பொற்கொடியின் சிறகுகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 23,069 
 

இளங் காலையின் செறிந்த மௌனம் பொற்கொடிக்காகக் காத்துக்கொண்டு இருந்தது. அவள் திண்ணையில் வந்து அமர்ந்ததும் வெறியோடு அவளைத் தழுவிக்கொண்டது. குளிருக்குக் கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு இப்படியும் அப்படியுமாக உடலைத் திருப்பினாள்.

சில நேரங்களில் அம்மா எதுவும் பேசாமல் இவளையே பார்த்துக்கொண்டு இருப்பார். அந்தக் கவனிப்பின் இறுதியில் அவர் கண்கள் இரண்டு படிகச் சொற்களைத் துளிர்க்கும். இவள் பார்ப்பதற்குள்ளாக முந்தானையால் அவற்றைத் துடைப்பார். ”நீ கொழந்தடி எம் பொண்ணே. ஆயுசுக்கும் நீ கொழந்தையாவே இருக்கணும்னு அந்த ஆண்டவன் எழுதிட்டான். உனக்கு நான் இருக்கும்போது என்னாத்துக்குக் கவல? வீட்டுலயே ஒக்காந்துனு இரேன்.”

பொற்கொடியின் சிறகுகள்பொற்கொடி நினைத்துக்கொள்வாள்… ‘நான் குழந்தையா அம்மா? ஒரே இடத்தில், சாணப் பொருக்குகள் சில்லுச் சில்லாகப் பெயர்ந்து விழும் திண்ணையில் எத்தனைக் காலம்தான் உட்கார்ந்திருப்பது?’ அம்மாவின் கைகள் பொற்கொடியின் மெலிந்த கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தன. நீண்ட நேரம் அப்படியே அமர்ந்து இருந்த பொற்கொடி ஏதோ நினைப்பு வந்தவளாகத் திண்ணையில் இருந்து கீழிறங்கி புழக்கடைப் பக்கமாகப் போனாள்.

நீர்த் திவலைகள் சொட்டும் முகத்துடன் திரும்பி வந்தபோது திண்ணை எதிரில் தையல் இயந்திரம் நின்றிருந்தது. அம்மாவும் தம்பியும் தூக்கிக்கொண்டு வந்து வைத்திருப்பார்கள். அவளுக்கு வாகாக வீட்டுக் கதவுக்குப் பக்கத்திலேயே எப்போதும்போல் இருந்தது அது. தவமணி அக்காவின் சட்டையை எடுத்துத் தைத்துக்கொண்டு இருந்தபோது, அம்மாவின் குரல் கேட்டது. அம்மா வேலைக்குத் தயாராகி நின்றிருந்தார். அவர் குடியாத்தம் பேருந்தைப் பிடிக்க வேண்டும். நேரத்துக்கு ஒன்று என வரும் அதைத் தவறவிட்டுவிடக் கூடாது என்கிற பதற்றம் குரலில் தெரிந்தது.

”யம்மா… நானு பெறப்புடறேன். சொணங்கிட்டா வண்டிய வுட்டுருவேன். தம்பியையும் தாயியையும் சோத்தைப் போட்டுனு போகச்சொல்லு. வூட்டப் பாத்துக்க. பத்ரம்… பத்ரம்.”

அரக்கப் பறக்க ஓடும் அம்மாவைப் பார்த்துக்கொண்டே இயந்திரத்தின் கைச் சக்கரத்தை அழுத்தி நிறுத்தினாள் பொற்கொடி. வீட்டுக்கு எதிரிலேயே கொஞ்சம் தள்ளி, பள்ளிக்கூடம் பக்கமாக இருக்கும் நிழற்கூடத்துக்கு மூச்சிரைக்க அம்மா நடப்பதை நுணுக்கமாகப் பார்த்தாள். அம்மா ஏறிக்கொண்ட பேருந்து மனிதர்களை நெருக்கமாக அடைத்துக்கொண்டுபோன கொஞ்ச நேரத்திலேயே, தம்பியும் தங்கையும் படிக்கக் கிளம்பிவிட்டார்கள். சக்தி வேல் மிதி வண்டியிலும் செவ்வந்தி நகரப் பேருந்திலும் போனார்கள். எல்லாரும் போன பிறகு தனிமையின் பிடி அவளின் குரல்வளையை நெரிக்கத் தொடங் கியது.

ஒவ்வொரு முறையும் தனிமையுடன் அமரும்போது நீயே பேசேன் என்கிறது அது. எதிரில் நிற்கும் இரட்டை மலையைவிடவும் உயரமாக வந்து நின்றுகொள்கிறது. பொற்கொடி தையல் இயந்திரத்தை வேகமாக ஓடவிட்டாள். உலகம் முழுமையிலும் அப்போது அவளின் தையல் இயந்திர ஓசை மட்டுமே நிறைந்திருப்பதாக நினைத்தாள்.

வீட்டின் மேற்குப் பக்கம் சில வீடுகள் தள்ளிஇருக்கும் பள்ளிக்கூடத்தில் இருந்து கூச்சலும் கும்மாளமும் கேட்டது. அங்கு படித்துக்கொண்டு இருந்தபோது பொற்கொடி, சாலையின் ஓரமாகவே தினந்தோறும் சீக்கிரமாகப் போய்விடுவாள். சிநேகிதிகளான அலமேலுவும் நந்தினியும் அவளை அரண் கட்டிய மாதிரி உடன் போவார் கள். அவளின் புத்தகப் பை அவர்களில் ஒருவரிடம் இருக்கும்.

நந்தினி தனது திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு பொற்கொடியைப் பார்க்க வந்தபோது அம்மா கதறி அழுதாள். அழைப்பிதழைத் தந்துவிட்டு நந்தினி சொன்னாள்…

”நீதாண்டி எனக்குத் தோழிப்பொண்ணு.”

அவள் போனதும் அம்மா பொற்கொடியை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு விம்மினார்.

”உன்னெ எப்பிடித்தான் கரையேத்தப் போறேனோ யம்மாடி?”

உயிர்வாசம் அடிக்கும் அம்மாவின் தோளை நனைத்தாள் பொற்கொடி. அவள் பூப்பெய்தியபோதும் அம்மா இப்படி அழுதது நினைவு இருக்கிறது. இப்போது எல்லாம் அம்மா அழுவது இல்லை. அவரின் கண்ணீர் சுண்டிவிட்டது. சில தருணங்களில் அவளைப் பார்த்து பெருமூச்சுடன், ”ஆண்டவன் வுட்ட வழி” என்கிறார். ‘அது என்ன வழி அம்மா?’ என்று பொற்கொடிக்கு கேட்கத் தோன்றுகிறது. ஆனால், துணிவு இல்லை. தனக்கானதொரு வழியை அம்மா ஒரு ரகசியம்போல வைத்துக் காக்கிறாள் என்று நம்பிக்கிடக் கிறாள்.

பொற்கொடியின் சிறகுகள்2நினைவு வந்தவளாக பொற்கொடி திண்ணையை விட்டு இறங்கி, வாசல் ஓரத்தில் இருந்த துணிக் கல் அருகில் போனாள். அவள் துலக்குவதற்கு என சில பாத்திரங்கள் அங்கு இருந்தன. சாப்பிட உட்கார்ந்தபோது தவமணி அக்காவின் ஞாபகம் வந்தது. அவள் திண்ணையில் வந்து அமர்ந்து தவமணியின் சட்டையை எடுப்பதற்கும், தவமணி வருவதற்கும் சரியாக இருந்தது. இனி, உச்சிப்பொழுது வரை தவமணி அக்காள்தான் துணை. ஊர்ப்பட்ட செய்திகளை எல்லாம் கொண்டுவந்து சேர்ப்பவள் அவள்தான். அவளின் சொற்களில் ஏறி தினமும் ஊர் சுற்றினாள் பொற்கொடி

சில நாட்களில் யாரும் இல்லாத பகலின் அனல் பொழுதுகளில் தனக்கோட்டி அண்ணன் வந்துபோகிறான். மார்பையே பார்த்துக்கொண்டு பேசுவதால் அவனை வர வேண்டாம் என்று சொல்லிவிட நினைக்கிறாள். ஆனால், அவன் தினமும் வந்து போக வேண்டும் என விரும்புகிறது உள்மனது.

பொற்கொடியின் சிறகுகள் மென்மையாகப் படபடத்தன. ஆழ்ந்த சிரிப்புடன் திண்ணையில் அமர்ந்திருந்தாள். தன்னைச் சுற்றியிருந்த அம்மா, தம்பி, தங்கையிடம் விடைபெற்றுக்கொண்டு பறக்கத் தொடங்கினாள். அவர்கள் நடுவாசல் வரையில் ஓடி வந்து அவளுக்குக் கை அசைத்தார் கள். பருந்துகளின் உயரத்தில் பறந்துகொண்டு இருந்தபோது புகைப்படத்தில் கடல் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இரட்டை மலை அருகில் சென்றதும் அவற்றை விலக்கிவிட்டு அந்த இடத்தில் கடல் ஒன்றை வைத்தாள் பொற்கொடி. உரத்த பேச்சின் சத்தம் உறக்கத் தைக் கலைத்தது. வெளியே திண்ணையில் அம்மா வுடன் ஊர் சிப்பந்தி பேசிக்கொண்டு இருந்தார்.

”நம்ம தாயிக்கு மூணு சக்கர வண்டி வந்து இருக்குதுக்கா. வர்ற பொதங் கெழம டவுனு ஐஸ்கூலுக்கு அதைக் கூப்டுக்கினு வந்துடு. மந்திரி வர்றாரு. காலையில பத்துக்கெல்லாம் அங்க வந்துடணும்.

வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்த பொற்கொடியைப் பார்த்து அம்மா ஆர்வத்தோடு சொன்னார்.

”பொண்ணே, உனுக்கு வண்டி தர்றாங்களாண்டி” – வாய் நிறையச் சிரிக்கும் அம்மாவைப் பார்ப்பதற்கு விநோதமாகத் தோன்றியது. எல்லாரும் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொண்டு ஆளுக்கொரு கதையைப் பேசத் தொடங்கினர்.

”அந்த வண்டியெ நான்தான் மொதல்ல ஓட்டுவேன்” என்றான் சக்திவேல். அம்மாவின் முகம் தெளிந்திருந்ததை பொற்கொடி கவனித்தாள். மாற்றுத்திறனாளி அட்டையை வாங்க அம்மா எவ்வளவு அங்கலாய்த்தார் என்பது தெரியும். மூன்று சக்கர வண்டியை அவள் பார்த்திருக்கிறாள். எல்லார் பேச்சில் இருந்தும் அது ரதம் போல உருவெடுத்தது.

”சுத்துப்பக்கம் இருக்கிற சிநேகிதக்காரிகளெ நீயே போய்ப் பார்த்து வரலாம். ஏதாவது வேணுமின்னா, மேல்பட்டி வரைக்கும்கூட தனியாவே போகலாம்!”

செவ்வந்தி சொல்லச் சொல்ல… வாசலுக்கு அப்பால் உள்ள உலகம் விரிந்தது. பட்டுத் துணியால் அலங்கரிக்கப்பட்ட அதில் அமர்ந்து எங்கெங்கோ சுற்றுவதுபோல கற்பனைகள் வந்துபோயின. அவர்களின் நீண்ட பேச்சின் முடிவிலே பொற்கொடிக்கு ஒரு ஐயம் தோன்றியது. சட்டென அதுவே பெரும் பயமாக வளர்ந்து நின்றது. அவள் திகில் பிடித்தவளைப் போல அவர்களிடம் கேட்டாள்.

”எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதே.”

”அதுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியணும்னு அவசியம் இல்லக்கா” என்றான் சக்திவேல்.

புதன்கிழமை காலையிலேயே புறப்பட்டு ஒரு பேருந்தைப் பிடித்து நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஊருக்கும் நகருக்கும் பதினைந்து கிலோ மீட்டருக்கும் மேல் இருந்தது. அம்மா உடன் வராததால், பொற்கொடியின் மனதில் துக்கம் கப்பிஇருந்தது. கட்டுவேலைக்குப் போய்க்கொண்டு இருக்கும் இடத்தில் சல்லி போட வேண்டியிருந்ததால் வர முடியாது எனச் சொல்லிவிட்டார் அம்மா. பொற்கொடியுடன், செவ்வந்தியையும் சக்திவேலையும் துணையாக அனுப்பியிருந்தார்.

அமைச்சர் வருகையை ஒட்டி நகரில் ஏற்பாடுகள் பலமாக இருந்தன. எங்கு பார்த்தாலும் அமைச்சரே சிரித்துக்கொண்டு இருந்தார்.

”உனக்கு வண்டி தர்றவரு எப்பிடிச் சிரிக்கிறாரு பாருக்கா” என்று சிரித்தான் சக்திவேல். பொற்கொடியை மேடைக்குப் பக்கத்திலேயே உட்காரவைத் தார்கள். மேடையின் முன்னால் வெளிர்பச்சை நிறத் தில் வரிசையாக மூன்று சக்கர மிதிவண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப் பட்டது என்று அவற்றின் முதுகுகளில் எழுதப்பட்டு இருந்தன.

நிகழ்ச்சியின் இடையே பொற்கொடியின் பெயரை வாசித்ததும் கட்சித் தொண்டர்கள் இருவர், அவளையும் வண்டியையும் அமைச்சரிடம் அழைத்துப் போனார்கள். கீழே வந்த பின் கிளர்ச்சி அடைந்த மனதுடன் அந்த வண்டியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தாள் பொற்கொடி. நிகழ்ச்சி முடிந்ததும் திடுமென வெறுமை சூழ்ந்ததுபோல இருந்தது. பள்ளி மைதானம் காலியாகிவிட்டது. அவளைப்போலவே அங்கு வந்திருந்த பலரும் துணைக்கு வந்தவர்களோடு கிளம்பிக்கொண்டு இருந்தனர். அவர்கள் மூவரும் கிளம்ப நினைத்தபோது, ஒரு சிக்கல் முன்னால் வந்து நின்றது. கடந்த நிமிடம் வரைக்கும்கூட அதை யோசித்திருக்கவில்லை. வண்டியை வீட்டுக்கு எப்படி எடுத்துச் செல்வது?

”வண்டியைப் பேருந்தில் ஏற்றிக்கொண்டு போய்விடலாம்” என்றான் சக்திவேல். அது சரியெனப்பட, செவ்வந்தியும் சக்திவேலும் வண்டியைத் தள்ளினார்கள். அது நகரவில்லை. அதன் மூன்று சக்கரங்களிலும் காற்று இல்லாமல் இருந்தது. உறுதியாகப் பூட்டப்பட்டு இராத அதன் இணைப்புகள் பலவீனமாக ஆடின. மூவருமாகச் சேர்ந்து கைகளால் வண்டியின் இணைப்புகளைத் திருகினர்.

வண்டியை மெதுவாக நகர்த்தி பேருந்து நிலையத்துக்குக் கொண்டுவருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. அவர்களுக்கு அங்கு ஏமாற்றமே காத்திருந்தது. கார்த்திகை தீபத்துக்கு எல்லா வண்டிகளும் திருப்பிவிடப்பட்டு இருந்தன. அவர்கள் ஊருக்குப் போகும் ஒரே தனியார் வண்டி, மாலையில்தான் வரும் என்றார்கள்.

வருகிற வழியில் சிலர் ஆட்டோக்களில் இந்த வண்டிகளை ஏற்றிக்கொண்டு போனது நினைவுக்கு வந்தது. சக்திவேல் அவர் களை ஓரிடத்தில் இருக்கச் சொல்லிவிட்டுப் போய் விசாரித்துக்கொண்டு வந்தான்.

”ஆட்டோவுக்கு முந்நூறு ரூபா கேக்குறாங்க. நம்ம பக்கத்திலேர்ந்து நாம மட்டும்தான் வந்திருக்கிறது. அதனால கூட்டாப் பேசிக்கினுகூட நாம போக முடியாது.”

அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. வழிச் செலவுக்கு என அம்மா கொஞ்சம் பணம் தந்திருந்தார். ஆத்திரத்திலும் இயலாமையிலும் எரிந்து விழுந்தாள் செவ்வந்தி. பொற்கொடியைப் பெரும் மௌனம் சுமையாக அழுத்திவிட்டிருந்தது. அங்கு இருக்கிற எல்லாரும் அவர்களைப் பார்ப்பதாக நினைத்தாள் செவ்வந்தி. தனது உடையை அப்படியும் இப்படியுமாக இழுத்துவிட்டுக்கொண்டு பொற்கொடி பக்கமாகவே திரும்பி நின்றாள். அவர்களிடம் இருந்த எல்லா யோசனைகளும் அற்றுப்போயின. எந்தக் கவலையும் அற்று பக்கத்தில் நிற்கும் வண்டியின் மீது எரிச்சலும் கோபமுமாக வந்தது பொற்கொடிக்கு. சாலையில் உராய்ந்து உராய்ந்து அவளின் உள்ளங்கைகளும் கால் முட்டிகளும் ஏற்கெனவே காந்தியிருந்தன. சக்திவேல் மட்டும் யாரிடமாவது பேச்சுக் கொடுத்துக்கொண்டும், விசாரிப்புகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டும் இருந்தான். நீண்ட நேரத் தவிப்புக்குப் பிறகு, அங்கிருந்த ஒருவர் அவனிடம் ஒரு யோசனையைச் சொன்னார்.

”எதுக்குத் தம்பி தத்தளிக்கிறீங்க? இப்பிடியே அந்தத் தெருவுல போனா ஒரு சைக்கிள் கடை இருக்குது. அங்க காத்து அடிச்சிக்குனு வண்டியெ சரிசெஞ்சுக்குங்க. அந்தப் பெண்ணை உட்காரவெச்சி தள்ளினே போயிடுங்க. காட்டு வழி தானே எடைஞ்சல் இருக்காது. சுருக்காப் போயிடலாம். இன்னும் சாயந்திரம் வரைக்கும் எதுக்குக் காத்துனு?”

சக்திவேல் ஆர்வத்தோடு அவர்களிடம் திரும்பினான். செவ்வந்தியின் முகம் பிரகாசமானது.

”உம்… போலாண்டா சக்தி.”

மிதிவண்டியைச் சரிபார்க்கிற கடைக்காரர் வண்டியைத் தயார்செய்துவிட்டு, பொற்கொடியை அதில் உட்காரவைக்க உதவி செய்தார். செவ்வந்தியும் சக்திவேலும் அவளின் ஒருபக்கத் தோளைப் பிடித்துக்கொண்டனர்.

”பழகற வரைக்கும் இப்படித்தான் இருக்கும்” என்றார் அவர். பெட்டிபோன்று இருந்த மிதிவண்டியின் இருக்கையில் அமர்ந்ததும் மனது விம்மியது. பெருமிதமும் உறுதியும்கொண்ட முகத்துடன் அவர்களைப் பார்த்தாள் பொற்கொடி.

மெதுவாக வண்டியைத் தள்ளிக்கொண்டு பயணத்தைத் தொடங்கினர். நகரத்தைத் தாண்டும் வரை செவ்வந்திக்கு என்னவோபோல் இருந்தது. சற்றே குனிந்தபடி வண்டியைத் தள்ளுவது அசூயையாக இருந்தது. அவள் அவ்வப்போது தனது முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள். மிரட்சியும் வெட்கமும் அவளை வதைக்கத் தொடங்கி இருந்தன. தூரம் குறித்த மலைப்பும் சேர்ந்துகொண்டது. சங்கடம் மிகுந்த இடங்களில் சக்திவேலைத் தள்ளச் சொல்லி விட்டு, உடன் நடந்தாள்.

சில இடங்களில் பொற்கொடி தானே ஓட்டிப்பார்ப்பதாகச் சொன்னாள். ஆர்வத்துடன் அவள் கைபெடல்களை அழுத்தியதும் வண்டி தாறுமாறாக ஓடியதுடன் நகர மறுத்தது. சக்திவேலும் செவ்வந்தியும் வேண்டாமெனச் சொல்லிவிட்டனர். பொற்கொடியைப் பிடித்திருந்த தாழ்வுணர்வும் கூச்சமும் அவமானமாக உருவெடுத்து இருந்தது. அவள் சாலையில் எதிர்ப்படுவோரைப் பார்க்காமல் தவிர்த்தாள். புதிய இடங்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் திடீர் திடீரென எழுந்து எல்லா சங்கடங்களையும் அழுத்தியது. புதிய நிலப்பரப்பும் மனிதர்களும் அவளின் ஆர்வத்தை தீவிரப்படுத்தினர். நகரத்தின் எல்லையில் இருந்த வனக்காவலர் இல்லத்தைத் தாண்டியதும் அவர் களைத் தனிமை சூழ்ந்துகொண்டது.

மூவரையும் கவனிக்காமல் சாலையில் போவோர் கடக்கவில்லை. வியப்பும், வேடிக்கையும், பரிதாபமும் நிறைந்த மனிதர்களின் முகக் குறிப்புகளைப் பார்க்கச் சலித்தது. வழியில் எதிர்ப்பட்ட ஊர் ஒன்றில் செவ்வந்தியின் வகுப்புத் தோழி ஒருத்தியைப் பார்க்க நேரிட்டது. அவளிடம் பதற்றத்துடனேயே பேசினாள் செவ்வந்தி. அவர்களை விசாரிக்கும் சிலருக்கு சக்திவேல் பதில் சொல்லிக்கொண்டு வந்தான்.

ஏரிப்பாக்கத்தைத் தாண்டுவதற்குள் அவர்கள் களைப்படைந்துவிட்டனர். செவ்வந்திக்கும் சக்திவேலுக்கும் கைகள் ஓய்ந்துவிட்டன. சாலை ஓரம் இருந்த ஒரு காட்டோடைப் பாலத்தின் கைப்பிடிச் சுவர் மீது இருவரும் உட்கார்ந்துகொண்டு காலாறினர். அருகில் தெரிந்த வீட்டுக்குப் போய்த் தண்ணீர் வாங்கிவந்தான் சக்திவேல். கைப்பையில் இருந்த பிஸ்கட் பொட்டலத்தைப் பிரித்து மூவரும் தின்னத் தொடங்கினர். பெருமரமாக விரிந்திருந்த சாலை ஓரப் புளியன்கள் மெள்ளப் படபடத்து தமது விசாரிப்புகளை முணுமுணுத்தன.

மீண்டும் பயணத்தைத் தொடர்ந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் காடு அவர்களை உள்வாங்கிக்கொண்டது. காட்டுச் சாலையின் தனிமை அவர் களின் நடை சத்தத்தைத் துல்லியமாக எதிரொ லித்தது. வண்டியின் இயக்கம் விநோதமானதொரு கீச்சொலியை எழுப்பியதும் மரங்களில் இருந்த பறவைகள் தமக்குப் போட்டியாக வந்தவர் யாரோவெனக் குரல் எழுப்பின.

காடும் மலைத் தொடரும் பொற்கொடிக்கு விநோதமாகத் தெரிந்தன. சாலையோரப் பனை களைத் தழுவி வளர்ந்திருந்த ஆலமரங்களை ஆச்சர்யம் பொங்கப் பார்த்தாள். சில இடங்களில் அடர்ந்திருந்த உண்ணிப் புதர்களின் அருகே நின்று, பூக்களில் தேன் உறிஞ்சினர். சக்திவேல் கோவைப் பழங்களைத் தேடித் தேடி அறுத்தான்.

”சொத்தை களக்கா இருக்குதா பாருடா சக்தி” என்றாள் செவ்வந்தி. சீத்தா பழ மரங்களில் பழங்களைத் தேடினார்கள். வழி நெடுகிலும் பூத்திருந்த காட்டுப் பூக்களைக் கண் கிறக்கம்கொண்டு பார்த்தபடி கடந்தாள் பொற்கொடி. பல்லல குப்பத்தை எதிர்கொண்டதும் அவர்களுக்கு உற்சாகம் கொப்பளித்தது. இனி ஊர் கூப்பிடு தூரத்தில்தான்.

அன்றிரவு மூவரும் அடித்துப்போட்டதுபோலத் தூங்கினார்கள். பின் இரவின் குளிரில் பொற்கொடி தனது கனவுக்குள் நுழைந்து முடங்கிக்கொண்டாள். அவளின் வண்டிக்கு சக்திவேல் தான் கண்டுபிடித்த ஒரு கருவியைப் பொருத்திக் கொடுத்தான். செவ்வந்தி பட்டுத் துணியை இருக்கையில் போர்த்தி ஒரு

மெத்தையை வைத்தாள். பொற்கொடி வண்டியில் அமர்ந்து பொத்தானை அழுத்தியதும் அது பறந்தது. மலைகளின் மீது அது பறந்துகொண்டு இருந்தபோது கீழிருந்து ஒரு விசும்பலைக் கேட்டாள். பொற்கொடிக்கு விழிப்புத் தட்டியது. திண்ணையில் அம்மாவிடம் செவ்வந்தி சிணுங்கிக்கொண்டு இருந்தாள்.

”நீ பாட்டுக்கு அம்பது ரூபாவைத் தந்து அனுப்பிவெச்சுட்ட. எவ்ளோ சிரமப்பட்டோம் தெரியுமா? வண்டியத் தள்ளினு வர்றதுக்குள்ள வெக்கமாப்போச்சி. கை காலெல்லாம் வலி. எங்கூட படிக்கிறவளெல்லாம் பாத்தா தெரியுமா? இனிமேல் இதுக்கெல்லாம் நான் போக மாட்டேன், நீயே போய் வா.”

”எல்லாம் நம்ம அக்காவுக்காகத்தானே செஞ்சே? காசு இருந்தா குடுத்து அனுப்பியிருக்க மாட்டேனா? பேசாத இரு!”

பொற்கொடி படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்து புழக்கடைப் பக்கமாகச் சரசரவெனப் போனாள். செவ்வந்தியின் சிணுங்கல் நின்றுவிட்டது.

”இன்னும் கொஞ்ச நேரம் படுக்கிறதுதானேம்மா…”

அம்மாவின் விசாரிப்புக்கு பொற்கொடி பதில் சொல்லவில்லை. அவளுக்கு முகம் கொடுக்காமல் அம்மாவும் செவ்வந்தியும் வீட்டுக்குள் போய்விட்டார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வாசலில் வண்டியைத் தள்ளும் சத்தம் கேட்டது. அம்மாவும் செவ்வந்தியும் வாசலுக்கு ஓடிவந்து பார்த்தார்கள். வாசலில் இருந்த வண்டியை சாலைக்கு நகர்த்திக்கொண்டுபோய் அதில் ஏறி உட்கார்ந்துகொள்ள முயன்றுகொண்டு இருந்தாள் பொற்கொடி.

”என்னடியம்மா செய்யறே?”

வேகமாக ஓடி பொற்கொடியைத் தூக்கிவிட முயன்றாள் அம்மா. அம்மாவின் கைகளை வேகமாகத் தள்ளிவிட்டாள் அவள். வண்டியில் உட்கார்ந்ததும் கைப்பெடல்களை அழுத்தமாகச் சுழற்றினாள். அது மெ…ள்…ள நகர்ந்தது.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *