத்துக்குக் கூப்பிடவும் மாட்டாங்கள்.. செலவு சித்தாயத்துக்கெண்டு ஏதாவது அனுப்பவும் மாட்டார்கள்..” – ஒருநாள் சாப்பாட்டுமேiஐயில் மகன் இவ்வாறு கூறினார்.

அம்மாவுக்குப் புரக்கடித்தது. சாப்பாடு இறங்கவில்லை. என்னவோ செய்தது. அம்மா மகனுக்குப் பாரமாய் இருக்கிறாளா?

‘கனடாவுக்கு போவதானால் விசா ஒழுங்கு முறையெல்லாம் சரிப்பட்டு வர இன்னும் இரண்டு வருடங்களாவது செல்லுமாம்! nஐர்மனிக்குப் போவதானால் ஏnஐன்சிக்கு எக்கச்சக்கமான காசு கட்டினால் கள்ளமாகக் கொண்டுபோய் விடுவார்களம். ‘அகதி| என்று சொல்லி அந்த நாட்டிற்குள் நுழையலாமாம்!”

அம்மாவுக்கு என்னவோ செய்தது. அம்மா அகதியா?

அம்மாவுக்கு அந்தக் கணத்தில்.. தான் போகவேண்டிய இடம் எங்கே என்பது தெளிவாகத் தெரிந்தது. தான் இழந்துபோய்த் தவிப்பது.. தனக்கு வேண்டியது எது என்பது புரிந்தது.

‘பிள்ளை..! நான் ஊருக்கு போகப்போறன்!”

மருமகளுக்குக் கவலையாயிருந்தது.

‘அம்மாவைப் போகவேண்டாமென்று சொல்லுங்கோ!” எனப் பிள்ளைகளுக்குச் சொன்னாள்.

பிள்ளைகள் அழுதனர்.

‘அப்பம்மா போகவேண்டாம்.. நில்லுங்கோ!”

‘மனசார உன்னைவிட்டுப் போறதெண்டால்.. கவலையாய்த்தானிருக்கு பிள்ளை.. எண்டாலும் நான் கட்டாயமாகப் போகத்தான்வேணும்!”

இரவு மருமகன் வந்ததும் வராததுமாக மாமி தீ மூட்டினாள்.

‘நாங்கள் இஞ்சை கொடுமையா செய்யிறம்..? அம்மா ஊருக்குப் போகப் போகிறாவாம்..! உங்கட மற்ற பிறதேர்ஸ் நினைப்பினம்.. நாங்கதான் கலைச்சுப் போட்டமாக்குமெண்டு!”

மகன் அம்மாவுக்குச் சமாதானம் சொல்லிப் பார்த்தார். அம்மா கேட்பதாயில்லை. மகனின் சினம் தலைக்கேறியது.

‘என்னம்மா, நாடு இருக்கிற நிலைமையில வாறதும் போறதும் எண்டால் லேசுப்பட்ட காரியமா..? இத்தின வயசுக்குப் பிறகும் நீங்க நினைச்ச மாதிரி ஆடவேணுமெண்டு நாண்டுகொண்டு நிண்டால் என்ன செய்யிறது?”

அம்மாவுக்குப் பரதநாட்டியம் தெரியாது. குச்சுப்புடி பற்றிய அறிவும் இல்லை. வேறு எவ்விதமான ஆடற்கலையும் பழகியவளல்ல. ஆனால் நிறைய ஆட்டக்காரிகளைப் பார்த்திருக்கிறாள். அவர்கள் ஆட்டங்களைப் பார்த்திருக்கிறாள். அவர்கள் ஆடி ஓயும்வரை பார்த்திருக்கிறாள். அது அம்மாவை எவ்விதத்திலும் பாதித்ததில்லை.

நிலம் விடியத் தொடங்கியது. அம்மா தனது வீட்டை நோக்கிய பயணத்துக்கு ஆயத்தமானாள.; மகன் அழாக் குறையாகச் சொன்னார்:

‘தாண்டிக்குளத்திலை பிரச்சினையாம்.. வவுனியாவுக்கு அங்காலை போகேலாது.. என்னெண்டு போகப்போறியள்?’

‘நான் எப்படியும் போயிடுவன் ராசா.. நீங்கள் கவலைப்படாதையுங்கோ!”

மருமகள் மன்றாட்டமாகக் கேட்டாள்:

‘மாமி! கட்டாயம் போகத்தான்வேணுமோ? எங்களோடை நில்லுங்கோ!”

அம்மா சொன்னாள்:

‘தனியத் தனிய இருந்தால் ஒராளுக்கொராள் பட்சமாயிருக்கலாம்!”

– சிரித்திரன் 1993 – தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: பிப்ரவரி 1997, மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *