பொன்னம்மாவின் உயில்

 

வருடக் கணக்கில் எதிர்பார்த்த ஒரு விஷயம் இப்படி திடீரென்று கூடி வரும் என்று கபாலி கனவில் கூட எதிர் பார்க்க வில்லை. பொன்னம்மா வீடு கட்டும்
தொழிலாளர் கூட்டத்தில் ஒரு சித்தாள். அவளின் குடிசை, கபாலியின் வொர்க்க்ஷாப்பிற்கு எதிரில் வழியை அடைத்துக்கொண்டு நிற்கிறது. வொர்க்க்ஷாப்பிற்கு ரிப்பேருக்கு வரும் வண்டிகள் சிரமப்படுகின்றன. எப்படியாவது அவளது நிலத்தை வாங்கி விடவேண்டும் என்று நினைத்திருந்தான். கண்டிப்பாய் அவள் கொடுக்க மாட்டாள். விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று சங்கடப்பட்டுக்கொண்டு இருந்தான்.

இந்த நிலையில் அவளே வந்து நிலத்தின் மேல் கடன் கேட்ட போது கபாலிக்கு சந்தோஷத்தில் கண்கள் விரிந்தன. அடக்கிக் கொண்டான். அவளால் வட்டியும் முதலும் கொடுக்க முடியாது, புருஷன் மாடசாமியோ குடிகாரன். வேலை வெட்டிக்கு போவது கிடையாது. எப்படியும் நிலம் தனக்கு வந்து விடும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது கபாலிக்கு.

இதே நிலத்தின் மீது இன்னொரு நபருக்கும் ஆசை. அது பக்கத்து வீட்டு ருக்கு. ருக்குவிற்கு வயது முப்பது இருக்கலாம். கல்யாணத்தில் விருப்பமில்லை. தெருவில் ருக்குவிற்கு நல்ல பெயர் இல்லை.

குடிபோதையில் ஒரு நாள் மாடசாமி ருக்குவிடம் கேட்டான். ” என்னைக் கட்டிக்கிறீயா?”.

அவளும் குடிபோதையில் இருப்பதை உபயோகப்படுத்திக் கேட்டாள். “உன்னோட வீட்டை – எனக்கு எழுதி வை. கல்யாணம் கட்டிக்கிறேன்”.

“ அது என்னோட பொஞ் சாதி பேருல்ல இருக்குது. எப்படி ஒனக்கு எழுதி வைக்கிறது.”.

அதற்குப் பிறகு ருக்கு, மாடசாமியைக் கண்டு கொள்வது கிடையாது.

குடிசையும், அதைச் சுற்றியுள்ள நிலமும் மூன்று சென்ட் தேறும். பொன்னம்மாவின் மாமியார், குடிகார மகனுக்கு எழுதி வைக்காமல், மருமகள் பேரில் எழுதி வைத்து விட்டுப் போய்ச் சேர்ந்தாள்.

சிமெண்ட், தூசியில் சதா இருந்ததாலோ என்னமோ, இருமல் நோய் ஒட்டிக் கொண்டது. இருந்தாலும், தன் மகன் ராமு படிப்பில் படு சுட்டி, டாக்டர் ஆகப் போறான்னு பள்ளிக் கூட ஹெட் மாஸ்டர் சொன்னது வாழ்க்கையில் ஒருபிடிப்பை உண்டாக்கியது பொன்னம்மாவிற்கு.

ராமு டாக்டருக்கு படித்து இந்த நிலத்தில் ஒரு ஆஸ்பத்திரி கட்ட வேண்டும், ஒருக்கால் தன் வருமானத்தில், டாக்டருக்குபடிக்க வைக்க முடிய வில்லை என்றால் மட்டுமே இந்த நிலத்தை விற்க வேண்டும். அது வரைக்கும் தாக்குப் பிடிக்க வேண்டும். இப்படி ஒரு வைராக்கியம் அவளுக்கு.

அந்த வைராக்கியத்திற்கு வந்த சோதனைதான் ஒரு வாரமாய் விடாமல் அடிக்கும் புயல்மழை. மேஸ்திரி வேலையில்லை என்று சொல்லி விட்டார். மழையினால் இருமல் நோய் அதிகமாகி விட்டது. சதா இருமல் தான். கையில் காசு இல்லை. மளிகைக்காரன் இதுக்கு மேல் கடன் கிடையாது என்று சொல்லி விட்டான். ராமுக்கு மழையினால் பள்ளிக்கு விடுமுறை. காலையிலிருந்து பட்டினி. தன் பசியை மறந்து ராமு சொன்னான், “ அம்மா டாக்டருக்கிட்டே போய் காமிச்சிக்கோ, இருமிக்கிட்டே இருக்கிறே…..”.

வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு கபாலியிடம் போக வேண்டியதாகி விட்டது.

பொன்னம்மா குறைவான தொகை கடனாக கேட்டது கபாலிக்கு எரிச்சலாக வந்தது. அதிகமான தொகையாக கொடுத்து, வட்டி போட்டு, கொடுக்க முடியாமல் செய்து, வீட்டை கபளீகரம் செய்து விடவேண்டும் என்ற தன் நினைப்பில் இப்படி மண் விழுந்து விட்டதே என்ற பதை பதைப்பில்,

“ இது போதுமா …. ” என்றான்.

“ போதும், போதும்…, நம்ம பள்ளிக் கூட ஹெட் மாஸ்டரை சாட்சியா வைச்சுக்கிட்டுத்தான் இந்த பத்திரத்தை கொடுப்பேன்….., நீ அவரு வீட்டுக்கு வர சம்மதமா….” பொன்னம்மா.

வேறு யாராவது இப்படி நிபந்தனை போட்டு கடன் கேட்டிருந்தால், கடனும் கொடுக்க முடியாது, சாட்சியும் வேண்டாம் என்று ஒரேயடியாய் சொல்லியிருப்பான். நிலம் எப்படியாவது தன் கைக்கு வரவேண்டும் என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கும் போது, வந்த வாய்ப்பை விட மனமில்லாமல்,
ஹெட் மாஸ்டர் வீட்டிற்கு வந்து சாட்சியுடன் கடன் கொடுத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டான் கபாலி.

பத்திரத்தை கொடுத்து கடன் வாங்கிவிட்ட பிறகு, பொன்னம்மாவிற்கு தூக்கம் வரவில்லை. மளிகைக் கடை பாக்கியை அடைத்து ராமுவுக்கு சமையல் செய்து போட்டாள். தனக்காக டாக்டரிடம் போக மனம் வரவில்லை. கடன் வாங்கிய பணம், பாதி தான் செலவு ஆயிற்று. ராமுவின் டாக்டர் படிப்புக்காக மட்டும் தான் இந்த நிலத்தை விற்க வேண்டும் என்ற தன் வைராக்கியம் சிதைந்து போய் விட்டதாக நினைத்தாள். வாங்கிய பணத்தை செலவு செய்ய மனம் வரவில்லை.

மழை விட்டு மேஸ்திரி வேலைக்கு கூப்பிட்டார். இருமல் நிற்க வில்லை. இருந்தாலும் வேலைக்கு போனாள். அடகு வைத்த வீட்டை மீட்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு உழைத்தாள். அசலும் வட்டியும் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் கபாலியிடம் கொடுத்து பத்திரத்தை திருப்பிக் கேட்டாள்.

தான் எதிர்பார்த்ததிற்கு மாறாக, இப்படி வட்டியும் முதலுமாக பணத்தை திருப்பிக் கொடுத்து பத்திரத்தை திருப்பிக் கேட்கிறாளே என்று கோபம் பொத்துக் கிட்டு வந்தது கபாலிக்கு.

அந்த எரிச்சலில், “ பணம் வாங்கும் போது என்ன நம்பாம, ஹெட் மாஸ்டரை
சாட்சியா வைச்சுக்கிட்டு பத்திரத்தை கொடுத்தே இல்லியா, இப்ப நா மட்டும் அவரு இல்லாம எப்படி திருப்பிக் கொடுக்கிறது….. போய் அவரை அழைச்சுக்கிட்டு வா….அப்ப தான் பத்திரத்தை திருப்பிக் கொடுப்பேன்……”.

பொன்னம்மா கெஞ்சினாள். “ ஐயோ…. அவரை போய் உங்கவீட்டுக்கு எப்படி வரச் சொல்லறது….அவரு ஹெட் மாஸ்டராச்சே….நீ அன்னிக்கு மாதிரி அவரு வீட்டுக்கு வந்துறு”.

கபாலி இருந்த கோபத்தில் ஒரேயடியாய் மறுத்துவிட்டான்….

பொன்னம்மாவிற்கு பத்திரம் கிடைக்கவில்லையே என்று திக்கென்று ஆகிவிட்டது. நெஞ்சு அடைத்தது. இருமல் ஆரம்பித்தது. இதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு கபாலி ஏமாற்றி விடுவானோ…….

கபாலி வீட்டை விட்டு இறங்கி ஹெட் மாஸ்டர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கண் இருட்டிக் கொண்டு வந்தது. ரோடு எது என்று சரியாய் தெரிய வில்லை.

வேகமாய் வந்த லாரி பொன்னம்மாவின் மீது ஏறி கீறிச்சென்ற பெரிய சத்தத்துடன் நின்றது.

அந்த சத்தம் கபாலி வீட்டிற்கும் கேட்டது.

எல்லோரும் ஓடினார்கள். கபாலியும் ஓடினான்.

செத்துப்போனது பொன்னம்மாதான். இது தெரிந்ததும் கபாலியின் மனம் சந்தோஷப் பட்டது. மூளையும் வேலை செய்ய ஆரம்பித்தது.

இப்போது கபாலிக்கு முன்னால் இருக்கும் ஒரே கேள்வி — பொன்னம்மா தன்னிடம் பணத்தை திருப்பிக்கட்டியது வேறு யாருக்காவது தெரிந்திருக்குமா…

கண்டிப்பாய் மாடசாமியிடம் சொல்லிருக்க மாட்டாள்.

அப்படியே இந்த விஷயத்தை அமுக்கி விடலாம் என்று முடிவு செய்துவிட்டான்.

ஒரு நாள் பொன்னம்மாவின் மகன் ராமு கபாலி வீட்டுக்கு வந்தான். கபாலிக்கு
திக்கென்று ஆகிவிட்டது. ஒரு வேளை ராமுவிடம் சொல்லி இருப்பாளோ……..

வீட்டிற்கு உள்ளேயிருந்து கபாலியின் மகன் செந்தில் வந்து சொன்னான்.

“ நா தான்பா ராமுவை வரச் சொன்னேன். எனக்கு பிளஸ் டூ பரீட்சைக்கு சொல்லி கொடுக்கறதுக்கு. ராமு நல்லா படிப்பான்பா…. பாவம் அவங்க அம்மா போன மாசம் செத்துட்டாங்க………”

ராமுக்கு, தான் செய்யும் துரோகம் உறுத்தினாலும், பேசாமல் இருந்துவிட்டான் கபாலி.

ஒரு நாள் மாடசாமி வந்தான். கபாலிக்கு மறுபடியும் திக்கென்று ஆகிவிட்டது.

“ருக்கு என்னக் கட்டிகிறதுன்னா, அந்த நெலத்தை எழுதி வைக்கணும்னா,…. அப்போ பொஞ் சாதி உயிரோட இருந்தா…… இப்ப செத்து போயிட்டா… உங்க கிட்ட பத்திரத்தை வச்சி கடன் வாங்கி இருக்கிறதா…

கபாலிக்கு தன் திட்டம் தவிடு பொடியாய் விட்டது என்று பயம் தட்டியது.

பொன்னம்மா சொல்லிதான் இருக்கிறாள் போலிருக்கிறது.

கடன் வாங்கியதைப் பற்றிச் சொன்னவள், கடனைத் திருப்பிக் கட்டியது பற்றியும் சொல்லி இருப்பாளோ…….

இந்த குடிகாரன் பேச்சை யார் நம்ப போகிறார்கள். அவனே பேசட்டும் என்று காத்திருந்தான்……

“ எவ்வளவு வாங்கினா…… நீங்களே வீட்டை எடுத்துகிடுங்க…..மீதி பணம் கொடுங்க….நீங்க எங்க சொல்லிறிங்களோ அங்க கையெழுத்து போடறேன். நா ருக்குவை கல்யாணம் கட்டிக்கணும்…..”.

கபாலிக்கு மூச்சு வந்தது. ‘கையில் பணம் இருப்பதைக் காட்டினா புருஷன் புடுங்கி கொள்வான் என்கிற பயத்தில், புருஷன் கிட்டே சொல்லாம வந்து பணத்தை குடுத்திட்டு செத்திட்டா போலிருக்கிறது. நமக்கு ரொம்ப வசதியா போயிட்டது’ என்று மனதிற்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டான்.

“ சரி.. நாளைக்கி ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வந்து கையெழுத்துப்போடு. ருக்குவை கல்யாணம் கட்டிக்கிறதுக்கான பணத்தை நா கொடுக்கிறேன். நானே முன்னாடி நின்னு கல்யாணத்தை நடத்தி வைக்கறேன்” கபாலி.

கிரய பத்திரம் தயார் செய்ய ஆரம்பித்தான் கபாலி. அதே சமயம் பிளஸ் டூ பரீட்சை ரிசல்ட் வந்தது. அதில் கபாலியின் மகன் செந்தில் தோல்வி அடைந்ததும், மாவட்டத்தில் முதலாவதாக பொன்னம்மாவின் மகன் ராமு வந்ததும் சொல்லியிருந்தது. செந்தில் இதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் போய் படுத்துக் கொண்டான்.

காலையில் எழுந்தவுடன், கபாலியின் மனைவி, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கத்தினாள். “ஐயோ….மோசம் போயிட்டங்க…..நம்ம செந்தில்….,
பிளஸ் டூ பரீட்சையில பெயில் ஆயிட்டதுக்கு, வீட்ட விட்டு போறதா, லட்டர் எழுதி வைச்சியிருக்கான்……வீட்ட பூரா சுத்திப் பாத்திட்டேன்…..எங்கேயும் இல்ல…. போலீஸ் ஸ்டேஷன்ல போய் புகார் கொடுங்க….” கபாலியைப் பிடித்து உலுக்கினாள்.

கபாலி வாயடைத்துப் போனான்….. எழுந்தான். பீரோவைத் திறந்து பொன்னம்மாவின் பத்திரத்தை எடுத்தான்…. போலீஸ் ஸ்டேஷனுக்கு பதிலாக, ஹெட் மாஸ்டர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்….

நடந்ததைச் சொல்லி பத்திரத்தை கொடுத்து, ராமு மேஜரானவுடன் பையன் பேரில் வீட்டை பதிவு செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் கூறினான். மேலும் ராமுவின் படிப்பு செலவு பூராவும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் ஹெட் மாஸ்டரிடம் சொல்லி விட்டு வந்தான் வீட்டிற்கு.

மனைவி கேட்டாள் பதறிக் கொண்டு….” போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தீங்களா…..என்ன சொன்னாங்க…..எப்ப கண்டு பிடிச்சி தருவாங்களாம்…”.

கபாலி சொன்னான், கண்களைத் துடைத்தபடியே, “நம்ம பையன் கிடைச்சுடுவான்..” 

தொடர்புடைய சிறுகதைகள்
கொட்டிக் கொண்டிருந்த அந்த மழையை ரசித்த படி, “ எனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும்..” என்றாள் நிர்மலா. அவள் அப்படிச் சொன்னது பாலுவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவள் இருக்கும் இந்தச் சூழ்நிலையிலும், மழையை அவளால் ரசிக்க முடிகிறதா.. மும்பை மாஹிம் கிரீக்கில், சேறும் சகதிக்கும் இடையில் ...
மேலும் கதையை படிக்க...
வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வள்ளிக்கு எதையும் நம்ப முடியவில்லை. தனக்கு நடந்தது கல்யாணம் என்பதும், இனிமேல் விளையாட்டு வாத்தியார் குமார் தான் தனக்கு புருஷன் என்பதும் ...
மேலும் கதையை படிக்க...
ஜமீன்தார் கோபால் குமார் அந்த ஆளுயர போட்டோவுக்குள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். வழக்கம் போல் இறந்து போனவரின் மனைவி, பெயர் ரங்கநாயகி அம்மா, வயது எண்பது இருக்கும், பணிவோடும், பய பக்தியுடனும் போட்டோவுக்கு எதிரே நின்று, ஏதோ தன் கணவரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். இது அந்த ...
மேலும் கதையை படிக்க...
யமுனை நதிக்கு அப்பால் கிழக்கு டெல்லியின் அரசு அதிகாரிகளுக்கான காலனி. புலர்ந்தும் புலராத டிசம்பர் மாத அதிகாலை பனி மூடி இருந்தது. குளிர் சற்று அதிகம். ரஜாயின் கதகதிப்பில் எழுந்திருக்க மனம் இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தான் சுந்தரம். அம்மா எழுந்து விட்டிருக்க ...
மேலும் கதையை படிக்க...
சண்முகத்திற்கு அன்று பள்ளி விடுமுறை. தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, மாரியம்மாவை கூட்டி வர அம்மா சொல்லி இருந்தது ஞாபகம் வர, தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சைக்கிளை நிறுத்தி விட்டு, மாரியம்மாவின் குடிசை அருகில் சென்ற சண்முகம், அந்த மண் சுவரின் ...
மேலும் கதையை படிக்க...
தோற்றப் பிழை
விளையாட்டு வாத்தியார்
ஜமீன்தாரின் காதலி…..
சுமங்கலி வேஷம்
முதல் சம்பளம்

பொன்னம்மாவின் உயில் மீது ஒரு கருத்து

  1. Deborah says:

    அருமையான கதை!! நேர்மை உண்மையிலே தலை காக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)