பேரனுக்கு காதுகுத்து

 

திம்மராஜபுரம், ஞாயிற்றுக் கிழமை, இரவு பத்துமணி.

செல்லமுத்து வாத்தியார் உற்சாகத்துடன் வீட்டிலுள்ள டி.வி யை ஒளிரச்செய்து பின்பு தேவையான உபகரணங்களை உயிர்ப்பித்து தன் மனைவி அஞ்சுகத்தை “ஏ அஞ்சு வா புள்ள, ஸ்கைப் ரெடி. பேரனும் மவனும் இப்ப வந்துருவாவ…” என்றார்.

சமையல் அறையில் இருந்த அஞ்சுகம், கையிலுள்ள ஈரத்தை துடைத்துக்கொண்டே, போட்டது போட்டபடி ஓடி வந்து வாத்தியாரின் அருகில் அமர்ந்தாள்.

இது வாரத்துக்கு மூன்று நாட்கள் தவறாது நடக்கும் ஒரு செயல்தான். எனினும் ஒவ்வொரு முறையும் நியூஜெர்ஸியில் இருக்கும் தங்கள் மகன் குமரேசன், பேரன் நிக்கில் மற்றும் மருமகள் சரோஜா மூவரும் ஸ்கைப்பில் வந்து தங்களுடன் உரையோடும்போது செல்லமுத்து வாத்தியாரும், சரோஜாவும் உருகித்தான் போவார்கள்.

ஸ்கைப்பில் பேசிய பிறகு பேரனின் மழலையையும், குறும்புத்தனத்தையும் இவர்கள் தங்களுக்குள் சொல்லி, சொல்லி அன்று முழுவதும் சந்தோஷிப்பார்கள்.

செல்லமுத்து பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வாத்தியாராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இரண்டு முறைகள் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றவர். ஒரு நல்ல ஆசிரியராக மட்டுமின்றி, நேர்மை, உண்மை, எளிமை ஆகியவைகளை மாணவர்களுக்கு போதித்து, தானும் அதன்படி வாழ்ந்து வருபவர்.

தன் ஒரே மகன் குமரேசனை பாளை தூய சவேரியார் கல்லூரியில் நன்றாக படிக்க வைத்தார். அதன் பிறகு அவன் நிதி சம்பந்தமான ஒரு படிப்பை தொடர்ந்து இரண்டு வருடங்கள் படித்தான். படித்த சூட்டோடு அவன் கோல்ட்மேன் சாக்ஸ் மல்டி நேஷனல் கம்பெனியில் ஆறு மாதங்கள் ஜப்பானில் பயிற்சி பெற்றான். பின்பு அவனை அதன் நியூயார்க் தலைமை அலுவலகத்தில் நிரந்தரப் பணியில் அமர்த்தி விட்டனர்.

அடுத்த இரண்டு வருடங்களில், செல்லமுத்து வாத்தியார், குடும்பத்திற்கேற்ற ஒரு அமைதியான பெண்ணை சல்லடை போட்டுத்தேடி, திசையன்விளை ஊரைச்சேர்ந்த சரோஜாவை குமரேசனுக்கு திருமணம் செய்து வைத்தார். பெண் வீட்டாரிடம் வரதட்சினை எதுவும் வாங்காது, கல்யாணத்தையும் மிக எளிமையாக நடத்தச் சொல்லி பூரிப்பில் திளைத்தார்.

இரண்டு தினங்கள் மட்டும்தான் தன் திருமணத்திற்காக குமரேசன் இந்தியா வந்திருந்தான். திருமணமான கையோடு சரோஜாவுக்கு அமேரிக்கா விஸா ஏற்பாடு செய்தான். பின்பு அவளுடன் நியூஜெர்ஸியில் இரண்டு படுக்கை அறைகள்கொண்ட ஒரு பெரிய அபார்ட்மென்டின் அறுபதாவது மாடியில் குடியேறினான். அங்கிருந்து பார்த்தால் அமரிக்காவின் லிபர்ட்டி சிலை நன்றாகத் தெரியும். தினமும் ஹட்ஸன் ரிவர் தாண்டி, தன் நியூயார்க் அலுவலகம் செல்வான். குளிர் காலம் தவிர, அமெரிக்காவின் அழகிய வாழ்க்கை இருவருக்கும் பிடித்துவிட்டது.

இரண்டு வருடங்களில் அவர்களுக்கு நிக்கில் பிறந்தான். பிரசவத்தை அமெரிக்காவிலேயே வைத்துக் கொண்டார்கள். பேரன் பிறந்து இரண்டு வருடங்களாகியும் அவன் இந்தியாவுக்கு இன்னமும் வரவில்லை. அவனுக்கு இரண்டு வயதாகியும் தம்மால் அவனை நேரில் கொஞ்ச முடியவில்லையே என்கிற ஏக்கம் செல்லமுத்து வாத்தியாருக்கும், அஞ்சுகம் அம்மாளுக்கும் ஏராளமாக இருந்தது.

சென்றமுறை ஸ்கைப்பில் வந்திருந்தபோது, ஆறு மாதங்களுக்கு முன்பே தனக்கு ஒரு மாதம் விடுப்பு வேண்டுமென்று அலுவலகத்தில் ஏற்கனவே விண்ணப்பித்திருப்பதாக குமரேசன் சொன்னான். அது சம்பந்தமாக இன்று பேசி, திம்மராஜபுரம் எப்போது வருவான் என்று கேட்டு, நல்ல நாள் பார்த்து குலதெய்வம் முப்பிடாதி அம்மனுக்கு நேர்ந்துகொண்டு, பேரனுக்கு மொட்டையடித்து, காது குத்திவிடலாமே என்று ஆசைப்பட்டனர்.

பத்துமணி ஐந்து நிமிடத்துக்கு அமெரிக்காவிலிருந்து மூவரும் ஸ்கைப்பில் பிரசன்னமாயினர்.

உடனே குமரேசன் உற்சாகத்துடன், “அப்பா அடுத்த மாசம் இருபத்திநான்கு நாட்கள் லீவு சாங்க்ஷன் ஆகிவிட்டது…. அடுத்த வாரம் ப்ளைட் டிக்கெட் புக் பண்ணியாச்சு. இந்தத் தடவை நம்ம நிக்கிலுக்கு மொட்டையடித்து காது குத்திவிடலாம்பா… நாம பண்ற காதுகுத்து விழா தடபுடலா வெகு விமர்சையாக இருக்கணும். பணத்தை பத்தி கவலையே படாதீங்க… பெரிய பந்தல்போட்டு, அமர்க்களமா அலங்காரம் பண்ணி, மேள தாளம்னு அசத்திரணும்பா. திம்மராஜபுரமே மூக்கில் விரல் வைக்கணும். உங்க சம்பந்தி குடும்பம் எல்லாரும் திசையன்விளையிலிருந்து வருவாக, அவங்களுக்கு தனியா ஒரு ஏஸி பஸ் புக் பண்ணுங்க….எத்தினி பேர் வர்றாங்கன்னு கேட்டு ஜானகிராம்ல ரூம் போட்ருங்க” என்றான்.

“டேய் ரொம்ப குதிக்காத…நீ முப்பிடாதி அம்மன் கோவில்ல வச்சு குழந்தைக்கு முடி இறக்கி, காதணி விழா நடத்த இங்கன வர்றியா….இல்ல இப்ப நீ புதுப் பணக்காரன் என்கிற பெருமையை தம்பட்டமடிச்சு பீத்திக்கப் போறீயா? திம்மராஜபுரம் இன்னமும் ஏழை பாழைகள் நெறஞ்ச ஊர்தாம்ல…நாமளும் நாலு வருடத்துக்கு முந்தி அப்படித்தான் இருந்தோம்ல. நாம படாடோபம் காமிக்காம எளிமையா இருந்தாத்தாம்ல ஊர்க்காரங்க நம்மகிட்ட மனம்விட்டுப் பேசி, நெருக்கமா பழகுவாங்க…ஊர்ல பாதிபேர்க்கு மேல நம்ம சொக்காராணுவ.”

“என்னப்பா இப்படி சொல்லுதீய?”

“ஆமால. பணம், ஆடம்பரம் காமிச்சு நாம அலட்டிகிட்டா, நம்மைப் பார்த்து மிரண்டுபோய் விலகிடுவாய்ங்க. அவியகிட்ட போய் நம்ம புது வசதிய காண்பிக்கிறது அவியளை பழிக்கிற மாதிரில. ஆத்தாக்கு கெடா வெட்டி ஊருக்கெல்லாம் நல்ல வயிறார சாப்பாடு போட்டா ரொம்ப சந்தோஷப் பாடுவாய்ங்க. நம்ம வீட்டு விசேஷத்த எளிமையா நடத்துறதுன்னா இங்கன நடத்தலாம்…. இல்ல நீ உன் பிள்ளைக்கு ரொம்ப ஆடம்பரமா நடத்தணும்னா, அதுவும் சரிதான். அப்ப சென்னையிலேயே ஒரு பெரிய ஏ.ஸி. ஹாலில் நடத்தலாம். ஆனா நம்ம ஊர்லர்ந்து சொக்காரப் பயலுவ வரமாட்டய்ங்க. ஆத்தா முப்பிடாதி அம்மனுக்கு நெஞ்சு மட்டும் குறை இருக்கும்…அப்புறம் உன் இஷ்டம்.”

“ஆமாம் குமரேசு… அப்பா சொல்லுறது ரொம்ப சரின்னு எனக்கு படுது. தாம் தூம்னு ஆடம்பரம் பண்ணா கண்ணு படும்பா.” அஞ்சுகம் அம்மாள் சொன்னாள்.

பெரியவர்களின் பேச்சில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட சரோஜாவும் “ஆமாங்க நம்ம அம்மா அப்பா சொல்றதுதான் சரி” என்றாள்.

செல்லமுத்து சிரித்துக்கொண்டே, “நீதாம்மா என்னோட ஒரே செல்ல மகள்.” என்றார்.

குமரேசன் வாய் விட்டுச் சிரித்தபடி, “நீங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்திட்டீங்க. இனி நான் எதுவும் சொல்லவேண்டாம்….உங்க அனைவரின் முடிவுதான் என் முடிவும்” என்றான்.

நிக்கில் எல்லாம் புரிந்தமாதிரி, அம்மா மடியில் துள்ளிக் குதித்து தன் இரண்டு பிஞ்சுக் கைகளையும் தட்டி ஓசையெழுப்பினான்.

அனைவரும் சந்தோஷத்துடன் ஸ்கைப்பை அணைத்துவிட்டுப் பிரிந்தனர்.

அடுத்தவாரம் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை ஜங்ஷன் வந்து இறங்கி, ஆட்டோ பிடித்து அவர்கள் திம்மராஜபுரம் வந்தனர். அடுத்த நாளே திசையன் விளையிலிருந்து சரோஜாவின் வீட்டினரும் சேர்ந்துகொள்ள வீடே கலகலப்பானது.

அடுத்த இரண்டு நாட்களில், ஊர் பொது மக்கள் படை சூழ, குலதெய்வம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் குழந்தைக்கு மொட்டையடித்தனர். பூசாரி பேச்சிமுத்து மந்திரம் சொல்லி குழந்தையின் தலையில் வாசனை சந்தனம் அப்பினார்.

இன்னொரு பெரியவர் அழும் குழந்தைக்கு பொறுமையாக காது குத்தினார். ஊர்மக்கள் கறிசோறு சாப்பிட்டு நன்றாக விருந்துண்டு மகிழ்ந்தனர்.

பூசாரி பேச்சிமுத்து, “நம்ம வம்சத்துப் புள்ள குமரேசு, அமேரிக்கா போனாலும், பெரியவங்ககிட்ட மருவாதையா, ரொம்ப எளிமையா இருக்காம். இங்கேயும் சிலதுங்க இருக்குதுங்க இங்கன இருக்கிற சிங்கப்பூர், மலேஷியா போய்ட்டுவந்து நாலு காசு பார்த்துட்டாலே, ரெண்டு கொம்பு மொளச்ச மாதிரி என்னா அலட்டு அலட்டுதுங்க ! நம்ம ஊரையே விலை பேசுதுங்க.” என்றார்.

குமரேசன் ஒரு மரியாதை கலந்த அர்த்தத்துடன் தன் அப்பாவை நோக்கினான். 

தொடர்புடைய சிறுகதைகள்
மீனலோச்சனிக்கு இருபத்திநான்கு வயது. கல்யாணம் ஆனவுடன் கணவனுடன் மேட்டூர்டாம் மால்கோ காலனி குடியிருப்பில் தனிக் குடித்தனம் வந்துவிட்டாள். புது இடம், எவரையும் தெரியாது...எப்படிக் குடித்தனம் நடத்துவது என்று தவித்துக் கொண்டிருந்தபோது அறிமுகமானவள்தான் பக்கத்துவீட்டு காயத்ரி. காயத்ரிக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். சிரித்தமுகத்துடன் சுறுசுறுப்பாக ...
மேலும் கதையை படிக்க...
பகல் இரண்டு மணியளவில் கதவு தடதடவெனத் தட்டப்படும் சத்தம் கேட்டு, அரைத் தூக்கத்தில் இருந்த மாலதி எழுந்து சென்று கதவைத் திறக்க, அவளது கணவன் சந்தானம் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து கதவை அவசரமாகத் தாழிட்டான். "என்னங்க? எங்கே உங்களுடைய சூட்கேஸ்? எப்ப ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘பெண் தேடல்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனின் இந்தப் புதிய பாராமுகம் காந்திமதிக்கு பயங்கர எரிச்சலை மூட்டியது. “சபரிநாதனுக்கு கல்யாணக் கோட்டி பிடிச்சிருக்கு” என்று என்றைக்கோ கோமதி ஆச்சி சொல்லிவிட்டுப் போனதுதான். அதற்குப் பிறகு அதைப்பற்றி காந்திமதி ...
மேலும் கதையை படிக்க...
என் தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், உடனே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு கிளம்பினேன். கிடைத்த வோல்வோ பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். தாத்தாவுக்கு பேரன் பேத்திகள் அதிகம். அனால் நான் மூத்தமகன் வழிவந்த, மூத்த பேரன் என்பதால் என்னிடம் எப்போதும் வாஞ்சையாக இருப்பார். எங்கே சென்றாலும் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு வயது இருபத்தியேழு. தனிமை என்னை வாட்டுகிறது. ஒரு பெண்ணின் அருகாமைக்காக என் மனசும் உடம்பும் ஏங்குகிறது. பதின்மூன்று வயதினிலேயே இந்த எதிர்பார்ப்பு எனக்கு ஆரம்பமானது. பின்பு அதுவே ஏக்கமானது. இன்னமும் குறைந்த பட்சம், பன்னிரண்டு வருடங்கள் - ஒரு மாமாங்கம் - இந்த ...
மேலும் கதையை படிக்க...
ரசனை
மாலா நான் சொல்வதை கவனமாய்க் கேள்
மாமியார் வீட்டிற்கு விஜயம்
தாத்தாவும், பாட்டியும்
தொடுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)