தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 8,466 
 

பல பேர் நடமாடும் ஒரு பஸ் தரிப்பு நிலையம் உம்முனாவின் வசிப்பிடமாக இருந்தது. அங்கு சீமேந்தினால் கட்டப்பட்டிருந்த ஒரு வாங்கை அவள் உட்காரவும் உறங்கவும் பயன்படுத்திக் கொண்டாள். அவளின் கண்களில் குடி கொண்டிருந்த அன்பும் கருணையும் கலந்த தாய்மை அங்கு வருவோர் போவோரை ஈர்த்துக் கொண்டன. அதனால் அவள் அங்கிருப்பதைப் பற்றி அவளுக்கெதிராக எதிர்ப்புகளோ, புகார்களோ எழவில்லை. அது மட்டுமல்ல, உரிய நேரங்களில் அவளுக்கு ஏதோ ஒரு சாப்பாடோ தேநீரோ கிடைத்துக் கொண்டே இருந்தது. அவள் கேட்கா விடினும் அங்கு வந்து போகும் ஒரு சிலர் சில நாணயங்களை அவளுக்குப் பக்கத்தில் இருக்கும் குவளைக்குள் போட்டு விட்டுச்சென்றனர். அதைப் பிச்சையாக எடுத்துக் கொள்ள முடியாது. அவளின் கருணை மிகுந்த கண்களில் ஜொலிக்கும் தாய்மைக்குக் கிடைத்த ஓர் அன்பளிப்பாகவே நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அவளுக்கு உதவி கிடைக்கும் ஒவ்வொரு முறையும் அவளின் கண்களில் நன்றிப் பெருக்கொன்று தென்பட, வாய் ஏதோ ஒன்றை முணுமுணுத்தது. உதவி செய்தவர்கள் தமது உதவிக்கு அவள் நன்றி சொல்வதாக அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

பார்வைக்கு உம்முனாவின் வயது எழுபதுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்டது போல் இருந்தது. மிகவும் தளர்ந்த நிலையில் காணப்பட்ட அவளது முகத்திலும் கைகால்களிலும் முதுமை கோடுகளாக கோலமிட்டிருந்தது. பார்வை குறைந்திருந்தது. காது அறைகுறையாகவே கேட்டது. ஏதோ தனது வசதிற்கேற்ற உடைகளை அவள் அணிந்திருந்தாலும் முக்காடு எந்நேரமும் அவளின் தலையையும் உடலையும் மறைத்துக் கொண்டே இருந்தது. ஒரு பீங்கான், ஒரு கோப்பை, ஒரு போத்தல், ஒரு பாய்… என ஒரு சில அத்தியவசியப் பொருட்கள் மாத்திரமே அவள் கைவசம் இருந்தன.

உம்முனாவுக்குத் தனிமை காப்பது போல் அவளுடன் பூனையொன்றும் வாழ்ந்தது. அவள் தனக்குக் கிடைக்கும் உணவை அதனுடன் பங்கு வைத்துக் கொண்டே உண்டாள். சிலசமயங்களில் அவள் அதனைத் தூக்கித் தனது மடியில் வைத்துக் கொண்டு, அதன் உடலை வருடிய வண்ணம் அதனுடன் உறவு கொண்டாடி மகிழ்ந்தாள். அவளின் உபசரிப்புகளுக்கு நன்றி சொல்வதுபோல் அந்தப் பூனையும் அவளைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து, தனிமையைப் போக்கியது. அவளுக்கொரு பாதுகாப்பையும் அளித்தது.

ஒரு சில மாதங்களாக அங்கு குடியிருக்கும் உம்முனாவைப் பற்றிய விபரங்களை அங்கு வந்து போகும் எவரும் அறிந்திருக்கவில்லை. எனினும் அவளின் முகவசீகரமும் அங்கலட்சணங்களும் அவள் வசதி வாய்ப்புக்கள் இருந்த குடும்பமொன்றில் பிறந்து வாழ்ந்தவள் என்பதை பிறருக்கு எடுத்துச் சொல்வது போல் இருந்தது. உண்மையும் அதுதான். எனினும் அவள் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. தான் பெற்று, வளர்த்து ஆளாக்கி விட்ட மூன்று பிள்ளைகளும் தனக்கு ஏதேதோ துரோகங்களை இழைத்திருந்தாலும் அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பது பற்றிய கவலையே அந்தத் தள்ளாத வயதிலும் அவளின் உள்ளத்தை ஆட்கொண்டிருந்தது.

அதனால் அவள் சில நேரங்களில் தனது தளர்ந்த கண்களை ஏற்றி பாதையில் வருவோர் போவோரின் முகங்களை உற்று நோக்கிய வண்ணமாகவே இருந்தாள். தனது மூன்று பிள்ளைகளுள் ஒருவராவது தன்னைப் பற்றித் தேடியலைகிறார்களா? இல்லை, அவர்களுடைய ஏதேதோ தேவைகளுக்காகவது அங்கு வந்து நடமாடுகிறார்களா? என்று அறிந்து கொள்ளுவதற்காகவேதான் அந்த முயற்சி அமைந்திருக்க வேண்டும்.

ஒரு நாள் அவளது முயற்சி வெற்றியளிப்பது போல் இருந்தது.

“ஆ… முனாஸ் மகன் வாரான் போல. நான் இந்த இடத்தில் ஏக்கிறத்தக் கண்டா அவன் பதறிப் போவான். அவன் நல்லவன். மருமகளும் நல்லவதான். ஈந்தாலும் மறுபடி அவங்களோட பெய்த்து வாழுறத்த நான் விரும்ப இல்ல. அல்லாட விதிப்படி நடக்கிறது நடந்து போகட்டும். அதனால் முனாஸ் மகன்ட கண்ணில படாம நான் ஒளிஞ்சி கொள்றதுதான் புத்திசாலித்தனம்”.

தள்ளாடிய வண்ணம் எழுந்து நின்ற உம்முனா, அங்கிருந்த தூண் ஒன்றுக்குப் பின்னால் மறைந்த வண்ணம் அவனை உற்று நோக்கினாள். என்ன ஏமாற்றம்! அங்கு வந்து கொண்டிருந்தது அவளது மகனை ஒத்த உருவத்தை உடையவன் ஒருவனே. அதனால் நீண்ட பெருமூச்சொன்றை விட்ட வண்ணம் அவள் மீண்டும் வந்து சீமேந்து வாங்கில் உட்கார்ந்து கொண்டு தன் உலர்ந்த கண்களில் வழிந்த இரண்டு கண்ணீர் துளிகளையும் தனது முந்தானைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள். உம்முனா பெற்று வளர்த்து ஆளாக்கி விட்ட மூன்று பிள்ளைகளுள் முனாஸ்தான் இளைய மகன். அக்ரம் மூத்த மகன். அவர்களுக்கு இடையே பிறந்த மஸீஹா அவளின் ஒரேயொரு மகள்.

உம்முனாவின் கணவர் அப்துல் காதர் ஹாஜியார் மறைந்ததின் பின், அவள் முனாஸ் வீட்டில் வாழ்வதையே விரும்பினாள். முனாஸைப் போல அவனுடைய மனைவியின் உபசரிப்பும் அவர்களின் குழந்தைகளில் அவளுக்கிருந்த பற்றும் அவளது கணவரான அப்துல்காதர் ஹாஜியார் மறைந்துபோக, அவரின் கொள்முதல் வியாபாரத்தை முனாஸ் தொடர்ந்து செய்து கொண்டு வந்ததும் அதற்குரிய காரணங்களாக இருந்திருக்க வேண்டும்.

நாட்கள் சுழன்றன. கணவனும் இல்லாத நிலையில் தனது மூன்று பிள்ளைகளும் சமூகத்தில் சிறந்த அந்தஸ்துடன் வாழ்வதைக் காண, அவளின் உள்ளம் பூரித்தது. எனினும் அந்தப் பூரிப்பு அதிக நாட்கள் நீடிக்கவில்லை. முனாஸ் செய்து கொண்டு வந்த வியாபாரத்தில் திடீர் பின்னடைவொன்று ஏற்பட்டு விட்டது.

“உம்மா, ஏண்ட யாவாரம் விழுந்திட்டுது. நாளுக்கு நாள் நஷ்டம் வந்து கொண்டே இருக்குது. அதனால அந்த யாவாரத்த தொடர்ந்து செஞ்சி கொண்டு போறாதாயீந்தா பெரிய அளவுல ஒரு தொகப் பணம் தேவப்படுது. கடன் படவும் ஏலா. வட்டி குடுக்கவும் ஏலா. அதனால எனக்கு சும்மா ஒரு ஐடியா வந்திச்சி. உம்மாட அந்த வயல வித்தா என்ன எண்டு?”

“என்ன மகன், நீ இது செல்லுறாய்? ஏண்ட வயல விக்கவா? மகனே, அது எண்டா நடக்காத காரியம். நானும் வாப்பாவும் சம்பாரிச்ச சொத்து சொகம் எல்லாத்தையும் ஒனக்கும் காக்காவுக்கும் தாத்தாவுக்கும் சமமாகத் தந்த போட்டு, மிச்சமா ஈந்த அந்த வயலையும் காக்கா ஈக்கிற ஊட்டையும் வாப்பா ஏண்ட பேரில வச்சிட்டு மவ்த்தாப் போனது ஏண்ட கடசி காலத்தில நான் புள்ளகளுட பராமரிப்புக்கெடச்சாமக் கஷ்டப்படுவேன் எண்ட காரணத்துக்காகத்தான் ஈக்க வேணும். அதனால் நீ செல்லுற விஷயத்துக்கு என்னால உடன்பட ஏழா.”

“என்னத்துக்கு உம்மா இப்ப ஒங்களுக்கு வயலொண்டு? அந்த வயலில வௌயுற நெல்ல ஊட்டுள கோந்து போட்டா, ஊடெல்லாம் தூசு படியுறதெண்டு மருமகள் கொற செல்லுறா. அதுதானே காசு ஈந்தா வாங்குறத்துக்கு வக வகயா நல்ல அரிசிகள் ஈக்கு. அதனால நாங்க அந்த வயல வித்தப் போடுவோம் உம்மா.”

உம்முனா எதுவும் பேசாது அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள். இருந்தாலும் மகனின் வேண்டுகோள் அவளை பலவாறு யோசிக்க வைத்து விட்டது.

“பாவம், சின்ன மகன் புள்ளகுட்டிக்காரன். அவன் நஷ்டவாலியானா புள்ளகுட்டிகள் தான் ரோட்டுள எறங்கும். நான் இப்ப கெழவி. எனக்கென்னத்துக்கு வயல் வரம்புகள். அதனால வயல வித்து மகனுக்கு ஒதவியொண்டு செய்யிறதுதான் நல்லம்.”

அவளின் மனம் இறங்கியது. அடுத்தநாள் உம்முனா வயலை விற்பதுக்கு இணக்கம் தெரிவித்தாள். ஓரிரு வாரங்களில் வயல் விற்பனையாகிவிட்டது. அதன் மூலம் கிடைத்த பணத்தை முனாஸ் வியாபாரத்தில் முதலீடு செய்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கவில்லை. மீண்டும் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. அதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஆரம்பித்தன. அவற்றைச் சமாளிக்க இடையில் புகுந்த உம்முனாவுக்கு அவர்களின் ஏச்சுப் பேச்சுக்களுக்கு ஆளாக நேர்ந்து விட்டது. அது மட்டுமல்ல, அவள் அங்கு இருப்பதை மகன், மருமகள் இருவரும் விரும்பவில்லை என்பதையும் அவர்களின் பேச்சுவார்த்தைகளும் நடத்தைகளும் உணர்த்தி நின்றன. இவ்விடயங்கள் மஸீஹாவுக்குக் கேள்விப்பட அவள் உடனே பதறியடித்துக் கொண்டு தனது தாயிடம் வந்தாள். w“உம்மா, பெத்த மகள் நான் ஈக்க, நீங்க என்னத்துக்கு கவலப்பட வேணும்? நீங்க என்னோட வாங்கோ. நான் ஒங்கள பூப்போல வச்சிக் கவனிச்சிக் கொள்ளுறேன். இப்ப முனாஸ் தம்பி வருவார்தானே. வந்ததும் அவரிட்ட விஷயத்தை செல்லிட்டு எங்கட ஊட்டுக்குப் போவோம்.”

உம்முனாவின் தளர்ந்த வயது, யார் எதைச் சொன்னாலும் அதைக் கேட்கும் நிலைக்கு ஆளாக்கி இருந்தது. அதன் விளைவாக அவள் முனாஸிடம் விடை பெற்றுக் கொண்டு, மஸீஹாவோடு அவளது வீட்டுக்குச் சென்று விட்டாள். அன்று அங்கே மருமகன், பேரப்பிள்ளைகள் என்போரிடமிருந்து உம்முனாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்ல, மஸீஹாவின் அன்பாலும் ஆதரவாலும் உம்முனாவின் உள்ளம் குளிர்ந்தது.

நாட்கள் மெதுவாகச் சுழல, மகளின் உபசரிப்பு உம்முனாவை வெகுவாகக் கவர்ந்திருந்தது. ஒரு நாள் இரவு உணவருந்திய பின், உம்முனா மஸீஹாவிடம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.

“மகளே, ஒரு குத்தம் கொற இல்லாத நீ என்னப் பாக்கிற கேக்கிறத்துக்கு அல்லா ஒனக்கு பறகத்துச் செய்வான்”.

“உம்மா, ஒங்கட துவா பரக்கத்தாலதான், இந்த ஊட்டுல எல்லா விஷயங்களும் நல்ல படியா நடக்குது. மகளுக்கு நல்ல எமொண்டுல சம்பந்தம்கெடச்சதும் அதனாலதான்.’

‘அது சரி மஸீஹா, அடுத்த மாசம் கலியாணமும் வருகுது. அதுக்கேத்த செலவு சித்தாயங்களுக்கெல்லாம் என்ன செய்யப் போறாய்?”

உடனே தனது தாயிடம் நெருங்கி வந்த மஸீஹா அவளின் தலையை மெல்ல வருடி விட்டாள். அதன் பிறகு மஸீஸாவின் கை விரல்கள் மெதுவாக கீழ் நோக்கி இறங்கி, உம்முனாவின் காதுகளைத் தொட்டு, அவற்றை அணி செய்து கொண்டிருந்த அல்குத்துகளில் ஓடியது.

“இந்த வயசில என்னத்துக்கும்மா அல்குத்தெல்லாம் போட்டுக் கொண்டு அவதிப்படுறீங்க? அல்குத்துகளுட பாரத்துக்கு காது மடல் ரெண்டும் மடிஞ்சி பெய்த்தீக்கு. இதுகளால நாலஞ்சி சோடியக் கழற்றித் தாங்கோ, பேத்திக்கு நக நட்டுச் செய்ய. அப்ப, காதுகளுக்கு ஈர பாரமும் கொறயும். பேத்திக்கு நகநட்டு செஞ்சி குடுத்தோமே எண்டு மனசும் நெறயும்.”

உம்முனா, அதற்கு எதுவும் பேசவில்லை. பதிலுக்கு, மகள் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையை அசைத்துக் கொண்டாள்.

தாயின் நகைகள் மீது கண்ணுங்கருத்துமாய் இருந்த மஸீஹா, அவற்றை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. திருமண நாட்கள் நெருங்கி வர, அவள் மீண்டும் ஒரு முறை நகைகளின் தேவை பற்றிய உம்முனாவுக்கு ஞாபகம் ஊட்டினாள்.

அச்சமயம் உம்முனாவின் சிந்தனை சுழன்றது. “நான் வாழ்ந்த காலம் மிச்சம். இன்னும் வாழப் போறது சொற்ப காலம். அந்தச் சொற்ப காலமும் சந்தோஷமாகக் கழிய வேணுமெண்டா மஸீஹாவுட ஒதவி ஒத்தாச எனக்குத் தேவ. அதனால அவள் கேக்கிற ஒதவிய நான் செய்யத்தான் வேணும். அதோட இந்தக் கெழவிக்கு என்ன நகநட்டென்?”

உம்முனா ஒரு முடிவுக்கு வந்தாள். உடனே தனது காதுகளில் இருந்து பதினொரு சோடி தங்கத்தினாலான அல்குத்துக்களையும் ஒவ்வொன்றாகக் கழற்றி பக்கத்தில் இருந்த மேசை மீது வைத்தாள். அதன் பிறகு தனது கழுத்தில் இருந்த மாலையையும் கழற்றி அதையும் அவற்றிற்குப் பக்கத்தில் வைத்தாள்.

“மகள், இதெல்லாத்தையும் சந்தோஷமாகத் தாறேன். பேத்திக்கு தேவையான எல்லா நகநட்டுக்களையும் செஞ்சி குடுத்திடு.”

அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. திருமணத்துக்கு முதல் நாள் மஸீஹா உம்முனாவிடம் வந்தாள். “உம்மா, நீங்க ஈக்கிற இந்தக் காமராவத்தான் மாப்புள பொண்ணுக்கு ரெடி பண்ண வேணும். அதனால் ஒங்கட கட்டில், சாமான் சட்டிகள் எல்லாத்தையும் ஸ்ட்டோர் ரூம்ல போடுறேன். தவறா ஒண்டும் நெனச்ச வானாம்.”

உம்முனாவுக்கு அது பெருங் குறையாகத் தென்படவில்லை.

“இந்தத் தள்ளாத வயசில படுக்க ஒரு எடமும் தின்ன ஏதோ ஒரு சாப்பாடும் கெடச்சிறதே பெரிய விஷயம்.”

உம்முனா அவ்வாறு தனது மனதைத் தேற்றிக் கொண்டாலும் திருமணத்தன்று அங்கு வந்த உம்முனாவின் மூத்த மகன் அக்ரமுக்கு, தாயின் நிலை பெருங் குறையாகவேபட்டது.

“என்ன உம்மா, நீங்க இது ஸ்ட்டோர் ரூம் ஒண்டுள்ளுக்கு அடப்பட்டுப் போய்? இவ்வளவு பெரிய ஊட்டுள ஒங்களுக்காக ஒதுங்க ரூம் ஒண்டு இல்லயா? நான் நாளெக்கி இங்க வருவேன். நீங்க ரெடியா ஈக்க வேணும். ஏண்ட ஊட்டுக்குப் போறத்துக்கு. அது வாப்பா கட்டின ஊடு. அதுட உறுதி இன்னும் உம்மாட பேருலதான் ஈக்கு. அதனால் நீங்க என்னத்துக்கு இந்த ஊட்டுல ஈந்து கொண்டு கஷ்டப்பட வேணும்? அது சரி, உம்மாட காது கழுத்தெல்லாம் பாழாய்ப் பெய்த்து பாக்க அசிங்கமா ஈக்கு.”

“மகன் மஸீஹாட மகள்ட கலியாணம் குடும்பத்துல வார தலக்கலியாணமல்யா? அதனால ஏண்ட நக நட்டெல்லாத்தையும் அழிச்சி, புதிய நகநட்டு செஞ்சி கொள்ள பேத்திக்கு குடுத்திட்டேன்.” “அதுவும் அப்பிடியா? முனாஸ் வயல வித்து ஏமாத்திட்டான். மஸீஹா நகநட்ட எடுத்து ஏமாத்திட்டாள். நீங்க புள்ளகள அளவுக்கதிகமாக நம்பீட்டீங்க. அது சரி நீங்க ஏண்ட ஊட்டுக்கு எப்ப வருவீங்க.”

“மகன், இந்த காமராவுக்குள்ள அடபட்டு ஈக்கிறது கஷ்டமாத்தான் ஈக்கு, ஆனா மஸீஹாட மனச நோகிச்ச ஏலா. கலியாண அமக்களங்கள் முடிஞ்சதும் ஆற அமர அவக்கிட்ட ஒரு வார்த்த செல்லிப் போட்டு, நான் ஓண்ட ஊட்டுக்கு வாரேன். நீங்க எல்லாரும் ஏண்ட புள்ளகள்தான்.”

அதன்படி திருமணம் நடந்து முடிந்த சில தினங்களுக்குப் பிறகு வந்து அக்ரம், உம்முனாவை அவனது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனான். அப்போது, ஒரு பிள்ளை கைவிடும் போது இன்னொரு பிள்ளை கைகொடுக்க இருப்பது அவளுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

“என்ன விட ஏண்ட முன்னோர்கள் நன்ம செஞ்சி ஈக்குறாங்க போல. அதனால்தான் அல்லா என்னக் கையுட இல்ல.”

உம்முனா இறைவனுக்கு அவ்வாறு நன்றி கூறிக் கொண்டாள். அக்ரம் குடியிருந்த வீடு, வீட்டுப் புறச்சூழல், மருமகளின் உபசரிப்பு, ஓடியாடும் குழந்தைகள் என பல்வேறு அம்சங்கள் உம்முனாவுக்கு மன நிறைவை அளித்தாலும் அது அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஒரு நாள் இரவு உம்முனா ஓய்வாக இருக்கும் போது அக்ரம் அவளிடம் வந்தான்.

“உம்மா, நான் கண்டீல புதிய ஊடொண்டு வாங்கப் போறேன். துவாச் செஞ்சி கொள்ளுங்கோ.”

“மகன் இந்த ஊடுவாசல் போதாதா ஒனக்கு? வாப்பா எவ்வளவு வசதி வாய்ப்போட ஒனக்கு இந்த ஊடு வாசலக் கட்டித் தந்தீக்கிறாரு. இதுல என்ன கொற குத்தத்த நீ கண்டாய்? அது மட்டுமல்ல. இந்தச் சுற்று வட்டாரத்தில பழகுறத்துக்கு எவளவு அருமையான மனிஷர் ஈக்குறாங்க.

“உம்மா, அதெல்லாம் சரிதான். ஆனா புள்ளுகளுட புடிப்புக்காகத்தான் நான் கண்டீல ஊடொன்று வாங்கப் போறேன். இண்டெய்க்கு புள்ளகளுக்குக் குடுக்குறத்துக்கு கல்வியப் போல செவ்வம் ஒண்டு வேற இல்ல உம்மா.”

“அது சரி. கண்டீல ஊடு வாங்குறத்துக்கு ஒனக்கு எங்கால மகன் அவளவு காசி பணம்?”

“உம்மா, ருமானாட சீதனப் பங்குக்குரிய காசி கெடச்சிட்டுது. கண்டீல நாங்க பாத்து வச்சீக்கிற ஊட்ட வாங்க இன்னும் கொஞ்சம் காசி தேவப்படுது. உம்மாட பேரில ஈக்கிற இந்த ஊட்ட ஈடு வச்சோ, வித்தோ தான் அந்தக் காசத் தேட வேண்டி ஈக்கு. நீங்க விருப்பம் எண்டாத்தான் நான் அதச் செய்வேன்.”

“மகன் நான் என்ன இன்னும் மிச்சம் காலம் வாழப் போறவளா? புள்ளகளுட படிப்புக்குத்தான் நாங்க மொதலிடம் குடுக்க வேணும். ஊட்ட ஈடுவச்சி வட்டிக்குப் பணம் வாங்குறது ஹராமான வேல. அதனால, நாங்க ஊட்ட வித்து தேவயான காசத் தேடி எடுப்போம்.”

சந்தர்ப்பத்துக்கு அவ்வாறு அவள் சொன்னாலும் முனாஸும் மஸீஹாவும் நடந்து கொண்டது போல், அக்ரமும் நடந்து கொள்வானோ என ஓர் ஐயம் அவளின் மனதில் குடி கொண்டே இருந்தது. அது அவ்வாறாக இருந்தாலும் வீட்டை விற்பதற்காக வேண்டி அனுமதியை அவள் கொடுத்து விட்டாள். அதன்படி வீடு விற்கப்பட்டு, கண்டியில் நவீன வசதிகள் கொண்ட வீடொன்று வாங்கப்பட்டது. அந்த வீட்டில் இருந்த ஆடம்பரமும் சொகுசும் உம்முனாவுக்கு ஒரு சௌகரியத்தை விட அசௌகரியத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது. குளிரூட்டப்பட்ட அறைகள், மினுமினுப்பான தரைகள், நவீன வசதிகள் கொண்ட குளியலறைகள் என்பன அவளுக்கு ஒத்துவரவில்லை. அதேநேரம், வீட்டின் பராமரிப்புக்கு மாமியாரின் நடவடிக்கைகள் தடையாய் இருப்பது ருமானாவுக்குப் பொறுக்கவில்லை. அதனால் சில நேரங்களில், அது சம்பந்தமாக அவளுக்குத் தனது மாமியாருடன் முரண்பட வேண்டியிருந்தது. அந்த முரண்பாட்டால் மாமி மருமகளுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட, அதில் மகனுக்கும் தலையிட வேண்டிய சந்தர்ப்பங்கள் உருவாகிவிட்டன. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் உச்சக்கட்டத்தை அடைந்த சமயம், உம்முனாவும் அவர்களுக்குப் பக்கத்திலேயேதான் இருந்தாள். அப்போது அவர்களது சண்டை சச்சரவுகளும் ஏச்சுப் பேச்சுக்களும் உம்முனாவைத் தினர வைத்து விட்டன.

“அக்ரம், இந்த ஊட்டுக்குள்ள வார சண்ட சச்சரவெல்லாத்துக்கும் இந்தக் கெழவிதான் காரணம். நாங்க ரெண்டு பேரும் இந்த ஊட்டுள சந்தோசமா வாழ வேணுமெண்டா இந்தக் கெழவிய எங்க சரி அனுப்பி வையுங்கோ. இல்ல, எனக்குத் தலாக்குச் செல்லி, என்ன ஏண்ட ஊட்டுக்கு அனுப்பி வெச்சிட்டு, நீங்க இந்தக் கெழவியோட சந்தோஷமாக வாழுங்கோ.”

“அல்லாட அர்ஷும், நடுங்குற தலாக் எண்ட சொல்ல மருமகள் வாய் கூசாமல் செல்லுறாளே. செல்லுவாள், செல்லுவாள். இந்தக் காலத்துப் பொம்புளகளுக்கு அதப்பத்தியெல்லாம் கவல இல்ல.”

அவ்வாறு தனக்குள் மெதுவாகச் சொல்லிக் கொண்ட உம்முனா மகனை நோக்கி நின்றாள்.

“மகன், என்னால நீங்க ரெண்டு பேரும் சண்ட சச்சரவுகளுல ஈடுபடுரத்த எனக்குத் தாங்கிக் கொள்ள ஏலாம ஈக்கு. அதனால நான் இந்த ஊட்ட உட்டு தல திரும்பின திசயில எங்க சரி போக முடிவு செஞ்சிட்டேன். நீங்க ரெண்டு பேரும் இந்த ஊட்டுல சந்தோஷமா இறீங்கோ.”

“உம்மா, ஒங்கட அட்டகாஷங்கள எனக்குத் தாங்க ஏலாம ஈக்கு. நீங்க ஊட்ட உட்டுப்போறத்துக்கு முடிவெடுத்தா பெய்த்துத் தொலய வேண்டியது தானே. நானும் எவளவு காலத்துக்குப் பொறுக்கிறது. உம்மா, நான் ஒங்கட வயித்துல தரிச்சதும் பாவம். நீங்க என்னப் பெத்ததும் குத்தம். அன்ன செல்லிட்டேன். நீங்க இனி வேண்டிய முடிவ எடுத்துக் கொள்ளுங்கோ.”

அப்போது உம்முனாவின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. உடல் தளர்ந்தது. உள்ளம் பதறியது. உடனே தனது கணவர் எப்போதோ தன்னிடம் சொன்ன ஒரு விடயம் திடீரென அவளது ஞாபகத்துக்கு வந்து சுழல ஆரம்பித்தது.

“உம்முனா ஒரு காலம் வரும். அப்போ புள்ளகள் தாய் தகப்பன மதிக்க மாட்டாங்க. தாய் தகப்பன் தங்கட அற்ப ஆசைகள நெற வேத்திக் கொள்ளப் பெய்த்துத்தான் அவங்க பொறந்தாக தாய் தகப்பனுக்குக் குத்தம் சாட்டுவாங்க. உலகத்துல புள்ளயொண்டு பொறக்கிறது அல்லாட நாட்டம் எண்டத்த மறந்திடுவாங்க. ஆனா புள்ளகள் பெருத்து ஆளாகும் வரக்கிம் தாய் தகப்பனிட்ட ஈந்து எல்லா ஒதவி ஒத்தாசகளயும் எடுத்துக் கொள்வாங்க. தாய் தகப்பனுக்கு ஈக்கிற சொத்து சொகங்கள அபகரிச்சுக் கொள்வாங்க. தாய் தகப்பண்ட ஒழைப்ப உறிஞ்சிக் கொள்வாங்க. கடசியா தாய் தகப்பன் வயசுக்குப் போகப் போக புள்ளகள் அவங்கள ஒரு சொமயாக எடுத்துக் கொள்வாங்க. அந்தச் சொமயில ஈந்து விடுபட புள்ளகள் செல நேரம் தாய் தகப்பனோடு முரண்படுவாங்க. ஏசுவாங்க.

அடிப்பாங்க, அப்போ அதெல்லாத்தையும் தாங்கிக் கொண்டு தாய் தகப்பன் அமைதியாக ஈக்க வேணும். செல நேரம் ஊட்ட உட்டே தொறத்தியும் உடுவாங்க. அப்ப தாய் தகப்பன் ஊட்ட உட்டு பெய்த்திட வேணும். அதுதான் புள்ளகளப் பெத்தது குத்தமென்டு அல்லாட நாட்டத்த மறுக்கிற புள்ளகளுக்கு தாய் தகப்பன் செய்ய வேண்டிய பரிகாரம். அப்ப அல்லா தாய் தகப்பன கையுடமாட்டான்.”

முன்பொரு நாள் தனது கணவன் சொன்ன விடயங்கள் மீண்டும் மீண்டும் அவளின் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தன. “ஏண்ட புரூஷன் சென்ன விஷயங்கள் எல்லாம் சரி.

ஏண்ட புள்ளகள் என்னோட முரண் பட்டாங்க. ஏசினாங்க. பேசினாங்க. அடிச்சமட்டும் இல்ல. ஆனா, நான் தொடந்து இங்க ஈந்தா அடிபட வேண்டியும் வரும். அதனால இங்க ஈந்து வெளியேறி எங்க சரிபோறதுதான் புத்திசாலித்தனம்.”

அதன் பிறகு அவள் புத்தி பேதலித்தது போல் வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடமாடத் தொடங்கினாள். மகனும் மருமகளும் அதனைக் கண்டும் காணதது போலவே இருந்தனர். அவள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் வீட்டைவிட்டு வெளியேறும் ஆயத்தங்களுடன் வாயில் வரை வந்து தனது முதலாவது காலடியை எடுத்து வைத்தாள், இரண்டாவது காலடியை எடுத்து வைத்தாள். மூன்றாவது காலடியையும் எடுத்து வைத்தாள். அப்போது அவளின் புத்தி தெளிந்து விட்டது போல் இருந்தது.

“நான் இப்ப எங்க போவேன்? என்னப் பொறுப் பெடுக்க தார் ஈக்கிறாங்க? நான் அவசரப்பட்டுடேனா?”

உடனே தனது அவசரப் புத்தியால் தான் தவறான முடிவொன்றுக்கு வந்திருப்பதாக அவளுக்கு விளங்கி விட்டது. எனவே மகன், மருமகள் இருவரின் ஒருவராவது வந்து தனது பயணத்தை நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் அவள் ஒரு முறை திரும்பி அவர்களை நோட்டமிட்டாள். எனினும் அவர்கள் இருவரில் ஒருவராது வந்து அவளை நிறுத்தவில்லை. அதனால் வீட்டை விட்டு வெளியேறுவது போல் பாசாங்கு செய்தபடி அவள் வீட்டுக்கு வெளியே வந்தாள். அங்கே பேரப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களாவது வந்து தனது பயணத்தை நிறுத்துவார்களா என ஓர் ஆவல் மேலிட, அவள் ஒரு கணம் அங்கே நின்று அவர்களை எதிர்பார்த்தாள். அவர்களும் வரவில்லை. உள்ளம் நொந்து போன அவள் கேட் வரை வந்தாள். அங்கிருந்த கேட் காவலாளிகூட பாராமுகமாகவே இருந்தான். எனவே, தற்போதைக்கு தான் யாருக்கும் தேவையில்லாத ஒரு ஜீவன் என்பதை அவள் உணர்ந்து கொண்டு, வீதி வரைக்கும் வந்து விட்டாள்.

ஆறறிவு படைத்த அவளது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவளைக் கை விட்டாலும் ஐயறிவு படைத்த அவளது செல்லப் பூனை அப்போது அவளைப் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

நாளடைவில் அவளையும் அவளது செல்லப் பூனையையும் அந்த பஸ்தரிப்பு நிலையம் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டது.

– உ.நிசார் (மார்ச் 2016 )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *