பெண் ஒன்று கண்டேன்

 

“பிடிச்சிருக்கா?”

அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு ஒரு கவரில் அவர் பிரத்தியேகமாய் எடுத்து வைத்துக் கொண்டு வந்து காட்டிய அந்தப் படங்களைப் பார்த்ததும் பிரமித்துப் போய் விட்டான். இப்படி ஒரு அழகா? முழு உருவமும் தெரியும் அந்த ஆரேஞ்ச் நிறத்தில் சேலை உடுத்தி நெற்றியில் சின்னதாக ஒரு கறுப்புப் பொட்டு வைத்திருந்தாள். அன்றலர்ந்த தாமரை போன்ற சிரித்த முகமும், மல்லிகைச் சரம் சூடிய நீண்ட கூந்தலும், கண்களிலே ஒரு வித சாந்தமும் எல்லாமே அவனுக்குப் பிடித்துப் போயிருந்தன. இன்னொரு குளோசப் படத்தில் சூரிதாரில் தலையை ஒரு பக்கம் நளினமாய் சாய்த்தபடி வெட்கப்பட்டுச் சிரிப்பது போலச் சிரித்துக் கொண்டிருந்தாள். இரட்டைப் பின்னலில் ஒன்றை முன்னால் சரிய விட்டு சுருட்டை முடியில் அவள் செருகியிருந்த ஒற்றை ரோஜாவும் அவன் மனதை கொள்ளை கொண்டன. முகத்திலே தெரிந்த அடக்கமும் அமைதியும் அவன் இதுநாள்வரை காத்திருந்தது இவளுக்காகத் தான் என்று சொல்லாமல் சொல்லுவது போல இருந்தது.

“தம்பிக்குப் பிடிக்கும் என்று தெரிந்து தான் இந்தப் படத்தை வேறு ஒருவரிற்கும் காட்டாமல் கொண்டு வந்திருக்கிறேன். பார்ப்பதற்கு நல்ல குடும்பப் பாங்கான பெண்ணாய்த் தெரிகின்றா. அது மட்டுமல்ல நல்ல ஜோடிப் பொருத்தமாயும் இருக்கிறது.”

சந்தர்ப்பம் பார்த்துத் தரகர் அவனது காதில் போட்டு வைத்தார்.

“என்னண்ணா படத்தைப் பார்த்து அப்படிப் பிரமித்துப் போய் நிற்கிறாய்? ” தங்கை சாந்தி அருகே வந்து அவனது கைகளில் இருந்த படத்தைப் பறித்துக் கொண்டு தாயாரிடம் ஓடினாள்.

“வாவ்…!” இப்படியும் ஒரு அழகா? நிச்சயமாய் அண்ணாவிற்கு ஏற்ற ஜோடிதான். அம்மா அண்ணியைப் பாருங்களேன்.” அவள் சமையலறையில் காபி தயாரித்துக் கொண்டிருந்த தாயாரிடம் ஓடிப் போய்ப் படத்தைக் காட்டினாள்.

“நல்ல நீண்ட சுருண்ட கறுப்பு முடியம்மா, பொட்டு வைச்சு பூ வைச்சு மகாலட்சுமி மாதிரி இருக்கிறா…த வே ஷீ றெஸ்..! எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு! உங்களுக்கு பிடிச்சிருக்காம்மா?”

“பிடிச்சிருக்கு” என்று தலையசைத்த தாயார் “எங்க குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாய்த் தெரிகின்றா, எதற்கும் முதலில் அண்ணாவிற்குப் பிடிக்கணுமே!”

“பிடிக்கணுமா? அங்கே வந்து அண்ணாவின் முகத்தைப் பாருங்களேன்! படத்தைப் பார்த்து என்னமாய்ப் பிரமிச்சுப் போய் இருக்கிறான்!”

அவள் மீண்டும் துள்ளிக் கொண்டு அண்ணனிடம் ஓடினாள்.

“என்ன அண்ணா மயங்கிப் போனியா? காபி கொண்டு வரட்டுமா?”

“ஏய்! நீ பேசாமல் இருக்க மாட்டியா?”

“அண்ணா எங்கள் எல்லோரிற்கும் பிடிச்சிருக்கு! அண்ணி ரொம்ப அழகாய் இருக்கிறா. வேண்டாம் என்று மட்டும் சொல்லிடாதே!”

“அண்ணியா?”

“ஆமா! நாங்க முடிவெடுத்திட்டோம்! இவர்தான் இந்த வீட்டிற்கு மருமகள். வலது காலை எடுத்து வைத்து வரப் போகிறா?”

“நீ சும்மா இருக்க மாட்டியா. எதுக்கும் அப்பாவைக் கேட்ட்டுத்தான் சம்மதம் சொல்லணும்!”

அப்பா வேலையால் வந்து டிபன் சாப்பிடுக் களைப்புத் தீர சாய்மனைக் கதிரையில் சரிந்து பத்திரிகை படித்தார். அம்மாதான் அருகே வந்து தரகர் கொண்டு வந்ததாகச் சொல்லி அந்தப் படங்களைக் காட்டினார்.

“எங்க குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாய்த் தான் தெரிகின்றா. எதற்கும் நீங்களும் பார்த்து பிடிச்சிருக்கா சொல்லுங்கோ.”

அவர் படித்துக் கொண்டிருந்த செய்தித் தாளை மடித்து மடியில் வைத்துவிட்டு அந்தப் புகைப்படத்தை வாங்கி நிதானமாக அவதானித்துப் பார்த்தார்.

“புகைப்படத்தைப் பார்த்து குணத்தைச் சொல்ல முடியாதம்மா! மகனுக்குப் பிடிச்சிருக்கா?”

“அவனுக்கு மட்டுமென்ன சாந்திக்கும் பிடிச்சுப் போச்சு. படத்தைப் பார்த்ததும் அண்ணி என்று உறவு சொல்லுறாள்.”

“அவளுக்கென்ன சொல்லுவாள், சின்னப் பெண்ணு, அவனுக்குப் பிடிக்கணுமே! போன தடவை கூட ஒரு போட்டோவை பார்த்து இதென்ன அழுமூஞ்சி இதுகளுக்குச் சிரிக்கவே தெரியாதா? என்று கொமண்ட் அடிச்சானே மறந்து போனியா?”

“தெரியும் தரகர் காட்டின படங்களைப் பார்த்து ‘இவை என்ன ·பாஷன் ஷோவா காட்டுகினம்? இவையும் இவையின்ற உடுப்பும் தலைவெட்டும்! ரேக்கி என்று எல்லாம் நக்கலடிச்சவன் தான். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்திட்டு ஒன்றும் சொல்லவில்லை!”

“ரேக்கியோ? அப்படியென்றால் என்ன?”

“வான்கோழியாம்! இந்த நாட்டிலை நிறைய இருக்குத்தானே. அதைத்தான் சொல்லுறானாக்கும்”

“அதற்கும் இதற்கும் என்னா தொடர்பு?”

“எனக்கென்ன தெரியும்? கேட்டால் கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி என்றுப் பாட்டுப் பாடுறான்”

“இந்த வயதிலை இவை இப்படித்தான் பாடுவினம். அவையவைக்கு என்று வரும்போது தான் தெரியும். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிரம்மா. எதற்கும் சம்மதம் சொல்லுமுன் ஒரு தடவை என்றாலும் பெண்ணை நேரே பார்த்து நாங்கள் பேசுவது நல்லது என்று நினைக்கிறேன்!”

“பெண்ணோட மாமா முரை உறவினர் இங்கே இருக்கிறார்கள். பெண்ணை அங்கே சென்று பார்க்கலாமாம். இல்லாவிட்டால் விசிட் ரேஸ் விஸாவில் பெண்ணை இங்கே வரவழைக்கலாமாம். உங்களுக்கு எது விருப்பமோ அப்படியே செய்யலாம் என்று சொன்னார்கள்!”

“அப்படியென்றால் நாங்கள் எல்லோரும் பெண் பார்க்க அங்கே போவதை விட பெண் இங்கே வருவதுதான் நல்லது. எல்லாம் நல்லப்டியாய் நடந்தால் நிச்சதார்த்தத்தையும் இங்கேயே வைச்சிடலாம்.”

அவர்களது விருப்பம் கல்யாணத் தரகருக்கும் உறவினருக்கும் தெரிவிக்கப் பட்டு சுரேனின் போட்டோ ஒன்றும் அங்கே அனுப்பி வைக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து மனப்பெண் இந்த நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட்டன. அன்று இரவு விமானத்தில் மணப்பெண் வருவதாக இருந்தது. சுரேஷ் மட்டும் தனது நண்பனோடு விமான நிலையத்திற்குச் சென்றிருந்தான். நண்பனின் ஆலோசனைப்படி அவளுக்குக் கொடுப்பதற்காக ரோஜாமலர்க் கொத்து ஒன்றும் வாங்கி வைத்திருந்தான்.

அவள் சுங்கப் பரிசோதனை முடிந்து வெளியே வந்ததும் திடீரென அவள் முன்னால் சென்று மலர்க் கொத்தைக் கொடுத்து அவளை ஆச்சரியத்தில் மூழ்கடித்து, அவள் வெட்கப்படும்போது அதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். இந்த நாட்டுப் பெண்களுக்கு வெட்கப்படவே தெரியாது என்பது அவன் நினைப்பு.

புகைப்படத்தில் பார்த்தௌ போலவே இருப்பாளா? இல்லை நேரிலே பார்க்கும் போது இன்னும் அழகாய் இருப்பாளா? என்ன நிற சேலையில் வருவாள்? மல்லிகைச் சரம் சூடியிருப்பாளா அல்லது ஒற்றை ரோஜாவைத் தலையில் செருகியிருப்பாளா? ஒருவேளை சுடிதாரிலும் வரலாம். அந்த அழகுத் தேவதை எப்படி வந்தாலென்ன? எந்த நிறத்தில் எதை அணிந்தாலும் அவளுக்கு அழகாய்த் தான் இருக்கும் என்று கற்பனையில் கனவு கண்டு கொண்டு அவள் வருகைக்காக லொபியில் காத்திருந்தான்.

மொனிட்டரில் விமானம் சரியாக 7.05க்கு வந்து விட்டதாகத் தெரிந்தது. ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருந்தனர். இளம் ஜோடிகள், வயது போன தம்பதிகள், இளைஞர்கள் என்று பலவிதமானவர்களும் வெளியே வந்து கொண்டிருந்தனர். பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போனதுதான் மிச்சம். இவர்கள் எதிர்பார்த்த மணப்பெண் வரவேயில்லை. என்ன நடந்திருக்கும் என்று குழம்ப்பிப் போனவர்கள் கடைசியாக வெளியே வந்த வயோதிபத் தம்பதிகளீடம் சென்று விசாரித்தனர்.

“மன்னிக்கணும்! உங்களோடு விமானத்தில் வந்த எல்லோரும் போய் விட்டாங்களா? அல்லது யாராவது உள்ளே நிற்கிறாங்களா?”

“இல்லையே எல்லோரும் போய் விட்டாங்க. எங்க சூட்கேஸ் எங்கேயோ மறுபட்டுப் போச்சு. அதனாலேதான் நாங்க தாமதிக்க வேண்டி வந்தது. வேறுயாரும் உள்ளெ இருப்பதாய் தெரியவில்லை! நாங்கதான் கடையாக வந்தோம்.” என்றனர்.

அவர்களுக்கு அருகே யாரையோ தேடிக்கொண்டு நின்ற ஒரு பெண் சட்டென்று இவர்களைத் திரும்பிப் பார்த்தாள். இவனது நண்பன் முதுகிலே இடித்தான்.

“பாரடா அவளின்றை தலை வெட்டையும் உடுப்பையும்! இங்கே நின்றமென்றால் இவள் எங்களை லிப்ட் கேட்டாலும் கேட்பாள் போல் இருக்கு. ஏனிந்த வம்பு? வா நாங்கள் மெல்ல மாறுவம்.”

சொல்லிக் கொண்டே நண்பன் மெல்ல நகர்ந்தான்.

“எக்ஸ்யூஸ் மீ”

சுரேஷ் நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பெண் அருகே வந்தாள். நண்பன் சொன்னது சரிதான். ஏதோ உதவி கேட்கப் போகிறாள்!

“நீ..ங்க சுரேஷ் தானே?”

இவளுக்கு எப்படி என்னுடைய பெயர் தெரியும்? சுரேஷ் திகைத்துப் போய் அவளைப் பார்த்தான்.

“ஹாY! என்னைத் தெரியலையா? நான் தான் நிவேதா!”

அவள் ஆவலோடு அவனருகே நெருங்கி வர அவன் மருண்டு போய் ஓரடி பின்னால் நகர்ந்தான்.

எந்..த நிவே…..தா?

அவனுக்கு சட்டென்று ஏதோ புரிந்தது!

என்ன இது படத்திலே வேறு ஒரு பெண்ணைக் காட்டித் தரகர் என்னை ஏமாற்றி விட்டாரோ? எதிரே தரகர் நின்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

நீண்ட கூந்தலில் பூ வைத்த , பொட்டுப் போட்ட, சேலையில் சுடிதாரில் பார்த்த அந்த அழகுத் தேவதை எங்கே, ஒட்ட வெட்டிய தலைமுடியும் லூஸ்டாப்ஸ¤ம், டை பாண்டும் போட்ட இவள் எங்கே?

அவன் ஒருகணம் தயங்கினான். கொண்டு வந்த மலர்க் கொத்தை அனிச்சையாக பின்னால் மறைத்தான்.

“என்ன என்னைப் பார்த்ததும் திகைத்துப் போயிட்டீங்களா> எப்படி இருக்கேன்? மொட்டாய் இருக்கா? வெஸ்ரேணுக்குப் பொருத்தமாய் இருக்கிறேனா?”

“நீங்க..! ” அவன் வார்த்தைகளை மென்று விழுங்கினான்.

“எல்லாம் இங்கே இருக்கிற ஆண்டியின் அட்வைஸ்தான். ஹெயர் கூட டை பண்ணிக் கொண்டு வரச் சொன்னாங்க. நேரம் கிடைக்கலே. அதை இங்கே தான் செய்யணும், எப்படி உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” விரல்களால் தலையைக் கோதி ஒரு மொடலிங் செய்யும் பெண்ணைப் போல்

·போஸ் கொடுத்தபடி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

அவனது கனவுத் தேவதையைப் பார்த்துச் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அவன் அதிர்ந்து போய் நின்றான். இந்த நாட்டு மண்ணுக்கு அப்படி ஒரு மகிமை உண்டு! கானமயிலைக் கூட வான் கோழியாக்கி விடும்.

- ஆகஸ்ட் 2001 

தொடர்புடைய சிறுகதைகள்
(‘மகளுக்கு வரன் தேடித் திருமணம் செய்து வைக்கும் அம்மாக்களைத்தான் பார்த்திருக்கிறேன், ஆனால் இவளோ வித்தியாசமாய்… சீ இஸ் கிறேட்!’) நியூஜேர்சியில் உள்ள நியூபோர்ட் சென்டர் மாலில் உள்ள தனது கடையை மூடிவிட்டு சுசீலா வெளியே வந்த போது வழக்கத்துக்கு மாறாக வானம் இருண்டு ...
மேலும் கதையை படிக்க...
'திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால் ஏன் வைன் குடிக்கக்கூடாது?' சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம். அன்று புதிதாக ஆச்சிரமத்திற்குச் சேவை செய்ய வந்த சீடன்தான் பழத்தட்டுடன் அவரிடம் வந்தான். அவர் பழங்களைச் சாப்பிடும்போது அதை வியப்போடு பார்த்துக் ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார். 'அன்புள்ள அப்பா' பதினைந்து வயது ...
மேலும் கதையை படிக்க...
கண்களை மெல்லத் திறந்த போது தேவதை போல அவள்தான் எதிரே தரிசனம் தந்தாள். சாட்சாத் அம்மனே கர்ப்பகிரகத்தில் இருந்து இறங்கி முன்னால் உலா வருகிறதோ என்ற நினைப்பில் கூப்பிய கரங்களை ஒரு கணம் எடுக்க மறந்தேன். பெண்மையின் இயற்கையான அழகு, நீண்டு விரிந்த ...
மேலும் கதையை படிக்க...
நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன். ‘ஏன் வலிக்கவில்லை?’ ‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் ...
மேலும் கதையை படிக்க...
சார்… ஐ லவ்யூ!
மண்ணாங்கட்டி என்ன செய்யும்? – ஒரு பக்க கதை
ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
கோயிற் சிலையோ?
மனம் விரும்பவில்லை சகியே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)