தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,698 
 

மதுரை அரசு பொது மருத்துவமனை எதிரிலுள்ள டாக்சி ஸ்டாண்ட். நான்கு டாக்சிகள் வரிசையாக நின்றன. கடைசி டாக்சி அருகே, மணியும், ஜெகதீசும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

“”உனக்கென்னடா, ஜாலியா துபாயில் வேலை பார்க்கிறே… நான் பாரு தினமும் பொணங்களை ஏத்திக்கிட்டு போய் பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்கேன்,” என்றான் மணி.

“”இதுவும் வேலைதானடா, மாப்ளே… நான் வெளிநாட்டுல வேலை பார்க்கறேன்னா ஏதோ ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கேன்னு நினைச்சிடாதே. காலையில் ஐந்து மணிக்கு எந்திருச்சா, ராத்திரி பதினொரு மணிக்குத்தான் படுக்க வருவேன். வேலை வேலை வேலைதான். அதுவும், “ஏசி’ல குளு குளுன்னு பார்க்கிற வேலையா என்ன? கட்டடம் கட்டுற கொத்தனார் வேலை தான். வெயிலில் செத்து சுண்ணாம்பு ஆயிடுவோம் தெரிஞ்சுக்க.”

ஜெகதீஷ் பேசிக் கொண்டிருக்கும் போதே, பக்கத்து டாக்சியிலிருந்து அதன் டிரைவர் முருகேசன் குரல் கொடுத்தான். “”மணி… பார்ட்டி வருது…”

வேஷ்டி கட்டிய கிராமவாசிகள் இரண்டு பேர் வந்தனர். ஒருவர் வயதானவர். மற்றொருவர் இளைஞன்.

பேரம்

முதல் ஆளாய் அவர்களை அணுகி, “”எங்கய்யா போவணும்?” என்று கேட்டான் முருகேசன்.

“”சிவகங்கைக்கு பாடி கொண்டு போகணும். எவ்வளவு ஆகும்பா?”

“”எட்டாயிரம் ரூபாய் ஆகும்.”

“”எட்டாயிரம் ரூபாயா… 50 கி.மீ., தானேப்பா வரும்?” என்றார் பெரியவர்.

“”நான் திரும்பி வர வேணாமா?”

“”அப்படி பார்த்தாலும், 100 கி.மீ., தானேப்பா வரும்?”

“”அப்படியெல்லாம் கணக்கு போட முடியாதுய்யா. இதுதான் ரேட்.”

“”எட்டாயிரம் ரூபாய்ங்கிறது ரொம்ப அநியாயம்யா…”

“”அநியாயம்ன்னு நீங்களா சொல்லிக்கிட்டா… இங்க எல்லார்கிட்டயும் ஒரே ரேட்டுதான். வேணும்ன்னா வேற வண்டி பார்த்துக்கங்க.”

விலகிக் கொண்டான் முருகேசன்.

அந்த இருவரும், மணி பக்கம் திரும்பினர்.

“”அவரு கரெக்ட் ரேட்டுதான்யா கேட்டாரு…” என்றான் மணி.

“”கஷ்டப்படுகிற குடும்பம்யா… அதனால தானே அரசு மருத்துவமனைக்கு வந்திருக்காங்க? கொஞ்சம் பார்த்து கேளுப்பா…”

“”சரி… உங்களுக்காக ஆயிரம் ரூபாய் கொறச்சுக்குறேன். ஏழாயிரம் தாங்க…”

அந்த இருவரும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின்னர் தள்ளிப்போய், யாருக்கோ போன் செய்து பேசினர். மீண்டும் மணியிடம் வந்தனர்.

“”மூவாயிரம் ரூபாய் வாங்கிக்கப்பா… அதுவே ஜாஸ்திதான்…”

“”ஜாஸ்தின்னா மாட்டு வண்டி பிடிச்சு, பாடிய கொண்டு போங்க. இங்க இது தான் ரேட், கொண்டு போறது டெட் பாடிங்க… வந்து காரை வாட்டர் சர்வீஸ் செய்யவே எவ்வளவு செலவாகும் தெரியுமா? அது போக, தினமுமா எங்களுக்கு சவாரி கிடைக்குது?”

“”சின்ன வயசுப்பா… ரெண்டு பொட்ட பிள்ளைகள விட்டுட்டு செத்துப் போயிட்டான். கொஞ்சம் பார்த்து கேளுப்பா…” துண்டால் கண்களை ஒத்திக் கொண்டார் அந்த பெரியவர்.

“”சரிண்ணே… நாலாயிரம் வாங்கிக்கங்க… வாங்க போலாம்…” என்றான் அந்த இளைஞன்.

“”அவ்வளவுக்கெல்லாம் கட்டாது. நான் ஒண்ணும் அநியாயமா கேட்கலை. கடைசியா ஆறாயிரத்து ஐந்நூறு ரூபாய்ன்னா வரலாம். இல்லைன்னா, உள்ளே மார்ச்சுவரி வேன் நிக்கும். அங்க போய் கேளுங்க…”

“”கேட்டுட்டோம். அது ரிப்பேராம்…”

“”அதுக்கு நாங்க என்ன செய்யறது? அரசு லட்சணம் அப்படி… எங்க ரேட் இதுதான்…” மணியும் அவர்களை விட்டு விலகி, ஜெகதீஷ் பக்கமாக வந்தான்.

இந்த காட்சிகளை சற்று அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகதீஷ்.
மற்றொரு டாக்சி டிரைவரான பூபாலன், அந்த இருவரையும் அணுகி, “”உங்களைப் பார்த்தா பாவமா இருக்கு. ஆறாயிரம் கொடுங்க. நான் வர்றேன்,” என்றான்.

அந்த இருவரும் மறுபடி தனியே போய், மீண்டும் யாருக்கோ போன் செய்தனர். பின் பூபாலனிடம் வந்து, “”சரிப்பா… ரவுண்டா ஐந்தாயிரம் வாங்கிக்கோ. போலாம்,” என்றனர்.

“”பார்த்தீங்களா… நல்லதுக்கு காலம் இல்லை. உங்களை பாவம்ன்னு பார்த்துதானே நானா குறைச்சு கேட்டேன்? அதுலயும் குறைக்கிறீங்க பார்த்தீங்களா… சரி, ஒரு ஐந்நூறு ரூபாய் மட்டும் சேர்த்துக் கொடுங்க,” என்றபடி, தன் டாக்சியில் ஏறினான்.

அந்த பெரியவர், “”சரி… வா… சொல்லிக்கலாம்,” என்றபடி அந்த இளைஞனுடன், டாக்சியில் ஏறிக் கொண்டார்.

டாக்சி நகர்ந்து மறைந்தது.

மணியும், முருகேசனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
அருகில் நின்ற ஜெகதீசுக்கு அதிர்ச்சி விலகவில்லை. சற்று கோபமாகவே, “”ஏண்டா… இங்க இருக்குற சிவகங்கைக்கு, ஐயாயிரம் ரூபாய்க்கு போகமாட்டியா நீ? என்னடா இப்படி கொள்ளையடிக்கறீங்க?” என்று கேட்டான்.

“”அது அப்படியில்லைடா மாப்ளே… யார் சவாரி போறதுன்னு எங்களுக்குள்ள ஒரு வரிசை இருக்கும். அவன் தான் போவான். ஆனா, நாங்க வேணும்ன்னே ரேட்டை கூடுதலாய் கேட்போம். அப்ப தான் அவன் கேட்கிற ரேட் சீப்புன்னு பார்ட்டிக்கு தோணும். இதெல்லாம் பிசினஸ் நேக்குடா .” என்றான் மணி.

“”அதுக்குன்னு ஒரு அளவு இல்லையாடா… ஒரு கி.மீ.,க்கு அம்பத்தஞ்சு ரூபாயா?”

“”இந்த தொழில் இப்படித்தான்டா, ஒரு நாளில் மூணு சவாரி கூட போயிருக்கேன். அதே மாதிரி மூணு நாள் தொடர்ந்து சவாரி இல்லாமல் கூட இருப்போம். டெட்பாடியை வேற எந்த வழியிலும் ஊருக்கு கொண்டு போக முடியாது. அதனால, நாங்க கேட்கிறதுதான் காசு. அவனுங்களுக்கும் வேற வழியில்ல. அதனால, கேட்கிறதை கொடுத்திடுவானுக.”

“”பாவம்டா… அரசு ஆஸ்பத்திரிக்கு யார் வர்றா, ஏழை பாழைங்க தானே… அவங்கக்கிட்ட இப்படி கொள்ளையடிக்கிறது தப்பு இல்லையா?”

“”எது கொள்ளை… நீ ஆஸ்பத்திரிக்கு உள்ள போய் பாரு… டாக்டர்களிலிருந்து, ஆயா வரைக்கும் அரசு சம்பளம் வாங்கிக்கிட்டு, அதுக்கு மேலேயும் காசு கேட்டு அலையுறானுங்க. அதுதான் கொள்ளை; இது எங்களுக்கு பொழைப்புடா. நாலு காசு சம்பாதிச்சாதான் புள்ள குட்டிகள நல்லா படிக்க வைக்க முடியும். வீட்டுல நிம்மதியா கஞ்சி குடிக்க முடியும்.”

“”அதுக்காக, ஆயிரம் ரூபாய் வாங்குற இடத்தில், ஆறாயிரம் ரூபாயா?”
அந்த பெரியவர் கண்கலங்கினப்ப, எனக்கும் கூட கண்கலங்கிடுச்சு தெரியுமா?”

“”விடு மாப்ளே… எனக்கும் ஆரம்பத்துல அப்படித்தான் இருந்துச்சு. இப்போ பழகிப் போச்சு. இப்போ என் வீட்டுல சாவு விழுந்தாக் கூட அழுகை வருமான்னு தெரியலை…”

மணி சொல்வதெல்லாம், ஜெகதீசுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. ஆனால், மணியிடம் வாதிட முடியவில்லை.

“”சரிடா… நான் கிளம்புறேன். நாளைக்கு ப்ரீயா இருந்தால் போன் பண்ணிட்டு வர்றேன்,” என்று நகர்ந்தான்.

அதிகாலை 5.00 மணி இருக்கும். மணியை தட்டி எழுப்பினான் கருப்பசாமி. “”டேய்… சவாரி வந்திருக்கு எழுந்து வா.”

எழுந்து பார்த்தான் மணி. முருகேசன் டாக்சியை காணோம்.

“சவாரி கிடைச்சு போயிட்டான் போலிருக்கு. அப்போ அடுத்த சவாரி நான்தான்…’ பரபரப்பாய் எழுந்து, முகம் கழுவினான்.

“”இங்க இருக்கிற இளையான்குடிக்கு பத்தாயிரம் ரூபாயா… என்னய்யா மனசாட்சி இல்லாமல் கேட்கறீங்க?” ஒரு கூட்டம், கருப்புவிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தது.

துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே வந்தான் மணி. “”எங்கப்பா கொண்டு போவணும்?”
அந்த கூட்டத்தில் இருவர் விலகி, மணியிடம் வந்தனர்.

“”இளையான்குடிக்கு கொண்டு போவணும்.”

“”சரி… ஒன்பது ரூவா கொடுங்க. நான் வர்றேன்.”

“”அண்ணே… ஒன்பதாயிரம் ரொம்ப அதிகம்; அஞ்சாயிரம் ரூவா வாங்கிக்கங்க, போலாம்.”

“”ஏம்பா… பேரம் பேசுற இடமா இது? டெட்பாடிய கொண்டு போகணும்பா. போன மாசம் அப்படித்தான் போற வழியிலேயே தையல் பிரிஞ்சு பாடி பொளந்துக்குச்சு. நான் உட்காந்து தைக்க வேண்டியதா போச்சு. ஒன்பதாயிரம் ரூபாய் நியாயமான வாடகைதான்.”

வந்தவர்கள் யோசித்தனர்.

“”கடைசியா கேட்கிறேன் எட்டாயிரம் கொடுங்க. பத்திரமா வீட்டுல கொண்டு சேர்த்திடுறேன்.” என்றான் மணி.

அவர்கள் கூடிப் பேசினர். இந்த டாக்சி ஸ்டாண்டை விட்டால், வேறு வழி கிடையாது என்று அங்கு நின்ற எல்லாருக்கும் தெரியும். எனவே, கொஞ்ச நேரம் கூடிப் பேசியவர்கள், பிறகு ஒப்புக் கொண்டனர்.

“”பணத்தை கொடுங்கள்… டீசல் நிரப்பிக்கலாம். அப்புறம் பாடியோடு டீசல் பங்கில் போய் நிக்க முடியாது,” என்றான் மணி.

இது, அந்த டாக்சி ஸ்டாண்டின் ரெகுலர் வசனம். அதிலும், முடிந்தளவு பணத்தை முன்கூட்டியே கறந்து விடுவது, மணியின் ஸ்பெஷல் பாணி.

டீசல் போட்டபின், ஆஸ்பத்திரியின் உள்ளே சென்று, பாடியை ஏற்றிக் கொண்டான் மணி.
டாக்சியின் முன் சீட்டில், இரு ஆண்கள் ஏறிக் கொண்டனர். பின்னால் இறந்த உடலுடன், ஒரு பெண் ஏறிக் கொண்டாள். இறந்தவனின் மனைவி போல. வழி நெடுக அழுது, அரற்றியபடியே வந்தாள். மணிக்கு அது ஒரு விஷயமே இல்லை. எத்தனையோ அழுகைகளை, அமைதிகளை, காட்டுக் கத்தல்களை, அவனது டாக்சி பார்த்து விட்டது.

“”பாவம் சின்ன வயது போலிருக்கு… எப்படி செத்தாரு?” என்று முன் சீட்டில் இருந்தவர்களிடம் கேட்டான். மணியின் சம்பிரதாய கேள்வி இது. அவனுக்கு பதில் தேவையில்லை. ஊருக்கு போன பின், தகராறு வந்து விடக்கூடாது என்பதற்காக, நட்பு காட்டுகிற மாதிரியான நடிப்பு அது.
அவர்கள் சொன்ன கதையை கேட்டு விட்டு, “”பாவம்… என்ன மனுச வாழ்க்கை. எப்ப என்ன நடக்கும்ன்னே தெரியாமல்… பாருங்க உங்க எல்லாருக்கும், எவ்வளவு கஷ்டம்… கடவுள் இரக்கமில்லாதவன்ங்க,” என்று வழக்கமாய் சொல்லும் டயலாக்கையே சொன்னான்.

கூடவே, “”சொந்த வண்டின்னா நீங்க கேட்கிற ரேட்டுக்கு வந்திடுவோம்ண்ணே… வாடகை வண்டி. அதனால, ஓணர் சொல்ற ரேட்டுக்குத்தான் ஓட்ட முடியும்,” என்று பச்சையாய் பொய் சொன்னான்.

“”ஓடுற கி.மீ.,க்கு, நான் ஓணருக்கு பணத்தை கட்டியாகணும். பாவம், வசதியில்லாத குடும்பத்துக்கிட்ட, ஒரு உயிர் போன நேரத்தில், இப்படி பணம் வாங்கறது, வேதனையாய் தான் இருக்கு. என்ன செய்ய?” இதுவும், அவனது வழக்கமான வசனம் தான். ஊருக்கு போனதும், வாடகையில் தகராறு வந்துவிடக்கூடாது என்பதற்காக, முன்கூட்டியே போடப்படும் பிட்டு!
இரண்டு மணி நேரத்தில், இளையான்குடியை அடைந்து விட்டான். டாக்சியை பார்த்ததும், வீட்டில் இருந்தவர்கள் எல்லாம், வாசலுக்கு ஓடி வந்தனர். குழந்தைகளும், பெண்களும், “”ஐயோ…” என்று உரத்த குரலில் அழுது, தெருவையே உலுக்கினர்.

காலை 9.00 மணி.

பசி வயிற்றை கிள்ளியதால், விரலால் பல் துலக்கிவிட்டு, பக்கத்திலேயே ஒரு கடையில் பொங்கல், வடை சாப்பிட்டான் மணி. பிறகு, எப்.எம்., ரேடியோவை சப்தமாக வைத்தபடி, மதுரையை நோக்கி, டாக்சியை செலுத்த ஆரம்பித்தான்.

“அடுத்த சவாரி என்னைக்கு விழுமோ?’ என்று நினைத்துக் கொண்டவன், “தினமும் காலையில, அடுத்தவன் சாவுக்காக பிரார்த்தனை செய்யறது, நாமாகத்தான் இருக்கும்…’ என்று, தானாக சிரித்துக் கொண்டான்.

மணியின் மனம், வேறு சிந்தனையில் இருந்தாலும், அவனது கவனம் சாலையில் உஷாராகவே இருந்தது. நாலைந்து பேர், காரை வழி மறிப்பது கண்டு, சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்.

காருக்குள் எட்டிப்பார்த்த ஒரு பெரியவர், “”தம்பி, இந்த மண் ரோட்டில் அரை கி.மீ., உள்ள போனா, கண்மாய் கரையில ஒரு முருகன் கோவில் இருக்குது. அங்க கல்யாணம் ஆன ஒரு பொண்ணு – மாப்பிள்ளை தாலியை கட்டிப்புட்டு நிக்குதுங்க. நீ போற வழியில, ரெண்டு கி.மீ., தூரத்தில தான் எங்க கிராமம், திருமாஞ்சோலை. கொஞ்சம் உள்ள வந்து, அந்த பொண்ணு-மாப்பிள்ளையை திருமாஞ்சோலையில இறக்கி விட்டுட்டா, உனக்கு புண்ணியமா போகும்பா.”

மணிக்கு மனசு, “படக்’ என்று அடித்துக் கொண்டது.

“அடப் பாவிகளா… எந்த காரைப்போய் கல்யாணத்துக்கு கேட்கிறாங்க பாரு…’

“”என்னப்பா யோசிக்கிறே… போற வழிதானே, நாங்களெல்லாம் மினி பஸ் பிடிச்சு வந்துடுவோம். பொண்ணு – மாப்பிள்ளையை மட்டும், இறக்கிவிட்டா போதும். ஒரு டாக்சி பிடிச்சு வச்சிருந்தோம். ஊர்ல இருந்து இங்க வந்து, பொண்ணு – மாப்பிள்ளையை இறக்கி விட்டுட்டு, அடுத்த நடை போனதுதான். அங்கேயே ரிப்பேராகி நின்னுடுச்சு. இப்ப கார் இல்லாம தவிக்கிறோம். எங்க ஊருக்கு வந்த மாப் பிள்ளையை, முதல் நாளே மினி பஸ்சில் ஏத்தி கூட்டிட்டு போனா, பிறகு வாழ்க்கை பூராவும் அதையே சொல்லி காட்டுவாரு. அதுக்காகத் தான். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுப்பா…”

“”அதுக்கில்லைங்க…” இழுத்தான் மணி.

“”நீ கேட்கிற காசை கொடுத்திடுறோம். உள்ளே அரை கி.மீ., தான்.”

“காசு வரும் போது எதுக்கு விடணும்… வர்ற வரைக்கும் லாபம் தானே… பொணம் இறக்குற வண்டின்னு, இவங்களுக்கு தெரியவா போகுது?’ என்று யோசித்த மணி, “”சரி ஏறுங்க போகலாம்,” என்றான்.

அவர்கள் ஏறினர். டாக்சி மண் சாலையில் விரைந்தது.

என் காரில் பொண்ணு- மாப்பிள்ளையா… “மணி இது என்னடா வினோதம்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவனுக்கு, திடீர் என்று பயம் பற்றியது, “பொணம் ஏத்திய வண்டியில், கல்யாண ஜோடியை ஏத்தலாமா… நாளைக்கு இதுனால, அதுக வாழ்க்கையில, ஏதாவது கெட்டது நடந்து போச்சுன்னா, அந்த பாவம் நம்மை சுத்துமே… உண்மையை சொல்லிட்டு திரும்பிடலாமா…’ என, யோசித்தான்.

“விடு மணி… ஆபத்து நேரத்துல உதவியிருக்கோம். நமக்கு தேவை காசு. பேரம் பேசாமல் வந்துட்டோம். போற வழிதான்னாலும், ஐநூறு ரூபாயாவது கேட்டு வாங்கிடணும்.

அவனுங்கதான், கேட்கிற காசை கொடுக்கிறேன்னு சொல்லி இருக்கானுங்கல்ல… அஞ்சு நாள் செலவுக்கு ஆகிடும்…’ அவனின் சிந்தனையை கலைத்தது, கண்மாய் கரையில் இருந்த முருகன் கோவில்.

அங்கே ஆண்களும், பெண்களும் குழந்தைகளுமாக, ஒரு கூட்டம் காத்திருந்தது.

“”கார் கிடைச்சிடுச்சா… கடவுளுக்கு நன்றிப்பா. அஞ்சு நிமிஷம் பொறுங்க. பொண்ணு- மாப்பிள்ளை கோவிலை சுத்திக்கிட்டு இருக்காங்க. இப்ப வந்திருவாங்க…” என்றார் ஒரு பெரியவர்.

இறங்கி சிகரெட் பற்ற வைக்கலாம் என்று நினைத்த மணிக்கு, கண்மாயில் இருந்த தண்ணீரை பார்த்ததும் மனம் மாறியது. சிகரெட்டை பாக்கெட்டில் போட்டு விட்டு, டிக்கியை திறந்தான். அதிலிருந்த பக்கெட் ஒன்றை எடுத்து, கண்மாயில் நீர் எடுத்து வந்தான். கார் சீட்டை கழுவி, துடைக்க ஆரம்பித்தான். அங்கிருந்த ஒருவர், “”என்னப்பா… பொண்ணு – மாப்பிள்ளை வர்ற நேரத்துல சீட்டை கழுவிட்டு இருக்கே… சீட் ஈரமாயிடப் போவுது,” என்றார்.

“”பொண்ணு, மாப்பிள்ளை உட்கார்ற இடமில்ல… அதான் சுத்தமாய் இருக்கட்டுமேன்னு கழுவுறேன். துடைச்சு விட்டா உடனே காய்ஞ்சிடும்,” என்றான்.

அதற்குள், காருக்கு அருகில் வந்த தாவணி கட்டின சில இளம்பெண்கள், “”அங்கிள்… கார்ல கொஞ்சம் பூவை ஒட்டிக்கிறோம்…” என்றனர்.

மணி தலையாட்டி விட்டு, தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். பின்சீட்டை நன்கு கழுவி துடைத்த பிறகுதான், அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எல்லாம் முடிந்து, காரை விட்டு வெளியே வந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. அந்த தாவணிப் பெண்கள், அந்த குறுகிய நேரத்தில், அவனது காரை அழகழகான ரோஜாப்பூக்களால், ஒரு பூங்கா போல மாற்றியிருந்தனர். மணிக்கு என்னவோ போல் இருந்தது. அவன் காரை இதற்கு முன் இப்படி அலங்கரித்து பார்த்ததில்லை. ஒவ்வொரு சவாரிக்கும், “காரை வாட்டர் சர்வீசுக்கு விடணும்ல?’ என்று காரணம் சொல்லி, பணம் கறந்தாலும் கூட, மாதம் ஒரு முறைதான் வாட்டர் சர்வீஸ் எல்லாம்; அடுத்து ஏத்த போறதும் பொணம்தானே என்ற அலட்சியம்!

இன்றைக்கு, அவனது கார், தேவர்களின் ரதம் போல், எழில்மயமாக நின்றது. “எங்கே கண்கலங்கி விடு@வாமோ…’ என்ற அளவிற்கு, இனம் புரியாமல், உணர்ச்சி வசப்பட்டான். அவனை சரி செய்யும் வண்ணம், ஒரு பெரியவர் வந்து, “”தம்பி… பொண்ணு- மாப்பிள்ளை வந்தாச்சு… வண்டியை எடுப்பா,” என்றார்.

காரின் பின் சீட்டில், அந்த புதுமண தம்பதியர் ஏறிக்கொண்டனர்.

“”ஏய்… வயசுப் பொண்ணுங்களையும், குழந்தைகளையும் வண்டியில் ஏத்தி விடுங்கப்பா… நாம மினி பஸ்சில் போய்க்கலாம்,” என்றார் ஒரு பெரியவர்.

உடனே தம்பதியர் பக்கத்தில், இரண்டு தாவணிப்பெண்கள் ஏறிக் கொண்டனர். முன்னால், இரு குழந்தைகள்.

மெயின் ரோட்டில் வண்டியை நிறுத்திய பெரியவரும் ஏறிக்கொண்டார். மணி காரை செலுத்தினான்.

பின் சீட்டில் இருந்த இரு தாவணிப்பெண்களும், மணப்பெண்ணை வேண்டுமென்றே நெருக்கித் தள்ளினர். அவள் சிரித்தபடியே மணமகன் மேல், வேறு வழியில்லாமல் சாய்ந்தாள்.

மணமகனும் நடக்கும் குறும்பு தெரிந்து சிரித்தான். அந்த தாவணிப்பெண்கள், மணமகள் காதில் ஏதோ சொல்லி, வெடிச்சிரிப்பு சிரிக்க, மணமக்களும் வெட்கத்தோடு சிரித்தனர்.

மணிக்கு அது புதுசு. அவனுக்கும், அவன் காருக்கும் இதெல்லாம் அனுபவமில்லை. சவாரி கிளம்பினால், அழுகையும், ஒப்பாரியும் தான் கூடவே வரும். இப்படி சந்தோஷ கூச்சல்களும், உற்சாக ஊளைகளும், அவனுக்கு புதுசு. “நம் காருக்கா இப்படி ஒரு கொடுப்பினை… இப்படி ஒரு குஷியும், கும்மாளமும் எவ்வளவு இதமாக இருக்கிறது?’ அவனது மனது, உற்சாகத்தோடு விரிந்து மலர்ந்து, மணம் வீசத் துவங்கிய நேரத்திலேயே, திருமாஞ்சோலை வந்துவிட்டது.

“அட அதற்குள் வந்துவிட்டதா… இந்த சிரிப்பும், கலாட்டாவும் அதற்குள் காரை விட்டு @பாகப் போகிறதா….’ மணிக்குள் இனம் புரியாத ஒரு ஏக்கம் வந்து போனது.

ரோட்டு ஓரமாக@வ அந்த வீடு இருந்தது. பந்தல் போட்டு, வாழைமரம் கட்டி, ரேடி@யாவை உற்சாகமாய் பாட விட்டிருந்தனர். இறங்கிய மணமக்களுக்கு, ஆரத்தி எடுத்தனர். முன் சீட்டில் இருந்த பெரியவர், கடைசியாக இறங்கி,”ரொம்ப நன்றி தம்பி. எவ்வளவு தம்பி வேணும்?”

மணி சொன்ன பதில்… “”எதுவும் வேணாங்க… நான் வர்றேன்.”

***

பெயர் – எஸ்.ஜே.இதயா
கல்வித்தகுதி – சட்டப்படிப்பு
பணி – துக்ளக் வார இதழின் மதுரை மற்றும் தென்னக செய்தியாளர்.
இதுவரை, ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, சிறுகதை எழுதுவதை நிறுத்தி வைத்திருந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின், எழுதிய சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றிருப்பது ஊக்கமளித்திருப்பதாக உள்ளது என்கிறார்.

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *