கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 12,805 
 

சேது ஆட்டோவிலிருந்து இறங்கிய போது பார்த்தான்.

அந்த வீட்டு வாசலில் ஏகப்பட்ட கூட்டம். ஏன்,என்னவாயிற்று?

“”என்ன ஆச்சு ஸார்?”

அங்கே நின்று கொண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தவரிடம் கேட்டான்.

“”வேதநாயகம் ஸார் இறந்து போயிட்டார்”

பெரிய தண்டனைசேது ஸ்தம்பித்துப் போனான். கைப் பையிலிருந்த கல்யாண அழைப்பிதழ் அவனைப் பார்த்துச் சிரித்தது. தன் திருமணத்திற்குப் பத்திரிகை கொடுத்து அழைக்க வந்தவன் இவன். ஆனால் அதற்குள் வேதநாயகத்திற்கு வேறொரு இடத்திலிருந்து அழைப்பு வந்துவிட்டதா? இனி?

கூடிக் கூடி பேசியபடி ஜனங்கள் நின்றிருந்தனர்.

“”பாவம் நல்ல மனுஷன் ஸார்.. கடைசியிலே ரொம்ப கஷ்டப் பட்டுட்டார். வியாதி வந்து ட்ரீட்மெண்டுக்கு பணமில்லாம. தெரியாமலா சொன்னாங்க .. ஒருத்தர் எப்படி வாழ்ந்தார் என்பதல்ல வாழ்க்கை? எப்படிச் செத்தார் என்பதில் தான் வாழ்வே அடங்கி இருக்கு.

அவர் என்ன பண்ணுவார்? வாய்த்த ஒய்ப் சரியில்லை”

குரலை அடக்கி வாசித்தார்.

“”மனைவியோட பேச்சைக் கேட்டுட்டு மூத்தாள் மகனை வீட்டை விட்டுத் துரத்தினாங்க… இப்போ கொள்ளி போட யாருமில்லாம அந்தம்மா அழுதுட்டு இருக்காங்க..சட்டுபுட்டுன்னு ஒரு தீர்மானம் பண்ணினா தேவலை..எத்தனை நேரம் காத்திருக்கறது?”

சேது அவர்கள் அருகில் நெருங்கினான்.

“”பெரியவருக்கு சின்ன மகன் ஒருத்தன் இருந்தான் இல்லை?”

“”உம் இப்பளம் இருக்கான்.. ஆனா ஆஸ்பத்திரியிலே ..”

“”ஏன்? என்ன ஆச்சு?”

“”கிட்னி பெயிலியர்..பேப்பர்லே விளம்பரம் கொடுத்திருக்காங்க. லட்சக் கணக்கிலே செலவாகும். புருஷனொட வியாதிக்கு மருத்துவம் பார்க்க வழியில்லை. இந்த ஒத்தை வீட்டை எத்தனை தடவை தான் அடமானம் வைப்பாங்க? என்னிக்கு செட்டியார் ஜப்தி பண்ண கோர்ட் ஆர்டரோட வரப்போறாரோ? தெரியல்லை”

சேது திகைத்தான்..அவன் காதுகளில் பல குரல்கள் ஒலித்தன.

“”மூத்தாள் குடும்பத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லைன்னு தானே என்னைக் கல்யாணம் பண்ணிண்டேள். இப்போ என்ன புதுசா பாசம் மூத்தாள் பையனை அழைச்சுண்டு வந்து நிக்கறேள்?”

“”இல்லை சீதா. இத்தனை நாள் சேது தன் பாட்டி கூடத் தான் இருந்தான். பாட்டி போயிட்டா. பாவம் என்ன பண்ணுவான்? படிப்பு வேற பாதியிலே நிக்கறது”

“”அவன் எங்கே வேணா போகட்டும். இந்த வீட்டிலே அவன் நுழையப்படாது. இந்த வீட்டிலே சேதுங்கிற பேர் கேட்கக் கூடாது. இந்த வீடு என்னோட அப்பா எனக்குத் தந்தது. இது என் புள்ளை கணேசனுக்குத் தான் சொந்தம்.. சொத்துலே பங்கு போட விடமாட்டேன்..”

வேதநாயகம் வெளியே வந்தார். வெளியே ஷோல்டர் பேக்குடன் சேது நின்றிருந்தான். சம்பாஷணை முழுவதையும் அவன் கேட்டான்.

இவன் பாட்டி இறந்த அம்மாவின் அம்மா அடிக்கடி சொல்லுவாள்.

“”சேது தெய்வ நீதி என்னிக்கும் தப்பாது. நமக்குக் கொடுக்கணும்னு ஆண்டவன் தீர்மானிச்சுட்டா அதை யாராலேயும் தடுக்க முடியாது. இது சினிமா வசனம் மட்டும் இல்லை. வாழ்க்கைத் தத்துவம். நீ ஆண்டவனிடம் டம்ளரில் தண்ணீர் கேட்டால் ஒரு ஆற்றையே உனக்குப் பரிசாகத் தருவான்.”

இவன் ஷோல்டர் பேக்குடன் உள்ளே நுழைந்தான்.

சித்தி முகம் திருப்பினாள்..

“”சித்தி நீ என்னை வெளியே போகச் சொல்ல வேண்டாம். நானே போறேன். நான் அப்பா கூட வந்தது இங்கே தங்க இல்லை. உங்கிட்டே சொல்லிக்கத் தான் வந்தேன். என்னை ஆசிர்வாதம் பண்ணு சித்தி. எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்கு. நான் மேற்படிப்புப் படிக்கப் போறேன். தம்பி கணேசனை நன்னா படிக்க வை சித்தி”

அன்று நமஸ்காரம் செய்து விட்டு வெளியே கிளம்பியவன் தான்.

இவனுக்கு சொத்தும் வேண்டாம் சொந்தமும் வேண்டாம் தான். ஆனால் திருமண பந்தம் அப்பாவின் ஆசி, படிப்பில் உயர்ந்து, வாழ்வில் உயர்ந்து, தன் திருமணச் செய்தியுடன் தன் தந்தையைக் காண வந்தவனுக்கு தந்தையின் மரணச் செய்தி.

இப்போதும் உள்ளே நுழைந்தான்.

சித்தி பாவம் தனிமையில் அழுது கொண்டிருந்தாள்.

அப்பா வாய் கட்டப்பட்டு பிணமாய் படுத்திருந்தார்.

அப்பா என்றுமே வாயில்லா பூச்சி.. அன்று அப்பா கண்ணீருடன் விடை கொடுத்தார்

இன்று இவன் கண்ணீருடன். என்றுமே பேசாத அப்பாவின் வாய் இன்றும் கட்டப் பட்டு மௌனித்திருந்தது. கட்டப்பட்ட கால்கள் இறுதிப் பயணத்திற்கு அடி எடுத்து வைக்கக் காத்திருந்தன,.

அழுதுகொண்டிருந்த சித்தி நிமிர்ந்தாள்.

“”யார்..யாரது..?”

“”நான் தான் சித்தி. . சே..” நிறுத்தி விட்டான்..

“இந்த வீட்டிலே சேதுவோட பேர் கேட்கக் கூடாது..’

பழைய வாசகம் எதிரொலித்தது.

சீதா திகைத்து பின் அழுதாள்.

இவள் ராமன் கண்ட சீதை இல்லை. ஆனாலும் ஓர் அக்னிப் பிரவேசத்திற்குக் காத்திருக்கிறாள்.

“”சேது.. அப்பா.. பொணத்தை எரிக்கக் கூட கையிலே காசில்லாம ..”

கதறி அழுதாள்.

“”அழாதே சித்தி நான் வந்துட்டேன் இல்லை. எல்லாம் நான் பாத்துக்கறேன்”

காத்திருந்த சாஸ்திரிகள் அருகில் வந்தார்

“”லேட்டாறது. காரியங்கள் ஆரம்பிக்கலாம் இல்லை”

“”உம்… ஆரம்பியுங்கோ. இதோ குளிச்சுட்டு வந்துடறேன்”

பையைக் கீழே வைத்து விட்டு உள்ளே போனான்.

ஈர உடையுடன் திரும்பி வந்தான்.

அப்பாவின் தலை மாட்டில் தெற்கு முகமாக குத்துவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.

இந்த தீபம் எரிகிறது. அணைந்த தீபம் சயனித்திருக்கிறது.

சில காரியங்கள் முடிந்தன.

“”அப்பாவோட தலையை மடியிலே வைச்சுங்கோங்கோ”

வைத்துக் கொண்டான்.

அப்பா எனக்கு உயிரும் உடலும் கொடுத்த அப்பா இன்று உயிரற்று உடலாய் கிடக்கிறார். பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு.

அப்பா… அப்பா மனம் அரற்றுகிறது.

“”கர்ண ஜெபம் சொல்லுங்கோ. இது தான் அப்பாவை கடையேத்தற மந்திரம் நான் சொல்றதைத் திருப்பிச் சொல்லுங்கோ”

சாஸ்திரிகள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

இவன் தன் தந்தையின் காதுகளில் மிகளம் இரகசியமாக, ஆனால் தெளிவாகச் சொன்னான்.

“”அப்பா நான் சேது, உங்க புள்ளை சேது வந்திருக்கேன். கேக்கறதா அப்பா உங்களை என் கல்யாணத்துக்குக் கூப்பிட வந்தேன். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கோ. உங்க சேதுப்பா உங்க புள்ளை கணேசனைப் பத்திக் கவலைப் படாதீங்கோ. அவனோட வைத்தியச் செலவை நான் பாத்துக்கறேன். சித்தி இந்த வீட்டிலேயே இருந்து உங்களை நினைச்சு நினைச்சு அழட்டும். தண்டனையை விட மன்னிப்பே பெரிய தண்டனை. இது ஆண்டவன் தீர்ப்பல்ல என்னோட முடிள. இந்த வீட்டிலே என் பேர் கேக்காட்டா என்ன? இங்கே இருக்கற ஒவ்வொரு செங்கலும் என் பேர் சொல்லும்.

இது தான் நான் சொல்ற கர்ண மந்திரம். கர்ண ஜெபம் கேட்கறதா அப்பா”

சேது அழுகிறான்.

அப்பா இப்பளம் அமைதியாகப் படுத்திருக்கிறார்.

ஆனால் அவர் ஆன்மா சாந்தி அடைந்த நிலை புரிகிறது.

– பெப்ரவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *