பொழுதுபட்டால் கிட்டாது

 

ஆலயமணி ஒலித்தது, சுவாமி வெளிக்கிட நேரமாகிவிட்டது.

கமலம் தனது நடையை விரைவுபடுத்தினாள். நாலு வயது கூட நிரம்பாத மூத்த மகளைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தாள். இரண்டே வயது நிரம்பிய இளைய மகனைத் தூக்கிக் கொண்டு நடப்பது சற்றுச் சுமையாகத்தான் இருந்தது.

“கெதியிலை நட தங்கச்சி… சாமி வெளிக்கிட நேரமாச்சுது… மணி கேக்குது.” என மகளையும் விரைவு படுத்தினாள். அம்மாவின் பேச்சு பிள்ளையின் காதில்விழவி ல்லை. பாதையோரங்களில் இருந்த விளையாட்டுச் சாமான் களையும், தின்பண்டங்களையும் விற்பனை செய்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள் சிறுமி.

கமலம், கோபம் மேலிட; “பிராக்குப் பார்க்காமல் வா தங்கச்சி!” என மகளை அதட்டியவாறே நடந்தாள்.

அரசடிச் சந்தியை அண்மித்துச் சென்ற பொழுது சுப்பிரமணியத்தார் தனது பெண்சாதியுடனும், நான்கு பிள்ளைகளுடனும் வந்துகொண்டிருந்தார். கமலத்தைக் கண்டதும் ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டுச் சென்றார். கமலமும் பதிலுக்குச் சிரித்துக் கொண்டாலும் மனத்திலே ஏதோ ஒருகுறை உறுத்தியது.

சுப்பிரமணியத்தார் தனது இரு புதல்வர்களையும் இரு கைகளிலும் பிடித்தவாறு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சென்றார். அவருடைய இரு பெண்பிள்ளைகளும் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்தார்கள். பிள்ளைகளும் சரி, பெற்றோரும் சரி எவ்வளவு கலகலப்பாக சந்தோஷமாகக் கதைத்துச் சிரித்துக் கொண்டு வந்தார்கள்! அந்தக் குடும்பமே இப்படி. இணைந்து செல்வது எவ்வளவு நிறைவாகவும் அழகாகவும் இருக்கிறது!

கமலமும் ‘அவரை’த் திருவிழாவிற்கு வந்து நிற்குமாறுதான் எழுதினாள். ஆனால் அவரோ லீவு கிடைக்காதபடியால் வரமுடியவில்லை என்று எழுதிவிட்டார். சிலவேளை கடைசித் திருவிழாவிற்கு வரக்கூடும்.

சுப்பிரமணியத்தார் பட்டுவேட்டி, சருகைச் சால்வை, தங்கச் சங்கிலி சகிதம் எடுப்பாக இருந்தார். அவருடைய மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ , எந்தக் குறையையும் அவர் வைக்கவில்லை. மனைவி உயர்ந்த ரகச் சேலையும் அதற்கேற்றாற் போல் ரவிக்கையும் அணிந்து கூந்தல் நிறைந்த மலர்களுடன் தனது கணவனோடு இணைந்து சென்றதைக் கமலத்தினால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

சிறுவர்கள் இருவருக்கும் பத்துப் பன்னிரண்டு வயது மதிக்கலாம் – அழகாகப் பட்டுவேட்டி உடுத்து நெஞ்சிலே தங்கச் சங்கிலிகள் தவழ அப்பாவின் செல்லங்களாக மிடுக்குடன் சென்றார்கள். அவர்களை அடுத்த பெண்பிள்ளைகளும் இதேபோலத்தான் எவ்வித குறையுமில்லை.

கமலம் தன் பிள்ளைகளை ஒருமுறை நோக்கினாள். இந்த விஷயத்தில் அவளுடைய பிள்ளைகளுக்கும் ஒரு குறையும் இல்லைத்தான். ஆனால் சுப்பிரமணியத்தார் குடும்பத்தைக் கண்ட பொழுது இவள் பொறாமைப்படுமளவுக்கு அவர்களிற் தென்பட்ட ‘றிச்லுக்’ தன்னிடத்தில் இல்லையே என்பது பெரிய ஏக்கமாக மனதை வருத்தியது.

கோயிலடிக்குச் சென்றதும் வீதியின் ஒரு பக்கமா கச் சென்று ஒதுங்கி நின்று கொண்டாள் கமலம். இந்த சுப்பிரமணியத்தைத்தான் முன்பு ஒரு காலத்தில் – கந்தையா புறோக்கர் இவளுக்குச் ‘சம்பந்தம்’ பேசிக் கொண்டு வந்தார். அப்பொழுது அதை முழுமூச்சுடன் எதிர்த்தவள் கமலத்தின் தாயார் செல்லமணி தான்.

“உதென்ன புறோக்கர் கண்டறியாத சப்பந்தமெல்லாம் பேசிக்கொண்டு வாறீர்? இவள் பிள்ளையின்ரை படிப்புக்கு அவன் எந்த மூலைக்கு?… எண்டாலம் ஒரு தராதரம் வேண்டாமே?”

“இல்லைப் பாருங்கோ… அப்படிச் சொல்லக் கூடாது பொடியன் முயற்சியுள்ளவன் … வீட்டிலை உள்ள கஷ்டங்களாலை உத்தியோகத்துக்குப் போனாலும் இன்னும் படிச்சுக் கொண்டுதான் இருக்கிறான். இண்டைக் கில்லாட்டியும் ஒரு நாளைக்கு அவன் கட்டாயம் ஒரு நல்ல நிலைக்கு வருவான்…” எனப் புறோக்கர் சமாதானம் சொல்லிப் பார்த்தார்.

“உதெல்லாம் பேய்க்கதை புறோக்கர்… சுப்பிரமணியத்தின்ரை தேப்பன் இப்பவே அங்கை கடன் தனியிலை கிடந்து கஷ்டப்படுகிறார். இனி எங்கடை பிள்ளையைக் கொண்டுபோய் உழைப்பிக்கப் போகினம்போலை… அதுக்குத்தான் அந்தரப்படுகினம்.”

“நல்ல நியாயம் சொன்னியள்! அவங்கள் சகோதரங்கள் ஐஞ்சு ஆம்பிளைப் பிள்ளையள் இருக்கிறாங்கள்… தாங்கள் உழைச்சுக்கடனை அழிக்கேலாமல் உங்களிட்டை வாறாங்களே? உங்கடை இனஞ்சனந்தானே எண்டுதான் பேசிக்கொண்டு வந்தனான்” புறோக்கர் சற்று எரிச்சலுடன் சொன்னார்.

கமலத்துக்கு அம்மாவின் நியாயங்கள் சரியாகவேபட்டன.

“அவர் உழைக்கிற காசு எனக்கு ஒரு சீலை வேண்டக் காணுமோ எண்டு கேளம்மா!” என்று கேலியாகவே கேட்டாள்.

புறோக்கர் மேற்கொண்டு கதைக்கவில்லை.

“அவையள் சொந்தக்காரர் எண்டாப் போலை அவளை கொண்டு போய் அந்தப் பாழுங்கிணத்திலை தள்ளாமல் வேறையொரு நல்ல இடமாய் பேசிக்கொண்டு வாங்கோ புறோக்கர்!” என அவரை அனுப்பி வைத்தாள் செல்லமணி.

அப்பொழுது கச்சேரியில் ஒரு சாதாரணக் ‘கிளாக்’ ஆக இருந்த சுப்பிரமணியம் இப்பொழுது உதவி அரசாங்க அதிபராக உயர்ந்துவிட்டார்.

கமலம் கந்தசுவாமிக் கோவில் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவளையறியாமலே, “அப்பனே முருகா!” என மனது எதையோ யாசித்தது.

அப்பொழுது கமலம் ஒரு பட்டதாரி ஆசிரியை. இருபத்து மூன்று வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று வெளியேறியவளுக்கு ஆசிரியை நியமனமும் கிடைத்தது. கமலத்துக்கும் தாய் செல்லமணிக்கும் பெருமை பிடிபடவில்லை.

கமலத்தை பட்டதாரியாக்க வேண்டுமெனப் படாதபாடுபட்டவள் செல்லமணி. சிறுவயதில் அவளுடைய திறமையைப்பற்றி ஆசிரியர்கள் கூறும் போதெல்லாம் எப்படியும் அவளைப் படிக்க வைத்து ஆளாக்கிவிட வேண்டுமென்றுதான் கனவு காண்பாள். அவளுடைய அயரா முயற்சியில் அந்தக் கனவும் பலித்தது.

கமலத்தின் தந்தை முருகேசர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். தானுண்டு தன் பாடுண்டு என இருந்துவிடுவார்.

“பெடியங்களே படிச்சுப் போட்டு உத்தியோகமில்லாமல் இருக்கிறாங்கள்…… இவள் படிச்சு என்ன செய்யப் போறாள்? ……… ஒருத்தனிட்டைப் போனால் அடுப்பு மூட்டிக் கொண்டு குசினியிக்கை கிடக்க வேண்டியவள் தானே?” என்பது அவருடையவாதம். இதனால் தந்தையின்மேல் கமலத்துக்கு சற்று வெறுப்பும்கூட. செல்லமணி கணவனுடைய முகத்திற்கே சொல்வாள்.

“இந்த மனுசன் இருந்துதான் என்ன சுகத்தைக் கண்டன்?… நான் ஒரு பொம்பிளை கிடந்து உலையுறன் அந்தாள் அம்மிக்கல்லுமாதிரி வீட்டுக்குள்ளை குந்திக் கொண்டிருக்குது!” முருகேசு சூடு சுரணையில்லாமல் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார், பழக்க தோஷம்!

கமலத்தின் திருமண விஷயத்திற்கூட முருகேசர் பின்னுக்குத்தான் நின்றார், “தாய்க்கும் மோளுக்கும் ஏத்த மாப்பிள்ளை தேடுவதெண்டால் இனி நான் செய்தெல்லோ கொண்டு வரவேணும்!”

“அப்புசாமி!” என இளைய மகள் கும்பிட்டதைக் கண்டதும் தான் சுவாமி வீதிவலம் வந்து கொண்டிருப்பதைக் கமலமும் கவனித்தாள். மிகவும் பயபக்தியுடன் மனதை ஒரு நிலைப்படுத்தி தனது கவலையையெல்லாம் இறைவனிடம் முறையிட்டாள்.

‘கவலைப்பட வேண்டிய காலமெல்லாம் கடந்து விட்டதே’ என்ற எண்ணமும் கூடவே எழுந்து வருத்தியது.

இளம் தம்பதியர்கள் பலர், கைகோர்த்துக் கொண்டு செல்கிறார்கள். கணவனுடைய கையை மென்மையாகப் பிடித்துக் கொண்டு அவனோடு அணைந்தவாறு ஒருத்தி செல்கின்றாள். அவன் அவளுக்குத் தகுந்த துணையாக, அவளை எவ்வளவு பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றான்! தனது மனைவியையும், பிள்ளைகளையும் அப்பா ஒருவர் எவ்வளவு பக்குவமாக சனத்தினுள் இடிபடாமல் கூட்டிச் செல்கிறார். பார்த்துக்கொண்டு நின்றால் இந்தக் காட்சிகள் தான் கமலத்தின் கண்களை குத்துகின்றன.

அவளுக்கு யார் தான் துணை? கமலம் கண்களை மூடிக் கொண்டாள், “அப்பனே முருகா…… நீதான் எனக்குத் துணையிருக்க வேணும்!”

“காலத்தோடை பயிர் செய்ய வேணும்…பொம்பிளையளுக்குத் துணை தான் முக்கியம்…… உத்தியோகம் பெரிசில்லை… இப்ப ஒவ்வொரு நொட்டை சொல்லி … வர்ற சம்பந்தங்களையெல்லாம் தட்டிக் கழிச்சால் பின்னடிக்குத்தான் கவலைப்படவேண்டி வரும்…… இப்ப தெரியாது……. எவ்வளவு காலத்துக்குத்தான் இப்பிடியே இருக்கப் போறாய்?” கமலத்தின் அண்ணன் பரமநாதன் இப்படித்தான் முன்பு சொன்னான். அண்ணனுடைய வாதம் அப்பொழுது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.

“எனக்கு ஒருத்தற்றை உதவியும் தேவையில்லை… என்ரை காலிலை நிக்க ஏலும்! நான் உழைச்சு அம்மாவின்ரை கடனை அழிச்சு… கடைசிவரைக்கும் அவவை வைச்சுக் காப்பாற்றுவன்!”

அப்பொழுது கமலத்துக்கு இருபத்தேழு வயது. அண்ணனுக்கு முப்பது வயது. பரமநாதனும் படிப்பு முடிந்து உத்தியோகம் செய்து கொண்டிருந்தான்.

அம்மா இரகசியமாக கமலத்தின் காதில் ஓதினாள் …. “அவருக்கு அவசரமாயிருக்குது போலை… அது தான் உந்தக் கதை கதைக்கிறார்.”

அதைக்கேட்டு அவளும் அண்ணனுடைய முகத்தை முறிப்பது போலச் சொல்லி விட்டாள், “உனக்கு அவசரமெண்டால் போய்முடி! என்ரை விஷயத்திலை ஒருத்தரும் தலையிடத்தேவையில்லை!”

அவனும் முடித்துக் கொண்டு போய்விட்டான்.

கந்தையாப் புறோக்கர் பேசிக்கொண்டு வந்த கச்சேரியடிச் சம்பந்தத்திற்தான் அண்ணனையும் முறிக்க வேண்டிவந்தது.

“கச்சேரியடியிலை ஒரு மாப்பிளை இருக்கு பெரிய உத்தியோகக்காறன்… நாலைஞ்சு பேருக்கு பெரியவனாய் இருக்கிறான்… நாப்பது, ஐம்பது பவுண் உழைக்கிறான்… இனி குடும்பக் கரைச்சல் பொறுப்பு ஒண்டும் இல்லாத பெடியன்… பிள்ளைக்கு நல்ல தோதான மாப்பிள்ளை”

செல்லமணி தீவிரமாக யோசித்தாள். பின்னர் ஏதோ முடிவுக்கு வந்தவள் போலக் கேட்டாள்,

“புறோக்கர் ஆரைச் சொல்லுறீர்? வேலுப்பிள்ளையற்றை பெடியனையே?”

“ஓ! அங்கை உங்களுக்கு ஆக்களையும் தெரியும்! பிறகென்ன? பேசி முடிக்க வேண்டியதுதானே?”

“புறோக்கர்! ஆக்களை விளங்காமல் கதைக்கிறீர்!… உவையள் ஆர் ஆக்கள் தெரியுமே?…. உவை யோடை நாங்கள் எந்தக்காலத்தில உறவாடினனாங்கள்?… வேலுப்பிள்ளையற்றை தங்கைக்காறி ஒருத்தியெல்லே… முந்தி ஒருத்தனோடை கூடிக் கொண்டு ஓடினவள்? அவன் என்ன சாதி எண்டு தெரியுமே? அதுக்குப் பிறகு தானே… உவையளைச் சந்தி சபைக்கு வேண்டாமென்று விட்டனாங்கள்!”

“இப்படிக் கொண்டு வர்றதுக்கெல்லாம் ஒவ்வொரு குறை சொன்னால்… நான் எங்கை மாப்பிளை பிடிக்கப் போறது?…. இன்னும் நீங்கள் உங்கடை காலத்திலை தான் நிக்கிறீங்கள்!… பிள்ளையளின்ரை காலத்திலை உதெல்லாம் ஆர் பாக்கப் போகினம்?… குழப்பாமல் செய்து வையுங்கோ!”

“புறோக்கர்! இந்தச் செல்லமணியை உமக்குத் தெரியாது. தின்னவேலி நடராசற்றை குடிபூரலுக்குக் கச்சேரியடியார் வந்திட்டினமெண்டெல்லே… நான் எல்லாரையும் கூட்டிக்கொண்டு வெளிக்கிட்டனான். அப்பிடிக்கொத்த செல்லமணி இனி அந்த வாசற்படி ஏறுவாள் எண்டு நினைக்கிறீரோ?” பெருமையுடன் கூறினாள் செல்லமணி.

அம்மாவின் ‘விசர் ஞாயங்களைக்’ கேட்க பரமநாதனுக்கு எரிச்சலாயிருந்தது.

“வேலுப்பிள்ளையின்ரை தங்கச்சி ஆரோடை ஓடினாத்தான் உனக்கென்னணை அம்மா?… இப்ப அவற்றை மகனைத்தானே பேசப்போறியள்?” என அம்மாவிடம் சொல்லிப் பார்த்தான்.

“உனக்கு ஒரு கோதாரியும் தெரியாது … கச்சேரியடியாரோடை சம்பந்தம் செய்தால் பிறகு உன்னை ஒரு சந்தி சபைக்கு எடுப்பினமே?”

பரமநாதனுக்கு ஆத்திரம் எல்லை மீறியது. ‘எங்களை ஒருத்தரும் கூப்பிடத் தேவையில்லை! கண்டறியாத சாதிபேதம் கதைக்கிறனீங்களெல்லாம் பெரிய திறமான ஆக்களே?… அவரவற்றை நடத்தையைக் கொண்டு தான் மனிசனைக் கணிக்க வேணும்!”

“தம்பி சொல்றதும் ஞாயம் தான்” புறோக்கர்.

செல்லமணி சினங்கொண்டவளாக, “அவளுக்குக் கலியாணம் முடிச்சு வைக்க எனக்குத் தெரியும்! நீங்கள் ஒருத்தரும் இதிலை தலையிடத் தேவையில்லை!” என வெடித்தாள்.

புறோக்கருக்கு முகம் கறுத்துப் போய்விட்டது. பரமநாதனுக்கு ஆத்திரத்தில் இன்னும் முகம் சிவந்து விட்டது. நல்லகாலமாகத் தான் இந்த விவாதத்தில் பங்குபற்றவில்லை என மகிழ்ந்து கொண்டார் முருகேசர்.

பரமநாதனுக்கு அம்மாவின் போக்குப் பிடிக்கவில்லை. தங்கையுடனாவது கதைத்துப் பார்க்கலாமென நினைத்தான்.

“கமலம்! நீயும் எவ்வளவு காலத்துக்குத்தான் அம்மாவின்ரை எண்ணத்துக்கு நிண்டு ஆடப்போமுய்? நீ படிச்சனி… நீயே சிந்திச்சு நல்ல முடிவுக்கு வரவேணும். ஏனெண்டால் இதாலை வர்ற கஷ்டநஷ்டங்களை அனுபவிக்கப் போறவள் நீதான்! அம்மா உன்னோடை நெடுகலும் இருக்கமாட்டா …”

கமலத்துக்கு அண்ணனுடைய நியாயம் ஏறவில்லை. அவள் அம்மாவின் பக்கம்தான். அம்மாவினுடைய சுயகௌரவத்தில் அவளுக்குப் பெருமையும் கூட! தனது தரத்துக்கு ஒரு விதக்குறையுமில்லாத மாப்பிளை தான் தேவை என நினைத்தாள் கமலம். அப்படி ஓரு மாப்பிளையை அம்மாவினாற்தான் தேர்ந்தெடுக்க முடியுமென்பதும் அவளுடைய நம்பிக்கை.

“எனக்காக ஒருத்தரும் கஷ்டப்படத் தேவையில்லை! நான் இப்பிடியே எவ்வளவு காலத்துக்கும் இருப்பன்……அம்மா சொல்லுறதும் சரிதானே?”

இதைப்போய் யாரிடம் சொல்லி அழுவதென்று அவனுக்குப் புரியவில்லை.

“இவளுக்கு உத்தியோகம் பாக்கிறனெண்ட திமிர்! இப்ப தெரியாது…… பிறகுதான் கவலைப்படுவாள்”, எனத் தந்தையிடம் ஏசிக்கொண்டு போய்விட்டான் பரமநாதன்.

கமலம் கவலை மேலிடத் தன் குழந்தைகளைப் பார்க்கிறாள். அவர்கள் மகிழ்ச்சியாகக் கோயில் மணலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சந்தோஷத்தில் குறுக்கிட விரும்பாமல் கவனத்தைத் திருப்பினாள்.

கமலத்தின் மூத்த மகளை மூன்று வயது வரை தனது கட்டுப்பாட்டிலேயே வளர்த்த செல்லமணிக் கிழவியும் இறந்து ஒரு வருடமாகிவிட்ட்து.

கமலத்தின் கண்கள் கலங்கின. அது அம்மாவின் மறைவை நினைத்தோ அல்லது அம்மாவின் எண்ணப்படி நின்று ஆடியதனால் தனது வாழ்வு நிறைவில்லாத ஒன்றாகி விட்டதனாலோ என்று புரியவில்லை.

கமலத்துக்கு முப்பது வயது கடந்துவிட்டது. பின்னர் தான் தனது கலியாணத்தின் அவசியத்தைப்பற்றி உணரத் தொடங்கினாள்.

கணவனும் மனைவியுமாக இளம் தம்பதியர் கை கோர்த்துச் செல்வதைக் காணுகின்ற பொழுது ஏற்படுகின்ற ஒருவித கிளர்ச்சிகள் – தான் இன்னும் செல்வியாக இருப்பதனால் பாடசாலையிற் சக ஆசிரியர்கள் – திருமணமானவர்களும் கூட, தேவையில்லாமல் வந்திருந்து அரட்டையடிக்கின்ற சம்பவங்கள், உயர் வகுப்பு மாணவர்களின் சிலேடையான பேச்சுக்கள், மாணவியரின் கேலி வார்த்தைகள்… பாதையிற் சில ஆடவரின் வித்தியாசமான பார்வைகள், ‘பஸ்’சிலே பிரயாணம் செய்கின்ற போது சில வாலிபர்களின் தவறுதலான அல்லது குறும்பான ஸ்பரிசத்தினால் கிளர்கின்ற உணர்ச்சிகள்… பல இரவுகளை உறக்கமின்றியே கழியச் செய்தன. அப்படி உறக்கமில்லாத இரவுகள் அவளுக்கு ஒரு துணையின் அவசியத்தை வலியுறுத்தின. கழுத்திலே ஒரு தாலிக்கொடி இருந்தால் அவர்களெல்லாம் இப்படி நடந்து கொள்வார்களா?

கமலத்தின் ‘நச்சரிப்பு’ செல்லமணிக்குப் பெரிய தலையிடியாகப் போய்விட்டது. கந்தையாப் புறோக்கர் கொண்டு வந்த எத்தனை சம்பந்தங்களைத்தான் அவள் ஒவ்வொரு நொட்டை சொல்லித் தட்டிக் கழித்திருக்கிறாள்.

கந்தையாப் புறோக்கரும் இப்பொழுது இந்தப் பக்கம் வராமல் விட்டு விட்டார்: ‘ கமலத்துக்கு பேசி வந்த எத்தனையோ மாப்பிள்ளைமார் இப்ப கலியாண மும் முடிச்சு பிள்ளை குட்டியோடை இருக்கிறாங்கள்.’

கச்சேரியடி வேலுப்பிள்ளையின் மகன் சதாசிவம் இன்னும் மணமாகாமல் இருக்கிறான். செல்லமணி வேலுப்பிள்ளையின் வாசற்படி ஏறிச் சென்றாள் , வேலுப் பிள்ளை கையை விரித்து விட்டார்.

செல்லமணி இடிவிழுந்தவள் போலானாள், ஏறி இறங்காதபடிகளும் இல்லை. திறக்காத கதவுகளும் இல்லை

இப்படியே நான்கு வருடங்கள் வரையில் கழித்து கொண்டிருந்த பொழுது தான் ‘கடவுள் செயலாக’ – ஒரு சம்பந்தம் வீடு தேடி வந்தது.

கச்சேரியடி சதாசிவம் தான்!

அவன் ஏற்கனவே திருமணமாகி, மூன்று வருடங்கள் முடியுமுன்னரே இரு பிள்ளைகளுக்கும் தந்தையாகி மனைவியையும் பறிகொடுத்த பின்னர் இப்பொழுது ‘இரண்டாம் தாரமாகக்’ கமலத்தைக் கேட்டு வந்தான்.

‘ஏதோ கடவுள் விட்டவழி!’ என செல்லமணியும் ஒத்துக்கொண்டாள். செல்வியாக இருந்த கமலம் தனது முப்பத்தைந்தாவது வயதில் திருமதியானாள்.

“மிஸ்ஸிஸ் சதாசிவம் நிற்கிறா!” என்றவாறே சொர்ணம்ரீச்சரும் கணவரும் அண்மையில் வந்தார்கள்.

“என்னப்பா தனிய நிற்கிறீர்?”

“ஓம் என்ன செய்கிறது?” என விரக்தியுடன் பதிலளித்தாள்.

நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாமல் இருந்து அண்மையிற்தான் தாய்மை அடைந்தவள் சொர்ணம். மிஸ்டர் ‘தில்லைக்கூத்தன்’ எடுத்ததற்கெல்லாம் தனது மனைவியைத் தலையிலே தூக்கி வைத்துக் கொண்டு கதைத்தார். சற்று நேரம் கதைத்துக் கொண்டு நின்று விட்டு அவர்களும் விடைபெற்றனர்.

கமலம் பெருமூச்செறிந்தாள்.

சதாசிவம் அவளை மணந்து கொண்டாலும் அதனால் என்ன சுகத்தைத் தான் கண்டாள்! உண்மையான பிரியமும் பாசமும் உள்ள ஒரு கணவனாக அவர் எப்பொழுதாவது நடந்திருக்கிறாரா? ஐந்து வருடங்கள் அவருடன் வாழ்ந்து விட்டாள். ஒரு கடமைக்காகத் தான் இவள் மனைவியாகவும் அவர் கணவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது!

தினமும் குடிப்பார். முதலாம் ‘தாரத்து’ நினைவுகள் தான் அவரை வாட்டுகின்றன போலிருக்கிறது. (குடிவெறியில் வந்து சதா அவளைப்பற்றியே பிதற்றுவார்) வீட்டுக்கு நேரம் கழித்தே வருவார்.

கமலத்துக்கு அழவேண்டும் போலத் தோன்றும். ஏக்கமாக இருக்கும். ஒரு புதுமணப் பெண்ணுக்குரிய ஆசைகளுடனும், ஏக்கத்துடனும் தான் கமலம் மணம் முடித்தாள்.

நேரம் தாமதித்து வீடுவந்த கணவனிடம் ஒரு நாள் நேரடியாகவே கேட்டாள்.

“வீட்டிலை, நான் ஒருத்தி உங்களுக்காகக் காத்துக் கிடக்கிறது தெரியவில்லையோ?… ஒவ்வொரு நாளும் இப்பிடி மதியில்லாமல் குடிச்சுப்போட்டு வந்தால் என்ன முடிவு?”

அவர் நிதானமாகச் சொன்னார்,

“கமலம் நான் எனக்கொரு மனைவி தேவையெண்டு உன்னைக் கலியாணம் கட்டயில்லை!… இந்தப் பிள்ளையளுக்கு ஒரு அம்மா தேவையெண்டுதான் கட்டினனான்.”

சனநெருக்கடி குறையவே பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கமலம் வீட்டுக்குப் புறப்படத் தொடங்கினாள்.

ஆறுமாதத்துக்கு முன்னர்தான் சதாசிவத்துக்கு மன்னாருக்கு மாற்றம் கிடைத்தது. கமலத்தையும் மன்னாருக்கு மாற்றம் கேட்டு விண்ணப்பிக்குமாறு சதாசிவம் வற்புறுத்தினார் கமலம் மறுத்துவிட்டாள்.

சதாசிவம் மன்னாருக்குச் சென்று இரண்டு மாதத்திற்குள்ளேயே தனது முதலாம் தாரத்துப் பிள்ளைகள் இரண்டிற்கும் பாடசாலையொன்றில் இடம் எடுத்து அங்கேயே அழைத்துக் கொண்டுவிட்டார்.

கமலம் தன் இருபிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலே இருந்துவிட்டாள்.

வீதியோரத்தில் எதையோ விற்பனை செய்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் “போனால் கிடையாது!… பொழுதுபட்டால் கிட்டாது!” என சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

கமலத்தின் நெஞ்சிலும் அதே உறுத்தல்; “பொழுது பட்டுத்தான் போச்சுது” குழந்தைகளை அணைத்தவாறு நடந்தாள்.

- வீரகேசரி 16-10-1977 

தொடர்புடைய சிறுகதைகள்
அக்கா சற்று சந்தோஷமான மனநிலையில் இருப்பதுபோலத் தென்பட்டது. இன்று ஷெல்லடிச் சத்தம் இல்லை. இடம் பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பலாம் என்ற அறிவித்தலும் வந்திருக்கிறது. சொந்த இடங்களைப் போல் சொர்க்கம் வேறேது? இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரு ...
மேலும் கதையை படிக்க...
இந்த அதிகாலைக் குளிரில் தண்ணீர் காலைத் தொட்டதும் தேகம் ஒருமுறை சிலிர்த்தது. வாய்க்காலில் ஓடிவந்த தண்ணீரை அனுஜன் கால்களால் அலசித் தள்ளிவிட்டான். மரவள்ளிப் பாத்தி தண்ணீரை உறுஞ்சி நனைந்தது. பாத்தியில் தண்ணீர் நிறைந்ததும் மண்வெட்டியால் மறித்துக் கட்டினான். தண்ணீர் உயிருள்ள ஒரு ஜீவனைப்போல ...
மேலும் கதையை படிக்க...
கடைவீதியில் நெருக்கம் அதிகமாய் இருந்தது. அவர்களைத் தட்டிவிடாத நிதானத்தை வீதியில் வைத்துக்கொண்டு ஒரு நிறுத்திடத்துக்காக ஓரங்களில் பார்வையைச் செலுத்திக்கொண்டு வந்தேன். கார் நிறுத்துவதற்கு ஓர் இடம் தேவைப்பட்டது. இப்பொழுது இங்கு வாகனங்கள் அதிகரித்துவிட்டன. அநேகமானோர் ஒரு வாகனமேனும் வைத்திருக்கிறார்கள். பலரிடம் கார் உண்டு. ...
மேலும் கதையை படிக்க...
கடைசியாக அம்மா கொழும்புக்கு வந்து சேர்ந்தாள். கடைசியாக என்று சொன்னால், அம்மா தனது வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் கொழும்புக்கு வந்து சேர்ந்தாள் என்று அர்த்தமல்ல. ஒருவகையில் பார்க்கப்போனால் இது அவளது வாழ்வின் கடைசிக் காலமும்தான்! சரிக்குச் சரி நாலு ஆண்களும் நாலு பெண்களுமாக ...
மேலும் கதையை படிக்க...
அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், எதற்காக அங்கு வந்து சேர்ந்தாள் என்றுகூட யாரும் அறிய ...
மேலும் கதையை படிக்க...
ரவின் அமைதியைக் குலைப்பதுபோல ஒரு பறவை இனிமையாக அலறிக் கொண்டு சென்றது. சில இரவுகளில் இப் படி அந்தப் பறவை பாடிக்கொண்டு செல்வது வழக்கம். அதன் கூவலில் சத்தியன் சுய உணர்வுக்கு வந்தான். ஏதோ அவலத்தைக் கண்டு குரல் கொடுப்பது போல அப்பறவை அலறிக் ...
மேலும் கதையை படிக்க...
குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது. வீரிட்ட அழுகை. இரவு முழுவதும் இதே கதைதான். அப்பன் எழுந்து வெளியே வந்தான். அப்பன் அவனது இயற்பெயர். குழந்தையின் அப்பனும் அவன்தான். பொழுது ஏற்கனவே விடிந்துகொண்டிருந்தது. நேரத்தோடு எழுந்த சில காகங்கள் முற்றத்திற்கு வந்திருந்து விடுப்புப் பார்த்தன. இரவு ...
மேலும் கதையை படிக்க...
தலைக்கு மேலே சுழற்சி.. தயவு தாட்சண்யமில்லாமல் கொளுத்துகின்ற வெயிலையும் பொருட்படுத்தாமல் மத்தியானம் சாப்பாட்டுக்காக முருகன் கபேக்குச் சென்று வந்ததால் ஏற்பட்ட உடலின் அயற்சியைப் போக்குகின்ற காற்றின் சுகமான விசுறல்.. மின்விசிறியின் சிரமதானம். கதிரவேலுவின் மனதில் யாருக்கென்று புரியாத நன்றியுணர்வும் அற்பப் பெருமிதமும் ஏற்பட்டது. ...
மேலும் கதையை படிக்க...
குண்டுகளில் பலவகை உண்டு. வெடிக்கக்கூடிய குண்டுகளைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. இது ரசிக்கக்கூடிய குண்டு. அழகிய குண்டு. அந்த வகையைச் சேர்ந்தவள்தான் அசியா. வழமையாக அவள் அணியும் உடலிறுக்கமான காற்சட்டையும் மேற்சட்டையும் அவளது குண்டு போன்ற தோற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம். அசியாவைக் காணும் சந்தர்ப்பம் ...
மேலும் கதையை படிக்க...
இது ஒரு துப்பறியும் கதையோ மர்மக் கதையோ அல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எனினும் இந்தக் கதை இப்படித்தான் தொடங்குகிறது.. நட்ட நடு நிசி! வாசற் கதவடியில் தடபுட என ஓசைகள்! அதன் பின் யார் யாரோ அழைக்கும் குரல்கள்! வீட்டிற்குள் நின்றபடியே யன்னலூடு பார்த்தேன். ...
மேலும் கதையை படிக்க...
மரநிழல் மனிதர்கள்
வெப்பம்
நிலைமாற்றம்
போகும் இடம்
பிறழ்வு
உள்ளங்களும் உணர்ச்சிகளும்
அகதியும் சில நாய்களும்
சுகங்களும் சுமைகளும்
இளமையின் ரகசியம்
ஆவிகளுடன் சகவாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)