கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 19,617 
 

“வயசாயிருக்கே தவிர, விவேகமே இல்லையே? என்ன செய்வது?” உஷா கணவனிடம் புலம்பினாள்.

கையிலிருந்த ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து கண்களைத் திருப்பாமலே புருவத்தை மட்டும் உயர்த்தி விசாரிக்கிறான் சங்கர்.

“நீ யாரைப் பத்தி சொலறே? கொஞ்சம் புரியறாப் போலச் சொல்லேன்”.

கையினால் அவனுடைய புத்தகத்தைக் கீழே இறக்கிக் கொண்டு சொல்கிறாள், “அதான், சொன்னேனே…! அடுத்த வீட்டுக்கு ஒரு பாட்டி வந்திருக்காங்கன்னு…”

“ஓஹோ! அந்த ஸ்பான்ஞ் பொம்மை விஷயமா? சரியாப் போச்சு! நான் என்னமோ ஏதோன்னு பயந்தே போனேன்”.

புத்தகத்தை விடுவித்துக் கொண்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.

உஷாவுக்குக் கோபம் வருகிறது. ‘அவ்வளவு அலட்சியமாகவா இருக்கிறது, உங்களுக்கு?’ உம்மென்று உட்கார்ந்திருக்கிறாள்.

புத்தகத்தைத் தாழ்த்தி அவளைப் பார்த்து கிண்டலடிக்கிறான்.

“உனக்கு ஏன் இந்தக் கிழவிகளோடு சிநேகம்?”

அவளால் அவ்வளவு லைட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. புதுசா வாங்கியிருக்கோம். அடுத்த மாசம் முதமுதலா கொலு வைக்கப் போறோம். இவ்வளவு சொல்லியும் அந்தப் பாட்டிக்குப் புரிய மாட்டேன்கிறதே!

உஷாவுக்கு விளங்கவில்லை. யாரிடம் போய்ச் சொல்வாள்? எப்படித் தீர்ப்பாள்?

விஷயம் இதுதான்.

பக்கத்து வீட்டு ராவ் தம்பதிகள் இருவரும் வேலை பார்ப்பவர்கள். ராவின் ஒரே பிள்ளை வெளியூர் ஹாஸ்டலில் தங்கி காலேஜில் படித்து வருகிறான். பத்து நாட்களுக்கு முன் ஊரிலிருந்து வந்த ராவின் தாயார், தனியாகப் பொழுது போகாமல் வலிய வந்து உஷாவிடம் பேசிப் பழகி, இப்போது இருவரும் நட்பாகி விட்டார்கள். ராவின் மனைவியோடு அதிகம் பழக்கம் கிடையாது.

பாட்டிக்கு அறுபதுக்கு மேல் வயசிருக்கும். தலையெல்லாம் நல்ல நரை. சின்னதாக முடிந்திருந்தாள். முகத்தில் கூட ஐந்தாறு நரை முடிகள்.

மருமகள் காலையிலேயே அரக்கப் பரக்க சமைத்துச் சாப்பிட்டு விட்டுப் போய் விடுவது பாட்டிக்குப் பாந்தமாய் இருப்பதில்லை. மெதுவாக எழுந்திருந்து, பல் தேய்த்து, குளித்து, பூஜை முடித்து, சமயலறைக்குச் சென்று பசியோடு பாத்திரங்களைத் திறந்து பார்த்தால்….ஆறிப் போன மீதிச் சாப்பாடு. “ஹூம்! இது என்ன சமையலோ! கண்றாவி!” என்பாள்.

காம்பவுண்டுக்கருகிலிருந்து குரல் கொடுப்பாள். “உஷா! அம்மா.. உஷா!”

இவளும் இந்தப் பக்கத்திலிருந்து பதில் குரல் கொடுப்பாள். இவள் வீட்டுக் கறியும் குழம்பும் கிண்ணங்களில் பரிமாறப்படும். மருமகள் வருவதற்குள் தவறாமல் கிண்ணங்களை அலம்பிக் கொடுத்து விடுவாள், பாட்டி.

பாட்டிக்குச் சாப்பாட்டில் நப்பாசை. தினமும் இவளைப் பார்க்கும் போதெல்லாம் என்ன சமையல்? என்ன டிபன்? என்று கேட்கத் தவற மாட்டாள். மத்தியானத்தில் தூங்கிய நேரம் போக, மீதி நேரம் வீட்டைப் பூட்டி விட்டு இங்கே வந்து விடுவாள்.

முதல் நாள் வந்த போதே அந்தஸ்தை எடை போடுபவள் போல வீட்டை ஆராய்ச்சியாகப் பார்த்தாள். பாட்டிக்கு நல்ல கலைக் கண்கள். உஷாவின் கை வேலைத் திறனை மெச்சிக் கொண்டாள்.

இங்கேதான் வந்தது பிரச்சனை. தான் எக்ஸிபிஷனிலிருந்து வாங்கி வந்த ஸ்பான்ஞ் பொம்மையைப் பெருமையாகப் பாட்டியும் காட்டினாள், உஷா.

“இந்த தடவை முத முதலா நவராத்திரி கொலு வைக்கலாம்னு இருக்கேன். அதற்காக பொம்மை சேர்க்க ஆரம்பித்திருக்கிறேன்”, என்றாள்.

பாட்டியின் கண்கள் அந்த பொம்மையில் லயித்து விட்டன. ஊரிலிருக்கும் தன் பெண் வயிற்றுப் பேத்தி நினைவுக்கு வந்து விட்டாள்.

“உஷா! இந்த பொம்மையை எனக்குக் கொடுத்து விடேன். என்ன விலையோ தந்து விடுகிறேன்.நீ வேறு வாங்கிக் கொள்”.

பாட்டியின் கையிலிருந்து உடனே பொம்மையைப் பிடுங்காத குறையாக வாங்கி உள்ளே வைத்து விட்டாள் உஷா.

“இது எந்தக் கடையில் கிடைக்குமோ தெரியாதே. டவுனுக்குப் போகும் போது கிடைத்தால் உங்களுக்கு ஒன்று வாங்கி வருகிறேன்.”

“நான் அடுத்த வாரம் ஊருக்குத் திரும்ப வேண்டும். நீ ஒண்ணு செய்யேன், உஷா. வேறு வாங்கிக் கொள். என் பேத்தியப் பற்றித் தான் சொல்லியிருக்கேனே, உன்னை மாதிரிதான் அவளும். ஆசை ஆசையா எல்லாம் செய்வா”.

“இருந்தாலும்… பாட்டி, எனக்கு இதோட வேலை தெரியாது.”

அதற்கென்ன? இருபத்தஞ்சு ரூபா தரேன். பொம்மையைத் தா”.

“ஐயையோ அவ்வளவு விலை இருக்காது. ஆனாலும் விலை சரியாக நினைவில்லை. உங்களிடம் அதிகம் வாங்கிக் கொள்ள எனக்கும் கஷ்டமாயிருக்கும்”.

பாட்டியிடம் பலிக்கவில்லை.

“சரிதான் போ! நீ என் பெண் மாதிரி. ஒரு அஞ்சு பத்து உன்கிட்டே என் காசு இருந்தா ஒண்ணும் ஆயிடாது”.

அன்று பாட்டியை எப்படியோ சமாளித்து வீட்டுக்கு அனுப்புவதற்குள் பெரும்பாடாகி விட்டது, உஷாவுக்கு.

நாளை எப்படியும் பாட்டியைச் சந்திக்கத்தானே வேண்டும்?

மறுநாள்.

கணவனை அலுவலகத்துக்கு அனுப்பிய பின், வேலைகளில் லயித்திருந்த உஷாவுக்கு பாட்டியை எப்படிச் சமாளிப்பது என்பது இன்னும் புரிபடவில்லை.

“டிங்…டாங்…”

காலிங் பெல் கூப்பிட்டது.

கதவைத் திறந்த உஷா திடுக்கிட்டாள்.

“அடடே! அம்மா…! வாம்மா, அப்பா வரலையா?”

“இல்லேடியம்மா. நான் மட்டும் தான் கிளம்பி வந்தேன். உன் மன்னிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. அவள் வீட்டிலேருந்து போன் வந்தது. அது தான் நான் மட்டும் போய்ப் பார்த்து விட்டு வரலாம்னு கிளம்பி வந்தேன். இரண்டு நாளில் லீவு எடுத்துக் கொண்டு உன் அண்ணாவும் அப்பாவும் போய் வருவார்கள். போகும் வழியில் உன்னையும் பார்த்துப் போகலாமென்று வந்தேன்”.

நான்கு மணி நேரம் பஸ்ஸில் வந்தது தாங்கவில்லை, அம்மாவுக்கு. சோர்ந்து போயிருந்தாள்.

“மாப்பிள்ளை மத்தியானம் சாப்பிட வருவாரில்லையா? அவரையும் பார்த்து விட்டு மூணு மணி பஸ்ஸுக்குக் கிளம்பினாத்தான் சரியாயிருக்கும். இந்தா…பையை உள்ளே வை!”

அம்மா புஸ்புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு காலை நீட்டி உட்கார்ந்தாள். காலைப் பிடித்து விட்டுக் கொண்டாள்.

பெட்டியைத் திறந்து ஒரு கோலப் புத்தகத்தை ஆசையாக எடுத்து உஷாவிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிப் பார்த்த உஷா வியந்தாள்.

“உனக்குக் கோலம்னா பைத்தியமாச்சேன்னு வாங்கிண்டு வந்தேன். உன் மன்னிக்கு இதிலெல்லாம் ஆர்வமே கிடையாதுடி. ஆனால் எதிர் வீ ட்டில் ஒரு பெண் இருக்கிறது. உன்னை மாதிரியே தான், எல்லாத்துலயும். தினுசு தினுசா பட்சணம் பண்றதும், புதுசு புதுசா கை வேலை பண்றதுமா, அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு உன் ஞாபகம்தான் வரும். அவ தான் இந்தக் கோலப் புத்தகம் அவ வீட்டுக் காரர் மதுரை போன போது வாங்கிண்டு வந்தார்னு காமிச்சாள். அடுத்த தடவை போகும் போது உனக்கும் ஒண்ணு வாங்கிண்டு வரச் சொல்லலாம்னு தான் இருந்தேன். ஆனால் திடீர்னு கிளம்ப வேண்டி வந்துடுத்து, சரிதான்னு…வெட்கத்தை விட்டு அவ கிட்டே கேட்டுட்டேன். “இந்த புக்கை என் பெண்ணுக்கு கொடு. நீ வேறே வாங்கிக்கோன்னு”. உன் அண்ணாவுக்குத் தெரிஞ்சா வைவான். ஆனா, அந்தப் பொண்ணு கொஞ்சம் கூட யோசிக்காம உள்ளே போய் டக்குனு கொண்டு வந்து கொடுத்துட்டாள் . நான் கூட அவகிட்டே சொன்னேன், என் பெண் கூட உன்னை மாதிரி தாண்டின்னு. இன்னும் காசுகூட கொடுக்கலைடி, உஷா. புத்தகம் நன்னாயிருக்காடி?”

குழந்தை போல் கேட்டு, இவள் முகத்தைப் பார்க்கும் தாயைப் பார்க்கையில் நெஞ்சு கரைந்தது. கண்ணீர் வந்தது. அடுத்த வீட்டு மாமியார் நினைவுக்கு வந்தாள்.

“சரி …வாம்மா! இந்தக் காப்பியைக் குடிச்சுட்டு குளி. அதுக்குள்ள சூடா எதாவது பண்ணிடறேன்”.

சமயலறையில் புகுந்த உஷா, பக்கத்து வீட்டுப் பாட்டிக்குப் பிடித்த மணத்தக்காளி வற்றல் குழம்பும், உருளைக் கிழங்கு கறியும் செய்கிறாள்.

“இதென்னடி சமையல் இப்ப போய். ஏதோ இருக்கறதை போடக் கூடாதா?” குளித்து விட்டு புடவையைச் சுற்றிக் கொண்டு வந்த அம்மா கேட்கிறாள்.

“இருக்கட்டும்மா! இதோ ஒரு நிமிஷம் இரு. வந்துடறேன்”.

அம்மா உள்ளே போய் புடவை கட்டிக் கொண்டு வருவதற்குள் பெட்டியிலிருந்த ஸ்பான்ஞ் பொம்மையையும் கிண்ணங்களில் பதார்த்தங்களையும் எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்குச் சென்றாள், உஷா.

– மங்கையர் மலர், அக்டோபர், 1990ல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *