Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’

 

மெல்லியதாய் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கும் அக்கினிக்கு எதிரே நானும் கோமளாவும் மணமக்களாய் அமர்ந்திருந்திருக்கிறோம்.

கழுத்தை அழுத்தும் மலர் மாலையுடன் பொன்னும் பூவும் அழகு சேர்க்க சிவப்பு சரிகை ஒளிரும் பொன்நிற சேலையில் கோமளா இளஞ்சிவப்புப் பூவாய் நாணத்தில்…!

இன்னும் சற்று நேரத்தில் மஞ்சள் கயிறு மார்பில் படர, என் மனைவியாகப் போகிறாள்.

கோமளா என்ற பெண் இனி திருமதி விசுவநாதனாக…!

கொழுந்துவிடும் அக்கினியில் இரண்டொரு முறை மரக்கழியால் நெய் வார்க்கிறார் ஐயர்.

அக்கினி நாக்குகள் மேலேழுந்து விரிகின்றன குதூகலமாய்.ஏதோ ஒரு பெயர் தெரியாதப் பூவைப்போல் விரிந்தெழும் அந்த அக்கினி கொழுந்துகளில் ஓவியாவின் முகம் எழுந்து மறைகிறது.

இந்த நொடிகளோடு அந்த முகத்தை அக்கினியில் எரித்துவிட வேண்டும்.

இனி என் நெஞ்சும் விழிகளும் கோமளாவையே ஏந்திக்கொள்ள வேண்டும்.என் வாழ்வின் ஒவ்வொரு பொழுதின் நகர்விலும் கோமளாவின் கரம் பற்றி நடந்தாக வேண்டும்.

இதுவரை ஓவியா வீற்றியிருந்த இதயம் இனி கோமளாவின் உரியதாகி விடும். இன்னும் சற்று நேரத்தில் அவளுக்கு உண்மையுள்ள கணவனாக மாறப் போகிறேன்.இந்த அக்கினி நாக்குகள் ஓவியாவின் நினைவுகளைத் தின்று என்னிலிருந்து அவளை அழிக்கட்டும்!

ஒருமுறை கண்களை மூடி அந்த முகத்தை என்னிலிருந்து எடுத்துவிட எத்தனிக்கிறேன்.அவள் முகம் பேருருவம் எடுக்கின்றது.சட்டென்று கண்களைத் திறக்கிறேன்.

அக்கினி சற்று கோபமாய் எரிகிறது.

இதுப்போன்றதொரு அக்கினியின் முன் அமர்ந்து ஓவியாவும் என்னை,என்னை சார்ந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் அழித்திருப்பாள்.பழக்கமே இல்லாத ஒரு மனிதருக்கு தன்னை மனைவியாக தயார் படுத்திக் கொள்ள அதுவரை அவளுடையதாக இருந்த என் நினைவுகளை அழிக்க முயன்றிருப்பாள்.

முடிந்திருக்குமா அவளால்?வேறொருவரின் மனைவியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் அவளால் என்னை அடியோடு வேரறுத்திருக்க முடிந்திருக்குமோ?

நான் என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கோமளாவை ஏறேடுக்கிறேன்.என் மனவோட்டம் ஏதும் அறியாதவளாக பதுமையாய் அமர்ந்திருக்கிறாள்.பெண் பார்த்துவிட்டு வந்த மறுநாள் கைப்பேசியில் அழைத்து கேட்டாள்,

“என்னை உங்களுக்குப் பிடித்திருக்கா?”

நான் அதிர்ந்தேன்.அவள் பேசிய முதல் வாக்கியமே ஓவியாவை நினைவுப் படுத்தி விட்டது.காதலிக்க தொடங்கிய நாட்களில் இருந்து எத்தனையோ முறை ஓவியா குறுஞ்செய்தியிலும் நேரிடையாகவும் இப்படி கேட்டிருக்கிறாள்.

“என்னைப் பிடித்திருக்கா விசுவா?”

பிடித்திருப்பதாய் ஒவ்வொரு முறையும் சலிக்காமல் பதில் சொல்வேன்.குழந்தையாய் குதூகலிப்பாள்.

“எத்தனை முறைதான் இதையே கேட்ப? சலிக்காதா?”

“சலிக்கவே சலிக்காது.எனக்கு தெரியும், உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்று.இருந்தாலும் நீங்கள் சொல்வதைக் கேட்க மீண்டும் மீண்டும் மனது ஏங்குது.பிடிக்கும் என்ற வார்த்தையில் நான் கசிந்துருகுகிறேன்.வாழ் நாள் முழுவதும் இப்படி கேட்டுக் கொண்டே இருப்பேன்”

இவ்வாறு கசிந்துருகியவள் கையை விட்டே போய்விட்டாள்.

எங்களுக்கிடையே இழைந்தோடியக் காதலுக்கு மனித வர்க்கம் சார்ந்த அடையாளங்கள் எதிராய் அமைந்துப்போனது நாங்கள் எதிர்ப் பாராத ஒன்று.தாய்மொழியும் மதமும் ஒன்றான போதும் கண்ணுக்குத் தெரியாத வர்க்க பேதம் எங்களை நாராய் கிழித்து தூர எரிந்தது.

ஐந்து வருடங்களாக நானும் ஓவியாவும் ஒரே வங்கியில் காசாளராக பணிப் புரிந்தோம்.அரம்பத்திலிருந்தே எங்களிடம் நட்பாக மலர்ந்த அன்பு இறுதி இரண்டு வருடங்களாக காதலில் கனியாகியது.எனது எந்தவொரு இரசனையையும் அவளால் ஆர்வமாக இரசிக்க முடிந்ததே அவளிடத்தில் எனக்கு வசீகரத்தை ஏற்படுத்தியது.

எனது சேகரிப்பில் உள்ள நூல்களை இரவல் வாங்கிச் சென்று வாசிப்பாள்.வாசித்த பின் திருப்பித் தரும் போது படித்தற்கான அடையாளமாக எந்தவொரு கசங்களோ மடிப்போ இருக்காது.ஆனால் முழுதாய் படித்திருப்பதை நூல் குறித்து அவள் செய்யும் விவாதத்தில் தெரியும்.

அப்படியொரு நளினம்.எதிலும் அப்படிதான்.

ஓரே ஒரு முறைதான் ஓவியாவுடன் தனியே பயணித்திருக்கிறேன்.எங்கள் வங்கியின் துணை மேலாளார் சாராவின் இல்லம் பக்கத்து ஊரில் இருந்தது.அது சாராவிற்கு தலைப் பிரசவம்.சாராவை காண என்னுடன் வந்தாள்.

திரும்பும் போது சாராவின் குழந்தையைப் பற்றி அதிகம் பேசினாள்.சாரா பிரசவ வலிக் கண்டு அதிக பயந்துப் போயிருப்பதாகவும் இனி அடுத்த குழந்தை வேண்டவே வேண்டாம் என முடிவு செய்து விட்டதாகவும் சொல்லி சிரித்தாள்.

விடைப் பெறும் போது அவளது வலதுக் கரத்தைப் பிடித்து அழுத்தி விடைத்தந்தேன்.நாணினாள்

.அது எனது முதல் தொடுகை.சுகமானது.பின் அப்படியொரு வாய்ப்பு அமையாமலேப் போனது.அத்தனை கண்ணியமாய் நகர்ந்த காதல் அது!

எங்களது காதல் பரிமாற்றங்களாய் இரண்டொரு புதினங்கள்,கவிதைத் தொகுப்புகள்,காதல் கசிந்த சில ஒலிவட்டுக்கள்…சில எழுதுகோல்கள்.நினைவு பரிசுகள் எல்லாம் நெருஞ்சி முட்களாய் மாறியது காதல் கலைக்கப்பட்ட போது.

எங்கள் காதல் ஓவியாவின் வீட்டில் தெரிய வந்து அவளைப் பணியை விட்டு நிறுத்தினார்கள்.

அவசர அவசரமாய் வேறொரு இடத்தில் மணமுடித்து அனுப்பப் பட்டு விட்டாள்.எல்லாம் கனவாகியது.அந்த நொடியில் தொடங்கிய வேதனை இந்த நொடிகள் வரை ஓவியாவை மறக்க முடியாமல் செய்கின்றது.இனி எப்படியும் அனைத்தையும் மறந்தாக வேண்டும்.

மறு வீடு வந்திருந்தோம்.எங்களது திருமணம் முடிந்த மூன்றாவது நாள் அது.இந்த மூன்று நாட்களும் ஓவியாவை அதிகமாகவே நினைக்க வைத்தது

என்னுடன் சேர்ந்து நின்ற போதும்,நெருக்கமாய் படம் எடுத்துக்கொண்ட போதும்,ஒன்றாய் சாப்பிட்ட போதும்…நாணத்தில் சிவந்து போதும் என் மனைவியாகிய கோமளா ஓவியாவையே நினைவுப் படுத்தி நின்றாள்.

அத்தனை எளிதில் ஓவியாவை மறந்து விட முடியாதோ?கோமளாவுடன் ஓவியாவை ஒப்பிட்டுப் பார்த்தால் கோமளா பேரழகி.கோமளாவின் நிறத்திற்கு முன் ஓவியா தோற்றேப் போவாள்.

ஓவியாவின் சுருள் சுருளாக அடர்ந்த கூந்தலையும் பெரிய கண்களையும் பெற்றிருந்தாலும் துருதுருத்த விழிகளில் மினுமினுப்பையும் வடிவமைக்கப் பட்ட புருவங்களில் நளினத்தையும் கொண்டிருக்கும் கோமளாவிற்கு முன் அதுவெல்லாம் வெகு சாதாரணம்.

ஆயினும் ஏதோ ஒன்று ஓவியாவின் முகத்தை மறக்க விடாது செய்தது.முதல் முதலாய் மனதினுள் நெருக்கமாய் பழகியவள் என்பதாலா?

“வாழ்வில் மறக்க முடியாத ஓர் உயிர் நீங்கள் விசுவா” என பிரிந்தப் பின் இறுதியாய் குறுந்தகவல் அனுப்பியிருந்தாளே அதனாலா?எனக்குப் புரியவே இல்லை.

‘இன்னும் கொஞ்சம் பேசுங்களேன் கேட்கிறேன்’ எனும் பாவம் கொண்ட அந்தக் கண்களையும் மெல்லியதாய் எண்ணை பசை படர்ந்திருக்கும் முகத்தில் குழைந்திடும் கனிவையும் மறக்க முயற்சிப்பது சிரமாகவே இருந்தது.

என் கவனம் முழுவதையும் கோமளாவின் பால் திருப்ப பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தேன்.

கோமளா வீட்டிற்கு மூத்த பெண்.ஆறாம் படிவம் முடித்து அழகு கலை ஒப்பனையில் ஆர்வம் கொண்டு அதை பயின்றுக் கொண்டிருந்தாள்.அவர்களது பக்கத்து வீடான என் வங்கியின் துணை மேலாளர் சாராவின் மூலம் எங்கள் வீட்டில் என் திருமணத்திற்கு பெண் தேடுவது அறிந்து,விசாரித்து… இந்த சம்பந்தம் அமைந்தது.

அவளுக்கு ஒரு தம்பியும் தங்கையும் இருந்தார்கள்.அவர்களுடன் அடித்து பிடித்து அவள் விளையாடியது வேடிக்கையாய் இருந்தது.பிரவாகம் எடுத்தப் பாச ஊற்றில் அவர்களது அன்பின் இறுக்கம் தெரிந்தது.

“எங்க கோமளாவுக்கு தம்பி தங்கையினா அவ்வளவு உயிரு.அவுங்களும் அக்கா மீது ரொம்ப பாசமா இருப்பாங்க.நாளையிலிருந்து எப்படிதான் கோமளாவை விட்டுட்டு இருக்க போகிறார்களோ?” என் மாமனார் சோகமாய் சொன்னார்.

“எல்லாம் இருப்பாங்க.முதல்ல நீங்க இருப்பீர்களானு பாருங்க.மகளை விட்டுட்டு இவரும் இவரை விட்டுட்டு கோமளாவும் நிச்சயம் தவிக்க தான் போறாங்க.” மாமியார் கூடுதலாய் தகவல் சொன்னார்.

அது உண்மை என்பது மறுநாள் புரிந்தது.தாய் வீட்டிலிருந்து புறப்படும் போது துக்கம் பொங்க அழுதாள்.அம்மா,அப்பா,தம்பி..தங்கை என அனைவருக்கும் அதே நிலை.பெண்ணாய் பிறப்பதில் இப்படியொரு துன்பம் உள்ளதா?வழி முழுவதும் அவளை தேற்றிக் கொண்டே வந்தேன்.

அடுத்த நாள் தேன்நிலவிற்கு லங்காவி தீவிற்கு புறப்பட்டோம்.என் வாழ்வில் புது அத்தியாயம் புறட்டப்பட்டது

.அகத்தாலும் புறத்தாலும் ஒரு பெண்ணின் அருகாமை எத்தனை இனிமையானது என புரிந்தது.இனிமையான பொழுதின் நகர்தலுக்கிடையே அவப்போது ஓவியாவின் நினைவுகள் எழாமல் இல்லை.அத்தகைய தருணங்களில் எல்லாம் என் துன்பம் வேறொரு வடிவம் கண்டது.

கோமளாவிடத்தில் தோன்றிருக்கும் நாணமும் மலர்ச்சியும் அது சார்ந்து அவள் கொண்ட பூரிப்பையும் உலகிலேயே பெறும் பாக்கியவதி தான் தான் என்ற கர்வமுற்ற தோற்றத்தையும் ஓவியாவும் தனது மணவாழ்க்கையில் பெற்றிருப்பாளா?ஏமாற்றத்தின் கதிர் வீச்சு அவளை சிதைத்து எரித்திருக்காதா?

கோமளாவின் இடத்தில் இருக்க வேண்டியவள் ஓவியா.எங்கள் இருவரில் யாரோ ஒருவர் கொடுத்து வைக்காததால் விதியின் பாத்திரமேற்று ஓவியா வேறொருவரின் மனைவியாக,நான் கோமளாவின் கணவனாக..!

ஒருவார தேனிலவிற்கு பிறகு தொடர்ச்சியாய் உறவினர்களின் வீடுகளில் விருந்து உபசரிப்புகள்.இரு வாரங்களுக்கு பின்னே தான் கோமளாவை அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து வர முடிந்தது.

கோமளாவிற்கு அளவில்லாத மகிழ்ச்சி.மானாய் துள்ளினாள்.அம்மா அப்பாவிடம் கொஞ்சினாள்.தம்பி தங்கையிடம் அரட்டை அடித்து விடிய விடிய பேசித் தீர்த்தாள்.விருந்து உபசரணை அமர்க்களப் பட்டது.மறுநாள் மாலைவரை இருந்து பின் புறப்பட முடிவெடுத்திருந்தோம்.

விடைப் பெறும் போது மீண்டுமோர் உணர்ச்சிகரமான நெடிகளை கோமளா கடக்கப் போகிறாள் என்ற எதிர்ப் பார்ப்பு எனக்கிருந்தது.புறப்படும் தருவாயில் கோமளாவோ மிக சாதாரணமாகத் தெரிந்தாள்.எனெக்கென்று ஓர் கூடு இருக்கிறது, நான் புறப்பட வேண்டும் என்ற பாவம் அவளிடத்தில் தெரிவதாகத் தோன்றியது.

ஆயத்தமானோம்…!பெற்றவர்கள் கண் கலங்கினார்கள்,தம்பித் தங்கையின் முகத்தில் ஏக்கம்.கோமளா மிகத் தெளிவாக இருந்து கட்டியணைத்தும் முத்தமிட்டும் அவர்களிடமிருந்து விடைப் பெற தயாராகினாள்.துயர நாடகம் அரங்கேராமல் போனதில் ஆறுதல் இருந்தாலும் எதோ ஒன்று எனக்குள் ஊர்ந்தது.

பெண்ணால் மிக இயல்பாய் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள முடிகிறதோ?அர்த்தபூர்வமாய் அவள் அப்படிதான் வளர்க்கப் படுகிறாளோ?

வாகனத்தில் அமர்ந்ததும் சொன்னாள், “என்ன நீங்க லேட் பண்ணுறிங்க.வீட்டுல போட்டது எல்லாம் போட்டபடி அப்படியே கிடக்கு.அத்தையும் மாமாவும் வேறு வீட்டில் இல்லை.கிளம்புங்க” சிணுங்கினாள்.

நான் வாகனத்தை இயக்கியவாறே வீட்டு வாயலில் நின்றவர்கள் பக்கம் பார்வையை செலுத்தினேன்.அவர்கள் கையசைத்து வழியனுப தயாரானார்கள்.

திடிரென பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட என் மேலாளர் சாரா, “என்ன புது மாப்பிள்ளை புறப்பட்டாச்சா?” என கேட்டார்.

நான் வெக்கம் மேலிட சிரித்தேன்.சாரா அணிந்திருந்த தொள தொளவென்ற ஆடையை மீறி அவரது வயிறு உப்பலாகத் தெரிந்தது.சாராவிற்கு இது நிறை மாதம்.

சாராவும் முதல் பிரசவ வலியை மறந்து அடுத்த பிரசவத்திற்கு தயாராகி விட்டாள்.பெண்ணுக்கு மறப்பது என்பது ஆகக் கூடியக் காரியம் போலும்!வளர்ப்பில், இயற்கை அமைப்பில் அல்லது மரபு சார்ந்து வாழும் சூழலில் பெண்ணுக்கு இது சாத்தியப்பட்டிருக்கலாம்.

இனி ஓவியாவைப் பற்றி நினைந்து கசிந்துருக ஏதுமில்லை.அவளை மறப்பதும் அப்படி ஒன்றும் சிரமாகத் தோன்றவில்லை. பொதுவாய் அனைவருக்கும் ஒரு புன்னகையை உதிர்த்து தலையை அசைத்து விட்டு வாகனத்தை செலுத்தினேன்.

என் கோமளா அவர்களை நோக்கி சிரித்தவாறே கையசைத்துக் கொண்டிருந்தாள்.

- 27 மே, 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
வாசலில் இருந்த அழகிய இரு இணைக் காலணிகள் அவனுக்கு ஆச்சரிய கலந்த ஆனந்ததைத் தந்தன. நிச்சயம் பொன்னி அக்காவந்திருக்க வேண்டும்.அவன் விருட்டென்று வீட்டினுள் நுழைந்து கூடத்திற்கு பக்கத்தில் இருந்த அறையை எட்டி பார்க்கையில் அவனது கணிப்பு பொய்த்துவிட வில்லை. பொன்னி அக்கா ஒருகழித்து ...
மேலும் கதையை படிக்க...
அவன் வீட்டிற்குள் நுழைந்த போது கூடத்து நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த உருவம் இவனைக் கண்டு ஒருக்கழித்து அமர்ந்ததைக் கவனித்தான்.அவன் குளித்து ஆடை உடுத்தித் திரும்பிய போது அந்த உருவம் மெதுவாக எழுந்துக்கொண்டது. தொலைக்காட்சி அலைவரிசை மாற்றப்பட்டிருந்தது.இது தினசரி நடக்கும் நிகழ்ச்சி தான்.வழக்கம் போல் ...
மேலும் கதையை படிக்க...
ஆறடி உயரத்தில் வெண்நிற ஆடையுடன் நின்றிருந்த அவ்வுருவத்தைப் பார்த்தபோது செல்லம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.ஏதோவொரு வெப்பம் தனிச்சையாக வந்து தாக்கியது.மேனி முழுவதும் சிலிர்த்தது.அத்தருணத்தில் தனக்குத் தோன்றிய உணர்வு எத்தகையானது என்பதை அவளால் பகுத்துப் பார்க்க இயலவில்லை. அவ்வுருவத்தை ...
மேலும் கதையை படிக்க...
ஒளிப்பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவைப் பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை மட்டும் என்னால் உணர முடிகின்றது. அந்த கண்கள் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எனக்கு அவனை அடையாளம் காட்டிக் கொடுத்தன.நான் ...
மேலும் கதையை படிக்க...
‘பெற்ற’ மனங்கள்…..
வரங்கள்
மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன்
அவளின் கண்கள்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)