கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 12,744 
 

“ரொம்ப அழகு. நீங்க அவளை நெனைச்சுக்கிட்டே இந்த வீட்டுல இருக்க வேண்டாம். அப்படி ஒண்ணும் தேவையில்ல…”

“”ஏன்டி இப்டி வெரட்டுறே. என்னிக்கோ ஒருநா வீட்டுக்கு வர்றேன். அன்னிக்கும் இப்பிடி மல்லு கட்றியே… ஒனக்கே நல்லாருக்கா…”

“”பாவம் போல பேசி நடிக்காதீங்க. என்னிக்கோ ஒருநா வீட்டுக்கு வர்றதாலதான் கத்தறேன்.புருஷங்கிறவன் என்னிக்கும் வீட்டுக்கு வரணும்…”

“”புரிஞ்சிக்கோடி… நம்ம வாழ்க்கை அப்பிடி இல்ல. நீங்க ரெண்டு பேருமே எனக்கு முக்கியந்தான்மா…”

“”நிறுத்துங்க.. பேசிப் பேசியே என்னை சாய்ச்சது போதும். நீங்க…”

பூமாபட்டென்று தொலைக்காட்சியை நிறுத்தினாள் பூமா. எரிச்சல் மண்டைக்கு ஏறியது. “ஒரு மன மாற்றத்திற்காக தொலைக்காட்சியிடம் திரும்பினால், அங்கும் நம் வீட்டுக் கதைதான். இருதார மணம் என்பது நமக்கு மட்டுமில்லை, உலகளாவியப் பிரச்னை போல..’ என்று சலித்துக் கொண்டாள்.

அரிசியைக் களைந்து போட்டு கிரைண்டரை ஓடவிட்டவள், பாத்திரங்களைத் துலக்கத் தொடங்கினாள். நீர் வற்றினாலும் நினைவுகள் வற்றாது.

கைகள் பாத்திரத்துடன் போராட, பூமா தனது வாழ்க்கையை பின்னோக்கி அசை போட்டாள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு யாராவது அவளிடம், உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையப் போகிறது என்று சொன்னார்கள் என்றால், சொன்னவரை எட்டி அடித்திருப்பாள் பூமா. ஆனால் உண்மை என்பது கற்பனைகளையெல்லாம் கடந்த ஒன்றல்லவா?

பள்ளிப் பருவத்தில் ஏதோ பூலோகத்தையே ஆளப் புறப்பட்டது போலவும், தனக்காகவே இளைஞர்கள் எல்லாம் காத்துக் கிடப்பது போலவும் ஒரு பிரமை வயதுப் பெண்களுக்கு. பூமாவிற்கு அது சற்றுக் கூடுதலாகவே இருந்தது.

அக்கா சங்கீதாவைக் கட்டிக் கொடுத்துவிட்ட நிலையில், வீட்டில் பூமா வைத்ததுதான் சட்டம். அவள் போட்டதுதான் திட்டம் என்ற சூழல் இருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் ஓர் எல்லைக்குள்தான் வைத்திருந்தாள் பூமா. அவள் வயதையொத்த பெண்கள் காதல், கண்றாவி, ஊர் சுற்றல் என்று இருந்தபொழுது, ஜாக்கிரதையாக அதிலெல்லாம் சிக்காமல்தான் இருந்தாள் பூமா. கட்டுபாடான வளர்ப்பு அவளை அப்படி வைத்திருந்தது. ஆனால் என்ன இருந்து என்ன செய்ய?

குழம்புக்குத் தப்பி கொதிக்கும் எண்ணெயில் விழுந்த மீன் போல, தன் வயதை ஒத்த இளைஞர்களை எல்லாம் அலட்சியப் பார்வையினால் ஒதுக்கியவள், அக்கா புருஷன் பத்மநாபனிடம் சர்வமும் அடங்கி, பலியாகிப் போனாளே! இது காலத்தின் கோலமா அல்லது பருவத்தின் பல்லாங்குழி ஆட்டமா? ஏதோ ஒன்று. செத்துப் பிறந்த பிள்ளைக்கு என்ன பெயரிட்டால்தான் என்ன?

அக்கா சங்கீதா இரண்டாவதாகத் தாய்மையுற்ற போதுதான் அது நடந்தது. பள்ளி செல்லும் மூத்த மகனைக் காரணம் காட்டி, சங்கீதாவைப் பிரசவத்திற்கு தாய் வீடு அனுப்ப மறுத்துவிட்டான் பத்மநாபன். தாய் வீடு வேண்டாமென்றாலும், தாய் போல ஒருத்தி வேண்டுமே பிள்ளைக்காரிக்கு.

பிரசவ உதவிக்காக பூமாவும் அம்மாவும் சங்கீதா வீடு வந்து சேர்ந்தார்கள்.

பெண் பிள்ளை பிறந்து பெயரிட்டதும் பூமாவை சங்கீதாவிற்குத் துணையாக வைத்துவிட்டு, ஊரில் தனக்காகக் காத்திருக்கும் கணவனையும் மாடு கன்றுகளையும் கவனிக்கப் போய்விட்டாள் பூமாவின் அம்மா.

பள்ளி மேல் படிப்பை முடித்திருந்த பூமாவிற்கும் அக்கா வீட்டில் தங்குவதில் ஆட்சேபனை ஏதும் இருக்கவில்லை. அக்கா மகன் நந்தாவும் குட்டி பாப்பாவும் சங்கீதா வீட்டினுடைய வாழ்க்கை வசதிகளும் பூமாவை சங்கீதா வீட்டில் எதிர்ப்பின்றி இருத்தியது. வீட்டு வேலைகளுடன் அத்தானுக்கு வேண்டிய பணிவிடைகளைக் கூட பூமாவே செய்ய வேண்டியிருந்தது. பத்மநாபனையும் குறைத்துச் சொல்லமுடியாது. கண்ணியமானவன்தான். மனைவி வழி உறவென்பதால், பூமாவிற்கும் தேவையான அனைத்தையும் வாங்கி வந்து தருவான். வார்த்தைகள் அதிராது. சிதறாது. ஒருவேளை இதெல்லாம்தான் பூமாவை, பத்மநாபன்பால் ஈர்த்ததோ என்னவோ?

தான் போட்டு வைத்திருந்த கற்பனைக் கணவன் என்ற சட்டத்துக்குள் பத்மநாபன் பிரமாதமாய்ப் பொருந்துவதாய் உணர்ந்தாள். பத்மநாபனும் அவனறியாமலேயே பூமாவைத் தன்பக்கம் இழுக்கக் காரணமானான். அத்தான் வசம் தான் ஈர்க்கப்படுவதை பூமாவும் உணர்ந்தாள். இந்த ரசாயன மாற்றத்தை அறிந்து கொண்ட பூமாவிற்கு, அது அதிர்ச்சியாயிருந்தாலும் அந்த வேதனையும் இனித்தது. முன்னேறினாள் பாதையில். முள்ளில் விழவேண்டுமென சேலை முடிவு செய்த பின், முள்ளுக்கு வேறு வாய்ப்பேது?

பஞ்சும் நெருப்பும் தயார். பற்றிக் கொள்ள பஞ்சாங்கமா பார்க்கும்? எரிந்தது. புகைந்தது. கண்கள் இருட்டி கண்ணீர் வந்தது. சங்கீதா கொதித்துப் போனாள். பூமாவின் பெற்றோர் வந்து ஆடி அடங்கி, பூமாவை ஊருக்கு அழைத்தனர். “நடந்ததை மற; நடப்பதைப் பார்ப்போம்’ என்று கெஞ்சிப் பார்த்தனர். மிஞ்சிப் பார்த்தனர். பூமா, பத்மநாபன் கையைவிட்டு வரத் தயாரில்லை. பத்மநாபனும் பூமாவின் கையை உதறத் தயாரில்லை என்பதும் ஒரு விநோதம். அக்கா- தங்கை இருவரையும் கைகழுவிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள் பெரியவர்கள்.

சங்கீதாவின் கணக்கும் கணிப்பும் வேறு மாதிரியாயிருந்தது. தொடர்ந்து அவர்களை எதிர்த்துக் கொண்டேயிருந்தால், இருவரும் சேர்ந்து தன்னையும் பிள்ளைகளையும் ஒதுக்கிவிட வாய்ப்பிருப்பதைப் புரிந்து கொண்டாள். தங்கைக்கும் தன் கணவனுக்கும் மணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டாள். ஒரு நிபந்தனையோடு. “பூமா குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று சத்தியம் செய்துதரும் பட்சத்தில், தாலிக்குத் தடையில்லை என்றாள் சங்கீதா.

பூமாவிற்கு தாய்மை, குழந்தை இவற்றையெல்லாம் உணரும் வயதுமில்லை. அந்த மனநிலையிலும் அவள் இல்லை. அவளைப் பொறுத்தவரை, எக்காரணங் கொண்டும், கையில் கிடைத்த மிட்டாயை களவு கொடுக்கத் தயாரில்லை. பத்மநாபன் ஏற்கெனவே தந்தை என்பதால், அவனுக்கு இழப்பேதும் இருக்கப் போவதில்லை.

எனவே மூவர் சம்மதத்துடன், பூமா- பத்மநாபன், திருச்செந்தூர் கோவிலில் வைத்து தம்பதிகளானார்கள். திருமணத்திற்கு முதல் நாளே பூமாவிற்கு கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டது. இதோ ஆயிற்று எட்டு ஆண்டுகள். பத்மநாபன் பூமாவிற்கும் நல்ல கணவன்தான் என்றாலும் சங்கீதாவைப் பொறுத்தளவில் சம்பளம் தரத் தேவையில்லாத வேலைக்காரி பூமா.

பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். பெரியவன் நந்தாவிற்கு வீட்டுச் சூழல் புரியத் துவங்கியதும், சித்தியை விட்டு சிறிது சிறிதாக விலகினான். சின்னவளும் வளர்ந்த பின் எப்படி நடந்து கொள்வாளோ? “தனக்கென்று ஒன்று இருந்திருந்தால், நன்றாக இருக்குமோ’ என்ற எண்ணம் தலைதூக்குவதைத் தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வது? பூமா தொப்புள் கொடியை அடகு வைத்தல்லவா தாலிக் கொடியை வாங்கியிருக்கிறாள்? ஏதோ சாதித்துவிட்டோம் என்ற மமதையில் உலாவியவளுக்கு சறுக்கி விட்டோமோ என்ற பயமும் சந்தேகமும் அவ்வப்போது உதிப்பதைத் தடுக்க முடியவில்லை. கை வேலைகளை முடித்தவள், பிள்ளைகளுக்காக மைதா, சர்க்கரை கலந்து அப்பம் சுட்டு வைத்தாள். தலையைப் பின்னி, ஒரு துண்டுப் பூவை தலையில் வைத்தவள், காப்பியைக் கையில் எடுத்தவாறு, முன் வாசல் நாற்காலியில் அமர்ந்தாள்.

பள்ளியிலிருந்து வந்த மகளை அழைத்துப் போக வாசலுக்கு வந்த சங்கீதா, பூமாவை ஏற இறங்கப் பார்த்தாள்.

“”சீவிச் சிங்காரிச்சு வாசல்லயே உக்காந்துட்ட. வர்றவரை வாசல்லயே மடக்கலாம்னா…” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். வார்த்தைகளில் இயலாமையும் வஞ்சமும் கோபமும் வெடித்தது. இது புதிதல்ல பூமாவிற்கு, என்றாலும் மனம் வலித்தது. இதே அக்கா பள்ளி நாட்களில் நீளமாகப் பின்னிவிட்டு மல்லியும் பிச்சியும் வைத்து அழகு பார்த்தவள்தான். அவளைச் சொல்லியும் குற்றமில்லை. இல்லற வாழ்வைப் பங்கு போட்டவளுடன் இனிமையாய்ப் பேச முடியுமா என்ன? சிந்தனையைக் கலைத்தவாறு, எதிர்வீட்டுப் பெண் அனிதா வந்து சேர்ந்தாள்.

“”அக்கா ஊருக்குப் போறேன். சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன். அக்கா வேலைக்குப் போறாள்ல. அதான் பாப்பாவைப் பாத்துக்க நான் போறேன். காலேஜ் தெறக்குறப்பதாங்கா வருவேன்.. போயிட்டு வர்றேன்.. சங்கீதாக்காகிட்ட சொல்லிருங்க…”

– என்றவாறு குதித்துக் கொண்டு ஓடினாள். இவள் இன்னுமொரு பூமாவோ? எண்ணமே கசந்தது பூமாவிற்கு. பூமாக்கள் உருவாகிறார்களா, உருவாக்கப்படுகிறார்களா?

மூன்று மாதங்கள் கழிந்தன. மாலை நேரம்.

அக்கா வீட்டுக்குப் போய் தங்கியிருந்த அனிதா திரும்பிவிட்டாள். வீட்டு வாசலில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தாள். இங்கிருந்து அதைப் பார்த்த பூமாவின் மனம் குறுகுறுத்தது.

அக்கா வீட்டுக்குப் போய்விட்டு வந்த அவளுக்குத் தனக்கு நேர்ந்ததைப் போலவே ஏதும் நடந்திருக்குமோ? ரீங்காரமிட்டுத் திரும்பத் திரும்ப மூக்கின் நுனியில் வந்து உட்காரும் ஈயைப் போல, எவ்வளவு தவிர்த்தாலும் இந்த எண்ணம் தலைக்குள் சுற்றிச் சுற்றி வந்தது.

அவளையே கேட்டுவிடலாமே?

“”அனிதா”

இவளின் குரல் கேட்டு புத்தகமும் கையுமாக ஓடி வந்தாள் அனிதா.

“”என்னக்கா?”

“”என்ன புத்தகம் விழுந்து விழுந்து படிச்சிக்கிட்டு இருக்க?”

“”என் பிறந்த நாளுக்கு அத்தான் வாங்கிக் கொடுத்த புத்தகம்” – சொல்லும்போதே அனிதாவின் முகத்தில் என்றுமில்லாத மலர்ச்சி.

பூமாவுக்கு மனதுக்குள் என்னவோ செய்தது. புத்தகத்தை வாங்கிப் பார்த்தாள். திறந்தவுடன் முதல் பக்கத்தில், ” அன்புத் தங்கை அனிதாவுக்கு, அன்புடன் அண்ணன் ராமச்சந்திரன்” என்று எழுதப்பட்டிருந்தது.

புரியாமல் பார்த்தாள்.

“”நான் எங்க அத்தானை அண்ணான்னுதான் கூப்பிடுவேன்” அனிதா முகம் மலர்ந்து சொன்னாள்.

– ஜூலை 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *