Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பெருமை

 

ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அவள் கணவன் மீது, அம்மா மீது, அப்பா மீது, தங்கை மீது, அவள் மீதே கூட ! ‘அரைவிங் பை பிருந்தாவன் ‘ என்ற அவள் தங்கை கணவன் தந்தி அவள் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

சூட்டும் கோட்டுமாய் ஜம்மென்று வந்து நிற்கப் போகும் அவர் பக்கத்தில் ஜிப்பாவும் வேஷ்டியுமாய் அவள் கணவன். குமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு. அதே ஜிப்பா வேஷ்டி கோலத்தில் தான் அவள் அவரை முதலில் பார்த்தாள். ஜிப்பாவோடும் பரிசு பெற்ற கவிதையோடும் அவர் புகைப்படம் ‘நந்தவனம்‘ பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

கல்லூரி விழாவில் கைகுலுக்கிப் பாராட்டினாள்,”காகிதத்தில் கனலைக் கக்குகிறீர்கள்” என்று கவிதை ரசனை காதலாகிக் கல்யாணத்தில் முடியும் வரை கனவுலகத்தில் மிதந்தார்கள்.

ஆனால் வாழ்க்கை கவிதை போல ரசிக்கவில்லை. வாழ்க்கைக்கு கவிதையோடு காசும் வேண்டியிருந்தது. பூமாலைகள் கைதட்டலோடு உதிர்ந்து போய் உபயோகமில்லாமல் போய்விடுகின்றன. பாராட்டுக்கள் பொன் மாலைகளாக மாற வாய்ப்பில்லை.

சென்னை நகரத்தின் மிகச் சிறந்த பள்ளியானாலும் செகண்டரி கிரேடு ஆசிரியருக்குச் சம்பளம், பாங்கில் ஒரு ப்யூன் வாங்குவதைவிடக் குறைவு என்பதுதான் அவள் குறை. அவள் தங்கை கணவன் பாங்கில் காஷியர் சி.ஏ. முடித்தவன் அதற்கென இன்க்ரிமென்டை வாங்கிக் கொண்டு ஆபீசராகப் போகிறவன். பங்களூரில் தனி க்வார்ட்டர்ஸ், போன். .. கார் எல்லா வசதிகளும் உண்டு.

ஆனால் அவள் கணவன் படித்த பி.ஏ., எம்.ஏ., பைசாவுக்குப் பிரயோசனமில்லை. அகமும் புறமும் படிக்க, பேச சுவையாக இருக்கும். சோற்றை சுவையுள்ளதாக்குமா? அவளுந்தான் பி.காம் படித்தாள். பாங்க் உத்தியோகக் கனவுகளோடு விழுந்து விழுந்து படித்தாள். விட்டுப் படித்த பகுதிகளில் கேள்விகள் வந்து அவள் காலை வாரிவிட்டன. எத்தனை முறை எழுதினாலும் ஏதாவது ஒரு பேப்பர் காலை வாரி விட்டது. இடையில் காதல் வேறு.

காதல். .. கல்யாணம்.. . உடனுக்குடன் இரண்டு பெண் குழந்தைகள். வெளியே போக முடியாது. சிறை குடும்பச் சிறை. இத்தனைக்கும் அவள் கணவன் அவள் மீது உயிரையே வைத்திருந்தான். வீட்டு வேலையில் பெரும் பங்கு அவனுடையதுதான். இரவு முழுவதும் குழந்தைகளோடு போராட்டம் என்று அயர்ந்து துhங்கும் மனைவியை காபியோடுதான் எழுப்புவான். வெளியே போனால் கைப்பிடியில் ஒரு குழந்தையும் தோளில் ஒரு குழந்தையும் அவன் பொறுப்புதான். வெளியூர் விழா என்றால்கூட நடக்கும் குழந்தையைத் தன்னோடு கவியரங்கத்துக்கு அழைத்துக் கொண்டு போய் விடுவான்.

“நேற்று உங்கள் கணவரை டி.வி-யில் பார்த்தேன்” என்று யாராவது சொன்னால் போதும்.

“நான்தான் தினம் தினம் நேரில் பார்க்கிறேனே” என்று குறைப்பாட்டு ஆரம்பமாகி விடும்.

அவள் குறை அம்மா மீதும் பாயும்- “தங்கைக்கு பாங்க் ஆபீசராகப் போறவனைப் பார்த்தீங்களே. எனக்கு மட்டும் டானா டாவன்னாவா !”

“நீயாகத் தேடிக் கொண்டது தானே ?”

“எனக்கென்ன தெரியும் ? பெரியவர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஒரு வேலைக்கு என்னை அனுப்பியிருக்க வேண்டும்.”

“இப்போ என்ன அதுக்கு, நெனச்சிண்டாளாம் கெழவி வயசுப்பிள்ளைக்கு வாழ்க்கைப்படணும்கிற மாதிரி !”

“அவ வசதியாயிருக்கா. ஃபிரிட்ஜ், டி.வி, வீ.சி.ஆர் ! ”

“சொல்லேன், வேலைக்காரி, சமையல்காரி.. . டிரைவர், அது இதுன்னு.. ”

“சொல்லத்தான் சொல்வேன். .. ஒரு கண்ணுல வெண்ணெய். .. ஒரு கண்ணுல சுண்ணாம்பு..”

“அடி போடி பைத்தியமே. அவளுக்கு காசு பணம் இருந்தாக்க உங்களுக்கு பேரு, புகழ், மாலை, மரியாதை.”

“மாலையும் மரியாதையும் மனசை நெறைச்சிடுமா ?”

“நெறைக்கணும்” – அம்மா போய் விடுவாள்.

வாயில்லாப் பூச்சியாகிவிட்ட மகனை நினைத்து நினைத்து வருத்தப்பட்ட பெற்றோர்களை அவள் வாயால் அடித்தே கிராமத்துக்கு விரட்டி விட்டாள்.

“வாத்தியார் பிள்ளைக்கு வைரத்தோடு மாட்டுப்பொண் வேணுமா ?” வார்த்தை வைரமாய் அறுத்தது. கண்ணுக்கெதிரில் செல்லமாய் வளர்த்த பிள்ளை அவமானப் படுவதைக் காணப்பிடிக்கவில்லை. பெட்காபி முதல் படுக்கை தட்டிப் போடுவது வரை வேலைக்காரனை விடக் கேவலமாக நடத்தப்படுவது அவர்கள் கண்ணீரில் ரத்தத்தை வரவழைத்தது. பார்க்க சகிக்காமல் புறப்பட்டு விட்டார்கள்.

“உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன் ?” – அவள் கணவன் மீது எப்போதும் வீசும் – பாணம். “இரண்டு குழந்தைகள் சாட்சி !”

“போதும் பேத்தல்.. . உங்க ஷட்டகர் நாளைக்கு வர்றாராம்.”

“வரட்டும் சென்ட்ரல் போய் அழைச்சிண்டு வர்றேன்.”

“இந்த ஒண்டுக் குடித்தனத்து இடத்துக்கா ?”

“அவர் வர்றதுக்குள்ளே பங்களா கட்ட முடியுமா ?”

“நான் என்ன செய்யட்டும் ? ஓட்டல்லே ரூம் போட முடியுமா ?”

“எங்க அப்பா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடுங்க. நானும் அங்கே போயிடுறேன்.”

“சரி ! அவரை விட்டுட்டு நான் ஸ்கூலுக்குப் போயிடுவேன்.”

அவள் மட்டுமல்ல, அவள் ஷட்டகரும், அவருடன் வந்த ஆபீசருங்கூட நேரே அவனோடு பள்ளிக் கூடத்துக்குப் போகத்தான் நேரமிருந்தது. பிருந்தாவன் அன்று லேட்.

ஓட்டலில் சிற்றுண்டியை முடித்து விட்டு டாக்ஸியில் புறப்பட்டார்கள். பள்ளியில் அரை மணி நேர வேலை. அவ்வளவுதான்.

“மினிஸ்டராலே கூட முடியாத காரியத்தை உங்க மாப்பிள்ளை முடிச்சிக் கொடுத்திட்டாரே.”

“இவருக்குத்தான் ஸ்கூல்ல என்ன வாய்ஸ் ! எத்தனை மதிப்பு !”

“எனக்கு மெட்ராஸ் டிரான்ஸ்பர். பையனை உங்க பள்ளிக்கூடத்திலே தான் சேர்க்கணும்னு சொன்னேன். மாப்பிள்ளை பிரின்சிபால்கிட்டே ஒரு வார்த்தை சொன்னார்.”

“உங்களுக்கில்லாத சீட்டான்னுட்டார் !”

“எத்தனையோ பெரிய பெரிய ஆள் மூலமெல்லாம். சிபாரிசு பிடிச்சுப் பார்த்தேன். அசையாத மனுஷன் இவர் சொன்னதும் ஒ.கே.ன்னுட்டார்.”

“மத்த டீச்சர்சுக்குக் கூட இவ்வளவு வாய்ஸ் கிடையாதாம்.”

“பள்ளிக்கூடத்துக்கே இவராலே ரொம்பப் பேராம். இவர் பேச்சுக்கு மறுப்புக் கிடையாதாம்.”

“பையனும் அங்கே நல்ல மார்க் வாங்கியிருக்கான்.” தனக்குச் சூட்டப்படும் பெருமைகளை மெல்லத் தள்ளப் பார்த்தார்.

“நோ நோ கிரெடிட் கோஸ் டு மாப்பிள்ளை. பைசா செலவில்லாமல் சீட் வாங்கிக் கொடுத்திட்டார். போய் சர்ட்டிபிகேட்டை வாங்கி ஈ.ஓ. கௌண்டர் சைன் வாங்கிண்டு வரணும்மாம்.”

“நாங்க உடனே கிளம்பறோம். ரொம்ப தாங்க்ஸ் !”

வெளியே கார் புறப்பட்டது.

உள்ளே அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். “பார்த்தியாடி – பாங்க் மாப்பிள்ளையும் ஆபீசரும் பெங்களூரிலிருந்து வந்து இவர் காலைப்பிடிச்சுக் காரியம் சாதிச்சிண்டு போறார்..”

அவளுக்கும் அது பெருமையாகத் தானிருந்தது.

- ஆகஸ்ட் 04 2005 

தொடர்புடைய சிறுகதைகள்
முதலில் மேடையேறும் நடிகனைப்போல மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டார் வராகசாமி. ஒட்டக் கறந்துவிட வேண்டும். தரகர் சொல்லியிருந்தார், ‘சரியான பார்ட்டி‘ என்று. ரிமோட் கண்ட்ரோலில் மனைவியின் முகம் வேறு. ஆரம்பித்தார். “நாங்க மிடில் கிளாஸ்தான், நகை நட்டை வித்துத்தான்..“ அவரிடம் ஸ்க்ரூ நட் ...
மேலும் கதையை படிக்க...
"விற்பனையாகிறது குசேலர் எழுதிய குடும்பக் கட்டுப்பாடு நுhல்". "வீட்டு வசதி யூனிட்டின் கிளைக்கு வசதியான வீடு தேவை" "பத்தே ரூபாய்த் தவணை, பத்தே ஆண்டுகள், சென்னைக் கடற்கரைக்குக் கிழக்கே பத்தே நிமிட விமானப் பயணம்.. மனைகள் விற்பனை." விளம்பரப் பகுதிகளைப் படித்துக் கொண்டே வந்த ...
மேலும் கதையை படிக்க...
"கெட்டி மேளம் ! கெட்டி மேளம் !" குரல்கள் எதிரொலித்தன. "கொட்டாதே கெட்டி மேளம் ! நிறுத்து... நிறுத்து மேளத்தை !" குரலைத் தொடர்ந்து மேளக்காரக் கிழவன் கையிலிருந்த கொம்பையே பிடுங்கிக் கொண்டு ருத்திராகாரமாய் நின்றhள் அகிலாண்டம் ! ‘கொட்டாதே கெட்டி ...
மேலும் கதையை படிக்க...
பூஜையை முடித்துக் கொண்டு பூசனிக்காய் வயிறு தெரிய வெளியே வந்தார் புண்ணியக்கோட்டி. வந்தவரை பிரம்பு நாற்காலியில் உட்காரக்கூட அனுமதிக்கவில்லை. அனுசுயா அப்படியே அவர் கால்களில் விழுந்தாள். புண்ணியக்கோட்டி இதை எதிர்ப்பார்க்கவில்லை. "எழுந்திரும்மா . .. எழுந்திரு. நீ யாரு ? என்ன ...
மேலும் கதையை படிக்க...
திருமணஞ்சேரி ஐயனார் குளத்தின் வடக்கு கரையில் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த அந்த தென்னை மரம் எதிர்க்கரை ஐயனாரையும் எப்போதாவது மட்டுமே காற்றுக்காக கதவைத் திறந்தால் பெருமாளையும் தான் பேச்சுத்துணைக்கு அழைக்க வேண்டும் ! வீட்டுக்கு வீடு குழாய், கிணறு, பம்ப் செட், ...
மேலும் கதையை படிக்க...
சீர்வரிசை
வேலை கிடைத்தது
சிவன் சொத்து!
அதிர்ச்சி
அது ஒரு தனி மரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)