பெண் அடிமை இல்லை…!

 

வெகு நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவிற்கு வந்த சுந்தர் இருக்கையை விட்டு எழுந்தான்.

தொலைபேசியை நெருங்கி ஒலி வங்கியைக் காதில் வைத்து எண்களை அழுத்தினான்.

” ஹலோ. .! ” எதிர் முனையில் அவள்தான் எடுத்தாள்.

” பிரதீபா ! நான் சுந்தர் பேசறேன் ! ”

” எ. .. எந்த சுந்தர். .?! ” – குழப்பம்

” போன வாரம் உங்களை பெண் பார்த்து வந்தவன் !”

” ம்ம். .. சொல்லுங்க. ? ”

” இன்னைக்குச் சாயந்தரம் அஞ்சு மணிக்கு நாம பாரதி பூங்காவுல சந்திக்கனும். மறுப்பேதும் சொல்லாம கண்டிப்பா வரனும். உங்க வீட்டுக்கும் நான் இன்னாரைச் சந்திக்கிறேன். வரத் தாமதமாகுன்னு சொல்லுங்க. எனக்கொண்ணும் ஆட்சேபணை இல்லே. இந்த சந்திப்பை நாம உங்க வீட்டிலோ இல்லே எங்க வீட்டிலோ வைச்சுக்கலாம். சரி படாது. நாமத் தனியாத்தான் பேசனும். மனம்விட்டுப் பேசனும். கண்டிப்பா வரனும் வச்சுடுறேன். ! ” அவளுக்கு எதுவும் பேச வாய்ப்பு கொடுக்காது வைத்தான்.

தொலைபேசியை வைத்த பிரதிபாவிற்கு திகைப்பு.

‘ என்ன பேசப் போகிறான். .? ‘ உள்ளுக்குள் சின்ன யோசனை.

‘ இதைப் பற்றித்தான் பேச வேண்டும் ! ‘ பேச முடியும் ! – திடமாகப் புரிந்தது.

‘ சுந்தர் என்ன சொல்லி எப்படி மடக்கினாலும் சரி. தன் முடிவில், மனதில் மாற்றமில்லை ! மாற்றம் கூடாது !’ – மனதை உறுதி செய்து கொண்டாள்.

அமர்ந்தாள்.

மாலை மணி 5. 00.

பிரதிபா சரியான நேரத்தில் பாரதி பூங்காவில் நுழைந்தாள்.

அவளுக்கு முன்பே சுந்தர் வந்து காத்திருந்தான்.

இவள் தலையைக் கண்டதும். ..

” வா. .. பிரதிபா ! ” வரவேற்றான்.

இவள் அவன் வரவேற்பை ஏற்பது போல் புன்னகைத்தாள்.

” அப்படி போய் உட்காரலாமா. ..? ” சுந்தர் கொஞ்ச தூரத்திலிருந்த யாருமில்லாத மரத்தடியைக் காட்டினான். கீழே புல்தரை பசுமையாக இருந்தது.

பிரதிபா சம்மதமாக தலையசைத்தாள்.

இருவரும் அந்த இடம் நோக்கி நகர்ந்தார்கள்.

எதிரெதிரில் அமர்ந்தார்கள்.

சிறிது நேர அமைதிக்குப் பின். ..

” ஏன். . வரச் சொன்னீங்க. .? ” பிரதிபாதான் கேட்டாள். பேச்சை ஆரம்பித்தாள்.

” நீங்க ஏன் இந்த வரன் வேணாம்ன்னு சொல்லி என்னை ஒதுக்கினீங்க. .? ” அவன் சுற்றி வளைக்காமல் நேரடியாகா விசயத்திற்கு வந்தான்.

இவள் இந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

திக்குமுக்காடினாள்.

ஒருவாறு தெளிந்து. …

” என் அப்பா சொல்லலையா. .? ” மெல்ல கேட்டாள்.

” உன் அப்பா என் அம்மாவிடம் சொல்லி அவுங்க என்னிடம் சொன்னாங்க. .”

” பின்னே ஏன் தெரியாது மாதிரி கேட்டீங்க. .? ”

” அந்த வார்த்தையை நேரா என்னைப் பார்த்து சொல்லுங்க. . ”

” சொல்றேன் ! பெண் வேலையை விட்டால் நான் திருமணத்துக்குச் சம்மதம் சொன்னீங்களாம். எனக்கு வேலையை விட விருப்பமில்லே அதனால நீங்க வேணாம்ன்னு சொன்னேன். ”

” நீங்க ஏன் வேலையை விட மாட்டேங்கிறீங்க. .? ”

” எதுக்கு விடணும். .” இவள் திருப்பி கேட்டாள்.

இதை சுந்தர் எதிர் பார்க்கவில்லை. பதில் சொல்ல முடியாமல் அவளைப் பார்த்தான்.

பிரதிபா தொடர்ந்தாள்.

” வேலையை விட்டு வீட்டோடு இருந்து. . புருசனுக்கு அடிமையாய் பொங்கி போட்டு வாழ எனக்கு விருப்பமில்லே. பெண்ணோட தகுதியும் அது இல்லே. நானும் படிச்சிருக்கேன். என் தகுதிக்கு முப்பதாயிரம் சம்பாதிக்கிறேன். ஏன் விடனும். .? ”

” சம்பாத்தியம்தான் உன் குறிக்கோளா. .? !”

” உத்தியோகம் புருச லட்சணம் என்கிற வார்த்தையே மொதல்ல தப்பு. உத்தியோகம் மனுச லட்சணம். பெண் தன் தகுதிக்குச் சம்பாதிக்கும் போது அவள் வேலையை விடுறது முட்டாள்தனம். பெண் சம்பாத்தித்து தன் சொந்த காலில் நிற்பதுதான் சரி. அதை விடுத்து. . ஆண் சம்பாதிக்கிறேன். பெண் வீட்டில இருந்து வேலையைப் பாருன்னு சொல்றது ஆணாதிக்கம். இது தப்பு. ! ”

” தப்பு. எல்லாம் தப்பு ! ” சுந்தர் பொறுமையாக சொன்னான்.

இவள் புரியாமல் பார்த்தாள்.

” பெண் கஷ்டப்படக்கூடாது என்பது ஆணோட எண்ணம் !”

” இல்லே. இது பம்மாத்து. பெண் சம்பாதித்தால் ஆணை மதிக்கமாட்டாள் என்கிற பயம் !”

” பெண்களோட கருத்தும் ஆண்கள் பலபேரோட எண்ணமும் இதுவா இருக்கலாம். ஆனா நியாயம் இது இல்லே. உள் நோக்கம் வேற. ”

”என்ன. ..?…”

”ஆண் பெண் சேர்ந்தது குடும்பம். நான் வருமானம் கொண்டு வர்றேன். பெண் குடும்பம் கவனின்னு சொல்றதுதான் சரி. வாழ்க்கையில் சரியான பங்கீடு. அதைத்தான் ஆண் சொல்றான் செய்யறான். பெண் இதை தப்பா நினைச்சு அடிமை என்கிறாங்க. இது சரி இல்லே. ” சொன்னான்.

” என்ன சரி இல்லே …?.. ”

” பிரதிபா ! வாழ்க்கையில் குடும்ப நிர்வாகம் பெருசு. அதைவிட குழந்தைகள் வளர்ப்பு ரொம்ப அருமை. பத்து மாசம் சுமந்து வயிறு தூக்களும், வலியுமாய்ப் பெத்தவளால்தான் குழந்தையைச் சரியாய் பராமரிக்க முடியும். நல்லவிதமாய் வளர்க்க முடியும். ”

” இந்த பெரிய பொறுப்பெல்லாம் ஆண் பெண்ணிடம் விட்டு விட்டு அவனும் அந்த வீட்ல ஒரு அங்கமாகி… அவளை மகாராணியாய் உட்கார வச்சு, ‘ தாயே. .! உழைச்சுப் போடுறேன் ‘ னு சொல்றான். இன்னும் சரியா சொல்லப் போனால் வருமானம் கொண்டு வந்து சேவை செய்யிற ஆணாய் இருக்கான். பெண் இதை புரிஞ்சிக்காம அடிமை என்கிறீங்க. வேதனை ! ” முடித்தான்.

” இது ஆளை மயக்கும் புதுக் கதை ! ” பிரதிபா தீர்மானமாய் சொன்னாள்.

” புதுக்கதை இல்லே. நிஜக்கதை பிரதிபா ! ஆண் பெண் சம்பாதிக்கிற குடும்பத்துல பேர் சொல்லும் புள்ளைங்க பாவம். வீட்ல கிழவன் கிழவி இருந்தா வளர்ப்பாங்க. இல்லேன்னா. . வேலைக்காரி. அவளும் இல்லேன்னா. .. ஆடு மாடுகளை பட்டியில் அடைக்கிறாப் போல குழந்தைகள் காப்பகம். குழந்தைகளின் ஆரம்ப வளர்ப்பே சரி இல்லையே… அப்புறம் எப்படி பேர் சொல்லும். .? ”

” ஏன். . பெத்தவள்தான் வளர்க்கனுமா. .? ஆண், பெண்ணிடம் குழந்தையைத் தள்ளிட்டு ஒதுங்கி போறது முறையான்னு நீ கேட்கலாம். முதல் குறை… ஒரு ஆணால் ஆரோக்கியமான தாய்ப்பாலைத் தர முடியாது.! அடுத்து. … தாய்ப்பால் குடிக்கும்போது தாய் குழந்தைக்கு கொடுக்கிற அன்பு, அரவணைப்பு சாத்தியமா ஆண் புட்டிப்பால் கொடுக்கும்போது கிடைக்காது.!! ”

” ஆண் பெண் வாழ்க்கையின் நல்ல உச்ச கட்டம் நல்ல வாரிசு, பேர் சொல்லும் பிள்ளைகள். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம். இது சரியாய் இருக்கனும் என்கிறதுக்காகத்தான் ஆண் பெண்ணுக்குப் குடும்ப பொறுப்பைத் தர்றான்.”

” இதை இந்தக்காலப் பெண்கள் தப்பா பிருஞ்சுக்கிட்டேங்க. ஆண் பெண் சமம். நீயும் வீதிக்கு வா. நானும் வர்றேன்னு முரண்டு பிடிக்கிறீங்க. பிரதிபா. .! எந்த கால கட்டத்திலும் பெண் அடிமைன்னு ஆண் சொன்னதே இல்லே. யோசி ! ” சொன்னான்.

பிரதிபா முகம் மெல்ல மெல்ல தெளிவானது.

இப்போது சுத்தமாக மாறியது.

” பெண் அடிமை இல்லே என்பதை தெளிவாய் புரிஞ்சி வச்சிருக்கீங்க. உங்களை மணக்க எனக்கு சம்மதம் ! ” சொன்னாள்.

சுந்தர் முகத்திலும் மகிழ்ச்சி. 

தொடர்புடைய சிறுகதைகள்
மலர்ந்தும் மலராத காலைப் பொழுது 5.15 மணி அளவில் தன்னந்தனியே ஒரு ஆள் ஆஆஆஆ......வென்று ஒரு நாள் இரண்டு நாளில்லை. ஒருவார காலமாய்....ஓலம் விட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். நீங்கள் என்ன நினைப்பீர்களோ.... அதேதான் எனக்கும். எனக்கு வயது 63. மூன்றாண்டுகளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது ஊர் கடற்கரையை ஒட்டிய இடம். எனது வீட்டிற்கும் கடலுக்கும் துல்லியமாக 3 கி.மீ. எனக்கு எந்தவித நோய், தொந்தி, தொப்பை எதுவும் ...
மேலும் கதையை படிக்க...
லதாஸ்ரீக்குப் பொன்னாடைப் போர்த்தி விருது கொடுத்ததும் அரங்கமே உற்சாகமாய்க் கை தட்டியது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த சந்தோஷ் மட்டும் முகத்தில் எந்தவித சந்தோச சலனமில்லாமல் ஒப்புக்குக் கை தட்டினான். ''லதாஸ்ரீ இந்த வருடம் இந்த நாட்டின் சிறந்த நடிக்கைகான விருதைப் பெற்றதைப் போல் ...
மேலும் கதையை படிக்க...
'' ஜோசியம். .. ஜோசியம். ..! '' தெருவில் குரல் கேட்டதும் வீட்டினுள் அமர்ந்திருந்த ரெங்கநாயகிக்கு ஒரு வினாடிகூட சும்மா இருக்க முடியவில்லை. உடலும் உள்ளமும் சேர்ந்து துடித்தது. உடனே வீட்டை விட்டு வெளியே வந்தாள். கையில் மந்திரக்கோல் மாதிரி ஒன்றை வைத்துக்கொண்டிருந்த ஜோசியக்காரி ...
மேலும் கதையை படிக்க...
வீட்டு முன் உள்ள தோட்டத்து மரத்தடியில் நாற்காலி போட்டு அமர்ந்து, தினசரியை விரித்துப் படித்துக்கொண்டிருந்த தணிகாசலம் முன் உள்ள நாற்காலியில் வாட்டமாக வந்து அமர்ந்தான் அவரின் பெரிய மகன். பெயர் சேகர். வயசு 27. ‘எம்.பி.ஏ. படிப்பு. நல்ல உத்தியோகம். கை நிறைய ...
மேலும் கதையை படிக்க...
ஆஆஆஆஆ…!
மனிதனும்… மனிதமும்!
வீணாகலாமா வீணை…..!
தெளிவு…!
காதல் முடிச்சு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)